நொறுங்கிய நெஞ்சினரின் கூக்குரலை யெகோவா கேட்கிறார்
“எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் [நம்] எல்லாருக்கும் நேரிடுகின்றன” என்று சொன்னார் ஞானியான சாலொமோன் ராஜா. (பிர. 9:11, NW) நம் வாழ்வில் ஏதாவது சோகம் சூறாவளி போல் தாக்கும்போது நம் மனம் சுக்குநூறாகிவிடலாம். குறிப்பாக, நம் நெருங்கிய குடும்ப அங்கத்தினர் ஒருவர் திடீரென இறக்கும்போது அது பேரிடியாக இருக்கும். வாரங்கள் மாதங்கள் பல கடந்தாலும் நீங்கள் துக்கத்திலேயே மூழ்கியிருக்கலாம். சோகத்தில் தத்தளிக்கும்போது யெகோவாவிடம் ஜெபிப்பதற்குக்கூட அருகதையற்றவர்களாக உணரலாம்.
இந்நிலையில் ஒருவருக்கு ஆதரவும் அன்பும் அரவணைப்பும் தேவை. “தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்” என்று தாவீது நம்பிக்கையூட்டினார். (சங். 145:14, பொது மொழிபெயர்ப்பு) “கர்த்தருடைய கண்கள் பூமியில் உள்ள அனைவர் மீதும் சுற்றிவரும். தனக்கு உண்மையானவர்களை அவர் தேடி அவர்களைப் பலமுள்ளவர் ஆக்குவார்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 16:9, ஈஸி டு ரீட் வர்ஷன்) “நொறுங்கிய, நலிந்த நெஞ்சினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்” என்று யெகோவா சொல்கிறார். (ஏசா. 57:15, பொ.மொ.) நொறுங்கிய நெஞ்சினருக்கு யெகோவா எவ்வழிகளில் ஆறுதலும் ஆதரவும் அளிக்கிறார்?
“ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை”
யெகோவா நமக்கு ஏற்ற காலத்தில் உதவும் வழிகளில் ஒன்று, கிறிஸ்தவக் கூட்டுறவு. “சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு பைபிள் அறிவுரை கூறுகிறது. (1 தெ. 5:14) சக கிறிஸ்தவர்கள் தாளாத வேதனையிலோ துக்கத்திலோ துவண்டிருக்கும் வேளையில், ஆறுதலாகவும் அனுசரணையாகவும் நாம் பேசும் வார்த்தைகள் அவர்களைத் தூக்கி நிறுத்தும் தூண்களைப் போல இருக்கும். அவர்களிடம் ஆறுதலாகச் சிறிது நேரம் பேசினால்கூட நைந்த நார்போல இருப்பவர்களின் மனதுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். இதே போன்ற மன வேதனையையும் உணர்ச்சி கொந்தளிப்பையும் அனுபவித்தவர்கள் சொல்லும் வார்த்தைகள் காயத்தை ஆற்றும் மருந்து போல் இருக்கும். வாழ்வில் இதுபோன்ற துயரத்தைத் தாண்டி வந்த நண்பர் ஒருவர் கொடுக்கும் யோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, யெகோவா நொறுங்கிய நெஞ்சினருக்குப் புத்துணர்வு அளிக்கிறார்.
அலெக்ஸ் என்ற ஒருவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். திருமணமாகி கொஞ்ச காலத்திலேயே மருந்துக்கு மசியாத ஒரு வியாதி அவருடைய மனைவியின் உயிரைத் திடீரென பறித்துவிட்டது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், வட்டாரக் கண்காணி ஒருவர் அலெக்ஸைச் சந்தித்து ஆறுதலான வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டார். இவரும்கூட தன் மனைவியை மரணத்தில் இழந்தவர்; ஆனால் மறுமணமானவர். இவர் உணர்ச்சி ரீதியில் நொறுங்கிப் போயிருந்த சமயத்தில், துன்ப சுமை அழுத்தியதாக அலெக்ஸிடம் சொன்னார். மற்றவர்களுடன் ஊழியம் செய்தபோதும் கூட்டங்களுக்குப் போனபோதும் இவரிடம் கவலையின் ரேகை தென்படவில்லை. ஆனால், வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்தவுடன் தனிமை இவரை வாட்டியது. இதைக் கேட்ட அலெக்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “இதுபோன்ற கவலைகள் எல்லாருடைய வாழ்விலும் சகஜம்தான் என்பதைத் தெரிந்துகொண்டபோது என்னுடைய மனபாரம் குறைந்து லேசானது.” துயரத்தில் இருக்கும்போது ‘ஏற்ற காலத்தில் சொல்லப்படும் வார்த்தை’ ஆறுதலின் அருமருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.—நீதி. 15:23.
மணத்துணையை இழந்தவர்கள் பலரைச் சந்தித்துப் பேசிய அனுபவமுள்ள இன்னொரு மூப்பர், தெம்பூட்டும் சில வார்த்தைகளை அலெக்ஸுக்குச் சொல்ல விரும்பினார். அதனால் அவரிடம் சென்று, நம்முடைய உணர்ச்சிகளையும் தேவைகளையும் யெகோவா நன்கு அறிந்திருக்கிறார் என்பதை அவருக்கு அன்போடு எடுத்துக்காட்டினார். “ஒருவேளை காலம் செல்லச் செல்ல ஒரு துணை வேண்டுமென்று நீங்கள் உணரலாம்; அப்படிப்பட்டவர்கள் மறுமணம் செய்துகொள்ள யெகோவா அன்பான ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று அந்தச் சகோதரர் சொன்னார். சில சமயங்களில், மணத்துணையை இழந்தவர்கள் விருப்பப்பட்டால்கூட மறுமணம் செய்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். ஆனால், அந்தச் சகோதரர் சொன்னதை மனதில் வைத்து அலெக்ஸ் இவ்வாறு சொன்னார்: “மறுமணம் செய்துகொண்டால் என் மனைவிக்கும் யெகோவா செய்திருக்கிற திருமண ஏற்பாட்டிற்கும் துரோகம் செய்வதைப் போல ஆகிவிடுமோ என்று நான் பயந்தேன்; ஆனால், அவர் அப்படிச் சொன்னது என் பயத்தைப் போக்கியது.”—1 கொ. 7:8, 9, 39.
வாழ்க்கையில் ஏகப்பட்ட கஷ்ட நஷ்டங்களைச் சந்தித்த சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு சொன்னார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.” (சங். 34:15) இரக்க குணம் படைத்த முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் மூலம் நொறுங்கிய நெஞ்சினருக்குத் தேவையான ஆறுதலையும் ஞானமான அறிவுரையையும் சரியான நேரத்தில் யெகோவா தருகிறார். இது அருமையான, நடைமுறையான ஏற்பாடு, அல்லவா?
கிறிஸ்தவக் கூட்டங்கள் மூலம் உதவி
உள்ளம் உடைந்துபோன ஒருவர் வேண்டாத சிந்தனைகளில் எளிதில் சிக்கிவிடுவதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நீதிமொழிகள் 18:1 (NW) இவ்வாறு எச்சரிக்கிறது: “தனிமைப்படுத்திக்கொள்கிறவன் தன் இஷ்டப்படி செய்யப் பார்ப்பான், நடைமுறை ஞானம் அனைத்தையுமே புறக்கணித்துவிடுவான்.” அலெக்ஸ் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “பொதுவாக, மணத்துணையை இழக்கும்போது, வேண்டாத சிந்தனைகள் மனதில் பெருக்கெடுக்கும்.” அவர் மனதுக்குள் கேட்டுக்கொண்டதை இவ்வாறு வார்த்தைகளில் வடிக்கிறார்: “‘நான் வேறு விதமாக நடந்திருக்கலாமோ? நன்கு யோசித்து நடந்திருக்க வேண்டுமோ?’ நான் தன்னந்தனியாக இருக்க விரும்பவில்லை. ஒரு துணையில்லாமலும் வாழ விரும்பவில்லை. தினம்தினம் தனிமை வாட்டி வதைக்கும்போது இதுபோன்ற வேண்டாத சிந்தனைகளைத் தவிர்ப்பது ரொம்பக் கஷ்டம்.”
எல்லாவற்றுக்கும் மேலாக, நொறுங்குண்டு போயிருக்கும் ஒருவருக்கு உற்சாகமூட்டும் கூட்டுறவு அவசியம். இதை கிறிஸ்தவக் கூட்டங்களில் அனுபவிக்க முடியும். அங்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கிற ஆன்மீக விஷயங்களை நாம் கேட்கிறோம்.
நம்முடைய சூழ்நிலையைக் குறித்து எதார்த்தமாக யோசித்துப் பார்க்க கிறிஸ்தவக் கூட்டங்கள் உதவுகின்றன. பைபிள் வசனங்களைக் கேட்டு அவற்றைத் தியானித்துப் பார்க்கும்போது நம் சொந்த பிரச்சினைகளைப் பற்றி யோசிக்க மாட்டோம், மாறாக மிக முக்கிய விஷயங்களைப் பற்றி சிந்திப்போம். அதாவது, யெகோவாவின் பேரரசாட்சியே சரியானதென நிரூபிக்கப்படுவதிலும், அவருடைய பெயர் பரிசுத்தப்படுவதிலும் நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவோம். மேலும், கூட்டங்களில் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது அவர் நம் வேதனையை அறிந்திருக்கிறார், புரிந்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது நம்மைப் பலப்படுத்தும்—மற்றவர்களுக்கு அது தெரியாமல் இருந்தாலும் சரி அவர்கள் அதைப் புரிந்துகொள்ளாதிருந்தாலும் சரி. “மனத்துயரால் உள்ளம் உடையும்” என்பது அவருக்குத் தெரியும். (நீதி. 15:13, பொ.மொ.) உண்மைக் கடவுளான யெகோவா நமக்கு உதவ விரும்புகிறார் என்பது நமக்குப் பலத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.—சங். 27:14.
எதிரிகளால் துரத்தப்பட்ட நேரத்தில் தாவீது ராஜா கடவுளை நோக்கி, “எனக்குள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று; என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று” என்று சொல்லிக் கதறினார். (சங். [திருப்பாடல்கள்] 143:4, பொ.மொ.) துன்பம் வரும்போது நாம் உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பலமிழந்து விடுகிறோம்; நம் உள்ளமும் சோர்ந்துவிடுகிறது. வியாதியினாலோ தீராத உடல் பலவீனத்தினாலோ நமக்குத் துன்பம் வரலாம். ஆனால், சகித்திருப்பதற்கு யெகோவா நமக்கு உதவுவார் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். (சங். 41:1-3) இன்று அவர் யாரையும் அற்புதமாகக் குணப்படுத்துவதில்லை, என்றாலும் கஷ்டத்தைச் சமாளிக்கத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் தருகிறார். சோதனைகளால் தாவீது துவண்டுபோனபோது யெகோவாவின் உதவியை நாடினார் என்பதை மறந்துவிடாதீர்கள். “பூர்வ நாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்” என்று அவர் பாடினார்.—சங். 143:5.
யெகோவா நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார் என்பதை பைபிளில் காணப்படும் தாவீதின் இந்தப் பாடலிலிருந்து தெரிந்துகொள்ளலாம். நம் வேண்டுதல்களை அவர் செவிகொடுத்துக் கேட்கிறார் என்பதை இந்தப் பாடல் வரிகள் உறுதியளிக்கின்றன. நாம் யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொண்டால் ‘அவர் நம்மை ஆதரிப்பார்.’—சங். 55:22.
“இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்”
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று யாக்கோபு 4:8 சொல்கிறது. கடவுளிடம் நெருங்கி வருவதற்கு ஒரு வழி ஜெபம் செய்வதாகும். “இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறுகிறார். (1 தெ. 5:17) ஒருவேளை உங்கள் உணர்ச்சிகளை விவரிக்க முடியாமல் போனால்கூட “வார்த்தைகளில் சொல்லப்படாத நம் உள்ளக் குமுறல்களைக் குறித்து . . . [கடவுளுடைய] சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது.” (ரோ. 8:26, 27) ஆம், யெகோவா நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்.
யெகோவாவுடன் இப்படி நெருங்கிய உறவை அனுபவிக்கும் மானிக்கா இவ்வாறு சொல்கிறார்: “ஜெபம், பைபிள் வாசிப்பு, தனிப்பட்ட படிப்பு மூலம் யெகோவா என் ஆத்ம நண்பரானார். அவரை நிஜமான நபரைப்போல் பார்க்கிறேன்; அவர் எனக்கு எப்போதும் உதவி செய்வதை அனுபவத்தில் பார்க்கிறேன். என் உணர்ச்சிகளை விவரிக்க முடியாத சமயத்தில் அவர் என்னைப் புரிந்துகொள்கிறார் என்பது எனக்கு மிகுந்த ஆறுதலளிக்கிறது. அவருடைய இரக்கத்திற்கும் ஆசீர்வாதத்திற்கும் அளவே இல்லை.”
அப்படியென்றால், சக கிறிஸ்தவர்கள் சொல்கிற அன்பான, ஆறுதலான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; கிறிஸ்தவக் கூட்டங்களில் கிடைக்கிற அன்பான அறிவுரைகளையும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் குறிப்புகளையும் கடைப்பிடியுங்கள்; உங்கள் மனதிலிருப்பதை ஜெபத்தில் யெகோவாவிடம் தெரிவியுங்கள். இவ்வழிகளில் யெகோவா நமக்கு ஏற்ற காலத்தில் உதவுவதன் மூலம், நம்மீது அக்கறை இருப்பதைக் காட்டுகிறார். “ஆன்மீக பலத்தைப் பெறுவதற்கு யெகோவா நமக்குச் செய்திருக்கும் இந்த எல்லா உதவிகளையும் பயன்படுத்திக்கொண்டால், கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தி’ நமக்குக் கிடைக்கும்” என்று அலெக்ஸ் தன் அனுபவத்திலிருந்து சொல்கிறார்.—2 கொ. 4:7.
[பக்கம் 18-ன் பெட்டி/ படம்]
நொறுங்கிய நெஞ்சினருக்கு ஆறுதல்
மனிதருடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற சொற்கள் சங்கீதப் புத்தகத்தில் பொதிந்துள்ளன; அதோடு, மன உளைச்சலால் தவிக்கும் நொறுங்கிய நெஞ்சினர் ஒருவருடைய கூக்குரலுக்கு யெகோவா செவிகொடுக்கிறார் என்ற உறுதியும் திரும்பத் திரும்ப அளிக்கப்படுகிறது. பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்:
“எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.”—சங். 18:6.
“உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.” —சங். 34:18, பொ.மொ.
“இருதயம் நொறுங்குண்டவர்களைக் [யெகோவா] குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.”—சங். 147:3.
[பக்கம் 17-ன் படம்]
துயரத்தில் வாடும்போது “ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை” எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது!