உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 செப்டம்பர் பக். 14-19
  • மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மரியாதை காட்டுவது என்றால் என்ன?
  • குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு...
  • சகோதர சகோதரிகளுக்கு...
  • சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு...
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் போவது நமக்கு நல்லது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • கணவர்களே, உங்கள் மனைவிக்கு மதிப்புக் கொடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 செப்டம்பர் பக். 14-19

படிப்புக் கட்டுரை 38

பாட்டு 120 தாழ்மையுள்ள நம் ராஜா!

மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்கள்

“தங்கத்தையும் வெள்ளியையும் சம்பாதிப்பதைவிட மரியாதையைச் சம்பாதிப்பது சிறந்தது.”—நீதி. 22:1.

என்ன கற்றுக்கொள்வோம்?

நாம் ஏன் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், கஷ்டமான சூழ்நிலையிலும் அதை எப்படிக் கொடுக்கலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.

1. மரியாதை கிடைக்கும்போது நமக்கு ஏன் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது? (நீதிமொழிகள் 22:1)

மற்றவர்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? நிச்சயம் உங்களுக்குப் பிடித்திருக்கும். ஏனென்றால், மனிதர்கள் பொதுவாகவே மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதுதான் இயல்பு! அதனால்தான், மற்றவர்கள் நம்மை மதிக்கும்போது நமக்குச் சந்தோஷமாக இருக்கிறது. “தங்கத்தையும் வெள்ளியையும் சம்பாதிப்பதைவிட மரியாதையைச் சம்பாதிப்பது சிறந்தது” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை!—நீதிமொழிகள் 22:1-ஐ வாசியுங்கள்.

2-3. மரியாதை காட்டுவது சிலசமயம் நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 மற்றவர்களுக்கு மரியாதை காட்டுவது சிலசமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். மற்றவர்களுடைய தவறுகள் நம் கண்ணில் படுவது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மரியாதை இல்லாமல் நடப்பது இன்னொரு காரணமாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, நாம் அவர்களைப் போல் இருக்கவே கூடாது. ஏனென்றால், “எல்லா விதமான ஆட்களுக்கும்” நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்.—1 பே. 2:17.

3 மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, (1) குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு, (2) சகோதர சகோதரிகளுக்கு, (3) சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம், அதுவும் கஷ்டமான சமயங்களில் எப்படிக் காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

மரியாதை காட்டுவது என்றால் என்ன?

4. ஒருவர்மேல் மரியாதை வைத்திருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

4 ஒருவர்மேல் நாம் மரியாதை வைத்திருப்பதை எப்படிக் காட்டலாம்? அவரைப் பற்றி நாம் யோசிக்கிற விதத்திலும் அவரிடம் நடந்துகொள்கிற விதத்திலும் காட்டலாம். ஒருவரிடம் ஏதாவது நல்ல குணங்கள் இருக்கும்போது... அவர் ஏதாவது நல்ல விஷயங்கள் செய்யும்போது... அவருக்கு அதிகாரம் இருக்கும்போது... அவரை நாம் மரியாதையோடு நடத்துவோம். ஆனால், அந்த மரியாதை உண்மையிலேயே நம் மனதில் இருந்து வர வேண்டும்; அதுதான் முக்கியம்.—மத். 15:8.

5. மற்றவர்களுக்கு நாம் மரியாதை காட்டுவதற்கு முக்கியமான காரணம் என்ன?

5 நாம் மற்றவர்களை மரியாதையோடு நடத்த வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். உதாரணத்துக்கு, “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு” நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். (ரோ. 13:1, 7) ஒருவேளை சிலர், ‘மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், அதற்கு ஏற்ற மாதிரி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும்’ என்று சொல்லலாம். இப்படி யோசிப்பது சரியா? யெகோவாவுடைய ஊழியர்களாக நாம் அப்படி யோசிக்கக் கூடாது. மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கு மரியாதை கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நாம் முடிவு செய்யக் கூடாது. மற்றவர்களுக்கு நாம் மரியாதை கொடுப்பதற்கு ஒரு முக்கியமான காரணம்: யெகோவாவை நாம் நேசிக்கிறோம், அவரைப் பிரியப்படுத்த நினைக்கிறோம்.—யோசு. 4:14; 1 பே. 3:15.

6. நமக்கு மரியாதை கொடுக்காத ஒருவருக்கு நம்மால் மரியாதை கொடுக்க முடியுமா? விளக்குங்கள். ( படத்தையும் பாருங்கள்.)

6 ‘எனக்கு மரியாதை கொடுக்காத ஒருவருக்கு என்னால் எப்படி மரியாதை கொடுக்க முடியும்?’ என்று சிலர் யோசிக்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கும் நம்மால் மரியாதை கொடுக்க முடியும். சில உதாரணங்களைப் பார்க்கலாம். சவுல் ராஜா, தன்னுடைய மகன் யோனத்தானை எல்லாருக்கும் முன்பாக அசிங்கப்படுத்தினார். (1 சா. 20:30-34) இருந்தாலும், சவுலுக்கு யோனத்தான் மரியாதை கொடுத்தார். சவுல் சாகும்வரை, போரில் அவருக்கு ஆதரவு கொடுத்தார்; அவருக்குப் பக்கபலமாக இருந்தார். (யாத். 20:12; 2 சா. 1:23) தலைமை குரு ஏலி, அன்னாள் குடிபோதையில் உளறுவதாகச் சொன்னார். (1 சா. 1:12-14) இருந்தாலும், ஏலியிடம் அன்னாள் மரியாதையாகப் பேசினார். இத்தனைக்கும், ஒரு அப்பாவாகவும் தலைமை குருவாகவும் அவர் தன் பொறுப்புகளை சரியாகச் செய்யவில்லை என்பது இஸ்ரவேல் முழுக்க தெரிந்திருந்தது. ஆனாலும் அன்னாள் அவரிடம் மரியாதையாகப் பேசினார். (1 சா. 1:15-18; 2:22-24) அத்தேனே நகர ஆண்கள் அப்போஸ்தலன் பவுலை “உளறுவாயன்” என்று சொல்லி அவமானப்படுத்தினார்கள். (அப். 17:18) இருந்தாலும், பவுல் அவர்களிடம் மரியாதையாகப் பேசினார். (அப். 17:22) இந்த உதாரணங்கள் எதைக் காட்டுகின்றன? யெகோவாமேல் இருக்கும் ஆழமான அன்பும் அவருடைய மனதைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற பயமும் நமக்கு இருந்தால், நாம் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்போம். சுலபமாக இருக்கும்போது மட்டுமல்ல, கஷ்டமாக இருக்கும்போதுகூட மரியாதை கொடுப்போம். சரி, யாருக்கெல்லாம் நாம் மரியாதை கொடுக்க வேண்டும், ஏன் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

யோனத்தான், சவுல் மற்றும் இஸ்ரவேல் போர்வீரர்கள் வாளோடும் ஈட்டியோடும் கவசங்களோடும் போர்க்களத்தில் சண்டை போடுகிறார்கள்.

தன்னுடைய அப்பாவான சவுல் ராஜா தன்னை அசிங்கப்படுத்தினாலும், யோனத்தான் தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்தார், பக்கபலமாக இருந்தார் (பாரா 6)


குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு...

7. குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு மரியாதை கொடுப்பது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

7 ஏன் கஷ்டம்? குடும்பத்தில் இருக்கிறவர்களோடுதான் நாம் அதிக நேரம் செலவு செய்கிறோம். அதனால், அவர்களுடைய பலம், பலவீனம் என எல்லாமே நமக்குத் தெரியும். குடும்பத்தில் இருக்கிற யாருக்காவது உடல்நல பிரச்சினை இருக்கலாம், அவர்களைக் கவனித்துக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். குடும்பத்தில் இருக்கிற வேறு சிலருக்கு, அளவுக்கு அதிகமாகக் கவலைப்படும் பிரச்சினை இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மரியாதை காட்டுவது சவாலாக இருக்கலாம். சிலர், மனதைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் பேசலாம், அல்லது நடந்துகொள்ளலாம். சிலர், குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு மரியாதை கொடுக்காததால், சமாதான சோலையாக இருக்க வேண்டிய வீட்டை போர்க்களமாக மாற்றிவிடலாம். அதனால், வீட்டில் ஒற்றுமையே இல்லாமல் போய்விடலாம். இப்படி யோசித்துப் பாருங்கள்: உடலில் ஒரு நோய் வந்துவிட்டால், முழு உடலுமே சரியாக செயல்பட முடியாமல் போய்விடும். அதேபோல், குடும்பத்தில் மரியாதை இல்லாமல் போனால், குடும்பம் ஒற்றுமையாகச் செயல்பட முடியாது. ஒருவேளை, உடலில் வந்த நோயை நம்மால் முழுவதுமாகக் குணப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால், குடும்பத்தில் இருக்கும் மரியாதை இல்லாத சூழலை நம்மால் சரிசெய்ய முடியும், குடும்ப உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் முடியும்.

8. குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு மரியாதை காட்டுவது ஏன் ரொம்ப முக்கியம்? (1 தீமோத்தேயு 5:4, 8)

8 ஏன் காட்ட வேண்டும்? (1 தீமோத்தேயு 5:4, 8-ஐ வாசியுங்கள்.) தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய முதல் கடிதத்தில், குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும், மற்றவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அப்படிக் கவனித்துக்கொள்ளும்போது நாம் அவர்களுக்கு மரியாதை காட்டுகிறோம். ஆனால், அதை வெறும் கடமைக்காக அல்ல, ‘கடவுள்பக்தியால்’ தூண்டப்பட்டு செய்ய வேண்டும். அப்படியென்றால், குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு மரியாதை கொடுப்பது நம் வணக்கத்தின் ஒரு பாகம். குடும்பம் என்ற ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்ததே யெகோவாதான். (எபே. 3:14, 15) அதனால், நம் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு நாம் மரியாதை காட்டும்போது, நாம் யெகோவாவுக்கே மரியாதை காட்டுகிறோம்!

9. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் எப்படி மரியாதை காட்டலாம்? (படங்களையும் பாருங்கள்.)

9 எப்படிக் காட்டுவது? மனைவிக்கு மரியாதை கொடுக்கும் ஒரு கணவர், தன் மனைவி தனக்கு தங்கமானவள் என்பதைக் காட்டுவார்—மற்றவர்களுக்கு முன்பாக மட்டுமல்ல தனியாக இருக்கும்போதும் காட்டுவார். (நீதி. 31:28; 1 பே. 3:7) மனைவியை அவர் ஒருபோதும் அடிக்க மாட்டார், தரக்குறைவாகப் பேச மாட்டார், எதற்குமே லாயக்கில்லை என்று உணர வைக்க மாட்டார். அர்ஜென்டினாவில் இருக்கிற ஏரியல்a என்ற சகோதரர் சொல்கிறார்: “என் மனைவிக்கு உடம்பு முடியாததால், என்னைக் காயப்படுத்துகிற மாதிரி எதையாவது சிலசமயங்களில் சொல்லிவிடுவாள். அந்த மாதிரி சமயங்களில், அவள் உண்மையிலேயே அப்படி யோசிக்கவில்லை என்பதை எனக்கு நானே ஞாபகப்படுத்திக்கொள்வேன். கஷ்டமாக இருக்கும் சமயத்தில் 1 கொரிந்தியர் 13:5-ஐ யோசித்துப் பார்ப்பேன். அவளிடம் தரக்குறைவாகப் பேசாமல் எப்போதும் மரியாதையாகப் பேச அந்த வசனம் எனக்கு உதவுகிறது.” (நீதி. 19:11) கணவர்மேல் மரியாதை வைத்திருக்கும் ஒரு மனைவி, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது நல்ல விஷயங்களைச் சொல்லுவார். (எபே. 5:33) அவரைக் கேலி-கிண்டல் செய்யவோ ஏளனமாகப் பேசவோ மாட்டாள், கேவலப்படுத்தும் விதத்தில் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிட மாட்டாள். ஏனென்றால், அப்படிச் செய்வது கல்யாண வாழ்க்கைக்கு உலை வைத்துவிடும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பாள். (நீதி. 14:1) இத்தாலியில் இருக்கிற ஒரு சகோதரியின் கணவர் அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவார். அந்தச் சகோதரி சொல்கிறார்: “சிலசமயத்தில் என் கணவர் தேவையில்லாமல் கவலைப்படுகிற மாதிரி எனக்குத் தோன்றும். முன்பெல்லாம் அது எனக்கு எரிச்சலாக இருக்கும். அவரிடம் மரியாதையில்லாமல் பேசிவிடுவேன்; அதை என் முகத்திலும் காட்டிவிடுவேன். ஆனால், மரியாதையாகப் பேசும் நண்பர்களோடு பழகப் பழக என்னையே நான் மாற்றிக்கொண்டேன். என் கணவருக்கு இன்னும் அதிகமாக மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்திருக்கிறது.”

படத்தொகுப்பு: ஒரு தம்பதி, ஒருவரை ஒருவர் மரியாதையோடு நடத்துகிறார்கள். 1. கணவர் தன் மனைவியிடம் அன்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் சேர்ந்து சமைத்துக்கொண்டிருக்கிறார்கள். 2. வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினரிடம், மனைவி தன் கணவரைப் பாராட்டி பேசுகிறார். வயதான சகோதரர் ஒருவருக்கு அவர் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்கிறார்.

நம் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு மரியாதை காட்டும்போது, நம் குடும்பத் தலைவராக இருக்கும் யெகோவாவுக்கே மரியாதை காட்டுகிறோம் (பாரா 9)


10. பிள்ளைகள் எப்படி அப்பா-அம்மாவுக்கு மரியாதை காட்டலாம்?

10 பிள்ளைகளே, உங்கள் அப்பா-அம்மா சில கட்டுப்பாடுகளை வைக்கும்போது அதற்குக் கீழ்ப்படியுங்கள். (எபே. 6:1-3) அவர்களிடம் மரியாதையாகப் பேசுங்கள். (யாத். 21:17) வயது ஆக ஆக அவர்களுக்கு உங்கள் உதவி அதிகமாகத் தேவைப்படும்; உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். மரியா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். மரியாவின் அப்பா ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை. அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அப்போது அவர் கடுகடுப்பாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். இந்தச் சூழ்நிலையில், அவருக்கு மரியாதை கொடுப்பது மரியாவுக்குக் கஷ்டமாகிவிட்டது. மரியா சொல்கிறார்: “நான் யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். அப்பாமேல் இருக்கிற மரியாதையை இழந்துவிடக் கூடாது என்றும், அதைக் காட்ட உதவி செய்யுங்கள் என்றும் ஜெபம் செய்தேன். அப்பா-அம்மாவுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்றால், நிச்சயம் அதைக் காட்டுவதற்கும் உதவுவார் என்று புரிந்துகொண்டேன். நடந்துகொள்ளும் விதத்தை என் அப்பா மாற்றிக்கொள்ளவில்லை என்றாலும், நான் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டேன்.” குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட பலவீனங்கள் இருந்தாலும் சரி, அவர்களுக்கு நாம் மரியாதை காட்டினால், குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவாவுக்கு மரியாதை காட்டுகிறோம்.

சகோதர சகோதரிகளுக்கு...

11. சகோதர சகோதரிகளுக்கு மரியாதை காட்டுவது ஏன் சிலசமயம் கஷ்டமாக இருக்கலாம்?

11 ஏன் கஷ்டம்? சகோதர சகோதரிகள் பைபிள் சொல்வதுபோல் வாழ்ந்தாலும், சிலசமயங்களில் நம்மிடம் அன்பில்லாமல் நடந்துகொள்ளலாம். நம்மைப் பற்றித் தவறாக யோசிக்கலாம், அல்லது நம்மைக் கடுப்பேத்திவிடலாம். ஒருவேளை, ஒரு சகோதரர்மேல் நமக்கு “ஏதாவது மனக்குறை” வந்தால் அவருக்குத் தொடர்ந்து மரியாதை காட்டுவது நமக்குக் கஷ்டமாகிவிடலாம். (கொலோ. 3:13) இந்தச் சூழ்நிலையில் எது நமக்கு உதவும்?

12. சகோதர சகோதரிகளுக்கு மரியாதை கொடுப்பது ஏன் முக்கியம்? (2 பேதுரு 2:9-12)

12 ஏன் காட்ட வேண்டும்? (2 பேதுரு 2:9-12-ஐ வாசியுங்கள்.) முதல் நூற்றாண்டில் இருந்த சில கிறிஸ்தவர்கள், “மகிமையானவர்களை,” அதாவது கிறிஸ்தவ மூப்பர்களை, மரியாதை இல்லாமல் பேசினார்கள் என்று பேதுரு எழுதினார். இதைக் கவனித்துக்கொண்டிருந்த தேவதூதர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? “யெகோவாமேல் வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக” அந்த மோசமானவர்களைப் பற்றி அவர்கள் கடுமையாகப் பேசவில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: பரிபூரணமாக இருந்த தேவதூதர்களே அந்த மோசமான ஆட்களைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட தவறாகப் பேசவில்லை! யெகோவாவே அவர்களுக்குத் தண்டனை கொடுக்கட்டும், அவர்களை நியாயந்தீர்க்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். (ரோ. 14:10-12; யூதா 9-ஐ ஒப்பிடுங்கள்.) நமக்கு என்ன பாடம்? நம்மை எதிர்க்கிறவர்களையே நாம் மரியாதை இல்லாமல் நடத்தக் கூடாது என்றால், சகோதர சகோதரிகளை மட்டும் எப்படி மரியாதை இல்லாமல் நடத்த முடியும்? அவர்களுக்கு நாம் மதிப்புக் கொடுப்பதில் ‘முந்திக்கொள்ள’ வேண்டும். (ரோ. 12:10) இப்படிச் செய்யும்போது, நாம் யெகோவாவை மதிக்கிறோம் என்று காட்டுகிறோம்.

13-14. சபையில் இருக்கிறவர்களுக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்? விளக்குங்கள். (படங்களையும் பாருங்கள்.)

13 எப்படிக் காட்டுவது? மூப்பர்களே, சபையில் இருக்கிறவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது அதை அன்பாகச் செய்யுங்கள். (பிலே. 8, 9) ஆலோசனை கொடுக்கும்போதும் அதை அன்பாகக் கொடுங்கள், எரிச்சலாக இருக்கும்போது அதைக் கொடுக்காதீர்கள். சகோதரிகளே, சபையில் நல்ல சூழல் இருக்க உங்களாலும் உதவ முடியும். மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேசாமல் இருப்பதன் மூலமும், இல்லாததையும் பொல்லாததையும் பேசாமல் இருப்பதன் மூலமும் சபையில் மரியாதையான சூழல் இருக்க உங்களால் உதவ முடியும். (தீத். 2:3-5) நாம் எல்லாருமே மூப்பர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஏனென்றால், கூட்டங்களை நடத்துவதற்கும்... ஊழியத்தை ஒழுங்கமைப்பதற்கும்... “தவறான பாதையில்” அடியெடுத்து வைக்கிறவர்களைப் பாதுகாப்பதற்கும்... அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அதனால், நாம் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கலாம். அவர்களுக்கு நன்றியோடு இருக்கலாம்.—கலா. 6:1; 1 தீ. 5:17.

14 ஒரு மூப்பர் கொடுத்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வது ரோசியோ என்ற சகோதரிக்குக் கஷ்டமாக இருந்தது. “அவர் ஆலோசனை கொடுத்தபோது, கடுகடுப்பாகப் பேசியதுபோல் இருந்தது. அதனால் வீட்டில் அவரைப் பற்றி நான் தப்புத் தப்பாகப் பேசினேன். அவர் கொடுத்த ஆலோசனையையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையிலேயே அவருக்கு என்மேல் அக்கறை இல்லை என்று நினைத்தேன். ஆனால் நான் இப்படி யோசிப்பதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை” என்கிறார் ரோசியோ. தன்னை மாற்றிக்கொள்ள அவருக்கு எது உதவியது? “நான் பைபிளை வாசித்துக்கொண்டு இருந்தபோது, 1 தெசலோனிக்கேயர் 5:12, 13-ஐ படித்தேன். அந்தச் சகோதரருக்கு நான் மரியாதை கொடுக்காததால் என் மனசாட்சி உறுத்தியது. அதனால், யெகோவாவிடம் ஜெபம் பண்ணிவிட்டு ஆராய்ச்சி செய்தேன். என்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள உதவும் குறிப்புகளைக் கண்டுபிடித்தேன். பிறகுதான் புரிந்தது, பிரச்சினை அந்தச் சகோதரரிடம் இல்லை, என்னிடம்தான் என்று. என்னிடம் மனத்தாழ்மை இல்லையென்றால் மற்றவர்களை என்னால் மரியாதையோடு நடத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். இந்த விஷயத்தில் நான் இன்னும் முன்னேற வேண்டும் என்பது உண்மைதான். இருந்தாலும், மரியாதை காட்டுவதற்காக நான் எடுக்கிற முயற்சிகளைப் பார்த்து யெகோவா நிச்சயம் சந்தோஷப்படுவார்” என்று சொல்கிறார்.

படத்தொகுப்பு: வயதான ஒரு சகோதரி பைபிளைப் படித்துக்கொண்டே, மூப்பர்கள் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்று யோசிக்கிறார். 1. கூட்டத்தில் ஒரு மூப்பர் பேச்சு கொடுக்கிறார். 2. வீல்சேரில் இருக்கும் ஒரு சகோதரருக்கு அவர் உதவுகிறார். 3. ராஜ்ய மன்றத்துக்கு வெளியே கொட்டிக்கிடக்கும் பனியை அவர் எடுத்துப் போடுகிறார்.

மூப்பர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலமும் நன்றியோடு இருப்பதன் மூலமும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கலாம் (பாராக்கள் 13-14)


சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு...

15. சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு மரியாதை காட்டுவது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

15 ஏன் கஷ்டம்? ஊழியத்தில் நாம் பெரும்பாலும் சந்திக்கிற ஆட்கள் பைபிளையோ, பைபிளில் இருக்கிற சத்தியங்களையோ ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. (எபே. 4:18) சிலர் வேண்டுமென்றே அப்படி இருக்கலாம். அதற்கு காரணம், சின்ன வயதில் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்களாக இருக்கலாம். இது நமக்குச் சவாலாக இருக்கலாம். நம்மோடு வேலை செய்கிறவர்களோ கூடப்படிக்கிறவர்களோ நம்மிடம் கடுகடுப்பாக நடந்துகொள்ளலாம். அல்லது, நாம் என்ன செய்தாலும் திருப்தியே ஆகாத முதலாளியோ டீச்சரோ நமக்கு இருக்கலாம். அவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வதால் போகப்போக அவர்கள்மேல் நமக்கு இருக்கிற மரியாதை குறைந்துவிடலாம். கடைசியில், நாம் அவர்களிடம் அன்பே இல்லாமல் நடந்துகொள்ள ஆரம்பிக்கலாம்.

16. சத்தியத்தில் இல்லாதவர்களிடம் நாம் மரியாதையாகப் பேசுவது ஏன் முக்கியம்? (1 பேதுரு 2:12; 3:15)

16 ஏன் காட்ட வேண்டும்? சத்தியத்தில் இல்லாதவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்று யெகோவா கவனிக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம்முடைய நல்ல நடத்தையைப் பார்த்து சிலர் கடவுளை ‘மகிமைப்படுத்த’ தூண்டப்படுவார்கள் என்று கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். அதனால்தான், நம் நம்பிக்கைகளைப் பற்றி யாராவது கேள்வி கேட்கும்போது “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னார். (1 பேதுரு 2:12; 3:15-ஐ வாசியுங்கள்.) நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி விசாரணைக் கூண்டில் நின்றுகொண்டு விளக்கினாலும் சரி, பக்கத்து வீட்டுக்காரரிடம் விளக்கினாலும் சரி, நாம் மரியாதையாகத்தான் பேச வேண்டும். அந்த இடத்தில் யெகோவா இருந்தால் எப்படிப் பேசுவோமோ அந்த மாதிரி பேச வேண்டும். ஏனென்றால், நாம் என்ன சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம் என்பதை யெகோவா பார்த்துக்கொண்டே இருக்கிறார்; அதைக் கூர்ந்து கவனிக்கிறார். அப்படியென்றால், நாம் மற்றவர்களிடம் எந்தளவுக்கு மரியாதையாகப் பேச வேண்டும்!

17. சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்?

17 எப்படிக் காட்டுவது? பைபிளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத அல்லது சுத்தமாகத் தெரியாத ஆட்களை நாம் ஊழியத்தில் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அவர்களை நாம் தாழ்வாகப் பார்க்கக் கூடாது. கடவுளுக்கு அவர்கள் முக்கியம் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்; அவர்களை உயர்வாகப் பார்க்க வேண்டும். (ஆகா. 2:7; பிலி. 2:3) நம்முடைய நம்பிக்கைகளுக்காக யாராவது நம்மை கேலி-கிண்டல் செய்தால் அல்லது அவமானப்படுத்தினால், பதிலுக்கு நாம் அவர்களைக் கிண்டல் செய்யவோ காயப்படுத்துகிற மாதிரி பேசவோ கூடாது. (1 பே. 2:23) ஒருவேளை, நீங்கள் அந்த மாதிரி ஏதாவது பேசிவிட்டால், உடனே மன்னிப்பு கேளுங்கள். சரி, வேலை செய்கிற இடத்தில் எப்படி மரியாதை காட்டலாம்? கடினமாக உழையுங்கள். கூடவேலை செய்கிறவர்களிடமும் முதலாளியிடமும் இருக்கிற நல்லதைப் பாருங்கள். (தீத். 2:9, 10) நீங்கள் நேர்மையாக, சுறுசுறுப்பாக, மனதார உழைக்கும்போது எல்லா சமயத்திலும் மனிதர்களைப் பிரியப்படுத்துகிறீர்களோ இல்லையோ, நிச்சயம் கடவுளைப் பிரியப்படுத்துவீர்கள்.—கொலோ. 3:22, 23.

18. மரியாதை கொடுக்க கற்றுக்கொள்வதும் அதைக் காட்டுவதும் ஏன் ரொம்ப முக்கியம்?

18 மரியாதை காட்ட கற்றுக்கொள்வதும், அதைக் காட்டுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை இவ்வளவு நேரம் பார்த்தோம். குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு நாம் மரியாதை கொடுக்கும்போது, நம்முடைய குடும்ப தலைவரான யெகோவாவை மதிக்கிறோம். சகோதர சகோதரிகளுக்கு மரியாதை கொடுக்கும்போதும், நம்முடைய பரலோக அப்பாவான யெகோவாவுக்கு மரியாதை கொடுக்கிறோம். சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு மரியாதை கொடுக்கும்போது, நம் மகத்தான கடவுள் யெகோவாவை அவர்கள் மகிமைப்படுத்த, அதாவது அவரை மதிக்க, நாம் வாய்ப்புகளை உருவாக்குகிறோம். பதிலுக்கு சிலர் நமக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலும், மரியாதை கொடுக்க நாம் கற்றுக்கொள்வதும், அதைக் காட்டுவதும் நல்லது. ஏனென்றால், யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார். “என்னை மதிக்கிறவர்களை நான் மதிப்பேன்” என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்!—1 சா. 2:30.

இவர்களுக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்?

  • குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு...

  • சகோதர சகோதரிகளுக்கு...

  • சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு...

பாட்டு 129 சகித்தே ஓடுவோம்!

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்