நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு யெகோவாவின் கண்ணோட்டம் இருக்கிறதா?
“யெகோவாவின் பெயரை நான் புகழ்வேன் . . . அவர் நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர்.”—உபா. 32:3, 4.
1, 2. (அ) நாபோத்துக்கும் அவருடைய மகன்களுக்கும் என்ன அநியாயம் நடந்தது? (ஆ) என்ன 2 குணங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?
இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். கடவுளையும் ராஜாவையும் சபித்துப் பேசியதாக, ஒன்றுக்கும் உதவாத 2 பேர் ஒரு நபர்மீது அநியாயமாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த நபர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுகிறார். பிறகு, அவரும் அவருடைய மகன்களும் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள். ஒரு பாவமும் அறியாத அவர்கள் கொல்லப்படுவதை மக்கள் பார்க்கிறார்கள்; நீதியை நேசிக்கும் அந்த மக்களுக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்! இது வெறும் கதை அல்ல, இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் ஆட்சிக் காலத்தில், யெகோவாவின் உண்மை ஊழியனான நாபோத் என்பவருக்கு நடந்த நிஜ சம்பவம்!—1 ரா. 21:11-13; 2 ரா. 9:26.
2 இந்தக் கட்டுரையில், நாபோத்துக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி பார்ப்போம். அதோடு, முதல் நூற்றாண்டு சபையைச் சேர்ந்த உண்மையுள்ள ஒரு மூப்பர் செய்த தவறைப் பற்றியும் பார்ப்போம். இந்த 2 உதாரணங்களைப் பற்றி சிந்திக்கும்போது, நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவாவின் கண்ணோட்டம் நமக்கு இருக்க வேண்டுமென்றால், மனத்தாழ்மையாக இருப்பதும், மன்னிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதைக் கவனிப்போம்.
மிகப்பெரிய அநீதி
3, 4. நாபோத் எப்படிப்பட்டவராக இருந்தார், ஆகாப் ராஜாவுக்கு தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை விற்க அவர் ஏன் மறுத்தார்?
3 ஆகாப் ராஜாவும் அவருடைய மனைவியான பொல்லாத யேசபேல் ராணியும் கெட்ட முன்மாதிரிகளாக இருந்தார்கள். பெரும்பாலான இஸ்ரவேலர்கள் இவர்களுடைய கெட்ட முன்மாதிரியைப் பின்பற்றினார்கள். பொய்க் கடவுளான பாகாலை அவர்கள் கும்பிட்டு வந்தார்கள், யெகோவாவையோ அவருடைய சட்டத்தையோ அவர்கள் மதிக்கவே இல்லை. ஆனால், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த நாபோத் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார், தன்னுடைய உயிரைவிட யெகோவாவோடு இருந்த பந்தத்தையே அவர் உயர்வாக மதித்தார்.
4 ஒன்று ராஜாக்கள் 21:1-3-ஐ வாசியுங்கள். நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை தான் வாங்கிக்கொள்வதாக அல்லது அதற்குப் பதிலாக வேறொரு நல்ல திராட்சைத் தோட்டத்தைத் தருவதாக நாபோத்திடம் ஆகாப் சொன்னார். அதற்கு நாபோத், “பூர்வீகச் சொத்தை விற்கக் கூடாது என்று யெகோவா கட்டளையிட்டிருக்கிறார். அதனால், அதை உங்களுக்கு விற்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என்று ஆகாபிடம் மரியாதையோடு சொன்னார். இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டத்தின்படி, பூர்வீகச் சொத்தை நிரந்தரமாக விற்பது தவறாக இருந்தது. அதனால்தான், ஆகாபுக்குத் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை விற்க நாபோத் மறுத்துவிட்டார். (லேவி. 25:23; எண். 36:7) நாபோத் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
5. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைப் பறிக்க யேசபேல் என்ன செய்தாள்?
5 தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை விற்க நாபோத் மறுத்ததால், ஆகாபும் அவருடைய மனைவியும் படுமோசமான காரியங்களைச் செய்தார்கள். திராட்சைத் தோட்டத்தை நாபோத்திடமிருந்து பறிப்பதற்காக, யேசபேல் ராணி ஒரு திட்டம் தீட்டினாள். செய்யாத ஒரு குற்றத்தைச் செய்ததாகச் சொல்லி நாபோத்மீது பலி போடுவதற்காக 2 பேரை ஏற்பாடு செய்தாள். அதன் விளைவாக, நாபோத்தும் அவருடைய மகன்களும் கொல்லப்பட்டார்கள். அந்த அநியாயத்துக்கு முடிவு கட்ட யெகோவா என்ன செய்தார்?
கடவுள் நியாயம் செய்தார்
6, 7. யெகோவா நீதியை நேசிப்பவர் என்பதை எப்படிக் காட்டினார், அது நாபோத்தின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எப்படி ஆறுதலாக இருந்தது?
6 ஆகாபைப் பார்த்துப் பேசுவதற்காக, உடனடியாக எலியாவை யெகோவா அனுப்பினார். ஆகாப் ஒரு கொலைகாரன் என்றும், திருடன் என்றும் எலியா ஆகாபிடம் சொன்னார். அப்படியென்றால், யெகோவாவின் தீர்ப்பு என்னவாக இருந்தது? நாபோத்தும் அவருடைய மகன்களும் எப்படிக் கொல்லப்பட்டார்களோ, அதே போல ஆகாபும், அவனுடைய மனைவியும், மகன்களும் கொல்லப்பட வேண்டும் என்பதே யெகோவாவின் தீர்ப்பாக இருந்தது.—1 ரா. 21:17-25.
7 ஆகாப் செய்த அந்தப் படுமோசமான காரியத்தால், நாபோத்தின் குடும்பத்தாரும் நண்பர்களும் துக்கத்தில் தவித்தார்கள். நாபோத்துக்கு நடந்த அநியாயத்தைப் பார்த்து, யெகோவா உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அது நிச்சயம் அவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால், அடுத்ததாக நடந்த ஒரு விஷயம், அவர்களுடைய மனத்தாழ்மையையும், யெகோவாமீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் சோதித்தது.
8. யெகோவாவின் தீர்ப்பைக் கேட்டவுடன் ஆகாப் என்ன செய்தார், அதனால் என்ன நடந்தது?
8 யெகோவாவின் தீர்ப்பைக் கேட்டவுடன், “ஆகாப் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு துக்கத் துணியை போட்டுக்கொண்டார்; பல நாட்கள் சாப்பிடாமல், துக்கத் துணிமீது படுத்துக்கிடந்தார், ரொம்பச் சோகமாக இருந்தார்.” ஆகாப் தன்னைத் தாழ்த்தினார். அதனால் என்ன நடந்தது? யெகோவா எலியாவிடம், “அவன் என் முன்னால் தாழ்மையாக நடப்பதால், நான் சொன்ன தண்டனையை அவனுடைய வாழ்நாளில் கொண்டுவர மாட்டேன். அவனுடைய மகனின் வாழ்நாளில் கொண்டுவருவேன்” என்று சொன்னார். (1 ரா. 21:27-29; 2 ரா. 10:10, 11, 17) ‘இதயத்தை ஆராய்கிறவரான’ யெகோவா, ஆகாபுக்குக் கருணை காட்டினார்.—நீதி. 17:3.
மனத்தாழ்மையாக இருப்பது பாதுகாப்பைத் தரும்
9. நாபோத்தின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும், மனத்தாழ்மையாக இருப்பது ஏன் பாதுகாப்பாக இருந்திருக்கும்?
9 ஆகாப் உயிரோடிருக்கும்வரை அவருடைய குடும்பத்தார் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தி, நாபோத்தின் குடும்பத்தாருடைய விசுவாசத்தையும் அவருடைய நண்பர்களின் விசுவாசத்தையும் சோதித்திருக்கலாம். ஆனால், விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க அவர்களுக்கு மனத்தாழ்மை உதவியிருக்கும். கடவுள் ஒருபோதும் அநியாயம் செய்யமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையோடு தொடர்ந்து யெகோவாவை வழிபட அவர்களுக்கு மனத்தாழ்மை உதவியிருக்கும். (உபாகமம் 32:3, 4-ஐ வாசிக்கலாம்.) எதிர்காலத்தில், தங்களுடைய அன்பானவர்கள் மறுபடியும் உயிரோடு வருவதை நாபோத்தின் குடும்பத்தார் பார்ப்பார்கள். அப்போது, நாபோத்துக்கும் அவருடைய மகன்களுக்கும் முழுமையான விதத்தில் நியாயம் கிடைக்கும். (யோபு 14:14, 15; யோவா. 5:28, 29) “மனுஷனின் ஒவ்வொரு செயலையும், அவன் மறைவாகச் செய்கிற செயல்களையும்கூட, சரியா தவறா என்று உண்மைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்பது மனத்தாழ்மையுள்ள ஒருவருக்குத் தெரியும். (பிர. 12:14) யெகோவா தீர்ப்புக் கொடுக்கும்போது, நமக்குத் தெரியாத சில விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார். அதனால், மனத்தாழ்மையாக இருப்பது, யெகோவாமீதுள்ள விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க நமக்கு உதவும்.
10, 11. (அ) என்னென்ன சூழ்நிலைகளில் நீதியைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டம் சோதிக்கப்படலாம்? (ஆ) மனத்தாழ்மை என்னென்ன விதங்களில் நம்மைப் பாதுகாக்கும்?
10 உங்களால் புரிந்துகொள்ள முடியாத அல்லது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்மானத்தை மூப்பர்கள் எடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உதாரணத்துக்கு, நீங்களோ நீங்கள் நேசிக்கிற ஒருவரோ யெகோவாவின் சேவையில் அனுபவித்துக்கொண்டிருந்த பொறுப்புகளை இழந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்களுடைய மணத்துணையோ, மகனோ, மகளோ, அல்லது நெருங்கிய நண்பரோ சபை நீக்கம் செய்யப்படுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் என்ன செய்வீர்கள்? பாவம் செய்த ஒருவருக்கு மூப்பர்கள் கருணை காட்டியது தவறு என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வீர்கள்? இதுபோன்ற சூழ்நிலைகளில், யெகோவாமீதுள்ள உங்கள் விசுவாசம் சோதிக்கப்படலாம். அதோடு, சபையை அவர் ஒழுங்கமைத்திருக்கும் விதத்தில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் சோதிக்கப்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், மனத்தாழ்மையோடு இருப்பது உங்களுக்கு எப்படி உதவும்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்மானத்தை மூப்பர்கள் அறிவிக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? (பாராக்கள் 10, 11)
11 முதலாவதாக, நாம் மனத்தாழ்மையாக இருந்தால், ஒரு விஷயத்தைப் பற்றிய எல்லா உண்மைகளும் நமக்குத் தெரியாது என்பதை ஒத்துக்கொள்வோம். சில சமயங்களில், எல்லா உண்மைகளும் நமக்குத் தெரியும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், யெகோவாவுக்கு மட்டும்தான் ஒருவருடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியும். (1 சா. 16:7) இந்த விஷயத்தை நாம் ஞாபகத்தில் வைத்திருந்தால், நம்முடைய வரம்புகளை ஒத்துக்கொள்வோம், யோசிக்கும் விதத்தையும் மாற்றிக்கொள்வோம். இரண்டாவதாக, நடந்த அநியாயத்தை யெகோவா சரி செய்வார் என்ற நம்பிக்கையில் பொறுமையோடு இருப்போம், கீழ்ப்படிந்து நடப்போம். “உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத்தான் எல்லாமே நல்லபடியாக நடக்கும் . . . பொல்லாதவனுக்கு எதுவும் நல்லபடியாக நடக்காது . . . அவனுடைய வாழ்நாள் நீடிக்காது” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 8:12, 13) நாம் மனத்தாழ்மையாக இருந்தால், நாமும் சரி, சம்பந்தப்பட்ட எல்லாரும் சரி, நன்மையை அனுபவிக்கலாம்.—1 பேதுரு 5:5-ஐ வாசியுங்கள்.
சபையில் வெளிவேஷம்!
12. நாம் எந்தப் பதிவைப் பற்றி சிந்திக்கப் போகிறோம், ஏன்?
12 சீரியாவின் அந்தியோகியாவில் இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மை காண்பிப்பார்களா, மன்னிக்கத் தயாராக இருப்பார்களா என்பதைச் சோதிக்கும் விதத்தில் ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அந்தப் பதிவைப் பற்றி சிந்திக்கும்போது, மற்றவர்களை மன்னிப்பது சம்பந்தமாக நம்முடைய மனப்பான்மை எப்படியிருக்கிறது என்று புரிந்துகொள்வோம். அதோடு, மற்றவர்களை மன்னிப்பது, நியாயத்தைப் பற்றிய யெகோவாவின் கண்ணோட்டத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் புரிந்துகொள்வோம்.
13, 14. பேதுருவுக்கு என்னென்ன பொறுப்புகள் இருந்தன, தைரியத்தை அவர் எப்படி வெளிக்காட்டினார்?
13 அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவ சபையில் ஒரு பிரபலமான மூப்பராக இருந்தார். அதுமட்டுமல்ல, அவர் இயேசுவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்; அவருக்கு முக்கியமான பொறுப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தன. (மத். 16:19) உதாரணத்துக்கு, கொர்நேலியுவுக்கும் அவருடைய வீட்டார் எல்லாருக்கும் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும் பொறுப்பு, கி.பி. 36-ல் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை ஏன் ஒரு விசேஷமான பொறுப்பு என்று சொல்லலாம்? ஏனென்றால், கொர்நேலியு ஒரு யூதரல்ல, விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒரு நபர். கொர்நேலியுவுக்கும் அவருடைய வீட்டாருக்கும் கடவுளுடைய சக்தி கிடைத்தபோது, கிறிஸ்தவர்களாக ஞானஸ்நானம் எடுக்கும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்பதைப் பேதுரு புரிந்துகொண்டார். “நம்மைப் போலவே கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொண்ட இவர்கள் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதை யாராவது தடுக்க முடியுமா?” என்று அவர் சொன்னார்.—அப். 10:47.
14 மற்ற தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி தீர்மானம் எடுப்பதற்கு, அப்போஸ்தலர்களும் எருசலேமிலிருந்த மூப்பர்களும் கி.பி. 49-ல் ஒன்றாகக் கூடிவந்தார்கள். அந்தக் கூட்டத்தில், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடவுளுடைய சக்தி கிடைத்ததை தான் நேரில் பார்த்ததாக பேதுரு தைரியமாகச் சொன்னார். பேதுரு சொன்னதை வைத்துதான் ஆளும் குழுவால் ஒரு தீர்மானத்துக்கு வர முடிந்தது. (அப். 15:6-11, 13, 14, 28, 29) உண்மைகளைத் தைரியமாகச் சொன்னதற்கு யூத கிறிஸ்தவர்களும் மற்ற தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் நிச்சயம் பேதுருவுக்கு நன்றியோடு இருந்திருப்பார்கள். இந்த உண்மையுள்ள, முதிர்ச்சியுள்ள மனிதர்மீது நம்பிக்கை வைப்பதற்கு இந்தச் சம்பவம் அன்றிருந்த கிறிஸ்தவர்களுக்கு உதவியிருக்கும்.—எபி. 13:7.
15. சீரியாவின் அந்தியோகியாவில் இருந்தபோது பேதுரு என்ன தவறு செய்தார்? (ஆரம்பப் படம்)
15 அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, சீரியாவின் அந்தியோகியாவுக்குப் பேதுரு போனார். அங்கே இருந்தபோது, மற்ற தேசத்தைச் சேர்ந்த சகோதரர்களோடு பேதுரு நேரம் செலவு செய்தார். பேதுருவின் அறிவு மற்றும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள அவர்கள் எந்தளவு ஆர்வமாக இருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. ஆனால், தங்களோடு சாப்பிடுவதை பேதுரு திடீரென்று நிறுத்திவிட்டபோது, அவர்களுக்கு ஆச்சரியமாகவும், கவலையாகவும் இருந்திருக்கலாம். பர்னபா உட்பட, மற்ற யூத கிறிஸ்தவர்களும் அப்படி நடந்துகொள்ளும்படி பேதுரு செய்தார். இந்த முதிர்ச்சியுள்ள மூப்பர், சபையில் பிரிவினையை ஏற்படுத்துமளவுக்கு ஏன் அப்படி நடந்துகொண்டார்? இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? முக்கியமாக, ஒரு மூப்பருடைய வார்த்தைகளோ, செயல்களோ நம்மைக் கஷ்டப்படுத்தினால், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள பேதுருவின் உதாரணம் நமக்கு எப்படி உதவும்?
16. பேதுரு எப்படித் திருத்தப்பட்டார், அதனால் என்னென்ன கேள்விகள் வருகின்றன?
16 கலாத்தியர் 2:11-14-ஐ வாசியுங்கள். பேதுரு, மனிதர்களைப் பார்த்து பயந்துவிட்டார். (நீதி. 29:25) மற்ற தேசத்தைச் சேர்ந்த மக்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், மற்ற தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களிடத்தில் தான் பழகுவதைப் பார்த்தால், எருசலேமிலிருந்து வந்த விருத்தசேதனம் செய்திருந்த யூத கிறிஸ்தவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவர் பயந்தார். கி.பி. 49-ல் எருசலேமில் நடந்த கூட்டத்தில், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகப் பேதுரு பேசியதைப் பற்றி பவுல் கேள்விப்பட்டிருந்தார். அதனால், பேதுரு வெளிவேஷம் போடுவதாக அப்போஸ்தலன் பவுல் அவரிடம் சொன்னார். (அப். 15:12; கலா. 2:13, அடிக்குறிப்பு) இப்போது, பேதுருவால் புண்படுத்தப்பட்ட மற்ற தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்? அவர்கள் இடறல் அடைந்துவிடுவார்களா? தான் செய்த தவறால் பேதுரு தன்னுடைய பொறுப்புகளை இழந்துவிடுவாரா?
தாராளமாக மன்னியுங்கள்
17. யெகோவா தன்னை மன்னித்ததிலிருந்து பேதுரு எப்படி நன்மையடைந்தார்?
17 பவுல் தன்னைத் திருத்தியபோது, பேதுரு அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். பேதுரு தன்னுடைய பொறுப்புகளை இழந்ததாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. சொல்லப்போனால், கடவுளுடைய சக்தியின் உதவியால் அவர் 2 கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்கள், பிற்பாடு பைபிள் புத்தகங்களின் பாகமாக ஆனது. தன்னுடைய 2-வது கடிதத்தில், பவுலை ‘அன்பு சகோதரர்’ என்று பேதுரு குறிப்பிட்டிருந்தார். (2 பே. 3:15) பேதுரு செய்த தவறு மற்ற தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை வேதனைப்படுத்தியிருந்தாலும், சபையின் தலைவரான இயேசு அவரைத் தொடர்ந்து பயன்படுத்தினார். (எபே. 1:22) பேதுருவை மன்னிப்பதன் மூலம், சபையில் இருந்த சகோதர சகோதரிகள் இயேசுவையும் அவருடைய தகப்பனையும் பின்பற்றினார்கள். ஒரு அபூரண மனிதர் செய்த தவறால் அவர்கள் யாரும் இடறல் அடைந்துவிடவில்லை என்று நாம் நம்பலாம்.
18. என்னென்ன சந்தர்ப்பங்களில் நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவாவுக்கு இருக்கும் அதே கண்ணோட்டம் நமக்கும் இருக்க வேண்டும்?
18 அன்றிருந்த கிறிஸ்தவ சபையிலும் சரி, இன்றிருக்கும் கிறிஸ்தவ சபையிலும் சரி, தவறே செய்யாத மூப்பர்கள் என்று யாருமே இல்லை. “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 3:2) இந்த உண்மை நமக்குத் தெரிந்திருந்தாலும், ஒரு சகோதரர் செய்த தவறால் நாம் பாதிக்கப்படும்போது நாம் என்ன செய்வோம்? அந்தச் சமயத்தில், நியாயம் சம்பந்தமாக யெகோவாவுக்கு இருக்கும் அதே கண்ணோட்டம் நமக்கும் இருக்குமா? உதாரணத்துக்கு, ஒரு மூப்பர் பேசியது ஒருதலைபட்சமாக இருந்ததாக நீங்கள் நினைத்தால், என்ன செய்வீர்கள்? உங்களைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் ஒரு மூப்பர் யோசிக்காமல் எதையாவது சொல்லிவிட்டால் இடறல் அடைந்துவிடுவீர்களா? ‘இவரெல்லாம் மூப்பரா இருக்குறதுக்கே லாயக்கில்ல’ என்று உடனடியாக நினைத்துவிடுவீர்களா அல்லது சபையின் தலைவரான இயேசுவுக்காகக் காத்துக்கொண்டிருப்பீர்களா? அவர் செய்த தவறைப் பெரிதுபடுத்தாமல், பல வருஷங்களாக அவர் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருவதை நினைத்துப் பார்ப்பீர்களா? உங்களுக்கு விரோதமாக பாவம் செய்த ஒரு சகோதரர் தொடர்ந்து மூப்பராகச் சேவை செய்தாலோ, அவருக்கு இன்னும் நிறைய பொறுப்புகள் கிடைத்தாலோ, நீங்கள் அவரை நினைத்து சந்தோஷப்படுவீர்களா? நீங்கள் மன்னிக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்றால், நியாயம் சம்பந்தமாக யெகோவாவுக்கு இருக்கும் அதே கண்ணோட்டம் உங்களுக்கும் இருக்கிறது என்பதைக் காட்டுவீர்கள்!—மத்தேயு 6:14, 15-ஐ வாசியுங்கள்.
19. நாம் என்ன செய்ய தீர்மானமாக இருக்க வேண்டும்?
19 நாம் எல்லாரும் நியாயத்தை நேசிக்கிறோம். அதனால், சாத்தான் மற்றும் அவனுடைய கெட்ட உலகத்தால் ஏற்பட்டிருக்கும் அநியாயத்தை யெகோவா துடைத்தழிக்கும் அந்த நாளுக்காக நாம் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம். (ஏசா. 65:17) அதுவரைக்கும், நமக்கு ஏதாவது அநியாயம் நடந்தால், நமக்கு எல்லா உண்மைகளும் தெரியாது என்பதை நாம் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்ள வேண்டும். நமக்கு விரோதமாகப் பாவம் செய்பவர்களை தாராளமாக மன்னிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவாவுக்கு இருக்கும் அதே கண்ணோட்டம் நமக்கும் இருக்கிறது என்று சொல்ல முடியும்!