உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 செப்டம்பர் பக். 8-13
  • அநியாயத்தை ஜெயிப்பதற்கான வழி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அநியாயத்தை ஜெயிப்பதற்கான வழி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவாவும் இயேசுவும் அநியாயத்தை வெறுக்கிறார்கள்
  • இயேசு எப்படி அநியாயத்தைச் சமாளித்தார்?
  • இயேசுவைப் போலவே அநியாயத்தைச் சமாளியுங்கள்
  • அநியாயத்தைச் சமாளிக்க இப்போது நாம் என்ன செய்யலாம்?
  • அநியாயத்தைச் சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்ளலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அநியாயத்தை சகித்துக்கொள்வது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 செப்டம்பர் பக். 8-13

படிப்புக் கட்டுரை 37

பாட்டு 114 பொறுமையோடு இருங்கள்

அநியாயத்தை ஜெயிப்பதற்கான வழி

“அவர்கள் நியாயமாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அநியாயம்தான் செய்தார்கள்.”—ஏசா. 5:7.

என்ன கற்றுக்கொள்வோம்?

மற்றவர்கள் அநியாயமாக நடத்தப்பட்டதைப் பார்த்தபோது இயேசு என்ன செய்தார்? நாம் எப்படி அவரைப் போலவே நடந்துகொள்ளலாம்? இதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொள்வோம்.

1-2. அநியாயம் நடக்கும்போது இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள்? அநியாயம் நடக்கும்போது நமக்கு என்ன தோன்றலாம்?

அநியாயமான ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். ஏழைகளையும், வேறு ஊர், நாடு, அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களையும் மக்கள் அநியாயமாக நடத்துகிறார்கள். இன்னும் பல காரணங்களுக்காகவும் மக்கள் அநியாயமாக நடத்தப்படுகிறார்கள். பேராசை பிடித்த வியாபாரிகளும் அரசாங்கத் தலைவர்களும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சுற்றுச்சூழலைக் கெடுக்கிறார்கள். இதனால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இப்படிப்பட்ட அநியாயங்களால் நாம் எல்லாரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

2 நியாயமான, பாதுகாப்பான ஓர் உலகத்தில் வாழ்வதற்குத்தான் நாம் எல்லாரும் ஆசைப்படுகிறோம். அதனால், அநியாயம் நடக்கும்போது நமக்குக் கோபம் வருகிறது. உலகத்தில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சிலர் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் அல்லது பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்லும் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், நாம் “இந்த உலகத்தின் பாகமாக” இருக்கக் கூடாது என்பதும், அநியாயத்தைக் கடவுளுடைய அரசாங்கம் தீர்க்கும்வரை காத்திருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும். (யோவா. 17:16) இருந்தாலும், மற்றவர்கள் அநியாயமாக நடத்தப்படுவதைப் பார்க்கும்போது நமக்கு வேதனையாக இருக்கிறது, சொல்லப்போனால் நம் இரத்தம் கொதிக்கிறது. அதனால், ‘நான் எதுவுமே செய்யக் கூடாதா? கையைக் கட்டிக்கொண்டு சும்மாதான் இருக்க வேண்டுமா?’ என்று யோசிக்கலாம். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, அநியாயத்தைப் பற்றி யெகோவாவும் இயேசுவும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

யெகோவாவும் இயேசுவும் அநியாயத்தை வெறுக்கிறார்கள்

3. அநியாயம் நடக்கும்போது நமக்கு ஏன் கோபம் வருகிறது? (ஏசாயா 5:7)

3 அநியாயம் நடக்கும்போது நமக்கு ஏன் கோபம் வருகிறது என்று பைபிள் சொல்கிறது. யெகோவா அவருடைய சாயலில் நம்மைப் படைத்திருக்கிறார் என்றும், அவர் “நீதியையும் நியாயத்தையும்” விரும்புகிறார் என்றும் அது சொல்கிறது. (சங். 33:5; ஆதி. 1:26) அவர் ஒருநாளும் யாரையும் அநியாயமாக நடத்த மாட்டார், யாரும் மற்றவர்களை அநியாயமாக நடத்துவதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். (உபா. 32:3, 4; மீ. 6:8; சக. 7:9) உதாரணத்துக்கு, ஏசாயா தீர்க்கதரிசியின் காலத்தில் சில இஸ்ரவேலர்கள் மற்ற இஸ்ரவேலர்களை அநியாயமாக நடத்தினார்கள். அப்படிக் கஷ்டப்பட்டவர்களின் ‘கதறல் சத்தத்தை’ யெகோவா கேட்டார். (ஏசாயா 5:7-ஐ வாசியுங்கள்.) அதனால், தொடர்ந்து அவருடைய சட்டத்தை மீறியவர்களையும் மற்றவர்களை அநியாயமாக நடத்தியவர்களையும் யெகோவா தண்டித்தார்.—ஏசா. 5:5, 13.

4. ஒருவன் அநியாயமாக நடத்தப்பட்டதைப் பார்த்தபோது இயேசுவுக்கு எப்படி இருந்தது? (படத்தையும் பாருங்கள்.)

4 யெகோவா மாதிரியே இயேசுவும் நியாயத்தை விரும்புகிறார், அநியாயத்தை வெறுக்கிறார். பூமியில் அவர் ஊழியம் செய்தபோது, சூம்பிய கையுடைய ஒருவனைப் பார்த்தார். அவன்மேல் மனதுருகி அவனைக் குணப்படுத்தினார். ஆனால், கொஞ்சம்கூட ஈவிரக்கமே இல்லாத மதத் தலைவர்கள் அதற்காக இயேசுமேல் கோபப்பட்டார்கள். ஓய்வுநாள் சம்பந்தமாக அவர்கள் போட்ட சட்டங்களுக்கு இயேசு கீழ்ப்படியவில்லை என்று அவரைக் குறை சொன்னார்கள். அந்த மனிதன் குணமானதைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்படவே இல்லை. இந்த அநியாயத்தைப் பார்த்தபோது இயேசுவுக்கு எப்படி இருந்தது? “அவர்களுடைய இதயம் மரத்துப்போயிருந்ததை நினைத்து மிகவும் துக்கப்பட்டார்” என்று பைபிள் சொல்கிறது.—மாற். 3:1-6.

இயேசு ஜெபக்கூடத்தில் இருக்கிறார். சூம்பிய கையுள்ள ஒரு நபரை அவர் குணப்படுத்த போகிறார். அந்த நபரைப் பற்றி யூத மதத் தலைவர்களோடு இயேசு பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் இயேசுவை ஏளனமாகப் பார்க்கிறார்கள்.

யூத மதத் தலைவர்கள் மக்களை அநியாயமாக நடத்தினார்கள். ஆனால், இயேசு மக்களை அன்பாக நடத்தினார் (பாரா 4)


5. அநியாயம் நடக்கும்போது நாம் ஏன் கோபத்திலேயே இருக்கக் கூடாது?

5 அநியாயத்தைப் பார்க்கும்போது யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் கோபம் வருகிறது. அப்படியென்றால், அநியாயம் நடக்கும்போது நமக்கும் கோபம் வருவதில் எந்தத் தப்பும் கிடையாது. (எபே. 4:26) ஆனால், நாம் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அது எவ்வளவுதான் நியாயமாக இருந்தாலும், நம்மால் அநியாயத்தைச் சரிசெய்ய முடியாது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், நாம் ரொம்ப நாள் கோபத்திலேயே இருந்தால் நம் உடம்பும் மனதும்தான் கெட்டுப்போகும். (சங். 37:1, 8; யாக். 1:20) அப்படியென்றால், அநியாயத்தை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? இந்த விஷயத்தில் இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

இயேசு எப்படி அநியாயத்தைச் சமாளித்தார்?

6. இயேசு பூமியில் இருந்தபோது மக்களுக்கு என்னென்ன அநியாயங்கள் நடந்தன? (படத்தையும் பாருங்கள்.)

6 இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது நிறைய அநியாயங்களைப் பார்த்தார். உதாரணத்துக்கு, மதத் தலைவர்கள் சாதாரண மக்களை அடக்கி ஒடுக்கியதைப் பார்த்தார். (மத். 23:2-4) ரோம அதிகாரிகள் மக்களைக் கொடுமைப்படுத்தியதையும் பார்த்தார். அந்தச் சமயத்தில், நிறைய யூதர்கள் ரோமர்களிடமிருந்து விடுதலை பெற ஏங்கினார்கள். ரோமர்களை எதிர்த்து சில யூதர்கள் சண்டையும் போட்டார்கள். அதற்காக நிறைய போராட்ட இயக்கங்களை ஆரம்பித்தார்கள். ஆனால், இயேசு அந்த இயக்கங்களுக்கு ஆதரவும் கொடுக்கவில்லை, அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அவரே ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கவும் இல்லை. மக்கள் அவரை ராஜாவாக்க நினைத்தபோதுகூட அவர் அந்த இடத்தைவிட்டு தனியாகப் போய்விட்டார்.—யோவா. 6:15.

மலை பாதை வழியாக இயேசு தனியாகப் போகிறார். மலை அடிவாரத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது.

மக்கள் இயேசுவை ராஜாவாக்க நினைத்தபோது அவர் அங்கிருந்து போய்விட்டார் (பாரா 6)


7-8. இயேசு பூமியில் இருந்தபோது அநியாயத்துக்கு எதிராக ஏன் அவர் போராடவில்லை? (யோவான் 18:36)

7 அநியாயங்களை ஒழித்துக்கட்ட இயேசு எந்தவொரு அரசியல் அமைப்போடும் சேரவில்லை. ஏன்? ஏனென்றால், மனிதர்களுக்குத் தங்களையே ஆட்சி செய்யும் உரிமையும் இல்லை, திறமையும் இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (சங். 146:3; எரே. 10:23) அதுமட்டுமல்ல, அநியாயத்துக்கான ஆணிவேரை மனிதர்களால் எடுத்துப்போட முடியாது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. இந்த உலகத்தை ஆட்சி செய்வது பிசாசாகிய சாத்தான்தான். அவன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உலகத்தில் அநியாயத்தை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறான். (யோவா. 8:44; எபே. 2:2) அதோடு, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மனிதர்கள் ஆசைப்பட்டாலும், பாவ இயல்பு இருப்பதால் அவர்களால் எப்போதும் அப்படி நடந்துகொள்ள முடிவதில்லை.—பிர. 7:20.

8 அநியாயத்துக்கான ஆணிவேரைக் கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் எடுத்துப்போட முடியும் என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால்தான், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் அறிவிப்பதற்கும்’ அவருடைய நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்தினார். (லூக். 8:1) இந்த உலகத்தில் இருக்கிற அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் கண்டிப்பாக ஒருநாள் முடிவு வரும் என்ற நம்பிக்கையை ‘நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களுக்கு’ இயேசு கொடுத்தார். (மத். 5:6; லூக். 18:7, 8) அந்த முடிவை எந்தவொரு மனித அரசாங்கத்தாலும் கொண்டுவர முடியாது. ‘இந்த உலகத்தின் பாகமாக இல்லாத’ கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் அதைக் கொண்டுவர முடியும்.—யோவான் 18:36-ஐ வாசியுங்கள்.

இயேசுவைப் போலவே அநியாயத்தைச் சமாளியுங்கள்

9. கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் அநியாயத்தை ஒழித்துக்கட்ட முடியும் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

9 இயேசுவின் காலத்தைவிட இந்த “கடைசி நாட்களில்” அநியாயமும் அக்கிரமமும் ரொம்ப அதிகமாக நடக்கின்றன. (2 தீ. 3:1-5, 13) அன்று போலவே இன்றும், அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது சாத்தானும் அவனைப் போல நடந்துகொள்ளும் மக்களும்தான். (வெளி. 12:12) அநியாயத்துக்கான ஆணிவேரை கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் எடுத்துப்போட முடியும் என்று இயேசுவைப் போலவே நமக்கும் நன்றாகத் தெரியும். அந்த அரசாங்கத்துக்கு முழு ஆதரவை நாம் கொடுப்பதால், எந்தவொரு மனித அரசாங்கத்தையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ இல்லை. ஸ்டேஸிa என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனிக்கலாம். யெகோவாவின் சாட்சியாக ஆவதற்குமுன் அநியாயத்தை எதிர்த்து அவர் நிறைய போராட்டங்களில் கலந்துகொண்டார். அந்தப் போராட்டங்களுக்கு போகும்போதெல்லாம் இது உண்மையிலேயே அநியாயத்தை ஒழித்துக்கட்டுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்திருக்கிறது. அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் போராட்டத்துக்கு போகும்போதெல்லாம் சரியான பக்கம்தான் இருக்கிறேனா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், இப்போது நான் கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதால், சரியான பக்கம்தான் இருக்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அநியாயத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் யெகோவாவினால் மட்டும்தான் நியாயம் வழங்க முடியும், அதை என்னால் செய்யவே முடியாது என்பது இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது.”—சங். 72:1, 4.

10. போராட்ட இயக்கங்கள் செய்கிற விஷயங்கள் எப்படி இயேசு சொன்னதுக்கு நேர்மாறாக இருக்கின்றன? (மத்தேயு 5:43-48) (படத்தையும் பாருங்கள்.)

10 அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதாகச் சொல்லும் இயக்கங்கள் பெரும்பாலும் கோபத்தையும் ஆவேசத்தையும் வெளிக்காட்டுகின்றன, சட்டத்தை மீறுகின்றன, அப்பாவி மக்களைக் கஷ்டப்படுத்துகின்றன. (எபே. 4:31) ஆனால், நாம் இப்படியெல்லாம் செய்ய வேண்டுமென்று இயேசு சொல்லித்தரவில்லை. ஜெஃப்ரி என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “பார்ப்பதற்கு மக்கள் அமைதியாக போராடுவதுபோல் தெரியும். ஆனால், ஒரே நொடியில் நிலைமை தலைகீழாக மாறிவிடும். திடீரென்று கலவரம் வெடிக்கும். அடிதடி, திருட்டு என எல்லாமே நடக்கும்.” ஆனால், எல்லா மக்களிடமும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும், நம்மை எதிர்க்கிறவர்களிடமும் துன்புறுத்துகிறவர்களிடமும்கூட அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 5:43-48-ஐ வாசியுங்கள்.) அதேபோல் அவர் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அவரைப் போலவே நடந்துகொள்ள நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும்.

ஒரு தெருவில் போராட்டக்காரர்கள் போராட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சகோதரி அதைத் தாண்டி வருகிறார். எந்தப் பதட்டமும் இல்லாமல் முன்னோக்கி பார்க்கிறார்.

சமுதாய மற்றும் அரசியல் பிரச்சினைகளில் எந்தவொரு பக்கத்தையும் ஆதரிக்காமல் இருக்க நமக்குத் தைரியம் தேவை (பாரா 10)


11. இயேசு மாதிரியே நடப்பது நமக்கு எப்போது கஷ்டமாக இருக்கலாம்?

11 எல்லா அநியாயத்துக்கும் கடவுளுடைய அரசாங்கம்தான் ஒரே தீர்வு என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், நமக்கு அநியாயம் நடக்கும்போது இயேசு மாதிரி நடந்துகொள்வது கஷ்டமாக இருக்கலாம். ஜெனாயா என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். வேறு நிறத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் மக்கள் அவரை அநியாயமாக நடத்தினார்கள். அவர் இப்படிச் சொல்கிறார்: “மற்றவர்கள் பேசிய பேச்சையெல்லாம் கேட்டபோது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பயங்கர கோபமும் வந்தது. அவர்களுக்கு எப்படியாவது தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு, இனப்பாகுபாட்டையும் நிறப்பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுகிற ஒரு இயக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்படிச் செய்தால் என் கோபம் கொஞ்சம் குறையும் என்று நினைத்தேன்.” காலப்போக்கில், இப்படி யோசிப்பது தப்பு என்று அவர் புரிந்துகொண்டார். “யெகோவாவை நம்புவதற்கு பதிலாக மனிதர்களை நம்ப ஆரம்பித்துவிட்டேன் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களோடு பழகவே கூடாது என்று முடிவு செய்தேன்” என்று ஜெனாயா சொல்கிறார். நம் கோபம் நியாயமாகவே இருந்தாலும், சமுதாயப் பிரச்சினைகளிலும் அரசியல் விஷயங்களிலும் நம் நடுநிலையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.—யோவா. 15:19.

12. நாம் பார்க்கிற, படிக்கிற, கேட்கிற விஷயங்களில் கவனமாக இருப்பது ஏன் முக்கியம்?

12 அநியாயம் நடக்கும்போது கோபப்படாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? நாம் எதைப் பார்க்கிறோம், கேட்கிறோம், படிக்கிறோம் என்பதில் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். சில சோஷியல் மீடியாக்கள் இன்று உலகத்தில் நடக்கும் அநியாயங்களைப் பரபரப்பாக்கி, அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகின்றன. செய்தி நிறுவனங்கள் உண்மைகளைச் சொல்வதற்குப் பதிலாக பெரும்பாலும் சொந்த கருத்துகளைத்தான் சொல்கின்றன. ஒருவேளை அவை உண்மையைச் சொன்னால்கூட, அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டே அல்லது படித்துக்கொண்டே இருப்பதால் அநியாயங்கள் ஒழிந்துவிடாது. சொல்லப்போனால், அளவுக்கு அதிகமாக செய்திகளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் நமக்குத் தேவையில்லாத கவலையும் சோகமும் கோபமும்தான் வரும். (நீதி. 24:10) அதைவிடக் கொடுமை, எல்லா அநியாயத்துக்கும் உண்மையான தீர்வு கொடுக்கப்போகிற கடவுளுடைய அரசாங்கத்தையே நாம் மறந்துவிடுவோம்.

13. தினமும் பைபிளைப் படிப்பது அநியாயத்தைச் சமாளிக்க நமக்கு எப்படி உதவும்?

13 தவறாமல் பைபிள் படிப்பதும் படித்ததை ஆழமாக யோசித்துப் பார்ப்பதும் அநியாயத்தைச் சமாளிக்க நமக்கு உதவும். ஆலியா என்று சகோதரி அவரைச் சுற்றியிருந்த மக்கள் அநியாயமாக நடத்தப்பட்டதைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டார். இந்த மாதிரி தப்பு செய்கிறவர்களுக்குத் தண்டனையே கிடைக்காதா என்று நினைத்தார். “‘எல்லா பிரச்சினைகளையும் யெகோவா கண்டிப்பாகச் சரிசெய்வார் என்பதை நான் உண்மையிலேயே நம்புகிறேனா’ என்று நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில்தான் யோபு 34:22-29-ல் இருக்கும் வசனங்களை நான் படித்தேன். யாரும் யெகோவாவிடமிருந்து ஓடி ஒளிய முடியாது என்பதை அந்த வசனங்களிலிருந்து தெரிந்துகொண்டேன். எது சரி, யாருக்கு என்ன தீர்ப்பு கொடுக்க வேண்டும், எந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்பதெல்லாம் யெகோவாவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்று ஆலியா சொல்கிறார். கடவுளுடைய அரசாங்கம் அநியாயத்தை ஒழித்துக்கட்டுவதற்காக நாம் ஆசையாகக் காத்திருக்கிறோம். அதுவரை நாம் எப்படி அநியாயத்தைச் சமாளிக்கலாம்?

அநியாயத்தைச் சமாளிக்க இப்போது நாம் என்ன செய்யலாம்?

14. அநியாயத்தைச் சமாளிக்க நாம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன? (கொலோசெயர் 3:10, 11)

14 மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது நம் கையில் இல்லை. ஆனால், நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், இயேசு மாதிரி நாம் மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அப்போதுதான், நம்மால் எல்லாரிடமும், ஏன், நம்மை துன்புறுத்துகிறவர்களிடமும் மரியாதையாக நடந்துகொள்ள முடியும். (மத். 7:12; ரோ. 12:17) இப்படி எல்லாரிடமும் அன்பாக, மரியாதையாக நடந்துகொள்ளும்போது யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்கும்.—கொலோசெயர் 3:10, 11-ஐ வாசியுங்கள்.

15. அநியாயத்தைச் சமாளிக்க நாம் செய்ய வேண்டிய ரொம்ப முக்கியமான விஷயம் என்ன, ஏன்?

15 அதைவிட முக்கியமாக, அநியாயத்தைச் சமாளிப்பதற்கு மற்றவர்களுக்கு பைபிள் உண்மைகளைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், முரட்டுத்தனமாகவும் கொடூரமாகவும் இருந்தவர்கள்கூட ‘யெகோவாவைப் பற்றிய அறிவு’ கிடைத்த பிறகு அன்பானவர்களாகவும் சமாதானமானவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். (ஏசா. 11:6, 7, 9) ஜமால் என்ற ஒருவர் யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு முன்பு, அவருடைய நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்த ஒரு போராட்ட கும்பலில் இருந்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் சண்டை போட்டு யாரையுமே மாற்ற முடியாது. பைபிள் சொல்லும் உண்மைகளைத் தெரிந்துகொண்டால் அவர்களே மாறிவிடுவார்கள். நான் அப்படித்தான் மாறினேன்.” பைபிள் சொல்லும் உண்மைகளை மக்கள் கற்றுக்கொண்டு தங்களையே மாற்றிக்கொள்ள மாற்றிக்கொள்ள, அநியாயம் செய்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகும்.

16. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?

16 அநியாயத்துக்கு ஒரே தீர்வு கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் என்பதை இயேசு மாதிரியே நாமும் மற்றவர்களுக்கு சந்தோஷமாக சொல்லிக் கொடுக்கிறோம். இதைக் கேட்கும்போது அநியாயமாக நடத்தப்படுகிறவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். (எரே. 29:11) முன்பு பார்த்த ஸ்டேஸி இப்படிச் சொல்கிறார்: “பைபிளிலிருந்து நான் தெரிந்துகொண்ட விஷயங்கள், அநியாயம் நடக்கும்போது அமைதியாக இருக்க எனக்கு உதவுகிறது. பைபிள் மூலமாக யெகோவா ஆறுதல் தருகிறார்.” அநியாயத்தைக் கடவுள் ஒழித்துக்கட்டப்போவதாக பைபிள் சொல்லும் ஆறுதலான செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு முதலில், அந்தச் செய்தியைப் பற்றி நாம் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், அதை இன்னும் முழுமையாக நம்புவோம். அப்படி நம்பும்போது, ஸ்கூலிலும் வேலை செய்யும் இடத்திலும் அந்தச் செய்தியைப் பற்றி நம்மால் தெளிவாகவும் மரியாதையாகவும் பேச முடியும்.b

17. அநியாயத்தைச் சமாளிக்க யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்?

17 சாத்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கும்வரை நமக்குக் கண்டிப்பாக அநியாயம் நடந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். ஏனென்றால், நமக்கு உதவி செய்வதாகவும், சாத்தானை ‘வீழ்த்தப்போவதாகவும்’ யெகோவா சொல்லியிருக்கிறார். (யோவா. 12:31) இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு அநியாயம் நடக்கிறது என்பதை மட்டுமல்ல, அதனால் நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர் எவ்வளவு வேதனைப்படுகிறார் என்பதையும் பைபிளில் சொல்லியிருக்கிறார். (சங். 34:17-19) அதோடு, அவருடைய அரசாங்கம் சீக்கிரத்தில் எப்படி அநியாயத்துக்கு ஒரேயடியாக முடிவுகட்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். (2 பே. 3:13) இப்போது நாம் எப்படி அநியாயத்தைச் சமாளிக்கலாம் என்று இயேசு மூலம் சொல்லியும் கொடுத்திருக்கிறார். அதனால், பூமி முழுவதும் ‘நியாயமும் நீதியும்’ இருக்கப்போகிற காலத்துக்காகக் காத்திருக்கிற இந்தச் சமயத்தில், நல்ல செய்தியை மக்களுக்கு ஆர்வமாகச் சொல்லிக்கொண்டே இருப்போம்.—ஏசா. 9:7.

உங்கள் பதில் என்ன?

  • அநியாயம் நடக்கும்போது நமக்கு ஏன் கோபம் வருகிறது?

  • அநியாயத்தை ஒழிக்க நாம் ஏன் மனிதர்களை நம்புவது கிடையாது?

  • அநியாயத்தை நாம் எப்படிச் சமாளிக்கலாம்?

பாட்டு 158 ஓடோடி வந்திடும் பூஞ்சோலை!

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள் சிற்றேட்டில் இணைப்பு A-ல் இருக்கும் குறிப்புகள் 24-27-ஐயும் பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்