படிப்புக் கட்டுரை 27
பாட்டு 79 உறுதியாய் நிற்க உதவும்!
சத்தியத்தில் உறுதியாக நிற்க பைபிள் மாணவருக்கு உதவுங்கள்
“விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருங்கள், . . . பலமடையுங்கள்.”—1 கொ. 16:13.
என்ன கற்றுக்கொள்வோம்?
மாற்றங்களைச் செய்து யெகோவாவுக்குச் சேவை செய்ய பைபிள் மாணவர்களுக்கு விசுவாசமும் தைரியமும் தேவை. அவற்றை அவர்கள் வளர்த்துக்கொள்ள நாம் எப்படி உதவலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1-2. (அ) மாற்றங்கள் செய்ய சில பைபிள் மாணவர்கள் ஏன் தயங்குகிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு ஆரம்பத்தில் நீங்கள் தயங்கினீர்களா? ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களோ, நண்பர்களோ, கூடவேலை செய்கிறவர்களோ உங்கள்மேல் கோபப்படுவார்கள் என்று நீங்கள் பயந்திருக்கலாம். அல்லது, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று நீங்கள் யோசித்திருக்கலாம். இப்படிப்பட்ட யோசனைகளை நீங்கள் தாண்டி வந்திருப்பதால், உங்கள் பைபிள் மாணவருக்கு நிச்சயம் உங்களால் உதவ முடியும். அவர்களுக்கு இருக்கும் தடைகளையும் தயக்கங்களையும் உங்களால் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.
2 இந்த மாதிரி தடைகள் ஒருவருடைய ஆன்மீக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பது இயேசுவுக்குத் தெரியும். (மத். 13:20-22) அதனால், தன்னைப் பின்பற்ற தயங்கிய அல்லது பயந்த நபர்களுக்கு அவர் தொடர்ந்து உதவி செய்தார். அவர்கள்மேல் இருக்கிற நம்பிக்கையை இயேசு இழந்துவிடவில்லை; அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். (1) தடைக்கற்களைக் கண்டுபிடிப்பதற்கும், (2) யெகோவாமேல் இருக்கிற அன்பை அதிகமாக்குவதற்கும், (3) யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பதற்கும், (4) சவால்களைத் தாண்டி வருவதற்கும் உதவி செய்திருக்கிறார். இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து படிப்பு நடத்தும்போது நாம் எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்? சத்தியத்தில் உறுதியாக இருக்க பைபிள் மாணவருக்கு எப்படி உதவலாம்?
தடைக்கற்களைக் கண்டுபிடிக்க உதவுங்கள்
3. இயேசுவின் சீஷராக ஆவதற்கு நிக்கொதேமுவுக்கு எது தடையாக இருந்திருக்கலாம்?
3 நிக்கொதேமு ஒரு பிரபலமான யூதத் தலைவர். அவருக்கும் இயேசுவின் சீஷர் ஆவதில் சில தடைகள் இருந்தன. இயேசு தன் ஊழியத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறே மாதத்தில், அவர்தான் கடவுளால் அனுப்பப்பட்ட மேசியா என்பதை நிக்கொதேமு புரிந்துகொண்டார். (யோவா. 3:1, 2) இருந்தாலும், “யூதர்களுக்குப் பயந்ததால்,” இயேசுவைச் சந்திக்க அவர் ரகசியமாகப் போனார். (யோவா. 7:13; 12:42) ஒருவேளை, இயேசுவின் சீஷரானால் நிறைய விஷயங்களை இழக்க வேண்டியிருக்குமோ என்றுகூட அவர் யோசித்திருக்கலாம்.a
4. கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நிக்கொதேமு புரிந்துகொள்ள இயேசு எப்படி உதவினார்?
4 நிக்கொதேமு திருச்சட்டத்தை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். ஆனால், தன்னிடம் யெகோவா என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு இயேசு எப்படி உதவினார்? தன்னுடைய நேரத்தைத் தாராளமாகக் கொடுத்தார். நிக்கொதேமு, ராத்திரியில் தன்னைப் பார்க்க வந்தபோதுகூட அவருக்காக இயேசு நேரம் ஒதுக்கினார். ஒரு சீஷராக ஆவதற்கு நிக்கொதேமு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார். அதாவது, பாவங்களைவிட்டு மனம் திருந்த வேண்டும், தண்ணீரில் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும், கடவுளுடைய மகன்மேல் விசுவாசம் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் இயேசு அவருக்குப் புரியவைத்தார்.—யோவா. 3:5, 14-21.
5. தடைக்கற்களைக் கண்டுபிடிக்க பைபிள் மாணவருக்கு எப்படி உதவி செய்யலாம்?
5 ஒருவேளை, உங்கள் பைபிள் மாணவர் பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ளலாம்; ஆனால், மாற்றங்களைச் செய்ய எது தடையாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவி தேவைப்படலாம். வேலையோ குடும்பத்திலிருந்து வருகிற எதிர்ப்போ, முன்னேற்றம் செய்ய அவருக்குத் தடையாக இருக்கலாம். அதனால், அவருக்கு உதவ இயேசு மாதிரியே நீங்களும் நிறைய நேரம் செலவு செய்யுங்கள். உங்களோடு சேர்ந்து காப்பி குடிக்கவோ பார்க்கில் பேசவோ அவரைக் கூப்பிடலாம். அவருக்கு இருக்கும் தடைகளைப் பற்றி அவர் மனம்விட்டு பேச அந்த மாதிரி சூழ்நிலைமைகள் உதவலாம். உங்களாலும் அவருடைய சூழ்நிலையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டுமே தவிர உங்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக அல்ல என்பதையும் புரிய வையுங்கள்.
6. சத்தியத்துக்காகத் தைரியமாகச் செயல்பட பைபிள் மாணவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்? (1 கொரிந்தியர் 16:13)
6 பைபிள் சொல்வதுபோல் வாழ யெகோவா உதவுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், மாற்றங்களைச் செய்ய பைபிள் மாணவருக்குத் தைரியம் கிடைக்கும். (1 கொரிந்தியர் 16:13-ஐ வாசியுங்கள்.) நீங்கள் பள்ளியில் படித்த நாட்களை யோசித்துப் பாருங்கள். எந்த டீச்சரை உங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது? உங்கள் திறமைகள்மேல் நம்பிக்கை வைக்க யார் பொறுமையாக உதவினாரோ அவரைத்தானே உங்களுக்குப் பிடித்திருக்கும்? அப்படிப்பட்ட ஒரு டீச்சராக நீங்கள் உங்கள் பைபிள் மாணவருக்கு இருங்கள். ஒரு நல்ல பைபிள் டீச்சர், கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை மட்டுமே சொல்லிக்கொடுக்க மாட்டார்; மாற்றங்கள் செய்ய கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கையையும் கொடுப்பார். இதை நீங்கள் எப்படிச் செய்யலாம்?
யெகோவாமேல் இருக்கும் அன்பு அதிகமாவதற்கு உதவுங்கள்
7. யெகோவாமேல் இருக்கும் அன்பை வளர்க்க அன்று இருந்தவர்களுக்கு இயேசு எப்படி உதவினார்?
7 யெகோவாமேல் அன்பு இருந்தால், படிக்கிற விஷயங்களை வாழ்க்கையில் பொருத்த வேண்டும் என்ற ஆசை சீஷர்களுக்கு வரும் என்பது இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான், சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தபோது பரலோக அப்பாமேல் இருக்கிற அன்பை அதிகமாக்கும் விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். உதாரணத்துக்கு, நல்ல நல்ல விஷயங்களைத் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கிற ஒரு அப்பாவுக்கு யெகோவாவை இயேசு ஒப்பிட்டுப் பேசினார். (மத். 7:9-11) அன்று இயேசு பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த சிலருக்கு, ஒருவேளை பாசமான ஒரு அப்பா இருந்திருக்க மாட்டார்கள். இயேசு சொன்னதைக் கேட்டபோது அப்படிப்பட்டவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! வழிதவறிப் போன ஒரு மகன் மறுபடியும் தன்னுடைய அப்பாவிடம் திரும்பி வந்தபோது, அந்த அப்பா அவனை எப்படிப் பாசமாக வரவேற்றார் என்பதைப் பற்றிய ஒரு கதையை இயேசு அவர்களுக்குச் சொன்னார். இந்தக் கதையைக் கேட்டபோது பூமியில் இருக்கிற தன்னுடைய பிள்ளைகள்மேல் யெகோவா எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை அன்று இருந்தவர்கள் புரிந்திருப்பார்கள்.—லூக். 15:20-24.
8. யெகோவாமேல் இருக்கிற அன்பை இன்னும் அதிகமாக்க பைபிள் மாணவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
8 யெகோவாமேல் இருக்கிற அன்பு அதிகமாவதற்கு பைபிள் மாணவருக்கு உங்களாலும் உதவ முடியும். அதற்கு, யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றி அவருக்குச் சொல்லுங்கள். ஒவ்வொரு தடவை படிப்பை நடத்தும்போதும், படிக்கிற விஷயங்கள் யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்போடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். மீட்புவிலையைப் பற்றிப் படிக்கும்போது, உங்கள் மாணவர்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்புக்கு அது எப்படி அடையாளமாக இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். (ரோ. 5:8; 1 யோ. 4:10) யெகோவா தனிப்பட்ட விதமாக தன்மேல் எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மாணவர் புரிந்துகொண்டால், யெகோவாமேல் அவருக்கு இருக்கிற அன்பு இன்னும் அதிகமாகும்.—கலா. 2:20.
9. மாற்றங்களைச் செய்ய மைக்கிலுக்கு எது உதவியது?
9 இந்தோனேஷியாவில் இருக்கிற மைக்கிலுடைய உதாரணத்தைப் பார்க்கலாம். வளர்ந்தபோதே அவருக்குச் சத்தியம் தெரிந்திருந்தது. ஆனால், அவர் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. அவருக்கு 18 வயது ஆனபோது வெளிநாட்டில் ஒரு லாரி டிரைவராக வேலை செய்ய போய்விட்டார். கல்யாணம் ஆன பிறகும் மைக்கில் குடும்பத்தைவிட்டு வெளிநாட்டில் வேலை செய்தார். அந்தச் சமயத்தில் அவருடைய மனைவியும் மகளும் பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தார்கள்; முன்னேற்றமும் செய்தார்கள். மைக்கிலின் அம்மா இறந்த பிறகு, அப்பாவைக் கவனித்துக்கொள்வதற்காக அவர் சொந்த ஊருக்கே திரும்பி வந்தார். அப்போது, பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில், 27-வது பாடத்தில் இருக்கிற “ஆராய்ந்து பார்க்கலாம்!” பகுதி அவருடைய மனதைத் தொட்டது. இயேசு துடிதுடித்ததைப் பார்த்தபோது யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்தபோது மைக்கிலுக்கு அழுகையே வந்துவிட்டது. மீட்புவிலைக்காக அவர் ரொம்ப ரொம்ப நன்றியோடு இருந்தார். தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டார், ஞானஸ்நானமும் எடுத்தார்.
யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க உதவுங்கள்
10. யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு எப்படி உதவினார்? (லூக்கா 5:5-11) (படத்தையும் பாருங்கள்.)
10 இயேசுவின் சீஷர்கள் சிலர், இயேசுதான் மேசியா என்பதை ரொம்ப சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டார்கள். ஆனாலும் ஊழியத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. பேதுரு மற்றும் அந்திரேயாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மீன் பிடிக்கிற தொழிலைச் செய்துகொண்டு இருந்தார்கள். ஒருவேளை, யாக்கோபோடும் யோவானோடும் சேர்ந்து அவர்கள் அந்தத் தொழிலைச் செய்திருக்கலாம். அவர்களுடைய தொழில் ரொம்ப நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. (மாற். 1:16-20) அவர்கள் இயேசுவின் சீஷர்களாக ஆகியும் கொஞ்சக் காலம் ஆகியிருந்தது. பிறகு, முழு நேரமாகத் தன்னைப் பின்பற்றி வரும்படி இயேசு அவர்களைக் கூப்பிட்டார். (மத். 4:18, 19) அப்போது, அவர்கள் தங்களுடைய “வலைகளை விட்டுவிட்டு” இயேசுவின் பின்னால் போனார்கள். அவர்கள் அப்படிப் போனபோது, தங்கள் குடும்பத்துக்குத் தேவையானது தொடர்ந்து கிடைக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான் போயிருக்க வேண்டும். யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க எது அவர்களைத் தூண்டியது? இயேசு செய்த அற்புதம் அவர்களைப் பலப்படுத்தியது என்றும், யெகோவாவால் தங்கள் தேவைகளைப் பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது என்றும் லூக்காவின் பதிவில் கவனிக்கிறோம்.—லூக்கா 5:5-11-ஐ வாசியுங்கள்.
யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு உதவியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (பாரா 10)b
11. பைபிள் மாணவரின் விசுவாசத்தைப் பலப்படுத்த நீங்கள் எதைப் பற்றியெல்லாம் சொல்லலாம்?
11 இயேசு மாதிரி நம்மால் அற்புதங்களைச் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கிறவர்களுக்கு யெகோவா எப்படி உதவுகிறார் என்ற அனுபவங்களை நம்மால் சொல்ல முடியும். உங்களுடைய அனுபவத்தைக்கூட நீங்கள் சொல்லலாம். ஆரம்பத்தில், கூட்டங்களுக்குப் போவதற்கு யெகோவா உங்களுக்கு எப்படி உதவினார் என்று நீங்கள் சொல்லலாம். ஒருவேளை, உங்களுடைய முதலாளியிடம் போய் ‘கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும், அதனால் ஓவர் டைம் செய்ய முடியாது’ என்று நீங்கள் சொல்ல வேண்டியிருந்திருக்கலாம். யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க நீங்கள் எடுத்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்ததைப் பார்த்தபோது, உங்கள் விசுவாசம் எப்படிப் பலமானது என்பதைச் சொல்லுங்கள்.
12. (அ) வெவ்வேறு சகோதர சகோதரிகளை பைபிள் படிப்புக்குக் கூட்டிக்கொண்டு போவது ஏன் நல்லது? (ஆ) பைபிள் மாணவருக்குக் கற்றுக்கொடுக்க வீடியோக்களை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்? உதாரணம் சொல்லுங்கள்.
12 சகோதர சகோதரிகள் என்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதுகூட பைபிள் மாணவருக்கு உதவும். அதனால், வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளை பைபிள் படிப்புக்குக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்கள் எப்படிச் சத்தியத்துக்கு வந்தார்கள், யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க என்ன மாற்றங்களைச் செய்தார்கள் என்று பைபிள் மாணவருக்குச் சொல்ல சொல்லுங்கள். அதோடு, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில், “ஆராய்ந்து பார்க்கலாம்!” மற்றும் “அலசிப் பாருங்கள்” பகுதிகளில் இருக்கிற வீடியோக்களை நன்றாகப் பயன்படுத்துங்கள். வீடியோவில் இருந்து அவர்கள் முழுமையாகப் பயனடைய உதவுங்கள். உதாரணத்துக்கு, 37-வது பாடத்தை நடத்தும்போது, யெகோவா நம்மளை கவனிச்சுக்குவார் என்ற வீடியோவைக் காட்டிவிட்டு அதில் இருக்கிற நியமங்களைக் கலந்துபேசுங்கள்.
சவால்களைத் தாண்டி வர உதவுங்கள்
13. எதிர்ப்பைச் சந்திக்க சீஷர்களை இயேசு எப்படித் தயார்படுத்தினார்?
13 எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும், சொந்தக்காரர்களிடம் இருந்துகூட அதைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு தன் சீஷர்களிடம் அடிக்கடி சொன்னார். (மத். 5:11; 10:22, 36) சீஷர்கள் மரணத்தைக்கூட சந்திக்க வேண்டியிருக்கும் என்று இறப்பதற்கு முன்பு இயேசு எச்சரித்தார். (மத். 24:9; யோவா. 15:20; 16:2) அதனால், ஊழியத்தைக் கவனமாகச் செய்ய சொன்னார். அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமென்றால், எதிர்க்கிறவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் ஞானமாகப் பேச வேண்டும் என்று இயேசு ஆலோசனை கொடுத்தார்.
14. எதிர்ப்பைச் சந்திக்க பைபிள் மாணவரை நாம் எப்படித் தயார்படுத்தலாம்? (2 தீமோத்தேயு 3:12)
14 நாமும் எதிர்ப்பைச் சந்திக்க பைபிள் மாணவரை தயார்படுத்தலாம். கூடவேலை செய்கிறவர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து என்ன மாதிரி எதிர்ப்பு வரலாம் என்று நாம் அவருக்குச் சொல்லலாம். (2 தீமோத்தேயு 3:12-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, பைபிள் சொல்கிற மாதிரி வாழ ஆரம்பித்ததால் கூடவேலை செய்கிறவர்கள் அவரைக் கிண்டல் பண்ணலாம். வேறு சிலர், நெருங்கிய சொந்தங்கள்கூட, பைபிள் நம்பிக்கைகளைத் தவறு என்று சொல்லலாம். எதிர்ப்பைச் சந்திக்க பைபிள் மாணவரை எவ்வளவு சீக்கிரம் தயார்படுத்துகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் அதைச் சமாளிக்க அவர் கற்றுக்கொள்வார்கள்.
15. குடும்பத்தில் இருந்து வரும் எதிர்ப்பைச் சமாளிக்க பைபிள் மாணவருக்கு எது உதவும்?
15 குடும்பத்தில் இருக்கிறவர்கள் எதிர்க்கும்போது, அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்க பைபிள் மாணவருக்கு உதவுங்கள். ஒருவேளை, அவர் ஏமாந்துவிட்டதாக சொந்தக்காரர்கள் நினைக்கலாம். அல்லது, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிக் குடும்பத்தாருக்குத் தப்பான அபிப்பிராயம் இருக்கலாம். இயேசுவுடைய குடும்பத்தில் இருந்தவர்கள்கூட அவர் செய்த ஊழியத்தைப் பார்த்து சந்தோஷப்படவில்லை; அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்றுதான் நினைத்தார்கள். (மாற். 3:21; யோவா. 7:5) அதனால், குடும்பத்தில் இருக்கிறவர்கள் உட்பட எல்லாரிடமும் பொறுமையாக இருக்கவும் அன்பாகப் பதில் சொல்லவும் பைபிள் மாணவருக்கு உதவுங்கள்.
16. கற்றுக்கொள்ளும் விஷயங்களைச் சொந்தக்காரர்களிடம் சொல்லும்போது பைபிள் மாணவர் எதை மனதில் வைக்கலாம்?
16 சொந்தக்காரர்கள் ஆர்வம் காட்டினால்கூட, கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பைபிள் மாணவர் சொல்லாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், சொந்தக்காரர்கள் குழம்பிவிட வாய்ப்பு இருக்கிறது. திரும்பவும் பைபிளைப் பற்றிப் பேசினால் அவர்கள் கேட்பதற்குத் தயாராகவும் இருக்க மாட்டார்கள். அதனால், பைபிள் விஷயங்களை எளிமையாகச் சொல்ல பைபிள் மாணவரை உற்சாகப்படுத்துங்கள். அப்படிச் செய்தால் திரும்பவும் பேச அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். (கொலோ. 4:6) சொந்தக்காரர்களை jw.org வெப்சைட்டைப் பார்க்க சொல்லலாம். அப்படிச் செய்தால், அவர்களுக்கு வசதியான நேரத்தில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள்.
17. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றித் தவறான கருத்து வைத்திருப்பவர்கள் கேள்வி கேட்கும்போது, அதற்குப் பதில் சொல்ல பைபிள் மாணவரை எப்படித் தயார்படுத்தலாம்? (படத்தையும் பாருங்கள்.)
17 jw.org-ல் இருக்கிற “யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்ற பகுதியை பைபிள் மாணவருக்குக் காட்டுங்கள். சொந்தக்காரர்களோ கூடவேலை செய்கிறவர்களோ கேட்கிற கேள்விகளுக்கு, அதிலிருந்து எளிமையான பதில்களைத் தயாரிக்க உதவுங்கள். (2 தீ. 2:24, 25) இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் “சிலர் இப்படிச் சொல்கிறார்கள்” என்ற பகுதி இருக்கிறது. அதைக் கலந்துபேசும்போது, மற்றவர்களிடம் எப்படிப் பதில் சொல்வார்கள் என்பதைச் சொந்த வார்த்தையில் சொல்ல சொல்லுங்கள். அவர் எப்படிப் பேசலாம் என்பதற்கு நீங்களும் சில குறிப்புகளைச் சொல்லலாம். இந்த மாதிரி பயிற்சி எடுத்துக்கொண்டால் அவரால் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றித் தைரியமாக விளக்க முடியும்.
ஊழியம் செய்வதற்கு முன்பு, நன்றாகப் பழகிப் பார்க்க பைபிள் மாணவரை உற்சாகப்படுத்துங்கள் (பாரா 17)c
18. ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆவதற்கு பைபிள் மாணவரை நீங்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்? (மத்தேயு 10:27)
18 எல்லா மக்களுக்கும் வெளிப்படையாகப் போய் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொல்லியிருக்கிறார். (மத்தேயு 10:27-ஐ வாசியுங்கள்.) எவ்வளவு சீக்கிரம் பைபிள் மாணவர் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பிக்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் யெகோவாவை நம்பியிருக்க கற்றுக்கொள்வார். அப்படியென்றால், இந்தக் குறிக்கோளை அவர் எட்டிப்பிடிக்க நீங்கள் எப்படி உதவலாம்? சபையில் விசேஷ ஊழியத்தைப் பற்றி அறிவிப்பு செய்யப்படும்போது, அதில் கலந்துகொள்ள பைபிள் மாணவர் என்னென்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள்; ஒரு பிரஸ்தாபியாக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குங்கள். இந்த மாதிரி விசேஷ ஊழியம் சமயத்தில், ஊழியம் செய்ய ஆரம்பிப்பது நிறைய பேருக்குச் சுலபமாக இருந்திருக்கிறது என்பதையும் சொல்லுங்கள். வார நாட்களில் நடக்கிற கூட்டங்களில் பேச்சு கொடுப்பதற்கும் அவர் குறிக்கோள் வைக்கலாம். இந்தக் குறிக்கோளை எட்டிப்பிடிக்க அவர் முயற்சி செய்யும்போது, தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வது அவருக்குச் சுலபமாக இருக்கும்.
நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்
19. சீஷர்கள்மேல் இயேசு எப்படி நம்பிக்கை வைத்தார், நாம் எப்படி அவரைப் போல் நடந்துகொள்ளலாம்?
19 தன்னுடைய சீஷர்கள் திரும்பவும் தன்னோடு ஒன்று சேர்வார்கள் என்று இறப்பதற்கு முன்பு இயேசு சொன்னார். சீஷர்களும் பரலோகத்துக்கு வருவார்கள் என்று இயேசு இங்கே சொல்ல வந்தார்; ஆனால், அதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. சீஷர்களால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவர்கள் கடைசி வரைக்கும் உண்மையாக இருப்பார்கள் என்று இயேசு நம்பினார். (யோவா. 14:1-5, 8) சில விஷயங்களைப் புரிந்துகொள்ள—பரலோக நம்பிக்கை மாதிரியான விஷயங்களைப் புரிந்துகொள்ள—அவர்களுக்குக் கொஞ்சம் காலம் எடுக்கும் என்று இயேசு புரிந்துகொண்டார். (யோவா. 16:12) இயேசு மாதிரியே நாமும் நம்முடைய பைபிள் மாணவர்மேல் நம்பிக்கை வைக்கலாம்.
எவ்வளவு சீக்கிரம் பைபிள் மாணவர் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பிக்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் யெகோவாவை நம்பியிருக்க கற்றுக்கொள்வார்
20. மலாவியில் இருக்கிற ஒரு சகோதரி, அவருடைய பைபிள் மாணவர்மேல் நம்பிக்கை வைத்ததை எப்படிக் காட்டினார்?
20 நம் பைபிள் மாணவர் சரியானதைச் செய்யத்தான் ஆசைப்படுகிறார் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கிறோம். மலாவியில் இருக்கிற சிப்புண்டோ என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் இருந்து, கத்தோலிக்க பின்னணியைச் சேர்ந்த அலினாஃபே என்ற இளம் பெண்ணுக்கு அவர் படிப்பு நடத்த ஆரம்பித்தார். 14-வது பாடத்தை முடித்த பிறகு சிப்புண்டோ அந்தப் பெண்ணிடம், உருவங்களை வணங்குவதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டார். உடனே அலினாஃபே கோபமாக, “அது என்னுடைய இஷ்டம்” என்று சொல்லிவிட்டார். பைபிள் படிப்பை அவர் நிறுத்திவிடுவாரோ என்று சிப்புண்டோ யோசித்தார். இருந்தாலும், தொடர்ந்து நம்பிக்கையோடு பைபிள் படிப்பு நடத்தினார்; உண்மைகளை ஒருநாள் அலினாஃபே புரிந்துகொள்வார் என்று யோசித்தார். கொஞ்சம் மாதத்துக்குப் பிறகு, 34-வது பாடத்தை நடத்திக்கொண்டு இருந்தபோது அதில் இருக்கிற இந்தக் கேள்வியை சிப்புண்டோ கேட்டார்: “பைபிளைப் பற்றியும் உண்மைக் கடவுளான யெகோவாவைப் பற்றியும் படித்தது உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது?” அலினாஃபே சொன்ன பதிலைப் பற்றி சிப்புண்டோ சொல்கிறார்: “கற்றுக்கொண்ட நிறைய நல்ல நல்ல விஷயங்களை அலினாஃபே சொன்னார். அதில் ஒன்று, ‘யெகோவாவின் சாட்சிகள் பைபிள் வெறுக்கிற விஷயங்களைச் செய்யவே மாட்டார்கள்’ என்று சொன்னார்.” சீக்கிரத்தில், சிலைகளை வணங்குவதை அலினாஃபே விட்டுவிட்டார்; ஞானஸ்நானமும் எடுத்தார்.
21. சத்தியத்தின் பக்கம் உறுதியாக நிற்க பைபிள் மாணவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
21 ‘வளர வைப்பது’ யெகோவாவாக இருந்தாலும் பைபிள் மாணவருடைய வளர்ச்சியில் நமக்கும் பங்கு இருக்கிறது. (1 கொ. 3:7) கடவுள் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்று சொல்லிக் கொடுப்பதோடு நாம் நிறுத்திக்கொள்வதில்லை. கடவுள்மேல் இருக்கிற அன்பை அவர் வளர்த்துக்கொள்ளவும் நாம் உதவுகிறோம். முக்கியமான விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் யெகோவாமேல் இருக்கிற அன்பை அவர் காட்ட உற்சாகப்படுத்துகிறோம். எதிர்ப்பு வந்தால், யெகோவாவையே நம்பியிருக்கவும் கற்றுக்கொடுக்கிறோம். யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்படுகிறார் என்று நாம் நம்புவதைக் காட்டுகிறோம். இப்படி நாம் அவரை நம்பும்போது, சத்தியத்தின் பக்கம் அவர் உறுதியாக நிற்பார்.
பாட்டு 55 அஞ்சாதே!
a இயேசுவைச் சந்தித்துப் பேசி இரண்டரை வருஷங்களுக்குப் பிறகும், நிக்கொதேமு யூதர்களுடைய உச்சநீதிமன்றத்தில் உறுப்பினராகத்தான் இருந்தார். (யோவா. 7:45-52) இயேசு இறந்ததற்குப் பிறகுதான், அவர் ஒரு சீஷராக ஆனார் என்று சில சரித்திராசிரியர்கள் நம்புவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பு காட்டுகிறது.—யோவா. 19:38-40.
b படவிளக்கங்கள்: மீன்பிடி தொழில் செய்துவந்த பேதுருவும் மற்ற சில மீனவர்களும் இயேசுவின் சீஷராகிறார்கள்.
c படவிளக்கம்: ஊழியத்தில் பேச ஒரு சகோதரி தன் பைபிள் மாணவரை தயார்படுத்துகிறார்.