படிப்புக் கட்டுரை 16
பாட்டு 87 வாருங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள்
ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் போவது நமக்கு நல்லது!
“சகோதரர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கிறது! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!”—சங். 133:1.
என்ன கற்றுக்கொள்வோம்?
சகோதர சகோதரிகளிடம் எப்படி நெருங்கிப் போகலாம் என்பதைப் பற்றியும் அதனால் கிடைக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றியும் கற்றுக்கொள்வோம்.
1-2. யெகோவா எதை ரொம்ப முக்கியமாக நினைக்கிறார், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்?
மற்றவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை யெகோவா ரொம்ப முக்கியமாக நினைக்கிறார். நம்மை நாம் எப்படி நேசிக்கிறோமோ அதேமாதிரி மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். (மத். 22:37-39) மற்றவர்கள் என்று சொல்லும்போது, சத்தியத்தில் இல்லாதவர்களும் அதில் இருக்கிறார்கள். அவர்களிடமும் நாம் அன்பாகத்தான் நடந்துகொள்ள வேண்டும். அப்போது, நாம் யெகோவா மாதிரி நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம். ஏனென்றால், “அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்.”—மத். 5:45.
2 யெகோவா எல்லா மனிதர்கள்மீதும் அன்பு வைத்திருப்பது உண்மைதான். இருந்தாலும், அவருக்குக் கீழ்ப்படிகிறவர்கள்மேல் அவருக்குக் கொள்ளை அன்பு இருக்கிறது. (யோவா. 14:21) அவரைப் போல நாமும் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதனால்தான், சகோதர சகோதரிகள்மேல் “ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்” என்றும் ‘கனிவான பாசத்தைக் காட்டுங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார். (1 பே. 4:8; ரோ. 12:10) இப்படிப்பட்ட அன்பைக் காட்டினால் எப்படி இருக்கும்? குடும்பத்தில் இருப்பவர்களிடம் அல்லது நண்பர்களிடம் எப்படிப்பட்ட நெருக்கமான உணர்வு இருக்குமோ அதே உணர்வு சகோதர சகோதரிகளிடமும் இருக்கும்.
3. அன்பைப் பற்றி நாம் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?
3 அன்பு என்பது வீட்டில் வளர்க்கிற ஒரு செடி மாதிரி. அதைத் தொடர்ந்து பராமரித்தால்தான் அது நன்றாக வளரும். அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு இப்படிச் சொன்னார்: “தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள்.” (எபி. 13:1) மற்றவர்களிடம் நாம் தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். இந்தக் கட்டுரையில், சகோதர சகோதரிகளிடம் நாம் ஏன் நெருங்கி வர வேண்டும் என்றும் அதை எப்படித் தொடர்ந்து செய்யலாம் என்றும் பார்ப்போம்.
ஒருவரோடு ஒருவர் ஏன் நெருங்கிப் போக வேண்டும்
4. சங்கீதம் 133:1 சொல்வதுபோல், சகோதர சகோதரிகள் நடுவில் இருக்கிற ஒற்றுமை எவ்வளவு அழகானது என்பதை மறக்காமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? (படங்களையும் பாருங்கள்.)
4 சங்கீதம் 133:1-ஐ வாசியுங்கள். யெகோவாவை நேசிக்கிறவர்களோடு நல்ல நட்பு வைத்துக்கொள்வது எவ்வளவு “அருமையாக,” எவ்வளவு “சந்தோஷமாக” இருக்கிறது என்று அந்தச் சங்கீதக்காரர் சொன்னார். அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள். ஒரு அழகான மரத்தைத் தினமும் பார்ப்பதால் போகப்போக அதன் அருமை நமக்குத் தெரியாமல் போய்விடலாம். அதேமாதிரிதான் சகோதர சகோதரிகள் நடுவில் இருக்கிற ஒற்றுமையும்! நாட்கள் போகப்போக அதன் அழகை நாம் கவனிக்காமல் போய்விடலாம். ஏனென்றால், சகோதர சகோதரிகளை நாம் அடிக்கடி சந்திக்கிறோம்; அதுவும், வாரத்தில் பல தடவை சந்திக்கிறோம். அதனால், அவர்கள்மேல் இருக்கிற மதிப்பு குறைந்துவிடலாம். ஆனால், அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சகோதர சகோதரிகள் ஒவ்வொருவருமே நமக்கும் சபைக்கும் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும்.
நம் கிறிஸ்தவ ஒற்றுமையின் அழகைக் கவனிக்க மறந்துவிடாதீர்கள் (பாரா 4)
5. நாம் ஒருவர்மேல் ஒருவர் காட்டும் அன்பு, என்ன செய்ய மற்றவர்களைத் தூண்டும்?
5 நம் கூட்டங்களுக்கு முதல்முதலில் வரும் சிலர், நம் நடுவில் இருக்கிற அன்பைப் பார்த்து அசந்துபோகிறார்கள். அதை வைத்தே, இதுதான் சத்தியம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 13:35) கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சைத்ரா என்ற பெண்ணின் அனுபவத்தைப் பாருங்கள். அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தார். ஒருதடவை அவர் நம் மண்டல மாநாட்டில் கலந்துகொண்டார். முதல் நாள் முடிந்த பிறகு அவருக்கு பைபிள் சொல்லிக்கொடுத்தவரிடம் இப்படிச் சொன்னார்: “இதுவரை என் அப்பா-அம்மாகூட என்னைப் பாசமாகக் கட்டியணைத்ததில்லை. ஆனால், உங்கள் மாநாட்டில் ஒரே நாளில் 52 சகோதர சகோதரிகள் என்னைப் பாசமாகக் கட்டியணைத்தார்கள். யெகோவாவின் அன்பை இந்தக் குடும்பத்தில் என்னால் பார்க்க முடிகிறது. நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக ஆக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.” சைத்ரா நன்றாக முன்னேறினார். 2024-ல் ஞானஸ்நானம் எடுத்தார். நம்மிடம் இருக்கிற நல்ல விஷயங்களைப் பார்க்கும்போது... முக்கியமாக, நாம் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகிற அன்பைப் பார்க்கும்போது... புதிதாக வருகிறவர்களுக்கு யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வரும்.—மத். 5:16.
6. சகோதர சகோதரிகளிடம் நெருங்கிப் போவது நம்மை எப்படிப் பாதுகாக்கும்?
6 சகோதர சகோதரிகளிடம் நெருங்கிப் போவது நமக்குப் பாதுகாப்பு. அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “உங்களில் யாருடைய இதயமும் பாவத்தின் வஞ்சக சக்தியால் இறுகிப்போகாதபடி . . . தினமும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள்.” (எபி. 3:13) நாம் ஒருவேளை சோர்ந்துபோய் கொஞ்சம் வழிதவறிப் போகிற மாதிரி இருந்தால், அதைக் கவனிக்கிற ஒரு சகோதரரை அல்லது சகோதரியைப் பயன்படுத்தி யெகோவா நமக்கு உதவி செய்யலாம். (சங். 73:2, 17, 23) இப்படி நமக்குக் கிடைக்கிற உற்சாகம் ரொம்ப நல்லது, உண்மையிலேயே நமக்குத் தேவையானது.
7. அன்புக்கும் ஒற்றுமைக்கும் என்ன சம்பந்தம்? (கொலோசெயர் 3:13, 14)
7 ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவதற்காகக் கடினமாக உழைக்கும் மக்கள் நாம். அதனால், நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். (1 யோ. 4:11) உதாரணத்துக்கு, அன்பு இருப்பதால் ‘தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்கிறோம்.’ இப்படிச் செய்வதால் சபையில் ஒற்றுமை இருக்கிறது. (கொலோசெயர் 3:13, 14-ஐ வாசியுங்கள்; எபே. 4:2-6) நம் கூட்டங்களில் ரொம்ப இனிமையான, அழகான சூழல் இருக்கிறது. உலகத்தில் வேறு எங்கேயுமே இதைப் பார்க்க முடியாது!
ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுங்கள்
8. நாம் ஒற்றுமையாக இருக்க யெகோவா எப்படி உதவுகிறார்?
8 உலகம் முழுவதும் நமக்கு இருக்கிற இந்த ஒற்றுமையை உண்மையிலேயே ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். நம்மிடம் குறைகள் இருந்தாலும், இப்படி ஒற்றுமையாக இருக்க யெகோவாதான் உதவி செய்கிறார். (1 கொ. 12:25) அதனால்தான், “ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி நீங்களே கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தெ. 4:9) வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒருவரிடம் ஒருவர் எப்படி நெருங்கிப் போகலாம் என்று யெகோவாதான் பைபிள் மூலமாக நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். யெகோவா சொல்லித்தருகிற விஷயங்களைக் கவனமாகப் படித்து, வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிக்கும்போது, நாம் ‘கடவுளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்’ என்று சொல்லலாம். (எபி. 4:12; யாக். 1:25) இதைச் செய்யத்தான் யெகோவாவின் சாட்சிகளாக நாம் கடினமாக உழைக்கிறோம்.
9. ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதைப் பற்றி ரோமர் 12:9-13-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
9 ஒருவரிடம் ஒருவர் நெருங்கி வர பைபிள் நமக்கு எப்படிச் சொல்லித்தருகிறது? இதைப் பற்றி பவுல் என்ன சொல்லியிருக்கிறார் என்று ரோமர் 12:9-13-ல் பாருங்கள். (வாசியுங்கள்.) “ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று அதில் அவர் சொல்லியிருப்பதைக் கவனித்தீர்களா? அதன் அர்த்தம் என்ன? “கனிவான பாசத்தை” காட்ட நாம்தான் முதல்படி எடுக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? மற்றவர்களை மன்னிப்பதற்கும், உபசரிப்பதற்கும், தாராள குணத்தைக் காட்டுவதற்கும் இன்னும் வேறுசில நல்ல விஷயங்களைச் செய்வதற்கும் நாமே முதல்படி எடுக்கலாம். (எபே. 4:32) மற்றவர்கள் நம்மிடம் நெருங்கி வர காத்திருப்பதற்குப் பதிலாக நாம் அவர்களிடம் நெருங்கிப் போக ‘முந்திக்கொள்ளலாம்.’ இப்படியெல்லாம் செய்யும்போது இயேசு சொன்னது எவ்வளவு உண்மை என்பதை நாம் ருசிப்போம். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று அவர் சொன்னார்.—அப். 20:35.
10. “ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில்” நாம் எப்படிச் சுறுசுறுப்பாக இருக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)
10 மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள் என்று சொன்ன உடனேயே பவுல் என்ன சொன்னார் என்று கவனித்தீர்களா? “சுறுசுறுப்பாக இருங்கள், சோம்பேறியாக இருக்காதீர்கள்” என்று சொன்னார். சுறுசுறுப்பாக இருக்கிற ஒருவர், கடினமாக உழைப்பார். அவரிடம் ஒரு வேலையை செய்யச் சொன்னால் அதை நல்லபடியாகச் செய்து முடிப்பார். நீதிமொழிகள் 3:27, 28 இப்படிச் சொல்கிறது: “நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே. அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.” ஒருவருக்கு உதவி தேவைப்படுவதை நாம் பார்த்தால், சுறுசுறுப்போடு, உடனடியாக அவருக்கு உதவ வேண்டும்; அதைத் தள்ளிப்போடக் கூடாது. யாராவது உதவுவார்கள் என்று நினைத்துக்கொண்டு சும்மா இருக்கக் கூடாது.—1 யோ. 3:17, 18.
உதவி தேவைப்படுகிற சகோதர சகோதரிகளுக்கு உதவ முந்திக்கொள்ள வேண்டும் (பாரா 10)
11. ஒருவரிடம் ஒருவர் நெருங்கிப் போக எது உதவி செய்யும்?
11 மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதற்கு இன்னொரு வழி, அவர்கள் நம்மைக் காயப்படுத்தும்போது அவர்களை உடனடியாக மன்னிப்பது. எபேசியர் 4:26 இப்படிச் சொல்கிறது: “சூரியன் மறைவதற்கு முன்னால் உங்கள் கோபம் தணிய வேண்டும்.” ஏன்? 27-வது வசனம் பதில் சொல்கிறது: “பிசாசுக்கு எந்த வாய்ப்பும் கொடுத்துவிடாதீர்கள்.” நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பதை யெகோவா தன் வார்த்தையாகிய பைபிளில் மறுபடியும் மறுபடியும் சொல்லியிருக்கிறார். “தொடர்ந்து . . . தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்” என்று கொலோசெயர் 3:13-ம் சொல்கிறது. மற்றவர்கள் செய்கிற தவறுகளை நாம் பெரிது பண்ணாமல், அதை மன்னிக்கும்போது நாம் அவர்களிடம் நெருங்கிப் போக முடியும். அப்போது, “கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக வாழ்வதற்கும்” உதவுவோம். (எபே. 4:3) சுருக்கமாகச் சொன்னால், மன்னிப்பதுதான் ஒற்றுமையையும் சமாதானத்தையும் வளர்க்கும்!
12. மன்னிப்பதற்கு யெகோவா நமக்கு எப்படி உதவி செய்கிறார்?
12 நம்மைக் காயப்படுத்திய ஒருவரை மன்னிப்பது ஒருவேளை நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், கடவுளுடைய சக்தியின் உதவி இருந்தால் அதை நம்மால் செய்ய முடியும். இதைக் கொஞ்சம் கவனியுங்கள்: ஒருவருக்கொருவர் ‘கனிவான பாசத்தைக் காட்டுங்கள்,’ “சுறுசுறுப்பாக இருங்கள்” என்றெல்லாம் சொன்ன பிறகு, “[கடவுளுடைய] சக்தியால் நிறைந்து ஆர்வத்துடிப்போடு செயல்படுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 12:11) அப்படியென்றால், சரியான விஷயத்தை ஆர்வத்துடிப்போடும் உற்சாகத்தோடும் செய்ய கடவுளுடைய சக்தி ஒருவருக்குத் தேவைப்படும். அதனால், அதைத் தரச்சொல்லி யெகோவாவிடம் நாம் கெஞ்சிக் கேட்க வேண்டும். (லூக். 11:13) அவருடைய சக்தியின் உதவியால் கனிவான பாசத்தைக் காட்டுவது... ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னிப்பது... போன்ற சரியான விஷயங்களை ஆர்வத்தோடு செய்ய முடியும்.
‘உங்களுக்குள் பிரிவினைகள் இருக்கக் கூடாது’
13. நமக்குள் எது பிரிவினைகளை ஏற்படுத்திவிடலாம்?
13 வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த “எல்லா விதமான மக்களும்” கிறிஸ்தவ சபையில் இருக்கிறார்கள். (1 தீ. 2:3, 4) அதனால், உடை... அலங்காரம்... ஆரோக்கியம்... பொழுதுபோக்கு... போன்ற விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். கவனமாக இல்லையென்றால் இந்த வித்தியாசங்களால் நமக்குள் பிரிவினைகள் வந்துவிடலாம். (ரோ. 14:4; 1 கொ. 1:10) அன்பு காட்டுவதற்கு கடவுள் நமக்குச் சொல்லிக்கொடுத்திருப்பதால், மற்றவர்களுடைய கருத்துகளைவிட நம்முடைய கருத்துகள்தான் சரி என்பது போல நடந்துகொள்ளக் கூடாது.—பிலி. 2:3.
14. நாம் எப்போதுமே எப்படிப்பட்டவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும், ஏன்?
14 நாம் எப்போதுமே மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறவர்களாகவும் பலப்படுத்துகிறவர்களாகவும் இருந்தால், சபையில் பிரிவினைகள் வராத மாதிரி பார்த்துக்கொள்ள முடியும். (1 தெ. 5:11) ரொம்ப காலமாக செயலற்ற பிரஸ்தாபிகளாக இருந்தவர்களும், சபையிலிருந்து நீக்கப்பட்டவர்களும், சமீப காலங்களில் மறுபடியும் சபைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை நாம் ரொம்ப அன்பாக வரவேற்கிறோம்! (2 கொ. 2:8) அப்படி 10 வருஷமாக செயலற்ற பிரஸ்தாபியாக இருந்த ஒரு சகோதரி, மறுபடியும் ராஜ்ய மன்றத்துக்கு வந்தபோது என்ன நடந்தது என்று சொல்கிறார்: “என்னை எல்லாரும் புன்னகையோடு, கை குலுக்கி, அன்பாக வரவேற்றார்கள்.” (அப். 3:19) அன்பு காட்டுவதற்காக மற்றவர்கள் செய்த இந்த சின்னச் சின்ன விஷயங்கள் அந்த சகோதரிக்கு எப்படி இருந்தது? “நான் மறுபடியும் சந்தோஷமாக இருப்பதற்கு யெகோவா எனக்கு உதவி செய்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்கிறார் அவர். மற்றவர்களைப் பலப்படுத்துகிற மாதிரி நடந்துகொள்ளும்போது, ‘களைத்துப்போனவர்களுக்கும், பாரமான சுமையை சுமக்கிறவர்களுக்கும்’ புத்துணர்ச்சி கொடுப்பதற்கு, இயேசு கிறிஸ்து நம்மைப் பயன்படுத்துவார்.—மத். 11:28, 29.
15. ஒற்றுமையை வளர்க்க உதவுகிற இன்னொரு வழி என்ன? (படத்தையும் பாருங்கள்.)
15 ஒற்றுமையை வளர்ப்பதற்கு இன்னொரு வழி, பேசுகிற விதத்தில் கவனமாக இருப்பது. யோபு 12:11 இப்படிச் சொல்கிறது: “சாப்பாட்டை நாக்கு ருசி பார்ப்பதில்லையா? அது போல, வார்த்தைகளைக் காது சோதித்துப் பார்ப்பதில்லையா?” நன்றாகச் சமைக்கிற ஒருவர், மற்றவர்களுக்கு சாப்பாட்டை பரிமாறுவதற்கு முன்பு, அந்த சாப்பாடு எப்படி இருக்கிறது என்று ருசி பார்ப்பார். அதே மாதிரி, நாம் பேசுவதற்கு முன்பு நன்றாக யோசித்துப் பேச வேண்டும். (சங். 141:3) நாம் பேசுகிற விஷயங்கள் எப்போதும் “கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய்” இருக்க வேண்டும், அவர்களைப் பலப்படுத்தி புத்துணர்ச்சி தருகிற மாதிரி இருக்க வேண்டும்!—எபே. 4:29.
பேசும் முன் யோசியுங்கள் (பாரா 15)
16. மற்றவர்களைப் பலப்படுத்துகிற மாதிரி பேசுவதில் குறிப்பாக யார் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்?
16 பலப்படுத்துகிற வார்த்தைகளைப் பேசுகிற விஷயத்தில், குறிப்பாக கணவர்களும் பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டும். (கொலோ. 3:19, 21; தீத். 2:4) கடவுளுடைய மந்தைக்கு மேய்ப்பர்களாக இருக்கிற மூப்பர்கள்கூட புத்துணர்ச்சிக்குப் புகலிடமாக இருக்க வேண்டும், மற்றவர்களை ஆறுதல்படுத்த வேண்டும். (ஏசா. 32:1, 2; கலா. 6:1) பைபிளில் இருக்கிற ஒரு நீதிமொழி இப்படிச் சொல்கிறது: “சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!”—நீதி. 15:23.
‘உண்மை மனதோடு செயலில்’ அன்பு காட்டுங்கள்
17. நாம் எப்படி சகோதர சகோதரிகளிடம் மனதிலிருந்து அன்பு காட்டலாம்?
17 ‘சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அன்பு காட்ட வேண்டும், அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்’ என்று அப்போஸ்தலன் யோவான் நம்மை உற்சாகப்படுத்துகிறார். (1 யோ. 3:18) சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பு, மனதிலிருந்து வர வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? சகோதர சகோதரிகளோடு எவ்வளவு அதிகமாக நேரம் செலவு செய்கிறோமோ அவ்வளவு அதிகமாக நாம் அவர்களிடம் நெருங்கிப் போவோம்; அவர்கள்மேல் இருக்கும் அன்பும் பலமாகும். அதனால், சகோதர சகோதரிகளுடன் நேரம் செலவு செய்ய வாய்ப்புகளை உருவாக்குங்கள். ஒருவேளை, கூட்டத்துக்குப் போகும்போதும் ஊழியத்துக்குப் போகும்போதும் அவர்களோடு நேரம் செலவிடலாம். சகோதர சகோதரிகளை வீட்டில் போயும் பாருங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, ‘அன்பு காட்டுவதற்குக் கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டவர்களாக’ இருப்போம். (1 தெ. 4:9) அதுமட்டுமல்ல, “சகோதரர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கிறது! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!” என்பதை ருசித்துப் பார்ப்போம்!—சங். 133:1.
பாட்டு 90 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்