வருடாந்தரக் கூட்டம்
ஒரு கண்ணோட்டம் ஒற்றுமைக்கு உதாரணங்களும்... புதிய திட்டங்களும்...
உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தரக் கூட்டங்கள் என்றாலே காற்றில் ஒரு பரபரப்பும் விறுவிறுப்பும் கலந்துவிடுகின்றன. 2011, அக்டோபர் 1, சனிக்கிழமையன்று நடந்த 127-வது வருடாந்தரக் கூட்டத்தைப் பொறுத்ததிலும் அதுவே உண்மை! அதில் கலந்துகொள்ள பல தேசங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அமெரிக்கா, நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி நகரத்தில் அமைந்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றத்திற்குப் புன்னகை பூத்த முகங்களுடன் வந்து சேர்ந்தார்கள்.
சுமார் 85 நாடுகளிலிருந்து சந்தோஷக் களையோடு வந்திருந்த சகோதர சகோதரிகளை ஆளும் குழுவின் அங்கத்தினரான கெரட் லாஷ் வரவேற்றுப் பேசினார். உலகில் யார் மத்தியிலும் இல்லாத ஒற்றுமை யெகோவாவின் மக்கள் மத்தியில் இருப்பதைக் சுட்டிக்காட்டினார். இந்த ஒற்றுமை நம்மைப் பற்றி நற்சாட்சி அளிக்கிறது, யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. இந்தக் கூட்டத்தில், ஒற்றுமைக்கான உண்மை உதாரணங்களே ஓங்கி நின்றன.
மெக்சிகோவில் ஒரு நல்ல மாற்றம்
நிகழ்ச்சியின் முதல் பேச்சு யெகோவாவுடைய மக்களின் ஒற்றுமையைப் படம்பிடித்துக் காட்டியது. மெக்சிகோ கிளை அலுவலகத்தோடு மத்திய அமெரிக்காவில் இருந்த ஆறு கிளை அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அது குறித்து சகோதரர் பால்டாசார் பெர்லா, தன்னோடு மெக்சிகோ பெத்தேலில் சேவை செய்யும் மூன்று பேரைப் பேட்டி கண்டார். இந்த இணைப்பின் காரணமாக... மெக்சிகோ பெத்தேல் குடும்பம் கதம்பக் கலாச்சாரத்தின் சங்கமமாகக் காட்சியளிக்கிறது, சர்வதேச சகோதரத்துவத்தின் அழகான அடையாளமாக விளங்குகிறது. வெவ்வேறு நாட்டவரின் வரவு... பரஸ்பர உற்சாகப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது... கடவுள் ஒரு பெரிய “ரப்பரை” எடுத்து தேசிய எல்லைக் கோடுகளை அழித்தது போல் இருக்கிறது.
இந்த இணைப்பில் ஒரு சவாலும் உட்பட்டிருந்தது. அந்த ஆறு நாடுகளிலும் இப்போது கிளை அலுவலகம் இல்லாததால், அங்குள்ள சகோதர சகோதரிகள் யெகோவாவின் அமைப்பிலிருந்து தொலைதூரத்தில் இருப்பதாக நினைக்காமலிருக்க ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. அதற்காக, ஒவ்வொரு சபையும் கிளை அலுவலகத்தோடு நேரடியாகத் தொடர்புகொள்ள தனிப்பட்ட ஈ-மெயில் ஐடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள சபைகளும்கூட நேரடியாகக் கிளை அலுவலகத்தோடு தொடர்புகொள்ள முடிகிறது.
ஜப்பான் பற்றிய அறிக்கை
மார்ச், 2011-ல் ஜப்பானை உலுக்கிய பூமியதிர்ச்சியும், சின்னாபின்னமாக்கிய சுனாமிகளும் நம் சகோதரர்களை எந்தளவு சோகத்தில் ஆழ்த்தின என்பதை விளக்கினார் ஜப்பான் கிளை அலுவலகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் லின்டன். அநேக சகோதர சகோதரிகள் தங்கள் சொந்தபந்தங்களையும் சொத்துப்பத்துகளையும் இழந்துவிட்டார்கள். ஜப்பானில் உள்ள சாட்சிகள் பயன்படுத்திக்கொள்ள... பாதிக்கப்படாத இடங்களில் இருந்த சகோதர சகோதரிகள் 3,100-க்கும் அதிகமான வீடுகளையும், நூற்றுக்கணக்கான வாகனங்களையும் கொடுத்து உதவினார்கள். மண்டலக் கட்டுமான குழுக்களைச் சேர்ந்த வாலண்டியர்கள் சகோதரர்களுடைய வீடுகளைச் சீரமைக்கும் பணியில் இராப்பகலாக ஈடுபட்டார்கள். தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்கு 1,700-க்கும் அதிகமானோர் முன்வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து வந்த வாலண்டியர்கள் ராஜ்ய மன்றத்தைப் புதுப்பிக்கும் பணியில் உதவினார்கள். இந்த வேலையில் மொத்தம் 575 வாலண்டியர்கள் ஈடுபட்டார்கள்.
பாதிக்கப்பட்ட ஜீவன்களை ஆன்மீக ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் பலப்படுத்த நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மனம் உடைந்து போனவர்களுக்கு யெகோவாவின் அன்பை உறுதிப்படுத்த 400-க்கும் அதிகமான மூப்பர்கள் முன்வந்தார்கள். பேரழிவு ஏற்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் அளிக்க உலக தலைமை அலுவலகத்திலிருந்து மண்டலக் கண்காணிகள் இருவர் வந்தபோது ஆளும் குழுவினருடைய அன்பின் ஆழம் தெரிந்தது. உலகமுழுவதிலுமுள்ள சகோதரர்களின் அன்பான சொற்களும்... பரிவான செயல்களும்... துவண்டுபோன ஜப்பானிய சகோதரர்களைத் தூக்கி நிறுத்தின.
சட்டப்பூர்வ வெற்றிகள்
சட்ட ரீதியில் நமக்குக் கிடைத்த சமீபத்திய வெற்றிகளைப் பற்றி பிரிட்டன் கிளை அலுவலகத்தைச் சேர்ந்த ஸ்டீஃபன் ஹார்டி பேசியபோது கூடிவந்திருந்தோர் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டார்கள். உதாரணத்திற்கு, பிரான்சிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் 82 மில்லியன் அமெரிக்க டாலர்களை வரியாகக் கொடுக்க வேண்டுமென பிரெஞ்சு அரசாங்கம் வற்புறுத்திக்கொண்டிருந்தது. இது சம்பந்தமாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) நமக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதாவது, மக்களின் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஐரோப்பிய ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 9-ஐ பிரெஞ்சு அரசாங்கம் மீறியிருப்பதாக அது தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகள், இந்த வழக்கு பணம் சம்பந்தப்பட்டதல்ல என்பதைச் சுட்டிக்காட்டின. ஏனென்றால், “ஒரு மத நிறுவனத்தை அங்கீகரிக்க மறுப்பது, அந்த நிறுவனத்தைக் கலைப்பது, ஒரு மத அமைப்பைப் பற்றித் தாறுமாறாகப் பேசுவது ஆகிய இவையெல்லாம் [ஐரோப்பிய] ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 9 அளிக்கும் சுதந்திரத்தை மறுப்பதற்குச் சமம்” என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆர்மீனியா சம்பந்தப்பட்ட ஒரு வழக்கிலும் ECHR நம் சார்பாகவே தீர்ப்பு வழங்கியது. கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலகிக்கொள்ள ஒருவருக்கு இருக்கும் உரிமையை ஐரோப்பிய ஒப்பந்தம் 1965 முதல் பாதுகாக்கத் தவறியிருப்பதை ECHR சுட்டிக்காட்டியது. “தன் மனசாட்சிக்கு விரோதமாக ராணுவ சேவையில் ஈடுபட முடியாது” என்று ஒருவர் சொன்னால் ஐரோப்பிய ஒப்பந்தம் அவரது உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று ஐரோப்பிய நீதிமன்றத்தில் அதிக அதிகாரம் படைத்த உயர்குழு தீர்ப்பளித்தது. ஆர்மீனியாவைப் போலவே அஜர்பைஜான், துருக்கி போன்ற நாடுகளும் இந்த உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதையே இந்தத் தீர்ப்புக் காட்டுகிறது.
கட்டுமானப் பணிகள்
அடுத்ததாக, ஆளும் குழுவைச் சேர்ந்த கை பியர்ஸ் பேசினார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் நியு யார்க் மாகாணத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாய் இருப்பதை உணர்ந்து அவர்களுடைய ஆர்வப் பசியை ஆற்றினார். வால்கில் மற்றும் பாட்டர்ஸனில் நடைபெறும் விரிவாக்கத்தையும், நியு யார்க்கிலுள்ள வார்விக்கிலும் டாக்ஸிடோவிலும் வாங்கியுள்ள இடங்களையும் ஒரு வீடியோ காட்சியாகக் காட்டினார். வால்கிலில் ஒரு புதிய குடியிருப்பு வளாகம் 2014-ல் கட்டி முடிக்கப்படும். அதில், 300-க்கும் அதிகமான அறைகள் இருக்கும்.
வார்விக்கிலுள்ள 248 ஏக்கர் (100 ஹெக்டேர்) நிலப்பரப்பில் கட்டுமானப் பணிக்குத் திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன. “வார்விக் சம்பந்தமாக யெகோவாவின் சித்தம் என்னவென்று எங்களுக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தை அங்கு மாற்றும் எண்ணத்தோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்” என்று சகோதரர் பியர்ஸ் சொன்னார். வார்விக்கிற்கு வடக்கே 10 கிலோமீட்டர் (6 மைல்) தொலைவில் உள்ள 50 ஏக்கர் (20 ஹெக்டேர்) நிலத்தைக் கட்டுமானப் பணிக்குரிய இயந்திரங்களையும், பொருள்களையும் வைப்பதற்கான இடமாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன. “கட்டுவதற்கு அனுமதி கிடைத்தவுடன் பணியைத் தொடங்கினால், நான்கு வருடங்களுக்குள் எல்லா வேலைகளும் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். பிற்பாடு, புருக்லினில் நமக்குச் சொந்தமாக உள்ள இடத்தை விற்றுவிடலாம்” என்று சகோதரர் பியர்ஸ் சொன்னார்.
“இப்படியெல்லாம் திட்டம் போடுவதால் மிகுந்த உபத்திரவம் தாமதமாகத்தான் வரும் என ஆளும் குழுவினர் நினைக்கிறார்களா?” என்று சகோதரர் பியர்ஸ் கேட்டார். “இல்லவே இல்லை. ஒருவேளை வேலை நடந்துகொண்டிருக்கும்போதே மிகுந்த உபத்திரவம் வந்தாலும் எங்களுக்குச் சந்தோஷம்தான், ரொம்பவே சந்தோஷம்தான்!” என்று அவரே பதிலும் சொன்னார்.
கர்ஜிக்கிற சிங்கம்—உஷார்!
அடுத்ததாக, ஆளும் குழுவின் மற்றொரு அங்கத்தினரான ஸ்டீஃபன் லெட் 1 பேதுரு 5:8-ஐ விளக்கினார். “தெளிந்த புத்தியுடன் இருங்கள், விழித்திருங்கள். உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்” என்று அந்த வசனம் சொல்கிறது. சிங்கத்திற்கு இருக்கும் குணங்களைப் பார்க்கும்போது பிசாசை சிங்கத்திற்கு ஒப்பிட்டு பேதுரு பேசுவது மிகப் பொருத்தமானது என்று சகோதரர் லெட் சொன்னார்.
சிங்கத்தின் வேகத்திற்கும் பலத்திற்கும் மனிதர்களால் ஈடுகொடுக்க முடியாது. எனவே, சாத்தானை நம்முடைய சொந்த பலத்தால் எதிர்த்து நிற்கவோ, மீறிச் செல்லவோ நாம் முயற்சி செய்யக் கூடாது. யெகோவாவின் உதவி நமக்குத் தேவை. (ஏசா. 40:31) சிங்கம் எப்போதும் பதுங்கியிருந்து மிருகங்களைத் தாக்கும். எனவே, நாம் யெகோவாவை விட்டுத் தூரமாக விலகிச் சென்றால் சாத்தானுக்குச் சுலபமாக இரையாகிவிடுவோம். அதனால், நாம் ஒருபோதும் யெகோவாவை விட்டு விலகிச்செல்லக் கூடாது. சாதுவான ஒரு மானை அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு வரிக்குதிரை குட்டியை சிங்கம் கொன்று தின்னும். சாத்தானும் அப்படித்தான். அவனுக்கு ஈவிரக்கமே கிடையாது. சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மைக் கொன்றுபோடத் தயங்கமாட்டான். சிங்கம் பசி தீரும் வரைக்கும்தான் சாப்பிடும். அது சாப்பிட்ட பிறகு பார்த்தால் அதற்குப் பலியான மிருகத்தின் அடையாளமே தெரியாது. சாத்தானுக்குப் பலியாகும் கிறிஸ்தவர்களுக்கும் அதே கதிதான்: “அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட மோசமாக இருக்கும்.” (2 பே. 2:20) எனவே, நாம் சாத்தானை எதிர்த்து நிற்க வேண்டும். நாம் கற்றுக்கொண்ட பைபிள் நியமங்களை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.—1 பே. 5:9.
யெகோவாவின் ஆலயத்தில் உங்களுக்குரிய இடத்தை மதியுங்கள்
அடுத்ததாகப் பேசிய ஆளும் குழு அங்கத்தினர் சாம்யெல் ஹெர்ட், “யெகோவாவின் ஆலயத்தில் நம் எல்லாருக்கும் ஓர் இடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார். எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் கடவுளுடைய “ஆலயத்தில்,” அதாவது அவருடைய ஆன்மீக ஆலயத்தில், ஓர் இடம் இருக்கிறது. இயேசுவின் மீட்கும்விலையின் அடிப்படையில் கடவுளை வணங்குவதற்கான ஓர் ஏற்பாடே அந்த ஆன்மீக ஆலயம். அந்த ஆலயத்தில் நமக்கு ஓர் இடம் கிடைக்கிறதென்றால் அது ஒரு பெரிய பாக்கியம். தாவீதைப் போலவே நாமும் ‘ஜீவனுள்ள நாளெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருக்க’ விரும்புகிறோம்.—சங். 27:4.
சகோதரர் ஹெர்ட், சங்கீதம் 92:12, 13, 15-ஐக் குறிப்பிட்டு, ‘நாம் செழுமையாக இருக்க யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்?’ என்று கேட்டார். “அவருடைய ஆன்மீக பூஞ்சோலையில் கடவுள் நம்மைக் கதகதப்பாக வைத்துக்கொள்கிறார், பாங்காய்ப் பாதுகாக்கிறார், சத்தியம் எனும் தண்ணீரைத் தந்து புத்துயிர் அளிக்கிறார். அதற்காக நாம் அவருக்கு கோடானுகோடி நன்றி சொல்வோமாக” என்றார். “யெகோவாவின் ஆலயத்தில் நாம் திருப்தியுடன் இருக்க கற்றுக்கொள்வோமாக—கொஞ்ச நாட்களுக்கு மட்டுமல்ல, என்றென்றுமாக” என்று சொல்லி சகோதரர் ஹெர்ட் கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
கடவுளுடைய வார்த்தையை கிறிஸ்தவர்கள் மதிக்கிறார்கள்
அடுத்த பேச்சில், ஆளும் குழுவைச் சேர்ந்த டேவிட் ஸ்ப்லேன், உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்போதுமே கடவுளுடைய வார்த்தையை மதிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் விருத்தசேதனத்தைப் பற்றிய விவாதத்தைத் தீர்க்க கடவுளுடைய வார்த்தையையே சார்ந்திருந்தார்கள். (அப். 15:16, 17) ஆனால், இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர், கிரேக்க தத்துவத்தில் ஊறிப்போயிருந்ததால் வேதவசனங்களிலுள்ள கருத்துகளை ஒதுக்கிவிட்டு தங்கள் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிற்பாடு, சிலர் பைபிள் போதனைகளைப் புறக்கணித்துவிட்டு, திருச்சபைத் தந்தைகள் என்று அழைக்கப்பட்டவர்களின் கருத்துகளையும், ரோமப் பேரரசர்களின் கருத்துகளையும் பரப்பினார்கள். அதனால், அநேக பொய்க் கோட்பாடுகள் முளைத்தன.
பூமியில் சத்தியத்தை ஆதரிப்பதற்குப் பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள் எப்போதுமே இருப்பார்கள் என்று இயேசு ஓர் உவமையில் குறிப்பிட்டதை சகோதரர் ஸ்ப்லேன் சுட்டிக்காட்டினார். (மத். 13:24-30) அவர்கள் யார் யாரென்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், பல நூறாண்டுகளாக வேதப்பூர்வமற்ற நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் அநேகர் வெளிப்படையாகக் கண்டனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலர்: 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லயான்ஸைச் சேர்ந்த தலைமை பிஷப் அகோபார்ட்; 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புரூஸைச் சேர்ந்த பீட்டர், லோஸானைச் சேர்ந்த ஹென்றி, வால்டெஸ் (அல்லது வால்டோ); 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் வைக்கிளிஃப்; 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் டின்டேல்; 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹென்றி க்ரூ, ஜார்ஜ் ஸ்டார்ஸ். அந்த நாள்முதல் இந்த நாள்வரை, யெகோவாவின் சாட்சிகள் பைபிளின் நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். பைபிளே சத்தியத்தின் உரைகல் என்று நம்புகிறார்கள். அதனால்தான், “உங்களுடைய வார்த்தையே சத்தியம்” என்று யோவான் 17:17 குறிப்பிடுவதை ஆளும் குழுவினர் 2012-ஆம் ஆண்டிற்கான வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
பயிற்சியிலும் சேவையிலும் புதுப்புது மாற்றங்கள்
ஆளும் குழுவைச் சேர்ந்த அன்தனி மாரிஸ், மிஷனரி சேவை, விசேஷ பயனியர் சேவை சம்பந்தமாகச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி அறிவித்தார். 2012 செப்டம்பர்முதல், கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளி குறிப்பிட்ட சில நாடுகளில் நடைபெறும். கிலியட் பள்ளியின் நோக்கமும் கடந்த அக்டோபர்முதல் மாறிவிட்டது. ஏற்கெனவே ஏதாவதொரு விசேஷ முழுநேர ஊழியத்தில் இருப்பவர்கள் கிலியட் பள்ளியில் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். அதாவது, கிலியட் பள்ளியில் பயிற்சி பெறாமல் மிஷனரிகள் போல் சேவை செய்பவர்களும், விசேஷ பயனியர்களும், பயணக் கண்காணிகளும், பெத்தேலில் சேவை செய்பவர்களும் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். இந்த கிலியட் பட்டதாரிகள்... கடவுளுடைய மக்களைப் பலப்படுத்தவும் ஸ்திரப்படுத்தவும் கிளை அலுவலகங்களில், பயண ஊழியத்தில் பயன்படுத்தப்படுவார்கள். அல்லது, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபடுவதற்குச் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த இவர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
ஒதுக்குப்புறப் பகுதிகளில் ஊழியம் செய்வதற்கு விசேஷ பயனியர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள். 2012 ஜனவரிமுதல், மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியிலும், கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளியிலும் பட்டம் பெற்றவர்கள்... ஒதுக்குப்புறப் பகுதிகளில் ஊழியத்தை ஆரம்பிக்கவும், விஸ்தரிக்கவும் விசேஷ பயனியர்களாகத் தற்காலிகமாய் நியமிக்கப்படுவார்கள். முதலில் ஒரு வருடத்திற்கு விசேஷ பயனியர்களாக நியமிக்கப்படுவார்கள். பின்பு தேவைப்பட்டால் இரண்டாவது வருடமும் மூன்றாவது வருடமும் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பாக ஊழியம் செய்பவர்கள் தொடர்ந்து விசேஷ பயனியர்களாகச் சேவை செய்வார்கள்.
2011-ன் வருடாந்தரக் கூட்டம் ஒரு சந்தோஷமான தருணம். நம் ஊழியத்தை விஸ்தரிக்கவும், சகோதர ஒற்றுமைக்கு மேலும் உரம் சேர்க்கவும் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய ஏற்பாடுகளை யெகோவா ஆசீர்வதிக்கும்படி வேண்டுகிறோம். இதற்கான எல்லா மகிமையும் புகழும் யெகோவாவையே சேருவதாக.
[பக்கம் 18-ன் பெட்டி/படங்கள்]
பேட்டியும் பரிச்சயமும்
ஆளும் குழுவில் சேவை செய்து தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்திருந்த ஒன்பது சகோதரர்களில் ஐந்து பேருடைய மனைவிகளிடம் இந்த நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்டது. மாரினா ஸிட்லிக், எடித் சூட்டர், மலிட்டா ஜாரஸ், மெல்பா பாரி, சிட்னீ பார்பர் ஆகிய சகோதரிகள் தாங்கள் எப்படிச் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்கள்... முழுநேர ஊழியத்தில் எப்படிக் கால்பதித்தார்கள்... என்பதைப் பற்றிச் சொன்னார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மலரும் நினைவுகளை... தங்கள் கணவரிடம் பிடித்த விஷயங்களை... கணவனும் மனைவியுமாக அவர்கள் சேர்ந்து அனுபவித்த ஆசீர்வாதங்களை... அவையோரிடம் பகிர்ந்துகொண்டார்கள். உருக்கமான இந்தப் பேட்டிகளின் முடிவில், “விசுவாசமிக்க பெண்கள், கிறிஸ்தவ சகோதரிகள்” என்ற தலைப்பிலுள்ள 86-வது பாடலைக் கூடியிருந்தவர்கள் பாடினார்கள்.
[படங்கள்]
(மேலே) டானியேல் மற்றும் மாரினா ஸிட்லிக்; கிரான்ட் மற்றும் எடித் சூட்டர்; தியோடர் மற்றும் மலிட்டா ஜாரஸ்
(கீழே) லாய்ட் மற்றும் மெல்பா பாரி; காரி மற்றும் சிட்னீ பார்பர்
[பக்கம் 16-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மெக்சிகோ கிளை அலுவலகத்தோடு ஆறு கிளை அலுவலகங்கள் இணைக்கப்பட்டன
மெக்சிகோ
குவாதமாலா
ஹோண்டுராஸ்
எல் சால்வடார்
நிகாராகுவா
கோஸ்டா ரிகா
பனாமா
[பக்கம் 17-ன் படம்]
நியு யார்க், வார்விக்கில் கட்டப்படவிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தின் ஒரு மாடல்