பாடம் 5
பெரியவர்களின் வழிகாட்டுதலை மதிப்பது
பிள்ளைகளுக்கு யாருடைய வழிகாட்டுதல் தேவை?
பிள்ளைகளுக்குப் பெரியவர்களின் ஆலோசனைகளும் புத்திமதிகளும் தேவை. அந்தப் பொறுப்பைச் செய்யத் தகுந்தவர்கள் பெற்றோர்களாகிய நீங்கள்தான். சொல்லப்போனால், அப்படிச் செய்வது உங்கள் கடமை. ஆனால், அனுபவமுள்ள மற்றவர்கள்கூட உங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனைகள் தரலாம்.
பெரியவர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
நிறைய நாடுகளில், பிள்ளைகள் பெரியவர்களோடு அதிக நேரம் செலவிடுவதில்லை. இதைக் கொஞ்சம் கவனியுங்கள்:
பிள்ளைகள் வீட்டில் இருப்பதைவிட அதிக நேரம் பள்ளியில்தான் இருக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்களையும் மற்றவர்களையும்விட பிள்ளைகள்தான் அதிகம்.
சில வீடுகளில் அப்பா, அம்மா இரண்டு பேருமே வேலைக்குப் போகிறார்கள். அதனால், பிள்ளைகள் ஸ்கூல் முடிந்து வரும்போது வீட்டில் யாரும் இருப்பதில்லை.
ஒரு ஆராய்ச்சியின்படி, அமெரிக்காவில் 8-12 வயதிலுள்ள பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு மணிநேரம் எலெக்ட்ரானிக் சாதனங்களிலேயே மூழ்கியிருக்கிறார்கள்.a
“பிள்ளைகள் இப்போதெல்லாம் அம்மா, அப்பா, ஆசிரியர்கள் என யாரிடமும் ஆலோசனை கேட்பதில்லை, . . . மற்ற பிள்ளைகளிடம்தான் கேட்கிறார்கள்” என்று ஒரு புத்தகம் (Hold On to Your Kids) சொல்கிறது.
வழிகாட்டுவது எப்படி?
உங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவிடுங்கள்.
பைபிள் ஆலோசனை: “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.”—நீதிமொழிகள் 22:6.
உதவிக்காகப் பிள்ளைகள் முதலில் போவது பெற்றோரிடம்தான். சொல்லப்போனால், பிள்ளைகள் டீனேஜ் பருவத்தை எட்டும்போதுகூட, மற்ற பிள்ளைகளின் ஆலோசனையைவிட தங்கள் பெற்றோரின் ஆலோசனையை அதிகமாக மதிப்பார்கள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். “பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்வரை அவர்களுடைய சிந்தனைகளையும் செயல்களையும் வடிவமைப்பது முக்கியமாகப் பெற்றோர்கள்தான்” என்று டாக்டர் லாரன்ஸ் ஸ்டைன்பெர்க் ஒரு புத்தகத்தில் (You and Your Adolescent) எழுதியிருக்கிறார். “உங்கள் கருத்துகளைப் பிள்ளைகள் எப்போதுமே ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள், நீங்கள் சொல்வதையும் கவனிக்கிறார்கள். இதை அவர்கள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் இதுதான் உண்மை” என்றும் அவர் எழுதியிருக்கிறார்.
பிள்ளைகள் இயல்பாகவே உங்களிடம்தான் உதவியை எதிர்பார்க்கிறார்கள் என்பதால், எல்லா விதத்திலும் அவர்களுக்கு வழிகாட்ட முயற்சி எடுங்கள். அவர்களோடு நேரம் செலவிடுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... உங்களைப் பொறுத்தவரைக்கும் எது முக்கியம்... வாழ்க்கையில் நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்... போன்ற விஷயங்களை அவர்களிடம் சொல்லுங்கள்.
இன்னொரு வழிகாட்டியைத் தேடிக் கொடுங்கள்.
பைபிள் ஆலோசனை: “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
யாராவது ஒருவர் உங்கள் பிள்ளைக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியுமென்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் பிள்ளையோடு நேரம் செலவிடும்படி ஏன் அவரிடம் கேட்கக் கூடாது? அதற்காக, உங்கள் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை இனி அவரே செய்துவிடுவார் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நீங்கள் தரும் பயிற்சியோடு சேர்த்து அவருடைய உதவியும் பிள்ளைக்குப் பிரயோஜனமாக இருக்கும். ஆனால், அவர் உங்கள் பிள்ளைக்கு எந்தக் கெடுதலும் செய்யாத நம்பகமான ஒருவராக இருக்க வேண்டும். பைபிளில் தீமோத்தேயு என்பவரின் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் வளர்ந்த பிறகுகூட, அப்போஸ்தலன் பவுலுடைய நட்பினால் அதிக நன்மை அடைந்தார். அதேபோல், பவுலும் தீமோத்தேயுவின் நட்பினால் நன்மை அடைந்தார்.—பிலிப்பியர் 2:20, 22.
இன்றெல்லாம் கூட்டுக்குடும்பங்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற சொந்தபந்தங்கள் வேறொரு ஊரில்கூட வாழலாம். உங்கள் குடும்பத்திலும் இதே சூழ்நிலைதானா? அப்படியென்றால், உங்கள் பிள்ளை எந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அந்தக் குணங்களைக் காட்டுகிற மற்றவர்களோடு பழக அவனுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள்.
a அந்த ஆராய்ச்சியின்படி, டீனேஜர்கள் தினமும் சராசரியாக ஒன்பது மணிநேரம் எலெக்ட்ரானிக் சாதனங்களில் மூழ்கியிருக்கிறார்கள். ஸ்கூலில் படிக்கும்போதும் வீட்டில் ஹோம்வர்க் செய்யும்போதும் அவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் நேரம் இந்தப் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை.