படிப்புக் கட்டுரை 29
பாட்டு 87 வாருங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள்
நல்ல ஆலோசனை கொடுக்க என்ன செய்ய வேண்டும்?
“உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு அறிவுரை சொல்வேன்.”—சங். 32:8.
என்ன கற்றுக்கொள்வோம்?
மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும் ஆலோசனைகளை எப்படிக் கொடுப்பது என்று கற்றுக்கொள்வோம்.
1. நாம் ஏன் ஆலோசனை கொடுக்க வேண்டும்?
மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆலோசனை கொடுப்பது சிலருக்குச் சுலபமாக வரும். வேறு சிலருக்கோ, அதைக் கொடுப்பது தயக்கமாக இருக்கலாம், கொஞ்சம் சங்கடமாகக்கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் சரி, நாம் எல்லாருமே அவ்வப்போது மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், தன் சீஷர்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவார்கள் என்றும், அந்த அன்புதான் அவர்களுக்கு அடையாளம் என்றும் இயேசு சொன்னார். (யோவா. 13:35) அந்த அன்பு இருப்பதால்தான், தேவைப்படுகிற சமயத்தில் நம் சகோதர சகோதரிகளுக்கு ஆலோசனை கொடுக்கிறோம். “அக்கறையோடு ஆலோசனை” கொடுக்கும்போது “இனிய நட்பு” உருவாகும் என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 27:9.
2. மூப்பர்கள் என்ன செய்ய வேண்டியிருக்கிறது, ஏன்? (“வாரநாள் கூட்டத்தில் ஆலோசனை” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
2 நல்ல ஆலோசனைகளை எப்படிக் கொடுப்பது என்று குறிப்பாக மூப்பர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், மந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை யெகோவாவும் இயேசுவும் அவர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். (1 பே. 5:2, 3) மூப்பர்கள் எப்படியெல்லாம் ஆலோசனை கொடுக்கிறார்கள்? ஒரு வழி, சபையில் பேச்சுகளைக் கொடுக்கும்போது பைபிள் அடிப்படையிலான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். அதோடு, தனிப்பட்ட விதத்திலும் சிலருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள். யெகோவாவைவிட்டு விலகிப் போனவர்களுக்கும் ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கும். மூப்பர்கள் மட்டுமல்ல நாம் எல்லாருமே எப்படி மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனையைக் கொடுக்கலாம்?
3. (அ) நல்ல ஆலோசனை கொடுக்க நாம் எப்படி கற்றுக்கொள்ளலாம்? (ஏசாயா 9:6; “இயேசு போல் ஆலோசனை கொடுங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.) (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 எப்படி நல்ல ஆலோசனை கொடுக்கலாம் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சிலரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக, இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், இயேசுவுக்கு “ஞானமுள்ள ஆலோசகர்” என்ற பெயரும் இருக்கிறது. (ஏசாயா 9:6-ஐ வாசியுங்கள்.) யாராவது நம்மிடம் ஆலோசனை கேட்டால் அதை எப்படிக் கொடுக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். ஒருவர் நம்மிடம் ஆலோசனை கேட்கவில்லை என்றாலும், அவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டிய தேவையிருந்தால் அதை எப்படிச் செய்யலாம் என்றும் கற்றுக்கொள்வோம். சரியான நேரத்திலும் சரியான விதத்திலும் ஆலோசனை கொடுப்பது ஏன் முக்கியம் என்றும் கற்றுக்கொள்வோம்.
நம்மிடம் ஆலோசனை கேட்கும்போது
4-5. நம்மிடம் ஒருவர் ஆலோசனை கேட்கும்போது முதலில் நாம் எதைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்? உதாரணம் கொடுங்கள்.
4 ஒருவர் நம்மிடம் ஆலோசனை கேட்கும்போது, ‘நம்மை நம்பி கேட்கிறாரே’ என்று நமக்குச் சந்தோஷமாக இருக்கலாம்; அவருக்கு உதவ நாம் துடிக்கலாம். ஆனால், அவருக்கு ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு, ‘அவர் எதைப் பற்றிக் கேட்கிறாரோ அந்த விஷயத்தில் எனக்கு அனுபவம் இருக்கிறதா?’ என்று முதலில் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். சிலசமயத்தில், சட்டென்று ஆலோசனை கொடுப்பதைவிட, அனுபவம் இருக்கிற ஒருவரிடம் அவரை வழிநடத்துவது ஞானமானதாக இருக்கும்.
5 இதை யோசித்துப் பாருங்கள்: உங்களுடைய நெருங்கிய நண்பருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. ஒருசில சிகிச்சை முறைகளைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்கிறார். பிறகு, எது நல்லது என்று உங்கள் கருத்தையும் கேட்கிறார். ஒரு சிகிச்சை முறை நல்லது என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், மருத்துவத் துறையில் உங்களுக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம். அல்லது, அந்த வியாதியைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாமல் இருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், நீங்களே அவருக்கு ஆலோசனை சொல்வதற்குப் பதிலாக அனுபவமுள்ள ஒருவரைக் கண்டுபிடிக்க உதவலாம்.
6. ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு நேரம் எடுத்துக்கொள்வது ஏன் நல்லது?
6 ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை கொடுக்க நமக்குத் தகுதி இருப்பதாகத் தோன்றினாலும், உடனே எதையும் சொல்லிவிடாமல், நேரம் எடுத்துக்கொள்வது நல்லது. ஏன்? “நீதிமானின் இதயம் பதில் சொல்வதற்கு முன்னால் யோசிக்கும்” என்று நீதிமொழிகள் 15:28 சொல்கிறது. ஒருவேளை, நமக்குப் பதில் நன்றாகத் தெரிந்தால்கூட நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும், ஜெபம் செய்ய வேண்டும், ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படியெல்லாம் செய்யும்போது, நாம் கொடுக்கிற ஆலோசனை யெகோவாவுக்குப் பிடித்ததாக இருக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். நாத்தான் தீர்க்கதரிசியின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம்.
7. நாத்தான் தீர்க்கதரிசியின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட விரும்புவதாக தாவீது ராஜா நாத்தான் தீர்க்கதரிசியிடம் சொன்னார். உடனே நாத்தான், ஆலயத்தைக் கட்டும்படி ஆலோசனை கொடுத்தார். ஆனால், ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு அவர் யெகோவாவிடம் கேட்டிருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால், தாவீது ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்பது யெகோவாவின் விருப்பம் கிடையாது. (1 நா. 17:1-4) இந்தச் சம்பவத்தில் இருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? யாராவது ஒருவர் நம்மிடம் ஆலோசனை கேட்டால், “யோசித்து நிதானமாக” அவருக்குப் பதில் சொல்வதுதான் ஞானமானதாக இருக்கும்.—யாக். 1:19.
8. யோசித்து ஆலோசனை கொடுப்பது முக்கியம் என்பதற்கு இன்னொரு காரணம் என்ன?
8 ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு, அதை நன்றாக யோசித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நாம் கொடுக்கிற ஆலோசனையால் ஏதாவது மோசமான விளைவுகள் வந்தால், அதற்கு நாமும் ஒரு விதத்தில் பொறுப்பு. அதனால், ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு கவனமாக யோசிப்பது ரொம்ப முக்கியம்.
நாமாகவே முன்வந்து ஆலோசனை கொடுக்கும்போது
9. ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு மூப்பர்கள் எதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்? (கலாத்தியர் 6:1)
9 “தவறான பாதையில்” அடியெடுத்து வைக்கிற ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ மூப்பர்கள் முன்வந்து ஆலோசனை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. (கலாத்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், அப்படிப்பட்ட ஒரு நபர் பிற்பாடு பெரிய பாவத்தைச் செய்துவிட வாய்ப்பு இருக்கிறது. முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற பாதையில் அவரை வழிநடத்துவதுதான் மூப்பர்களுடைய குறிக்கோள். (யாக். 5:19, 20) ஆனால், மூப்பர்கள் சொல்கிற ஆலோசனை பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த நபர் உண்மையிலேயே தவறான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறாரா என்பதை மூப்பர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், யெகோவா எல்லாருக்கும் மனசாட்சியைக் கொடுத்திருப்பதால், அதன் அடிப்படையில் சிலர் வித்தியாசமான முடிவுகளை எடுக்கலாம். முடிவுகள் வித்தியாசமாக இருக்கிறது என்பதற்காக அவை தவறு என்று ஆகிவிடாது. (ரோ. 14:1-4) சரி, இப்போது ஒரு சகோதரர் தவறான பாதையில் போயிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சூழ்நிலையில், மூப்பர்கள் அவர்களாகவே முன்வந்து அவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும். ஆனால் அந்த ஆலோசனையை எப்படிக் கொடுப்பது?
10-12. ஒருவர் ஆலோசனை கேட்காமலேயே அவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தால் மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்? விளக்குங்கள். (படங்களையும் பாருங்கள்.)
10 ஒருவர் ஆலோசனை கேட்காதபோது, அவருக்கு ஆலோசனை கொடுப்பது மூப்பர்களுக்குச் சவால்தான். ஏன்? தவறான பாதையில் போய்க்கொண்டு இருப்பதே ஒருவருக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அதனால், ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு, அதை அந்த நபர் ஏற்றுக்கொள்வதற்கு மூப்பர்கள் அவரைத் தயார்படுத்த வேண்டும்.
11 ஆலோசனை கேட்காமலேயே ஒருவருக்கு ஆலோசனை கொடுப்பது என்பது இறுகிப்போன மண்ணில் விதை விதைக்கிற மாதிரி. ஒரு விவசாயி விதை விதைப்பதற்கு முன்பு, மண்ணைக் கொத்திவிட்டு அதைத் தயார்படுத்துவார். அதற்குப் பிறகு, அவர் விதையை விதைப்பார். அடுத்து அவர் தண்ணீர் ஊற்றுவார். இப்போது விதை வளரும். அதேபோல்தான், தானாகவே முன்வந்து ஒருவருக்கு ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு, ஒரு மூப்பர் அந்த நபருடைய மனதைத் தயார்படுத்துவார். உதாரணத்துக்கு, அவரிடம் பேசுவதற்கு சரியான ஒரு நேரத்தைக் கண்டுபிடிப்பார். அதற்குப் பிறகு, உண்மையிலேயே அவர்மேல் அக்கறை வைத்திருப்பதைப் புரிய வைப்பார். இன்னொரு விஷயம் என்னவென்றால், ஆலோசனை கொடுக்கிற மூப்பர் ஏற்கனவே அன்பானவர், இரக்கமானவர் என்ற பெயர் எடுத்திருந்தால் அவர் கொடுக்கிற ஆலோசனையை ஏற்றுக்கொள்வது மற்றவர்களுக்குச் சுலபமாக இருக்கும்.
12 அந்த நபரிடம் பேசும்போது, எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான் என்றும், எல்லாருக்குமே அவ்வப்போது ஆலோசனை தேவை என்றும் சொல்லி மூப்பர் அவருடைய மனதைத் தயார்படுத்துவார். (ரோ. 3:23) அந்தச் சகோதரர் தவறான படியை எடுத்து வைத்திருக்கிறார் என்பதை பைபிளில் இருந்து சாந்தமான குரலில் மரியாதையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்வார். செய்த தவறை அந்தச் சகோதரர் உணர்ந்த பிறகு, மூப்பர் “விதை விதைப்பார்.” அதாவது, எளிமையான வார்த்தைகளில் அவர் செய்த தவறை எப்படிச் சரிசெய்யலாம் என்று புரிய வைப்பார். அதற்குப் பிறகு, அந்த மூப்பர் “தண்ணீர் ஊற்றுவார்.” அதாவது, அவரிடம் இருக்கிற நல்ல விஷயங்களைச் சொல்லி அவரைப் பாராட்டுவார். பிறகு, அவரோடு சேர்ந்து ஜெபம் செய்வார்.—யாக். 5:15.
ஆலோசனை கேட்காமலேயே ஆலோசனை கொடுக்க அன்பும் திறமையும் தேவை (பாராக்கள் 10-12)
13. ஆலோசனையை ஒருவர் புரிந்துகொண்டார் என்பதை மூப்பர்கள் எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?
13 சிலசமயத்தில், ஆலோசனை கொடுக்கிறவர் ஒருவிதமாகச் சொல்லியிருப்பார், அதைக் கேட்கிறவர் வேறு விதமாகப் புரிந்திருப்பார். இந்த மாதிரி நடக்காமல் இருக்க மூப்பர்கள் என்ன செய்யலாம்? ஞானமாக சில கேள்விகளைக் கேட்கலாம்; அதுவும் மரியாதையான விதத்தில். (பிர. 12:11) அவர் சொல்கிற பதில்களை வைத்து ஆலோசனையை அவர் சரியாகப் புரிந்துகொண்டாரா என்பதை மூப்பர்களால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்.
சரியான நேரத்தில், சரியான விதத்தில் ஆலோசனை கொடுங்கள்
14. கோபமாக இருக்கும்போது நாம் ஆலோசனை கொடுக்கலாமா? விளக்குங்கள்.
14 நாம் எல்லாருமே பாவிகளாக இருப்பதால், நாம் சொல்கிற அல்லது செய்கிற விஷயங்கள் மற்றவர்களைக் காயப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. (கொலோ. 3:13) அதேபோல், மற்றவர்கள் செய்கிற விஷயங்களால் நமக்கும் கோபம் வர வாய்ப்பு இருக்கிறது. இதை பைபிள்கூட ஒத்துக்கொள்கிறது. (எபே. 4:26) கோபமாக இருக்கும்போது நாம் இன்னொருவருக்கு ஆலோசனை கொடுக்கலாமா? அது சரியாக இருக்காது. ஏன்? ஏனென்றால், “கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நிறைவேற்ற முடியாது.” (யாக். 1:20) கோபமாக இருக்கும்போது ஆலோசனை கொடுத்தால், நிலைமை இன்னும் மோசமாகிவிடலாம். அதற்காக, கோபப்படுத்தியவர்களிடம் நம்முடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சொல்லவே கூடாது என்று அர்த்தமா? இல்லை. கோபம் தணிந்த பிறகு பேசுவது சரியாக இருக்கும். இந்த விஷயத்தில், நமக்கு நல்ல உதாரணமாக இருக்கிற எலிகூவைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
15. எலிகூவின் உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (படத்தையும் பாருங்கள்.)
15 போலி நண்பர்கள் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டை, பொய் என நிரூபிக்க யோபு பல நாள் போராடியதை எலிகூ கவனித்தார். அவர் நெஞ்சில் யோபுமீது கரிசனை வந்தது. தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிக்க யோபு முயற்சி செய்த சமயத்தில், யெகோவாவைப் பற்றிச் சில தவறான விஷயங்களைச் சொன்னார். அப்போது, எலிகூவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும், பேசுவதற்கான நேரம் வரும்வரை எலிகூ பொறுமையாக இருந்தார். அந்த நேரம் வந்தபோது, மரியாதையான விதத்தில் சாந்தமாக யோபுவுக்கு ஆலோசனை கொடுத்தார். (யோபு 32:2; 33:1-7) எலிகூவின் உதாரணத்தில் இருந்து ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்: ஆலோசனை கொடுக்கும்போது சரியான நேரத்திலும் சரியான விதத்திலும், அதாவது மரியாதையோடும் அன்போடும், கொடுக்க வேண்டும்.—பிர. 3:1, 7.
முன்பு கோபம் பொத்துக்கொண்டு வந்திருந்தாலும், இப்போது எலிகூ சாந்தமாகவும் ரொம்ப மரியாதையாகவும் ஆலோசனை கொடுத்தார் (பாரா 15)
தொடர்ந்து ஆலோசனை கொடுங்கள், ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள்
16. சங்கீதம் 32:8-ல் இருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
16 ‘யெகோவா தன்னுடைய கண்ணை நம்மேல் வைத்து நமக்கு அறிவுரை சொல்வார்’ என்று இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் சொல்கிறது. (சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள்.) இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவா நமக்குத் தொடர்ந்து உதவி செய்துகொண்டே இருக்கிறார் என்பது தெரிகிறது. அவர் நமக்கு ஆலோசனை கொடுப்பதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அதைக் கடைப்பிடிக்கவும் உதவுகிறார். யெகோவா இந்த விஷயத்தில் ஒரு நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார், இல்லையா? மற்றவர்களுக்கு நாம் ஆலோசனை கொடுக்கும்போது நாமும் யெகோவாவைப் போல் நடந்துகொள்ள வேண்டும். அதாவது, மற்றவர்கள்மேல் நம்முடைய கண்ணை வைத்து அவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும். அவர்கள் ஞானமான முடிவுகளை எடுக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
17. நமக்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுக்கிற மூப்பர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்? விளக்குங்கள். (ஏசாயா 32:1, 2)
17 எப்போதையும்விட இப்போது நமக்கு ஆலோசனை அதிகமாகத் தேவைப்படுகிறது, நாமும் மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கிறது. (2 தீ. 3:1) பைபிளிலிருந்து நமக்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுக்கிற மூப்பர்கள், “தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடை” போல் இருக்கிறார்கள். (ஏசாயா 32:1, 2-ஐ வாசியுங்கள்.) காதுக்கு இனிமையாக இல்லாவிட்டாலும், வாழ்க்கைக்கு இனிமையாக இருக்கிற ஆலோசனைகளை நம் நண்பர்கள் கொடுத்தால் அவை எப்படி இருக்கும்? ‘வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களை’ போல் அவை இருக்கும். (நீதி. 25:11) நாம் எல்லாருமே ஆலோசனை கொடுப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான ஞானத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருப்போமாக!
பாட்டு 109 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்