படிப்புக் கட்டுரை 18
பாட்டு 65 முன்னேறு!
இளம் சகோதரர்களே—மாற்குவையும் தீமோத்தேயுவையும் போல நடந்துகொள்ளுங்கள்
“மாற்குவை உன்னோடு கூட்டிக்கொண்டு வா. ஏனென்றால், ஊழியத்தில் அவர் எனக்கு உதவியாக இருப்பார்.”—2 தீ. 4:11.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் இன்னும் அதிகமாகச் சேவை செய்ய இளம் சகோதரர்களுக்குச் சில குணங்கள் தேவை. அவற்றை வளர்த்துக்கொள்ள மாற்கு மற்றும் தீமோத்தேயுவின் உதாரணம் எப்படி உதவி செய்யும் என்று தெரிந்துகொள்வோம்.
1-2. மற்றவர்களுக்கு இன்னும் நிறைய சேவை செய்யும் விஷயத்தில் மாற்குவுக்கும் தீமோத்தேயுவுக்கும் என்ன சவால்கள் இருந்திருக்கலாம்?
இளம் சகோதரர்களே, யெகோவாவுக்கு இன்னும் நிறைய சேவை செய்யவும், சபையில் இருப்பவர்களுக்கு இன்னும் நிறைய உதவி செய்யவும் ஆசைப்படுகிறீர்களா? கண்டிப்பாக ஆசைப்படுவீர்கள்! இளம் சகோதரர்கள் நிறையப் பேர் மற்றவர்களுக்குச் சேவை செய்ய ஆசைப்படுவதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. (சங். 110:3) அதேசமயத்தில், உங்களுக்கு சில சவால்களும் இருக்கலாம். எப்படியிருக்குமோ என்ற பயத்தால் புது விதங்களில் சேவை செய்ய நீங்கள் தயங்குகிறீர்களா? உங்கள்மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லாததால் ஒரு நியமிப்பை ஏற்றுக்கொள்ள எப்போதாவது மறுத்திருக்கிறீர்களா? நிறையப் பேருடைய விஷயத்தில் இப்படித்தான் நடந்திருக்கிறது.
2 மாற்குவுக்கும் தீமோத்தேயுவுக்கும் இதேபோன்ற சவால்கள் இருந்தன. ஆனால், என்ன நடக்குமோ என்ற பயத்தாலோ, தங்களுக்குத் தகுதியில்லை என்ற எண்ணத்தாலோ அவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்யாமல் இருந்துவிடவில்லை. முதல் மிஷனரி பயணத்தில், அப்போஸ்தலன் பவுலோடும் பர்னபாவோடும் போக வாய்ப்புக் கிடைத்தபோது, மாற்கு தன் அம்மாவோடு வசதியான ஒரு வீட்டில் ஒருவேளை வாழ்ந்துவந்திருக்கலாம். (அப். 12:12, 13, 25) ஆனால், இன்னும் நிறைய ஊழியம் செய்வதற்காக, தனக்குப் பழக்கப்பட்ட அந்த இடத்தைவிட்டு மாற்கு போனார். முதலில், பவுலோடும் பர்னபாவோடும் சேர்ந்து அந்தியோகியாவுக்கு அவர் போனார். அதன் பிறகு, அவர்களோடு சேர்ந்து இன்னும் தூரமான இடங்களுக்குப் போனார். (அப். 13:1-5) அதேபோல், தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்காக தீமோத்தேயுவை பவுல் கூப்பிட்டபோது, தீமோத்தேயு தன்னுடைய அப்பா-அம்மாவோடு வாழ்ந்துவந்ததாகத் தெரிகிறது. அவர் ஒரு இளைஞராக இருந்ததால், பவுலோடு போகும் அளவுக்குத் தனக்கு தகுதி இல்லை என்று நினைத்திருக்கலாம். (1 கொரிந்தியர் 16:10, 11 மற்றும் 1 தீமோத்தேயு 4:12-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) ஆனாலும், அவர் பவுலோடு போனார், நிறைய ஆசீர்வாதங்களையும் அனுபவித்தார்.—அப். 16:3-5.
3. (அ) மாற்குவும் தீமோத்தேயுவும் செய்த சேவையை பவுல் பெரிதாக நினைத்தார் என்று எப்படிச் சொல்லலாம்? (2 தீமோத்தேயு 4:6, 9, 11) (படங்களையும் பாருங்கள்.) (ஆ) என்னென்ன கேள்விகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?
3 மாற்குவும் தீமோத்தேயுவும் இளம் வயதிலேயே சபையில் நிறைய பொறுப்புகளை எடுத்துச் செய்யக் கற்றுக்கொண்டார்கள். அதனால், அவர்கள் இரண்டு பேரையும் பவுலுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. சொல்லப்போனால், தனக்கு சாவு நெருங்கிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டபோது தன்னிடம் வரும்படி பவுல் அவர்களைக் கூப்பிட்டார். (2 தீமோத்தேயு 4:6, 9, 11-ஐ வாசியுங்கள்.) மாற்குவும் தீமோத்தேயுவும் காட்டிய என்னென்ன குணங்கள் பவுலுக்கு ரொம்பப் பிடித்திருந்தன? இன்று இளம் சகோதரர்கள் எப்படி அந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ளலாம்? ஒரு அப்பாவைப் போல பவுல் கொடுத்த ஆலோசனைகள் இன்று இளம் சகோதரர்களுக்கு எப்படி உதவும்?
இளம் வயதிலேயே மாற்குவும் தீமோத்தேயுவும் நிறைய பொறுப்புகளைச் செய்ததால், பவுலுக்கு அவர்களை ரொம்பப் பிடித்திருந்தது (பாரா 3)b
மாற்குவைப் போலவே மற்றவர்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருங்கள்
4-5. மற்றவர்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருந்ததை மாற்கு எப்படிக் காட்டினார்?
4 மற்றவர்களுக்குச் சேவை செய்வது என்றால், மற்றவர்களுக்காக “கடினமாக உழைப்பதையும், என்ன கஷ்டம் வந்தாலும் விடாமல்” அவர்களுக்கு உதவி செய்வதையும் குறிப்பதாக ஒரு புத்தகம் சொல்கிறது. இந்த விஷயத்தில் மாற்கு ஒரு நல்ல முன்மாதிரி. இரண்டாவது மிஷனரி பயணத்தில் பவுல் தன்னைக் கூட்டிக்கொண்டு போக மறுத்தபோது, அநேகமாக மாற்குவுக்கு வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருந்திருக்கும். (அப். 15:37, 38) ஆனாலும், மாற்கு சோர்ந்துபோகாமல் தன்னுடைய சகோதர சகோதரிகளுக்குத் தொடர்ந்து சேவை செய்தார்.
5 அவர் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரரான பர்னபாவோடு சேர்ந்து வேறொரு இடத்தில் சேவை செய்தார். கிட்டத்தட்ட 11 வருஷங்களுக்குப் பிறகு, பவுல் ரோமில் முதல் தடவையாகக் கைதியாக இருந்தபோது அவருக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் மாற்குவும் ஒருவர். (பிலே. 23, 24) மாற்கு கொடுத்த ஆதரவை பவுல் ரொம்பப் பெரிதாக நினைத்தார். சொல்லப்போனால், மாற்கு தனக்கு ரொம்ப ‘ஆறுதலாக’ இருந்ததாகக்கூடச் சொன்னார்.—கொலோ. 4:10, 11.
6. அனுபவமுள்ள கிறிஸ்தவர்களோடு நெருக்கமாகப் பழகியதால் மாற்குவுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
6 அனுபவமுள்ள கிறிஸ்தவர்களோடு நெருக்கமாகப் பழகியதால் மாற்குவுக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. ரோமில் பவுலோடு கொஞ்சக் காலம் இருந்த பிறகு, மாற்கு பாபிலோனில் அப்போஸ்தலன் பேதுருவோடு சேர்ந்து சேவை செய்தார். அவர்கள் இரண்டு பேரும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாக ஆனார்கள். சொல்லப்போனால், “என் மகன் மாற்கு” என்றுகூட பேதுரு சொன்னார். (1 பே. 5:13) அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சேவை செய்தபோது, இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் ஊழியத்தைப் பற்றியும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை மாற்குவுக்கு பேதுரு அநேகமாக சொல்லியிருக்கலாம். அந்த விஷயங்களைத்தான் பிற்பாடு மாற்கு தன்னுடைய சுவிசேஷத்தில் பதிவு செய்ததாகத் தெரிகிறது.a
7. சங்-வூ என்ற இளம் சகோதரர் எப்படி மாற்குவைப் போலவே நடந்துகொண்டார்? (படத்தையும் பாருங்கள்.)
7 மாற்கு தொடர்ந்து யெகோவாவின் சேவையைச் சுறுசுறுப்பாகச் செய்தார், அனுபவமுள்ள சகோதரர்களோடு நெருக்கமாகவும் இருந்தார். நீங்கள் எப்படி மாற்குவைப் போலவே நடந்துகொள்ளலாம்? ஒருவேளை, உதவி ஊழியராகவோ மூப்பராகவோ அல்லது வேறு விதத்திலோ யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு இன்னும் உங்களுக்குக் கிடைக்காமல் இருக்கலாம். அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள்! யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்ய வேறு வழிகளைத் தேடிக்கொண்டே இருங்கள். இப்போது மூப்பராகச் சேவை செய்யும் சங்-வூ என்ற சகோதரரின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இளம் வயதில், மற்ற இளம் சகோதரர்களோடு அவர் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தார். அவர்களில் சிலருக்கு தனக்கு முன்பே விசேஷப் பொறுப்புகள் கிடைத்ததால், தன்னை யாரும் கண்டுகொள்வதே இல்லை என்று சங்-வூ நினைத்தார். கடைசியில், அனுபவமுள்ள சகோதரர்களிடம் அவர் மனம்விட்டுப் பேசினார். அப்போது ஒரு மூப்பர் அவரிடம், ‘நீ செய்யும் நல்ல விஷயங்களைச் சிலசமயங்களில் மற்றவர்கள் கவனிக்கவில்லை என்றாலும், உன்னால் முடிந்ததைத் தொடர்ந்து செய்துகொண்டே இரு’ என்று சொல்லி உற்சாகப்படுத்தினார். அந்த ஆலோசனையைக் கேட்ட பிறகு, வயதானவர்களுக்கு சங்-வூ உதவி செய்தார், கூட்டங்களுக்கு வர மற்றவர்களுக்கும் உதவி செய்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “மற்றவர்களுக்கு சேவை செய்வது என்றால் என்ன என்று நான் இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டேன். மற்றவர்களுக்கு நடைமுறையான உதவிகளைச் செய்தபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.”
இளம் சகோதரர்கள் அனுபவமுள்ள சகோதரர்களோடு நிறைய நேரம் செலவு செய்வது ஏன் நல்லது? (பாரா 7)
தீமோத்தேயுவைப் போலவே மற்றவர்கள்மேல் அன்பும் அக்கறையும் காட்டுங்கள்
8. தன்னோடு பயணம் செய்வதற்கு பவுல் ஏன் தீமோத்தேயுவைத் தேர்ந்தெடுத்தார்? (பிலிப்பியர் 2:19-22)
8 மக்கள் எதிர்ப்பு காட்டிய நகரங்களுக்கு பவுல் திரும்பிப்போக வேண்டியிருந்தபோது, தன்னோடு கூட்டிக்கொண்டு போக தைரியமான நண்பர்கள் அவருக்குத் தேவைப்பட்டார்கள். முதலில், அனுபவமுள்ள ஒரு கிறிஸ்தவரான சீலாவை அவர் தேர்ந்தெடுத்தார். (அப். 15:22, 40) பிறகு, தீமோத்தேயுவையும் தேர்ந்தெடுத்தார். ஏனென்றால், தீமோத்தேயு ரொம்ப நல்ல பெயர் எடுத்திருந்தார். (அப். 16:1, 2) அதோடு, அவர் மற்றவர்கள்மேல் உண்மையான அக்கறையும் காட்டினார்.—பிலிப்பியர் 2:19-22-ஐ வாசியுங்கள்.
9. சகோதர சகோதரிகள்மேல் உண்மையான அக்கறை வைத்திருந்ததை தீமோத்தேயு எப்படிக் காட்டினார்?
9 பவுலோடு ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்திலிருந்தே, தீமோத்தேயு தன்மேல் அக்கறை காட்டுவதைவிட மற்றவர்கள்மேல் நிறைய அக்கறை காட்டினார். அதனால், புதிய சீஷர்களை உற்சாகப்படுத்த பவுல் நம்பிக்கையோடு தீமோத்தேயுவை பெரோயாவில் விட்டுவிட்டு வந்தார். (அப். 17:13, 14) அந்தச் சமயத்தில் சீலாவும் பெரோயாவிலேயே தங்கிவிட்டதால் அவரிடமிருந்தும் தீமோத்தேயு கண்டிப்பாக நிறைய விஷயங்களைக் கற்றிருப்பார். ஆனால் அதற்குப் பிறகு, தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்களைப் பலப்படுத்துவதற்காக பவுல் தீமோத்தேயுவைத் தனியாகவே அனுப்பி வைத்தார். (1 தெ. 3:2) பிறகு, கிட்டத்தட்ட 15 வருஷங்களுக்கு, கஷ்டத்தில் இருக்கிறவர்கள்மேல் அனுதாபம் காட்ட, அதாவது ‘அழுகிறவர்களோடு அழ,’ அவர் கற்றுக்கொண்டார். (ரோ. 12:15; 2 தீ. 1:4) இன்று இளம் சகோதரர்கள் எப்படி தீமோத்தேயு மாதிரியே நடந்துகொள்ளலாம்?
10. வூ-ஜே என்ற சகோதரர் மற்றவர்கள்மேல் நிறைய அக்கறை காட்ட எப்படிக் கற்றுக்கொண்டார்?
10 வூ-ஜே என்ற சகோதரர் மற்றவர்கள்மேல் நிறைய அக்கறை காட்ட கற்றுக்கொண்டார். இளம் வயதில் இருந்தபோது, தன்னைவிட வயதில் பெரிய சகோதர சகோதரிகளிடம் பேசுவது அவருக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அதனால், ராஜ்ய மன்றத்தில் அவர்களைப் பார்க்கும்போது, ‘ஹலோ’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுவார். அப்போது ஒரு மூப்பர் அவரிடம், ‘மற்றவர்களிடம் உனக்கு என்ன விஷயம் பிடித்திருக்கிறதோ அதைப் பற்றிப் பேச ஆரம்பி’ என்று ஆலோசனை கொடுத்தார். மற்றவர்களுக்கு என்ன விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கவும் உற்சாகப்படுத்தினார். அவர் சொன்ன மாதிரியே வூ-ஜே செய்தார். இன்று வூ-ஜே ஒரு மூப்பராக இருக்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “வித்தியாசமான வயதில் இருப்பவர்களோடு பேசிப் பழகுவது இப்போது எனக்கு ரொம்ப சுலபமாக இருக்கிறது. மற்றவர்களுடைய சூழ்நிலையையும் அவர்களுக்கு இருக்கிற சவால்களையும் இப்போது நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இது சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய ரொம்பப் பிரயோஜனமாக இருப்பதால் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.”
11. இளம் சகோதரர்கள் சபையில் இருக்கிற மற்றவர்கள்மேல் எப்படி அக்கறை காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.)
11 இளம் சகோதரர்களே, நீங்களும் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட கற்றுக்கொள்ளலாம். கூட்டங்களில் இருக்கும்போது மற்றவர்களுடைய வயதையோ பின்னணியையோ பார்க்காமல் எல்லார்மேலும் அக்கறை காட்டுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேளுங்கள். அவர்கள் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். அப்படிச் செய்யும்போது, அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியவரும். ஒருவேளை, வயதான ஒரு தம்பதிக்கு JW லைப்ரரியைப் பயன்படுத்த உதவி தேவைப்படலாம். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா? அல்லது, அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய யாரும் இல்லை என்று உங்களுக்குத் தெரியவரலாம். நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய முடியுமா? மற்றவர்களுக்கு உதவ நீங்கள் முதலில் முயற்சி எடுக்கும்போது, எல்லாருக்குமே ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பீர்கள்.
இளம் சகோதரர்களால் சபையில் இருக்கிறவர்களுக்கு நிறைய விதங்களில் உதவி செய்ய முடியும் (பாரா 11)
பவுல் தந்த ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்
12. தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனைகள் இன்று இளம் சகோதரர்களுக்கு எப்படி உதவி செய்யும்?
12 சந்தோஷமாக வாழ்வதற்கும், கடவுளுக்கு முழுமையாகச் சேவை செய்வதற்கும் தீமோத்தேயுவுக்கு பவுல் நல்ல நல்ல ஆலோசனைகளைக் கொடுத்தார். (1 தீ. 1:18; 2 தீ. 4:5) இளம் சகோதரர்களே, ஒரு அப்பா மாதிரி பவுல் கொடுத்த ஆலோசனைகளிலிருந்து நீங்களும் நன்மையடைய முடியும். எப்படி? தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய இரண்டு கடிதங்களையும் உங்களுக்கே அவர் எழுதிய மாதிரி நினைத்துப் படியுங்கள். என்னென்ன ஆலோசனைகளை நீங்கள் கடைப்பிடிக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள். அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
13. யெகோவாவுக்கு இன்னும் உண்மையாக இருக்க எது உங்களுக்கு உதவி செய்யும்?
13 “கடவுள்பக்தி காட்டுவதைக் குறிக்கோளாக வைத்து உனக்கு நீயே பயிற்சி கொடுத்துக்கொள்.” (1 தீ. 4:7ஆ) கடவுள்பக்தி என்றால் என்ன? யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதும், அவருக்குப் பிடித்ததைச் செய்ய ஆசைப்படுவதும்தான் கடவுள்பக்தி. நாம் கடவுள்பக்தியோடு பிறப்பதில்லை, அதை நாம் வளர்க்க வேண்டியிருக்கிறது. பவுல் பயன்படுத்திய வார்த்தையிலிருந்து இது தெரியவருகிறது. “பயிற்சி கொடுத்துக்கொள்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காக விளையாட்டு வீரர்கள் எடுக்கிற கடுமையான பயிற்சியைக் குறிப்பதற்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. அந்த விளையாட்டு வீரர்களுக்குச் சுயக்கட்டுப்பாடு தேவைப்பட்டது. அதேபோல், யெகோவாவிடம் நெருங்கிப்போக உதவுகிற பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ள நமக்கும் சுயக்கட்டுப்பாடு தேவை.
14. என்ன குறிக்கோளோடு நாம் பைபிளைப் படிக்க வேண்டும்? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
14 தினமும் பைபிள் படிக்கிற பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்வது முக்கியம். அப்படிப் படிக்கும்போது, யெகோவாவிடம் நெருங்கிப்போக வேண்டும் என்ற குறிக்கோளை நம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, பணக்காரனாக இருந்த ஒரு இளம் தலைவனிடம் இயேசு பேசிய பதிவை எடுத்துக்கொள்ளலாம். (மாற். 10:17-22) இயேசுதான் மேசியா என்று அவன் நம்பினான். ஆனாலும், அவருடைய சீஷராக ஆகும் அளவுக்கு அவனுக்கு விசுவாசம் இல்லை. இருந்தாலும் இயேசு, “அன்போடு அவனைப் பார்த்து” பேசினார். இயேசு பேசிய விதம் உங்களுடைய மனதைத் தொடுகிறது, இல்லையா? அந்தத் தலைவன் ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும் என்று இயேசு விரும்பியது தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவன்மேல் அன்பு காட்டும் விஷயத்தில் யெகோவாவைப் போலவே இயேசு நடந்துகொண்டார். (யோவா. 14:9) இந்தப் பதிவைப் பற்றியும் உங்களுடைய சூழ்நிலைகளைப் பற்றியும் யோசிக்கும்போது, உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கும் மற்றவர்களுக்கு இன்னும் நிறைய சேவை செய்வதற்கும் நான் என்ன செய்ய வேண்டும்?’
15. இளம் சகோதரர்கள் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருப்பது ஏன் முக்கியம்? உதாரணம் சொல்லுங்கள். (1 தீமோத்தேயு 4:12, 13)
15 “உண்மையுள்ளவர்களுக்கு நீ முன்மாதிரியாக இரு.” (1 தீமோத்தேயு 4:12, 13-ஐ வாசியுங்கள்.) வாசிப்பது, சொல்லிக்கொடுப்பது போன்ற திறமைகளை மட்டுமல்ல, அன்பு, விசுவாசம், ஒழுக்கம் போன்ற குணங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீமோத்தேயுவுக்கு பவுல் சொன்னார். ஏன்? ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட அவர் என்ன செய்கிறார் என்பதுதான் ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, இன்னும் எப்படி வைராக்கியமாக ஊழியம் செய்யலாம் என்பதைப் பற்றி நீங்கள் ஒரு பேச்சு கொடுக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்களே வைராக்கியமாக ஊழியம் செய்யும்போதுதான் இன்னும் நம்பிக்கையோடு உங்களால் அந்தப் பேச்சைக் கொடுக்க முடியும். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதற்கு நீங்களே ஒரு முன்மாதிரியாக இருந்தால், உங்கள் வார்த்தைகளுக்கு வலிமை இருக்கும்.—1 தீ. 3:13.
16. (அ) என்ன ஐந்து விஷயங்களில் இளம் சகோதரர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம்? (ஆ) இளம் சகோதரர்கள் எப்படி ‘பேச்சில்’ மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம்?
16 இளம் சகோதரர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றி 1 தீமோத்தேயு 4:12-ல் பவுல் சொல்லியிருக்கிறார். உங்களுடைய தனிப்பட்ட படிப்பில் அந்த ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் நன்றாக யோசித்துப் பார்க்கலாம். உதாரணத்துக்கு, ‘பேச்சில்’ இன்னும் நல்ல முன்மாதிரியாக இருக்க நீங்கள் ஆசைப்படுவதாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களைப் பலப்படுத்துகிற மாதிரி எப்படியெல்லாம் பேசலாம் என்று நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். ஒருவேளை, உங்களுடைய அப்பாவும் அம்மாவும் உங்களுக்காகச் செய்கிற விஷயங்களுக்கு இன்னும் அடிக்கடி நன்றி சொல்ல முடியுமா? கூட்டங்கள் முடிந்த பிறகு, ஒரு சகோதரரோ சகோதரியோ கொடுத்த பேச்சில் உங்களுக்கு என்ன பிடித்திருந்தது என்று அவர்களிடம் சொல்ல முடியுமா? கூட்டங்களில் சொந்த வார்த்தைகளில் பதில் சொல்லவும் நீங்கள் முயற்சி பண்ணலாம். பேச்சில் முன்மாதிரியாக இருக்க நீங்கள் எடுக்கிற முயற்சிகள், நீங்கள் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறீர்கள் என்பதைக் காட்டும்.—1 தீ. 4:15.
17. யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடைய இளம் சகோதரர்களுக்கு எது உதவி செய்யும்? (2 தீமோத்தேயு 2:22)
17 ‘இளமைப் பருவத்தில் வருகிற ஆசைகளைவிட்டு நீ விலகி ஓடு; நீதியை நாடு.’ (2 தீமோத்தேயு 2:22-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு இன்னும் நிறைய சேவை செய்யத் தடையாக இருக்கிற ஆசைகளையும், அவரோடு இருக்கும் நட்பைக் கெடுக்கிற ஆசைகளையும் எதிர்த்துப் போராடச் சொல்லி தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார். சில விஷயங்களைத் தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும், யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய முடியாத மாதிரி அதெல்லாம் உங்களுடைய நேரத்தை உறிஞ்சிவிடலாம். உதாரணத்துக்கு, விளையாட்டுகளில் கலந்துகொள்வதற்கு, இன்டர்நெட்டைப் பார்ப்பதற்கு, அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதில் கொஞ்ச நேரத்தை யெகோவாவுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்த முடியுமா? ஒருவேளை, ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்கும் வேலையில் நீங்கள் உதவி செய்யலாம். அல்லது, வீல் ஸ்டாண்டு ஊழியத்தில் கலந்துகொள்ளலாம். இதையெல்லாம் நீங்கள் செய்யும்போது, அநேகமாக உங்களுக்குப் புது நண்பர்கள் கிடைப்பார்கள். யெகோவாவுடைய சேவையில் நல்ல நல்ல குறிக்கோள்களை வைப்பதற்கும் அடைவதற்கும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
மற்றவர்களுக்குச் சேவை செய்வது ஆசீர்வாதங்களை அள்ளித்தரும்
18. மாற்குவும் தீமோத்தேயுவும் ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்ந்தார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
18 மாற்குவும் தீமோத்தேயுவும் மற்றவர்களுக்கு இன்னும் முழுமையாகச் சேவை செய்ய நிறைய தியாகங்களைச் செய்தார்கள். அதனால், ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்ந்தார்கள். (அப். 20:35) சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்வதற்காக, தொலைதூரத்தில் இருந்த நிறைய இடங்களுக்கு மாற்கு பயணம் செய்தார். அதோடு, இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய விறுவிறுப்பான ஒரு பதிவை எழுதினார். தீமோத்தேயு, சபைகளை உருவாக்குவதற்கும் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதற்கும் பவுலுக்கு உதவி செய்தார். மாற்குவும் தீமோத்தேயுவும் செய்த தியாகங்களையெல்லாம் பார்த்து யெகோவா கண்டிப்பாகச் சந்தோஷப்பட்டிருப்பார்.
19. தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனைகளை இளம் சகோதரர்கள் ஏன் கேட்டு நடக்க வேண்டும், அதனால் அவர்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும்?
19 தீமோத்தேயுமேல் பவுல் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பது அவருக்கு பவுல் எழுதிய கடிதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால், யெகோவாதான் பவுலுக்கு அவருடைய சக்தியைக் கொடுத்து அந்தக் கடிதங்களை எழுத வைத்தார். அதனால், இன்றும் இளம் சகோதரர்கள்மேல் யெகோவா எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்படுகிறார். அதனால், ஒரு அப்பா மாதிரி பவுல் அன்பாகக் கொடுத்த ஆலோசனைகளைக் கேட்டு நடங்கள். மற்றவர்களுக்கு இன்னும் நிறைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், இப்போதே உங்களுக்கு அருமையான ஒரு வாழ்க்கை கிடைக்கும், இனி வரப்போகிற ‘உண்மையான வாழ்வை உங்களால் உறுதியாகப் பிடித்துக்கொள்ளவும் முடியும்.’—1 தீ. 6:18, 19.
பாட்டு 80 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்
a பேதுரு ஆழமான உணர்ச்சிகளுள்ள ஒருவராக இருந்தார். அதனால், வெவ்வேறு சூழ்நிலைகளில் இயேசு எப்படி உணர்ந்தார் என்றும், தன் உணர்ச்சிகளை எப்படிக் காட்டினார் என்றும் மாற்குவுக்குத் தத்ரூபமாக விவரித்திருப்பார். மாற்கு தன்னுடைய சுவிசேஷத்தில் இயேசுவின் உணர்ச்சிகளைப் பற்றியும், அந்த உணர்ச்சிகளை அவர் காட்டிய விதங்களைப் பற்றியும் அடிக்கடி எழுதியிருப்பதற்கு இது ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம்.—மாற். 3:5; 7:34; 8:12.
b படவிளக்கம்: மிஷனரி பயணத்தில் பவுலுக்கும் பர்னபாவுக்கும் தேவையான உதவிகளை மாற்கு செய்கிறார். சகோதரர்களைப் பலப்படுத்துவதற்காகவும் உற்சாகப்படுத்துவதற்காகவும் தீமோத்தேயு ஒரு சபையைச் சந்திக்கிறார்.