படிப்புக் கட்டுரை 19
பாட்டு 6 வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது
உண்மையுள்ள தேவதூதர்களைப் போல் நடந்துகொள்ளுங்கள்
“யெகோவாவின் பலம்படைத்த தூதர்களே . . . நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.”—சங். 103:20.
என்ன கற்றுக்கொள்வோம்?
உண்மையுள்ள தேவதூதர்களிடமிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.
1-2. (அ) தேவதூதர்களுக்கும் நமக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன? (ஆ) என்னென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?
யெகோவா உங்களைச் சத்தியத்துக்குள் இழுத்தபோது ஒரு அன்பான பெரிய குடும்பத்தின் பாகமாக ஆகிற வாய்ப்பைக் கொடுத்தார். அந்தக் குடும்பத்தில் கோடிக்கணக்கான உண்மையுள்ள தேவதூதர்களும் இருக்கிறார்கள். (தானி. 7:9, 10) தேவதூதர்களைப் பற்றி யோசிக்கும்போது அவர்கள் நம்மைவிட ரொம்ப வித்தியாசமானவர்கள் என்று யோசித்திருப்போம். அவர்கள் நம்மைவிட ரொம்பக் காலமாக உயிர் வாழ்கிறார்கள். (யோபு 38:4, 7) அவர்களுக்கு நிறைய சக்தி இருக்கிறது, நம்மைவிட ரொம்பப் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நடந்துகொள்கிறார்கள். பாவமுள்ள மனிதர்களாக இருப்பதால் நம்மால் அந்தளவுக்கு இருக்க முடிவதில்லை.—லூக். 9:26.
2 இந்த மாதிரி நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் நமக்கும் தேவதூதர்களுக்கும் நிறைய ஒற்றுமைகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, அவர்களை மாதிரியே நம்மாலும் யெகோவாவுடைய குணங்களைக் காட்ட முடியும். தேவதூதர்களை மாதிரியே நமக்கும் சொந்தமாக யோசித்து முடிவெடுக்கிற சுதந்திரம் இருக்கிறது. அவர்களை மாதிரியே நமக்கும் சொந்தமாக பெயர் இருக்கிறது, வித்தியாசமான சுபாவங்களும், பொறுப்புகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, கடவுளை வணங்க வேண்டும் என்ற ஒரு தேவை அவர்களுக்கு இருக்கிற மாதிரியே நமக்கும் இருக்கிறது.—1 பே. 1:12.
3. தேவதூதர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
3 தேவதூதர்களுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதால் அவர்களுடைய நல்ல உதாரணத்திலிருந்து நம்மால் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அவை நம்மை உற்சாகப்படுத்தும். தேவதூதர்களை மாதிரியே நாம் எப்படி மனத்தாழ்மையாக இருக்கலாம், மக்கள்மேல் அன்பு காட்டலாம், சகித்திருக்கலாம், சபை சுத்தமாக இருப்பதற்கு முயற்சிகள் எடுக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
தேவதூதர்கள் மனத்தாழ்மையாக இருக்கிறார்கள்
4. (அ) தேவதூதர்கள் எப்படி மனத்தாழ்மையைக் காட்டுகிறார்கள்? (ஆ) ஏன் மனத்தாழ்மையாக இருக்கிறார்கள்? (சங்கீதம் 89:7)
4 தேவதூதர்களுக்கு நிறைய அனுபவமும் சக்தியும் ஞானமும் இருக்கிறது. இருந்தாலும், அவர்கள் யெகோவாவுக்கு அப்படியே கீழ்ப்படிகிறார்கள். (சங். 103:20) இப்படி அவர்கள் மனத்தாழ்மையைக் காட்டுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கிற நியமிப்புகளைப் பற்றி அவர்கள் பெருமையடிப்பது இல்லை. தங்களுக்கு இருக்கிற அசாதாரண சக்தியைப் பகட்டாகக் காட்டிக்கொள்வதில்லை. தங்கள் பெயர் வெளியே தெரியவில்லை என்றால்கூட யெகோவா கொடுத்த வேலையைச் சந்தோஷமாகச் செய்கிறார்கள்.a (ஆதி. 32:24, 29; 2 ரா. 19:35) யெகோவாவுக்குப் போய்ச்சேர வேண்டிய மகிமையை அவர்கள் என்றைக்குமே ஏற்றுக்கொள்வதில்லை. தேவதூதர்கள் ஏன் இவ்வளவு மனத்தாழ்மையாக இருக்கிறார்கள்? ஏனென்றால், அவர்கள் யெகோவாமேல் ரொம்ப அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.—சங்கீதம் 89:7-ஐ வாசியுங்கள்.
5. அப்போஸ்தலன் யோவானைத் திருத்திய ஒரு தேவதூதர் எப்படி மனத்தாழ்மையாக நடந்துகொண்டார்? (படத்தையும் பாருங்கள்.)
5 தேவதூதர்கள் எவ்வளவு மனத்தாழ்மையாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். கி.பி. 96-ல், பெயர் சொல்லப்படாத ஒரு தேவதூதர், ஒரு பிரம்மாண்டமான தரிசனத்தை அப்போஸ்தலன் யோவானுக்குக் காட்டினார். (வெளி. 1:1) அப்போது யோவான் என்ன செய்தார்? அந்தத் தேவதூதரை வணங்குவதற்காக காலில் விழுந்தார். ஆனால், அந்தத் தேவதூதர் அவரை உடனடியாகத் தடுத்தார். “வேண்டாம்! அப்படிச் செய்யாதே! உன்னைப் போலவும் . . . உன் சகோதரர்களைப் போலவும் நானும் ஓர் அடிமைதான்; கடவுளை மட்டும் வணங்கு!” என்று சொன்னார். (வெளி. 19:10) எவ்வளவு மனத்தாழ்மை பார்த்தீர்களா! அந்தத் தேவதூதர், பெயர் புகழைச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. யெகோவாவை வணங்கச் சொல்லி யோவானிடம் உடனடியாகச் சொன்னார். அதேசமயத்தில், அவர் யோவானைத் தாழ்வாகவும் பார்க்கவில்லை. சொல்லப்போனால், யோவானைவிட அவர் ரொம்பக் காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்துவருகிறார். யோவானைவிட அவருக்கு நிறைய சக்தியும் இருந்தது. இருந்தாலும், ‘உன்னை மாதிரியே நானும் ஒரு அடிமைதான்’ என்று சொன்னார். யோவானைத் திருத்த வேண்டியிருந்தாலும் அவரைத் திட்டவில்லை, மரியாதையில்லாமல் நடத்தவில்லை. அதற்குப் பதிலாக, அவரிடம் அன்பாகப் பேசினார். அந்தத் தரிசனத்தைப் பார்த்து யோவான் பிரமித்துப் போனதால்தான் அப்படி நடந்துகொண்டார் என்பது அவருக்குப் புரிந்திருக்கலாம்.
யோவானிடம் தேவதூதர் மனத்தாழ்மையாக நடந்துகொண்டார் (பாரா 5)
6. நாம் எப்படித் தேவதூதர்களை மாதிரியே மனத்தாழ்மையாக நடந்துகொள்ளலாம்?
6 நாம் எப்படித் தேவதூதர்கள் மாதிரியே மனத்தாழ்மையாக நடந்துகொள்ளலாம்? நமக்கு இருக்கிற பொறுப்புகளைப் பற்றிப் பெருமையடிக்காமல் இருக்கலாம். ஒரு நியமிப்பைச் செய்யும்போது அதை நம்முடைய சொந்தத் திறமையால் செய்த மாதிரி காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். (1 கொ. 4:7) ஒருவேளை, மற்றவர்களைவிட நாம் ரொம்ப நாளாக யெகோவாவுக்குச் சேவை செய்திருக்கலாம். அல்லது, நமக்குச் சில பொறுப்புகள் இருக்கலாம். அதற்காக, நம்மையே பெரிய ஆட்களாக நினைத்துக்கொள்ளக் கூடாது. சொல்லப்போனால், நமக்கு எந்தளவுக்குப் பொறுப்புகள் கிடைக்கிறதோ அந்தளவுக்கு நம்மைத் தாழ்வாகப் பார்க்க வேண்டும். (லூக். 9:48) தேவதூதர்கள் மாதிரியே நாமும் மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதனால், நம்மைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளக் கூடாது.
7. ஆலோசனை கொடுக்கும்போது நாம் எப்படி மனத்தாழ்மையைக் காட்டலாம்?
7 சகோதர சகோதரிகளுக்கோ, நம்முடைய பிள்ளைகளுக்கோ ஆலோசனை கொடுக்கும்போதுகூட நாம் மனத்தாழ்மையைக் காட்டலாம். ஆலோசனை கொடுக்கும்போது, சிலசமயங்களில் விஷயங்களை நேரடியாக நாம் சொல்ல வேண்டியிருக்கலாம். ஆனால், அந்தத் தேவதூதர் மாதிரி நாம் அதை அன்பாகச் சொல்ல வேண்டும். கேட்கிறவர்களுடைய மனதை நோகடித்துவிடாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் மனத்தாழ்மையாக இருந்தால், பைபிளிலிருந்து ஆலோசனை கொடுப்போம். அதை அன்பாகவும் மரியாதையாகவும் கொடுப்போம்.—கொலோ. 4:6.
தேவதூதர்கள் மனிதர்களை நேசிக்கிறார்கள்
8. (அ) மக்கள்மேல் தேவதூதர்களுக்கு அன்பு இருப்பதை லூக்கா 15:10 எப்படிக் காட்டுகிறது? (ஆ) பிரசங்க வேலையில் தேவதூதர்கள் எப்படி உதவி செய்கிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
8 ‘நம் உலகம் வேறு, மனிதர்கள் உலகம் வேறு. நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று தேவதூதர்கள் நினைப்பதில்லை. அவர்களுக்கு மனிதர்களை ரொம்பப் பிடிக்கும். பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தி யெகோவாவிடம் வரும்போது அல்லது ஒருவர் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு சத்தியத்துக்குள் வரும்போது அவர்கள் ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள். (லூக்கா 15:10-ஐ வாசியுங்கள்.) பிரசங்க வேலையிலும் அவர்கள் சுறுசுறுப்பாக உதவி செய்கிறார்கள். (வெளி. 14:6) மக்களிடம் அவர்கள் நேரடியாகப் போய் நல்ல செய்தியைச் சொல்வதில்லைதான். இருந்தாலும், ஒருவர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் அவரிடம் தேவதூதர்கள் நம்மை வழிநடத்துகிறார்கள். அதற்காக, ஒவ்வொரு சமயத்திலும் தேவதூதர்கள் தலையிடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், யெகோவா மற்ற வழிகளிலும் நமக்கு உதவுகிறார். உதாரணத்துக்கு, தன்னுடைய சக்தியைப் அவர் பயன்படுத்தலாம். தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள நினைக்கிற ஆட்களுக்கு உதவவும், நம்மை அவர்களிடம் வழிநடத்தவும் அவர் அதைப் பயன்படுத்தலாம். (அப். 16:6, 7) இருந்தாலும், அவர் தேவதூதர்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார். அதனால், ஊழியம் செய்யும்போது, நமக்குத் துணையாகத் தேவதூதர்கள் இருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.—“அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைத்தது” என்ற பெட்டியைப் பாருங்கள்.b
ஒரு தம்பதி பொது ஊழியம் செய்துவிட்டு வீட்டுக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். போகிற வழியில் ஒரு பெண் ரொம்பச் சோகமாக இருப்பதை அந்தச் சகோதரி பார்க்கிறார். உதவி தேவைப்படுகிறவர்களிடம் பேச, தேவதூதர்களால் நம்மைத் தூண்ட முடியும் என்பதைப் புரிந்துகொண்டு அந்தச் சகோதரி அந்த பெண்ணிடம் ஆறுதலாகப் பேச நினைக்கிறார் (பாரா 8)
9. மக்கள்மேல் நாம் எப்படி அன்பு காட்டலாம்?
9 தேவதூதர்கள் மாதிரியே நாம் எப்படி மக்கள்மேல் அன்பு காட்டலாம்? சபையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் மறுபடியும் நிலைநாட்டப்பட்டதாக ஒரு அறிவிப்பைக் கேட்டால், தேவதூதர்களை மாதிரியே நாமும் ரொம்பச் சந்தோஷப்படலாம். அவரை அன்பாக வரவேற்கலாம். அவர்மேல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டலாம். (லூக். 15:4-7; 2 கொ. 2:6-8) தேவதூதர்கள் மாதிரியே மக்கள்மேல் அன்பு காட்டுவதற்கான இன்னொரு வழி: சுறுசுறுப்பாக ஊழியம் செய்வது. (பிர. 11:6) ஊழியத்தை நன்றாகச் செய்ய தேவதூதர்கள் எப்படி நமக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ, அதேமாதிரி நாமும் மற்ற சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம். உதாரணத்துக்கு, புதிதாக பிரஸ்தாபிகளாக ஆனவர்களோடு சேர்ந்து நாம் ஊழியம் செய்யலாம். உடம்பு முடியாத அல்லது வயதான சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யலாம்.
10. சகோதரி சாராவின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
10 சூழ்நிலைகள் மாறுவதால் முன்பு செய்த அளவுக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியாமல் போய்விடலாம். அந்த மாதிரி ஒரு சமயத்தில்கூட, தேவதூதர்களோடு சேர்ந்து உழைப்பதற்குக் கண்டிப்பாக நமக்கு வாய்ப்பு இருக்கும். இந்தியாவில் இருக்கிற சாராc என்ற சகோதரியின் அனுபவம் அதைத்தான் காட்டுகிறது. அவர் 20 வருஷங்களுக்குமேல் பயனியர் ஊழியம் செய்துகொண்டிருந்தார். ஆனால், திடீரென்று அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். அதனால் ரொம்பச் சோர்ந்துபோய்விட்டார். சபையில் இருந்த சகோதர சகோதரிகள் கொடுத்த உதவியாலும் தொடர்ந்து பைபிளை வாசித்ததாலும் இழந்த சந்தோஷம் அவருக்கு மறுபடியும் கிடைத்தது. புது சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி சாரா ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவரால் எழுந்து உட்கார்ந்து கடிதங்கள்கூட எழுத முடியாது; ஃபோன் வழியாக மட்டும்தான் பேச முடிந்தது. அதனால், அவருடைய மறுசந்திப்புகள் எல்லாருக்கும் ஃபோன் பண்ணினார். அவர்களும், யாருக்கெல்லாம் பைபிள் படிக்க ஆர்வம் இருந்ததோ அவர்களைப் பற்றிச் சகோதரி சாராவிடம் சொன்னார்கள். சில மாதங்களிலேயே, சகோதரி சாராவுக்கு 70 பைபிள் படிப்புகள் கிடைத்தன! இவர்கள் எல்லாருக்குமே அவரால் படிப்பு எடுக்க முடியவில்லை. அதனால், சபையில் இருந்தவர்களுக்குக் கொஞ்சம் பைபிள் படிப்புகளைக் கொடுத்தார். இப்போது அவர்களில் நிறைய பேர் கூட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். சகோதரி சாரா மாதிரி ஊழியத்தை வைராக்கியமாக செய்கிறவர்களோடு சேர்ந்து உழைப்பதை நினைத்து தேவதூதர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்!
தேவதூதர்கள் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறார்கள்
11. உண்மையுள்ள தேவதூதர்கள் எப்படிச் சகிப்புத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள்?
11 சகிப்புத்தன்மையைக் காட்டுவதில் உண்மையுள்ள தேவதூதர்கள் தலைசிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாக அநியாயத்தையும் கெட்ட விஷயங்களையும் அவர்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் சாத்தானும் பொல்லாத தேவதூதர்களும் இவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு, அவர்கள் யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்ததைப் பார்த்தார்கள். (ஆதி. 3:1; 6:1, 2; யூ. 6) ஒரு சக்திவாய்ந்த கெட்ட தேவதூதன், உண்மையுள்ள தேவதூதர் ஒருவரை நேரடியாக எதிர்த்தான் என்றுகூட பைபிள் சொல்கிறது. (தானி. 10:13) அதுமட்டுமல்ல, மனித சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், கொஞ்சம் பேர்தான் உண்மை வணக்கத்தின் பக்கம் வந்திருக்கிறார்கள். இதுகூட உண்மையுள்ள தேவதூதர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், இந்த எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்குச் சந்தோஷமாகவும் வைராக்கியமாகவும் சேவை செய்கிறார்கள். சரியான நேரத்தில் யெகோவா எல்லா அநியாயத்தையும் எடுத்துப்போடுவார் என்று அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
12. சகித்திருக்க எது நமக்கு உதவும்?
12 தேவதூதர்கள் மாதிரி நாம் எப்படிச் சகிப்புத்தன்மையைக் காட்டலாம்? அவர்களை மாதிரியே நாமும் அநியாயத்தையும் எதிர்ப்பையும் ஒருவேளை சந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் சரியான நேரத்தில் யெகோவா சரிசெய்வார் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். உண்மையுள்ள தேவதூதர்களைப் போல் “நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.” (கலா. 6:9) பிரச்சினைகளைச் சகித்திருப்பதற்கு உதவி செய்வதாக யெகோவாவும் வாக்கு கொடுத்திருக்கிறார். (1 கொ. 10:13) யெகோவாவுடைய சக்திக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். ஏனென்றால், அவருடைய சக்தி பொறுமையை வளர்த்துக்கொள்ளவும் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளவும் உதவும். (கலா. 5:22; கொலோ. 1:11) இப்போது நீங்கள் ஏதாவது எதிர்ப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவை முழுமையாக நம்புங்கள், பயப்படாதீர்கள்! யெகோவா உங்களுக்கு எப்போதுமே துணையாக இருப்பார், உங்களைப் பலப்படுத்துவார்.—எபி. 13:6.
சபை சுத்தமாக இருக்க தேவதூதர்கள் உதவுகிறார்கள்
13. இந்தக் கடைசி நாட்களில் தேவதூதர்களுக்கு என்ன விசேஷமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது? (மத்தேயு 13:47-49)
13 இந்தக் கடைசி நாட்களில் தேவதூதர்களுக்கு யெகோவா விசேஷமான ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 13:47-49-ஐ வாசியுங்கள்.) நாம் செய்கிற ஊழிய வேலையால் வித்தியாசமான மக்கள் சத்தியத்தின் பக்கம் வருகிறார்கள். அவர்களில் சிலர், உண்மையிலேயே கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறார்கள். வேறு சிலர், அப்படிச் செய்வதில்லை. ‘நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தனியாகப் பிரிக்கிற’ வேலையை யெகோவா தேவதூதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதாவது, சபையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதற்காக, யெகோவாவை விட்டுப்போன ஒருவர் மறுபடியும் வரவே முடியாது என்று அர்த்தம் கிடையாது. சபைக்குள் பிரச்சினைகளே வராது என்றும் அர்த்தம் கிடையாது. இருந்தாலும், சபை சுத்தமாக இருப்பதற்காகத் தேவதூதர்கள் கடினமாக உழைக்கிறார்கள் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.
14-15. சபை சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைத் தேவதூதர்கள் மாதிரி நாம் எப்படிக் காட்டலாம்? (படங்களையும் பாருங்கள்.)
14 சபை சுத்தமாக இருப்பதற்குத் தேவதூதர்களை மாதிரியே நாம் எப்படி உதவி செய்யலாம்? யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தைப் பலமாக வைத்துக்கொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டும். அவரை நேசிக்கிறவர்களை நம்முடைய நண்பர்களாக வைத்துக்கொள்ள வேண்டும். அவருக்குப் பிடிக்காத எதையுமே செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சபை சுத்தமாக இருப்பதற்கு நாமும் உதவுகிறோம் என்று அர்த்தம். (சங். 101:3) அதோடு, நம்முடைய சகோதர சகோதரிகளும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நாம் உதவலாம். ஒருவேளை, சபையில் இருக்கிற ஒருவர் பெரிய பாவத்தைச் செய்துவிட்டதாக நமக்குத் தெரியவந்தால் என்ன செய்ய வேண்டும்? அவரை மூப்பர்களிடம் போய் பேச சொல்ல வேண்டும். அவர்மேல் அன்பு இருப்பதால்தான் இதை நாம் செய்ய சொல்கிறோம். அவர் அப்படிச் செய்யவில்லை என்றால் மூப்பர்களிடம் நாமே அந்த விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும். யெகோவாவோடு இருக்கிற பந்தம் யாருக்குப் பலவீனமாக இருக்கிறதோ அவர்கள் சீக்கிரமாக மூப்பர்களுடைய உதவியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம்!—யாக். 5:14, 15.
15 யாராவது பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் அவர்கள் சபையில் இருந்து நீக்கப்பட வேண்டிய அவசியம் வரலாம். அந்த மாதிரி சமயத்தில் அவர்களோடு “பழகுவதை விட்டுவிட வேண்டும்.”d (1 கொ. 5:9-13) இப்படி ஒரு ஏற்பாடு இருப்பதால் சபை சுத்தமாக இருக்கிறது. சபையில் இருந்து நீக்கப்பட்டவர்களோடு நாம் பழகாமல் இருப்பதன் மூலம் உண்மையில் அவர்களுக்கு உதவிதான் செய்கிறோம். இந்த விஷயத்தில் நாம் உறுதியாக இருந்தால், யெகோவாவிடம் திரும்பி வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரலாம். அவர்கள் அப்படித் திரும்பி வந்தால், யெகோவாவோடும் தேவதூதர்களோடும் சேர்ந்து நாமும் ரொம்பச் சந்தோஷப்படுவோம்.—லூக். 15:7.
ஒரு சகோதரரோ சகோதரியோ மோசமான பாவம் செய்திருப்பது தெரியவந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? (பாரா 14)e
16. தேவதூதர்களை எப்படிப் பின்பற்றலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
16 தேவதூதர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் அவர்களோடு சேர்ந்து உழைப்பதற்கும் யெகோவா நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இது நமக்குக் கிடைத்த கௌரவம்! தேவதூதர்களிடம் இருக்கிற நல்ல குணங்களை நாமும் பின்பற்றலாம். அவர்களை மாதிரியே மனத்தாழ்மையைக் காட்டலாம், மக்கள்மேல் அன்பு காட்டலாம், சகிப்புத்தன்மையைக் காட்டலாம், சபை சுத்தமாக இருக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம். உண்மையுள்ள தேவதூதர்களை மாதிரி நாமும் நடந்துகொண்டால் என்றென்றும் யெகோவாவுடைய குடும்பத்தில் ஒருவராக இருப்போம்.
பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்
a கோடிக்கணக்கான தேவதூதர்கள் இருந்தாலும், இரண்டு பேருடைய பெயர்கள்தான் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள், மிகாவேல் மற்றும் காபிரியேல்.—தானி. 12:1; லூக். 1:19.
b இன்னும் நிறைய அனுபவங்களைத் தெரிந்துகொள்ள உவாட்ச்டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸில் (ஆங்கிலம்), “தேவதூதர்கள்” என்ற தலைப்பில் “தேவதூதர்களின் வழிநடத்துதல் (உதாரணங்கள்)” என்ற பகுதியைப் பாருங்கள்.
c பெயர் மாற்றப்பட்டுள்ளது.
d 2024 ஆளும் குழுவின் அறிக்கை #2-ல் விளக்கப்பட்டதுபோல், சபையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, அவருக்கு ஒரு சுருக்கமான வாழ்த்து சொல்லி அவரை வரவேற்கலாமா என்பதை, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி ஒரு பிரஸ்தாபி முடிவு செய்யலாம்.
e படவிளக்கம்: ஒரு சகோதரி, மூப்பர்களிடம் போய்ப் பேசச் சொல்லி தன்னுடைய ஃப்ரண்டிடம் சொல்கிறார். ஆனால், கொஞ்ச நாட்கள் கடந்த பிறகும் அந்த ஃப்ரண்டு அப்படிச் செய்யாததால், தானே மூப்பர்களிடம் போய் அந்த விஷயத்தைப் பற்றிச் சொல்கிறார்.