உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 8/15 பக். 20-24
  • பிசாசின் கண்ணிகள் — உஷார்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிசாசின் கண்ணிகள் — உஷார்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கட்டுப்பாடில்லாத பேச்சு எனும் நெருப்பை அணைத்துப்போடுங்கள்
  • மனித பயம்/சகாக்களின் வற்புறுத்தல் எனும் சுருக்குக் கயிற்றில் மாட்டிக்கொள்ளாதீர்கள்
  • மிதமிஞ்சிய குற்றவுணர்வு எனும் கண்ணியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்
  • சாத்தானின் சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவைதான்
  • சாத்தானின் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • இயேசுவைப் போல் “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் ஓடிப்போவான்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 8/15 பக். 20-24

பிசாசின் கண்ணிகள் — உஷார்!

‘பிசாசின் . . . கண்ணியிலிருந்து விடுபடுங்கள்.’​—⁠2 தீ. 2:⁠26.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

நீங்கள் எப்போதும் மற்றவர்களைச் சந்தேகிக்கிறீர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்?

மனித பயத்திற்கும் சகாக்களின் வற்புறத்தலுக்கும் அடிபணிந்த பிலாத்து மற்றும் பேதுருவுடைய உதாரணங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

மிதமிஞ்சிய குற்றவுணர்விலிருந்து நீங்கள் எப்படி விடுபடலாம்?

1, 2. இந்தக் கட்டுரையில் சாத்தான் பயன்படுத்தும் என்னென்ன கண்ணிகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்?

வேடன் விலங்குகளை வேட்டையாடிக் கொன்றுபோடுகிறான். பிசாசும் ஒருவிதத்தில் வேடன்தான். அவன் யெகோவாவின் ஊழியர்களை ‘வேட்டையாடுகிறான்.’ ஆனால், அவர்களைக் கொன்றுபோடுவது எப்போதுமே அவனுடைய குறிக்கோள் இல்லை. அவர்களை உயிரோடு பிடித்து தன் கைப்பாவையாகப் பயன்படுத்திக்கொள்வதுதான் அவனுடைய குறிக்கோள்.​—⁠2 தீமோத்தேயு 2:​24-26-ஐ வாசியுங்கள்.

2 விலங்கை உயிரோடு பிடிப்பதற்கு வேடன் வெவ்வேறு கண்ணிகளைப் பயன்படுத்தலாம். மறைந்திருக்கும் விலங்கை வெளியே வரச்செய்து சுருக்குக் கயிறு வீசிப் பிடிக்கலாம். அல்லது ஒரு மறைவான கண்ணியை வைத்து அதற்குத் தெரியாமலேயே அதைச் சட்டெனப் பிடிக்கலாம். கடவுளுடைய ஊழியர்களை உயிரோடு பிடிப்பதற்கு பிசாசும் இதுபோன்ற கண்ணிகளைப் பயன்படுத்துகிறான். அவனுடைய பிடியில் சிக்காதிருப்பதற்கு நாம் உஷாராய் இருக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் சாத்தான் நமக்குப் பொறி வைத்திருக்கிறான் என்று தெரியவரும்போது அந்த எச்சரிக்கைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பிசாசு பெரும்பாலும் பயன்படுத்தும் மூன்று கண்ணிகளைப் பற்றியும் அவற்றில் நாம் சிக்காதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். (1) கட்டுப்பாடில்லாத பேச்சு, (2) மனித பயமும் சகாக்களின் வற்புறுத்தலும், (3) மிதமிஞ்சிய குற்றவுணர்வு ஆகியவையே அந்த மூன்று கண்ணிகள். அடுத்த கட்டுரையில், சாத்தான் பயன்படுத்தும் இன்னும் இரண்டு கண்ணிகளைப் பற்றிப் பார்ப்போம்.

கட்டுப்பாடில்லாத பேச்சு எனும் நெருப்பை அணைத்துப்போடுங்கள்

3, 4. நாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகலாம்? உதாரணம் கொடுங்கள்.

3 காட்டுக்குள் பதுங்கியிருக்கும் விலங்குகளை வெளியே வரச்செய்ய காட்டின் ஒரு பகுதிக்கு வேடன் நெருப்பு வைக்கலாம். சூடு தாங்காமல் அவை வெளியே ஓடிவரும்போது அவன் அவற்றைப் பிடித்துவிடுவான். அதேபோல் பிசாசும் கிறிஸ்தவ சபையில் ‘நெருப்பை’ வைக்க முயற்சி செய்கிறான். அந்த நெருப்பு பற்றிக்கொண்டால், பாதுகாப்பின் புகலிடமாய் விளங்கும் சபையிலிருந்து சகோதர சகோதரிகள் வெளியே ஓடிவருவார்கள். அப்போது அவர்களை அவன் பிடித்துவிடலாம். நம்மையே அறியாமல் நாம் எப்படி அவனுக்கு உடந்தையாகி அவனுடைய கண்ணியில் சிக்கிவிடலாம்?

4 சீடனாகிய யாக்கோபு நாவை நெருப்புக்கு ஒப்பிட்டார். (யாக்கோபு 3:​6-8-ஐ வாசியுங்கள்.) நம்முடைய நாவை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், சபைக்குள் நாம் ‘நெருப்பை’ வைத்துவிடலாம். எப்படி? இதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்: சபைக் கூட்டத்தில், ஒரு சகோதரி ஒழுங்கான பயனியராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு செய்யப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு இரண்டு சகோதரிகள் அந்த அறிவிப்பைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். ஒருவர் அதைக் குறித்துச் சந்தோஷப்படுகிறார், அவருடைய ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிக்க வேண்டுமென விரும்புகிறார். மற்றொருவரோ அந்தச் சகோதரி பயனியர் செய்வதற்கான காரணத்தைச் சந்தேகிக்கிறார். சபையில் உள்ளவர்கள் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காகவே அவர் பயனியர் செய்ய முன்வந்திருப்பதாகச் சொல்கிறார். இந்த இரண்டு சகோதரிகளில் யாரை உங்களுடைய நண்பராக்கிக்கொள்ள விரும்புவீர்கள்? இவர்களில் யார் சபைக்குள் ‘நெருப்பு’ வைக்க பார்க்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.

5. கட்டுப்பாடில்லாத பேச்சு எனும் நெருப்பை அணைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

5 கட்டுப்பாடில்லாத பேச்சு எனும் நெருப்பை நாம் எப்படி அணைக்கலாம்? “இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இயேசு சொன்னார். (மத். 12:34) எனவே, நம்முடைய இருதயத்தை நாம் முதலாவது ஆராய்ந்து பார்க்க வேண்டும். மோசமான பேச்சுக்கு எண்ணெய் வார்க்கும் கெட்ட எண்ணங்களை முளையிலேயே கிள்ளியெறிகிறோமா? உதாரணத்திற்கு, சபை பொறுப்புகளைப் பெறுவதற்கு ஒரு சகோதரர் முன்னேற்றம் செய்வதைப் பார்க்கும்போது அவர் நல்லெண்ணத்தோடுதான் முயற்சி செய்கிறார் என்று நினைக்கிறோமா? அல்லது தன்னல நோக்கத்தோடு அவர் முயற்சி செய்வதாகச் சந்தேகிக்கிறோமா? நாம் எப்போதுமே அப்படிச் சந்தேகித்தால், கடவுளுக்கு உண்மையாய் இருந்த யோபுவின் உள்ளெண்ணத்தை பிசாசும் இப்படித்தான் சந்தேகித்தான் என்பதை நினைவில் வைக்க வேண்டும். (யோபு 1:​9-11) நம்முடைய சகோதரரைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை நிறுத்திவிட்டு, நாம் ஏன் அவரைப் பற்றித் தவறாக யோசிக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும். அவரைப் பற்றி அப்படி நினைக்க நியாயமான காரணம் இருக்கிறதா... அல்லது இந்தக் கடைசி நாட்களில், இந்த உலகத்தில் காணப்படும் அன்பற்ற தன்மை நம்முடைய நெஞ்சையும் நஞ்சாக்கியிருக்கிறதா... என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.​—⁠2 தீ. 3:​1-4.

6, 7. (அ) மற்றவர்களைக் குறைசொல்வதற்கு வேறென்ன காரணங்கள் இருக்கலாம்? (ஆ) மற்றவர்கள் நம்மைச் சபித்துப் பேசினால் நாம் என்ன செய்ய வேண்டும்?

6 மற்றவர்களைக் குறைசொல்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். அவற்றைப் பற்றி இப்போது சிந்திப்போம். மற்றவர்களுடைய செயல்களைவிட நம்முடைய செயல்களை எல்லாரும் பாராட்ட வேண்டும் என்ற ஆசை ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காக மற்றவர்களைவிட நம்மை மேலானவர்களாகக் காட்டிக்கொள்ள நாம் வாய்ப்பு தேடலாம். அல்லது நாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் போனதற்கு சாக்குப்போக்கு சொல்லலாம். இப்படி நடந்துகொள்வதற்கு பெருமையோ பொறாமையோ காரணமாக இருக்கலாம். அல்லது நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதும் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, விளைவு விபரீதமே.

7 ‘அவரிடம் உள்ள குறைகளைப் பற்றித்தானே பேசுறேன், அதில என்ன தப்பு இருக்கு?’ என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை அந்த நபருடைய கட்டுப்பாடில்லாத பேச்சு நம்மைப் புண்படுத்தியிருக்கலாம். அப்படியே அவர் நம்மைப் புண்படுத்தியிருந்தாலும் அவரைப் போலவே நாம் நடந்துகொள்வது சரியில்லை. அப்படிச் செய்வது எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதைப் போல்தான் இருக்கும். அது, பிசாசுக்குப் பிரியமாய் நடப்பதாக இருக்குமே தவிர கடவுளுக்குப் பிரியமாய் நடப்பதாக இருக்காது. (2 தீ. 2:26) இந்த விஷயத்தில் நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். மக்கள் அவரைச் சபித்துப் பேசியபோது, “பதிலுக்கு [அவர்] சபித்துப் பேசவில்லை.” மாறாக, “நீதியாய்த் தீர்ப்பு வழங்குகிறவரிடம் தம்மையே ஒப்படைத்தார்.” (1 பே. 2:​21-23) சரியான விதத்தில், சரியான நேரத்தில் யெகோவா காரியங்களைச் சரிசெய்வார் என்பதில் இயேசு அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கும் தேவை. நம்முடைய பேச்சு இதமாய் இருந்தால், சபையிலுள்ளவர்கள் “ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு வாழ்வதற்கும்” நாம் உந்துகோலாய் இருப்போம்.​—⁠எபேசியர் 4:​1-3-ஐ வாசியுங்கள்.

மனித பயம்/சகாக்களின் வற்புறுத்தல் எனும் சுருக்குக் கயிற்றில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

8, 9. பிலாத்து ஏன் இயேசுவுக்கு மரணத்தீர்ப்பளித்தார்?

8 கண்ணியில் ஒரு விலங்கு சிக்கிக்கொண்டால் அதனால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. அதேபோல், ஒருவர் பயத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளும்போது அல்லது சகாக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கிச் செல்லும்போது ஓரளவு சுதந்திரத்தை இழந்துவிடுகிறார். (நீதிமொழிகள் 29:​25-ஐ வாசியுங்கள்.) மனித பயத்துக்கும் சகாக்களின் வற்புறுத்தலுக்கும் அடிபணிந்த இரண்டு பேருடைய உதாரணத்தைச் சிந்திப்போம். அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

9 முதலாவதாக, ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்துவை எடுத்துக்கொள்வோம். இயேசு குற்றமற்றவர் என்பதை அறிந்திருந்ததால் அவருக்கு எந்தத் தண்டனையும் கொடுக்க அவர் விரும்பவில்லை. சொல்லப்போனால், இயேசு ‘மரண தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை’ என்று அவருடைய வாயாலேயே சொன்னார். என்றாலும், அவருக்கு மரணத்தீர்ப்பளித்தார். ஏன்? ஏனென்றால், கூடிவந்த கும்பலின் வற்புறுத்தலுக்கு இணங்கினார். (லூக். 23:​15, 21-25) “இவனை விடுதலை செய்தால் ரோம அரசனுக்கு நீர் நண்பர் அல்ல” என்று எதிரிகள் கூச்சல்போட்டார்கள். இப்படிச் சொன்னால்தான் பிலாத்து தங்கள் வழிக்கு வருவார் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். (யோவா. 19:12) எங்கே கிறிஸ்துவுக்குச் சாதகமாகப் பேசினால் தன்னுடைய பதவி பறிபோய்விடுமோ, தன் உயிருக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று பிலாத்து பயந்திருக்கலாம். எனவே, கும்பலின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பிசாசின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

10. கிறிஸ்து யாரென்று தெரியாது என்று பேதுரு சொல்லக் காரணம் என்ன?

10 இரண்டாவதாக, அப்போஸ்தலன் பேதுருவை எடுத்துக்கொள்வோம். இவர் இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இயேசுவே மேசியா என்று எல்லாருக்கும் முன்பாகச் சொன்னவர். (மத். 16:16) ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு பேசிய விஷயத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் பல சீடர்கள் அவரைவிட்டுப் போனபோதிலும் இவர் போகவில்லை. (யோவா. 6:​66-69) இயேசுவின் எதிரிகள் அவரைக் கைதுசெய்ய வந்தபோது தன் எஜமானரைப் பாதுகாக்க பேதுரு வாளை உருவினார். (யோவா. 18:​10, 11) என்றாலும், அதே இரவில் அவர் பயந்துபோய், இயேசு கிறிஸ்து யாரென்றே தெரியாது என்று சொல்லிவிட்டார். கொஞ்ச நேரத்திற்கு, மனித பயம் என்ற கண்ணியில் பேதுரு சிக்கிக்கொண்டார். அந்தப் பயம், தைரியமாகச் செயல்படவிடாமல் அவரைக் கட்டிப்போட்டது.​—⁠மத். 26:​74, 75.

11. எப்படிப்பட்ட வற்புறுத்தல்களுக்கு நாம் இணங்கிப்போய்விடக் கூடாது?

11 கடவுளுக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்யச் சொல்லி மற்றவர்கள் வற்புறுத்தும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் இணங்கிப்போய்விடக் கூடாது. பொய் பித்தலாட்டம் செய்ய அல்லது பாலியல் முறைகேட்டில் ஈடுபட சக பணியாளர்களோ மற்றவர்களோ நம்மை வற்புறுத்தலாம். பரீட்சையில் காப்பியடிக்க உதவும்படி, ஆபாசப் படங்களைப் பார்க்கும்படி, சிகரெட் குடிக்கும்படி, போதைப்பொருள்களைப் பயன்படுத்தும்படி, அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தும்படி, பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும்படி சக மாணவர்கள் கிறிஸ்தவ இளைஞர்களை வற்புறுத்தலாம். மனித பயம், சகாக்களின் வற்புறுத்தல் எனும் கண்ணிகளில் நாம் சிக்கிவிட்டால் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோம். எனவே, அந்தக் கண்ணிகளில் சிக்காதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

12. பிலாத்து மற்றும் பேதுருவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

12 பிலாத்து மற்றும் பேதுருவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்ப்போம். கிறிஸ்துவைப் பற்றி பிலாத்துவுக்கு அவ்வளவாகத் தெரியாது. என்றாலும் இயேசு சாதாரண மனிதர் அல்ல, குற்றமற்றவர் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், பிலாத்துவுக்கு மனத்தாழ்மை இல்லை, உண்மைக் கடவுளை அவர் நேசிக்கவும் இல்லை. அதனால், பிசாசு அவரை ‘லபக்’ என்று பிடித்துவிட்டான். பேதுருவுக்கோ திருத்தமான அறிவும் இருந்தது, கடவுள்மீது அன்பும் இருந்தது. என்றாலும், சில சமயங்களில் அவர் தாழ்மையாக நடந்துகொள்ளவில்லை, மனிதர்களுக்குப் பயப்பட்டார், அவர்களுடைய வற்புறுத்தலுக்கு அடிபணிந்தார். இயேசு கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, “மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போக மாட்டேன்” என்று பேதுரு உறுதியாகச் சொன்னார். (மாற். 14:29) ‘யெகோவா என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?’ என்று பாடிய சங்கீதக்காரனைப் போல் பேதுருவுக்கு யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருந்தால், அவருக்கு வந்த சோதனைகளை எளிதாகச் சமாளித்திருப்பார். (சங். 118:⁠6) பூமியில் தாம் செலவிட்ட கடைசி இரவன்று, பேதுருவையும் இன்னும் இரண்டு அப்போஸ்தலர்களையும் அழைத்துக்கொண்டு கெத்செமனே தோட்டத்திற்குள் இயேசு சென்றார். விழிப்புடன் இருப்பதற்குப் பதிலாக பேதுருவும் அவருடைய நண்பர்களும் தூங்கிவிட்டார்கள். இயேசு அவர்களை எழுப்பி, “நண்பர்களே, சோதனைக்கு இணங்கிவிடாதபடி விழிப்புடன் இருந்து ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார். (மாற். 14:38) ஆனால், பேதுரு மீண்டும் தூங்கிவிட்டார். அதனால் பின்னர், மனித பயத்துக்கும், சகாக்களின் வற்புறுத்தலுக்கும் இணங்கிவிட்டார்.

13. சகாக்களின் அழுத்தத்தைச் சமாளிக்க எது நமக்கு உதவும்?

13 பிலாத்து மற்றும் பேதுருவின் உதாரணங்கள் நமக்கு மற்றொரு முக்கியப் பாடத்தையும் கற்பிக்கின்றன: சகாக்களுடைய வற்புறுத்தலைச் சமாளிக்க நமக்குத் திருத்தமான அறிவு, மனத்தாழ்மை, அடக்கம், கடவுள்மீது அன்பு தேவை. அதோடு, நாம் கடவுளுக்குப் பயப்பட வேண்டுமே தவிர மனிதர்களுக்கு அல்ல. நம்முடைய விசுவாசத்திற்குத் திருத்தமான அறிவு அஸ்திவாரமாக இருந்தால், சத்தியத்தைப் பற்றி மற்றவர்களிடம் தைரியமாகப் பேசுவோம். சகாக்களின் வற்புறுத்தலுக்கும் மனித பயத்திற்கும் இணங்கிப்போக மாட்டோம். அதேசமயம், நம்முடைய சொந்த சக்தியால் எதையும் சமாளிக்க முடியும் என்று நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது. மாறாக, சகாக்களின் வற்புறுத்தலைச் சமாளிக்க நமக்குக் கடவுளுடைய சக்தி தேவை என்பதை மனதார ஒத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவிடம் அவருடைய சக்திக்காக ஜெபம் செய்ய வேண்டும். நாம் அவர்மீது வைத்திருக்கும் அன்பு, அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் அவருடைய நெறிகளைக் கடைப்பிடிக்கவும் நம்மைத் தூண்ட வேண்டும். அதோடு, சகாக்களின் வற்புறுத்தலை எதிர்ப்படுவதற்கு முன்பே அதற்கு இணங்கிப் போகாதிருக்க நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். பின்னர், சகாக்களின் வற்புறுத்தலுக்கு இணங்காதிருக்க பிள்ளைகளை முன்னதாகவே தயார்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், தவறான காரியங்களைச் செய்ய சக மாணவர்கள் வற்புறுத்தும்போது அவர்கள் இணங்கிப்போக மாட்டார்கள்.​—⁠2 கொ. 13:⁠7. a

மிதமிஞ்சிய குற்றவுணர்வு எனும் கண்ணியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்

14. கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளைக் குறித்து என்ன முடிவுக்கு வரவேண்டுமென சாத்தான் ஆசைப்படுகிறான்?

14 வேடன் சில சமயத்தில் விலங்குகள் நடமாடும் பாதையில் கனமான மரக்கட்டையை அல்லது கல்லைக் கட்டித் தொங்கவிடுவான். இதை அறியாத விலங்கு அந்தப் பாதையிலுள்ள கயிற்றை மிதிக்கும்போது அந்தக் மரக்கட்டையோ கல்லோ அதன்மீது விழுந்து அதை நசுக்கி அல்லது நொறுக்கிப் போடும். மிதமிஞ்சிய குற்றவுணர்வு அந்தக் கனமான மரக்கட்டையை அல்லது கல்லைப் போல் நம்மை நொறுக்கிப்போடலாம். கடந்த காலத்தில் செய்த ஒரு தவறை நினைத்து நாம் ‘மிகவும் நொறுங்கிப் போகலாம்.’ (சங்கீதம் 38:​3-5, 8-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் இரக்கத்தைப் பெற நாம் லாயக்கில்லாதவர்கள், அவர் எதிர்பார்ப்பவற்றை நம்மால் செய்யவே முடியாது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டுமென சாத்தான் ஆசைப்படுகிறான்.

15, 16. மிதமிஞ்சிய குற்றவுணர்வு எனும் கண்ணியில் நீங்கள் எப்படிச் சிக்காதிருக்கலாம்?

15 ஆளையே நொறுக்கிப் போடும் இந்தக் கண்ணியில் நீங்கள் எப்படிச் சிக்காதிருக்கலாம்? படுமோசமான ஒரு பாவத்தை நீங்கள் செய்திருந்தால், யெகோவாவுடன் உங்களுக்குள்ள பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்ள இப்போதே நடவடிக்கை எடுங்கள். மூப்பர்களை அணுகி அவர்களிடம் உதவி கேளுங்கள். (யாக். 5:​14-16) செய்த தவறைச் சரிசெய்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். (2 கொ. 7:11) கண்டிக்கப்பட்டால் மனமுடைந்து போகாதீர்கள். யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவரைத்தான் கண்டிப்பார். (எபி. 12:⁠6) அந்தப் பாவத்தைச் செய்ய எவை உங்களைத் தூண்டினவோ அவற்றிலிருந்து விலகியிருக்க தீர்மானமாய் இருங்கள், எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் இருங்கள். நீங்கள் செய்த தவறுக்காக வருந்தி, மனந்திரும்பி வந்த பிறகு, உங்கள் தவறுகளை இயேசு கிறிஸ்துவின் மீட்கும்விலையின் அடிப்படையில் யெகோவா மன்னிப்பார் என்பதில் நம்பிக்கையாய் இருங்கள்.​—⁠1 யோ. 4:​9, 14.

16 தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட பிறகும்கூட அதை நினைத்து நினைத்து சிலர் வருந்திக்கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி வருந்துகிறீர்கள் என்றால், இவற்றை நினைவில் வையுங்கள்: தமது அன்பு மகனுக்குப் பக்கபலமாய் இருக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் அவரை அம்போவென விட்டுவிட்டு ஓடிப்போன பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் யெகோவா மன்னித்தார். பூர்வ கொரிந்து சபையில் அருவருக்கத்தக்க, வெட்கக்கேடான காரியத்தைச் செய்ததால் சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவன் மனந்திரும்பி வந்தபோது யெகோவா அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டார். (1 கொ. 5:​1-5; 2 கொ. 2:​6-8) இப்படிப் படுமோசமான பாவங்களைச் செய்தவர்கள் மனந்திருந்தி வந்தபோது கடவுள் அவர்களை மன்னித்தார் என்று பைபிள் சொல்கிறது.​—⁠2 நா. 33:​2, 10-13; 1 கொ. 6:​9-11.

17. மீட்கும்விலையால் நமக்கு என்ன பயன்?

17 நீங்கள் உண்மையிலேயே மனந்திரும்பி வந்து, யெகோவா உங்களுக்கு இரக்கம் காட்டுவார் என்பதை முழுமையாய் நம்பினால், கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளை அவர் மன்னித்தும்விடுவார், மறந்தும்விடுவார். இயேசுவின் மீட்கும்விலையின் அடிப்படையில் யெகோவாவால் மன்னிக்கவே முடியாதளவு நீங்கள் பெரிய பாவங்களைச் செய்திருப்பதாக ஒருபோதும் நினைக்காதீர்கள். அப்படி நீங்கள் நினைத்தால், சாத்தானின் கண்ணியில் சிக்கிவிடுவீர்கள். மனந்திரும்பி வரும் எல்லாருடைய பாவங்களையும் மீட்கும்விலையின் அடிப்படையில் யெகோவாவால் மன்னிக்க முடியும்​—⁠இதுதான் உண்மை. (நீதி. 24:16) மீட்கும்விலையில் நீங்கள் விசுவாசம் வைத்தால், மிதமிஞ்சிய குற்றவுணர்வால் கூனிக்குறுக மாட்டீர்கள். அதோடு, முழு இருதயத்தோடும், முழு மூச்சோடும், முழு மனதோடும் கடவுளுக்குச் சேவை செய்ய பலம் பெறுவீர்கள்.​—⁠மத். 22:⁠37.

சாத்தானின் சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவைதான்

18. பிசாசின் கண்ணிகளில் நாம் எப்படிச் சிக்காதிருக்கலாம்?

18 எந்தக் கண்ணியை வைத்து நம்மைப் பிடிக்கிறான் என்பதெல்லாம் சாத்தானுக்கு முக்கியமில்லை, எப்படியாவது நம்மைப் பிடிக்க வேண்டும். அதுதான் அவனுடைய குறிக்கோள். அவனுடைய சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்திருப்பதால் அவன் நம்மைத் தந்திரமாக ஏமாற்ற இடங்கொடுக்கக் கூடாது. (2 கொ. 2:​10, 11) சோதனைகளைச் சமாளிக்க ஞானத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தால் அவனுடைய கண்ணிகளில் சிக்காதிருக்கலாம். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுபட்டிருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் கடிந்துகொள்ள மாட்டார்; எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற அவர் அவனுக்கும் கொடுப்பார்” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 1:⁠5) யெகோவா நமக்கு ஞானத்தைக் கொடுக்க வேண்டுமென்றால், தனிப்பட்ட விதத்தில் தவறாமல் பைபிளைப் படித்து, படித்தவற்றைக் கடைப்பிடிப்பது அவசியம். உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் வெளியிடும் பைபிள் பிரசுரங்கள் பிசாசு பயன்படுத்தும் கண்ணிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அவற்றைத் தவிர்க்கவும் உதவுகின்றன.

19, 20. தீமையை நாம் ஏன் வெறுக்க வேண்டும்?

19 ஜெபம் செய்வதும் பைபிள் படிப்பதும் சரியானதைச் செய்வதற்கான ஆசையை நமக்குள் வளர்க்கும். அதே சமயத்தில், தீமையை வெறுக்க நாம் கற்றுக்கொள்வதும் முக்கியம். (சங். 97:10) தன்னல ஆசைகளை நாடுவதால் வரும் விளைவுகளைச் சிந்தித்துப் பார்த்தால் அவற்றைத் தவிர்ப்போம். (யாக். 1:​14, 15) தீமையை வெறுக்கவும் நல்லதை நேசிக்கவும் நாம் கற்றுக்கொள்ளும்போது, சாத்தான் விரிக்கும் வஞ்சக வலையில் நாம் விழுந்துவிட மாட்டோம். ஆசை காட்டி நம்மை மோசம்போக்க அவன் பயன்படுத்தும் கண்ணியை எட்டிக்காய்போல் வெறுப்போம்.

20 சாத்தானிடம் ஏமாந்து போகாதிருக்க யெகோவா நமக்கு உதவுவதால் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அவருடைய சக்தி, வார்த்தை, அமைப்பு மூலம் அந்தப் “பொல்லாதவனிடமிருந்து” அவர் நம்மைப் பாதுகாக்கிறார். (மத். 6:13) கடவுளுடைய ஊழியர்களை உயிருடன் பிடிக்க பிசாசு பயன்படுத்தும் இன்னும் இரண்டு கண்ணிகளைப் பற்றியும் அவற்றில் நாம் எப்படிச் சிக்காதிருக்கலாம் என்பதைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

[அடிக்குறிப்பு]

a நவம்பர் 15, 2010 தேதியிட்ட காவற்கோபுரத்தில், “இளைஞர்களே​—⁠சகாக்களின் தொல்லையை எதிர்த்து நில்லுங்கள்” என்ற கட்டுரையைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சிந்திக்க வேண்டும். இதைக் குடும்ப வழிபாட்டின்போது சிந்திக்கலாம்.

[பக்கம் 21-ன் படம்]

கட்டுப்பாடில்லாத பேச்சு சபையில் ‘நெருப்பை’ மூட்டிவிடும்

[பக்கம் 24-ன் படம்]

மிதமிஞ்சிய குற்றவுணர்வால் நீங்கள் கூனிக்குறுக வேண்டியதில்லை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்