1, 2. (அ) வாழ்வில் வெற்றி பெறுவது பற்றிய பல்வேறு கருத்துகள் என்ன? (ஆ) வெற்றியைப் பற்றிய உங்கள் கருத்தை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
வா ழ்வில் வெற்றி... இதன் அர்த்தம் என்ன? மக்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், ஆள் ஆளுக்கு ஒவ்வொரு பதிலைச் சொல்வார்கள். உதாரணத்திற்கு, பொருளாதாரத்தில், தொழிலில், கல்வியில் மாபெரும் சாதனை படைப்பதுதான் வெற்றி என்று பலர் சொல்வார்கள். குடும்பத்தாரோடு, நண்பர்களோடு, சக பணியாளர்களோடு என எல்லோரோடும் நல்லுறவை அனுபவிப்பதுதான் வெற்றி என்று இன்னும் பலர் சொல்வார்கள். சபையில் பொறுப்புகள் கிடைப்பது அல்லது ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைப்பதுதான் வெற்றி என்று உண்மைக் கிறிஸ்தவர்கள் சிலர் சொல்வார்கள்.
2 நீங்கள் என்ன சொல்வீர்கள்? வாழ்வில் வெற்றி பெற்ற... உங்கள் அபிமானத்தைப் பெற்ற... சிலருடைய பெயர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தீர்களென்றால், வெற்றியைப் பற்றிய உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ளலாம். யார் யாருடைய பெயர்களைப் பட்டியலிட்டீர்களோ அவர்களிடையே பொதுவாக எந்த அம்சம் பளிச்சிடுகிறது? அவர்கள் பணக்காரர்களா, பிரபலமானவர்களா? செல்வாக்கு பெற்றவர்களா? இதற்கான பதில்கள் உங்கள் இருதயத்தில் உள்ளதைப் படம்பிடித்துக் காட்டும். அதுமட்டுமல்ல, வாழ்க்கையில் நீங்கள் செய்கிற தெரிவுகளையும், வைக்கிற இலக்குகளையும் பெருமளவு பாதிக்கும்.—லூக். 6:45.
3. (அ) வாழ்வில் வெற்றி பெற யோசுவா என்ன செய்ய வேண்டியிருந்தது? (ஆ) எதைப் பற்றி இப்போது ஆராய்ந்து பார்ப்போம்?
3 என்றாலும், யெகோவாவின் கண்களில் வெற்றி பெறுவதுதான் நமக்கு மிகமிக முக்கியம்; ஏனென்றால், நம் வாழ்க்கையே அவர் கையில்தான் இருக்கிறது. இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்துகிற பெரிய பொறுப்பை யோசுவாவிடம் யெகோவா கொடுத்தபோது, திருச்சட்டத்தை ‘இரவும் பகலும்’ வாசிக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்; அதில் எழுதப்பட்டுள்ள விஷயங்களைக் கவனமாகக் கடைப்பிடிக்கும்படியும் கட்டளையிட்டார். “அப்போதுதான், வாழ்வில் வெற்றி பெறுவாய்; அப்போதுதான், ஞானமாக நடப்பாய்” என்று அவருக்கு உறுதியளித்தார். (யோசு. 1:8, NW) யோசுவா வாழ்வில் வெற்றி பெற்றது உங்களுக்கே தெரிந்திருக்கும். நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? இந்த விஷயத்தில் நம்முடைய கண்ணோட்டமும் கடவுளுடைய கண்ணோட்டமும் ஒன்றுபோல் இருக்கிறதா என எப்படிக் கண்டுபிடிக்கலாம்? இவற்றுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நபர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது ஆராய்ந்து பார்ப்போம்.
சாலொமோன் வாழ்வில் வெற்றி பெற்றாரா?
4. சாலொமோன் வாழ்வில் வெற்றி பெற்றார் என ஏன் சொல்லலாம்?
4 சாலொமோன் பிரமாண்டமான விதங்களில் வெற்றி பெற்றார். ஏன் அப்படிச் சொல்லலாம்? ஏனென்றால், அவர் நீண்ட காலம் யெகோவாவுக்குப் பயந்து நடந்தார், கீழ்ப்படிதலைக் காட்டினார்; யெகோவாவின் ஆசீர்வாதத்தை அபரிமிதமாகப் பெற்றார். ‘விரும்புகிறதைக் கேள்’ என யெகோவா அவரிடம் சொன்னபோது, மக்களை வழிநடத்துவதற்குத் தேவையான ஞானத்தைத் தரும்படி வேண்டினார். அப்போது, யெகோவா அவருக்கு ஞானத்தை மட்டுமல்ல, செல்வத்தையும் சேர்த்துத் தந்தார். (1 இராஜாக்கள் 3:10-14-ஐ வாசியுங்கள்.) “சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.” ‘சுற்றிலும் இருந்த சகல தேசத்தார்’ மத்தியில் அவருடைய புகழ் கொடிகட்டிப் பறந்தது. (1 இரா. 4:30, 31) அவருடைய கஜானாவில் வருடா வருடம் தங்கம் மட்டுமே சுமார் 25 டன் வந்து குவிந்தது! (2 நா. 9:13) ராஜதந்திரத்தில், கட்டுமானத்தில், வணிகத்தில் அவர் நட்சத்திரமாக ஜொலித்தார். ஆனால், கடவுளுக்குமுன் நீதியுள்ளவராக இருந்ததாலேயே வாழ்வில் வெற்றி பெற்றார்.—2 நா. 9:22-24.
5. உண்மையான வெற்றி சம்பந்தமாக சாலொமோன் எதை உணர்ந்திருந்தார்?
5 பணம் படைத்தவர்களும் பிரபலமானவர்களுமே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், சந்தோஷத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று சாலொமோன் நினைக்கவில்லை என்பதை பிரசங்கி புத்தகத்திலுள்ள அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன. “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” என்று அவர் எழுதினார். (பிர. 3:12, 13) இத்தகைய சந்தோஷமெல்லாம் யெகோவாவின் அங்கீகாரம் பெற்றவர்களுக்கே, அவரோடு நல்லுறவை அனுபவிப்பவர்களுக்கே, கிடைக்கும் என்பதை சாலொமோன் உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் இவ்வாறு சொன்னார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிர. 12:13.
6. உண்மையான வெற்றி எதுவெனப் புரிந்துகொள்ள சாலொமோனின் உதாரணம் நமக்கு எப்படி உதவும்?
6 சாலொமோன் நீண்ட காலம் கடவுளுக்குப் பயந்து நடந்தார். ‘யெகோவாவிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (1 இரா. 3:3) இதுதான் உண்மையான வெற்றி, அல்லவா? கடவுளுடைய வழிநடத்துதலின்படி, சாலொமோன் மெய் வணக்கத்திற்காக அற்புதமான ஓர் ஆலயத்தைக் கட்டினார், மூன்று பைபிள் புத்தகங்களை எழுதினார். இப்படியெல்லாம் நாம் செய்யப்போவதில்லை என்றாலும், விசுவாசமிக்க சாலொமோனின் உதாரணம் உண்மையான வெற்றி எதுவெனப் புரிந்துகொள்வதற்கும் அதை அடைவதற்கும் நமக்கு உதவும். செல்வம், ஞானம், புகழ், அதிகாரம் எல்லாமே வீண் என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர் எழுதினார். அவை ‘எல்லாம் மாயைதான்.’ ஆனால், இன்று பெரும்பாலோர் அவற்றைத்தான் வெற்றியின் அளவுகோல் எனக் கருதுகிறார்கள். செல்வச்சீமான்கள் அநேகர் இன்னுமதிக செல்வத்தில் புரளத் துடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுவாக, அவர்களுக்குத் தங்கள் சொத்துப்பத்துகளைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற கவலையே பெருங்கவலையாக இருக்கும். ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் அவை எல்லாமே மற்றவர்களுடைய கைக்குத்தான் போய்ச் சேரும்.—பிரசங்கி 2:8-11,17;5:10-12-ஐ வாசியுங்கள்.
7, 8. சாலொமோன் எப்படிக் கீழ்ப்படியாமல்போனார், அதன் விளைவு என்ன?
7 சாலொமோன் நாளாவட்டத்தில் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனார். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: ‘சாலொமோன் வயது சென்றபோது, அவருடைய மனைவிகள் அவர் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; . . . அதனால் அவருடைய இருதயம் அவர் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல, தன் தேவனாகிய யெகோவாவோடு உத்தமமாயிருக்கவில்லை. . . . யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்.’—1 இரா. 11:4-6.
8 யெகோவா கடுங்கோபங்கொண்டார்; அதனால் சாலொமோனிடம், ‘நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாதபடியினால் . . . ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்’ என்றார். (1 இரா. 11:11) எப்பேர்ப்பட்ட அவலம்! சாலொமோன் எத்தனையோ விஷயங்களில் வெற்றி கண்டார். ஆனால், காலப்போக்கில் யெகோவாவை வேதனைப்படுத்தினார். இவ்வாறு, வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சத்தில், யெகோவாவுக்கு விசுவாசமாக இருக்கும் விஷயத்தில், சாலொமோன் தோல்வி கண்டார். எனவே, நாம் ஒவ்வொருவரும் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘சாலொமோனின் உதாரணத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வாழ்வில் வெற்றி பெற நான் தீர்மானமாய் இருக்கிறேனா?’
வாழ்வில் உண்மையான வெற்றி பெற...
9. உலகத்தாரின் கண்களில் பவுல் வெற்றி பெற்றவராக இருந்தாரா? விளக்குங்கள்.
9 அப்போஸ்தலன் பவுலுடைய வாழ்க்கை சாலொமோன் ராஜாவின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. பவுல், தந்தத்தால் ஆன சிம்மாசனத்தில் வீற்றிருக்கவும் இல்லை, ராஜாக்களுடன் விமரிசையான விருந்துகளில் கலந்துகொள்ளவும் இல்லை. மாறாக, பசியிலும் தாகத்திலும் கஷ்டப்பட்டார், பட்டினியில் தவித்தார், குளிரில் நடுங்கினார், உடையில்லாமல் இருந்தார். (2 கொ. 11:24-27) அவர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்ட பிறகு, யூத மதத்தவரின் மதிப்பு மரியாதையை இழந்தார். சொல்லப்போனால், யூத மதத் தலைவர்களால் வெறுக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, அவர் சிறையிலிடப்பட்டார், சாட்டையால் அடிக்கப்பட்டார், தடிகளால் தாக்கப்பட்டார், கல்லெறிபட்டார். அவரும் அவருடைய சக கிறிஸ்தவர்களும் சபிக்கப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கேவலப்படுத்தப்பட்டார்கள்; இதை அவரே குறிப்பிட்டார். “இன்றுவரை நாங்கள் இந்த உலகத்தின் குப்பையாகவும் எல்லாவற்றின் கழிவுப்பொருளாகவும் கருதப்படுகிறோம்” என்றுகூட குறிப்பிட்டார்.—1 கொ. 4:11-13.
மக்கள் பார்வையில் சவுல் வெற்றிப் பாதையில் பயணித்தார்
10. பவுல் வெற்றிப் பாதையை விட்டுவிலகியதுபோல் ஏன் தெரிந்தது?
10 பவுல் இளைஞராக இருந்தபோது, வெற்றிப் பாதையில் செல்பவராகத் தெரிந்தார். அவர் செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தார், மதிப்புமிக்க ஆசிரியரான கமாலியேலிடம் பாடம் கற்றிருந்தார். “என் இனத்தாரில் என் வயதிலிருந்த அநேகரைவிட யூத மதத்தில் சிறந்து விளங்கினேன்” என்று அவரே பிற்பாடு எழுதினார். (கலா. 1:14) எபிரெயு, கிரேக்கு மொழிகளில் கரைகண்டிருந்தார். ரோமக் குடியுரிமை பெற்றிருந்தார்; இதனால், விசேஷ சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றிருந்தார். வெற்றிக்கு மேல் வெற்றிகளைக் குவிக்க அவர் நினைத்திருந்தால் நிச்சயம் பிரபலமடைந்திருப்பார், சொத்துப்பத்துகளையும் சேர்த்திருப்பார். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை; மற்றவர்கள், ஒருவேளை அவருடைய சொந்தபந்தங்கள்கூட, முட்டாள்தனம் எனக் கருதிய வாழ்க்கைப் பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். ஏன்?
11. பவுல் எவற்றைப் பொக்கிஷமாகக் கருதினார், அவருடைய லட்சியம் என்னவாக இருந்தது, ஏன்?
11 பவுல் யெகோவாவை நேசித்தார்; பொன்னையும் பொருளையும் புகழையும்விட யெகோவாவின் அங்கீகாரத்தையே பெற விரும்பினார். சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றபின், மீட்புவிலையையும், கிறிஸ்தவ ஊழியத்தையும், பரலோக நம்பிக்கையையும் பொக்கிஷமாகக் கருதினார். இந்த உலகமோ அவற்றை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. தீர்க்கப்பட வேண்டிய ஒரு விவாதம் இருப்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. ஆம், கடவுளிடமிருந்து மக்களை விலக்கிவிட தன்னால் முடியுமென சாத்தான் சவால்விட்டிருந்தது தெரிந்திருந்தது. (யோபு 1:9-11; 2:3-5) அதனால்தான், எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் உண்மைக் கடவுளுக்கு விசுவாசமாய் இருப்பதைத் தன் லட்சியமாகக் கொண்டிருந்தார். இவ்வுலகில் வெற்றி பெற நினைக்கும் பெரும்பாலோருக்கு இந்த லட்சியம் கிடையவே கிடையாது!
வாழ்வில் உண்மையான வெற்றி பெற்றார் பவுல்!
12. கடவுள்மீது நம்பிக்கை வைக்க நீங்கள் ஏன் தீர்மானித்தீர்கள்?
12 உங்களுக்கும் அதே லட்சியம் இருக்கிறதா? கடவுளுக்கு விசுவாசமாய் இருப்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும், அவருடைய ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் அது பெற்றுத் தருமென்பது நிச்சயம்; அதுதான் உண்மையான வெற்றி! (நீதி. 10:22) விசுவாச வாழ்க்கை நமக்கு இன்று மட்டுமல்ல, என்றும் நன்மைகளை அள்ளித்தரும். (மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், ‘நிலையற்ற செல்வங்கள்மீது நம்பிக்கை வைக்காமல், நம்முடைய மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் அள்ளி வழங்குகிற கடவுள் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்.’ ‘எதிர்காலத்திற்கென்று நல்ல அஸ்திவாரத்தை அமைத்து, அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும் . . . இப்படிச் செய்யும்போது, உண்மையான வாழ்வைக் கண்டிப்பாக அடைவோம்.’ (1 தீ. 6:17-19) அதோடு, நாம் கடந்துவந்த பாதையை இன்றிலிருந்து நூறு வருடங்களுக்கு, ஆயிரம் வருடங்களுக்கு, அதற்குப் பிறகும்கூட திரும்பிப் பார்த்து, “நான் வெற்றிப் பாதையில்தான் நடந்து வந்திருக்கிறேன்” என்று சொல்வோம், அதில் சந்தேகமே இல்லை!
உங்கள் பொக்கிஷம் எங்கேயோ...
13. பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பது பற்றி இயேசு என்ன அறிவுரை சொன்னார்?
13 பொக்கிஷங்களைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள்; இங்கே பூச்சியும் துருவும் அவற்றை அரித்துவிடும், திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். மாறாக, பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அரிக்காது, திருடர்களும் திருடிக்கொண்டு போக மாட்டார்கள். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”—மத். 6:19-21.
14. உலகப் பொக்கிஷங்களை நாடுவது ஏன் ஞானமல்ல?
14 பொக்கிஷம் என்பது பணத்தை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. சாலொமோன் குறிப்பிட்டிருந்த அந்தஸ்து, அதிகாரம், புகழ் போன்றவற்றில்—வெற்றியின் சின்னங்களாக உலகத்தார் கருதுகிறவற்றில்—ஏதோவொன்றைக்கூட அர்த்தப்படுத்தலாம். பிரசங்கி புத்தகத்தில் அவர் சொன்னதைப் போன்ற ஒரு விஷயத்தைத்தான் இயேசுவும் சொன்னார்; அதாவது, இத்தகைய உலகப் பொக்கிஷங்களெல்லாம் நிலையற்றவை, அழியக்கூடியவை, எளிதில் பறிபோகக்கூடியவை என்று சொன்னார். இதைப் பற்றி பேராசிரியர் எஃப். டேல் ப்ரூனர் இவ்வாறு எழுதினார்: “புகழ் என்பது ஒருநாள் புஸ்வாணமாகிவிடும், இது உலகறிந்த உண்மை. நேற்றைய ஹீரோ இன்றைய ஜீரோ! இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி! . . . [இயேசு] மனிதர்களை நேசிக்கிறார்; எனவே, அநித்தியமான புகழை நாடிச்செல்வதால் ஏற்படுகிற மனமுறிவைத் தவிர்க்கும்படி அவர்களை ஊக்குவிக்கிறார். அப்படிப்பட்ட புகழ் நிலைக்காது. இந்த விஷயத்தில் தம்முடைய சீடர்கள் ஏமாற்றமடைவதை இயேசு விரும்புவதில்லை. ‘ஒரு நபரை இந்த உலகம் கோபுரத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடும், மறுநாள் குப்பையில் தள்ளிவிடும்.’ ” அநேகர் இவருடைய கருத்துகளை ஏற்றுக்கொண்டாலும், இயேசுவின் அறிவுரைப்படி வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய அவர்களில் எவ்வளவு பேர் தயாராக இருக்கிறார்கள்? நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
15. எப்படிப்பட்ட வெற்றியைப் பெற நாம் கடும் முயற்சியெடுக்க வேண்டும்?
15 வெற்றியை நாடித்தேடக் கூடாதெனவும், அதற்கான எல்லா முயற்சிகளையும் கைவிட வேண்டுமெனவும் மதத் தலைவர்கள் சிலர் போதித்து வந்திருக்கிறார்கள். ஆனால், அந்த எல்லா முயற்சிகளையும் இயேசு கண்டனம் செய்யவில்லை என்பதை நினைவில் வையுங்கள். மாறாக, முயற்சிகளை வேறு பக்கமாகத் திருப்பும்படியே, அதாவது அழியாத பொக்கிஷங்களை ‘பரலோகத்தில் சேர்த்து வைக்கும்படியே,’ அவர் தம் சீடர்களை ஊக்கப்படுத்தினார். யெகோவாவின் கண்களில் வெற்றி பெறுவதுதான் நமக்கு மிகமிக முக்கியமானதாக இருக்க வேண்டும், அதற்குத்தான் நாம் கடும் முயற்சியெடுக்க வேண்டும். எதை நாடித்தேட வேண்டுமென்ற விஷயத்தில் நமக்கு ஒரு தெரிவு இருப்பதை இயேசுவின் வார்த்தைகள் நினைப்பூட்டுகின்றன. என்றாலும், நம் இருதயத்தில் இருப்பதையே, நாம் பொக்கிஷமாகக் கருதுவதையே, நாடித்தேடுவோம் என்பதுதான் உண்மை!
16. நாம் எதில் முழு நம்பிக்கை வைக்கலாம்?
16 யெகோவாவைப் பிரியப்படுத்துவதே நம் இருதயப்பூர்வ ஆசை என்றால், நம்முடைய தேவைகள் அனைத்தையும் அவர் கவனித்துக்கொள்வார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம். ஒருவேளை அப்போஸ்தலன் பவுலைப் போலவே பசியிலும் தாகத்திலும் தற்காலிகமாகக் கஷ்டப்பட அவர் நம்மை அனுமதிக்கலாம். (1 கொ. 4:11) ஆனாலும், இயேசுவின் பின்வரும் ஞானமான அறிவுரையில் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம்: “ ‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாமல் இருங்கள். இவற்றையெல்லாம் பெறுவதற்கு இந்த உலகத்தார்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார். அதனால், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.”—மத். 6:31-33.
கடவுளுடைய கண்களில் வெற்றி பெற...
17, 18. (அ) உண்மையான வெற்றி எவற்றைச் சார்ந்திருக்கிறது? (ஆ) உண்மையான வெற்றி எவற்றைச் சார்ந்திருப்பதில்லை?
17 முக்கியக் குறிப்பு இதுதான்: உண்மையான வெற்றி என்பது பெரிய சாதனைகளையும் உயர்ந்த அந்தஸ்துகளையும் சார்ந்திருப்பதில்லை. சபையில் கிடைக்கிற பொறுப்புகளைக்கூட சார்ந்திருப்பதில்லை. நம்முடைய கீழ்ப்படிதலையும் விசுவாசத்தையுமே சார்ந்திருக்கிறது! கடவுள் இவ்வாறு சொல்கிறார்: “நிர்வாகிகள் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள்.” (1 கொ. 4:2) எனவே, நாம் கடைசிவரை உண்மையுள்ளவர்களாக, விசுவாசமுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். “முடிவுவரை சகித்திருப்பவனே மீட்புப் பெறுவான்” என்று இயேசு சொன்னார். (மத். 10:22) மீட்புப் பெறுவதுதான் வெற்றிக்கான அத்தாட்சி என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
18 இந்தக் கட்டுரையைச் சிந்தித்தபின் செல்வாக்கு, கல்வி, பணம், அந்தஸ்து, அறிவு, திறமை என இவை எதுவுமே விசுவாசத்தைச் சார்ந்ததாக இல்லை என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் நம்மால் கடவுளுக்கு விசுவாசமாக இருக்க முடியும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் சிலர் செல்வந்தர்களாக இருந்தார்கள், மற்றவர்கள் ஏழைகளாக இருந்தார்கள். பவுல் அந்தச் செல்வந்தர்களுக்கு இவ்வாறு அறிவுரை கொடுத்தார்: ‘நன்மை செய்கிறவர்களாகவும், நற்செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.’ அந்த அறிவுரைப்படி நடந்தால் செல்வந்தர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் ‘உண்மையான வாழ்வைக் கண்டிப்பாக அடைய’ முடியும். (1 தீ. 6:17-19) இன்றும்கூட இது நிஜமே. நம் எல்லோருக்கும் ஒரே விதமான வாய்ப்பும் ஒரே விதமான கடமையும் இருக்கிறது; அதாவது, கடவுளுக்கு விசுவாசமுள்ளவர்களாகவும் ‘நற்செயல்களில் செல்வந்தர்களாகவும்’ நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான், அவருடைய கண்களில் நாம் வெற்றி பெறுவோம், அவரைப் பிரியப்படுத்துவதை நினைத்து மனம் மகிழுவோம்.—நீதி. 27:11.
19. வாழ்வில் வெற்றி பெறுவது சம்பந்தமாக உங்கள் தீர்மானம் என்ன?
19 உலகம் உங்களை எப்படிக் கருதுகிறது என்பது உங்கள் கையில் இல்லாவிட்டாலும், உங்களுடைய சூழ்நிலையை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் யெகோவாவுக்கு விசுவாசமாயிருக்க கடும் முயற்சி எடுத்தீர்களென்றால், வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தை இன்றும் என்றும் அபரிமிதமாகப் பெறுவீர்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை ஒருபோதும் மறக்காதீர்கள்: “நீ சாகும்வரை உண்மையுள்ளவனாய் இரு, அப்போது வாழ்வெனும் கிரீடத்தை நான் உனக்குத் தருவேன்.” (வெளி. 2:10) ஆம், முடிவில்லா வாழ்வைப் பெறுவதுதான் உண்மையான வெற்றி!