படிப்புக் கட்டுரை 28
பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!
நல்ல ஆலோசனை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
“ஆலோசனை கேட்கிறவர்களிடம் ஞானம் இருக்கும்.”—நீதி. 13:10.
என்ன கற்றுக்கொள்வோம்?
நமக்குக் கிடைக்கிற ஆலோசனையில் இருந்து முழுமையாக நன்மையடைய என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்வோம்.
1. ஞானமான முடிவுகள் எடுக்கவும் நம் திட்டங்கள் வெற்றி அடையவும் எது உதவும்? (நீதிமொழிகள் 13:10; 15:22)
ஞானமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதுதான் நம் ஆசை. அதேபோல் நம் திட்டங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதும் நம் ஆசை. இந்த ஆசைகள் நிறைவேற கடவுளுடைய வார்த்தை உதவும்.—நீதிமொழிகள் 13:10; 15:22-ஐ வாசியுங்கள்.
2. நமக்கு என்ன செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்?
2 யெகோவாவைத் தவிர வேறு யாரால் மிகச் சிறந்த ஆலோசனையைக் கொடுக்க முடியும்! அதனால், ஞானத்தைக் கேட்டு அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும். நமக்கு உதவுவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு அறிவுரை சொல்வேன்” என்று சொல்லியிருக்கிறார். (சங். 32:8) இந்த வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், அவருக்கு நம்மேல் அக்கறை இருப்பது தெரிகிறது. அதனால், நமக்கு ஆலோசனை கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதன்படி நடக்கவும் அவர் உதவுவார்.
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 இந்தக் கட்டுரையில் நான்கு கேள்விகளுக்கு கடவுளுடைய வார்த்தையில் இருந்து பதில் பார்ப்போம். (1) ஆலோசனையிலிருந்து நன்மையடைய எனக்கு என்ன குணங்கள் தேவை? (2) யாரால் எனக்கு நல்ல ஆலோசனை கொடுக்க முடியும்? (3) நான் திறந்த மனதோடு ஆலோசனையைக் கேட்க விரும்புகிறேன் என்பதை எப்படிக் காட்டுவது? (4) எனக்காக நான் ஏன் மற்றவர்களை முடிவு எடுக்கச் சொல்லக் கூடாது?
என்ன குணங்கள் எனக்குத் தேவை?
4. நல்ல ஆலோசனையில் இருந்து பயனடைய நமக்கு என்ன குணங்கள் தேவை?
4 நல்ல ஆலோசனையில் இருந்து பயனடைய நமக்கு மனத்தாழ்மையும் அடக்கமும் தேவை. சில விஷயங்களில், நல்ல முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான அனுபவமோ ஞானமோ நமக்கு இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். மனத்தாழ்மையும் அடக்கமும் நமக்கு இல்லை என்றால் யெகோவாவால் நமக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய வார்த்தையான பைபிளைப் படிக்கும்போது அதில் இருக்கும் ஆலோசனைகள் நமக்குள் போகவே போகாது; தாமரை இலைமேல் விழும் தண்ணீர்போல் அவை உருண்டோடிவிடும். (மீ. 6:8; 1 பே. 5:5) ஆனால், நாம் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் இருந்தால், பைபிளிலிருந்து கிடைக்கும் ஆலோசனையை உடனே ஏற்றுக்கொள்வோம்; அதன்படி நடப்போம்.
5. தாவீது நினைத்திருந்தால் தன்னைப் பற்றியே பெருமைப்பட என்னவெல்லாம் காரணங்கள் இருந்தன?
5 தாவீதைப் பற்றி இப்போது பார்க்கலாம். தாவீது நினைத்திருந்தால் தன்னைப் பற்றியே பெருமைப்பட்டிருக்கலாம். ஏனென்றால், ராஜாவாக ஆவதற்கு பல வருஷங்களுக்கு முன்பே, இசை இசைப்பதில் அவர் பிரபலமாக இருந்தார். ராஜாவின் முன் இசை இசைப்பதற்குக்கூட அவரைக் கூப்பிட்டிருந்தார்கள். (1 சா. 16:18, 19) இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்தபோது, தன்னுடைய சக்தியை அவருக்குக் கொடுத்தார். அதனால், அவர் பலம் பெற்றவராக ஆனார். (1 சா. 16:11-13) அதோடு, மக்கள் மத்தியிலும் அவர் பிரபலமாக இருந்தார். ஏனென்றால், ராட்சதனான கோலியாத்தையும், கடவுளுடைய எதிரிகள் இன்னும் பலரையும் அவர் வெட்டிச் சாய்த்திருந்தார். (1 சா. 17:37, 50; 18:7) இவ்வளவு பெரிய பெரிய சாதனைகள் செய்த தாவீது, மற்றவர்களுடைய ஆலோசனை தனக்குத் தேவையில்லை என்று நினைத்தாரா? பெருமைப்பிடித்தவராக இருந்திருந்தால் அப்படி நினைத்திருப்பார். ஆனால் தாவீது அப்படி இல்லை.
6. மற்றவர்கள் கொடுக்கிற ஆலோசனையைக் கேட்க தாவீது தயாராக இருந்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (படத்தையும் பாருங்கள்.)
6 ராஜாவாக ஆன பிறகு, நல்ல ஆலோசனை கொடுக்கிறவர்களை தாவீது தன்னோடு வைத்திருந்தார். (1 நா. 27:32-34) இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதற்கு முன்புகூட, மற்றவர்கள் கொடுத்த நல்ல ஆலோசனைகளை அவர் கேட்டு நடந்திருக்கிறார். ஆண்களுடைய ஆலோசனையை மட்டுமல்ல, அபிகாயில் என்ற பெண் கொடுத்த ஆலோசனையையும் அவர் கேட்டு நடந்திருக்கிறார். அபிகாயில், நாபால் என்ற மரியாதை தெரியாத, நன்றிகெட்ட, திமிர்பிடித்த ஒருவனுடைய மனைவி. அப்படியிருந்தாலும், அபிகாயில் கொடுத்த ஆலோசனையை தாவீது மனத்தாழ்மையாகக் கேட்டு நடந்தார். இப்படிச் செய்ததால், பெரிய பாவத்தைச் செய்வதில் இருந்து அவர் தப்பித்தார்.—1 சா. 25:2, 3, 21-25, 32-34.
அபிகாயில் கொடுத்த ஆலோசனையை தாவீது ராஜா மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு அதை அப்படியே செய்தார் (பாரா 6)
7. தாவீதிடம் இருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்? (பிரசங்கி 4:13) (படங்களையும் பாருங்கள்.)
7 தாவீதிடம் இருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, நமக்குத் திறமைகள் இருக்கலாம், அதிகாரம்கூட இருக்கலாம்; இருந்தாலும், ‘மற்றவர்களுடைய ஆலோசனை எனக்குத் தேவையில்லை, எனக்கே எல்லாம் தெரியும்!’ என்பதுபோல் நடந்துகொள்ளக் கூடாது. தாவீது மாதிரி நாமும் மற்றவர்கள் கொடுக்கிற ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அது யாரிடம் இருந்து வந்தாலும் சரி! (பிரசங்கி 4:13-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்தால், விபரீதமாக எதையாவது செய்து நமக்கும் மற்றவர்களுக்கும் வேதனையைக் கொண்டுவந்துவிட மாட்டோம்.
நல்ல ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அது யாரிடமிருந்து வந்தாலும் சரி! (பாரா 7)c
யாரால் எனக்கு நல்ல ஆலோசனை கொடுக்க முடியும்?
8. தாவீதுக்கு ஆலோசனை கொடுக்க யோனத்தான்தான் சரியான நபர் என்று எப்படிச் சொல்லலாம்?
8 தாவீதிடம் இருந்து நாம் கற்றுக்கொள்கிற இன்னொரு பாடத்தைப் பார்க்கலாம். தாவீது எப்படிப்பட்டவர்களிடம் ஆலோசனை கேட்டார்? யெகோவாவோடு நல்ல நட்பு வைத்திருந்த, அதேசமயத்தில் தன்னுடைய சூழ்நிலையை நன்றாகப் புரிந்துவைத்திருந்த ஆட்களிடம் ஆலோசனை கேட்டார். உதாரணத்துக்கு, சவுல் ராஜாவோடு சமாதானம் ஆக முடியுமா என்று தாவீது யோசித்தபோது, சவுலின் மகன் யோனத்தானிடம் ஆலோசனை கேட்டார். தாவீதுக்கு ஆலோசனை கொடுக்க யோனத்தான்தான் சரியான நபர் என்று எப்படிச் சொல்லலாம்? யோனத்தான் யெகோவாவோடு நல்ல நட்பு வைத்திருந்தார், அதேசமயத்தில் சவுலைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். (1 சா. 20:9-13) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9. ஆலோசனை தேவைப்படும்போது நாம் யாரிடம் கேட்க வேண்டும்? விளக்குங்கள். (நீதிமொழிகள் 13:20)
9 தாவீது மாதிரியே நாமும், யெகோவாவோடு நல்ல நட்பு வைத்திருக்கிற, அதேசமயத்தில் நமக்கு உதவி தேவைப்படுகிற விஷயத்தில் அனுபவம் இருக்கிற ஒருவரிடம் ஆலோசனை கேட்கலாம்.a (நீதிமொழிகள் 13:20-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, ஒரு இளம் சகோதரர் கல்யாணத்துக்காக பெண் தேடிக்கொண்டு இருக்கிறார் என்றால், யார் அவருக்கு நல்ல ஆலோசனை கொடுக்க முடியும்? கல்யாணம் ஆகாத அவருடைய நண்பர், பைபிள் அடிப்படையில் ஆலோசனை கொடுத்தால் அது அவருக்கு உதவியாக இருக்கும்தான். அதேசமயத்தில், கல்யாணம் ஆகி கொஞ்ச காலம் ஆகியிருக்கிற... யெகோவாவைச் சந்தோஷமாக வணங்குகிற... தம்பதியால், அவருக்கு இன்னும் நல்ல ஆலோசனைகளைக் கொடுக்க முடியும். அந்தத் தம்பதிக்கு அவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தம்பதியால் பைபிள் நியமங்களை எப்படிக் கடைப்பிடிப்பது என்று சொல்லித்தர முடியும். அதோடு, தங்கள் சொந்த அனுபவத்திலிருந்தும் நடைமுறையான ஆலோசனையைக் கொடுக்க முடியும்.
10. நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
10 நமக்குத் தேவைப்படுகிற இரண்டு குணங்களைப் பற்றியும் யாரால் நமக்கு நல்ல ஆலோசனை கொடுக்க முடியும் என்பதைப் பற்றியும் இதுவரை பார்த்தோம். இப்போது, நாம் ஏன் திறந்த மனதோடு ஆலோசனை கேட்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். பிறகு, நமக்காக மற்றவர்களை முடிவு எடுக்கச் சொல்வது சரியா என்று பார்க்கலாம்.
நான் உண்மையிலேயே திறந்த மனதோடு ஆலோசனை கேட்கிறேனா?
11-12. (அ) சிலசமயம் நாம் என்ன செய்துவிடலாம்? (ஆ) ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சமயத்தில் ரெகொபெயாம் ராஜா என்ன செய்தார்?
11 சிலசமயம், ஒருவர் ஆலோசனை கேட்பதுபோல் தெரியலாம். ஆனால், அவர் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்துவிட்டு, அதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா என்று தெரிந்துகொள்வதற்காக ஆலோசனை கேட்கலாம். அப்படிப்பட்ட ஒருவர் உண்மையிலேயே திறந்த மனதோடு ஆலோசனை கேட்கிறார் என்று சொல்ல முடியுமா? முடியாது! இப்படிப்பட்ட ஒரு நபர் ரெகொபெயாம் ராஜாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்.
12 சாலொமோனுக்குப் பிறகு இஸ்ரவேலை ஆட்சி செய்தவர் ரெகொபெயாம். சாலொமோனின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கை செல்வச் செழிப்பாக இருந்தது. இருந்தாலும், சாலொமோன் ராஜா தங்களை ரொம்ப வேலை வாங்கியதாக அந்த மக்கள் உணர்ந்தார்கள். அதனால், சுமைகளை குறைக்கச் சொல்லி ரெகொபெயாம் ராஜாவிடம் கேட்டார்கள். இந்த விஷயத்தைப் பற்றி யோசித்துப் பதில் சொல்வதாக அவர் சொன்னார். முதலில், சாலொமோனுக்கு ஆலோசனை கொடுத்த பெரியவர்களிடம் ரெகொபெயாம் ஆலோசனை கேட்டார். இது நல்ல விஷயம்! (1 ரா. 12:2-7) ஆனால், அந்தப் பெரியவர்கள் கொடுத்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? ரெகொபெயாம் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்திருப்பாரா? அவர் எடுத்த முடிவுக்கு ஏற்ற மாதிரி யாராவது ஆலோசனை கொடுக்கிறார்களா என்று பார்த்திருப்பாரா? அடுத்து அவர் என்ன செய்தார் என்று பாருங்கள். தன்னுடைய இளம் நண்பர்களிடம் போய் ஆலோசனை கேட்டார். அவர் எதிர்பார்த்த பதில் அவர்களிடமிருந்து கிடைத்திருக்கலாம். (1 ரா. 12:8-14) அதனால்தான், அவர்கள் சொன்னதை ரெகொபெயாம் அப்படியே செய்திருக்கலாம். அதன் விளைவு? ரெகொபெயாமுக்குத் தொடர்ந்து பிரச்சினைகள் வந்தன; தேசமும் இரண்டாகப் பிரிந்தது.—1 ரா. 12:16-19.
13. ஆலோசனை கேட்கிற விஷயத்தில் நமக்குத் திறந்த மனது இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
13 ரெகொபெயாமின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? ஆலோசனை கேட்கும்போது நம் மனதை அடைத்துக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்கிறோமா இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் எதிர்பார்க்கிற ஆலோசனையை ஒருவர் கொடுக்காதபோது அதை வேண்டாம் என்று உடனே ஒதுக்கிவிடுகிறேனா?’ ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
14. நமக்கு ஒரு ஆலோசனை கிடைக்கும்போது நாம் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்கள். (படத்தையும் பாருங்கள்.)
14 இதைக் கற்பனை செய்யுங்கள்: ஒரு சகோதரருக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கிற வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த வேலையில் சேர்வதற்கு முன்பு அவர் ஒரு மூப்பரிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த வேலையில் சேர்ந்தால், குடும்பத்தைவிட்டு அடிக்கடி பல வாரங்களுக்குப் பிரிந்திருக்க வேண்டியிருக்கும் என்பதையும் சொல்கிறார். அதற்கு அந்த மூப்பர், குடும்பத்தில் இருக்கிறவர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவுவதுதான் குடும்பத் தலைவராக அவருடைய முக்கியமான பொறுப்பு என்பதை ஞாபகப்படுத்துகிறார். (எபே. 6:4; 1 தீ. 5:8) அந்த மூப்பர் கொடுத்த ஆலோசனை அந்தச் சகோதரருக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவர் எதிர்பார்க்கிற ஆலோசனையை யார் கொடுப்பார் என்று தேடுகிறார். மற்ற சகோதரர்களிடம் அதைப் பற்றிப் பேசுகிறார். இந்தச் சகோதரர் உண்மையிலேயே திறந்த மனதோடு ஆலோசனை கேட்கிறாரா? அல்லது, ஏற்கனவே ஒரு முடிவு எடுத்துவிட்டு அதே விஷயம் மற்றவர்களுடைய வாயிலிருந்தும் வருகிறதா என்று பார்க்கிறாரா? நம் இதயம் எவ்வளவு நயவஞ்சகமானது, பார்த்தீர்களா? (எரே. 17:9) சிலசமயத்தில் நம் காதுக்கு இனிமையாக இல்லாத ஆலோசனைதான் வாழ்க்கைக்கு இனிமையானதாக இருக்கும்!
நாம் உண்மையிலேயே நல்ல ஆலோசனையைத் தேடுகிறோமா அல்லது நாம் எடுத்த முடிவை ஒத்துக்கொள்கிறவர்களைத் தேடுகிறோமா? (பாரா 14)
எனக்காக மற்றவர்களை முடிவு எடுக்கச் சொல்லலாமா?
15. நாம் என்ன செய்யக் கூடாது, ஏன்?
15 ஞானமுள்ள ஒருவர் முடிவு எடுப்பதற்கு முன்பு பைபிள் ஆலோசனையைத் தேடுவார் என்றும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடம் ஆலோசனை கேட்பார் என்றும் பார்த்தோம். ஆனால் முடிவுகள் எடுப்பது அவரவர் பொறுப்பு. (கலா. 6:4, 5) நமக்காக மற்றவர்களை முடிவெடுக்கச் சொல்லக் கூடாது. ஒருசிலர், “என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்பார்கள். வேறுசிலர், இப்படிக் கேட்பதற்குப் பதிலாக மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அவர்களை அப்படியே காப்பியடிப்பார்கள். அந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
16. சிலைகளுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி சம்பந்தமாக கொரிந்து சபையில் என்ன சூழ்நிலை வந்தது, அதைச் சாப்பிடுவதா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? (1 கொரிந்தியர் 8:7; 10:25, 26)
16 முதல் நூற்றாண்டில், கொரிந்து சபையில் இருந்த ஒரு சூழ்நிலையை இப்போது பார்க்கலாம். இறைச்சி சாப்பிடுவது பற்றி அங்கே இருந்த சிலர் முடிவெடுக்க வேண்டியிருந்தது. அது ஒருவேளை சிலைகளுக்குப் படைக்கப்பட்டதாக இருந்திருக்கலாம். அந்தக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் இப்படி எழுதினார்: “சிலை என்பது ஒன்றுமே இல்லை என்றும், ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் நமக்குத் தெரியும்.” (1 கொ. 8:4) இதன் அடிப்படையில், சந்தையில் விற்கப்படும் எந்த இறைச்சியையும், அது ஒருவேளை சிலைகளுக்குப் படைக்கப்பட்டதாக இருந்தாலும், அதை வாங்கிச் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று சில கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் வேறு சிலர், அப்படிச் சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். ஏனென்றால், அது அவர்களுடைய மனசாட்சியை உறுத்தும். (1 கொரிந்தியர் 8:7; 10:25, 26-ஐ வாசியுங்கள்.) இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முடிவு. ஒருவருக்காக இன்னொருவர் முடிவு எடுக்க வேண்டுமென்றோ, ஒருவர் எடுக்கும் முடிவைப் பார்த்து இன்னொருவர் அப்படியே செய்ய வேண்டுமென்றோ பவுல் கொரிந்தியர்களுக்கு ஒருபோதும் சொல்லவில்லை. ஏனென்றால், ‘ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.’—ரோ. 14:10-12.
17. மற்றவர்கள் செய்வதை அப்படியே காப்பியடித்தால் நமக்கு என்ன ஆகிவிடலாம்? ஒரு உதாரணம் சொல்லுங்கள். (படங்களையும் பாருங்கள்.)
17 அன்று இருந்த மாதிரியே ஒரு சூழ்நிலை நமக்கும் வரலாமா? இரத்தத்தின் சிறு கூறுகளைப் பயன்படுத்துவதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவற்றைப் பயன்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவரும் எடுக்க வேண்டிய முடிவு.b சிறு கூறுகளைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வது ஒருவேளை நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், அது சம்பந்தமாக முடிவு எடுப்பது கிறிஸ்தவராக நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிற கடமை. (ரோ. 14:4) ஒருவேளை, மற்றவர்கள் எடுத்த முடிவையே நாம் காப்பியடிக்க முயற்சி செய்தால், நம்முடைய மனசாட்சிக்கு நாம் பயிற்சி கொடுக்காமல் போய்விடுவோம். அதனால், அது பலவீனம் ஆகிவிடும். பயன்படுத்த பயன்படுத்தத்தான் மனசாட்சிக்குத் தேவையான பயிற்சி கிடைக்கும்; அப்போதுதான் ஞானமான முடிவுகளை எடுக்க அது உதவும். (எபி. 5:14) அப்படியென்றால், ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரிடம் நாம் எப்போது ஆலோசனை கேட்கலாம்? ஒரு விஷயத்தைப் பற்றி நாம் நன்றாக ஆராய்ச்சி செய்த பிறகும் பைபிள் நியமங்களை எப்படிப் பொருத்துவது என்று தெரியவில்லை என்றால் நாம் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.
முதலில் நாம் ஆராய்ச்சி செய்த பிறகுதான் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் (பாரா 17)
தொடர்ந்து ஆலோசனை கேளுங்கள்
18. யெகோவா நமக்காக என்ன செய்திருக்கிறார்?
18 யெகோவா நம்மை நம்புகிறார். அதனால்தான் நம்மையே முடிவெடுப்பதற்கு அவர் அனுமதிக்கிறார். ஆனால் நமக்கு உதவுவதற்காக அவர் தன்னுடைய வார்த்தையாகிய பைபிளைக் கொடுத்திருக்கிறார். அதோடு, பைபிள் நியமங்களை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிற ஞானமான நண்பர்களையும் கொடுத்திருக்கிறார். ஒரு அப்பாவாக யெகோவா தன்னுடைய கடமைகளைச் சரியாகச் செய்திருக்கிறார். (நீதி. 3:21-23) நாம் எப்படி அவருக்கு நன்றி காட்டலாம்?
19. நாம் எப்படி யெகோவாவைத் தொடர்ந்து சந்தோஷப்படுத்தலாம்?
19 பிள்ளைகள் ஞானமுள்ளவர்களாக வளர்ந்து மற்றவர்களுக்கு உதவுவதையும், யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்வதையும் பெற்றோர்கள் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப்படுவார்கள். அதேமாதிரிதான் யெகோவாவும்! நாம் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதையும், மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதையும், அவர்மேல் இருக்கிற அன்பைக் காட்டும் விதத்தில் முடிவுகளை எடுப்பதையும் பார்க்கும்போது அவர் மனம் சந்தோஷத்தில் நிரம்பும்!
பாட்டு 127 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்
a பணம், மருத்துவம், வேறு சில விஷயங்களைப் பற்றி யெகோவாவை வணங்காத சிலரிடம்கூட தேவைப்பட்டால் கிறிஸ்தவர்கள் ஆலோசனை கேட்கலாம்.
b இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பாடம் 39-ல் குறிப்பு 5-ஐயும் “அலசிப் பாருங்கள்” பகுதியையும் பாருங்கள்.
c படவிளக்கங்கள்: சமீபத்தில் நடந்த மூப்பர்களின் கூட்டத்தில், ஒரு மூப்பர் பேசிய விதத்தைப் பற்றி இன்னொரு மூப்பர் ஆலோசனை கொடுக்கிறார்.