படிப்புக் கட்டுரை 36
பாட்டு 103 மேய்ப்பர்கள்—கடவுள் தரும் பரிசு
மூப்பர்களைக் கூப்பிடுங்கள்
“சபையில் இருக்கிற மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும்.”—யாக். 5:14.
என்ன கற்றுக்கொள்வோம்?
உதவி தேவைப்படும்போது சபை மூப்பர்களைக் கூப்பிடுவது ஏன் முக்கியம் என்று கற்றுக்கொள்வோம்.
1. யெகோவா தன் மக்கள்மேல் உயிரையே வைத்திருப்பதை எப்படிக் காட்டுகிறார்?
யெகோவா தன் மக்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார். ஒரு அன்பான மேய்ப்பர் தன் ஆடுகளைக் கவனித்துக்கொள்வதுபோல் யெகோவா தன் மக்களைக் கவனித்துக்கொள்கிறார். அவர்களுக்காக தன் ஒரே மகனையே கொடுத்திருக்கிறார். அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக மூப்பர்களையும் நியமித்திருக்கிறார். (அப். 20:28) மூப்பர்கள் தன்னுடைய மக்களைப் பாசமாகவும் அன்பாகவும் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று அவர் நினைக்கிறார். சபையின் தலைவராக இருக்கிற இயேசு கிறிஸ்து சொல்கிற ஆலோசனைகளைக் கேட்டு மூப்பர்கள் கடவுளுடைய மந்தையைக் கவனித்துக்கொள்கிறார்கள். மந்தையில் இருப்பவர்கள் யெகோவாவோடு நெருக்கமாக இருப்பதற்கு அவர்கள் உதவி செய்கிறார்கள்.—ஏசா. 32:1, 2.
2. எசேக்கியேல் 34:15, 16 சொல்கிற மாதிரி, யெகோவா யாருக்கு உதவி செய்கிறார்?
2 யெகோவா தன் மக்கள் எல்லார்மேலும் ரொம்ப அக்கறையாக இருக்கிறார். அதுவும், நாம் கஷ்டப்படும்போது நம்மை ரொம்பப் பாசமாகக் கவனித்துக்கொள்கிறார். ஒருவேளை, தப்பு செய்துவிட்டு நாம் கஷ்டப்பட்டால் மூப்பர்கள் மூலமாக உதவி செய்கிறார். (எசேக்கியேல் 34:15, 16-ஐ வாசியுங்கள்.) அதேசமயம், நம் பங்கிலும் அவரிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அதோடு, சபையில் இருக்கும் ‘மேய்ப்பர்களிடமும் போதகர்களிடமும்’ நாம் உதவி கேட்க வேண்டுமென்றும் அவர் எதிர்பார்க்கிறார்.—எபே. 4:11, 12.
3. மூப்பர்கள் மூலம் யெகோவா செய்யும் உதவியைப் பற்றித் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை?
3 தன்னோடு நெருக்கமாக இருக்க யெகோவா எப்படி மூப்பர்கள் மூலம் நமக்கு உதவி செய்கிறார் என்று இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்வோம். குறிப்பாக, இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வோம்: எப்போது நாம் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும்? ஏன் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும்? மூப்பர்கள் எப்படி நமக்கு உதவி செய்கிறார்கள்? ஒருவேளை, இப்போது நமக்கு மூப்பர்களுடைய உதவி தேவைப்படாமல் இருந்தாலும் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வது நமக்கு உதவி செய்யும். எப்படி? கடவுள் செய்திருக்கிற இந்த ஏற்பாட்டுக்கு இன்னும் நன்றியோடு இருக்கவும், மூப்பர்களுடைய உதவி தேவைப்படும்போது என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்துகொள்ளவும் உதவும்.
நாம் எப்போது மூப்பர்களைக் கூப்பிட வேண்டும்?
4. யெகோவாவோடு இருக்கும் நட்பு பலவீனமாவதைப் பற்றித்தான் யாக்கோபு 5:14-16, 19, 20 வசனங்கள் சொல்கின்றன என்று நமக்கு எப்படித் தெரியும்? (படங்களையும் பாருங்கள்.)
4 யெகோவா மூப்பர்களைப் பயன்படுத்தி எப்படி உதவி செய்கிறார் என்பதைப் பற்றி யாக்கோபு எழுதியிருக்கிறார். “உங்களில் எவனாவது வியாதியாக இருக்கிறானா? அப்படியானால், சபையில் இருக்கிற மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும்” என்று அவர் சொல்லியிருக்கிறார். (யாக்கோபு 5:14-16, 19, 20-ஐ வாசியுங்கள்.) இங்கே யாக்கோபு, உடம்பு சரியில்லாமல் போவதைப் பற்றிச் சொல்லவில்லை. யெகோவாவோடு இருக்கும் நட்பு பலவீனமாவதைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறார். அது நமக்கு எப்படித் தெரியும்? முதலாவதாக, டாக்டரை வரவழைக்க வேண்டுமென்று சொல்லாமல் மூப்பர்களை வரவழைக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். இரண்டாவதாக, ஒருவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது அவர் குணமாவார் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், யெகோவாவோடு இருக்கும் பந்தம் பலவீனமாக இருப்பதை வியாதியோடு அவர் ஒப்பிட்டு சொன்னது பொருத்தமாக இருக்கிறது. எப்படி? உடம்பு சரியில்லாதவர் குணமாக வேண்டுமென்றால் அவர் டாக்டரைப் போய்ப் பார்க்க வேண்டும், என்ன பிரச்சினை என்று சொல்ல வேண்டும், டாக்டர் சொல்கிறபடி செய்ய வேண்டும். அதேபோல், ஒருவருக்கு யெகோவாவோடு இருக்கும் நட்பு சரியாக வேண்டுமென்றால் அவர் மூப்பர்களிடம் பேச வேண்டும், என்ன பிரச்சினை என்று சொல்ல வேண்டும், பைபிளிலிருந்து அவர்கள் தரும் ஆலோசனைகள்படி நடக்க வேண்டும்.
உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது டாக்டரைப் போய்ப் பார்ப்பதுபோல், விசுவாசம் பலவீனமாக இருக்கும்போது மூப்பர்களைப் போய்ப் பார்க்க வேண்டும் (பாரா 4)
5. யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் பலவீனமாக இருக்கிறதா என்பதை நாமே எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
5 யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பு பலவீனமாவது தெரிந்ததுமே நாம் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டுமென்று யாக்கோபு 5-வது அதிகாரத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பு மொத்தமாக முறிந்துபோவதற்கு முன்பே அப்படி உதவி கேட்பது நல்லது. ஏனென்றால், யெகோவாவோடு நெருக்கமாக இருக்கிறோம் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி இல்லாமல் இருக்கலாம். (யாக். 1:22) உதாரணத்துக்கு, சர்தையில் இருந்த சில கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்துவந்ததாக நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்று இயேசு சொன்னார். (வெளி. 3:1, 2) அதனால், யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பு பலமாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு ஒரு வழி, யெகோவாமேல் முன்பு நமக்கு இருந்த அன்பு இப்போது குறைந்துவிட்டதா என்று யோசித்துப் பார்ப்பது. (வெளி. 2:4, 5) நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசித்துப் பார்ப்பதில் முன்பு எனக்கு இருந்த ஆர்வம் இப்போது குறைந்துவிட்டதா? கூட்டங்களுக்குத் தயாரிக்காமல் போகிறேனா? அவ்வப்போது போகாமலேயே இருந்துவிடுகிறேனா? ஏதோ கடமைக்காக ஊழியம் செய்கிறேனா? வேறு விஷயங்களுக்காக என் நேரத்தையெல்லாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேனா? பணத்தைப் பற்றித்தான் எப்போதும் யோசித்துக்கொண்டு இருக்கிறேனா?’ இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நாம் ஆம் என்று பதில் சொன்னால், யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். யெகோவாவோடு இருக்கும் நட்பை நம்மாலேயே பலப்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் அல்லது யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயத்தை நாம் ஏற்கெனவே செய்திருந்தால் உடனே மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும்.
6. பெரிய பாவத்தைச் செய்த ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
6 ஒருவர் பெரிய பாவத்தைச் செய்துவிட்டால், சபையிலிருந்து அவர் நீக்கப்படலாம். (1 கொ. 5:11-13) மீட்புவிலை மூலம் யெகோவா அவரை மன்னிக்க வேண்டுமென்றால், அவர் ‘மனம் திருந்தியதை செயலில் காட்ட’ வேண்டும். (அப். 26:20) அப்படிக் காட்டுவதற்கு ஒரு வழி, அவர் செய்த பாவத்தைப் பற்றி மூப்பர்களிடம் போய்ப் பேசுவது. அப்போதுதான், யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பில் விழுந்த விரிசல் சரியாகும். அதனால், மூப்பர்களுடைய உதவி இல்லாமல் தானே அந்த விரிசலை சரிசெய்துகொள்ளலாம் என்று அவர் நினைக்கக் கூடாது.
7. மூப்பர்களின் உதவி வேறு யாருக்கும் தேவை?
7 நாம் பெரிய பாவங்களைச் செய்யும்போது மட்டுமல்ல, யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் பலவீனமாக இருக்கும்போதும் மூப்பர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். (அப். 20:35) உதாரணத்துக்கு, நீங்கள் தப்பான ஆசையோடு போராடிக்கொண்டு இருக்கலாம். அந்தத் தப்பைச் செய்துவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு இருக்கலாம். அதுவும், நீங்கள் சத்தியத்துக்கு வருவதற்குமுன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்திருந்தால்... ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்திருந்தால்... அல்லது, நீங்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தால்... அந்தப் பயம் இன்னும் அதிகமாக உங்களுக்கு இருக்கலாம். ஆனால், நீங்கள் தனியாகப் போராட வேண்டியதில்லை. இதைப் பற்றி ஏதாவது ஒரு மூப்பரிடம் நீங்கள் பேசலாம். அவர் நீங்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்பார், நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று உங்களுக்குச் சொல்வார், எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் தப்பு செய்யாததைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவார். (பிர. 4:12) ஒருவேளை, தவறான எண்ணங்களோடு திரும்பத் திரும்பப் போராட வேண்டியிருப்பதை நினைத்து நீங்கள் சோர்ந்துபோயிருக்கலாம். அப்போதும் அந்த மூப்பர் சில விஷயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்துவார். யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தை நீங்கள் ரொம்ப முக்கியமாக நினைக்கிறீர்கள் என்பதையும், அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையோடு இல்லாமல் மனத்தாழ்மையாக இருக்கிறீர்கள் என்பதையும் அவர் உங்களுக்கு ஞாபகப்படுத்தி உங்களை உற்சாகப்படுத்துவார்.—1 கொ. 10:12.
8. நாம் செய்யும் ஒவ்வொரு தப்பைப் பற்றியும் மூப்பர்களிடம் பேச வேண்டுமா? விளக்குங்கள்.
8 நீங்கள் செய்த ஒவ்வொரு தப்பைப் பற்றியும் மூப்பர்களிடம் போய்ப் பேச வேண்டுமென்ற அவசியம் இல்லை. உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு சகோதரரையோ சகோதரியையோ கஷ்டப்படுத்துவதுபோல் பேசியிருக்கலாம். இல்லையென்றால், அவர்கள்மேல் பயங்கரமாகக் கோபப்பட்டிருக்கலாம். இதைப் பற்றி மூப்பர்களிடம் பேசுவதற்குப் பதிலாக, இயேசு சொன்னதுபோல் நீங்களே நேரடியாகப் போய் அவர்களோடு பேசி சமாதானமாகலாம். (மத். 5:23, 24) அதோடு, இன்னும் சாந்தமாகவும் பொறுமையாகவும் சுயக்கட்டுப்பாட்டோடும் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்கலாம். இதையெல்லாம் செய்தும் உங்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால் மூப்பர்களிடம் கேளுங்கள். பிலிப்பி சபையில் இருந்த எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் ஒரு பிரச்சினை வந்தபோது அவர்களாலேயே அதைச் சரிசெய்துகொள்ள முடியவில்லை. அதனால், அவர்களுக்கு உதவச் சொல்லி அந்தச் சபையில் இருந்த ஒரு சகோதரரிடம் பவுல் சொன்னார். உங்கள் சபையில் இருக்கும் மூப்பர்கூட உங்களுக்கு அதேபோல் உதவி செய்ய முடியும்.—பிலி. 4:2, 3.
ஏன் மூப்பர்களைக் கூப்பிட வேண்டும்?
9. அவமானமாகிவிடுமோ என்று நினைத்து நாம் ஏன் மூப்பர்களிடம் உதவி கேட்காமல் இருக்கக் கூடாது? (நீதிமொழிகள் 28:13)
9 நீங்கள் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் அல்லது தப்பான ஒரு ஆசையை எதிர்த்து இதற்குமேலும் போராட முடியாது என்று உங்களுக்குத் தோன்றினால் மூப்பர்களிடம் உதவி கேளுங்கள். அப்படி உதவி கேட்க உங்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் தேவை. அவமானமாகிவிடுமோ என்று நினைத்து உதவி கேட்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். ஏனென்றால், இது யெகோவா செய்திருக்கும் ஒரு ஏற்பாடு. அவரோடு இருக்கும் நம் நட்பைப் பலப்படுத்துவதற்காக அவர் மூப்பர்களைக் கொடுத்திருக்கிறார். நாம் மூப்பர்களிடம் பேசும்போது, யெகோவாவை நம்புவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் காட்டுகிறோம். அதோடு, நாம் விசுவாசத்தைவிட்டு விலகாமல் இருக்க யெகோவாவின் உதவி தேவை என்பதைப் புரிந்துவைத்திருப்பதையும் காட்டுகிறோம். (சங். 94:18) நாம் செய்த பாவத்தைப் பற்றி மூப்பர்களிடம் சொல்லி, அந்தப் பாவத்தை மறுபடியும் செய்யாமல் இருக்கும்போது, யெகோவா இரக்கம் காட்டி நம்மை மன்னிப்பார்.—நீதிமொழிகள் 28:13-ஐ வாசியுங்கள்.
10. நம் பாவங்களை மூப்பர்களிடமிருந்து மறைத்தால் என்னவாகும்?
10 ஆனால், நாம் செய்த பாவத்தைப் பற்றி மூப்பர்களிடம் பேசாமல் இருந்தால், நம் பிரச்சினை இன்னும் பெரிதாகிவிடும். தான் செய்த தப்பைப் பற்றி தாவீது ராஜா யாரிடமும் சொல்லாமல் இருந்தபோது மனதளவில் நொந்துபோனார்... உடலளவில் சோர்ந்துபோனார்... அதைவிட முக்கியமாக, யெகோவாவோடு அவருக்கு இருந்த நட்பில் விரிசல் விழுந்தது. (சங். 32:3-5) நம் உடம்பில் இருக்கும் வியாதிக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் நிலைமை எப்படி மோசமாகுமோ, அதேபோல் நாம் செய்த பாவத்தைப் பற்றி மூப்பர்களிடம் பேசாமல் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். அதனால்தான், மூப்பர்களிடம் பேசும்படி யெகோவா சொல்கிறார். ‘பிரச்சினையைச் சரிசெய்து,’ அவரோடு மறுபடியும் நெருக்கமாவதற்காக அப்படிச் செய்யச் சொல்கிறார்.—ஏசா. 1:5, 6, 18.
11. ஒரு பெரிய பாவத்தைப் பற்றி மூப்பர்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டால் மற்றவர்கள் எப்படிப் பாதிக்கப்படுவார்கள்?
11 நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு அதை மறைத்தால், அதனால் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். முழு சபைக்கும் கடவுளுடைய சக்தி கிடைக்காமல் போய்விடும், சகோதர சகோதரிகளுக்கு இடையில் இருக்கும் சமாதானமும் கெட்டுவிடும். (எபே. 4:30) அதேபோல், சபையில் இருக்கும் யாராவது ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டது நமக்குத் தெரியவந்தால், அதைப் பற்றி மூப்பர்களிடம் போய்ப் பேசும்படி அவரிடம் சொல்ல வேண்டும். கொஞ்ச நாளாகியும் அவர் போய்ச் சொல்லவில்லை என்றால் நாம் போய்ச் சொல்ல வேண்டும். அப்படி நாம் சொல்லாமல் விட்டுவிட்டால், நாமும் யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டதுபோல் ஆகிவிடும். (லேவி. 5:1) நமக்கு யெகோவாமேல் அன்பு இருந்தால், அவருக்கு உண்மையாக இருக்க நாம் ஆசைப்பட்டால் நடந்ததை மூப்பர்களிடம் சொல்வோம். அப்படிச் செய்யும்போது சபை சுத்தமாக இருக்கும், அந்தப் பாவத்தைச் செய்தவரும் யெகோவாவோடு மறுபடியும் நண்பராக முடியும்.
மூப்பர்கள் எப்படி நமக்கு உதவி செய்கிறார்கள்?
12. யெகோவாவோடு ஒருவருக்கு இருக்கும் நட்பு பலவீனமாக இருந்தால் அவருக்கு மூப்பர்கள் எப்படி உதவி செய்வார்கள்?
12 யெகோவாவோடு ஒருவருக்கு இருக்கும் நட்பு பலவீனமாக இருந்தால் அவருக்கு எப்படி உதவி செய்ய வேண்டுமென்று பைபிள் மூலமாக யெகோவா மூப்பர்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறார். (1 தெ. 5:14) நீங்கள் ஏதாவது ஒரு தப்பு செய்துவிட்டால் உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள மூப்பர்கள் சில அன்பான கேள்விகளைக் கேட்கலாம். (நீதி. 20:5) ஆனால், உங்களுடைய கலாச்சாரத்தாலோ... நீங்கள் வளர்ந்த விதத்தாலோ... நீங்கள் செய்த விஷயத்தைப் பற்றிப் பேச உங்களுக்குக் கூச்சமாக அல்லது அசிங்கமாக இருப்பதாலோ... மனம் திறந்து அவர்களிடம் பேசுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், நீங்கள் மனம்விட்டுப் பேசும்போது உங்களுக்கு உதவி செய்வது மூப்பர்களுக்குச் சுலபமாக இருக்கும். “யோசிக்காமல் கொள்ளாமல்” நீங்கள் ஏதாவது பேசிவிடுவீர்களோ என்று நினைத்துப் பயப்பட வேண்டாம். (யோபு 6:3, அடிக்குறிப்பு) நீங்கள் சொல்வதை வைத்து மூப்பர்கள் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். நீங்கள் சொல்வதை ரொம்பக் கவனமாகக் கேட்டு, எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு, அதன் பிறகுதான் அவர்கள் ஆலோசனை கொடுப்பார்கள். (நீதி. 18:13) தேவைப்படும் உதவியைச் செய்ய நிறைய காலம் எடுக்கும் என்று மூப்பர்களுக்குத் தெரியும். அதனால், ஒரு தடவை மட்டுமல்ல, நிறைய தடவை உங்களோடு பேசுவார்கள்.
13. மூப்பர்கள் உங்களுக்காக ஜெபம் செய்வதும் பைபிளிலிருந்து ஆலோசனை கொடுப்பதும் உங்களுக்கு எப்படி உதவும்? (படங்களையும் பாருங்கள்.)
13 நீங்கள் தப்பு செய்திருந்தால், அதை நினைத்து ஏற்கெனவே குற்றவுணர்ச்சியில் இருப்பீர்கள். அதை இன்னும் அதிகமாக்குவதுபோல் மூப்பர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். அதற்குப் பதிலாக, உங்களுக்காக அவர்கள் ஜெபம் செய்வார்கள். அந்த ஜெபத்துக்கு “வலிமை” இருக்கிறது. நீங்களே எதிர்பார்க்காத அளவுக்குப் பலமும் ஆறுதலும் அந்த ஜெபத்தினால் உங்களுக்குக் கிடைக்கும். மூப்பர்கள் உங்களுக்கு ‘யெகோவாவின் பெயரில் எண்ணெயும் பூசுவார்கள்.’ (யாக். 5:14-16) இங்கே “எண்ணெய்” என்று சொல்லியிருப்பது, கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் உண்மைகள். மூப்பர்கள் பைபிளிலிருந்து பொருத்தமான வசனங்களைக் காட்டி உங்களுக்கு ஆறுதலும் உற்சாகமும் தருவார்கள். யெகோவாவோடு இருக்கும் நட்பை மறுபடியும் பலப்படுத்திக்கொள்ள உங்களுக்கு உதவி செய்வார்கள். (ஏசா. 57:18) எப்போதும் சரியானதைத்தான் செய்ய வேண்டுமென்ற உங்கள் முடிவில் உறுதியாக இருக்க, பைபிளிலிருந்து அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவி செய்யும். அவர்கள் மூலம் யெகோவா உங்களிடம், “இதுதான் சரியான வழி, இதிலே நட” என்று சொல்வதைக் கேட்பீர்கள்.—ஏசா. 30:21.
மூப்பர்கள் பைபிளிலிருந்து நமக்கு ஆறுதலும் உற்சாகமும் தருவார்கள் (பாராக்கள் 13, 14)
14. கலாத்தியர் 6:1 சொல்வதுபோல், “தவறான பாதையில்” போகிறவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவி செய்கிறார்கள்? (படங்களையும் பாருங்கள்.)
14 கலாத்தியர் 6:1-ஐ வாசியுங்கள். “தவறான பாதையில்” அடியெடுத்து வைக்கிறவர்கள், யெகோவாவின் நீதியான நெறிமுறைகளுக்கு ஏற்றபடி வாழ்வதில்லை. தவறான பாதையில் அடியெடுத்து வைப்பது என்பது தப்பான ஒரு முடிவை எடுப்பதையோ ஒரு பெரிய பாவத்தைச் செய்வதையோ அர்த்தப்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள்மேல் மூப்பர்களுக்கு உண்மையான அன்பு இருப்பதால் அவர்களை ‘சாந்தமாகச் சரிப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.’ “சரிப்படுத்த” என்பதற்கான கிரேக்க வார்த்தை, உடைந்துபோன எலும்பை ஒரு டாக்டர் சரிசெய்யும் விதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஒரு நல்ல டாக்டர் உடைந்துபோன ஒரு எலும்பைச் சரிசெய்யும்போது வலியை இன்னும் அதிகமாக்கிவிடாமல் இருக்க தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார். அதேபோல், தவறான பாதையில் அடியெடுத்து வைத்த ஒருவருக்கு மூப்பர்கள் ஆலோசனை கொடுக்கும்போது அவருடைய வலியை இன்னும் அதிகமாக்கிவிடாமல் இருக்க தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார்கள். அதேசமயத்தில், மூப்பர்களும் ‘எந்தத் தவறும் செய்துவிடாதபடி கவனமாக இருக்க’ வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், மூப்பர்களுக்கும் பாவ இயல்பு இருக்கிறது, அவர்களும் தப்பான பாதையில் போக வாய்ப்பு இருக்கிறது. இதை அவர்கள் புரிந்துவைத்திருப்பதால், தப்பான பாதையில் போன ஒருவருக்கு உதவி செய்யும்போது தங்களைப் பெரிய ஆளாகவோ எந்தத் தப்பும் செய்யாதவர்களாகவோ காட்டிக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையாகவும் கரிசனையாகவும் நடந்துகொள்கிறார்கள்.—1 பே. 3:8.
15. நமக்கு ஒரு பிரச்சினை வரும்போது நாம் என்ன செய்யலாம்?
15 மூப்பர்களை நாம் தாராளமாக நம்பலாம். அவர்களை நம்பி நாம் சொல்லும் விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்வதற்கும்... சொந்த கருத்துகளைச் சொல்லாமல் பைபிளின் அடிப்படையில் ஆலோசனை கொடுப்பதற்கும்... நம் சுமைகளைச் சுமக்க நமக்கு உதவி செய்வதற்கும்... அவர்களுக்குப் பயிற்சி கிடைத்திருக்கிறது. (நீதி. 11:13; கலா. 6:2) ஒவ்வொரு மூப்பருக்கும் வித்தியாசமான குணங்கள் இருக்கலாம். சிலர் நிறைய வருஷங்களாக மூப்பராக இருக்கலாம். ஆனால், எந்த மூப்பரிடம் போய்ப் பேச நமக்குத் தோன்றுகிறதோ அவரிடம் நாம் தாராளமாகப் போய்ப் பேசலாம். அதேசமயத்தில், நாம் எதிர்பார்க்கும் ஆலோசனை கிடைக்கும்வரை ஒவ்வொரு மூப்பரிடமாகப் போய் ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. ஒருவேளை அப்படிச் செய்தால், ‘நம் காதுகளுக்கு இனிமையாய் இருக்கும் விஷயங்களைத்தான்’ கேட்கிறோம்... பைபிளில் இருக்கும் “பயனுள்ள போதனைகளை” ஒதுக்கித்தள்ளுகிறோம்... என்றாகிவிடும். (2 தீ. 4:3) ஒரு பிரச்சினையைப் பற்றி நாம் ஒரு மூப்பரிடம் பேசப் போகும்போது, வேறு மூப்பர்களிடமும் அதைப் பற்றிப் பேசினோமா என்றும், அவர்கள் என்ன ஆலோசனை கொடுத்தார்கள் என்றும் அந்த மூப்பர் கேட்கலாம். மனத்தாழ்மையாக இருப்பதால் அவர் மற்ற மூப்பர்களிடமும் ஆலோசனை கேட்கலாம்.—நீதி. 13:10.
நம்முடைய பொறுப்பு என்ன?
16. நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
16 கடவுளுடைய மக்களான நம்மைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மூப்பர்களுக்கு இருந்தாலும் நாம் என்ன முடிவெடுக்க வேண்டுமென்று அவர்கள் சொல்ல மாட்டார்கள். கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதும் நல்ல முடிவுகளை எடுப்பதும் நம் ஒவ்வொருவருடைய பொறுப்பு. நாம் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதற்கு நாம்தான் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். யெகோவாவின் உதவியோடு நம்மால் அவருக்கு உண்மையாக இருக்க முடியும். (ரோ. 14:12) ஒரு விஷயத்தை இப்படிச் செய்யுங்கள் அல்லது அப்படிச் செய்யுங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, அந்த விஷயத்தைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்று மூப்பர்கள் பைபிளிலிருந்து நமக்குப் புரிய வைப்பார்கள். இப்படி, நம்முடைய “பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்தி” நாமே சரியான முடிவை எடுக்க நமக்கு உதவி செய்வார்கள்.—எபி. 5:14.
17. நாம் எதில் தீர்மானமாக இருக்க வேண்டும்?
17 யெகோவாவின் மந்தையில் ஒருவராக இருப்பது நமக்குக் கிடைத்த ஒரு பெரிய ஆசீர்வாதம்! நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக, ‘நல்ல மேய்ப்பராக’ இருக்கும் இயேசுவை யெகோவா மீட்புவிலையாகக் கொடுத்திருக்கிறார். (யோவா. 10:11) நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்ள யெகோவா மூப்பர்களையும் கொடுத்திருக்கிறார். “என் இதயத்துக்குப் பிடித்த மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் அறிவாலும் விவேகத்தாலும் உங்களைப் போஷிப்பார்கள்” என்று ஏற்கெனவே சொன்னது போல அவர் செய்திருக்கிறார். (எரே. 3:15) யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் பலவீனமாக இருந்தாலோ, அதில் விரிசல் விழுந்தாலோ தயங்காமல் நாம் மூப்பர்களிடம் உதவி கேட்கலாம். மூப்பர்கள் மூலம் யெகோவா தரும் உதவியை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் தீர்மானமாக இருக்கலாம்.
பாட்டு 31 யெகோவாவின் பாதையில் நடப்போம்!