உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 மே பக். 8-13
  • யெகோவா ஆறுதல் தருகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா ஆறுதல் தருகிறார்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா இரக்கத்தோடு நம்மை மன்னிக்கிறார்
  • யெகோவா நம்பிக்கை கொடுக்கிறார்
  • பயப்படாமல் நிதானமாக இருக்க யெகோவா உதவுகிறார்
  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • நாம் ஒருநாளும் தனியாக இல்லை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 மே பக். 8-13

படிப்புக் கட்டுரை 20

பாட்டு 7 யெகோவாவே என் பலம்

யெகோவா ஆறுதல் தருகிறார்

“[கடவுளுக்கு] புகழ் சேரட்டும். அவர்தான் கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன். எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.”—2 கொ. 1:3.

என்ன கற்றுக்கொள்வோம்?

பாபிலோனுக்கு அடிமைகளாக போகவிருந்த யூதர்களை யெகோவா எப்படி ஆறுதல்படுத்தினார் என்றும் அதிலிருந்து நமக்கு என்ன பாடம் என்றும் கற்றுக்கொள்வோம்.

1. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்களுடைய நிலைமை எப்படி இருந்தது?

பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! அவர்களுடைய சொந்த நாடு அழிவதை அவர்கள் பார்த்தார்கள். அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் செய்த பாவத்தால், வேறொரு தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். (2 நா. 36:15, 16, 20, 21) பாபிலோனில் அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருந்தது உண்மைதான். (எரே. 29:4-7) ஆனாலும், அவர்களுடைய வாழ்க்கை சுலபமாக இருந்திருக்காது. அங்கே வாழ்வதைப் பற்றி அவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்! நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்: “பாபிலோனின் ஆறுகளுக்குப் பக்கத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். சீயோனை நினைத்து அழுதோம்.” (சங். 137:1) அவர்கள் எவ்வளவு சோர்ந்துபோயிருந்தார்கள்! அவர்களுக்குக் கண்டிப்பாக ஆறுதல் தேவைப்பட்டிருக்கும். ஆனால், ஆறுதல் எங்கிருந்து கிடைக்கும்?

2-3. (அ) நாடுகடத்தப்படவிருந்த யூதர்களுக்காக யெகோவா என்ன செய்தார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

2 யெகோவா “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.” (2 கொ. 1:3) அவர் தன்னுடைய மக்களை நேசிக்கிறார்; அவர்களை ஆறுதல்படுத்துவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட பிறகு, சிலர் தாங்கள் செய்த தவறை உணர்ந்து தன்னிடம் மறுபடியும் வருவார்கள் என்று யெகோவாவுக்குத் தெரியும். (ஏசா. 59:20) அதனால்தான், அவர்கள் நாடுகடத்தப்படுவதற்குக் கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு முன்பே ஏசாயா மூலமாக யெகோவா அவர்களுக்குச் சில விஷயங்களைச் சொன்னார். அவற்றையெல்லாம் ஏசாயா தன்னுடைய பெயர் தாங்கிய புத்தகத்தில் பதிவு செய்தார். அதில் இப்படி எழுதியிருந்தார்: “‘ஆறுதல் சொல்லுங்கள், என் ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்’ என்று உங்கள் கடவுள் சொல்கிறார்.” (ஏசா. 40:1) நாடுகடத்தப்படவிருந்த யூதர்களுக்குத் தேவையான ஆறுதலை யெகோவா ஏசாயா மூலம் ஏற்கெனவே கொடுத்தார்.

3 அந்த யூதர்களை ஆறுதல்படுத்துவதற்கு யெகோவா மூன்று விஷயங்களைச் செய்தார்: (1) மனம் திருந்துகிறவர்களை மன்னிக்கப்போவதாக வாக்குக் கொடுத்தார், (2) அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார், (3) அவர்கள் பயப்படாமல் நிதானமாக இருக்க உதவினார். இந்த விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். யூதர்களை ஆறுதல்படுத்தியது மாதிரியே யெகோவா நம்மை எப்படி ஆறுதல்படுத்துகிறார் என்றும் பார்ப்போம்.

யெகோவா இரக்கத்தோடு நம்மை மன்னிக்கிறார்

4. யெகோவா இரக்கமுள்ள கடவுள் என்பதை எப்படிக் காட்டினார்? (ஏசாயா 55:7)

4 யெகோவா “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்.” (2 கொ. 1:3) நாடுகடத்தப்பட்டவர்கள் மனம் திருந்தினால், அவர்களை மன்னிக்கப்போவதாக வாக்குக் கொடுப்பதன் மூலம் யெகோவா அவர்களுக்கு இரக்கம் காட்டினார். (ஏசாயா 55:7-ஐ வாசியுங்கள்.) அவர் இப்படிச் சொன்னார்: “என்றென்றுமே உனக்கு மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுவேன்.” (ஏசா. 54:8) யூதர்கள் தாங்கள் செய்த பாவத்துக்கான பலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும், அவர்கள் பாபிலோனிலேயே எப்போதும் இருந்துவிட மாட்டார்கள் என்றும், கொஞ்ச காலத்துக்குப் பிறகு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருவார்கள் என்றும் யெகோவா வாக்குக் கொடுத்தார். (ஏசா. 40:2) நாடுகடத்தப்பட்ட பிறகு மனம் திருந்திய யூதர்களுக்கு யெகோவாவின் வாக்குறுதி எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!

5. யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்ற உண்மையை அன்றிருந்த யூதர்களைவிட இன்று நம்மால் ஏன் உறுதியாக நம்ப முடிகிறது?

5 நமக்கு என்ன பாடம்? யெகோவா தன்னுடைய மக்களை முழுமையாக மன்னிக்கத் தயாராக இருக்கிறார். இது உண்மை என்பதை அன்றிருந்த யூதர்களைவிட இன்று நம்மால் நிச்சயமாக சொல்ல முடியும். ஏன்? நம்மை மன்னிக்க யெகோவா என்ன செய்திருக்கிறார் என்று நமக்குத் தெரியும். ஏசாயா வாழ்ந்து பல நூறு வருஷங்கள் கழித்து, யெகோவா தன்னுடைய ஒரே மகனைப் பூமிக்கு அனுப்பினார்; மனம் திருந்துகிற பாவிகளுக்காக தன்னுடைய மகனின் உயிரை மீட்புவிலையாகக் கொடுத்தார். அந்தப் பலியின் அடிப்படையில் யெகோவா நம்முடைய பாவங்களை முழுமையாக ‘துடைத்தழிக்கிறார்.’ (அப். 3:19; ஏசா. 1:18; எபே. 1:7) எவ்வளவு இரக்கமுள்ள கடவுளை நாம் வணங்குகிறோம்!

6. யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி யோசிப்பது நமக்கு ஏன் ஆறுதலாக இருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

6 நாம் குற்றவுணர்ச்சியால் தவித்துக்கொண்டிருந்தால், ஏசாயா 55:7-ல் இருக்கும் வார்த்தைகள் ஆறுதலைக் கொடுக்கும். நம்மில் சிலர், மனம் திருந்திய பிறகும்கூட குற்றவுணர்ச்சியால் தவித்துக்கொண்டு இருக்கலாம். அதுவும், நாம் செய்த தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளை அனுபவித்துக்கொண்டு இருக்கும்போது, அது இன்னும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், பாவத்தை ஒத்துக்கொண்டு நம்மையே மாற்றியிருந்தால், யெகோவா நம்மை மன்னித்திருப்பார் என்பதில் உறுதியாக இருக்கலாம். அப்படி மன்னித்தப் பிறகு, நம் பாவங்களை யெகோவா ஞாபகம் வைத்துக்கொள்வது இல்லை. (எரேமியா 31:34-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) அவரே நம்முடைய பாவங்களைப் பற்றி யோசிப்பதில்லை என்றால், நாமும் அதைப் பற்றி யோசிக்கக் கூடாது. நாம் முன்பு செய்த தவறை அல்ல, இப்போது எப்படி வாழ்கிறோம் என்பதைத்தான் அவர் முக்கியமாகப் பார்க்கிறார். (எசே. 33:14-16) சீக்கிரத்தில், கனிவும் இரக்கமுமுள்ள நம் தகப்பன், நாம் செய்த தவறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக எடுத்துப்போடுவார்.

ஒரு சகோதரர் தைரியமாக நடந்து வருகிறார். படத்தொகுப்பு: அவர் முன்பு செய்த விஷயங்களும் இப்போது செய்கிற விஷயங்களும் சில படங்களில் காட்டப்பட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் செய்த தவறுகள்: 1. வன்முறையான வீடியோ கேம்ஸ் விளையாடியிருக்கிறார். 2. அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கிறார், புகைபிடித்திருக்கிறார். 3. கம்ப்யூட்டரில் தவறான விஷயங்களைப் பார்த்திருக்கிறார். இப்போது செய்துகொண்டிருப்பது: 1. ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்கிறார். 2. வயதான ஒரு சகோதரியிடம் பேசுகிறார். 3. ஊழியம் செய்கிறார்.

நாம் முன்பு செய்த தவறை அல்ல, இப்போது எப்படி வாழ்கிறோம் என்பதைத்தான் யெகோவா முக்கியமாகப் பார்க்கிறார் (பாரா 6)


7. ஒரு பெரிய பாவத்தை மறைத்துக்கொண்டிருந்தால், உதவி கேட்க எது நம்மைத் தூண்டும்?

7 ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு அதை மறைத்தால் நம்முடைய மனசாட்சி நம்மைக் குத்தும். அந்த மாதிரி சமயத்தில் என்ன செய்ய வேண்டும்? மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (யாக். 5:14, 15) செய்த பாவத்தைப் பற்றி அவர்களிடம் பேசுவதும் அதை ஒத்துக்கொள்வதும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாம் உண்மையிலேயே மனம் திருந்தியிருந்தால் மூப்பர்களிடம் போய்ப் பேசுவதற்குத் தயங்க மாட்டோம். யெகோவாவும் மூப்பர்களும் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நமக்கு இரக்கம் காட்டுவார்கள் என்பதையும் மனதில் வைத்திருந்தால் நாம் அவர்களிடம் போவோம். ஆர்த்தர்a என்ற சகோதரருக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். அவருடைய மனசாட்சி அவரைப் போட்டு வாட்டிக்கொண்டே இருந்தது. யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தது அவருக்கு ஆறுதலைக் கொடுத்தது. அவர் சொல்கிறார்: “கிட்டத்தட்ட ஒரு வருஷமாக நான் ஆபாசப் படங்களைப் பார்த்தேன். மனசாட்சியைப் பற்றி ஒரு பேச்சைக் கேட்ட பிறகு, நான் செய்த பாவத்தை என்னுடைய மனைவியிடமும் மூப்பர்களிடமும் சொன்னேன். அதற்குப் பிறகு, எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இருந்தாலும், நான் செய்ததை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டுதான் இருந்தேன். யெகோவா என்னை ஒதுக்கிவிடவில்லை என்பதை மூப்பர்கள் ஞாபகப்படுத்தினார்கள். யெகோவா நம்மேல் அன்பு வைத்திருப்பதால்தான் நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன அன்பான வார்த்தைகள் என் மனசுக்கு இதமாக இருந்தது; நான் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொள்ள உதவியது.” இன்று ஆர்த்தர் ஒரு பயனியராகவும் உதவி ஊழியராகவும் சேவை செய்கிறார். மனம் திருந்தும்போது யெகோவா நமக்கு இரக்கத்தைக் காட்டுவார் என்று தெரிந்துகொள்வது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

யெகோவா நம்பிக்கை கொடுக்கிறார்

8. (அ) யூதர்களுக்கு யெகோவா என்ன நம்பிக்கை கொடுத்திருந்தார்? (ஆ) ஏசாயா 40:29-31 சொல்கிற மாதிரி, இந்த நம்பிக்கை அன்றிருந்த யூதர்களுக்கு எப்படி உதவியாக இருந்திருக்கும்?

8 ‘நாடு கடத்தப்பட்டால் அவ்வளவுதான், சொந்த ஊருக்குத் திரும்பி வருவது நடக்காத காரியம்!’ என்று அன்றிருந்த யூதர்கள் நினைத்திருக்கலாம். ஏனென்றால், உலக வல்லரசாக இருந்த பாபிலோன், கைதிகளை விடுதலை செய்ததாக சரித்திரமே இல்லை. (ஏசா. 14:17) ஆனால், யெகோவா தன்னுடைய மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அவர் அவர்களை விடுதலை செய்வார் என்றும், அவரை யாராலும் தடுக்க முடியாது என்றும் வாக்குக் கொடுத்தார். (ஏசா. 44:26; 55:12) யெகோவாவுடைய பார்வையில் பாபிலோன் வெறும் ஒரு தூசிதான். (ஏசா. 40:15) ‘ஃப்பூ’ என்று ஊதினால் தூசி பறந்துவிடும். இந்த நம்பிக்கை அவர்களுக்கு ஆறுதலை மட்டுமல்ல தெம்பையும் கொடுத்திருக்கும். ஏசாயா இப்படி எழுதினார்: “யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்.” (ஏசாயா 40:29-31-ஐ வாசியுங்கள்.) யெகோவா கொடுத்த நம்பிக்கையால், “கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாக” பறக்க அவர்களுக்குத் தெம்பு கிடைத்திருக்கும்.

9. யெகோவா கொடுத்த வாக்குறுதிகளை நம்ப யூதர்களுக்கு என்ன ஆதாரங்கள் இருந்தன?

9 யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதிகளை நம்ப யூதர்களுக்கு நிறைய ஆதாரங்கள் இருந்தன. அவர் ஏற்கெனவே சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதை அவர்கள் கண்ணாரப் பார்த்தார்கள். அவர் சொல்லியிருந்த மாதிரியே, இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தை அசீரியர்கள் கைப்பற்றி அங்கிருந்த மக்களை நாடுகடத்தியிருந்தார்கள். (ஏசா. 8:4) பாபிலோனியர்கள் எருசலேமை அழித்ததையும், அதில் குடியிருந்தவர்களை நாடுகடத்தியதையும் அவர்கள் பார்த்தார்கள். (ஏசா. 39:5-7) பாபிலோன் ராஜா, சிதேக்கியா ராஜாவைக் குருடாக்கி அவரை நாடுகடத்தியதும் இவர்களுக்குத் தெரியும். (எரே. 39:7; எசே. 12:12, 13) இப்படி, யெகோவா சொல்லியிருந்த எல்லாமே நடந்ததை அவர்கள் பார்த்தார்கள். (ஏசா. 42:9; 46:10) இது அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கும். வாக்குக் கொடுத்த மாதிரியே யெகோவா தங்களையும் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை இன்னும் அதிகமாகியிருக்கும்!

10. இந்தக் கடைசி நாட்களில் நம்முடைய நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ள எது நமக்கு உதவும்?

10 நமக்கு என்ன பாடம்? சோர்ந்துபோய் இருக்கும்போது யெகோவா தந்திருக்கும் நம்பிக்கை நமக்கு ஆறுதல் தரும்; இறக்கைகளை விரித்து பறப்பதற்குத் தெம்பைக் கொடுக்கும். நாம் வாழும் காலம் மோசமாகிக்கொண்டே இருக்கிறது; நம்மைவிட சக்திவாய்ந்த எதிரிகளோடு நாம் போராட வேண்டியிருக்கிறது. ஆனாலும், நாம் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடக் கூடாது. ஏனென்றால், யெகோவா நமக்கு அற்புதமான ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். ஒரு அழகான பூமியில் நாம் வாழ்வோம் என்றும், அங்கே உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் இருக்கும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த நம்பிக்கை நம் மனதில் பளிச்சென்று இருக்க வேண்டும். ஒரு தூசிபடிந்த ஜன்னல் வழியாக அழகான காட்சியைப் பார்த்து ரசிக்க முடியுமா? முடியாது! அந்தக் காட்சி மங்கலாகத்தான் தெரியும். அதனால், ஜன்னல் கண்ணாடியைப் பளிச்சென்று வைக்க வேண்டும். அதேபோல், நம்முடைய நம்பிக்கையையும் பளிச்சென்று வைத்துக்கொள்ள வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? புதிய உலகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அடிக்கடி யோசித்துப் பார்க்கலாம். நம்முடைய நம்பிக்கையைப் பற்றிச் சொல்லும் கட்டுரைகளைப் படிக்கலாம், வீடியோக்களைப் பார்க்கலாம், பாடல்களைக் கேட்கலாம். இந்த நம்பிக்கை நிறைவேறுவதைப் பார்க்க ஆசையாகக் காத்திருப்பதையும் யெகோவாவிடம் சொல்லலாம்.

11. ஒரு சகோதரிக்கு எது பலத்தைத் தருகிறது?

11 ஜாய் என்ற சகோதரி தீராத நோயால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். யெகோவா தந்திருக்கும் நம்பிக்கை அவருக்கு ஆறுதலையும், பலத்தையும் தருகிறது. அவர் சொல்கிறார்: “யெகோவா என்னைப் புரிந்துகொள்வார் என்று எனக்குத் தெரியும். அதனால், வேதனையாக இருக்கும்போது, என் அடிமனதில் இருக்கிற வலியை அவரிடம் கொட்டுவேன். அப்போதெல்லாம், அவர் எனக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியைக் கொடுக்கிறார்.’” (2 கொ. 4:7) ஜாய் இன்னொரு விஷயத்தையும் செய்கிறார்; புதிய உலகத்தில் இருப்பதுபோல் கற்பனை செய்கிறார். அங்கே, “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.” (ஏசா. 33:24) நாமும் நம் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்ட வேண்டும். நம் நம்பிக்கையை எப்போதுமே கண்முன்னால் வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால், கஷ்டங்களைச் சமாளிக்க தெம்பு கிடைக்கும்.

12. யெகோவாவின் வாக்குறுதிகள்மேல் நம்பிக்கை வைக்க நமக்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன? (படத்தையும் பாருங்கள்.)

12 தன்னுடைய வாக்குறுதிகளை நம்புவதற்கு இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த மாதிரியே, நமக்கும் நிறைய ஆதாரங்களை யெகோவா கொடுத்திருக்கிறார். இன்று நிறைவேறிக்கொண்டிருக்கும் தீர்க்கதரிசனங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, “கொஞ்சம் உறுதியானதாகவும் கொஞ்சம் உறுதியற்றதாகவும்” இருக்கிற ஒரு அரசாங்கம் வரும் என்று யெகோவா சொன்னது இப்போது நிறைவேறியிருக்கிறது. (தானி. 2:42, 43) ‘அடுத்தடுத்து பல இடங்களில் நிலநடுக்கங்கள்’ வருகிற செய்தியைக் கேட்கிறோம். அதுமட்டுமல்ல, “எல்லா தேசத்தாருக்கும்” பிரசங்கிக்கிறோம். (மத். 24:7, 14) இதுபோன்ற இன்னும் நிறையத் தீர்க்கதரிசனங்கள் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. எதிர்காலத்தில் செய்யப்போவதாக யெகோவா சொல்லியிருக்கும் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.

ஒரு சகோதரி பைபிள் தீர்க்கதரிசனங்களை வாசித்து யோசித்துப் பார்க்கிறார். படத்தொகுப்பு: 1. வீல் ஸ்டாண்டு ஊழியம் செய்யும் ஒரு தம்பதி ஒரு நபரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2. இயற்கை பேரழிவால் நாசமாகியிருக்கும் இடத்தை ஒரு அப்பாவும் மகனும் பார்க்கிறார்கள். 3. தானியேல் 2-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் நேபுகாத்நேச்சாரின் கனவில் வரும் பிரம்மாண்டமான சிலையின் பாதத்தை ஒரு கல் தாக்குகிறது. 4. பூஞ்சோலை பூமியில் மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

இன்று நிறைவேறிக்கொண்டிருக்கும் தீர்க்கதரிசனங்களைப் பார்க்கும்போது யெகோவாவின் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை கிடைக்கிறது (பாரா 12)


பயப்படாமல் நிதானமாக இருக்க யெகோவா உதவுகிறார்

13. (அ) விடுதலையாகும் சமயத்தில் என்ன மாதிரியான பிரச்சினைகளை யூதர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்? (ஆ) ஏசாயா 41:10-13 சொல்கிற மாதிரி, யெகோவா எப்படி யூதர்களுக்கு ஆறுதலைக் கொடுத்தார்?

13 பாபிலோனில் இருந்த யூதர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை யெகோவா கொடுத்திருந்தார்தான். ஆனாலும், அவர்கள் விடுதலை ஆகப்போகிற காலம் நெருங்க நெருங்க, அவர்களுக்குச் சில கஷ்டங்களும் வரும் என்பது யெகோவாவுக்குத் தெரியும். ஒரு பலம்படைத்த ராஜா பாபிலோனைச் சுற்றியிருந்த தேசங்களைக் கைப்பற்றுவான் என்றும், பாபிலோனையும் தாக்குவான் என்றும் யெகோவா முன்கூட்டியே சொல்லியிருந்தார். (ஏசா. 41:2-5) இதை நினைத்து யூதர்கள் கவலைப்பட்டிருக்க வேண்டுமா? இல்லை. ஏனென்றால், யெகோவா ஏற்கெனவே அவர்களுக்கு ஆறுதல் கொடுத்திருந்தார். “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கவலைப்படாதே, நான் உன் கடவுள்” என்று சொல்லியிருந்தார். (ஏசாயா 41:10-13-ஐ வாசியுங்கள்.) “நான் உன் கடவுள்” என்று சொன்னபோது யெகோவா எதை அர்த்தப்படுத்தினார்? யூதர்கள் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தினாரா? இல்லை. ஏனென்றால், அவர்கள் ஏற்கெனவே அவரைத்தான் வணங்கிக்கொண்டு இருந்தார்கள். அவர் இன்னும் அவர்கள் பக்கம் இருக்கிறார் என்பதைத்தான் ஞாபகப்படுத்தினார்.—சங். 118:6.

14. யூதர்களின் பயத்தைப் போக்க யெகோவா வேறு என்ன செய்தார்?

14 யூதர்களுடைய பயத்தைப் போக்குவதற்காக யெகோவா தன்னுடைய எல்லையில்லாத சக்தியைப் பற்றியும், ஞானத்தைப் பற்றியும் சொன்னார். வானத்து நட்சத்திரங்களை அண்ணாந்து பார்க்கச் சொல்லி அவர்களைக் கேட்டுக்கொண்டார். நட்சத்திரங்களைப் படைத்தது மட்டுமல்ல, அவற்றையெல்லாம் பெயர் சொல்லி கூப்பிடுவதாகவும் அவர்களிடம் சொன்னார். (ஏசா. 40:25-28) அப்படியென்றால், தன்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவருடைய பெயரும் யெகோவாவுக்குக் கண்டிப்பாகத் தெரியும். நட்சத்திரங்களைப் படைப்பதற்கு அவருக்குச் சக்தி இருக்கிறது என்றால், தன்னுடைய மக்களுக்கு உதவி செய்யவும் அவருக்குக் கண்டிப்பாக சக்தி இருக்கும். யூதர்கள் பயப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

15. சீக்கிரத்தில் நடக்கவிருந்த சம்பவங்களைச் சந்திக்க யூதர்களை யெகோவா எப்படித் தயார்படுத்தினார்?

15 அடுத்து நடக்கவிருந்த விஷயங்களைச் சந்திக்கவும் யெகோவா தன்னுடைய மக்களைத் தயார்படுத்தினார். ஏசாயா புத்தகத்தில் அவர் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள். கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய கோபம் தீரும்வரை கொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.” (ஏசா. 26:20) கோரேசு ராஜா பாபிலோனைத் தாக்கிய சமயத்தில் யூதர்கள் இந்த அறிவுரைகளின்படி நடந்திருக்கலாம். கோரேசு பாபிலோனுக்குள் நுழைந்த சமயத்தில், “வீடுகளுக்கு வெளியே இருந்த எல்லாரையும் வெட்டிப் போடுவதற்கான கட்டளையை [தன்னுடைய படைவீரர்களுக்கு] கொடுத்தார்” என்று முன்பு வாழ்ந்த ஒரு கிரேக்க சரித்திராசிரியர் சொன்னார். பாபிலோனில் இருந்தவர்கள் எந்தளவுக்குப் பயந்துபோய் இருப்பார்கள்! ஆனால், யெகோவா ஏற்கெனவே அறிவுரை கொடுத்திருந்ததால், கீழ்ப்படிதலுள்ள யூதர்கள் தப்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

16. எதிர்காலத்தை நினைத்து நாம் ஏன் ரொம்பப் பயப்படத் தேவையில்லை? (படத்தையும் பாருங்கள்.)

16 நமக்கு என்ன பாடம்? ரொம்பச் சீக்கிரத்தில், மனித சரித்திரத்திலேயே இதுவரை வராத மிகுந்த உபத்திரவத்தை நாம் சந்திக்கப்போகிறோம். அது ஆரம்பிக்கும்போது உலகத்தில் இருக்கிற மக்கள் குழம்பிப்போவார்கள், பயந்துபோவார்கள். ஆனால், நாம் பயப்பட மாட்டோம். ஏனென்றால், யெகோவா நம்முடைய கடவுள் என்பது நமக்குத் தெரியும். நம்முடைய “விடுதலை நெருங்கிவருகிறது” என்பதைத் தெரிந்திருப்பதால் நாம் உறுதியாகவும் தைரியமாகவும் இருப்போம். (லூக். 21:28) தேசங்களுடைய கூட்டணி நம்மைத் தாக்கும்போதுகூட நாம் உறுதியாக இருப்போம். யெகோவா நமக்குத் தேவதூதர்களின் பாதுகாப்பையும் தருவார்; உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் தருவார். இந்த ஆலோசனைகளை நமக்கு எப்படித் தருவார்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! ஒருவேளை சபை மூலமாக அவர் அதைத் தரலாம். ஒருவிதத்தில், சபைகள் ‘உள்ளறைகளாக’ இருக்கலாம்; அங்கே நமக்குப் பாதுகாப்பு கிடைக்கும். எதிர்கால சம்பவங்களைச் சந்திக்க நாம் எப்படித் தயாராகலாம்? சகோதர சகோதரிகளோடு நாம் இன்னும் நெருக்கமாக ஆக வேண்டும், அமைப்பு கொடுக்கிற ஆலோசனைகளுக்கு மனசார கீழ்ப்படிய வேண்டும், யெகோவாதான் இந்த அமைப்பை வழிநடத்துகிறார் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.—எபி. 10:24, 25; 13:17.

மிகுந்த உபத்திரவத்தின்போது சகோதர சகோதரிகள் சிலர் ஒரு வீட்டில் பைபிளைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சகோதரர் இரவு வானத்தைக் காட்டிப் பேசுகிறார், எல்லாரும் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறார்கள்.

நம்மைப் பாதுகாக்க யெகோவாவுக்குச் சக்தியும் திறமையும் இருக்கிறது என்று நமக்குத் தெரிந்திருப்பதால் மிகுந்த உபத்திரவம் சமயத்தில் பயந்து நடுங்க மாட்டோம் (பாரா 16)b


17. யெகோவாவிடமிருந்து ஆறுதல் கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

17 நாடுகடத்தப்பட்ட பிறகு யூதர்களுடைய வாழ்க்கை பாபிலோனில் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவர்களுக்குத் தேவையான ஆறுதலை யெகோவா முன்பே கொடுத்திருந்தார். அதேமாதிரி நமக்கும் அவர் ஆறுதல் கொடுக்கிறார். அதனால் நாளைக்கு என்ன நடந்தாலும் சரி, ஆறுதலுக்காக யெகோவாவிடம் போகலாம். அவர் தருகிற ஆறுதல் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், யெகோவா நம்மை மன்னிப்பார் என்றும் நமக்கு இரக்கம் காட்டுவார் என்றும் நம்ப வேண்டும். எதிர்கால நம்பிக்கையைப் பிரகாசமாக வைத்துக்கொள்ள வேண்டும். யெகோவா நம்முடைய கடவுளாக இருப்பதால், எதை நினைத்தும் நாம் பயப்படத் தேவையில்லை!

இந்த வசனங்கள் உங்களுக்கு எப்படி ஆறுதலைத் தரும்?

  • ஏசாயா 55:7

  • ஏசாயா 40:29-31

  • ஏசாயா 41:10-13

பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b படவிளக்கம்: சகோதர சகோதரிகள் கொஞ்ச பேர் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள். இந்தப் பூமியில் எங்கே வாழ்ந்தாலும் சரி, தன்னுடைய மக்களைப் பாதுகாக்க யெகோவாவுக்குச் சக்தியும் திறமையும் இருக்கிறது என்பதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்