“முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” எப்போதும் நியாயமாக நடந்துகொள்வார்
“அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை. அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.”—உபா. 32:4.
1. யெகோவா நியாயமாக நடந்துகொள்வார் என்பதில் தனக்கு இருந்த நம்பிக்கையை ஆபிரகாம் எப்படிக் காட்டினார்? (ஆரம்பப் படம்)
“இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?” (ஆதி. 18:25) உண்மையுள்ள மனிதனாகிய ஆபிரகாம் இந்தக் கேள்வியைச் சந்தேகத்தோடு கேட்டாரா? இல்லை! சோதோம், கொமோரா நகரங்களுக்கு யெகோவா நியாயமான தீர்ப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் கேள்வியைக் கேட்டார். யெகோவா ஒருபோதும் ‘பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களை அழிக்க மாட்டார்’ என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. யெகோவா அப்படிச் செய்வார் என்பதை ஆபிரகாமால் ‘நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.’ சுமார் 400 வருஷங்களுக்குப் பிறகு, யெகோவா தன்னைப் பற்றி இப்படிச் சொன்னார்: “அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை. அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை. அவர் நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர். அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.”—உபா. 31:19; 32:4.
2. யெகோவாவால் அநீதியாக நடந்துகொள்ளவே முடியாது என்று ஏன் சொல்லலாம்?
2 யெகோவா எப்போதும் சரியானதையே செய்வார் என்ற உறுதியான நம்பிக்கை ஏன் ஆபிரகாமுக்கு இருந்தது? ஏனென்றால், நீதி நியாயத்திற்கு யெகோவாதான் மிகச் சிறந்த முன்மாதிரி! ‘நியாயம்,’ ‘நீதி’ என்ற வார்த்தைகள் எபிரெய வேதாகமத்தில் அடிக்கடி ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த 2 வார்த்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை! யெகோவாவின் தராதரங்கள் எப்போதுமே சரியானதாக இருப்பதால், அவருடைய தீர்ப்பும் எப்போதும் சரியானதாகத்தான் இருக்கும். “நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—சங். 33:5.
3. இந்த உலகத்தில் நடக்கும் அநீதிக்கு ஒரு உதாரணம் கொடுங்கள்.
3 யெகோவா எப்போதுமே நியாயமாக நடந்துகொள்வார் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு ஆறுதலைத் தருகிறது. ஆனால், இந்த உலகமோ அநீதியால் நிறைந்திருக்கிறது. உதாரணத்துக்கு, செய்யாத தவறுக்காக மக்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள், சிறைச்சாலைக்குள் தள்ளப்படுகிறார்கள். பல வருஷங்கள் தண்டனையை அனுபவித்த பிறகுதான், டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் சிலர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். இப்படித் தவறாகக் குற்றம் சாட்டப்படுவது கோபத்தையும் வெறுப்பையும்தான் உண்டாக்குகிறது. ஆனால், இதைவிட வேதனையைத் தரும் இன்னொரு விதமான அநீதியை கிறிஸ்தவர்கள் ஒருவேளை அனுபவிக்கலாம். அது என்ன?
சபையில் அநீதி நடக்கும்போது
4. ஒரு கிறிஸ்தவருடைய விசுவாசம் எப்படிச் சோதிக்கப்படலாம்?
4 சில விதமான அநீதியை கிறிஸ்தவ சபைக்கு வெளியே அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பது கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். ஆனால், சபைக்கு உள்ளேயே அநீதி நடப்பதை பார்த்தாலோ அநீதியால் நாம் பாதிக்கப்பட்டாலோ நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், நீங்கள் என்ன செய்வீர்கள்? இடறல் அடைந்து விடுவீர்களா?
5. சபையில் அநீதி நடப்பதைப் பார்த்தாலோ அநீதியால் நாம் பாதிக்கப்பட்டாலோ ஏன் ஆச்சரியப்படக் கூடாது?
5 நாம் எல்லாரும் அபூரணர்களாக இருப்பதால் தவறுகள் செய்துவிடுகிறோம். அதனால், சபையில் இருக்கிற சிலர் நம்மிடம் அநீதியாக நடந்துகொள்ளலாம் அல்லது நாம் மற்றவர்களிடம் அநீதியாக நடந்துகொள்ளலாம். (1 யோ. 1:8) ஆனால், கிறிஸ்தவ சபையில் இப்படி நடப்பது அபூர்வம்தான்! இருந்தாலும், அநீதியைப் பார்க்கும்போது உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஆச்சரியப்படுவதில்லை, இடறல் அடைவதுமில்லை. நம்முடைய சகோதர சகோதரிகளால் நமக்கு அநீதி ஏற்படும்போது, நாம் உண்மையாக நிலைத்திருப்பதற்குத் தேவையான நடைமுறையான ஆலோசனையை யெகோவா பைபிளில் கொடுத்திருக்கிறார்.
6, 7. சபையில் ஒரு சகோதரர் எப்படி அநீதியாக நடத்தப்பட்டார்? அதைச் சமாளிக்க அவருக்கு என்னென்ன குணங்கள் உதவியாக இருந்தன?
6 வில்லி டீல் என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். 1931-ன் ஆரம்பத்தில், சகோதரர் டீல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ன் என்ற நகரத்தில் இருந்த பெத்தேலில் உண்மையோடு சேவை செய்தார். 1946-ல், அமெரிக்கா, நியு யார்க்கில் நடந்த 8-வது கிலியட் பள்ளியில் கலந்துகொண்டார். அந்தப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, சுவிட்சர்லாந்தில் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்ய அவர் நியமிக்கப்பட்டார். சகோதரர் டீல் தன்னுடைய வாழ்க்கை சரிதையில் இப்படிச் சொல்லியிருந்தார்: “நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேனு மே 1949-ல சுவிட்சர்லாந்து கிளை அலுவலகத்துக்கு தெரியப்படுத்துனேன். அதுக்கு, ‘நீங்க இனிமேல் பயனியர் ஊழியம் மட்டும்தான் செய்ய முடியும். வேற எந்த பொறுப்புகளும் இனி உங்களுக்கு கிடையாது’னு கிளை அலுவலகத்துல இருந்து பதில் வந்துச்சு. பேச்சுகள் கொடுக்குறதுக்கும் சகோதரர்கள் என்னை அனுமதிக்கல . . . நிறைய பேர் எங்களுக்கு வணக்கம் சொல்றதகூட நிறுத்திட்டாங்க. சபை நீக்கம் செஞ்சவங்கள நடத்துற மாதிரி எங்கள நடத்துனாங்க.”
7 அப்போது சகோதரர் டீல் என்ன செய்தார்? “கல்யாணம் செய்றது ஒண்ணும் பைபிளின்படி தப்பு இல்லன்னு எங்களுக்கு தெரியும். அதனால, உதவிக்காக நாங்க யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம். அவரையே நம்பியிருந்தோம்” என்று அவர் தன்னுடைய வாழ்க்கை சரிதையில் சொல்லியிருந்தார். அந்தச் சமயத்தில், கல்யாணத்தைப் பற்றி சில சகோதரர்கள் தவறாகப் புரிந்துவைத்திருந்தார்கள். ஆனால், அவர்களுடைய புரிந்துகொள்ளுதல் சரி செய்யப்பட்டது. சகோதரர் டீலுக்கு மறுபடியும் பொறுப்புகள் கிடைத்தன. அவருடைய உண்மைத்தன்மைக்கு யெகோவா பலன் கொடுத்தார்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இப்போது நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘இந்த மாதிரியான அநீதி எனக்கு நடந்தா நானும் பொறுமையா இருப்பேனா, யெகோவா நிலைமைகள சரி செய்ற வரைக்கும் காத்துக்கிட்டு இருப்பேனா? இல்லன்னா, அநீதிய சரி செய்றதுக்கு நானே முயற்சி செய்வேனா?’—நீதி. 11:2; மீகா 7:7-ஐ வாசியுங்கள்.
8. நாமோ மற்றவர்களோ அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நாம் ஏன் தவறாக நினைக்கலாம்?
8 சபையில் ஏதோ அநீதி நடப்பதாக நீங்கள் நினைத்தால் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதாவது, அநீதி நடப்பதாக நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கலாம் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்! ஏனென்றால், நாம் எல்லாரும் அபூரணர்களாக இருப்பதால் சில சூழ்நிலைகளைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். அதோடு, நமக்கு எல்லா உண்மைகளும் தெரியாமல் இருக்கலாம். நாம் அந்தச் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டோமோ இல்லையோ, அதைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும், அவரைச் சார்ந்திருக்க வேண்டும், அவருக்கு உண்மையோடு நிலைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்தால், நாம் ‘யெகோவாவுக்கு எதிராகக் கொதிப்படைய’ மாட்டோம்.—நீதிமொழிகள் 19:3-ஐ வாசியுங்கள்.
9. இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
9 பைபிள் காலங்களில் அநீதியால் பாதிக்கப்பட்ட யெகோவாவின் ஊழியர்கள் 3 பேருடைய உதாரணங்களிலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். ஆபிரகாமின் கொள்ளுப்பேரனான யோசேப்பு, தன்னுடைய சகோதரர்களால் எப்படிப் பாதிக்கப்பட்டார் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஆகாப் ராஜாவிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பற்றியும், சீரியாவின் அந்தியோகியாவில் அப்போஸ்தலன் பேதுருவுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம். இந்த உதாரணங்களைப் பற்றி சிந்திக்கும்போது, ஆன்மீக விஷயங்களில் நீங்கள் எப்படிக் கவனத்தை ஒருமுகப்படுத்தலாம் என்றும், யெகோவாவோடு உள்ள பந்தத்தை நீங்கள் எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்றும் யோசித்துப் பாருங்கள். அதுவும், நீங்கள் அநீதியாக நடத்தப்பட்டிருப்பதாக உணரும்போது அதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள்.
யோசேப்பு அநீதியால் பாதிக்கப்பட்டார்
10, 11. (அ) யோசேப்பு என்னென்ன அநீதிகளை அனுபவித்தார்? (ஆ) சிறைச்சாலையில் இருந்தபோது யோசேப்புக்கு என்ன வாய்ப்பு கிடைத்தது?
10 யோசேப்பு யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக இருந்தார். வெளியாட்கள் மட்டும் அவரை அநீதியாக நடத்தவில்லை, அவருடைய சொந்த சகோதரர்களே அவரை அநீதியாக நடத்தினார்கள். தன்னுடைய சகோதரர்களே அப்படிச் செய்தது அவருக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. அவருக்கு 17 வயது இருக்கும்போது, அவருடைய சகோதரர்கள் அவரைக் கடத்திக்கொண்டு போய் அடிமையாக விற்றார்கள். பிறகு, அவர் எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டார். (ஆதி. 37:23-28; 42:21) பிற்பாடு, அந்த அந்நிய நாட்டில், ஒரு பெண்ணைக் கெடுக்க முயற்சி செய்ததாக தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை செய்யப்படாமலேயே சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். (ஆதி. 39:17-20) அடிமையாகவும் சிறைக்கைதியாகவும் அவர் 13 வருஷங்கள் துன்பத்தை அனுபவித்தார். நாம் நம்முடைய சகோதரர்கள் செய்த அநீதியால் பாதிக்கப்பட்டிருந்தால் யோசேப்பின் உதாரணத்திலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
11 யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, ராஜாவுக்குப் பானம் பரிமாறுபவர்களின் தலைவனும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான். ஒரு நாள் ராத்திரி, பானம் பரிமாறுபவன் ஒரு கனவு கண்டான். அதற்கு அர்த்தம் சொல்ல யெகோவா யோசேப்புக்கு உதவினார். பானம் பரிமாறுபவன் விடுதலை செய்யப்படுவான் என்றும், மறுபடியும் பார்வோனுக்குச் சேவை செய்வான் என்றும் யோசேப்பு விளக்கினார். பிறகு, தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி அவனிடம் விளக்குவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. யோசேப்பு அவனிடம் என்ன சொன்னார் என்பதிலிருந்து மட்டும் அல்ல, என்ன சொல்லவில்லை என்பதிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.—ஆதி. 40:5-13.
12, 13. (அ) அநீதியை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு யோசேப்பு சும்மா இருந்துவிடவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) பானம் பரிமாறுபவனிடம் யோசேப்பு எதைப் பற்றி சொல்லவில்லை?
12 ஆதியாகமம் 40:14, 15-ஐ வாசியுங்கள். தான் ‘கடத்திவரப்பட்டதாக’ யோசேப்பு சொன்னதைக் கவனியுங்கள். பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த வார்த்தைக்கு, ‘திருடப்படுவது’ என்ற அர்த்தமும் இருக்கிறது. யோசேப்பு அநீதியால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தன்மேல் சாட்டப்பட்ட குற்றத்துக்கு தான் காரணம் இல்லை என்பதை யோசேப்பு தெளிவாகச் சொன்னார். அதனால்தான், தன்னைப் பற்றி பார்வோனிடம் சொல்லும்படி பானம் பரிமாறுபவனைக் கேட்டுக்கொண்டார். ‘சிறையிலிருந்து வெளியே வருவதற்காக’ அப்படிக் கேட்டுக்கொண்டார்.
13 அநீதியை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு யோசேப்பு சும்மா இருந்துவிட்டாரா? இல்லை! தனக்கு நடந்த அநீதிகளைப் பற்றி யோசேப்புக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், பானம் பரிமாறுபவனால் தனக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி அவனிடம் சொன்னார். ஆனால், தன்னுடைய சகோதரர்கள்தான் தன்னைக் கடத்தினார்கள் என்பதை யாரிடமும், ஏன், பார்வோனிடம்கூட யோசேப்பு சொன்னதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. அதனால்தான், அவருடைய சகோதரர்கள் எகிப்துக்கு வந்து யோசேப்புடன் சமாதானம் செய்தபோது, பார்வோன் அவர்களை வரவேற்று, எகிப்தில் வாழும்படியும் “தேசத்தில் இருக்கிற சிறந்த பொருள்களை” எடுத்துக்கொள்ளும்படியும் அவர்களிடம் சொன்னான்.—ஆதி. 45:16-20.
ஒரு பிரச்சினையைப் பற்றி தவறாகப் பேசுவதால் அது கட்டுக்கடங்காமல் எல்லா இடங்களிலும் பரவி விடலாம் (பாரா 14)
14. சபையில் அநீதியை அனுபவிக்கும்போது அதைப் பற்றி தவறாகப் பேசாமல் இருக்க எது நமக்கு உதவும்?
14 சபையில் நமக்கு அநீதி ஏற்பட்டதாக உணர்ந்தால், மற்றவர்களிடம் அதைப் பற்றி வீண்பேச்சு பேசாமல் இருப்பதற்கு நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். யாராவது ஒருவர் மோசமான பாவம் செய்துவிட்டால் அதைப் பற்றி மூப்பர்களிடம் சொல்ல வேண்டும் என்பதும், அவர்களிடம் உதவி கேட்க வேண்டும் என்பதும் உண்மைதான். (லேவி. 5:1) ஆனால் நிறைய சமயங்களில், அப்படி மோசமான பாவம் எதுவும் நடப்பதில்லை. அதனால், ஒரு சகோதரரோடு ஏற்பட்டிருக்கிற மனஸ்தாபத்தை யாரிடமும் சொல்லாமலேயே, ஏன் மூப்பர்களிடம்கூட சொல்லாமலேயே, அந்தச் சகோதரரிடம் சமாதானம் செய்துகொள்ளலாம். (மத்தேயு 5:23, 24; 18:15-ஐ வாசியுங்கள்.) இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நாம் உண்மையாக இருக்க வேண்டும், பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். சில சமயங்களில், நாம்தான் ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்துகொண்டோம் என்பதையும், நமக்கு அநீதி நடக்கவே இல்லை என்பதையும் நாம் பிற்பாடு உணரலாம். அப்போது, ஒரு சகோதரரைப் பற்றி தவறாக மற்றவர்களிடம் சொல்லி, நிலைமையை இன்னும் மோசமாக்காமல் இருந்ததற்காக நாம் உண்மையிலேயே சந்தோஷப்படுவோம். நம் பங்கில் நியாயம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவதால் நிலைமை சரியாகப் போவதில்லை. யெகோவாவுக்கும் நம்முடைய சகோதரர்களுக்கும் நாம் உண்மையாக இருந்தால், மற்றவர்களைப் பற்றி நாம் மோசமாகப் பேச மாட்டோம். ‘குற்றமில்லாமல் நடப்பவன்,’ “மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச மாட்டான். மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டான்” என்று சங்கீதக்காரன் சொன்னார்.—சங். 15:2, 3; யாக். 3:5.
முக்கியமான பந்தத்தை நினைத்துப் பாருங்கள்
15. யெகோவாவோடு இருந்த பந்தத்தைக் காத்துக்கொண்டதால் யோசேப்புக்கு என்ன ஆசீர்வாதம் கிடைத்தது?
15 யோசேப்பிடமிருந்து நாம் இன்னொரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். அநீதியை அனுபவித்த அந்த 13 வருஷங்களில், எல்லாவற்றையும் யெகோவா பார்ப்பது போல் பார்ப்பதற்கு அவர் கற்றுக்கொண்டார்; அதைச் செயலிலும் காட்டினார். (ஆதி. 45:5-8) தனக்கு ஏற்பட்ட சூழ்நிலைக்கு அவர் யெகோவாவைக் குற்றப்படுத்தவில்லை. யோசேப்பு, தான் அனுபவித்த அநீதியை மறக்கவில்லை என்பது உண்மைதான். அதற்காக, அவர் வெறுப்பை வளர்த்துக்கொள்ளவில்லை. மிக முக்கியமாக, மற்றவர்களுடைய குறைபாடுகளாலும் தவறான செயல்களாலும் அவர் யெகோவாவைவிட்டு விலகவில்லை. யோசேப்பு உண்மையாக இருந்ததால், அவருக்கு ஏற்பட்ட அநீதியை யெகோவா சரி செய்தார், அவரையும் அவருடைய குடும்பத்தையும் ஆசீர்வதித்தார்.
16. சபையில் அநீதியை அனுபவிப்பதாக உணர்ந்தால் நாம் ஏன் முன்பைவிட யெகோவாவிடம் நெருங்கியிருக்க வேண்டும்?
16 யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தை நாமும் உயர்வாக மதிக்க வேண்டும். சகோதரர்களுடைய குறைபாடுகளால், நாம் நேசிக்கிற, வணங்குகிற நம்முடைய கடவுளைவிட்டு நாம் விலகிவிடக் கூடாது. (ரோ. 8:38, 39) சபையில் ஏதாவது அநீதியை அனுபவித்தால், நாம் யோசேப்பைப் போல நடந்துகொள்ள வேண்டும்; முன்பைவிட யெகோவாவிடம் நெருங்கியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் யெகோவா பார்ப்பது போல் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். பைபிள் நியமங்களைப் பின்பற்றி பிரச்சினையைச் சரிசெய்ய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பிறகு, மற்றவற்றை யெகோவாவிடம் விட்டுவிட வேண்டும். தன்னுடைய நேரத்திலும் தன்னுடைய வழியிலும் யெகோவா பிரச்சினைகளைச் சரி செய்வார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
‘இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்மேல்’ நம்பிக்கை வையுங்கள்
17. ‘இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்மேல்’ நமக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
17 இந்தப் பொல்லாத உலகத்தில் வாழும்வரை, நமக்கு அநீதி நடக்கும் என்று நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். எப்போதாவது, நீங்களோ உங்களுக்குத் தெரிந்த ஒரு சகோதரரோ சகோதரியோ சபையில் அநீதியை அனுபவிக்கலாம். அப்போது, இடறல் அடைந்துவிடாதீர்கள். (சங். 119:165) அதற்குப் பதிலாக, கடவுளுக்கு உண்மையோடு நிலைத்திருங்கள், உதவி கேட்டு ஜெபம் செய்யுங்கள், அவரையே சார்ந்திருங்கள். நீங்கள் அபூரணராக இருப்பதால், ஒரு சூழ்நிலையைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம்; அதோடு, உங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியாமல் இருக்கலாம். அதனால், யோசேப்பைப் போல நடந்துகொள்ளுங்கள். தவறாகப் பேசுவது சூழ்நிலையை இன்னும் மோசமாக்கும் என்பதால், அப்படிப் பேசுவதைத் தவிருங்கள். கடைசியாக, உங்கள்மீது சார்ந்திருப்பதற்குப் பதிலாக, யெகோவா எல்லாவற்றையும் சரி செய்வார் என்ற நம்பிக்கையில், பொறுமையோடு இருக்கவும் உண்மையோடு நிலைத்திருக்கவும் தீர்மானமாக இருங்கள். அப்போது, யெகோவா யோசேப்பை ஏற்றுக்கொண்டது போல, அவரை ஆசீர்வதித்தது போல, உங்களையும் ஏற்றுக்கொள்வார், ஆசீர்வதிப்பார். ‘இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருக்கிற’ யெகோவாவின் “வழிகளெல்லாம் நியாயமானவை.” அதனால், அவர் எப்போதுமே சரியானதைத்தான் செய்வார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.—ஆதி. 18:25; உபா. 32:4.
18. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்ப்போம்?
18 பைபிள் காலங்களில் அநீதியை அனுபவித்த யெகோவாவின் ஊழியர்கள் மற்ற 2 பேருடைய உதாரணங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவாவின் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வதற்கு, மனத்தாழ்மையாக இருப்பதும் மன்னிப்பதும் நமக்கு எப்படி உதவும் என்பதை இந்த உதாரணங்களிலிருந்து தெரிந்துகொள்வோம்.
a சகோதரர் வில்லி டீலின் அனுபவத்தை பிப்ரவரி 1, 1992 காவற்கோபுரத்தில் பாருங்கள். அதனுடைய தலைப்பு, “யெகோவா என் கடவுள், அவரில் நான் நம்பிக்கை வைப்பேன்.”