பிற்சேர்க்கை
வியாபார விஷயங்களில் சண்டை சச்சரவுகளைத் தீர்த்தல்
ஒருவர் சக கிறிஸ்தவருக்கு எதிராக வழக்குத் தொடுப்பதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் சொல்வதை 1 கொரிந்தியர் 6:1-8-ல் நாம் வாசிக்கிறோம். கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலர், ‘நீதிமன்றத்துக்குப் போய் அநீதிமான்கள் முன்னால் நிற்கத் துணிந்ததை’ குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். (வசனம் 1) கிறிஸ்தவர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, தங்களுடைய பிரச்சினைகளை ஏன் சபைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்குத் தகுந்த காரணங்களை பவுல் குறிப்பிட்டார். பின்வரும் அறிவுரைகளை பவுல் எழுதியதற்கான சில காரணங்களையும் அவற்றோடு நேரடியாகச் சம்பந்தப்படாத சில சூழ்நிலைகளையும் இப்போது கவனிக்கலாம்.
வியாபார விஷயமாக சக கிறிஸ்தவரோடு நமக்கு ஏதேனும் சண்டை சச்சரவு ஏற்பட்டால், முதலாவதாக, நம்முடைய வழியில் அதைத் தீர்க்காமல் யெகோவாவின் வழியில் அதைத் தீர்க்க வேண்டும். (நீதிமொழிகள் 14:12) இயேசு சுட்டிக்காட்டியபடி, ஒரு கருத்துவேறுபாடு பெரிய பிரச்சினையாக வெடிப்பதற்குமுன் அதை உடனடியாகத் தீர்த்துக்கொள்வதுதான் சிறந்தது. (மத்தேயு 5:23-26) ஆனால், சில கிறிஸ்தவர்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்து நீதிமன்றத்திற்கே போயிருப்பது வருத்தமான விஷயம். “நீங்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் வழக்கு போடுவதே நீங்கள் படுதோல்வி அடைந்துவிட்டதைக் காட்டுகிறது” என்று பவுல் குறிப்பிட்டார். காரணம் என்ன? இப்படிப்பட்ட வழக்குகள் சபையின் நற்பெயருக்கும் நம்முடைய கடவுளின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தலாம். “அதனால், உங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை ஏன் பொறுத்துக்கொள்ளக் கூடாது?” என்று பவுல் கேட்ட கேள்வியை நாம் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.—வசனம் 7.
வாக்குவாதங்களைத் தீர்ப்பதற்கு சபையில் நல்ல ஏற்பாட்டைக் கடவுள் செய்திருக்கிறாரென பவுல் எடுத்துச் சொன்னார். ‘இந்த வாழ்க்கைக்குரிய வழக்குகளைத் தீர்ப்பதற்கு,’ அதாவது “சகோதரர்களுக்குள் இருக்கிற வழக்குகளைத் தீர்ப்பதற்கு” மூப்பர்கள் இருக்கிறார்களென அவர் குறிப்பிட்டார்; பைபிள் சத்தியங்களை நன்கு அறிந்திருக்கிற ஞானமுள்ள கிறிஸ்தவ ஆண்களே இந்த மூப்பர்கள். (வசனங்கள் 3-5) இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது, பித்தலாட்டம் செய்வது போன்ற பெரிய குற்றங்கள் சம்பந்தமாக சண்டை சச்சரவு ஏற்பட்டால், இயேசு சொன்னபடி அதைத் தீர்க்க வேண்டும்; அதில் மூன்று படிகள் உட்பட்டுள்ளன. முதலாவதாக, சம்பந்தப்பட்டவரைத் தனியே சந்தித்து, பிரச்சினையைப் பேசித் தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும்; அது பலனளிக்காவிட்டால், இரண்டாவதாக, ஓரிரு சாட்சிகளை நம்முடன் அழைத்துச் செல்ல வேண்டும்; அதுவும் பலனளிக்காவிட்டால், மூன்றாவதாக, சபை மூப்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்.—மத்தேயு 18:15-17.
கிறிஸ்தவ மூப்பர்கள் வழக்கறிஞர்களாகவோ வியாபாரிகளாகவோ இருக்க வேண்டியதில்லை, அவர்களைப்போல் நடந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. சகோதரர்களுக்கு இடையே வியாபாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் விதிமுறைகளை ஏற்படுத்துவதில்லை. மாறாக, பைபிள் வசனங்களைப் பின்பற்றுவதற்கும் சுமூகமான முடிவுக்கு வருவதற்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உதவுகிறார்கள். சிக்கலான பிரச்சினைகள் ஏற்பட்டால், வட்டாரக் கண்காணியையோ யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தையோ தொடர்புகொள்ள அவர்கள் விரும்பலாம். என்றாலும், பவுலின் அறிவுரையோடு சம்பந்தப்படாத சூழ்நிலைகள் உள்ளன. அவற்றில் சில என்ன?
சில சந்தர்ப்பங்களில், முறைப்படி நடவடிக்கை எடுப்பதற்காக அல்லது சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்காக வழக்கு தொடுப்பது அவசியமாக இருக்கலாம்; சுயநலத்திற்காக இல்லாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கென்றே சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். உதாரணமாக, விவாகரத்து பெறுவதற்கும், பிள்ளையை யார் பராமரிப்பது எனத் தீர்மானிப்பதற்கும், ஜீவனாம்சத் தொகையை முடிவுசெய்வதற்கும், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கும், வங்கி திவாலாகும்போது பணத்தைத் திரும்பப் பெற வேண்டியவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கும், உயிலை சட்டப்பூர்வமாய் நிரூபிப்பதற்கும் வழக்கு தொடுப்பதுதான் ஒரே வழியாக இருக்கலாம். இன்னும் சில சந்தர்ப்பங்களில், ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய பாதுகாப்புக்காக எதிர் வழக்கை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகலாம்.a
கிறிஸ்தவர்கள் மனதில் பகை இல்லாமல் இந்த வழக்குகளைத் தொடரும்போது, என்ன காரணத்துக்காகக் கடவுளுடைய அறிவுரையை பவுல் எழுதினாரோ அதை மீற மாட்டார்கள்.b அதேசமயத்தில், யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதும் சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையும் காப்பதுமே ஒரு கிறிஸ்தவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் சீஷர்களுடைய முக்கிய அடையாளம் அன்புதான்; அப்படிப்பட்ட “அன்பு . . . சுயநலமாக நடந்துகொள்ளாது.”—1 கொரிந்தியர் 13:4, 5; யோவான் 13:34, 35.
a அரிய சந்தர்ப்பங்களில், ஒரு கிறிஸ்தவர் மற்றவருக்கு எதிராக ஒரு பெரிய குற்றத்தைச் செய்துவிடலாம்; உதாரணமாக, கற்பழித்தல், தாக்குதல், கொலை செய்தல், கொள்ளையடித்தல் போன்றவற்றைச் செய்துவிடலாம். அப்போது, அதிகாரிகளிடம் புகார் செய்வதில் தவறில்லை; அதனால் நீதிமன்ற வழக்கோ குற்ற விசாரணையோ நடக்க வேண்டியிருக்கும் என்றாலும் அதில் தவறில்லை.