உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 ஏப்ரல் பக். 20-25
  • நாம் ஒருநாளும் தனியாக இல்லை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாம் ஒருநாளும் தனியாக இல்லை!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா நம்மை வழிநடத்துகிறார்
  • யெகோவா நமக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்
  • யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார்
  • யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார்
  • யெகோவா எப்போதும் நம்மோடு இருக்கிறார்
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 ஏப்ரல் பக். 20-25

படிப்புக் கட்டுரை 17

பாட்டு 99 மாபெரும் குடும்பம்

நாம் ஒருநாளும் தனியாக இல்லை!

“நான் . . . உனக்கு உதவி செய்வேன்.”—ஏசா. 41:10.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவா நம்மைக் கவனித்துக்கொள்ளும் நான்கு வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

1-2. (அ) கஷ்டங்கள் வரும்போது நாம் தனியாக இல்லை என்று ஏன் உறுதியாகச் சொல்லலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

மோசமான பிரச்சினைகளில் நாம் சிக்கித் தவிக்கும்போது, கொந்தளிக்கும் கடலில் ஒரு சின்னப் படகில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்ட மாதிரி இருக்கலாம். ஆனாலும், நாம் பிரச்சினைகளைத் தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை. நம்முடைய அன்பான அப்பா நாம் படும் கஷ்டங்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அதைச் சமாளிக்க உதவி செய்வதாகவும் வாக்குக் கொடுக்கிறார். “நான் . . . உனக்கு உதவி செய்வேன்” என்று அவர் அன்பாகச் சொல்கிறார்.—ஏசா. 41:10.

2 யெகோவா நமக்கு உதவி செய்யும் நான்கு வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்: (1) அவர் நம்மை வழிநடத்துகிறார், (2) நமக்குத் தேவையானதைக் கொடுக்கிறார், (3) நம்மைப் பாதுகாக்கிறார், (4) நமக்கு ஆறுதல் தருகிறார். வாழ்க்கையில் நாம் என்ன கஷ்டங்களை அனுபவித்தாலும் சரி, யெகோவா நம்மை மறக்கவோ நம்மைக் கைவிடவோ மாட்டார். இந்த வாக்குறுதியை அவரே கொடுத்திருக்கிறார். அதனால், நாம் ஒருநாளும் தனியாக இல்லை.

யெகோவா நம்மை வழிநடத்துகிறார்

3-4. யெகோவா நம்மை எப்படி வழிநடத்துகிறார்? (சங்கீதம் 48:14)

3 சங்கீதம் 48:14-ஐ வாசியுங்கள். நம்மைநாமே வழிநடத்திக்கொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. அப்படியென்றால், இன்று யெகோவா நம்மை எப்படி வழிநடத்துகிறார்? முதலாவதாக, பைபிள் மூலம் அவர் நம்மை வழிநடத்துகிறார். (சங். 119:105) நல்ல முடிவுகளை எடுப்பதற்கும், நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் யெகோவா தன்னுடைய வார்த்தை மூலம் நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார்.a அவருக்குக் கீழ்ப்படியும்போது நம்மால் இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ முடியும். உதாரணத்துக்கு, மற்றவர்களை மனதார மன்னிப்பதற்கும்... எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருப்பதற்கும்... மற்றவர்கள்மேல் இதயப்பூர்வமாக அன்பு காட்டுவதற்கும்... யெகோவா நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். (சங். 37:8; எபி. 13:18; 1 பே. 1:22) இப்படிப்பட்ட குணங்களைக் காட்டும்போது நம்மால் நல்ல பெற்றோராகவும், நல்ல திருமணத் துணையாகவும், நல்ல நண்பராகவும் இருக்க முடியும்.

4 அதோடு, நம்மைப் போன்ற நபர்களைப் பற்றி யெகோவா பைபிளில் பதிவு செய்திருக்கிறார். நமக்கு இருக்கும் பிரச்சினைகளும் உணர்ச்சிகளும்தான் அவர்களுக்கும் இருந்தன. (1 கொ. 10:13; யாக். 5:17) அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும்போதும், அதில் கற்றுக்கொண்ட பாடங்களைக் கடைப்பிடிக்கும்போதும் நமக்கு இரண்டு நன்மைகளாவது கிடைக்கும். முதலில், நாம் தனியாக இல்லை என்று புரிந்துகொள்வோம். அதாவது, நம்மைப் போலவே மற்றவர்களும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்றும், அதையெல்லாம் நல்லபடியாகச் சமாளித்திருக்கிறார்கள் என்றும் புரிந்துகொள்வோம். (1 பே. 5:9) அதோடு, பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.—ரோ. 15:4.

5. யெகோவா யாரையெல்லாம் பயன்படுத்தி நம்மை வழிநடத்துகிறார்?

5 இரண்டாவதாக, சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி யெகோவா நம்மை வழிநடத்துகிறார்.b உதாரணத்துக்கு, வட்டாரக் கண்காணிகள் சபைகளைத் தவறாமல் சந்தித்து உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் கொடுக்கிற பேச்சுகள் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன, ஒற்றுமையைக் கட்டிக்காக்கவும் உதவி செய்கின்றன. (அப். 15:40–16:5) அதேபோல், சபை மூப்பர்கள் ஒவ்வொரு பிரஸ்தாபியையும் ரொம்ப அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார்கள். (1 பே. 5:2, 3) பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வழிநடத்துகிறார்கள்; யெகோவாவை நேசிப்பதற்கும், சரியான முடிவுகளை எடுப்பதற்கும், நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வதற்கும் உதவி செய்கிறார்கள். (நீதி. 22:6) முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவப் பெண்கள் இளம் பெண்களுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள், நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள், அன்பாக அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.—தீத். 2:3-5.

6. யெகோவா கொடுக்கும் வழிநடத்துதலிலிருந்து நன்மையடைய நாம் என்ன செய்ய வேண்டும்?

6 இப்படி, நம்மை வழிநடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் யெகோவா செய்திருக்கிறார். அவற்றிலிருந்து நன்மையடைய நாம் என்ன செய்ய வேண்டும்? நீதிமொழிகள் 3:5, 6 சொல்வதுபோல், ‘யெகோவாவை முழு இதயத்தோடு நம்ப வேண்டும். நம்முடைய சொந்த புத்தியை நம்பக் கூடாது.’ அப்போது, “[நம்முடைய] வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.” அதாவது, நாம் நிறையப் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும், சந்தோஷமாக வாழ்வதற்கும் அவர் நமக்கு உதவி செய்வார். நம்மைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு, நம்மேல் அன்பு காட்டி, நம் ஒவ்வொருவருக்கும் தேவையான வழிநடத்துதலைக் கொடுக்கிற யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!—சங். 32:8.

யெகோவா நமக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்

7. நம்முடைய அன்றாடத் தேவைகளை யெகோவா எப்படிக் கவனித்துக்கொள்கிறார்? (பிலிப்பியர் 4:19, அடிக்குறிப்பு)

7 பிலிப்பியர் 4:19-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள். யெகோவா நமக்கு வழிநடத்துதலைக் கொடுப்பதோடு, நம்முடைய அன்றாடத் தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார்; அதாவது, உணவு, உடை, இடம் போன்ற தேவைகளுக்காக நாம் கடினமாக உழைப்பதை ஆசீர்வதிக்கிறார். (மத். 6:33; 2 தெ. 3:12) இந்த மாதிரி விஷயங்களுக்காக நாம் கவலைப்படுவது இயல்புதான். ஆனால், இவற்றுக்காக நாம் அளவுக்கு அதிகமாகக் கவலைப்படக் கூடாது என்று யெகோவா சொல்கிறார். (மத்தேயு 6:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஏன்? ஏனென்றால், நம்முடைய அன்பான அப்பா யெகோவா நம்மைக் கைவிடவே மாட்டார். (மத். 6:8; எபி. 13:5) நமக்குத் தேவையானதை கொடுப்பதாக அவர் சொல்வதை நாம் முழுமையாக நம்பலாம்.

8. தாவீதை யெகோவா எப்படிக் கவனித்துக்கொண்டார்?

8 தாவீதை யெகோவா எப்படியெல்லாம் கவனித்துக்கொண்டார் என்று யோசித்துப் பாருங்கள். தாவீது பல வருஷங்களாக சவுல் ராஜாவுக்குப் பயந்து நாடோடியாக இருந்தபோது, உயிர்வாழ அவருக்கும் அவருடைய ஆட்களுக்கும் தேவைப்பட்டதையெல்லாம் யெகோவா கொடுத்தார். அத்தனை வருஷங்களாக, யெகோவா தன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொண்டார் என்பதை யோசித்துப் பார்த்து தாவீது இப்படி எழுதினார்: “நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன். ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ, அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோ இதுவரை நான் பார்த்ததில்லை.” (சங். 37:25) தாவீதைப் போலவே நீங்களும், யெகோவா தன் மக்களை எவ்வளவு அன்பாகக் கவனித்துக்கொள்கிறார் என்பதைக் கண்ணாரப் பார்த்திருப்பீர்கள்.

9. இன்று பேரழிவு சமயங்களில் யெகோவா தன்னுடைய மக்களை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறார்? (படங்களையும் பாருங்கள்.)

9 பேரழிவு சமயங்களிலும் தன்னுடைய மக்களுக்குத் தேவையானதை யெகோவா கொடுக்கிறார். உதாரணத்துக்கு, முதல் நூற்றாண்டில் பஞ்சம் வந்த சமயத்தில், வேறு வேறு நாடுகளிலிருந்த கிறிஸ்தவர்கள் தேவையிலிருந்த தங்கள் சகோதர சகோதரிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்தார்கள். (அப். 11:27-30; ரோ. 15:25, 26) இன்றும் யெகோவாவின் மக்கள் அதேபோல் தாராள குணத்தைக் காட்டுகிறார்கள். பேரழிவு சமயத்தில், பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு உதவ யெகோவா மற்ற சகோதர சகோதரிகளைத் தூண்டுகிறார். அவர்கள் சாப்பாடு, தண்ணீர், துணிமணி, மருந்து மாத்திரை போன்றவற்றைக் கொடுத்து உதவுகிறார்கள். சேதமடைந்த வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் சரிசெய்து கொடுக்கிறார்கள். அதோடு, வீடுகளையோ அன்பானவர்களையோ இழந்தவர்களுக்கு உடனடியாக பைபிளிலிருந்து ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுக்கிறார்கள்.c

படங்களின் தொகுப்பு: மலாவியில் இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு நிவாரணப் பொருள்களும் ஆறுதலும் கிடைக்கின்றன. 1. வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெரிய பகுதி. 2. சகோதரர் கேஜ் ஃப்லீகில் சகோதர சகோதரிகளிடம் பேசுகிறார். 3. உணவுப் பொருள்கள் இருக்கும் பைகளைச் சகோதரர்கள் வண்டியிலிருந்து இறக்குகிறார்கள்.

பேரழிவு சமயங்களில் யெகோவா நமக்கு எப்படி ஆறுதல் தருகிறார்? (பாரா 9)e


10-11. போரீஸின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

10 தன்னை வணங்காதவர்களுக்கும் யெகோவா தாராளமாகக் கொடுக்கிறார். அதேமாதிரி நாமும் யெகோவாவை வணங்காத ஆட்களிடம் அன்பாக நடந்துகொள்ள வாய்ப்புகளைத் தேடுகிறோம். (கலா. 6:10) நிறைய சமயங்களில் இது நல்ல சாட்சியாகவும் அமைந்திருக்கிறது. போரீஸ் என்பவரின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் உக்ரைனில் ஒரு பள்ளியின் முதல்வராக இருந்தார். அந்தப் பள்ளியில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். போரீஸ் ஒரு யெகோவாவின் சாட்சியாக இல்லை என்றாலும், அந்தப் பிள்ளைகளை அவர் எப்போதும் அன்பாக நடத்தினார், அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மரியாதை கொடுத்தார். போர் நடந்த சமயத்தில், போரீஸ் தன்னுடைய கிராமத்தை விட்டுவிட்டு பாதுகாப்பான பகுதிக்குப் போக வேண்டுமென்று நினைத்தார். அப்போது, நம்முடைய சகோதரர்கள் அவருக்கு உதவி செய்தார்கள். அதன் பிறகு, இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். சகோதரர்கள் தனக்காகச் செய்ததையெல்லாம் யோசித்துப் பார்த்து அவர் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகள் என்னிடம் ரொம்ப அன்பாக நடந்துகொண்டார்கள், என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!”

11 தேவையில் இருக்கும் சகோதர சகோதரிகள்மேலும் மக்கள்மேலும் அன்பு காட்டுவதன் மூலம் நாம் எல்லாருமே நம்முடைய இரக்கமுள்ள அப்பாவான யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம். (லூக். 6:31, 36) மக்கள்மேல் நாம் காட்டும் அன்பு, இயேசுவின் சீஷர்களாக ஆவதற்கு அவர்களைத் தூண்டும் என்று நாம் நம்புகிறோம். (1 பே. 2:12) ஆனால், அப்படி நடந்தாலும் சரி, நடக்கவில்லை என்றாலும் சரி, கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை நாம் அனுபவிப்போம்.—அப். 20:35.

யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார்

12. ஒரு தொகுதியாகத் தன்னுடைய மக்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்? (சங்கீதம் 91:1, 2, 14)

12 சங்கீதம் 91:1, 2, 14-ஐ வாசியுங்கள். யெகோவாவோடு நாம் வைத்திருக்கிற நட்புக்கு எதுவும் ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்வதாக அவரே வாக்குக் கொடுத்திருக்கிறார். உண்மை வணக்கத்தைக் கறைபடுத்த சாத்தானை யெகோவா ஒருநாளும் அனுமதிக்க மாட்டார். (யோவா. 17:15) ‘மிகுந்த உபத்திரவத்தின்’ சமயத்தில், அவரோடு நாம் வைத்திருக்கும் நட்புக்கு மட்டுமல்ல, நமக்கும் எதுவும் ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்; அதை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று நாம் முழுமையாக நம்பலாம்.—வெளி. 7:9, 14.

13. நம் ஒவ்வொருவரையும் யெகோவா எப்படியெல்லாம் பாதுகாக்கிறார்?

13 தனிப்பட்ட விதமாக நம் ஒவ்வொருவரையும் யெகோவா எப்படியெல்லாம் பாதுகாக்கிறார்? எது சரி, எது தவறு என்று புரிந்துகொள்வதற்கு பைபிள் மூலம் யெகோவா நமக்கு உதவுகிறார். (எபி. 5:14) பைபிள் சொல்வதுபோல் நாம் வாழும்போது, நம்முடைய உடலையும், மனதையும், யெகோவாவோடு இருக்கும் பந்தத்தையும் பாதிக்கிற விஷயங்களிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். (சங். 91:4) சபை மூலமாகவும் யெகோவா நமக்குப் பாதுகாப்பு கொடுக்கிறார். (ஏசா. 32:1, 2) யெகோவாவை நேசிக்கிற, அவருடைய நியமங்களின்படி வாழ்கிற சகோதர சகோதரிகள் நம்மோடு இருப்பதால் நமக்கு உற்சாகம் கிடைக்கிறது, கெட்ட விஷயங்களை நம்மால் உறுதியாக எதிர்த்து நிற்கவும் முடிகிறது.—நீதி. 13:20.

14. (அ) நம்முடைய எல்லா கஷ்டங்களிலிருந்தும் யெகோவா ஏன் நம்மைப் பாதுகாப்பதில்லை? (ஆ) சங்கீதம் 9:10 என்ன நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

14 கடந்த காலங்களில், யெகோவா தன்னை வணங்கியவர்களின் உடலையும் உயிரையும் பாதுகாத்திருக்கிறார். ஆனால், எல்லா சமயங்களிலும் அவர் அப்படிச் செய்யவில்லை. ‘எதிர்பாராத சம்பவங்கள்’ யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பைபிள் சொல்கிறது. (பிர. 9:11) அதோடு, சாத்தான் ஒரு பொய்யன் என்று நிரூபிப்பதற்காக, தன்னுடைய ஊழியர்கள் சிலர் துன்புறுத்தலை அனுபவிப்பதற்கும் இறந்துபோவதற்கும்கூட யெகோவா அனுமதித்திருக்கிறார். (யோபு 2:4-6; மத். 23:34) அன்று யெகோவாவுடைய ஊழியர்களுக்கு நடந்த மாதிரியே இன்று நமக்கும் நடக்கலாம். நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் யெகோவா எடுத்துப்போடுவதில்லைதான். ஆனால், தன்மேல் அன்பு காட்டுகிறவர்களை அவர் ஒருநாளும் கைவிட மாட்டார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.d—சங். 9:10.

யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார்

15. ஜெபம், பைபிள், சகோதர சகோதரிகள் மூலமாக நமக்கு எப்படி ஆறுதல் கிடைக்கிறது? (2 கொரிந்தியர் 1:3, 4)

15 2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள். சிலசமயங்களில் நாம் கவலையில், வருத்தத்தில், அல்லது வேதனையில் இருக்கலாம். இப்போது நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்தால், உங்களுக்கென்று யாருமே இல்லாமல் தனியாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், உங்களுடைய உணர்ச்சிகளை யெகோவா புரிந்துகொள்கிறார். அவர் நம்மோடு சேர்ந்து வேதனைப்படுவது மட்டுமல்லாமல், ‘எல்லா சோதனைகளிலும் நமக்கு ஆறுதல் தருகிறார்.’ எப்படி? நாம் ஜெபம் செய்யும்போது ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானத்தை’ நமக்குத் தருகிறார். (பிலி. 4:6, 7) பைபிளில் இருக்கும் தன்னுடைய வார்த்தைகள் மூலமாகவும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார். யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்றும்... நாம் எப்படி ஞானமாக நடந்துகொள்ளலாம் என்றும்.... நமக்கு அவர் என்ன நம்பிக்கை கொடுத்திருக்கிறார் என்றும்... பைபிளில் அவர் சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவக் கூட்டங்களும் நமக்கு ஆறுதலைத் தருகின்றன. அங்கே பைபிள் விஷயங்களை நாம் கேட்பதாலும், நம்மை நேசிக்கிற சகோதர சகோதரிகளோடு இருப்பதாலும் நமக்கு உற்சாகம் கிடைக்கிறது.

16. நேதன்-பிரிசில்லா தம்பதியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

16 தன்னுடைய வார்த்தை மூலமாக யெகோவா நமக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் எப்படிக் கொடுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, அமெரிக்காவில் வாழ்கிற நேதன்-பிரிசில்லா தம்பதியின் அனுபவம் நமக்கு உதவி செய்யும். தேவை அதிகமுள்ள இடத்தில் போய் சேவை செய்ய வேண்டும் என்று கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு அவர்கள் முடிவு பண்ணினார்கள். “எங்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்று நாங்கள் நம்பினோம்” என்று நேதன் சொல்கிறார். ஆனால், அவர்களுடைய புது நியமிப்புக்குப் போன பிறகு, எதிர்பாராத விதமாக அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளும் பணப் பிரச்சினைகளும் வந்தன. கடைசியில், அவர்கள் திரும்பி வர வேண்டியதாகிவிட்டது. வந்த பிறகும் அவர்களுக்குப் பணப் பிரச்சினை இருந்துகொண்டேதான் இருந்தது. “யெகோவா ஏன் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி எங்களுக்கு உதவி செய்யவில்லை என்று யோசித்தேன். ஒருவேளை நான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டேனோ என்றுகூட நினைக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று நேதன் சொல்கிறார். ஆனால், அவர்கள் கஷ்டத்திலிருந்த சமயத்தில் யெகோவா அவர்களைக் கைவிடவில்லை என்பதை நேதனும் பிரிசில்லாவும் கொஞ்சக் காலத்தில் புரிந்துகொண்டார்கள். நேதன் இப்படிச் சொல்கிறார்: “கஷ்டமான சமயத்தில் பைபிள் ஒரு ஞானமான நண்பன்போல் இருந்து எங்களுக்கு உற்சாகத்தையும் வழிநடத்துதலையும் கொடுத்தது. எங்களுடைய பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் யெகோவா எங்களுக்கு எப்படி உதவி செய்தார் என்று யோசித்துப் பார்த்தது, இனிவரப்போகும் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் யெகோவா உதவி செய்வார் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.”

17. ஹெல்கா என்ற சகோதரிக்கு எப்படியெல்லாம் ஆறுதல் கிடைத்தது? (படத்தையும் பாருங்கள்.)

17 சகோதர சகோதரிகள் மூலமாகவும் யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார். எப்படி? ஹங்கேரியில் வாழ்கிற ஹெல்கா என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். பல வருஷங்களாக அவர் வித்தியாசமான பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருந்தார். அதனால், தான் எதற்குமே லாயக்கில்லை என்று நினைத்து கவலையில் மூழ்கிப்போயிருந்தார். ஆனால், அந்தச் சமயத்திலும் சகோதர சகோதரிகள் மூலம் யெகோவா அவருக்கு ஆறுதல் கொடுத்துவந்ததை இப்போது அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் சோர்ந்துபோயிருந்த சமயத்திலெல்லாம் யெகோவா எனக்கு உதவி செய்தார். உதாரணத்துக்கு, நான் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தபோது... உடம்பு சரியில்லாத என்னுடைய பிள்ளையைக் கவனித்துக்கொண்டிருந்தபோது... மற்ற பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தபோது... அவர் உதவி செய்தார். எனக்கு ஆறுதல் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியைக் கடந்த 30 வருஷங்களில் ஒருநாள்கூட அவர் நிறைவேற்றாமல் இருந்ததில்லை. மற்றவர்கள் சொல்கிற அன்பான, அர்த்தமுள்ள, உற்சாகப்படுத்துகிற வார்த்தைகள் மூலம் என்னை அடிக்கடி பலப்படுத்தியிருக்கிறார். எப்போதெல்லாம் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் ஒரு மெசேஜ், கார்டு, அல்லது பாராட்டு எனக்குக் கிடைத்திருக்கிறது.”

படங்களின் தொகுப்பு: வயதான ஒரு சகோதரருக்கு ஆறுதல் கிடைக்கிறது. 1. சின்னப் பிள்ளைகள் அவருக்கு வரைந்து கொடுத்த படங்களை அவர் பார்க்கிறார். 2. ஒரு சகோதரர் அவருக்கு மெசேஜ் அனுப்புகிறார். 3. ஒரு தம்பதி அவருக்கு மளிகைப் பொருள்களையும் பீட்சாவையும் கொண்டுவருகிறார்கள். 4. ஒரு சகோதரர் அவருக்கு ஃபோன் செய்கிறார். 5. பூஞ்சோலையில் ஒரு சிங்கம் இருப்பது போன்ற படத்தை ஒரு குட்டிப் பெண் அவருக்காக வரைகிறாள்.

பேரழிவு சமயங்களில் மற்றவர்களுக்கு ஆறுதல் தர யெகோவா உங்களை எப்படிப் பயன்படுத்தலாம்? (பாரா 17)


18. நாம் எப்படி மற்றவர்களை ஆறுதல்படுத்தலாம்?

18 மற்றவர்களை ஆறுதல்படுத்துவதன் மூலம் யெகோவா மாதிரியே நடந்துகொள்ளும் அருமையான வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. நாம் எப்படி மற்றவர்களை ஆறுதல்படுத்தலாம்? அவர்கள் பேசும்போது பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்கலாம், அவர்களிடம் ஆறுதலாகப் பேசலாம், நடைமுறையான சில உதவிகளையும் செய்யலாம். (நீதி. 3:27) கஷ்டத்தில் இருக்கிற எல்லாருக்கும், யெகோவாவை வணங்காதவர்களுக்கும்கூட, ஆறுதல் கொடுக்கத்தான் நாம் முயற்சி செய்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கிறவர்கள் துக்கத்தில் இருக்கலாம், உடல்நலப் பிரச்சினையால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம், அல்லது கவலையில் மூழ்கியிருக்கலாம். அந்த மாதிரி சமயங்களில் நாம் அவர்களைப் போய்ப் பார்க்கிறோம், அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறோம், பைபிளிலிருந்து உற்சாகமான சில வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்கிறோம். ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாக’ இருக்கும் யெகோவா மாதிரியே நாம் நடந்துகொள்ளும்போது நம்முடைய சகோதர சகோதரிகள் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு நம்மால் உதவி செய்ய முடியும். அதுமட்டுமல்ல, யெகோவாவை வணங்காதவர்களும் தூய வணக்கத்தின் பக்கம் வருவதற்கு நம்மால் உதவ முடியும்.—மத். 5:16.

யெகோவா எப்போதும் நம்மோடு இருக்கிறார்

19. யெகோவா நமக்காக என்ன செய்கிறார், நாம் எப்படி அவரை மாதிரியே நடந்துகொள்ளலாம்?

19 தன்மேல் அன்பு வைத்திருக்கிற ஒவ்வொருவர் மேலும் யெகோவா ரொம்ப அக்கறை காட்டுகிறார். நாம் கஷ்டத்தில் தவிக்கும்போது அவர் ஒருநாளும் நம்மைக் கைவிட மாட்டார். பெற்றோர் தங்கள் பிள்ளையை அன்பாகக் கவனித்துக்கொள்வதுபோல் யெகோவாவும் தன்னை வணங்குகிறவர்களைக் கவனித்துக்கொள்கிறார். அவர் நம்மை வழிநடத்துகிறார், நமக்குத் தேவையானதைக் கொடுக்கிறார், நம்மைப் பாதுகாக்கிறார், நமக்கு ஆறுதல் தருகிறார். நம்முடைய அன்பான அப்பா யெகோவா மாதிரியே நாம் நடந்துகொள்ளும்போது கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுக்க முடியும். இந்த உலகத்தில் இருக்கும்வரை நமக்குக் கஷ்டங்களும் கவலைகளும் வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக இருக்கலாம்: யெகோவா நம்மோடு இருக்கிறார்! “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்” என்று அவரே நம்மிடம் சொல்லியிருக்கிறார். (ஏசா. 41:10) இந்த வார்த்தைகள் எவ்வளவு நம்பிக்கையைக் கொடுக்கின்றன! நாம் ஒருநாளும் தனியாக இல்லை என்பதில் சந்தேகமே இல்லை.

யெகோவா எப்படியெல்லாம் . . .

  • நம்மை வழிநடத்துகிறார்?

  • நமக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்?

  • நம்மைப் பாதுகாக்கிறார், நமக்கு ஆறுதல் தருகிறார்?

பாட்டு 100 தாராளமாக உபசரிப்போம்

a ஏப்ரல் 15, 2011 காவற்கோபுரத்தில் வெளிவந்த “நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

b காவற்கோபுரம் பிப்ரவரி 2024-ல் வெளிவந்த “யெகோவா காட்டும் வழியில் தொடர்ந்து நடங்கள்” என்ற கட்டுரையில் பாராக்கள் 11-14-ஐப் பாருங்கள்.

c jw.org-ல் சமீபத்தில் வந்த உதாரணங்களைக் கண்டுபிடிக்க, “தேடவும்” பகுதியில் “பேரழிவு நிவாரணம்” என்று டைப் செய்து பாருங்கள்.

d காவற்கோபுரம் பிப்ரவரி 2017-ல், “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

e படவிளக்கம்: மலாவியில் இயற்கைப் பேரழிவுக்குப் பிறகு சகோதர சகோதரிகளுக்கு சாப்பாடும், மற்ற பொருள்களும், ஆறுதலும் கிடைக்கின்றன.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்