பிற்சேர்க்கை
விவாகரத்து, பிரிந்துவாழ்வது —பைபிளின் கருத்து
திருமணமானவர்கள் தங்களுடைய திருமண உறுதிமொழிக்கு எப்போதும் உண்மையாய் இருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். முதல் மனிதனையும் மனுஷியையும் கடவுள் திருமணத்தில் இணைத்தபோது, “மனிதன் . . . தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டார். பிற்பாடு, இதை மேற்கோள் காட்டி, “அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:3-6) திருமணத்தை வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கிற பந்தமாக யெகோவாவும் இயேசுவும் கருதுகிறார்கள்; கணவனோ மனைவியோ இறக்கும்போதுதான் அந்தப் பந்தம் முறிவடைகிறது. (1 கொரிந்தியர் 7:39) திருமணம் புனிதமான ஏற்பாடாக இருப்பதால் விவாகரத்தை அற்ப விஷயமாகக் கருதக்கூடாது. சொல்லப்போனால், பைபிள் அடிப்படையில் செய்யப்படாத விவாகரத்துகளை யெகோவா வெறுக்கிறார்.—மல்கியா 2:15, 16.
அப்படியானால், எதன் அடிப்படையில் மட்டுமே விவாகரத்து செய்ய பைபிள் அனுமதி அளிக்கிறது? மணத்துணைக்குச் செய்யப்படும் துரோகத்தையும் பாலியல் முறைகேட்டையும் யெகோவா வெறுக்கிறார். (ஆதியாகமம் 39:9; 2 சாமுவேல் 11:26, 27; சங்கீதம் 51:4) சொல்லப்போனால், பாலியல் முறைகேட்டை அவர் மிகவும் அருவருப்பதால் அந்தக் காரணத்துக்காக மட்டுமே விவாகரத்து செய்ய அனுமதிக்கிறார். (பாலியல் முறைகேட்டில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, இப்புத்தகத்தில் அதிகாரம் 9, பாரா 7-ஐக் காண்க.) பாவம் செய்த துணையோடு தொடர்ந்து வாழ்வதா அல்லது அவரை விவாகரத்து செய்வதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை தவறிழைக்காத துணைக்கு யெகோவா அளித்திருக்கிறார். (மத்தேயு 19:9) ஆகவே, தவறிழைக்காத துணை விவாகரத்து பெறத் தீர்மானித்தால் அதை யெகோவா வெறுப்பதில்லை. அதேசமயத்தில், விவாகரத்து பெற்றுக்கொள்ளும்படி கிறிஸ்தவ சபை யாரையும் உற்சாகப்படுத்துவதுமில்லை. சில சந்தர்ப்பங்களில், பாவம் செய்த துணை உண்மையாக மனம் திருந்தும் பட்சத்தில், அவரோடு தொடர்ந்து வாழ மற்றவர் தீர்மானிக்கலாம். எப்படியிருந்தாலும், பைபிளின் அடிப்படையில் விவாகரத்து செய்ய உரிமை உள்ளவர்கள் சொந்தமாகத் தீர்மானம் எடுக்க வேண்டும்; அந்தத் தீர்மானத்தினால் வரும் பின்விளைவுகளையும் சந்திக்கத் தயாராயிருக்க வேண்டும்.—கலாத்தியர் 6:5.
சில அபூர்வ சூழ்நிலைகளில், தங்களுடைய மணத்துணை பாலியல் முறைகேட்டில் ஈடுபடாவிட்டாலும் கிறிஸ்தவர்கள் சிலர் அவரைவிட்டுப் பிரிய அல்லது அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரைவிட்டுப் பிரிகிறவர் “மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும் அல்லது மறுபடியும் . . . [அவரோடு] சமரசம் செய்துகொள்ள வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:11) அவர் மறுமணம் செய்துகொள்ள முடியாது. (மத்தேயு 5:32) பிரிந்து வாழ்வதற்குத் தகுந்த சூழ்நிலைகள் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்; அவற்றைக் கவனியுங்கள்.
வேண்டுமென்றே குடும்பத்தைக் கவனிக்காமல் இருப்பது. ஒரு கணவர் தன் குடும்பத்தைப் பராமரிக்கத் திராணி இருந்தும் பராமரிக்காமல் போனால் அவருடைய குடும்பம் அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல் வறுமையில் வாடலாம். “ஒருவன் . . . தன்னுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களை, கவனித்துக்கொள்ளவில்லை என்றால் அவன் விசுவாசத்தை விட்டுவிட்டவனாகவும் விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாகவும் இருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:8) அவர் திருந்தவில்லை என்றால், மனைவி தன்னுடைய நலனுக்காகவும் பிள்ளைகளுடைய நலனுக்காகவும் அவரைவிட்டுச் சட்டப்பூர்வமாகப் பிரிந்துவாழத் தீர்மானிக்கலாம். அதேசமயத்தில், ஒரு கிறிஸ்தவர் தன் குடும்பத்தை பராமரிப்பதில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டால் கிறிஸ்தவ மூப்பர்கள் விஷயங்களை அலசி ஆராய வேண்டும். ஒருவர் குடும்பத்தைக் கவனிக்க மறுத்தால் சபைநீக்கம் செய்யப்படலாம்.
அடித்துக் கொடுமைப்படுத்துதல். கணவரோ மனைவியோ மற்றவரைப் பயங்கரமாக அடித்துக் கொடுமைப்படுத்துவதால் அடிவாங்குகிறவரின் ஆரோக்கியமும் உயிரும்கூட ஆபத்திற்குள்ளாகலாம். துணையை அடிக்கும் நபர் கிறிஸ்தவராக இருந்தால் சபை மூப்பர்கள் விசாரணை நடத்த வேண்டும். கோபாவேசப்படுகிறவர்களும் பழக்கமாக அடித்து உதைப்பவர்களும் சபைநீக்கம் செய்யப்படலாம்.—கலாத்தியர் 5:19-21.
யெகோவாவை வணங்குவதற்கு பெரும் தடை. வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடவே முடியாதபடி ஒருவர் தன் மணத்துணைக்கு எப்போதும் தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருக்கலாம். அல்லது ஏதோவொரு விதத்தில் கடவுளுடைய கட்டளைகளை மீறும்படி வற்புறுத்திக்கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், ‘மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கு’ அவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்துவிடுவதுதான் ஒரே வழியா என்பதைப் பாதிக்கப்பட்டவர் தீர்மானிக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 5:29.
இதுவரை சிந்தித்த சூழ்நிலைகள் எல்லாவற்றிலும், மணத்துணையைவிட்டுப் பிரிந்து வாழும்படியோ சேர்ந்து வாழும்படியோ பாதிக்கப்பட்டவரை யாரும் வற்புறுத்தக் கூடாது. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களும் மூப்பர்களும் அவருக்கு ஆதரவும் பைபிளிலிருந்து ஆலோசனைகளும் தரலாம் என்பது உண்மைதான்; ஆனால், ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே என்னென்ன நடக்கிறதென அவர்களால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது. யெகோவாவுக்கு மட்டுமே அது தெரியும். ஒரு கிறிஸ்தவர் தன் மணத்துணையைவிட்டுப் பிரிய வேண்டுமென்பதற்காகவே தன் குடும்பப் பிரச்சினைகளை மிகைப்படுத்திச் சொன்னால், கடவுளையும் திருமண ஏற்பாட்டையும் அவமதிக்கிறவராக இருப்பார். பிரிந்துபோவதற்காக ஒருவர் எப்படிப்பட்ட சதித்திட்டம் தீட்டினாலும் அதை யெகோவா அறிவார், அவரிடமிருந்து எதையும் மூடிமறைக்க முடியாது. ஆம், “எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது; அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.” (எபிரெயர் 4:13) ஆனால், சூழ்நிலை வெகு காலமாகவே மிக ஆபத்தானதாக இருந்து வரும்போது, வேறு வழியில்லாமல் பிரிந்துவாழத் தீர்மானிக்கும் ஒரு கிறிஸ்தவரை யாரும் குறைசொல்லக் கூடாது. இறுதியில், “நாம் எல்லாரும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்பாக நிற்போம்.”—ரோமர் 14:10-12.