உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 ஜூலை பக். 26-30
  • “இந்தப் போர் யெகோவாவின் போர்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “இந்தப் போர் யெகோவாவின் போர்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • மிஷனரி ஆர்வம் தொற்றியது
  • தலைமை அலுவலகத்தில்
  • சட்ட இலாகாவில்
  • நல்ல செய்திக்காக வழக்காடி, சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டுதல்
  • யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம்!
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 ஜூலை பக். 26-30
ஃபிலிப் பிரம்லி.

வாழ்க்கை சரிதை

“இந்தப் போர் யெகோவாவின் போர்”

ஃபிலிப் பிரம்லி

ஜனவரி 28, 2010. பிரான்சு நாட்டில் இருக்கும் ஸ்ட்ராஸ்பர்க் என்ற அழகான நகரத்தில் நான் இருந்தேன். பனிக்கால குளிரில் அந்த ஊரைச் சுற்றிப்பார்க்கப் போனதாக நினைக்க வேண்டாம். மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் (ECHR) யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமைகளுக்காக வழக்காட ஒரு சட்டக் குழு அங்கே போயிருந்தது. அதில் நானும் ஒருவன். வழக்கு இதுதான்: பிரான்சு நாட்டு அரசாங்கம் அங்கிருந்த நம் சகோதரர்கள்மேல், கிட்டத்தட்ட 64 மில்லியன் யூரோக்கள் (அதாவது, 8 கோடியே 90 லட்சம் அமெரிக்க டாலர்) வரி சுமத்தியிருந்தார்கள்! இந்த அநியாய வரியை எதிர்த்து வாதாடத்தான் நாங்கள் போயிருந்தோம். இது பணம் சம்பந்தப்பட்ட வழக்கு மட்டுமல்ல. இதில் வெற்றி பெற்றால், யெகோவாவின் பெயர் மகிமைப்படும், அவருடைய மக்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும், அந்த நாட்டில் சுதந்திரமாக யெகோவாவை வணங்கவும் முடியும். விசாரணை அன்று நடந்த ஒரு சம்பவம், “இந்தப் போர் யெகோவாவின் போர்” என்ற உண்மையை நிரூபித்தது. (1 சா. 17:47) விளக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள்.

இந்தப் பிரச்சினை 1999-ல் ஆரம்பித்தது. பிரான்சு நாட்டில் இருக்கும் நம்முடைய கிளை அலுவலகத்துக்கு, 1993 முதல் 1996 வரை வந்த நன்கொடைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அநியாயமாக வரி விதித்தது. அதை எதிர்த்து நாம் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தோம். ஆனால், தோல்விதான் மிஞ்சியது. மேல்முறையீட்டிலும் வெற்றி கிடைக்கவில்லை. பிறகு, நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்த 4.5 மில்லியனுக்கும் அதிகமான யூரோக்களை (அதாவது, 63 லட்சம் அமெரிக்க டாலர்) அந்த நாட்டு அரசாங்கம் பறிமுதல் செய்தது. அந்தப் பணத்தை நாம் திரும்பப் பெறுவதற்கு ஒரே நம்பிக்கை ஐரோப்பிய நீதிமன்றம்தான். வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு முன்பு, அரசு தரப்பு வக்கீல்களுடன் முதலில் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரும்படி நீதிமன்றம் சொன்னது. அந்த நீதிமன்றத்தின் ஒரு பதிவாளர் முன்னிலையில் அப்படிச் செய்ய சொன்னது. பதிவாளர்கள் பொதுவாக நீதிமன்றத்தின் நிர்வாகம் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட வேலைகளைப் பார்த்துக்கொள்வார்கள்.

நீதிமன்றத்தின் சார்பாக ஒரு பெண் பதிவாளர் வந்திருந்தார். பிரான்சு அரசாங்கம் கேட்கிற ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு, பிரச்சினைக்கு முடிவுகட்டும்படி அவர் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இந்த விஷயத்தில் ஒரு சல்லிக்காசு கொடுப்பதுகூட பைபிள் நியமங்களுக்கு எதிராக இருக்கும் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஏனென்றால், சகோதரர்கள் கொடுத்த நன்கொடை, கடவுளுடைய அரசாங்க வேலைக்காகத்தான், பிரான்சு நாட்டு அரசாங்கத்துக்கு அல்ல! (மத். 22:21) இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை மதித்து பேச்சுவார்த்தைக்குப் போனோம்.

2010-ல் ECHR முன்பு எங்கள் சட்டக் குழு

நீதிமன்றத்தின் ஒரு அழகான கான்பரன்ஸ் அறையில் நாங்கள் கூடினோம். ஆரம்பமே சரியாகப் போகவில்லை. அந்தப் பதிவாளர், அரசாங்கம் விதித்த வரித்தொகையில் ஒரு பகுதியையாவது யெகோவாவின் சாட்சிகள் கட்ட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். அப்போது திடீரென்று ஒரு கேள்வி கேட்க கடவுளுடைய சக்தி எங்களைத் தூண்டியது. “எங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து ஏற்கனவே 4.5 மில்லியனுக்கும் அதிகமான யூரோக்களை பிரான்சு அரசாங்கம் பறிமுதல் செய்துவிட்டது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டோம்.

அந்தப் பதிவாளர் அதிர்ச்சியடைந்தது அவருடைய முகத்தில் தெரிந்தது. நடந்ததை அரசாங்க வக்கீல்களும் ஒத்துக்கொண்டார்கள். விஷயம் தெரிந்த பிறகு, இந்த வழக்கில் பதிவாளரின் மனப்பான்மை முழுவதுமாக மாறிவிட்டது. அரசு தரப்பைக் கண்டித்துவிட்டு, கூட்டத்தைத் திடீரென்று முடித்துவிட்டார். வழக்கு போய்க்கொண்டிருந்த திசையை யெகோவா முழுவதுமாக மாற்றிவிட்டதை நான் புரிந்துகொண்டேன். அதுவும், கடுகளவுகூட எதிர்பார்க்காத விதத்தில்! எங்கள் கண்களையே எங்களால் நம்ப முடியவில்லை. சந்தோஷமாகக் கிளம்பினோம்!

ஜூன் 30, 2011 அன்று, நமக்குச் சாதகமான தீர்ப்பை ECHR ஒருமனதாக வழங்கியது. பிரான்சு அரசாங்கம் விதித்த வரியை ரத்து செய்தது. யெகோவாவின் சாட்சிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கும்படி ஆணையிட்டது. சரித்திரப் புகழ்பெற்ற அந்தத் தீர்ப்பு, இன்றுவரை அந்த நாட்டில் தூய வணக்கத்துக்கு ஒரு காவலாக இருக்கிறது. அன்று அந்தக் கூட்டத்தில் கேட்ட அந்த ஒரே கேள்விதான், அதுவும் முன்பே தயாரிக்காமல் திடீரென்று கேட்ட அந்தக் கேள்விதான், கோலியாத்தின் நெற்றிப் பொட்டில் அடித்த கல்லைப் போல இறங்கியது. வழக்கின் திசையையே மாற்றியது. நாம் ஜெயித்ததற்கான காரணம்? தாவீது கோலியாத்திடம் சொன்னது போல், “இந்தப் போர் யெகோவாவின் போர்.”—1 சா. 17:45-47.

இந்த ஒன்று மட்டுமல்ல, பல வெற்றிகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பலம்படைத்த அரசாங்கங்களும் மத அமைப்புகளும் நம்மைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றன. இருந்தாலும், இன்றுவரை 70 நாடுகளில் இருக்கும் உச்ச நீதிமன்றங்களும், வேறு பல சர்வதேச தீர்ப்பாயங்களும் (இதுவும் ஒருவகையான நீதிமன்றம்) யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாக 1,225 தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. நம்முடைய அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க இந்த வெற்றிகள் நமக்கு உதவியிருக்கின்றன. அதாவது, நாட்டில் ஒரு மதமாகச் செயல்படுவதற்கு நமக்கு இருக்கும் உரிமையைப் பாதுகாக்க... தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்க... ரத்தம் ஏற்றிக்கொள்வதை மறுக்க... ஊழியத்தில் ஈடுபட... நமக்கு உதவியிருக்கின்றன.

அமெரிக்காவில், நியு யார்க்கில் இருக்கும் உலகத் தலைமை அலுவலகத்தில் சேவை செய்யும் நான், ஐரோப்பாவில் நடந்த வழக்கில் எப்படி ஈடுபட்டேன்?

மிஷனரி ஆர்வம் தொற்றியது

என் அப்பா ஜார்ஜ் மற்றும் அம்மா லூசெல், கிலியட் பள்ளியின் 12-வது வகுப்பில் பட்டம் பெற்றவர்கள். 1956-ல், அவர்கள் எத்தியோப்பியாவில் சேவை செய்துகொண்டிருந்தபோது நான் பிறந்தேன். முதல் நூற்றாண்டில் இருந்த நற்செய்தியாளரான பிலிப்புவின் பெயரைத்தான் எனக்கும் வைத்தார்கள். (அப். 21:8) அடுத்த வருஷம், அரசாங்கம் நம்முடைய வணக்கத்துக்குத் தடை போட்டார்கள். நான் குழந்தையாக இருந்தாலும், யெகோவாவை நாங்கள் ரகசியமாக வணங்கியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது! 1960-ல், அதிகாரிகள் எங்களை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்கள்.

1959-ல், எத்தியோப்பியாவில் இருக்கும் அடிஸ் அபாபாவில், நேதன் எச். நார் (இடது) என் குடும்பத்தைச் சந்தித்தபோது

நாங்கள் குடும்பமாக, அமெரிக்காவில், கான்சஸில் இருக்கும் விசிடா என்ற இடத்துக்குக் குடிமாறினோம். மிஷனரிகளாக அப்பா-அம்மாவுக்கு இருந்த ஆர்வம் தணியவே இல்லை. சத்தியத்தின்படிதான் அவர்கள் வாழ்ந்தார்கள். சத்தியத்தை என் மனதில் மட்டுமல்ல, என் அக்கா ஜூடி மற்றும் தம்பி லெஸ்லியின் மனதிலும் பதிய வைத்தார்கள். அவர்களும் எத்தியோப்பியாவில்தான் பிறந்தார்கள். நான் 13 வயதில் ஞானஸ்நானம் எடுத்தேன். மூன்று வருஷத்துக்குப் பிறகு, பெரு என்ற நாட்டில், தேவை அதிகம் இருக்கிற, அரிகுய்பா என்ற இடத்துக்கு நாங்கள் குடும்பமாகக் குடிமாறினோம்.

1974-ல், நான் வெறும் 18 வயதில் இருக்கும்போதே, என்னையும் என்னோடு இன்னும் நாலு பேரையும் விசேஷ பயனியராக பெரு நாட்டுக் கிளை அலுவலகம் நியமித்தது. மத்திய ஆண்டிஸ் மலைத்தொடரின் உச்சியில், இதுவரை யாருமே ஊழியம் செய்யாத இடங்களில் நாங்கள் ஊழியம் செய்தோம். கச்வா மற்றும் அய்மாரா பழங்குடி மக்களிடம்கூட பேசினோம். பெட்டி மாதிரி இருந்த ஒரு மோட்டார் வண்டியில்தான் பயணம் செய்தோம். அதனால், அதற்கு ‘பேழை’ என்று செல்லப் பெயர் வைத்தோம். பழங்குடி மக்களிடம், வறுமை, வியாதி, சாவை எல்லாம் யெகோவா சீக்கிரத்தில் ஒழித்துக்கட்டுவார் என்பதை பைபிளில் இருந்து சொன்னோம். (வெளி. 21:3, 4) அதெல்லாம் பசுமையான நினைவுகள். நிறைய பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

தண்ணீரில் பயணம் செய்யும் மோட்டார் வண்டி வீடு.

“பேழை,” 1974

தலைமை அலுவலகத்தில்

1977-ல், ஆளும் குழுவைச் சேர்ந்த ஆல்பர்ட் ஷ்ரோடர் பெரு நாட்டுக்கு வந்தார். அப்போது, உலகத் தலைமை அலுவலகத்தில் சேவை செய்ய என்னை உற்சாகப்படுத்தினார். நானும் பெத்தேலுக்கு விண்ணப்பித்தேன். ஜூன் 17, 1977 முதல் புருக்லின் பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தேன். அடுத்த நாலு வருஷம், அங்கே சுத்தம் மற்றும் பராமரிப்பு வேலைகளைச் செய்தேன்.

1979-ல், எங்கள் கல்யாண நாள் அன்று

ஜூன் 1978-ல், நியு ஆர்லியன்ஸ், லூயிஸியானாவில் நடந்த சர்வதேச மாநாட்டில், எலிசபெத் அவலோன் என்ற பெண்ணைச் சந்தித்தேன். என்னுடைய அப்பா அம்மா போலவே, அவளுடைய அப்பா அம்மாவும், சத்தியத்தில் உறுதியாக இருந்தார்கள். அவள் நாலு வருஷமாக பயனியர் சேவை செய்துகொண்டிருந்தாள். வாழ்நாள் முழுவதும் முழுநேர சேவை செய்ய வேண்டும் என்பதுதான் அவள் ஆசை. நாங்கள் அடிக்கடி பேசினோம். காதலிக்க ஆரம்பித்தோம். அக்டோபர் 20, 1979-ல் கல்யாணம் செய்துகொண்டோம். இருவரும் சேர்ந்து பெத்தேல் சேவையில் இறங்கினோம்.

பெத்தேல் வந்த பிறகு, நாங்கள் போன முதல் சபை புருக்லின் ஸ்பானிஷ் சபை. அங்கிருந்த சகோதர சகோதரிகள் ரொம்ப அன்பாக இருந்தார்கள். அது தவிர இன்னும் மூன்று சபைகளுக்கு இதுவரை நாங்கள் மாறிப்போயிருக்கிறோம். எல்லாரும் எங்களை அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். பெத்தேல் சேவைக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார்கள். அவர்களுடைய உதவியை எங்களால் மறக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, எங்களுடைய வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள உதவிய நண்பர்களையும் குடும்பத்தாரையும்கூட எங்களால் மறக்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

சபைக் கூட்டத்தில், பெத்தேல் ஊழியர்களுடன் ஃபிலிப்.

1986-ல், புருக்லின் ஸ்பானிஷ் சபையைச் சேர்ந்த பெத்தேல் ஊழியர்கள்

சட்ட இலாகாவில்

ஜனவரி 1982-ல், பெத்தேலில் சட்ட இலாகாவில் சேவை செய்யும் நியமிப்பு எனக்குக் கிடைத்தது. அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மூன்று வருஷம் கழித்து, சட்டம் படித்து என்னை வக்கீலாக ஆகும்படி அமைப்பு சொன்னது. சட்டம் படிக்கும்போது, ஒரு விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் மனிதர்களுக்கு இருக்கும் சில அடிப்படைச் சுதந்திரத்துக்கான காரணமே யெகோவாவின் சாட்சிகள் ஜெயித்த வழக்குகள்தான் என்பதைப் படித்தேன். அப்படிப்பட்ட முக்கிய வழக்குகளைப் பற்றி வகுப்பில் விலாவாரியாகச் சொல்லிக்கொடுத்தார்கள்.

1986-ல், என்னுடைய 30 வயதில், பெத்தேலில் சட்ட இலாகாவின் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். இளம் வயதில் என்னை நம்பி இந்தப் பெரிய பொறுப்பைக் கொடுத்ததை நினைத்து பெருமைப்பட்டேன். ஆனால், அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை என்பது எனக்குத் தெரியும். தெரியாத விஷயங்கள் எக்கச்சக்கமாக இருந்தன. நான் திக்குமுக்காடிப் போனேன்.

1988-ல் நான் வக்கீல் ஆனேன். ஆனால், என்னுடைய படிப்பு யெகோவாவுக்கும் எனக்கும் இருக்கிற பந்தத்தை எந்தளவு பாதிக்கும் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. மேற்படிப்பு படித்தால் ‘நமக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்ற தலைக்கனம் வந்துவிடலாம். மற்றவர்களைத் தாழ்வாகப் பார்க்கவும் ஆரம்பித்துவிடலாம். இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வர என்னுடைய மனைவிதான் உதவி செய்தாள். சட்டப் படிப்பு படிப்பதற்கு முன்பு நான் வணக்க விஷயங்களை எப்படி ஒழுங்காகச் செய்துகொண்டிருந்தேனோ அதே மாதிரி மறுபடியும் செய்ய உதவி செய்தாள். எல்லாம் சரியாவதற்குக் கொஞ்சக் காலம் எடுத்ததுதான். ஆனால், திரும்பவும் யெகோவாவோடு எனக்கிருந்த பந்தத்தைப் பலப்படுத்திக்கொண்டேன். நிறைய அறிவை வளர்த்துக்கொள்வது மட்டும் வாழ்க்கையில் முக்கியம் அல்ல. யெகோவாமீதும் அவருடைய மக்கள்மீதும் நிறைய அன்பை வளர்த்துக்கொள்வதுதான் முக்கியம். அதுதான் வாழ்க்கையை வளமாக்கும் என்பதை புரிந்துகொண்டேன்.

நல்ல செய்திக்காக வழக்காடி, சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டுதல்

நான் சட்டம் படித்து முடித்த பிறகு, அமைப்பில் சட்டம் சம்பந்தப்பட்ட வேலைகளில் என்னால் உதவ முடிந்தது. அதோடு, நல்ல செய்திக்காக நீதிமன்றங்களிலும் வாதாட முடிந்தது. வேகமாக முன்னேறி வரும் நம் அமைப்பில் வேலை செய்வது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. அதோடு, மாற்றங்கள் வந்துகொண்டே இருந்ததால் வேலையில் சவால்களும் இருந்தன. உதாரணத்துக்கு, ரொம்ப காலமாக வழக்கத்தில் இருந்த ஒரு விஷயத்தில் மாற்றம் கொண்டுவர, 1991-ல் சட்ட இலாகாவிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அதாவது, பிரசுரங்களுக்கு நன்கொடை கேட்கும் வழக்கத்தை எப்படி நிறுத்தலாம் என்று கேட்கப்பட்டது. இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்ட பிறகுதான், யெகோவாவின் சாட்சிகள் விலையில்லாமல் பிரசுரங்களைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால், பெத்தேலிலும் சபைகளிலும் வேலைகள் எளிமையானது. அதோடு, இந்த நாள் வரை, வரி கட்ட வேண்டிய பிரச்சினைகளையும் தவிர்க்க முடிந்திருக்கிறது. சிலருடைய மனதில், பணப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ, ஆர்வமுள்ள ஆட்களுக்கு பிரசுரங்களைக் கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்றெல்லாம் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது. ஆனால், அதற்கு நேர்மாறாகத்தான் நடந்தது. 1990-ல் இருந்து யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகமாக ஆகியிருக்கிறது. இன்று பணம் கொடுக்காமலேயே பைபிள் அடிப்படையிலான நம் பிரசுரங்களை மக்கள் படித்துப் பயனடைய முடிகிறது. இந்த மாதிரியான பெரிய மாற்றங்கள் எல்லாம் வெற்றியடையக் காரணம் என்ன? யெகோவா தரும் பலமும், உண்மையுள்ள அடிமை தரும் வழிநடத்துதலும்தான் காரணம்! இதைக் கண்ணாரப் பார்த்திருக்கிறேன்.—யாத். 15:2; மத். 24:45.

வழக்குகளில் நமக்கு வெற்றி கிடைப்பதற்குக் காரணம், நம் சகோதரர்கள் திறமைசாலியான வக்கீல்களாக இருப்பது மட்டும் அல்ல, யெகோவாவின் மக்களுடைய நல்ல நடத்தையும்தான். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் நமக்குச் சாதகமாக செயல்பட அதுதான் தூண்டுகிறது. 1998-ல் என்ன நடந்தது என்று சொல்கிறேன். கியூபாவில் நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் கலந்துகொள்ள, ஆளும் குழுவைச் சேர்ந்த மூன்று சகோதரர்களும் அவர்களுடைய மனைவிகளும் வந்திருந்தார்கள். அவர்கள் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்துகொண்டார்கள். யெகோவாவின் சாட்சிகளாக நாம் அரசியலில் நடுநிலையோடு இருக்கிறோம் என்பதை அவர்களுடைய நடத்தையை வைத்தே அதிகாரிகள் புரிந்துகொண்டார்கள். நாங்கள் அந்த அதிகாரிகளோடு நடத்திய கூட்டங்களில் சொன்ன விஷயங்களைவிட, அந்த சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய மனைவிகளின் நடத்தையை வைத்தே அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

சில விஷயங்களை பேசித் தீர்க்க முடியவில்லை என்றால், “நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற” நாம் நீதிமன்றத்துக்குப் போகிறோம். (பிலி. 1:7) உதாரணத்துக்கு, பல பத்தாண்டுகளாக, ராணுவ சேவையை மறுப்பதற்கான உரிமை நமக்கு இருக்கிறது என்பதை ஐரோப்பாவிலும் தென் கொரியாவிலும் இருக்கிற அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், ஐரோப்பாவில் சுமார் 18,000 சகோதரர்களும், தென் கொரியாவில் 19,000-க்கும் அதிகமான சகோதரர்களும், ராணுவத்தில் சேர மனசாட்சி இடம் கொடுக்காததால் சிறைக்குப் போயிருக்கிறார்கள்.

கடைசியாக ஜூலை 7, 2011-ல், பயாட்டியான் v. ஆர்மீனியா வழக்கில், சரித்திரப் புகழ்பெற்ற ஒரு தீர்ப்பை ECHR கொடுத்தது. அதில், ஐரோப்பா முழுவதும் ராணுவத்தில் சேர விரும்பாதவர்களுக்கு, வேறு அரசாங்க வேலைகளைக் கொடுக்க உத்தரவிட்டது. இதே போன்ற ஒரு தீர்ப்பை, ஜூன் 28, 2018-ல் தென் கொரியாவின் கான்ஸ்டிட்டியூஷனல் நீதிமன்றம் வழங்கியது. ஒருசில இளம் சகோதரர்கள் தங்களுடைய நடுநிலையை கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால்கூட, இந்த வெற்றி நமக்குக் கிடைத்திருக்காது.

உலகத் தலைமை அலுவலகத்திலும், உலகம் முழுவதும் இருக்கும் கிளை அலுவலகங்களிலும், சட்ட இலாகாவைச் சேர்ந்தவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நம்முடைய உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். அரசாங்கம் எதிர்க்கும்போது, நம்முடைய சகோதரர்கள் சார்பாக வழக்காடுவது பெருமையாக இருக்கிறது. நீதிமன்றத்தில் நாம் ஜெயிக்கிறோமோ இல்லையோ, ராஜாக்களுக்கும், ஆளுநர்களுக்கும், மக்களுக்கும் முன்பாக சாட்சி கொடுக்க முடிந்திருக்கிறது. (மத். 10:18) நீதிமன்றங்களில், வாதாடினாலும் சரி, எழுத்து வடிவில் ஆவணங்கள் கொடுத்தாலும் சரி, பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுகிறோம். நீதிபதிகளும், அரசாங்க அதிகாரிகளும், மீடியாவும், பொது மக்களும் அவற்றைப் படிக்கிறார்கள், கேட்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும், பைபிளைத்தான் அவர்கள் ஆதாரமாக வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் நேர்மையான ஆட்கள் புரிந்துகொள்கிறார்கள். சிலர் யெகோவாவின் சாட்சிகளாகவும் ஆகியிருக்கிறார்கள்.

யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம்!

கடந்த 40 வருஷங்களாக, சட்டம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக, உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்களுடன் சேர்ந்து சேவை செய்திருக்கிறேன். பல நீதிமன்றங்களில் வாதாடியிருக்கிறேன், உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இதெல்லாம் எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம். தலைமை அலுவலகத்திலும் மற்ற கிளை அலுவலகங்களிலும் சட்ட இலாகாவில் வேலை செய்யும் சகோதரர்களையும் பார்த்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ரொம்ப திருப்தியாக இருக்கிறது. யெகோவா நிறைய ஆசீர்வாதங்களை அள்ளித் தந்திருக்கிறார்.

ஃபிலிப் மற்றும் எலிசபெத் பிரம்லி.

என் மனைவி எலிசபெத், கடந்த 45 வருஷமாக எனக்கு ஆதரவாக இருக்கிறாள், சாதகமான சமயத்திலும் சரி, சவாலான சமயத்திலும் சரி. அவளைப் பார்த்தால் எனக்கு உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது. ஏனென்றால், அவள் ஒருவிதமான வியாதியோடு போராடிக்கொண்டிருக்கிறாள். அது அவளுடைய உடலின் தெம்பை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. இருந்தாலும், அவள் எனக்கு ரொம்ப ஆதரவாக இருக்கிறாள்.

பலமும் வெற்றியும் நம் சொந்தத் திறமையால் வருவதில்லை என்பதை நாங்கள் நேரடியாகவே பார்த்திருக்கிறோம். தாவீது சொன்னது போல், “யெகோவாதான் தன்னுடைய மக்களுக்குப் பலம்.” (சங். 28:8) உண்மையிலேயே, “இந்தப் போர் யெகோவாவின் போர்.”

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்