உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 அக்டோபர் பக். 6-11
  • நீங்கள் ‘கீழ்ப்படியத் தயாராக’ இருக்கிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் ‘கீழ்ப்படியத் தயாராக’ இருக்கிறீர்களா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • துணை தலைப்புகள்
  • அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியுங்கள்
  • “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு” கீழ்ப்படியுங்கள்
  • அமைப்பு தரும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படியுங்கள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 அக்டோபர் பக். 6-11

படிப்புக் கட்டுரை 42

நீங்கள் ‘கீழ்ப்படியத் தயாராக’ இருக்கிறீர்களா?

“பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ . . . கீழ்ப்படியத் தயாரானதாக . . . இருக்கிறது.”—யாக். 3:17.

பாட்டு 101 ஒற்றுமையாக உழைப்போம்

இந்தக் கட்டுரையில்...a

1. கீழ்ப்படிவது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

கீழ்ப்படிவது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதென்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தாவீது ராஜாவும் அப்படி யோசித்திருக்கிறார். அதனால்தான், “உங்களுக்குக் கீழ்ப்படியும் ஆசையை எனக்குள் தூண்டுங்கள்” என்று கடவுளிடம் ஜெபம் செய்தார். (சங். 51:12) தாவீதுக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். இருந்தாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது சிலசமயம் அவருக்கு ஒரு போராட்டமாகவே இருந்தது. நமக்கும் அப்படி இருக்கலாம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? அதற்கு ஒரு காரணம், கீழ்ப்படியாமல் இருக்கும் சுபாவம் நம் ஒவ்வொருவருக்கும் பிறவியிலேயே வந்துவிட்டது. இரண்டாவது காரணம், கலகம் செய்ய சாத்தான் நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறான்; அவனைப் போலவே நாம் நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறான். (2 கொ. 11:3) மூன்றாவது காரணம், நம்மைச் சுற்றியிருக்கும் மக்களும் கலகம் செய்ய வேண்டும்... எதிர்த்துப் போராட வேண்டும்... என்ற சிந்தையோடு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிந்தைதான் ‘கீழ்ப்படியாதவர்களிடம் இப்போது செயல்பட்டு’ வருவதாக பைபிளும் சொல்கிறது. (எபே. 2:2) அப்படியென்றால், நமக்குள் இருக்கும் தவறு செய்வதற்கான இயல்பையும் எதிர்த்துப் போராட வேண்டும், கீழ்ப்படியக் கூடாதென்று இந்த உலகமும் சாத்தானும் கொடுக்கும் தூண்டுதலையும் எதிர்த்துப் போராட வேண்டும். யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்கும்... அவர் யாருக்கெல்லாம் அதிகாரம் கொடுத்திருக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் கீழ்ப்படிவதற்கும்... நாம் நிறைய முயற்சி எடுக்க வேண்டும்.

2. ‘கீழ்ப்படியத் தயாராக’ இருப்பது என்றால் என்ன? (யாக்கோபு 3:17)

2 யாக்கோபு 3:17-ஐ வாசியுங்கள். ஞானமானவர்கள் ‘கீழ்ப்படியத் தயாராக’ இருப்பார்கள் என்று கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு யாக்கோபு எழுதினார். இதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? யெகோவா யாருக்கெல்லாம் அதிகாரம் கொடுத்திருக்கிறாரோ அவர்களுக்குக் கீழ்ப்படிய ஆர்வமாக இருப்பதை இது குறிக்கிறது. ஆனால், யெகோவாவின் கட்டளையை மீறும்படி யாராவது சொன்னால் அதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமென்று கண்டிப்பாக யெகோவா எதிர்பார்க்க மாட்டார்.—அப். 4:18-20.

3. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நாம் கீழ்ப்படிவதை யெகோவா முக்கியமாக நினைக்கிறாரா?

3 ‘நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்துவிடுவேன், ஆனால் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதுதான் கஷ்டம்’ என்று நாம் ஒருவேளை யோசிக்கலாம். ஏனென்றால், யெகோவா குறையே இல்லாதவர், அவர் கொடுக்கும் வழிநடத்துதலிலும் எந்தக் குறையுமே இருக்காது. (சங். 19:7) ஆனால், அதிகாரம் இருக்கிற மனிதர்கள் குறை உள்ளவர்கள்தான்! இருந்தாலும், யெகோவா பெற்றோர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும், மூப்பர்களுக்கும் ஓரளவு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். (நீதி. 6:20; 1 தெ. 5:12; 1 பே. 2:13, 14) அவர்களுக்கு கீழ்ப்படியும்போது, நாம் உண்மையிலேயே யெகோவாவுக்குத்தான் கீழ்ப்படிகிறோம். ஆனால், சிலசமயங்களில் அவர்கள் கொடுக்கும் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், யெகோவா யாருக்கெல்லாம் அதிகாரம் கொடுத்திருக்கிறாரோ அவர்களுக்கு நாம் எப்படிக் கீழ்ப்படியலாம் என்று பார்க்கலாம்.

அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியுங்கள்

4. ஏன் நிறைய பிள்ளைகள் அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிவதில்லை?

4 இன்று நம்முடைய இளம் பிள்ளைகளைச் சுற்றியிருக்கும் நிறைய பேர் தங்கள் “அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:1, 2) ஏன்? ‘நான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று என் அப்பா அம்மா சொல்கிறார்களோ அதுபோல் அவர்களே நடந்துகொள்வதில்லை. அப்புறம் நான் எதற்கு அவர்களுடைய பேச்சை கேட்க வேண்டும்?’ என்று சில பிள்ளைகள் நினைக்கிறார்கள். வேறு சிலர், ‘என் அப்பா அம்மா கொடுக்கும் ஆலோசனைகள் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. அவர்கள் அந்தக் காலத்து ஆட்கள்’ என்று நினைக்கிறார்கள். ‘என் அப்பா அம்மா ரொம்ப ஸ்டிரிக்ட்டாக இருக்கிறார்கள்’ என்று சில பிள்ளைகள் நினைக்கிறார்கள். நீங்களும் இவர்களைப் போலத்தான் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், “நம் எஜமான் விரும்புகிறபடி உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள், இதுதான் சரியானது” என்று யெகோவா கொடுத்திருக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படிவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். (எபே. 6:1) அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய எது உங்களுக்கு உதவி செய்யும்?

5. லூக்கா 2:46-52 காட்டுவதுபோல், கீழ்ப்படியும் விஷயத்தில் இயேசு எப்படி ஒரு சிறந்த முன்மாதிரி?

5 கீழ்ப்படியும் விஷயத்தில் இயேசு ஒரு சிறந்த முன்மாதிரி; நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். (1 பே. 2:21-24) இயேசு பாவமே இல்லாத பரிபூரண நபராக இருந்தார். ஆனால், அவருடைய அப்பா அம்மா பாவ இயல்புள்ளவர்களாக இருந்தார்கள்; அவர்களிடம் குறைகள் இருந்தன. அதனால், அவர்கள் சிலசமயம் தவறுகளைச் செய்தார்கள்; இயேசுவைச் சரியாக அவர்கள் புரிந்துகொள்ளவும் இல்லை. இருந்தாலும், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையை இயேசு கொடுத்தார். (யாத். 20:12) அவருக்கு 12 வயது இருந்தபோது என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள். (லூக்கா 2:46-52-ஐ வாசியுங்கள்.) யோசேப்பும் மரியாளும் எருசலேமிலிருந்து கிளம்பியபோது, இயேசு தங்களோடு இருக்கிறாரா என்று அவர்கள் கவனிக்கவில்லை. பண்டிகை முடிந்து வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது எல்லா பிள்ளைகளும் கூடவே இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. ஆனால் பிற்பாடு இயேசுவை ஆலயத்தில் கண்டுபிடித்தபோது, இந்தப் பிரச்சினைக்கு இயேசுதான் காரணம் என்பதுபோல் மரியாள் சொல்லிவிட்டார். அப்போது, “ஏன் இப்படி அநியாயமாக என்மேல் பழி போடுகிறீர்கள்?” என்று இயேசு கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, ரொம்ப மரியாதையாகப் பதில் சொன்னார். ‘அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லைதான்.’ இருந்தாலும் இயேசு “தொடர்ந்து அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்.”

6-7. அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய இளம் பிள்ளைகளுக்கு எதுவெல்லாம் உதவும்?

6 பிள்ளைகளே, உங்களுடைய அப்பா அம்மா தவறு செய்யும்போது அல்லது உங்களைப் புரிந்துகொள்ளாதபோது அவர்களுக்குக் கீழ்ப்படிவது கஷ்டமாக இருக்கிறதா? எது உங்களுக்கு உதவி செய்யும்? முதலில், யெகோவா இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிவது “நம் எஜமானுக்குப் பிரியமானது” என்று பைபிள் சொல்கிறது. (கொலோ. 3:20) ஒருவேளை, உங்கள் அப்பா அம்மா உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் அல்லது ரொம்ப ஸ்டிரிக்ட்டான ரூல்ஸ் போடுகிறார்கள் என்றால், அந்தச் சூழ்நிலையைக்கூட யெகோவா பார்க்கிறார்; அவர் உங்களைப் புரிந்துகொள்வார். கஷ்டமாக இருந்தாலும் நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தால் யெகோவா ரொம்ப சந்தோஷப்படுவார்.

7 இரண்டாவதாக, நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் அப்பா அம்மாவுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் சந்தோஷப்படுவார்கள், நிறைய விஷயங்களில் உங்களை நம்புவார்கள். (நீதி. 23:22-25) நீங்களும் அவர்களோடு ரொம்ப நெருக்கமாகிவிடுவீர்கள். பெல்ஜியமில் இருக்கும் அலெக்சாண்ட்ரே என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நிறைய விஷயங்களில் என் அப்பா அம்மாவுக்கு நான் கீழ்ப்படிய ஆரம்பித்தபோது, நாங்கள் ரொம்ப க்ளோஸாக ஆனோம். ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறோம்.”b மூன்றாவதாக, இன்று கீழ்ப்படிவதால் நாளை உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பிரேசிலில் இருக்கும் இளம் சகோதரர் பவுலோ இப்படிச் சொல்கிறார்: “அப்பா அம்மாவுக்கு நான் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டதால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதும் அதிகாரத்தில் இருக்கும் மற்றவர்களுக்குக் கீழ்ப்படிவதும் சுலபமாக இருக்கிறது.” அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிவது ஏன் ரொம்ப முக்கியம் என்பதற்கு பைபிள் இன்னொரு காரணத்தையும் சொல்கிறது. “நீ சீரும் சிறப்புமாக இருப்பாய், பூமியில் நீண்ட காலம் வாழ்வாய்” என்று அது சொல்கிறது.—எபே. 6:2, 3.

8. நிறைய இளம் பிள்ளைகள் ஏன் தங்களுடைய அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிகிறார்கள்?

8 கீழ்ப்படிவதால் கிடைக்கும் நன்மைகளை நிறைய இளம் பிள்ளைகள் அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரேசிலில் இருக்கும் லூயிசா. கொஞ்ச நாளுக்கு செல்போனை பயன்படுத்த கூடாதென்று அவளுடைய அப்பா அம்மா சொல்லியிருந்தார்கள். அவர்கள் ஏன் இப்படியொரு சட்டம் போட்டார்கள் என்று ஆரம்பத்தில் லூயிசாவுக்குப் புரியவில்லை. ஏனென்றால், அவருடைய வயதில் இருந்த மற்ற பிள்ளைகளிடம் செல்போன் இருந்தது. ஆனால், தன்னை பாதுகாக்கத்தான் அவர்கள் அப்படியொரு சட்டத்தைப் போட்டார்கள் என்பது பிற்பாடுதான் லூயிசாவுக்குப் புரிந்தது. அப்பா அம்மா போடும் சட்டங்கள் இப்போது தன்னைக் கட்டுப்படுத்துவதாக லூயிசா நினைப்பதில்லை. அதற்குப் பதிலாக, “அவை என் உயிரைப் பாதுகாக்கும் சீட்-பெல்ட் போல இருக்கின்றன” என்று சொல்கிறார். அமெரிக்காவில் இருக்கும் எலிசபெத் என்ற இளம் சகோதரிக்குத் தன் அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிவது சிலசமயம் கஷ்டமாக இருக்கிறது. “அப்பா அம்மா சொல்கிற விஷயங்கள் எனக்கு முழுமையாகப் புரியவில்லை என்றால், இதற்குமுன் அவர்கள் சொன்ன விஷயங்கள் எப்படி என்னைப் பாதுகாத்தன என்று யோசித்துப் பார்ப்பேன்” என்கிறார் எலிசபெத். அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த சமயத்தைவிட, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தபோதுதான் உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்ததாக ஆர்மீனியாவில் இருக்கும் மோனிக்கா சொல்கிறார்.

“அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு” கீழ்ப்படியுங்கள்

9. சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள்?

9 அரசாங்கங்கள் நமக்குத் தேவைதான் என்று நிறைய பேர் ஒத்துக்கொள்கிறார்கள். ‘அதிகாரத்தில் இருக்கிறவர்கள்’ போடும் சில சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். (ரோ. 13:1) ஆனால் இதே மக்கள், சில சட்டங்கள் நியாயமாகப் படாதபோது அவற்றுக்குக் கீழ்ப்படிய அவசியம் இல்லை என்றும் நினைக்கிறார்கள். உதாரணத்துக்கு, வரி கட்டும் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ஐரோப்பிய நாட்டில் கணக்கெடுத்தபோது, “ஏதாவது வரி ஒன்று நமக்கு அநியாயமாகப் பட்டால் அதை நாம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்று நிறைய மக்கள் சொன்னார்கள். அரசாங்கத்துக்குப் போய்ச் சேர வேண்டிய வரிப்பணத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பாகத்தைத்தான் அந்த நாட்டு மக்கள் கட்டுகிறார்கள்.

யோசேப்பு மரியாளை பெத்லகேமுக்கு கூட்டிக்கொண்டு போகிறார். மரியாள் கழுதையின் மேல் உட்கார்ந்திருக்கிறார். படத்தொகுப்பு: 1. வேக வரம்பு போர்டை பார்த்ததும், ஒரு சகோதரர் தான் எவ்வளவு வேகமாக ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கிறார். 2. வருமான வரிக்கான படிவத்தை ஒரு சகோதரர் நிரப்புகிறார். 3. ஆஸ்பத்திரியில் மருத்துவரிடம் உட்கார்ந்து பேசும்போது ஒரு சகோதரி முகக் கவசத்தை போட்டிருக்கிறார், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கிறார்.

யோசேப்பு மற்றும் மரியாளிடமிருந்து கீழ்ப்படிதலைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்? (பாராக்கள் 10-12)c

10. நமக்குச் சில சட்டங்கள் பிடிக்கவில்லை என்றாலும் நாம் ஏன் அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

10 அரசாங்கங்களால் நிறைய பிரச்சினைகள் வருகின்றன... அவை சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன... அவை சீக்கிரத்தில் அழியப்போகின்றன என்றெல்லாம் பைபிள் சொல்வது உண்மைதான். (சங். 110:5, 6; பிர. 8:9; லூக். 4:5, 6) ஆனால் அதேசமயத்தில், “அதிகாரத்தை எதிர்க்கிறவன் கடவுளுடைய ஏற்பாட்டை எதிர்க்கிறான்” என்றும் அது சொல்கிறது. இந்த உலகத்தில் ஒழுங்கைக் காப்பதற்காக யெகோவா அரசாங்கங்களை தற்காலிகமாக அனுமதித்திருக்கிறார். அதனால், அரசாங்கத்துக்கு “கொடுக்க வேண்டியவற்றை” நாம் கொடுக்க வேண்டும். அதாவது, வரி கட்ட வேண்டும்... உயர் அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்... அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். (ரோ. 13:1-7) சிலசமயம் அவர்கள் போடும் சட்டங்கள் நமக்கு அநியாயமாகப் படலாம்... அவற்றுக்குக் கீழ்ப்படிவது கஷ்டமாக இருக்கலாம்... அவற்றுக்குக் கீழ்ப்படிவதால் நமக்கு சில இழப்புகள்கூட ஏற்படலாம். இருந்தாலும், நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதால், அவருடைய சட்டங்களை மீறச் சொல்லாதவரை நாம் உயர் அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்.—அப். 5:29.

11-12. லூக்கா 2:1-6 காட்டுவதுபோல், கஷ்டமான சூழ்நிலையில்கூட யோசேப்பும் மரியாளும் எப்படிக் கீழ்ப்படிதலைக் காட்டினார்கள், அதனால் என்ன பலன் கிடைத்தது? (படங்களையும் பாருங்கள்.)

11 கஷ்டமான சூழ்நிலைகளில்கூட உயர் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய நாம் தயாராக இருக்க வேண்டும் என்ற பாடத்தை யோசேப்பு மற்றும் மரியாளிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். (லூக்கா 2:1-6-ஐ வாசியுங்கள்.) மரியாள் கிட்டத்தட்ட ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார். அந்தச் சமயத்தில், கீழ்ப்படிய ரொம்பக் கஷ்டமாக இருந்த ஒரு கட்டளையை அரசாங்கம் போட்டது. ரோமப் பேரரசை ஆட்சி செய்துகொண்டிருந்த அகஸ்து, எல்லாரும் தங்கள் சொந்த ஊருக்குப் போய் பெயர்ப் பதிவு செய்ய வேண்டுமென்ற சட்டத்தைப் போட்டார். அதற்குக் கீழ்ப்படிய யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு வர வேண்டியிருந்தது. அவர்கள் 150 கிலோமீட்டர் பயணம் வேண்டியிருந்தது, அதுவும் மலைப்பாதையில்! அந்தப் பயணம் மரியாளுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்திருக்கும். ‘இந்தப் பயணம் மரியாளுக்கும் வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்குமா? ஒருவேளை வழியிலேயே பிரசவம் நடந்துவிட்டால் என்ன செய்வது?’ என்றெல்லாம் நினைத்து அந்தத் தம்பதி கவலைப்பட்டிருப்பார்கள். ஏனென்றால், எதிர்கால மேசியாவை மரியாள் சுமந்துகொண்டிருந்தார். இந்தக் காரணங்களையெல்லாம் காட்டி, அவர்கள் அரசாங்க சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார்களா?

12 இல்லை. இவ்வளவு காரணங்கள் இருந்தாலும் அவர்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் கீழ்ப்படிந்ததால் யெகோவாவும் அவர்களை ஆசீர்வதித்தார். மரியாள் பத்திரமாக பெத்லகேமுக்கு வந்து சேர்ந்தார், ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்குக்கூட இது ரொம்ப உதவியாக இருந்தது!—மீ. 5:2.

13. நாம் கீழ்ப்படிவதால் நம் சகோதரர்களுக்கு எப்படி நன்மை கிடைக்கும்?

13 அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நமக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. எப்படி? கீழ்ப்படியாதவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வோம். (ரோ. 13:4) நாம் ஒவ்வொருவருமே சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால், யெகோவாவின் சாட்சிகளை அதிகாரிகள் நல்ல விதமாகப் பார்ப்பார்கள். நிறைய வருஷங்களுக்கு முன்பு நைஜீரியாவில் என்ன நடந்ததென்று கவனியுங்கள். ஒருசமயம், சபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ராணுவ வீரர்கள் ராஜ்ய மன்றத்துக்குள் நுழைந்தார்கள். வரி கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் செய்கிற யாராவது உள்ளே இருக்கிறார்களா என்று பார்க்க வந்தார்கள். ஆனால், அந்த ராணுவ வீரர்களின் அதிகாரி, “யெகோவாவின் சாட்சிகள் கண்டிப்பாக வரி கட்டுவார்கள், அதனால் நாம் இங்கிருந்து போய்விடலாம்” என்று சொன்னார். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொரு தடவை நாம் சட்டத்துக்குக் கீழ்ப்படியும்போதும், யெகோவாவின் மக்களுக்கு இருக்கும் நல்ல பெயரைக் காப்பாற்றுகிறோம். இந்த நல்ல பெயர், என்றைக்காவது ஒருநாள் இன்னொரு யெகோவாவின் சாட்சியைப் பாதுகாக்கும்.—மத். 5:16.

14. உயர் அதிகாரிகளுக்கு ‘கீழ்ப்படியத் தயாராக’ இருக்க ஒரு சகோதரிக்கு எது உதவியது?

14 இருந்தாலும், எல்லா சமயத்திலும் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவது நமக்குச் சுலபமாக இருக்காது. அமெரிக்காவில் இருக்கும் ஜொயான்னா என்ற சகோதரிக்கும் அப்படித்தான் இருந்தது. “அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிவது எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் அநியாயம் செய்திருக்கிறார்கள்” என்று அவர் சொல்கிறார். தான் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள அவர் நிறைய முயற்சி எடுத்தார். முதலில், அதிகாரிகளுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் வரும் செய்திகளைப் படிப்பதை நிறுத்தினார். (நீதி. 20:3) இரண்டாவதாக, மனித அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, யெகோவாவால் மட்டும்தான் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஜெபம் செய்தார். (சங். 9:9, 10) மூன்றாவதாக, நடுநிலையைப் பற்றிய நம்முடைய கட்டுரைகளைப் படித்தார். (யோவா. 17:16) இப்போது ஜொயான்னாவால் அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்க முடிகிறது, அவர்களுக்குக் கீழ்ப்படியவும் முடிகிறது. அதனால், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு சமாதானம்” இருப்பதாக சொல்கிறார்.

அமைப்பு தரும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படியுங்கள்

15. யெகோவாவின் அமைப்பு தரும் வழிநடத்துதல்களுக்குக் கீழ்ப்படிவது ஏன் சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம்?

15 சபையில் ‘உங்களை வழிநடத்துகிறவர்களுக்கு . . . கீழ்ப்படியுங்கள்’ என்று யெகோவா நம்மிடம் சொல்லியிருக்கிறார். (எபி. 13:17) நம் தலைவர் இயேசு குறையே இல்லாதவர். ஆனால், பூமியில் நம்மை வழிநடத்துவதற்காக அவர் பயன்படுத்துகிற ஆட்கள் அப்படி இல்லை. அதனால், அவர்களுக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதுவும், நமக்குப் பிடிக்காத சில விஷயங்களை அவர்கள் செய்யச் சொல்லும்போது அவர்களுக்குக் கீழ்ப்படிவது போராட்டமாக இருக்கலாம். அப்போஸ்தலன் பேதுருவும்கூட ஒருசமயம் கீழ்ப்படிவதற்குக் கஷ்டப்பட்டார். அசுத்தம் என்று திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருந்த மிருகங்களை அடித்துச் சாப்பிடச் சொல்லி தேவதூதர் அவருக்குக் கட்டளை கொடுத்தார். ஆனால், அப்படிச் செய்ய முடியாது என்று பேதுரு சொன்னார். அதுவும், ஒரு தடவை அல்ல, மூன்று தடவை சொன்னார். (அப். 10:9-16) ஏன்? தேவதூதர் கொடுத்த வழிநடத்துதல் அர்த்தமே இல்லாததுபோல் பேதுருவுக்கு தோன்றியது. அவ்வளவு காலமாக அவர் அப்படிச் செய்ததே இல்லை. குறையே இல்லாத ஒரு தேவதூதர் கொடுத்த வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதே பேதுருவுக்கு இவ்வளவு கஷ்டமாக இருந்ததென்றால், குறையுள்ள மனிதர்கள் கொடுக்கும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவது நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்!

16. கஷ்டமாக இருந்தாலும் கீழ்ப்படியத் தயாராக இருந்ததை அப்போஸ்தலன் பவுல் எப்படிக் காட்டினார்? (அப்போஸ்தலர் 21:23, 24, 26)

16 அப்போஸ்தலன் பவுலுக்கு ஒரு தடவை ஒரு ஆலோசனை கிடைத்தது. ஆனால், அது நியாயமே இல்லை என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம். இருந்தாலும், அதற்கு ‘கீழ்ப்படியத் தயாராக’ இருந்தார். ஒருசமயம், பவுலைப் பற்றிய சில வதந்திகள் யூதக் கிறிஸ்தவர்களின் காதுக்கு வந்தது. அதாவது, அவர் “மோசேயின் திருச்சட்டத்தைவிட்டு விலக” வேண்டுமென்று பிரசங்கிப்பதாகவும், அவர் திருச்சட்டத்தை அவமதிப்பதாகவும் கேள்விப்பட்டார்கள். (அப். 21:21) அப்போது, எருசலேமில் இருந்த மூப்பர்கள் பவுலுக்கு ஒரு ஆலோசனை கொடுத்தார்கள். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கிறார் என்று காட்டுவதற்காக நான்கு ஆண்களை ஆலயத்துக்குக் கூட்டிக்கொண்டு போய் தூய்மைச் சடங்கைச் செய்துகொள்ளச் சொன்னார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லை என்பது பவுலுக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமல்ல, அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. இருந்தாலும், இந்த வழிநடத்துதலுக்கு அவர் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். “அடுத்த நாள் பவுல் அந்த ஆண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து அவரும் தூய்மைச் சடங்கு செய்துகொண்டார்.” (அப்போஸ்தலர் 21:23, 24, 26-ஐ வாசியுங்கள்.) பவுல் கீழ்ப்படிந்து நடந்ததால் சகோதரர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகமானது.—ரோ. 14:19, 21.

17. ஸ்டெஃபனியின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

17 ஸ்டெஃபனி என்ற சகோதரியும் அவருடைய கணவரும், வேறு மொழி பேசும் ஒரு தொகுதியோடு சேர்ந்து சந்தோஷமாகச் சேவை செய்துவந்தார்கள். ஆனால், அந்தத் தொகுதி இனிமேல் தேவையில்லை என்று அந்த நாட்டின் கிளை அலுவலகம் முடிவு செய்தது. அதனால், இந்தத் தம்பதியை தங்களுடைய சொந்த மொழி பேசும் ஒரு சபைக்கு நியமித்தார்கள். பொறுப்புள்ள சகோதரர்கள் எடுத்த இந்த முடிவை ஏற்றுக்கொள்வது ஸ்டெஃபனிக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. இதைப் பற்றி அவர் சொல்லும்போது, “எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. என் தாய்மொழி பேசும் சபைகளில் அவ்வளவு தேவை இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று சொல்கிறார். இருந்தாலும், அந்தப் புதிய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று ஸ்டெஃபனி முடிவெடுத்தார். அவர் தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்: “காலம் போகப்போக, பொறுப்புள்ள சகோதரர்கள் சொன்ன விஷயம் எவ்வளவு சரியானது என்பதை என்னால் பார்க்க முடிந்தது. இப்போது நாங்கள் இருக்கும் சபையில், தனியாக சத்தியத்தில் இருக்கும் நிறைய பேருக்கு நாங்கள் அப்பா அம்மா மாதிரி இருக்கிறோம். சமீபத்தில் யெகோவாவுக்கு மறுபடியும் சுறுசுறுப்பாகச் சேவை செய்ய ஆரம்பித்த ஒரு சகோதரியோடு சேர்ந்து இப்போது பைபிளைப் படிக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட படிப்புக்கும் நிறைய நேரம் கிடைக்கிறது. சகோதரர்கள் கொடுத்த வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்ததால் என் மனசாட்சியும் என்னைக் குத்துவதில்லை.”

18. கீழ்ப்படிவதால் நமக்கு என்ன நன்மை?

18 நம்மால் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள முடியும். இயேசுவும் “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.” ரொம்ப சவுகரியமான சூழ்நிலையில் இருந்தபோது அல்ல, “தான் பட்ட கஷ்டங்களின் மூலம்” கற்றுக்கொண்டார். (எபி. 5:8) இயேசுவைப் போலவே கஷ்டமான சூழ்நிலைகளில் நம்மாலும் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள முடியும். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் நடந்ததை யோசித்துப் பாருங்கள். அப்போது ராஜ்ய மன்றத்துக்குப் போக வேண்டாம் என்றும், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய வேண்டாம் என்றும் அமைப்பு சொன்னது. அவற்றுக்குக் கீழ்ப்படிவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்ததா? இருந்தாலும், நீங்கள் கீழ்ப்படிந்ததால் உங்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்தது... சபையில் ஒற்றுமையை காத்துக்கொள்ள முடிந்தது... யெகோவாவைச் சந்தோஷப்படுத்தவும் முடிந்தது. கஷ்டமான சூழ்நிலைகளில் நாம் இப்போதே கீழ்ப்படியக் கற்றுக்கொண்டால், மிகுந்த உபத்திரவத்தின்போது கொடுக்கப்பட்டும் ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படிய தயாராக இருப்போம். அந்தச் சமயத்தில் நாம் காட்டும் கீழ்ப்படிதல்தான் நம் உயிரைப் பாதுகாக்கும்!—யோபு 36:11.

19. நீங்கள் ஏன் கீழ்ப்படிய ஆசைப்படுகிறீர்கள்?

19 கீழ்ப்படிவதால் ஏகப்பட்ட ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று இவ்வளவு நேரம் படித்தோம். ஆனால், யெகோவாவுக்கு நாம் கீழ்ப்படிவதற்கு அது முக்கியமான காரணம் கிடையாது. நாம் யெகோவாமேல் உயிரையே வைத்திருக்கிறோம், அவரைச் சந்தோஷப்படுத்த ஆசைப்படுகிறோம்; அதனால்தான், அவருக்குக் கீழ்ப்படிய நினைக்கிறோம். (1 யோ. 5:3) யெகோவா நமக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்! அதற்கெல்லாம் நாம் அவருக்குத் திருப்பி எதுவுமே செய்ய முடியாது. (சங். 116:12) ஆனால், அவருக்கு கீழ்ப்படிய முடியும்! அவர் யாருக்கெல்லாம் அதிகாரம் கொடுத்திருக்கிறாரோ அவர்களுக்கும் நம்மால் கீழ்ப்படிய முடியும்! அப்படிக் கீழ்ப்படிந்தால், நாம் ஞானமானவர்கள் என்பதைக் காட்டுவோம். ஞானமானவர்கள் யெகோவாவின் இதயத்தைச் சந்தோஷப்படுத்துவார்கள்!—நீதி. 27:11.

இவர்களுக்குக் கீழ்ப்படிய எது உங்களுக்கு உதவும் . . .

  • பெற்றோர்களுக்கு

  • “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு”

  • அமைப்பு தரும் வழிநடத்துதலுக்கு

பாட்டு 89 கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்

a நமக்குள் பாவம் இருப்பதால், கீழ்ப்படிவது சிலசமயங்களில் பெரிய போராட்டமாக இருக்கலாம். அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் நமக்கு ஆலோசனையும் வழிநடத்துதலும் கொடுத்தால்கூட அதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். அப்பா அம்மாவுக்கும், ‘அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கும்,’ சபையை முன்நின்று வழிநடத்துகிறவர்களுக்கும் கீழ்ப்படிவதால் வரும் நன்மைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

b அப்பா அம்மா சொல்லும் சில விஷயங்களுக்குக் கீழ்ப்படிவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், அதைப் பற்றி அவர்களிடம் பேசுவதற்கு சில டிப்ஸ் “என் அப்பா அம்மா கெடுபிடியாக இருப்பதைப் பற்றி அவர்களிடம் எப்படிப் பேசுவது?” என்ற கட்டுரையில் இருக்கிறது. இந்தக் கட்டுரை jw.org வெப்சைட்டில் இருக்கிறது.

c படவிளக்கம்: பெத்லகேமுக்கு வந்து பெயர்ப் பதிவு செய்ய வேண்டுமென்று ரோம அரசன் போட்ட கட்டளைக்கு யோசேப்பும் மரியாளும் கீழ்ப்படிந்தார்கள். இன்று கிறிஸ்தவர்களும் சாலை விதிகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள், வரி கட்டுகிறார்கள், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அரசாங்க சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்