படிப்புக் கட்டுரை 31
பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
திருப்தியோடு இருப்பதற்கான ரகசியத்தைக் கற்றுக்கொண்டீர்களா?
“எந்தச் சூழ்நிலையிலும் நான் மனநிறைவோடு இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன்.”—பிலி. 4:11.
என்ன கற்றுக்கொள்வோம்?
நன்றியுணர்வை காட்டுவதன் மூலமும், கவனம் சிதறாமல் இருப்பதன் மூலமும், மனத்தாழ்மையாக இருப்பதன் மூலமும், எதிர்கால வாக்குறுதிகளை யோசித்துப் பார்ப்பதன் மூலமும் எப்படித் திருப்தியோடு இருக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1. திருப்தியோடு இருப்பது என்றால் என்ன, என்ன கிடையாது?
நீங்கள் திருப்தியோடு இருக்கும் ஒருவரா? திருப்தியோடு இருப்பவர், தனக்குக் கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நினைத்து சந்தோஷத்தோடும் மனநிறைவோடும் இருப்பார்; இல்லாததை நினைத்து வருத்தப்படவோ எரிச்சல்படவோ மாட்டார். அதேசமயத்தில், திருப்தியோடு இருப்பவர், எதிலும் ஈடுபாடு காட்டாமலும் இருக்க மாட்டார். உதாரணத்துக்கு, யெகோவாவுடைய சேவையில் பொறுப்புகளை எடுத்துச் செய்ய அவர் முயற்சி செய்வார். (ரோ. 12:1; 1 தீ. 3:1) அதேசமயத்தில், நினைத்த நேரத்தில் நினைத்த பொறுப்பு கிடைக்கவில்லை என்றால், அவர் தன்னுடைய சந்தோஷத்தை இழந்துவிடவும் மாட்டார்.
2. திருப்தியாக இல்லாமல் இருப்பது ஏன் ஆபத்தானது?
2 திருப்தியாக இல்லை என்றால் மோசமான விளைவுகள் வந்துவிடும். உதாரணத்துக்கு, திருப்தியாக இல்லாத ஒருவர், தேவையில்லாத நிறைய பொருள்களை வாங்குவதற்காக அதிக நேரம் வேலை செய்வார். வேதனையான விஷயம் என்னவென்றால், திருப்தியாக இல்லாததால் சில கிறிஸ்தவர்கள், பணத்தையும் ஆசைப்பட்ட சில பொருள்களையும் திருடியிருக்கிறார்கள். அவர்கள் ஒருவேளை, ‘இது எனக்குச் சேர வேண்டியது’, ‘இதற்காக நான் ரொம்ப நாள் ஏங்கி இருக்கிறேன், ‘பணம் கிடைத்ததும் அதைத் திருப்பிக் கொடுத்துவிடப் போகிறேன்’ என்றெல்லாம் காரணம் சொல்லிக்கொண்டு அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், திருடுவதை யெகோவா வெறுக்கிறார்; அது அவரை அவமானப்படுத்துகிறது. (நீதி. 30:9) வேறுசிலர், ஆசைப்பட்ட பொறுப்பு கிடைக்கவில்லை என்பதற்காக ரொம்பவே சோர்ந்துபோய் இருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால், யெகோவாவுக்கு சேவை செய்வதையே நிறுத்தும் அளவுக்கு! (கலா. 6:9) யெகோவாவுக்கு அர்ப்பணித்த ஒருவரால் எப்படி இந்தளவுக்குப் போக முடியும்?! ஒருவேளை, அவர் திருப்தியாக இல்லாமல் போனது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
3. பிலிப்பியர் 4:11, 12-ல் இருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
3 திருப்தியாக இருக்க நம் எல்லாராலும் கற்றுக்கொள்ள முடியும். “எந்தச் சூழ்நிலையிலும் நான் மனநிறைவோடு இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:11, 12-ஐ வாசியுங்கள்.) இந்த வார்த்தைகளை அவர் சிறையில் இருந்தபோது எழுதினார். சிறையில் இருந்தபோதிலும் அவர் தன்னுடைய சந்தோஷத்தை இழக்கவில்லை. ஏனென்றால், “திருப்தியோடு இருப்பதற்கான ரகசியத்தை” தெரிந்துவைத்திருந்தார். திருப்தியாக இருப்பது உங்களுக்குப் போராட்டமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! பவுலுடைய வார்த்தைகளும் அனுபவமும் காட்டுகிற மாதிரி, நம்மாலும் திருப்தியாக இருக்க கற்றுக்கொள்ள முடியும். சூழ்நிலைக்கு ஏற்றபடி திருப்தியாக இருப்பது தானாகவே வந்துவிடும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்; அதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதை எப்படிச் செய்வது? அதற்கு உதவும் சில குணங்களை இப்போது பார்க்கலாம்.
நன்றியோடு இருங்கள்
4. நன்றியுணர்வு எப்படித் திருப்தியோடு இருக்க உதவும்? (1 தெசலோனிக்கேயர் 5:18)
4 நன்றியோடு இருக்கிற ஒருவர் திருப்தியோடு இருப்பார். (1 தெசலோனிக்கேயர் 5:18-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, தேவையான அடிப்படை விஷயங்கள் நம்மிடம் இருப்பதற்காக நன்றியோடு இருந்தால், இல்லாத விஷயங்களுக்காக அதிகமாகக் கவலைப்பட மாட்டோம். அவை நமக்குத் தேவையானதாக இருந்தாலும், ‘அவை இல்லையே’ என்று கவலைப்பட மாட்டோம். அதேபோல், அமைப்பில் இப்போது நாம் செய்துகொண்டு இருக்கிற பொறுப்புகளுக்கு நன்றியோடு இருந்தால், புதிதாக பொறுப்புகள் வேண்டும் என்று ஏங்க மாட்டோம். அதற்குப் பதிலாக, இருப்பதை எப்படி நன்றாகச் செய்யலாம் என்று யோசிப்போம். அதனால்தான், எப்போதும் யெகோவாவுக்கு ஜெபத்தில் நன்றி சொல்லும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது. நன்றியோடு இருந்தால், “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” நமக்குள் இருக்கும்.—பிலி. 4:6, 7.
5. எதையெல்லாம் நினைத்து இஸ்ரவேலர்கள் நன்றியோடு இருந்திருக்க வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)
5 இஸ்ரவேலர்களுக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். எகிப்தில் கிடைத்த உணவு இப்போது கிடைக்கவில்லை என்று பல தடவை குறை சொன்னார்கள். (எண். 11:4-6) உண்மைதான், வனாந்தரத்தில் அவர்களுக்கு வாழ்க்கை கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர்களால் திருப்தியாக இருந்திருக்க முடியும். எப்படி? யெகோவா அவர்களுக்காகச் செய்ததையெல்லாம் அவர்கள் நன்றியோடு யோசித்திருந்தால், திருப்தியோடு இருந்திருக்க முடியும். யெகோவா அவர்களுக்காக என்னவெல்லாம் செய்திருந்தார்? எகிப்தில் அவர்கள் கொத்தடிமைகளாக இருந்தபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக எகிப்தியர்கள்மேல் பத்து தண்டனைகளைக் கொண்டுவந்தார். எகிப்தைவிட்டு கிளம்பியபோது, வெள்ளி, தங்கம், துணிமணி என எகிப்தியர்களுடைய சொத்துகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் ‘எடுத்துக்கொள்கிற’ மாதிரி யெகோவா செய்தார். (யாத். 12:35, 36) பார்வோனின் படைக்கும் செங்கடலுக்கும் இடையில் அவர்கள் மாட்டிக்கொண்ட மாதிரி தெரிந்தபோது, அந்தக் கடலையே இரண்டாகப் பிளந்து யெகோவா அவர்களை அற்புதமாகக் காப்பாற்றினார். வனாந்தரத்தில் பயணம் செய்தபோது, தினமும் மன்னாவைக் கொடுத்தார். யெகோவா இவ்வளவு செய்திருந்தும் அவர்கள் திருப்தியில்லாமல் போனார்கள். காரணம், சாப்பிட எதுவுமே இல்லாததால் அல்ல, யெகோவா செய்ததையெல்லாம் நினைத்துப் பார்க்காததால்தான்.
இஸ்ரவேலர்கள் ஏன் திருப்தி இல்லாமல் போய்விட்டார்கள்? (பாரா 5)
6. நன்றியோடு இருக்க எவையெல்லாம் உதவும்?
6 நன்றியோடு இருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்? முதலில், உங்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களை யோசித்துப் பார்க்க தினமும் நேரம் ஒதுக்குங்கள். நன்றியோடு இருக்க நினைக்கிற சில விஷயங்களை நீங்கள் எழுதிக்கூட வைக்கலாம். (புல. 3:22, 23) அடுத்ததாக, நன்றியைச் சொல்லுங்கள். மற்றவர்கள் உங்களுக்குச் செய்த எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள். முக்கியமாக, தினமும் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். (சங். 75:1) மூன்றாவதாக, நன்றியோடு இருக்கிறவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். அப்படிச் செய்தால், அவர்களுடைய நன்றியுணர்வு நமக்கும் தொற்றிக்கொள்ளும். நன்றி இல்லாத... திருப்தி இல்லாத... ஆட்களை நண்பர்களாக வைத்துக்கொண்டால் நாமும் அவர்களைப்போல் ஆகிவிடுவோம். (உபா. 1:26-28; 2 தீ. 3:1, 2, 5) நன்றி சொல்ல வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருந்தால், இல்லாததை நினைத்து கவலைப்பட மாட்டோம்; இருப்பதை நினைத்து திருப்தியாக இருப்போம்.
7. ஆக்கி எப்படி நன்றியுணர்வை வளர்த்துக்கொண்டார், அவருக்கு என்ன பலன் கிடைத்தது?
7 இந்தோனேஷியாவில் வாழ்கிற ஆக்கி என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் இப்படிச் சொல்கிறார்: “கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், நான் என்னுடைய சூழ்நிலையை மற்ற சகோதர சகோதரிகளுடைய சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அதனால், என்னிடம் இருப்பதை நினைத்து என்னால் திருப்தியாக இருக்க முடியவில்லை.” (கலா. 6:4) யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள எது அவருக்கு உதவியது? அவர் தொடர்ந்து சொல்கிறார்: “ஒவ்வொரு நாளும் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களை யோசித்துப் பார்த்தேன். யெகோவாவுடைய அமைப்பில் இருப்பதால் எனக்குக் கிடைத்திருக்கிற நன்மைகளையும் யோசித்துப் பார்த்தேன். பிறகு, யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். அதனால், என்னால் திருப்தியாக இருக்க முடிந்தது.” திருப்தியோடு இருப்பது உங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறதா? சகோதரி ஆக்கி செய்ததைப் போலவே நீங்களும் செய்யுங்கள், உங்களாலும் நன்றியோடு இருக்க முடியும்.
கவனம் சிதறாமலும் மனத்தாழ்மையாகவும் இருங்கள்
8. ஒருசமயம் பாருக்குக்கு என்ன ஆனது?
8 எரேமியா தீர்க்கதரிசியின் செயலாளரான பாருக்கின் உதாரணத்தைப் பார்க்கலாம். ஒருசமயம் அவர் திருப்தி இல்லாமல் போய்விட்டார். யெகோவாவின் செய்தியை நன்றிகெட்ட இஸ்ரவேல் தேசத்துக்குச் சொல்வதில், எரேமியாவுக்கு உதவும் நியமிப்பு பாருக்குக்கு இருந்தது. அந்த நியமிப்பு கஷ்டமாக இருந்தது. ஒரு கட்டத்தில் பாருக்கின் கவனம் சிதறியது. யெகோவா சொன்னதைச் செய்வதற்குப் பதிலாக, தன்னைப் பற்றியே அவர் அதிகமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார்; தனக்கு என்ன வேண்டும் என்பதிலேயே அவர் கவனம் செலுத்தினார். அதனால், எரேமியா மூலம் யெகோவா இப்படிச் சொன்னார்: “நீயோ உனக்காகப் பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறாய். அவற்றைத் தேடுவதை நிறுத்து!” (எரே. 45:3-5) வேறு வார்த்தையில் சொன்னால், ‘இருப்பதை வைத்து திருப்தியாக இரு’ என்று யெகோவா சொல்வதுபோல் இருந்தது. யெகோவா கொடுத்த கண்டிப்பை பாருக் ஏற்றுக்கொண்டார்; தொடர்ந்து யெகோவாவோடு நெருங்கி இருந்தார்.
9. அமைப்பில் நமக்குக் கிடைக்கிற பொறுப்புகளை சரியான விதத்தில் பார்க்க 1 கொரிந்தியர் 4:6, 7 எப்படி உதவும்? (படங்களையும் பாருங்கள்.)
9 சிலசமயத்தில், ஒரு குறிப்பிட்ட பொறுப்பு கிடைப்பதற்குத் தனக்குத் தகுதி இருப்பதாக ஒரு கிறிஸ்தவர் நினைத்துக்கொள்ளலாம். ஒருவேளை, அவர் திறமைசாலியாகவோ, கடின உழைப்பாளியாகவோ, அனுபவம் உள்ளவராகவோ இருக்கலாம். அல்லது, இந்த மூன்றுமே அவருக்கு இருக்கலாம். ஆனால், அவர் ஆசைப்பட்ட பொறுப்பு மற்றவர்களுக்குக் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். இந்தச் சூழ்நிலையில் அவருக்கு எது உதவும்? 1 கொரிந்தியர் 4:6, 7-ல் பவுல் எழுதிய வார்த்தைகள் அவருக்கு உதவும். (வாசியுங்கள்.) நமக்குக் கிடைக்கிற எல்லா நியமிப்புகளும் நம்மிடம் இருக்கிற எல்லா திறமைகளும் யெகோவா நமக்குக் கொடுத்தது. இதற்கு நாம் தகுதியானவர்களும் கிடையாது, அவற்றை நாம் சம்பாதிக்கவும் முடியாது. யெகோவாவின் அளவற்ற கருணையால்தான் அவை நமக்குக் கிடைத்திருக்கின்றன.—ரோ. 12:3, 6; எபே. 2:8, 9.
நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பரிசும் யெகோவாவின் அளவற்ற கருணையால்தான்! (பாரா 9)b
10. மனத்தாழ்மையாக இருக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
10 இயேசுவின் உதாரணத்தை யோசித்துப் பார்த்தால் மனத்தாழ்மையாக இருக்க கற்றுக்கொள்வோம். சீஷர்களுடைய பாதங்களைக் கழுவிய சமயத்தில் அவர் என்னவெல்லாம் தெரிந்துவைத்திருந்தார் என்று யோசித்துப் பாருங்கள். யோவான் இப்படி எழுதினார்: [1] “தகப்பன் எல்லாவற்றையும் தன்னுடைய கைகளில் ஒப்படைத்திருந்ததையும், [2] தான் கடவுளிடமிருந்து வந்திருந்ததையும், [3] கடவுளிடமே திரும்பிப் போக வேண்டியிருந்ததையும் இயேசு தெரிந்து வைத்திருந்தார். . . . பின்பு, . . . சீஷர்களின் பாதங்களைக் கழுவ . . . ஆரம்பித்தார்.” (யோவா. 13:3-5) ‘மற்றவர்கள்தான் என்னுடைய பாதங்களைக் கழுவ வேண்டும்’ என்று இயேசு நினைத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அதுமட்டுமல்ல, பூமியில் வாழ்ந்த காலமெல்லாம், சொகுசான அல்லது வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கவே இல்லை; அதைப் பெற்றுக்கொள்ள தனக்குத் தகுதி இருந்ததாகவும் யோசிக்கவில்லை. (லூக். 9:58) அவர் மனத்தாழ்மையாக இருந்தார்; திருப்தியோடு வாழ்ந்தார். நமக்கு அருமையான முன்மாதிரியை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்.—யோவா. 13:15.
11. திருப்தியாக இருக்க டென்னிஸ்-க்கு மனத்தாழ்மை எப்படி உதவியிருக்கிறது?
11 நெதர்லாந்தில் வாழ்கிற டென்னிஸ் என்ற சகோதரருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். இயேசு மாதிரியே மனத்தாழ்மையாக நடக்க அவர் கடினமாக முயற்சி செய்தார். ஆனால், அது அவருக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. அவர் சொல்கிறார்: “சிலசமயத்தில் எனக்குள் பெருமை எட்டிப்பார்க்கும். இருப்பதை வைத்து நான் திருப்தியடைவதில்லை. முக்கியமாக, நான் ஆசைப்பட்ட ஒரு நியமிப்பு எனக்குக் கிடைக்காமல், மற்றவர்களுக்குக் கிடைக்கும்போது நான் அப்படி உணர்வேன். அப்போதெல்லாம், மனத்தாழ்மை என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து படிப்பேன். மனத்தாழ்மையை வளர்க்க உதவுகிற வசனங்களை என்னுடைய JW லைப்ரரியில் மனத்தாழ்மை என்ற தலைப்பில் சேர்த்து வைத்திருக்கிறேன். மறுபடியும் மறுபடியும் எடுத்துப் படிக்க அது உதவுகிறது. மனத்தாழ்மை பற்றி சில பேச்சுகளையும் ஃபோனில் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். அவற்றையும் அடிக்கடி கேட்பேன்.a யெகோவாவின் சேவையில் நாம் செய்கிற எல்லா வேலைக்கான புகழும் யெகோவாவுக்குத்தான் போக வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். நாம் ஒவ்வொருவரும் செய்வதற்கு யெகோவா நமக்குச் சில வேலைகளைக் கொடுத்திருக்கிறார். ஆனால், உண்மையிலேயே அவர்தான் அந்த வேலைகளை வெற்றியடையச் செய்கிறார்.” ஒருவேளை, உங்கள் சூழ்நிலையை நினைத்து நீங்கள் திருப்தி இல்லாமல் இருக்கிறீர்களா? அப்படியென்றால், மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இது யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பைப் பலப்படுத்தும், திருப்தியாக இருக்கவும் உதவும்.—யாக். 4:6, 8.
எதிர்கால வாக்குறுதிகளைப் பற்றி ஆழமாக யோசியுங்கள்
12. திருப்தியாக இருப்பதற்கு என்ன வாக்குறுதிகள் நமக்கு உதவுகிறது? (ஏசாயா 65:21-25)
12 யெகோவா கொடுத்திருக்கிற அருமையான வாக்குறுதிகளைப் பற்றி நாம் யோசித்துப் பார்த்தால், நம்மால் திருப்தியோடு இருக்க முடியும். நமக்கு இருக்கிற பிரச்சினைகளை யெகோவா புரிந்துகொள்வதாக ஏசாயா புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். அந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் எடுத்துப் போடுவதாகவும் அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 65:21-25-ஐ வாசியுங்கள்.) நாம் பாதுகாப்பான, சொகுசான வீடுகளில் வாழ்வோம். மனநிறைவு தரும் வேலைகளைச் செய்வோம். ஆரோக்கியமான, ருசியான உணவு சாப்பிடுவோம். நமக்கோ நம்முடைய பிள்ளைகளுக்கோ ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயமே அப்போது இருக்காது. (ஏசா. 32:17, 18; எசே. 34:25) பாதுகாப்பான, ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது.
13. எதிர்கால நம்பிக்கையைப் பற்றி முக்கியமாக எந்தச் சூழ்நிலையில் யோசித்துப் பார்க்க வேண்டும்?
13 எதிர்கால நம்பிக்கைகளைப் பற்றி எப்போதையும்விட இப்போது நாம் அதிகமாக யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம். “சமாளிக்க முடியாத அளவுக்கு” பிரச்சினைகள் இருக்கின்றன. (2 தீ. 3:1) அவற்றைச் சகித்திருக்க நமக்குத் தேவையான ஆலோசனையையும் பலத்தையும் உதவியையும் யெகோவா தினம் தினம் தருகிறார். (சங். 145:14) அதோடு, கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள நமக்கு இருக்கிற எதிர்கால நம்பிக்கையும் உதவுகிறது. குடும்பத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக நீங்கள் போராடுகிறீர்களா? இந்தப் போராட்டம் என்றென்றைக்கும் இருக்குமா? கண்டிப்பாக இல்லை! உங்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்; புதிய உலகத்தில் அவர் உங்களை ‘ஜாம் ஜாம்’ என்று வாழ வைப்பார். (சங். 9:18; 72:12-14) தீராத வலி, வேதனையாலோ உடல்நல பிரச்சினையாலோ முடங்கிப்போய் இருக்கிறீர்களா? இந்தக் கஷ்டத்துக்குத் தீர்வே இல்லாததுபோல் தோன்றுகிறதா? புதிய உலகத்தில், வியாதியும் மரணமும் சுவடு தெரியாமல் போய்விடும். (வெளி. 21:3, 4) இந்த நம்பிக்கை இருப்பதால் இப்போது நமக்கு இருக்கும் பிரச்சினையை நினைத்து, கோபமோ எரிச்சலோ அடையாமல் திருப்தியாக இருப்போம். உதாரணத்துக்கு, அநியாயத்தையோ இழப்பையோ சந்திக்கும்போது, வியாதி வரும்போது அல்லது வேறு ஏதாவது பிரச்சினை வரும்போதும்கூட திருப்தியான மனநிலையோடு இருப்போம். ஏனென்றால், இன்று இருக்கும் கஷ்டங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவை “நொடிப்பொழுதுதான்” நீடிக்கும்; அவற்றுக்கு நிரந்தரமான தீர்வு சீக்கிரத்தில் வரப்போகிறது!—2 கொ. 4:17, 18.
14. நம்முடைய நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்?
14 திருப்தியோடு இருப்பதற்கு எதிர்கால நம்பிக்கை ரொம்ப முக்கியம் என்பதை இவ்வளவு நேரம் பார்த்தோம். இந்த நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்? தூரத்தில் இருக்கிற பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு சிலசமயம் கண்ணாடிப் போட வேண்டியிருக்கலாம். அதேபோல், எதிர்காலத்தில் நிறைவேற இருக்கும் ஆசீர்வதங்கள்மேல் நம்பிக்கை அதிகமாவதற்கு நாம் சில படிகளை எடுக்க வேண்டியிருக்கும். ஒருவேளை, பணத்தைப் பற்றி இப்போது நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், பணமோ கடனோ பொருளாதார ஏற்றத்தாழ்வோ இல்லாத ஒரு காலம் வரப்போகிறது, இல்லையா? அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அமைப்பில் உங்களுக்குச் சில பொறுப்புகள் கிடைக்கவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? புதிய உலகத்தில், பாவத்தின் சுவடுகள் இல்லாமல் யெகோவாவுக்கு ஆயிரக்கணக்கான வருஷம் சேவை செய்த பிறகு, இந்தக் கவலையெல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்; அதைப் பற்றி யோசியுங்கள். (1 தீ. 6:19) ஆனால், இருக்கிற பிரச்சினையில் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் எப்படி யோசிக்க முடியும் என்று தோன்றுகிறதா? அப்படி யோசிப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், யோசிக்க யோசிக்க அதுவே உங்களுடைய இயல்பாக ஆகிவிடும்.
15. சகோதரி கிரிஸ்டா சொன்ன வார்த்தைகளில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
15 நாம் முன்பு பார்த்த டென்னிஸ் என்ற சகோதரருடைய மனைவி கிரிஸ்டாவுக்கு எதிர்கால நம்பிக்கை எப்படி உதவியது என்று பார்க்கலாம். “தசைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனமாகும் ஒரு நோய் எனக்கு இருக்கிறது. அதனால், என்னால் நடக்க முடியாது. வீல்சேரைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பெரும்பாலான நேரம் படுக்கையிலேயே இருப்பேன். ஒவ்வொரு நாளும் வலி வேதனையில்தான் நகர்ந்து போகிறது. நான் குணமடைய மாட்டேன் என்று சமீபத்தில் என்னுடைய டாக்டர் சொன்னார். அப்போது உடனடியாக, ‘எனக்கு இருக்கிற எதிர்கால நம்பிக்கை அவருக்கு இல்லை’ என்று தோன்றியது. எதிர்கால நம்பிக்கையின்மேல் என் முழு கவனத்தையும் வைத்திருக்கிறேன். அதனால், என் மனதில் அமைதி இருக்கிறது. இன்றைக்கு நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம், ஆனால் புதிய உலகத்தில் என் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பேன்” என்கிறார் கிரிஸ்டா.
“அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது”
16. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு “ஒரு குறையும் இருக்காது” என்று தாவீதால் எப்படிச் சொல்ல முடிந்தது?
16 திருப்தியோடு இருக்கிறவர்களுக்கும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். தாவீது ராஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. குறைந்தது, மூன்று பிள்ளைகளின் இழப்பை அவர் சந்தித்தார். அவர்மேல் பொய்யாகக் குற்றம் சுமத்தினார்கள், அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்கள், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாடோடியாக பல வருஷங்கள் அலைந்து திரிந்தார். கஷ்டத்தைச் சகித்துக்கொண்டு இருந்தபோது ஒருசமயம், யெகோவாவைப் பற்றி அவர் இப்படிச் சொன்னார்: “அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது.” (சங். 34:9, 10) அவரால் எப்படி இப்படிச் சொல்ல முடிந்தது? கஷ்டங்கள் வருவதை யெகோவா தடுத்து நிறுத்தாவிட்டாலும், நமக்குத் தேவையானதைக் கண்டிப்பாகக் கொடுப்பார் என்ற நம்பிக்கை தாவீதுக்கு இருந்தது. (சங். 145:16) என்ன கஷ்டங்கள் வந்தாலும், சகித்திருப்பதற்கு யெகோவா கண்டிப்பாக உதவுவார் என்று தாவீது மாதிரியே நாமும் நம்பிக்கையோடு இருக்கலாம். அப்படிச் செய்தால், நம்மால் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.
17. திருப்தியாக இருப்பதற்கான ரகசியத்தை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
17 நீங்கள் திருப்தியாக இருக்க வேண்டும் என்பதுதான் யெகோவாவின் ஆசை. (சங். 131:1, 2) அதனால், அதற்கான ரகசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ளவும், கவனம் சிதறாமல் இருக்கவும் மனத்தாழ்மையாக இருக்கவும், எதிர்கால நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ளவும் நீங்கள் கடினமாக உழைத்தால், “நான் திருப்தியாக இருக்கிறேன்” என்று உங்களால் நிச்சயம் சொல்ல முடியும்!—சங். 16:5, 6.
பாட்டு 118 எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்
a உதாரணத்துக்கு, தாழ்மையானவர்களை யெகோவா கவனித்துக்கொள்வார் மற்றும் அகம்பாவம் வந்தால் அழிவு வரும் என்ற தலைப்புகளில் இருக்கும் காலை வழிபாடு நிகழ்ச்சிகளை jw.org-ல் பாருங்கள்.
b படவிளக்கம்: அமைப்பின் கட்டடம் ஒன்றில் ஒரு சகோதரர் பராமரிப்பு வேலை செய்கிறார்; சைகை மொழி கற்றுக்கொண்ட ஒரு சகோதரியை வட்டார மாநாட்டில் ஒரு சகோதரர் பேட்டி எடுக்கிறார்; ஒரு சகோதரர் பொதுப் பேச்சு கொடுக்கிறார்.