உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 செப்டம்பர் பக். 20-25
  • ஆர்வமுள்ளவர்களுக்கு உதவுங்கள்—தாமதிக்காமல்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆர்வமுள்ளவர்களுக்கு உதவுங்கள்—தாமதிக்காமல்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மக்கள் ஆர்வம் காட்டும்போது...
  • பைபிள் படிப்பை ஆரம்பிக்கும்போது...
  • புதியவர்கள் கூட்டங்களுக்கு வரும்போது...
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஊழியத்தை இன்னும் சந்தோஷமாக செய்யுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் போவது நமக்கு நல்லது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 செப்டம்பர் பக். 20-25

படிப்புக் கட்டுரை 39

பாட்டு 54 ‘இதுதான் வழி’

ஆர்வமுள்ளவர்களுக்கு உதவுங்கள்—தாமதிக்காமல்!

“முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருந்தவர்கள் இயேசுவின் சீஷர்களானார்கள்.”—அப். 13:48.

என்ன கற்றுக்கொள்வோம்?

பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி எப்போது சொல்லலாம், கூட்டங்களுக்கு மக்களை எப்போது அழைக்கலாம் என்பதைப் பற்றிக் கற்றுக்கொள்வோம்.

1. நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் மக்கள் எப்படி வித்தியாசப்படுகிறார்கள்? (அப்போஸ்தலர் 13:47, 48; 16:14, 15)

முதல் நூற்றாண்டில் நிறைய பேர் நல்ல செய்தியைக் கேட்டவுடனே ஏற்றுக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 13:47, 48-ஐயும் 16:14, 15-ஐயும் வாசியுங்கள்.) இன்றும் சிலர், நல்ல செய்தியைக் கேட்கும்போது சந்தோஷப்படுகிறார்கள். சிலர், நல்ல செய்திமேல் உடனே ஆர்வம் காட்டவில்லை என்றாலும், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொள்ளலாம். “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருக்கும் ஆட்களைச் சந்திக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டும்?

2. பிரசங்க வேலையை எப்படி ஒரு தோட்டக்காரர் செய்கிற வேலைக்கு ஒப்பிடலாம்?

2 நாம் செய்கிற பிரசங்க வேலையை, ஒரு தோட்டக்காரர் செய்கிற வேலைக்கு ஒப்பிடலாம். தோட்டத்தில் மண்ணைக் கொத்திவிடுவது... செடிகளை நடுவது... போன்ற நிறைய வேலைகள் அவருக்கு இருந்தாலும், ஒரு மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் பார்த்தால் அதற்குத்தான் முதலில் கவனம் செலுத்துவார். அதேபோல், நல்ல செய்தியை ஒருவர் ஆர்வமாகக் கேட்டால், அவருக்குத்தான் முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேசமயத்தில், உடனே ஆர்வம் காட்டாத ஆட்களுக்கும், இன்னொரு பக்கம் உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும். (யோவா. 4:35, 36) யாருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நமக்குப் பகுத்தறிவு தேவை. ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு முதல் சந்திப்பிலிருந்தே எப்படி உதவலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கு எப்படி உதவலாம் என்றும் பார்க்கலாம்.

மக்கள் ஆர்வம் காட்டும்போது...

3. ஆர்வம் காட்டுகிறவர்களை ஊழியத்தில் சந்திக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? (1 கொரிந்தியர் 9:26)

3 ஊழியத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களைச் சந்திக்கும்போது, வாழ்வுக்கான பாதையில் தங்கள் பயணத்தைத் தொடங்க நாம் உடனடியாக உதவ வேண்டும். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்வதற்கும் அவர்களைக் கூட்டங்களுக்கு அழைப்பதற்கும் நாம் தயங்கக் கூடாது.—1 கொரிந்தியர் 9:26-வாசியுங்கள்.

4. உடனடியாக பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்ட ஒரு நபருடைய உதாரணத்தைச் சொல்லுங்கள்.

4 பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். சிலர், உடனடியாக பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளலாம். கனடாவில் நடந்த இந்த அனுபவத்தைக் கவனியுங்கள்: ஒரு வியாழக்கிழமை அன்று, சகோதரிகள் வீல் ஸ்டாண்டு ஊழியம் செய்துகொண்டு இருந்தார்கள். ஒரு இளம் பெண் வீல் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் வந்து, இன்றும் என்றும் சந்தோஷம்! சிறுபுத்தகத்தை எடுத்தார். அப்போது, ‘இந்தச் சிறுபுத்தகத்தைப் பயன்படுத்தி நாங்கள் பைபிளைப் பற்றி இலவசமாகச் சொல்லிக்கொடுக்கிறோம்’ என்று நம் சகோதரி சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ரொம்ப ஆர்வமாக இருந்தது. அதனால், தன்னுடைய ஃபோன் நம்பரைக் கொடுத்தார். அன்று சாயங்காலமே அந்தப் பெண், நம் சகோதரிக்கு மெசேஜ் அனுப்பி பைபிள் படிப்பைப் பற்றிக் கேட்டார். ‘சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை படிக்கலாமா?’ என்று சகோதரி கேட்டிருக்கிறார். அந்தப் பெண், ‘நாளைக்கே படிக்கலாமா?’ என்று கேட்டாராம். அடுத்த நாளே, அதாவது வெள்ளிக்கிழமையே, பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. வாரயிறுதியில் நடந்த கூட்டத்திலும் கலந்துகொண்டார்; தொடர்ந்து நல்ல முன்னேற்றம் செய்தார்.

5. சிலர் உடனடியாக பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் என்ன செய்யலாம்? (படங்களையும் பாருங்கள்.)

5 இந்தப் பெண்ணைப் போலவே எல்லாரும் முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாதுதான். சிலருக்குக் கொஞ்சம் காலம் தேவைப்படலாம். ஒருவேளை, அவர்களுக்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றி நாம் முதலில் பேச வேண்டியிருக்கலாம். நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு இருந்தால், அவர்கள்மேல் அக்கறை காட்டினால், காலப்போக்கில் அவர்கள் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. பைபிள் படிப்பைப் பற்றி அவர்களிடம் சொல்லும்போது என்ன மாதிரி வார்த்தைகளை நாம் பயன்படுத்தலாம்? திறமையாக பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் சில சகோதர சகோதரிகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, அவர்கள் என்ன சொன்னார்கள் என்று பார்க்கலாம்.

படத்தொகுப்பு: 1. திண்ணையில், ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் வயதான ஒருவரிடம் இரண்டு சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2. வாசலில் நின்றபடி இரண்டு சகோதரிகள், ஒரு அம்மாவிடம் “இன்றும் என்றும் சந்தோஷம்!” சிற்றேட்டை காட்டுகிறார்கள். சின்ன பையனை அந்த அம்மா தூக்கி வைத்திருக்கிறார். இன்னொரு பையன் அவர்கள் பக்கத்தில் நிற்கிறான்.

ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் பைபிள் படிப்பைப் பற்றி இவர்களிடம் எப்படிச் சொல்வீர்கள்? (பாரா 5)a


6. பைபிள் படிப்பை அறிமுகப்படுத்தும்போது நாம் எப்படியெல்லாம் பேசலாம்?

6 சில பிரஸ்தாபிகளும் பயனியர்களும் சொன்னதைப் பாருங்கள்: சில இடங்களில் பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லும்போது, “படிப்பு,” “பைபிள் கல்வி,” “நாங்கள் உங்களுக்குச் சொல்லித்தருகிறோம்” போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது என்று சொன்னார்கள். “பைபிளைப் பற்றி நாம் பேசலாம்,” “பைபிள் என்னதான் சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்” என்று சொல்வது நல்ல பலன்களைக் கொடுப்பதாகவும் சொன்னார்கள். பைபிள் படிப்பை அறிமுகப்படுத்திய பிறகு, நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “வாழ்க்கையில் வரும் கேள்விகளுக்குப் பைபிளில் பதில் இருப்பதைப் பார்த்தபோது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது” அல்லது “பைபிள் வெறும் ஒரு மத புத்தகம் கிடையாது. நம்முடைய வாழ்க்கைக்குப் பிரயோஜனமான விஷயங்கள் அதில் இருக்கின்றன.” பிறகு, நீங்கள் இதைக்கூட சொல்லலாம்: “நாம் இப்படி பேசுவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 10 அல்லது 15 நிமிஷம் இருந்தால்கூட உங்களால் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.” அதேசமயத்தில், “நாம் வாராவாரம் படிக்கலாம்” என்று சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், வாராவாரம் படிக்க வேண்டுமோ என்று நினைத்து அவர்கள் பயந்துவிடலாம்.

7. இதுதான் சத்தியம் என்பதைச் சிலர் எப்போது புரிந்துகொண்டார்கள்? (1 கொரிந்தியர் 14:23-25)

7 அவர்களைக் கூட்டங்களுக்கு அழையுங்கள். அப்போஸ்தலன் பவுலுடைய காலத்தில் வாழ்ந்த சிலர், முதல்முதலில் கூட்டத்துக்கு வந்தபோது இதுதான் சத்தியம் என்பதைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. (1 கொரிந்தியர் 14:23-25-ஐ வாசியுங்கள்.) அதேமாதிரி அனுபவங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. புது ஆட்கள் நிறைய பேர், கூட்டங்களுக்கு வர ஆரம்பித்த பிறகு வேகமாக முன்னேற்றம் செய்கிறார்கள். கூட்டங்களுக்கு அவர்களை எப்போது அழைக்கலாம்? இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் 10-வது பாடத்தில் கூட்டங்களுக்கு வருவதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பாடத்தைப் படிக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்களை முதல்முதலில் சந்திக்கும் சமயத்திலிருந்தே வாரயிறுதி நாளில் நடக்கிற கூட்டத்துக்கு வரச்சொல்லி அழைக்கலாம். ஒருவேளை, அந்த வாரம் கொடுக்கப்படும் பொதுப்பேச்சின் தலைப்பை நீங்கள் சொல்லலாம். அல்லது, காவற்கோபுர படிப்பில் இருக்கிற ஏதாவது ஒரு நல்ல குறிப்பைச் சொல்லி அவர்களைக் கூப்பிடலாம்.

8. கூட்டங்களுக்கு ஒருவரை அழைக்கும்போது நாம் எதைப் பற்றியெல்லாம் சொல்லலாம்? (ஏசாயா 54:13)

8 ஆர்வம் காட்டும் ஒருவரைக் கூட்டங்களுக்கு அழைக்கும்போது, மற்ற மத நிகழ்ச்சிகளுக்கும் நம்முடைய கூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதைச் சொல்லுங்கள். பைபிளைப் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் முதல்முறையாக கூட்டத்துக்கு வந்து காவற்கோபுர படிப்பில் கலந்துகொண்டார். அப்போது, அவருக்கு பைபிள் படிப்பு எடுத்தவரிடம், “இதை நடத்துகிறவருக்கு எல்லாருடைய பெயருமே தெரியுமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு அந்தச் சகோதரி, ‘குடும்பத்தில் இருக்கிற எல்லாருடைய பெயரும் நமக்குத் தெரியும், இல்லையா? அதேமாதிரி, எங்கள் சபையில் இருக்கிற எல்லாருடைய பெயரையும் தெரிந்துகொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம்’ என்று விளக்கினார். அந்தப் பெண் போய்க்கொண்டிருந்த சர்ச்சுக்கும் நம் சபைக்கும் இருக்கும் வித்தியாசத்தை அவரால் பார்க்க முடிந்தது. நிறைய பேருக்கு, நாம் ஏன் கூட்டங்களை நடத்துகிறோம் என்ற காரணம்கூட புதிதாக இருக்கிறது. (ஏசாயா 54:13-ஐ வாசியுங்கள்.) யெகோவாவை வணங்கவும், அவரைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் நாம் கூட்டங்களை நடத்துகிறோம். (எபி. 2:12; 10:24, 25) கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு உதவும் விதத்தில் நம் கூட்டங்கள் ஒழுங்காக நடக்கின்றன. (1 கொ. 14:40) அங்கே சடங்கு-சம்பிரதாயத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. கற்றுக்கொள்வதற்கு ஏற்றமாதிரி நம் ராஜ்ய மன்றங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, வெளிச்சமாக, நேர்த்தியாக, எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருப்பதால், ஒரு அரசியல் கட்சி இன்னொரு கட்சியைவிட உயர்ந்தது என்று அங்கே பேசுவதில்லை. வாக்குவாதத்துக்கோ, கூச்சல் குழப்பத்துக்கோ அங்கே இடமில்லை. ஆர்வமுள்ள ஒருவரை முதல்முறையாக கூட்டத்துக்குக் கூட்டிக்கொண்டு வரும் முன்பு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவைக் காட்டலாம். அது அவருக்கு உதவியாக இருக்கும்.

9-10. ஒருவரைக் கூட்டங்களுக்கு அழைக்கும்போது, அவர் பயப்படாமல் இருப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்யலாம்? (படத்தையும் பாருங்கள்.)

9 மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார்களோ என்று பயந்து சிலர் கூட்டங்களுக்கு வர தயங்கலாம். அப்படிப்பட்டவர்களிடம், நாம் யாரையும் மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தவோ, கூட்டங்களில் கண்டிப்பாக ஏதாவது பேச வேண்டும் என்று வற்புறுத்தவோ மாட்டோம் என்று சொல்லலாம். நம் கூட்டங்களுக்குப் பொதுமக்கள் வருவார்கள் என்று சொல்லலாம். குடும்பமாக, பிள்ளைகளோடு சேர்ந்து கூட்டங்களுக்கு வரலாம் என்றும் சொல்லலாம். நம்முடைய கூட்டங்களில் பிள்ளைகளைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் பாடம் நடத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக, பிள்ளைகளும் பெற்றோரும் ஒன்றாக உட்கார்ந்து கற்றுக்கொள்வார்கள். இப்படிச் செய்வதால், பிள்ளைகள் யாருடன் இருக்கிறார்கள்... என்ன கற்றுக்கொள்கிறார்கள்... என்றெல்லாம் பெற்றோரால் தெரிந்துகொள்ள முடியும். (உபா. 31:12) கூட்டங்களில் கட்டாயக் காணிக்கைகளை வசூலிப்பது கிடையாது என்றும், காணிக்கை பைகளைக் கொண்டுவந்து நீட்ட மாட்டார்கள் என்றும் சொல்லலாம். “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இயேசு கொடுத்த கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோம் என்று சொல்லலாம். (மத். 10:8) அதேமாதிரி, விலை உயர்ந்த உடைகளைப் போட்டுக்கொண்டு வரவேண்டிய அவசியமில்லை என்பதையும் சொல்லலாம். ஏனென்றால், கடவுள் இதயத்தைத்தான் பார்க்கிறார், ஆட்களுடைய தோற்றத்தை அல்ல.—1 சா. 16:7.

10 ஆர்வமுள்ள ஒருவர் கூட்டங்களுக்கு வரும்போது, அவரை அன்பாக வரவேற்றிடுங்கள். அவரை மூப்பர்களிடமும் மற்ற சகோதர சகோதரிகளிடமும் அறிமுகப்படுத்துங்கள். அங்கே வந்தது அவருக்குப் பிடித்திருந்தால், மறுபடியும் வர அவர் ஆசைப்படலாம். கூட்டம் நடக்கும்போது, அவரிடம் பைபிள் இல்லையென்றால், உங்கள் பைபிளைக் காட்டுங்கள். கூட்டங்களில் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள அவருக்கு உதவுங்கள்.

முந்தின படத்தில் இருக்கும் அம்மா, ராஜ்ய மன்றத்துக்கு வருகிறார். எல்லாரும் அவரை அன்பாக வரவேற்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். சின்ன பையனை அவர் தூக்கி வைத்திருக்கிறார், இன்னொரு மகன் அங்கே இருக்கும் ஒரு சின்ன பையனிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.

எவ்வளவு சீக்கிரத்தில் ஒருவர் கூட்டங்களுக்கு வருகிறாரோ, அவ்வளவு சீக்கிரம் யெகோவாவிடம் நெருங்கி வருவார் (பாராக்கள் 9-10)


பைபிள் படிப்பை ஆரம்பிக்கும்போது...

11. பைபிள் படிக்கிறவருடைய நேரத்தை மதிப்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?

11 புதிதாக பைபிள் படிப்பை ஆரம்பிக்கும்போது நாம் எதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்? முதலில், அவர்களுடைய நேரத்தை நாம் மதிக்க வேண்டும். அதற்கு, சொன்ன நேரத்துக்குப் போக வேண்டும். நீங்கள் வாழ்கிற இடத்தில் அந்தப் பழக்கம் இல்லையென்றாலும், சொன்ன நேரத்துக்குப் போங்கள். படிக்கிறவருக்கு அதிக ஆர்வம் இருந்தாலும், முதல்தடவை படிப்பு நடத்தும்போது அதைச் சுருக்கமாக நடத்துவது நல்லது என்று அனுபவமுள்ள பிரஸ்தாபிகள் சொல்கிறார்கள். நீங்களே நிறைய பேசாதீர்கள், படிக்கிறவர் தன் மனதில் இருப்பதைச் சொல்வதற்கு விடுங்கள்.—நீதி. 10:19.

12. பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் சமயத்திலிருந்தே நம்முடைய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்?

12 பைபிள் படிக்கிறவர்கள் யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும், அவர்கள்மேல் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்—இதற்கு உதவுவதுதான் நம் குறிக்கோள். அதனால், அவர்களுடைய கவனத்தை பைபிள் பக்கமாகத் திருப்புங்கள். உங்கள்மீதோ, உங்களுடைய பைபிள் அறிவின்மீதோ அவர்களுடைய கவனம் வந்துவிடாத மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். (அப். 10:25, 26) இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் ஒரு நல்ல முன்மாதிரி. அவர் எப்போதெல்லாம் கற்றுக்கொடுத்தாரோ அப்போதெல்லாம் மக்களுடைய கவனத்தை இயேசுவின் பக்கம் திருப்பினார். ஏனென்றால், மக்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் அவர்மேல் அன்பை வளர்த்துக்கொள்வதற்கும் உதவ யெகோவா இயேசுவைத்தான் அனுப்பினார். (1 கொ. 2:1, 2) தங்கம், வெள்ளி, விலைமதிப்புள்ள கற்களைப் போல் இருக்கும் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள, புதிய சீஷர்களுக்கு உதவது முக்கியம் என்றும் பவுல் விளக்கினார். (1 கொ. 3:11-15) விசுவாசம், ஞானம், பகுத்தறிவு, கடவுள்பயம் போன்ற முக்கியமான குணங்கள்தான் அவை! (சங். 19:9, 10; நீதி. 3:13-15; 1 பே. 1:7) பவுல் மாதிரியே நாமும் கற்றுக்கொடுக்கலாம். நம்முடைய பைபிள் மாணவர்கள் யெகோவாமேல் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவும் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் உதவலாம்.—2 கொ. 1:24.

13. பைபிள் மாணவருக்கு உதவி செய்யும்போது நாம் எப்படிப் பொறுமையாக இருக்கலாம், அவரைப் புரிந்து நடந்துகொள்ளலாம்? (2 கொரிந்தியர் 10:4, 5) (படத்தையும் பாருங்கள்.)

13 இயேசுவை மாதிரி சொல்லிக்கொடுக்கவும் முயற்சி செய்யுங்கள். அதாவது பொறுமையாக இருங்கள், பைபிள் மாணவரைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள். அவரைச் சங்கடப்படுத்துகிற கேள்விகளைக் கேட்காதீர்கள். சில குறிப்புகளை அவர் புரிந்துகொள்ள கஷ்டப்பட்டால், அதை விட்டுவிட்டு அடுத்த குறிப்புகளுக்குப் போகலாம், பிற்பாடு அதை விளக்கலாம். ஒரு பைபிள் போதனையை ஏற்றுக்கொள்ள சொல்லி வற்புறுத்துவதற்குப் பதிலாக, அதைப் பற்றி அவர் யோசிப்பதற்கும், சத்தியம் அவருடைய இதயத்தில் வேர்விடுவதற்கும் போதுமான நேரத்தைக் கொடுங்கள். (யோவா. 16:12; கொலோ. 2:6, 7) பொய்ப் போதனைகள், “ஆழமாக வேரூன்றிய” விஷயங்களைப் போல் இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது; அதை ‘தகர்த்தெறிய’ வேண்டியிருக்கும். (2 கொரிந்தியர் 10:4, 5-ஐ வாசியுங்கள்.) மூலமொழியில் இதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை, ஒரு கோட்டையைத் தகர்த்தெறிவதைக் குறிக்கிறது. அதனால், பைபிள் மாணவருடைய மனதில் இருக்கிற பொய்ப் போதனைகளை எடுத்தோம்-கவிழ்த்தோம் என்று தகர்த்தெறிய முடியாது; அப்படிச் செய்வது அவரைக் காயப்படுத்திவிடலாம். அதற்குப் பதிலாக, முதலில் யெகோவாவை ஒரு கோட்டையாக ஆக்கிக்கொள்வதற்கு உதவி செய்தால், பொய்ப் போதனைகளைத் தகர்த்தெறிவது அவருக்குக் கொஞ்சம் சுலபமாக இருக்கும்.—சங். 91:9.

முந்தின படத்தில் இருக்கும் வயதானவர், இரண்டு சகோதரர்களோடு சேர்ந்து “இன்றும் என்றும் சந்தோஷம்!” புத்தகத்தில் இருந்து படிக்கிறார். பக்கத்தில் இருக்கும் ஷெல்ஃபில், அவர் ராணுவத்தில் சேவை செய்தபோது வாங்கிய பதக்கங்கள் இருக்கின்றன.

மாணவரின் இதயத்தில் சத்தியம் ஆழமாக வேர்விட நேரம் கொடுங்கள் (பாரா 13)


புதியவர்கள் கூட்டங்களுக்கு வரும்போது...

14. கூட்டங்களுக்குப் புதிதாக வருகிறவர்களிடம் நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?

14 கூட்டங்களுக்குப் புதிதாக வருகிறவர்களிடம் நாம் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, எந்தப் பின்னணியையோ கலாச்சாரத்தையோ சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நாம் பாரபட்சம் காட்டவே கூடாது. (யாக். 2:1-4, 9) கூட்டங்களுக்குப் புதிதாக வருகிறவர்களிடம் நாம் எப்படி அன்பு காட்டலாம்?

15-16. கூட்டங்களுக்குப் புதிதாக வருகிறவர்கள் நல்ல விதமாக உணருவதற்கு நாம் என்ன செய்யலாம்?

15 நம் கூட்டங்களில் என்னதான் நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக சிலர் வந்திருக்கலாம். வேறு சிலர், வேறொரு இடத்தில் இருக்கிற ஒருவர் சொன்னதால் வந்திருக்கலாம். அதனால், கூட்டத்துக்கு ஒருவர் புதிதாக வந்தால் அவரிடம் போய்ப் பேசுங்கள். அவரை அன்பாக வரவேற்றிடுங்கள். அதேசமயத்தில், வரவேற்கிறோம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு அவரைத் திணறடித்துவிடாதீர்கள். அவரை உங்கள் பக்கத்தில் உட்கார வைத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் பைபிளையும் மற்ற புத்தகங்களையும் அவருக்குக் காட்டுங்கள். முடிந்தால், அவருக்கு ஒரு பிரதியைக்கூட கொடுக்கலாம். அதுமட்டுமல்ல, புதிதாக வந்திருக்கும் ஒருவரின் மனதுக்குள் என்னவெல்லாம் ஓடும் என்பதையும் யோசியுங்கள். ஒருசமயம், ஒரு நபர் ராஜ்ய மன்றத்துக்குப் புதிதாக வந்திருந்தார். அவரை ஒரு சகோதரர் வரவேற்றார். அந்த நபர் அந்தச் சகோதரரிடம், ‘நான் ரொம்ப சாதாரணமான உடைகளைப் போட்டு வந்துவிட்டேன். எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது’ என்றார். அதற்கு அந்த சகோதரர், ‘யெகோவாவின் சாட்சிகளும் சாதாரண மக்கள்தான். நீங்கள் சங்கடப்பட வேண்டாம்’ என்று சொன்னார். இந்தச் சகோதரர் சொன்னதை அந்த நபர் மறக்கவே இல்லை. அவர் நன்றாக முன்னேறி, ஞானஸ்நானமும் எடுத்தார். நாம் இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடக் கூடாது: கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பும், முடிந்த பிறகும் புதிதாக வந்த ஒருவரிடம் அக்கறையாக பேசுவது நல்லதுதான், அதற்காக அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது.—1 பே. 4:15.

16 ராஜ்ய மன்றத்தில் நாம் பேசும்போதும், பதில்கள் சொல்லும்போதும், நியமிப்புகளைச் செய்யும்போதும் மரியாதையான விதத்தில் செய்ய வேண்டும்; இப்படிச் செய்யும்போது புதியவர்கள் நல்ல விதமாக உணருவார்கள். முக்கியமாக, சத்தியத்தில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசும்போதும் அவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றிப் பேசும்போதும் இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கஷ்டப்படுத்துகிற மாதிரியோ அவமானப்படுத்துகிற மாதிரியோ எந்த வார்த்தைகளையும் நாம் பேச மாட்டோம். (தீத். 2:8; 3:2) குறிப்பாக, அவர்களுடைய நம்பிக்கைகளை நாம் தரக்குறைவாகப் பேசவே மாட்டோம். (2 கொ. 6:3) இந்த விஷயத்தில், பொதுப்பேச்சுகளைக் கொடுக்கிற சகோதரர்கள் ரொம்பவே கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு விஷயத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள்: யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமே பழக்கமான சில வார்த்தைகளையோ சில விஷயங்களையோ பற்றிப் பேசும்போது, அதைப் பொதுமக்கள் புரிந்துகொள்கிற மாதிரி விளக்கிச் சொல்கிறார்கள்.

17. “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருக்கிற மக்களைக் கண்டுபிடிக்கும்போது நம்முடைய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்?

17 ஒவ்வொரு நாளும் கடந்து போகப்போக, சீஷராக்கும் வேலையை இன்னும் அவசரமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருக்கிற மக்களை நாம் தொடர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். (அப். 13:48) அப்படிச் செய்யும்போது, பைபிள் படிப்பைப் பற்றி அவர்களிடம் சொல்வதற்கு நாம் தயங்கவே கூடாது. அவர்களைக் கூட்டங்களுக்கும் நாம் கூப்பிட வேண்டும். இப்படியெல்லாம் செய்யும்போது, “முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற” பாதையில் அவர்கள் அடியெடுத்து வைக்க நம்மால் உதவ முடியும்.—மத். 7:14.

உங்கள் பதில் என்ன?

  • ஆர்வமுள்ளவர்களை முதல்முதலில் சந்திக்கும்போதே நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்?

  • பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் சமயத்திலிருந்தே மாணவருக்கு உதவ நாம் என்னவெல்லாம் செய்யலாம்?

  • புதியவர்கள் கூட்டங்களுக்கு வரும்போது நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்?

பாட்டு 64 அறுவடை வேலையில் ஆனந்த நடைபோடுவோம்

a பட விளக்கம்: முன்பு ராணுவத்தில் சேவை செய்த ஒருவர் தன் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருக்கிறார்; இரண்டு சகோதரர்கள் அவரிடம் பேச வருகிறார்கள். பிஸியாக இருக்கும் ஒரு அம்மாவிடம் இரண்டு சகோதரிகள் சுருக்கமாகச் சாட்சி கொடுக்கிறார்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்