படிப்புக் கட்டுரை 35
பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்
மூப்பர்களே, சபையிலிருந்து நீக்கப்படுகிறவர்களுக்கு உதவுங்கள்
“மனம் திருந்தத் தேவையில்லாத 99 நீதிமான்களைக் குறித்து ஏற்படுகிற சந்தோஷத்தைவிட மனம் திருந்துகிற ஒரே பாவியைக் குறித்துப் பரலோகத்தில் ஏற்படுகிற சந்தோஷம் அதிகமாக இருக்கும்.”—லூக். 15:7.
என்ன கற்றுக்கொள்வோம்?
ஏன் சிலர் சபையிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும், அப்படிப்பட்டவர்கள் மனம் திருந்தி யெகோவாவோடு மறுபடியும் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள மூப்பர்கள் எப்படி உதவலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.
1-2. (அ) பாவம் செய்துவிட்டு மனம் திருந்தாதவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? (ஆ) பாவம் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?
யெகோவா எல்லா விதமான நடத்தையையும் ஏற்றுக்கொள்கிற கடவுள் கிடையாது. அவர் பாவத்தை வெறுக்கிறார். (சங். 5:4-6) தன்னுடைய வார்த்தையில் இருக்கும் நீதியான நெறிமுறைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அதேசமயத்தில், நாம் பாவிகளாக இருப்பதால் முழுமையான கீழ்ப்படிதலை நம்மால் காட்ட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். (சங். 130:3, 4) ஆனால் அதற்காக, ‘கடவுளுடைய அளவற்ற கருணையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு,’ ‘கடவுள்பக்தி இல்லாத . . . வெட்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுகிற’ ஆட்களை யெகோவா பொறுத்துக்கொள்வது கிடையாது. (யூ. 4) “கடவுள்பக்தி இல்லாதவர்கள்” அர்மகெதோன் போரில் ‘அழிக்கப்படுவார்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—2 பே. 3:7; வெளி. 16:16.
2 ஆனாலும், ஒருவர்கூட அழிந்துபோகக் கூடாது என்று யெகோவா நினைக்கிறார். இந்தத் தொடரின் முந்தின கட்டுரைகளில் பார்த்த மாதிரி “எல்லாரும் மனம் திருந்த வேண்டும்” என்பதுதான் அவருடைய விருப்பம். (2 பே. 3:9) பாவம் செய்தவர்கள் மனம் திருந்தி, யெகோவாவோடு மறுபடியும் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்காக, மூப்பர்கள் யெகோவா மாதிரியே பொறுமையாக உதவுகிறார்கள். ஆனால், பாவம் செய்த எல்லாருமே மனம் திருந்துவார்கள் என்று சொல்ல முடியாது. (ஏசா. 6:9) மூப்பர்கள் திரும்பத் திரும்ப முயற்சி எடுத்த பிறகும், சிலர் தங்களுடைய தவறான வழியிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருக்கலாம். இப்படி ஒரு சூழ்நிலைமையில் என்ன செய்ய வேண்டும்?
அந்தப் பொல்லாத மனிதனை நீக்கிவிடுங்கள்
3. (அ) மனம் திருந்தாத பாவிகளை என்ன செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது? (ஆ) பாவம் செய்தவர் சபையிலிருந்து நீக்கப்படுவதற்கு ஒரு விதத்தில் அவரே காரணம் என்று ஏன் சொல்கிறோம்?
3 பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தாதபோது, 1 கொரிந்தியர் 5:13-ல் இருக்கிற ஆலோசனையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் மூப்பர்களுக்கு வந்துவிடுகிறது. “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று அந்த வசனம் சொல்கிறது. ஒரு விதத்தில், இப்படி நடப்பதற்கு பாவம் செய்த அந்த நபர்தான் காரணம். அவர்a எதை விதைத்தாரோ அதை அறுவடை செய்கிறார். (கலா. 6:7) ஏன் அப்படிச் சொல்கிறோம்? அவரை மனம் திருந்தத் தூண்டுவதற்கு மூப்பர்கள் திரும்பத் திரும்ப முயற்சி எடுத்தும், அவர் மனம் திருந்த மறுத்துவிட்டார். (2 ரா. 17:12-15) யெகோவாவுடைய நெறிமுறைகளின்படி வாழ அவருக்கு விருப்பம் இல்லை என்பதை அவருடைய செயல்கள் காட்டுகிறது.—உபா. 30:19, 20.
4. மனம் திருந்தாத ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று சபையில் ஏன் அறிவிப்பு செய்யப்படுகிறது?
4 மனம் திருந்தாத ஒருவர் சபையிலிருந்து நீக்கப்படும்போது, அவர் இனியும் ஒரு யெகோவாவின் சாட்சி கிடையாது என்று சபையில் அறிவிப்பு செய்யப்படும்.b இந்த அறிவிப்பு அந்த நபரை அவமானப்படுத்துவதற்காகச் செய்யப்படுவதில்லை. சபையில் இருக்கிறவர்கள் பைபிள் ஆலோசனையின்படி நடப்பதற்காகச் செய்யப்படுகிறது. அந்த ஆலோசனை இதுதான்: “அப்படிப்பட்டவனோடு பழகுவதை விட்டுவிட வேண்டும்,” “அப்படிப்பட்டவனோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடவும் கூடாது.” (1 கொ. 5:9-11) ஒரு நல்ல காரணத்துக்காகத்தான் யெகோவா இந்த ஆலோசனையைக் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும்.” (1 கொ. 5:6) மனம் திருந்தாத ஒரு நபர் சபையிலிருந்து நீக்கப்படவில்லை என்றால், யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணம் மற்றவர்களுக்கு வந்துவிடலாம்.—நீதி. 13:20; 1 கொ. 15:33.
5. சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை நாம் எப்படிப் பார்க்க வேண்டும், ஏன்?
5 சபையிலிருந்து ஒரு நபர் நீக்கப்படும்போது, நாம் அவரோடு பழக மாட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக, ‘அவர் அவ்வளவுதான்! இனி வரவே மாட்டார்!!’ என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. நாம் அவரை, காணாமல்போன ஒரு ஆடாகப் பார்க்க வேண்டும். காணாமல்போன ஆடு, மந்தைக்குத் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது. அந்த நபர், தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிறார் என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அவர் அர்ப்பணித்ததற்கு ஏற்ற மாதிரி வாழவில்லை; அதனால் ஒரு ஆபத்தான நிலைமையில் இருக்கிறார். (எசே. 18:31) இருந்தாலும், நாம் ஒரு நம்பிக்கையோடு இருக்கலாம்: யெகோவா அவர்மேல் இரக்கம் காட்டும்வரை அவர் திரும்பவும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நம்பிக்கை தங்களுக்கு இருப்பதை மூப்பர்கள் எப்படிக் காட்டலாம்?
சபையிலிருந்து நீக்கப்படுகிறவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவுகிறார்கள்?
6. சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு உதவ மூப்பர்கள் என்ன படிகளை எடுப்பார்கள்?
6 சபையிலிருந்து ஒருவர் நீக்கப்பட்ட பிறகு, மூப்பர்கள் அவர்களைக் கைவிட்டுவிடுவார்களா? அவராகவே முயற்சி எடுத்து யெகோவாவிடம் திரும்பி வரட்டும் என்று விட்டுவிடுவார்களா? இல்லவே இல்லை! மனம் திருந்தாத நபரிடம், அவரை சபையிலிருந்து நீக்கப்போவதாகச் சொல்லும் சமயத்தில், திரும்பவும் சபைக்குள் வருவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மூப்பர்களின் அந்தக் குழு அவரிடம் விளக்குவார்கள். ஆனால் அதோடு முடித்துக்கொள்ள மாட்டார்கள். பெரும்பாலான சமயத்தில், ஒருசில மாதத்திலேயே அவரை மறுபடியும் சந்தித்துப் பேச விரும்புவதாக அவரிடம் சொல்வார்கள். எதற்காக? அவர் மனம் மாறியிருக்கிறாரா என்று பார்ப்பதற்காக. மூப்பர்களைச் சந்திப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டால், அடுத்த தடவை அவரைச் சந்திக்கும்போது, அவர் மனம் திருந்தி யெகோவாவிடம் வருவதற்கு அன்பாகக் கேட்டுக்கொள்வார்கள். அந்தச் சமயத்திலும் அவருடைய மனம் மாறவில்லை என்றால் மூப்பர்கள் முயற்சியைக் கைவிட்டுவிடுவார்களா? இல்லை. எதிர்காலத்திலும் அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு தொடர்ந்து முயற்சி எடுப்பார்கள்; மனம் திருந்துவதற்கு அவரை உற்சாகப்படுத்துவார்கள்.
7. சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரைக் கையாளும்போது மூப்பர்கள் எப்படி யெகோவா மாதிரியே கரிசனை காட்டுகிறார்கள்? (எரேமியா 3:12)
7 சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரிடம் மூப்பர்கள் யெகோவா மாதிரியே கரிசனையோடு நடந்துகொள்வார்கள். வழிவிலகிப்போன இஸ்ரவேல் மக்கள், அவர்களாகவே திரும்பி வரட்டும் என்று யெகோவா காத்துக்கொண்டு இருக்கவில்லை. மனம் திருந்தியதற்கான அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே யெகோவா அவர்களுக்கு உதவ முதல்படி எடுத்து வைத்தார். இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரையில், ஓசியா தீர்க்கதரிசியின் உதாரணத்தைப் பார்த்தோம். அவருடைய மனைவி பாவம் செய்துகொண்டிருந்தபோதே அவளை மன்னித்து ஏற்றுக்கொள்ள யெகோவா சொன்னார். இப்படி, தான் எந்தளவு கரிசனை காட்டுகிறார் என்பதை யெகோவா மக்களுக்குப் புரிய வைத்தார். (ஓசி. 3:1; மல். 3:7) இன்று மூப்பர்களும், பாவம் செய்தவர்கள் மறுபடியும் யெகோவாவிடம் வந்துவிட வேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப்படுகிறார்கள்; அவர்கள் திரும்பி வருவதைக் கஷ்டமாக்கிவிடும் விதத்தில் எதையுமே செய்துவிட மாட்டார்கள்.—எரேமியா 3:12-ஐ வாசியுங்கள்.
8. யெகோவா காட்டும் இரக்கத்தை இயேசு சொன்ன கதை எப்படி விவரிக்கிறது? (லூக்கா 15:7)
8 இயேசு சொன்ன காணாமல்போன மகனைப் பற்றிய கதையை யோசித்துப் பாருங்கள். இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரையில் நாம் அதைப் பற்றிப் பேசினோம். காணாமல்போன அந்த மகன் வீட்டுக்கு வருவதை அவனுடைய அப்பா தூரத்திலேயே பார்த்து விடுகிறார். அவனைப் பார்த்ததும், “ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.” (லூக். 15:20) ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? அவன் வந்து ‘என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா’ என்று கெஞ்சும்வரை அவர் காத்துக்கொண்டு இருக்கவில்லை. ஒரு அன்பான அப்பா செய்வதைத்தான் அவர் செய்தார். அதாவது, அவரே முதல்படி எடுத்தார். காணாமல்போன ஆடுகளைப் பொறுத்தவரை, மூப்பர்களும் இதே மனப்பான்மையைக் காட்டுவதற்கு முயற்சி எடுக்கிறார்கள். காணாமல்போன ஆடு மறுபடியும் யெகோவாவுடைய வீட்டுக்குள் வரவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். (லூக். 15:22-24, 32) பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தும்போது, பரலோகத்திலும் சந்தோஷம் இருக்கும், பூமியிலும் சந்தோஷம் இருக்கும்!—லூக்கா 15:7-ஐ வாசியுங்கள்.
9. பாவம் செய்தவர்களிடம் யெகோவா என்ன கேட்டுக்கொள்கிறார்?
9 இதுவரை நாம் என்ன பார்த்தோம்? மனம் திருந்தாத ஒரு நபர் தொடர்ந்து சபையில் இருப்பதற்கு யெகோவா அனுமதிக்கவே மாட்டார். அதேசமயத்தில், பாவம் செய்த நபர் திரும்பி வருவதற்கு அவர் உதவி செய்யாமலும் இருக்க மாட்டார். அந்த நபர் தன்னிடம் திரும்பி வர வேண்டும் என்று அவர் ஆசையாக எதிர்பார்க்கிறார். மனம் திருந்திய நபர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று ஓசியா 14:4 காட்டுகிறது. “அவனை நான் குணமாக்குவேன்; அவன் இனி துரோகம் செய்ய மாட்டான். அவனை மனப்பூர்வமாக நேசிப்பேன். அவன்மேல் கோபப்பட மாட்டேன்” என்று யெகோவா அந்த வசனத்தில் சொல்கிறார். இந்த வார்த்தைகள், மனம் திருந்திய ஒருவரைப் பற்றிய யெகோவாவின் உணர்வுகளைக் காட்டுகிறது. மூப்பர்கள் இதைப் புரிந்துகொள்வதால், மனம் திருந்துதலுக்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்று பார்க்கிறார்கள். அதேசமயத்தில், யெகோவாவைவிட்டு விலகிப்போன ஒருவருக்கும் இந்த வார்த்தைகள் ஆறுதலாக இருக்கும். ஏனென்றால், யெகோவா அந்த நபரை நேசிக்கிறார் என்பதையும், சீக்கிரத்தில் அவரிடம் திரும்பி வர வேண்டுமென்று ஆசைப்படுகிறார் என்பதையும் இந்த வார்த்தைகள் காட்டுகிறது.
10-11. முன்பு சபையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவுவார்கள்?
10 பல வருஷங்களுக்கு முன்பு சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரைப் பற்றி என்ன சொல்லலாம்? ஒருவேளை அப்படிப்பட்டவர்கள் எந்தப் பாவத்துக்காக சபையிலிருந்து நீக்கப்பட்டார்களோ, அந்தப் பாவத்தை இப்போது செய்யாமல் இருக்கலாம். வேறுசில சூழ்நிலைமைகளில், எதற்காக சபையிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதே அவர்களுக்கு ஞாபகம் இல்லாமல் போயிருக்கலாம். சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும் சரி, அப்படிப்பட்ட நபர்களை மூப்பர்கள் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைச் சந்திக்க முயற்சி செய்வார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசும்போது, அவர்களோடு சேர்ந்து மூப்பர்கள் ஜெபம் செய்து, மறுபடியும் சபைக்குள் வருவதற்கு அவர்களை அன்பாகக் கூப்பிடுவார்கள். ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட்டு பல வருஷங்கள் ஆகியிருந்தால், அவருக்கும் யெகோவாவுக்கும் இருக்கும் பந்தம் பலவீனமாக இருக்கும். அதனால், அவர் மறுபடியும் சபைக்குள் வர விருப்பம் தெரிவித்தால், அவரைத் திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்வதற்கு முன்பேகூட, அவருக்கு பைபிள் படிப்பு நடத்த மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம். எல்லா சமயத்திலும், பைபிள் படிப்புக்கான ஏற்பாட்டை மூப்பர்கள் மட்டும்தான் செய்வார்கள்.
11 மூப்பர்கள் யெகோவா மாதிரியே கரிசனை காட்ட முயற்சி செய்கிறார்கள். அதனால், யெகோவாவைவிட்டு விலகிப்போன எத்தனை பேரைக் கண்டுபிடிக்க முடியுமோ, அத்தனை பேரைக் கண்டுபிடித்து, சபையின் கதவுகள் அவர்களுக்காகத் திறந்திருக்கிறது என்பதைச் சொல்ல ஆசைப்படுகிறார்கள். பாவம் செய்த ஒரு நபர், தான் மனம் திருந்தியிருப்பதைக் காட்டினால், தவறான வழிகளை விட்டிருந்தால், தாமதிக்காமல் அவரைத் திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்ளலாம்.—2 கொ. 2:6-8.
12. (அ) எந்தச் சூழ்நிலைமைகளில் மூப்பர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்? (ஆ) குறிப்பிட்ட சிலவிதமான பாவங்களைச் செய்தவர்கள் யெகோவாவுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவே முடியாது என்ற முடிவுக்கு நாம் ஏன் வந்துவிடக் கூடாது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
12 சில சூழ்நிலைமைகளில், சபையில் ஒருவரைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு மூப்பர்கள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, ஒருவர் குழந்தை வன்கொடுமை செய்த குற்றத்துக்காகவோ, விசுவாசதுரோகத்துக்காகவோ, திருமணத்தை முறிக்க சதி செய்ததற்காகவோ சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட நபர் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறாரா என்பதை மூப்பர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. (மல். 2:14; 2 தீ. 3:6) ஏனென்றால், சபையிலிருக்கிற மற்றவர்களைப் பாதுகாக்கிற பொறுப்பு மூப்பர்களுக்கு இருக்கிறது. அதேசமயத்தில், ஒரு நபர் எப்பேர்ப்பட்ட பாவத்தைச் செய்திருந்தாலும், அவர் உண்மையான மனம் திருந்துதலைக் காட்டும்போது... அவர் செய்த தவறையெல்லாம் விட்டுவிடும்போது... யெகோவா அவரை மறுபடியும் ஏற்றுக்கொள்வார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்குத் துரோகம் செய்த நபர்களை மூப்பர்கள் கையாளும்போது ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டுமென்பது உண்மைதான். ஆனால், அதேசமயத்தில், ஒரு குறிப்பிட்ட பாவத்தைச் செய்தவர்கள் யெகோவாவுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவே முடியாது என்ற முடிவுக்கும் மூப்பர்கள் வந்துவிடக் கூடாது.c—1 பே. 2:10.
சபையில் இருக்கிற மற்றவர்கள் என்ன செய்யலாம்?
13. கண்டிக்கப்பட்ட ஒருவரை நாம் நடத்தும் விதத்துக்கும், சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை நடத்தும் விதத்துக்கும் என்ன வித்தியாசம்?
13 முந்தின கட்டுரையில் பார்த்த மாதிரி, சிலசமயம் ஒரு நபர் கண்டிக்கப்பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பு செய்யப்படலாம். அப்படிச் செய்யப்படும்போது நாம் அந்த நபரோடு தொடர்ந்து பழகலாம். ஏனென்றால், அவர் மனம் திருந்தியிருப்பார்... அவருடைய தப்பான வழிகளை விட்டிருப்பார்... என்று நமக்குத் தெரியும். (1 தீ. 5:20) அவர் இன்னமும் சபையில் ஒரு அங்கத்தினராகத்தான் இருக்கிறார். மற்ற சகோதர சகோதரிகளோடு பழகுவதால் கிடைக்கும் உற்சாகம் அவருக்குத் தேவை. (எபி. 10:24, 25) ஆனால், சபையிலிருந்து ஒருவர் நீக்கப்படும்போது அந்தச் சூழ்நிலைமையே வேறு. அந்த நபரோடு “பழகுவதை விட்டுவிட வேண்டும்,” அவரோடு “சேர்ந்து . . . சாப்பிடவும் கூடாது.”—1 கொ. 5:11.
14. சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரிடம் நடந்துகொள்கிற விஷயத்தில், ஒரு கிறிஸ்தவர் எப்படி பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியைப் பயன்படுத்தி முடிவு எடுக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)
14 ஆனால் அதற்காக, சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை ஒரேயடியாக ஒதுக்கிவைத்து விடுகிறோமா? அப்படிச் சொல்ல முடியாது. நாம் அவரோடு பழகுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை—ஒருவேளை சொந்தக்காரராக இருந்தால் அல்லது முன்பு நெருங்கிய நண்பராக இருந்திருந்தால்—சபைக் கூட்டங்களுக்குக் கூப்பிடலாமா வேண்டாமா என்ற முடிவை கிறிஸ்தவர்கள் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் எடுக்கலாம். கூட்டத்துக்கு அவர் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? முன்பெல்லாம் அப்படிப்பட்ட ஒரு நபருக்கு நாம் வாழ்த்துகூட சொல்ல மாட்டோம். இப்போது இந்த விஷயத்திலும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனசாட்சியைப் பயன்படுத்தி முடிவு செய்ய வேண்டும். அவருக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்பது சிலருக்குப் பிரச்சினையாக இருக்காது. இருந்தாலும், அவரோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம். மற்ற சமயங்களிலும்கூட நாம் அவரோடு சேர்ந்து நேரம் செலவு செய்ய மாட்டோம்.
சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை சபைக் கூட்டத்துக்கு கூப்பிடலாமா, வேண்டாமா என்ற முடிவையும், அவர் கூட்டத்துக்கு வரும்போது அவருக்கு வாழ்த்து சொல்லலாமா வேண்டாமா என்ற முடிவையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்களுடைய மனசாட்சியின் அடிப்படையில் எடுப்பார்கள் (பாரா 14)
15. எப்படிப்பட்ட பாவிகளைப் பற்றி 2 யோவான் 9-11 சொல்கிறது? (“யோவானும் பவுலும் ஒரேவிதமான பாவத்தைப் பற்றி பேசினார்களா?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
15 ‘அப்படிப்பட்ட ஒருவருக்கு வாழ்த்து சொன்னால், அவருடைய பொல்லாத செயல்களுக்கு நாமும் உடந்தையாகிவிடுவோம் என்று பைபிள் சொல்கிறதே’ என்று சிலர் யோசிக்கலாம். (2 யோவான் 9-11-ஐ வாசியுங்கள்.) ஆனால் இந்த வசனத்தின் சூழமைவைப் பார்த்தால், இந்த வழிநடத்துதல் விசுவாசதுரோகிகளுக்கும், பைபிளுக்கு எதிரான செயல்களைத் தீவிரமாகப் பரப்பிக்கொண்டு இருப்பவர்களுக்கும் பொருந்துகிறது. (வெளி. 2:20) அதனால், ஒருவர் விசுவாசதுரோக போதனைகளையும் மற்ற தவறான செயல்களையும் தீவிரமாகப் பரப்பிக்கொண்டிருந்தால், மூப்பர்கள் அவரைச் சந்திக்க எந்த ஏற்பாடும் செய்ய மாட்டார்கள். ஆனாலும், அப்படிப்பட்ட ஒரு நபர்கூட மனம் திருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர் அப்படி மனம் திருந்தி வரும்வரை அவருக்கு நாம் வாழ்த்து சொல்ல மாட்டோம்; கூட்டங்களுக்கு அழைக்கவும் மாட்டோம்.
யெகோவா மாதிரி கரிசனையையும் இரக்கத்தையும் காட்டுங்கள்
16-17. (அ) பாவம் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்? (எசேக்கியேல் 18:32) (ஆ) பாவம் செய்தவர்களுக்கு உதவி செய்யும் விஷயத்தில், மூப்பர்கள் யெகோவாவோடு சேர்ந்து உழைப்பதை எப்படிக் காட்டலாம்?
16 இந்த ஐந்து பாக தொடர் கட்டுரைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? யாருமே அழிந்துபோகக் கூடாது என்று யெகோவா ஆசைப்படுகிறார். (எசேக்கியேல் 18:32-ஐ வாசியுங்கள்.) பாவம் செய்தவர்கள் தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்று அவர் ஏங்குகிறார். (2 கொ. 5:20) சரித்திரத்தின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், வழிவிலகிப்போன தன்னுடைய மக்களையும் தனிப்பட்ட நபர்களையும் மனம் திருந்தச் சொல்லியும், தன்னிடம் திரும்பி வரச்சொல்லியும் யெகோவா திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தில், சபை மூப்பர்களும் யெகோவாவோடு தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்கிறார்கள். பாவம் செய்த நபர்களை மனம் திருந்தத் தூண்டுகிறார்கள்.—ரோ. 2:4; 1 கொ. 3:9.
17 பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது பரலோகத்தில் எவ்வளவு சந்தோஷம் இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நம்முடைய பரலோக அப்பா யெகோவா, காணாமல்போன ஆடுகள் ஒவ்வொன்றும், சபைக்குத் திரும்பி வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவ்வளவு சந்தோஷப்படுகிறார்! யெகோவாவுடைய கரிசனையையும் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் யோசித்துப் பார்க்கும்போது, அவர்மேல் இருக்கும் அன்பு நமக்கு இன்னும் அதிகமாகத்தான் செய்கிறது.—லூக். 1:78.
பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
a இந்தக் கட்டுரையில், பாவம் செய்தவரை ஆண்போல் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது பெண்களுக்கும் பொருந்துகிறது.
b “சபைநீக்கம்” அதாவது, ஆங்கிலத்தில் “டிஸ்ஃபெலோஷிப்” என்ற வார்த்தையை இனிமேலும் நாம் பயன்படுத்த மாட்டோம். 1 கொரிந்தியர் 5:13-ல் இருக்கிற பவுலுடைய வார்த்தைகளுக்கு இசைவாக, இப்படிப்பட்டவர்கள் சபையிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்றுதான் சொல்வோம்.
c எந்தவொரு குறிப்பிட்ட வகையான பாவத்தையும் மன்னிக்க முடியாத பாவம் என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், ஒருவருடைய மனம் கடவுளுக்கு எதிராக நிரந்தரமாக இறுகிப்போய், அவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் மன்னிக்கப்படாது. ஒரு நபர் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்திருக்கிறாரா இல்லையா என்பதை யெகோவாவும், இயேசுவும்தான் நியாயந்தீர்ப்பார்கள்.—மாற். 3:29; எபி. 10:26, 27.