சக கிறிஸ்தவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்கிறீர்களா?
“ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.”—ரோ. 12:10.
1, 2. (அ) ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் என்ன அறிவுரை தருகிறார்? (ஆ) நாம் என்ன கேள்விகளைச் சிந்திக்கப் போகிறோம்?
கிறிஸ்தவர்களான நாம் சபையில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது ஏன் முக்கியம் என்பதை ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்துகிறார். நாம் காட்டும் அன்பு, ‘போலித்தனமானதாக’ இருக்கக்கூடாது என்று அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். “சகோதர அன்பை” பற்றியும் அவர் குறிப்பிடுகிறார்; அந்த அன்பில் ‘கனிவான பாசம்’ கலந்திருக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.—ரோ. 12:9, 10-ன் முற்பகுதி.
2 ஆகவே, சகோதர அன்பு என்பது வெறுமனே பாசத்தை மனதில் பூட்டி வைக்காமல் செயலில் காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. நமக்கு அன்பும் பாசமும் இருப்பதை ஏதாவதொரு விதத்தில் மற்றவர்களுக்குக் காட்டினால்தானே தெரியும்? அதனால்தான், “ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று பவுல் அறிவுரை கூறுகிறார். (ரோ. 12:10-ன் பிற்பகுதி) மதிப்புக் கொடுப்பது என்றால் என்ன? ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்வது ஏன் முக்கியம்? அதை நாம் எவ்வாறு செய்யலாம்?
மரியாதையும் மதிப்பும்
3. “மதிப்பு” என்ற வார்த்தை பைபிளின் மூல மொழிகளில் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?
3 “மதிப்பு” என்பதற்கான எபிரெய வார்த்தையின் நேர்ப்பொருள் “கனம்” என்பதாகும். மதிப்பிற்குரிய ஒரு நபர் கனம் பொருந்தினவராய் அல்லது முக்கியமானவராய் கருதப்படுகிறார். இதே எபிரெய வார்த்தை பைபிளில் வேறு பல இடங்களில் “மகிமை” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; மதிப்பிற்குரிய ஒருவரை மிகவும் உயர்வாய்க் கருதுவதை இது சுட்டிக்காட்டுகிறது. (ஆதி. 45:13) பைபிளில் “மதிப்பு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை கௌரவம், உயர்வு, அருமை என்ற அர்த்தத்தையெல்லாம் கொடுக்கிறது. (லூக். 14:10) ஆம், நாம் மதிப்பு கொடுப்பவர்கள் நமக்கு அருமையானவர்கள், உயர்வானவர்கள்.
4, 5. மதிப்பும் மரியாதையும் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளது? விளக்குங்கள்.
4 மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பது என்றால் என்ன? மதிப்புக் கொடுப்பதற்கு, முதலாவது மற்றவர்கள்மீது மரியாதை இருப்பது அவசியம். “மதிப்பு,” “மரியாதை” என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் எப்போதும் சேர்த்தே பயன்படுத்தப்படுவதால் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒருவர்மீது இருக்கிற மரியாதையின் வெளிக்காட்டே மதிப்பு. வேறு வார்த்தைகளில் சொன்னால், மரியாதை என்பது நம் சகோதரரை எப்படிக் கருதுகிறோம் என்பதைக் குறிக்கிறது; மதிப்பு என்பது, நம் சகோதரரை எப்படி நடத்துகிறோம் என்பதைக் குறிக்கிறது.
5 ஒருவருக்குச் சக கிறிஸ்தவர்மீது உள்ளப்பூர்வமான மரியாதை இல்லையென்றால் அவரை எப்படி உண்மையிலேயே மதிப்பார்? (3 யோ. 9, 10) ஒரு செடி நல்ல மண்ணில் வேரூன்றியிருந்தால் மட்டுமே செழித்து வளரும்; அதேபோல மதிப்பு, உள்ளப்பூர்வமான மரியாதையை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே உண்மையானதாகவும் நிலையானதாகவும் இருக்கும். நல்ல மண்ணில் வேரூன்றியிராத செடி வாடிவிடுவது போல, உண்மையான மரியாதையை அடிப்படையாகக் கொண்டிராத போலியான மதிப்பும் சீக்கிரத்திலே ‘வாடிவிடும்.’ ஆகவே, மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பது சம்பந்தமாக அறிவுரை கொடுக்கும் முன்பு, “உங்கள் அன்பு போலித்தனமான அன்பாக இருக்க வேண்டாம்” என்று பவுல் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டதில் ஆச்சரியமில்லை.—ரோ. 12:9; 1 பேதுரு 1:22-ஐ வாசியுங்கள்.
“கடவுளுடைய சாயலில்” படைக்கப்பட்டவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
6, 7. மற்றவர்கள்மீது நாம் ஏன் மரியாதை வைத்திருக்க வேண்டும்?
6 உள்ளத்தில் மரியாதை இருந்தால்தான் நாம் மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்போம்; எனவே, எல்லாச் சகோதரர்களுக்கும் மரியாதை காட்டுவதற்கு வேதப்பூர்வ காரணங்கள் இருப்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவற்றில் இரண்டு காரணங்களை இப்போது நாம் பார்ப்போம்.
7 மனிதர்கள், பூமியிலுள்ள மற்ற படைப்புகளைப் போலல்லாமல் “கடவுளுடைய சாயலில்” படைக்கப்பட்டார்கள். (யாக். 3:9) எனவே, கடவுளுடைய பண்புகளான அன்பு, ஞானம், நீதி போன்றவற்றை நாம் பெற்றிருக்கிறோம். நாம் வேறு எதையும்கூட கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள். சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, . . . உம்முடைய மகத்துவத்தை [அதாவது, கண்ணியத்தை] வானங்களுக்கு மேலாக வைத்தீர். . . . நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் [அதாவது, மதிப்பினாலும்] அவனை முடிசூட்டினீர்.” (சங். 8:1, 4, 5; 104:1)a மனிதர் எல்லாருக்குமே கடவுள் ஓரளவு கண்ணியத்தையும் மகிமையையும் மதிப்பையும் கொடுத்து முடிசூட்டியிருக்கிறார், அதாவது அலங்கரித்திருக்கிறார். ஆகவே, நாம் மற்றவர்களைக் கண்ணியமாக நடத்தும்போது நம்மைக் கண்ணியத்தால் அலங்கரித்தவரை ஏற்றுக்கொள்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். சக மனிதர்களிடம் மரியாதை காட்டுவதற்கே தகுந்த காரணங்கள் இருக்கும்போது, சக கிறிஸ்தவர்களிடம் நாம் இன்னும் எந்தளவு மரியாதை காட்ட வேண்டும்!—யோவா. 3:16; கலா. 6:10.
நாமெல்லாரும் ஒரே குடும்பத்தினர்
8, 9. சக கிறிஸ்தவர்களிடம் மரியாதை காட்ட என்ன காரணம் இருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார்?
8 நாம் மற்றவர்களிடம் மரியாதை காட்டுவதற்கான இன்னொரு காரணத்தையும் பவுல் விளக்குகிறார். மதிப்புக் கொடுக்கும்படி அறிவுரை வழங்கும் முன் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்.” ‘கனிவான பாசம்’ என்பதற்கான கிரேக்கச் சொற்றொடர், அன்பாகவும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாகவும் இருக்கிற ஒரு குடும்பத்தைப் பிணைக்கும் பலமான பந்தத்தைக் குறிக்கிறது. சபையார் மத்தியிலும் இப்படிப்பட்ட பந்தம் இருக்க வேண்டுமென்பதற்காகவே பவுல் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினார். (ரோ. 12:5) அவர் இந்த வார்த்தைகளைப் பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்காக எழுதினார் என்பதை நினைவில் வையுங்கள்; இவர்கள் எல்லாரும் ஒரே தகப்பனான யெகோவாவால் பிள்ளைகளாகத் தத்தெடுக்கப்பட்டிருந்தார்கள். எனவே, ஒரு விசேஷ கருத்தில் அவர்கள் எல்லாரும் ஒன்றுபட்ட குடும்பமாக இருந்தார்கள். அதனால், பவுலின் காலத்திலிருந்த அவர்களுக்கு ஒருவருக்கொருவர் மரியாதை காட்ட உண்மையிலேயே தகுந்த காரணம் இருந்தது. இன்றும்கூட பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுகிறார்கள்.
9 ‘வேறே ஆடுகளை’ பற்றி என்ன சொல்லலாம்? (யோவா. 10:16) அவர்கள் கடவுளால் இன்னும் பிள்ளைகளாகத் தத்தெடுக்கப்படவில்லை; என்றாலும், அவர்கள் உலகளவில் ஒன்றுபட்ட கிறிஸ்தவக் குடும்பத்தின் பாகமாக இருப்பதால் ஒருவரையொருவர் சகோதரர் என்றும் சகோதரி என்றும் அழைப்பது பொருத்தமாகவே இருக்கிறது. (1 பே. 2:17; 5:9) வேறே ஆடுகளாக இருப்பவர்கள், “சகோதரர்” அல்லது “சகோதரி” என்று அழைப்பதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால், சக கிறிஸ்தவர்களிடம் மரியாதை காட்ட அவர்களுக்கும் தகுந்த காரணம் இருக்கும்.—1 பேதுரு 3:8-ஐ வாசியுங்கள்.
ஏன் அந்தளவு முக்கியம்?
10, 11. மரியாதையும் மதிப்பும் ஏன் அந்தளவு முக்கியம்?
10 மரியாதையும் மதிப்பும் ஏன் அந்தளவு முக்கியம்? நம் சகோதர சகோதரிகளுக்கு மதிப்புக் கொடுப்பதன்மூலம் சபையின் நலனையும் ஒற்றுமையையும் பாதுகாக்கப் பாடுபடுகிறோம்.
11 ஆம், கடவுளோடுள்ள நெருங்கிய பந்தமும் அவருடைய சக்தியின் உதவியும் மிகுந்த பலத்தைத் தருவதாக நாம் உணருகிறோம். (சங். 36:7; யோவா. 14:26). அதேசமயத்தில், சக கிறிஸ்தவர்கள் நம்மீது மதிப்பிருப்பதைக் காட்டும்போது ஊக்கம் பெறுகிறோம். (நீதி. 25:11) மற்றவர்கள் நம்மீது மரியாதை வைத்திருப்பதைச் சொல்லிலும் செயலிலும் காட்டும்போது நாம் உச்சிக் குளிர்ந்துவிடுகிறோம். இது, வாழ்வின் பாதையில் சந்தோஷத்துடனும் திடத்தீர்மானத்துடனும் தொடர்ந்து நடக்க நமக்கு இன்னும் பலத்தைத் தருகிறது. நீங்களும் இவ்வாறு உணர்ந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
12. சபையில் அன்பான சூழல் நிலவ நாம் எல்லாரும் எப்படி உதவலாம்?
12 மரியாதையைப் பெற வேண்டுமென்ற ஏக்கம் நமக்கு இயல்பாகவே இருப்பதை யெகோவா அறிந்திருக்கிறார்; ஆகவே, அவரது வார்த்தையின் மூலம் நம்மை இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள்.” (ரோ. 12:10, ஈஸி டு ரீட் வர்ஷன்; மத்தேயு 7:12-ஐ வாசியுங்கள்.) எக்காலத்திற்கும் பொருந்தும் இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்கிற கிறிஸ்தவர்கள் எல்லாரும் சபையில் அன்பான சூழல் நிலவ உதவுகிறார்கள். ஆகவே, நாம் எல்லாரும் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘சபையில் ஒரு சகோதரரிடமோ சகோதரியிடமோ உள்ளப்பூர்வமான மரியாதையைக் கடைசியாக எப்போது வெளிக்காட்டினேன்?’—ரோ. 13:8.
நம் எல்லாருக்குமான ஒரு பொறுப்பு
13. (அ) மதிப்புக் கொடுப்பதில் யார் முந்திக்கொள்ள வேண்டும்? (ஆ) ரோமர் 1:7-லுள்ள பவுலின் வார்த்தைகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன?
13 மதிப்புக் கொடுப்பதில் யார் முந்திக்கொள்ள வேண்டும்? எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் கிறிஸ்தவ மூப்பர்களைப் பற்றிச் சொல்கையில், “உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்கள்” என்று குறிப்பிட்டார். (எபி. 13:17) ஆம், மூப்பர்கள் நிறையக் காரியங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறார்கள். இருந்தாலும், மந்தைக்கு மேய்ப்பர்களாக, சக மூப்பர்களுக்கும் சபையிலுள்ள மற்றவர்களுக்கும் மதிப்புக் கொடுப்பதில் அவர்கள் முந்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, சபையின் ஆன்மீகத் தேவைகளைக் குறித்து மூப்பர்கள் கலந்து பேசுகையில், சக மூப்பர்களின் கருத்துகளுக்கு செவிகொடுப்பதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுக்கிறார்கள். அதேபோல ஒரு தீர்மானம் எடுக்கையில், எல்லா மூப்பர்களுடைய கருத்துகளையும் கவனத்தில் கொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுக்கிறார்கள். (அப். 15:6-15) என்றாலும், ரோமர்களுக்கு எழுதிய இந்தக் கடிதத்தை மூப்பர்களுக்காக மட்டுமே அல்ல முழு சபைக்காகவும் பவுல் எழுதினார் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். (ரோ. 1:7) ஆகவே, மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ள வேண்டுமென பவுல் கொடுத்த இந்த அறிவுரை இன்று நம் எல்லாருக்குமே பொருந்துகிறது.
14. (அ) மதிப்புக் கொடுப்பதற்கும் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்வதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்குங்கள். (ஆ) என்ன கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம்?
14 பவுலின் அறிவுரையிலுள்ள இந்த அம்சத்தையும் கவனியுங்கள். அவர் வெறுமென மதிப்புக் கொடுக்கும்படி அல்ல மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளும்படி ரோம கிறிஸ்தவர்களை அறிவுறுத்தினார். இது ஏன் முக்கியம்? இந்த உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். ஓர் ஆசிரியர், எழுதப் படிக்கத் தெரிந்த மாணவர்களிடம் வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி சொல்வாரா? இல்லை. அவர்களுக்கு ஏற்கெனவே வாசிக்கத் தெரியும். ஆனால், அவர்கள் இன்னும் நன்றாக வாசிப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் விரும்புவார். அதுபோல, ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது ஏற்கெனவே உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருக்கிறது; இது மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்க நம்மைத் தூண்டுகிறது. (யோவா. 13:35) என்றாலும், அந்த மாணவர்கள் நன்கு வாசிக்க கற்றுக்கொள்வதன் மூலம் இன்னும் முன்னேற்றம் செய்யலாம்; அதுபோல, நாமும் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்வதன் மூலம் இன்னும் முன்னேற்றம் செய்யலாம். (1 தெ. 4:9, 10) இந்தப் பொறுப்பு நம் எல்லாருக்குமே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘சபையில் உள்ளவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதில் நான் முந்திக்கொள்கிறேனா?’
“எளியவர்களுக்கு” மதிப்புக் கொடுத்தல்
15, 16. (அ) மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் நாம் யாரை ஒதுக்கிவிடக் கூடாது, ஏன்? (ஆ) சகோதர சகோதரிகள் எல்லாரிடமும் உள்ளப்பூர்வமான மரியாதை வைத்திருக்கிறோமா என எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
15 மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் சபையிலுள்ள யாரை நாம் ஒதுக்கிவிடக் கூடாது? கடவுளுடைய வார்த்தை இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஏழைக்கு [அதாவது, எளியவர்களுக்கு] இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” (நீதி. 19:17) இதிலுள்ள நியமம் மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் நம்மை என்ன செய்யத் தூண்ட வேண்டும்?
16 பெரும்பாலான மக்கள் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு மதிப்புக் கொடுக்க விரும்புகிறார்கள்; அதேசமயத்தில், தங்கள் பார்வைக்குத் தாழ்ந்தவர்களாகத் தெரிபவர்களிடம் துளியும் மரியாதை இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். ஆனால், யெகோவா அப்படிப்பட்டவரல்ல. “என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்” என்று அவர் சொல்கிறார். (1 சா. 2:30; சங். 113:5-7) தமக்குச் சேவை செய்கிற, மதிப்புக் கொடுக்கிற எல்லாரையும் யெகோவா மதிக்கிறார். ‘எளியவர்களை’ (NW) அவர் ஒதுக்குவதில்லை. (ஏசாயா 57:15-ஐ வாசியுங்கள்; 2 நா. 16:9) நாம் யெகோவாவைப் பின்பற்ற விரும்புகிறோம். ஆகவே, சபையிலுள்ளவர்களுக்கு நாம் உண்மையிலேயே மதிப்புக் கொடுக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால், நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘சபையில் முக்கியப் பொறுப்பில் இல்லாதவர்களிடம் நான் எப்படி நடந்துகொள்கிறேன்?’ (யோவா. 13:14, 15) இதற்கான பதில் மற்றவர்கள்மீது நமக்கு எந்தளவு மரியாதை இருக்கிறது என்பதைக் காட்டும்.—பிலிப்பியர் 2:3, 4-ஐ வாசியுங்கள்.
நம் நேரத்தை அளிப்பதன் மூலம் மதிப்புக் கொடுத்தல்
17. மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்வதற்கு ஒரு முக்கிய வழி என்ன? ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
17 சபையில் உள்ள எல்லாருக்கும் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்வதற்கு ஒரு முக்கிய வழி என்ன? நம் நேரத்தை மற்றவர்களுக்கு அளிப்பதே. ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? கிறிஸ்தவர்களாகிய நம்முடைய வாழ்க்கை எப்போதுமே ஓய்வொழிச்சல் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது; அதோடு சபை சம்பந்தமான முக்கிய வேலைகளும் நிறைய இருப்பதால் நேரமே கிடைப்பதில்லை. எனவே, நாம் நேரத்தை பொன்போல் கருதுவதில் ஆச்சரியமில்லை. சகோதர சகோதரிகள் நமக்காக நிறைய நேரம் செலவிட வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாதெனவும் நமக்குத் தெரியும். அதேபோல் சபையிலுள்ள மற்றவர்கள் தங்களுக்காக அதிக நேரம் செலவிடும்படி நம்மிடம் எதிர்பார்க்க கூடாது என்பதைப் புரிந்து நடந்துகொள்கையில் நாம் சந்தோஷப்படுகிறோம்.
18. பக்கம் 18-லுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, மற்றவர்களுக்காக நேரம் செலவிட விரும்புவதை நாம் எப்படிக் காட்டலாம்?
18 இருந்தாலும், நாம் (முக்கியமாக சபை மூப்பர்கள்) நம்முடைய நேரத்தில் கொஞ்சத்தை சக கிறிஸ்தவர்களுக்காக மனமார ஒதுக்குவது அவர்கள்மேல் மரியாதை வைத்திருப்பதைக் காட்டும். எப்படி? நாம் செய்யும் வேலையை சற்று நிறுத்திவிட்டு நம் சகோதரருக்காக கொஞ்ச நேரம் செலவிடுவது, ‘நீங்கள் எனக்கு ரொம்ப வேண்டியவர். என் வேலையைவிட உங்களுக்காக நேரம் செலவிடுவதுதான் எனக்கு முக்கியம்.’ என்று சொல்வதுபோல் இருக்கும். (மாற். 6:30-34) அதற்கு நேர்மாறாக, நம்முடைய வேலையிலிருந்து சற்று நேரத்தை நம் சகோதரருக்காக ஒதுக்கவில்லையென்றால் அவரை நாம் அற்பமாக கருதுவதாய் நினைத்துக் கொள்வார். சிலசமயங்களில், ஏதாவது அவசர வேலை இருந்தால் அதை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்காக நேரம் செலவிட முடியாதுதான். இருந்தாலும், மற்றவர்களுக்காக கொஞ்ச நேரத்தை செலவிடுவதோ செலவிடாமல் இருப்பதோ சகோதர சகோதரிகள்மேல் நமக்கு எந்தளவு மரியாதை இருக்கிறது என்பதைக் காட்டிவிடும்.—1 கொ. 10:24.
மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளத் தீர்மானமாயிருங்கள்
19. நம் நேரத்தைக் கொடுப்பதைத் தவிர வேறு எவ்வித்தில் சக கிறிஸ்தவர்களுக்கு மதிப்புக் காட்டலாம்?
19 சக கிறிஸ்தவர்களுக்கு மதிப்புக் கொடுக்க முக்கியமான வேறு வழிகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, அவர்களுக்காக நம் நேரத்தைக் கொடுக்கும்போது நம் கவனத்தையும் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்திலும் யெகோவா முன்மாதிரி வைக்கிறார். சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.” (சங். 34:15) யெகோவாவைப்போல நாமும் நம் கண்களையும் செவிகளையும் உதவிக்காக நம்மிடம் வரும் சகோதரர்களிடமாகத் திருப்ப முயல வேண்டும்; ஆம், நம் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நாம் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோம்.
20. மதிப்புக் கொடுப்பது சம்பந்தமான என்ன நினைப்பூட்டுதல்களை நாம் மனதில் வைக்க விரும்புகிறோம்?
20 நாம் இதுவரை சிந்தித்தபடி, சக கிறிஸ்தவர்களிடம் உள்ளப்பூர்வமான மரியாதை காட்டுவதன் அவசியத்தை மனதில் தெளிவாக வைக்க விரும்புகிறோம். அதோடு, எளியவர்கள் உட்பட அனைவருக்கும் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ள நாம் வாய்ப்புகளைத் தேடுகிறோம். இப்படிச் செய்வதன்மூலம், சகோதர அன்பையும் சபையின் ஒற்றுமையையும் பாதுகாப்போம். எனவே, நாம் ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுத்தால் மட்டும் போதாது; மதிப்புக் கொடுப்பதில் எப்போதும் முந்திக்கொள்ளவும் வேண்டும். அப்படிச் செய்ய நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்களா?
[அடிக்குறிப்பு]
a எட்டாம் சங்கீதத்தில் தாவீது சொன்ன வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக பரிபூரண மனிதரான இயேசு கிறிஸ்துவுக்கும் பொருந்துகின்றன.—எபி. 2:6-9.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• மதிப்பும் மரியாதையும் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளது?
• நம் சக கிறிஸ்தவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?
• ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பது ஏன் அந்தளவு முக்கியம்?
• சக கிறிஸ்தவர்களுக்கு எந்தெந்த வழிகளில் நாம் மதிப்புக் காட்டலாம்?
[பக்கம் 18-ன் படம்]
சக கிறிஸ்தவர்களுக்கு நாம் எப்படி மதிப்புக் கொடுக்கலாம்?