படிப்புக் கட்டுரை 30
பாட்டு 97 பைபிள்—நம் உயிர்நாடி
அடிப்படை சத்தியங்கள் இப்போதும் நமக்கு உதவுமா?
“இந்த விஷயங்களைப் பற்றித் தெரிந்தவர்களாகவும் கற்றுக்கொண்ட சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருக்கிறவர்களாகவும் நீங்கள் இருக்கிறபோதிலும், இவற்றை உங்களுக்கு ஞாபகப்படுத்த எப்போதும் தயாராக இருக்கிறேன்.”—2 பே. 1:12.
என்ன கற்றுக்கொள்வோம்?
அடிப்படை சத்தியங்களை நாம் பல வருஷங்களுக்கு முன்பு கற்றிருந்தாலும், இன்றைக்கும் அதிலிருந்து எப்படிப் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
1. பைபிள் சத்தியங்களை முதல்முதலில் தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது?
அடிப்படை சத்தியங்கள் நம் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. உதாரணத்துக்கு, கடவுளுடைய பெயர் யெகோவா என்று தெரிந்துகொண்டபோது அவருடைய நண்பராக ஆவதற்கு ஆசைப்பட்டோம். (ஏசா. 42:8) இறந்தவர்களுடைய நிலைமையைப் பற்றித் தெரிந்துகொண்டபோது, மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அதாவது, இறந்துபோன நம் அன்பானவர்கள் எங்கேயும் போய் கஷ்டப்படுவதில்லை என்பது நிம்மதியைக் கொடுத்தது. (பிர. 9:10) பூஞ்சோலை பூமியைப் பற்றித் தெரிந்துகொண்டபோது நமக்கு எப்படி இருந்தது? எதிர்காலத்தைப் பற்றிய கவலையெல்லாம் பறந்துபோய்விட்டது. வெறும் 70, 80 வருஷம் அல்ல, என்றென்றும் வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை நமக்குக் கிடைத்தது.—சங். 37:29; 90:10.
2. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களும்கூட அடிப்படை சத்தியங்களில் இருந்து பயனடைய முடியும் என்பதை 2 பேதுரு 1:12, 13 எப்படிக் காட்டுகிறது?
2 நாம் ஆரம்பத்தில் கற்றுக்கொண்ட பைபிள் சத்தியங்களை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்போஸ்தலன் பேதுரு, “சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருக்கிற” கிறிஸ்தவர்களுக்கு தன்னுடைய இரண்டாவது கடிதத்தை எழுதினார். (2 பேதுரு 1:12, 13-ஐ வாசியுங்கள்.) அவர்களுக்குச் சபைக்குள்ளேயே சில ஆபத்துகள் இருந்தன. போலி போதகர்களும் கடவுள்பக்தி இல்லாத ஆட்களும் சபைக்குள் இருந்தார்கள். (2 பே. 2:1-3) அப்படிப்பட்ட ஆட்கள் பொய்ப் போதனைகளைப் பரப்பினார்கள். அதனால், சகோதர சகோதரிகளை அந்த ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டும், அவர்களைப் பலப்படுத்த வேண்டும் என்று பேதுரு நினைத்தார். அதற்கு அவர் என்ன செய்தார்? அவர்கள் முதிர்ச்சி உள்ளவர்களாக இருந்தாலும், ஆரம்பத்தில் கற்றுக்கொண்ட அடிப்படை சத்தியங்களை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்!
3. அடிப்படை பைபிள் போதனைகளை ஏன் எல்லா கிறிஸ்தவர்களுமே ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்கள்.
3 கிறிஸ்தவர்களாக நாம் வளர வளர, அடிப்படை சத்தியங்களில் இருந்து புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: அனுபவமுள்ள ஒரு சமையல்காரர் இருக்கிறார். புதிதாக சமையல் செய்ய ஆரம்பித்தவரும் இருக்கிறார். சமைப்பதற்கு இவர்கள் இருவரும் பயன்படுத்தும் அடிப்படை பொருள்கள் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அனுபவமுள்ள சமையல்காரர் அந்தப் பொருள்களை வைத்து விதவிதமாக சமைக்கக் கற்றுக்கொண்டிருப்பார். அதேபோல், அனுபவமுள்ள கிறிஸ்தவருக்கும் புதிய கிறிஸ்தவருக்கும் அடிப்படை சத்தியங்கள் ஒன்றாக இருந்தாலும், அனுபவமுள்ள கிறிஸ்தவர் அடிப்படை சத்தியங்களில் இருந்து புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொண்டிருப்பார். ஞானஸ்நானம் எடுத்த சமயத்திலிருந்து இன்றுவரை அவருடைய சூழ்நிலைகளும், யெகோவாவின் சேவையில் அவருடைய பொறுப்புகளும் மாறியிருக்கலாம். அதனால், ஆரம்பத்தில் கற்றுக்கொண்ட அடிப்படை சத்தியங்களை, தன் வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்தி, புதுப் புது பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பார்; இனிமேலும் கற்றுக்கொள்வார். இப்போது, மூன்று அடிப்படை சத்தியங்களில் இருந்து அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
எல்லாவற்றையும் படைத்தவர் யெகோவா
4. எல்லாவற்றையும் படைத்தவர் யெகோவா என்பதைத் தெரிந்துகொண்டது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?
4 “எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.” (எபி. 3:4) இந்தப் பூமியையும் அதில் இருக்கிற எல்லா உயிர்களையும் அவர்தான் படைத்திருக்கிறார். அவரைவிட சக்திவாய்ந்தவரோ ஞானம் உள்ளவரோ யாருமே கிடையாது. நம்மைப் படைத்ததும் அவர்தான் என்பதால், அவருக்கு நம்மை அணுஅணுவாகத் தெரியும். அதுமட்டுமல்ல, அவர் நம்மேல் அக்கறை வைத்திருக்கிறார். நமக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும். யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தவர் என்ற சத்தியம், பல விதங்களில் நமக்கு உதவியிருக்கிறது, வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தையும் கொடுத்திருக்கிறது.
5. மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள எந்த பைபிள் சத்தியம் நமக்கு உதவும்? (ஏசாயா 45:9-12)
5 யெகோவாதான் படைப்பாளர் என்ற சத்தியம், மனத்தாழ்மையாக இருக்க நமக்கு உதவும். யோபுவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒரு கட்டத்தில், அவர் தன்னைப் பற்றியே அதிகமாக யோசித்தார், தன்மீது எந்தத் தவறும் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்தார். யெகோவாவைப் பற்றியும் சில தவறான கருத்துகளைச் சொன்னார். அப்போது யெகோவா, தான் சர்வவல்லமையுள்ள படைப்பாளர் என்பதை யோபுவுக்கு ஞாபகப்படுத்தினார். (யோபு 38:1-4) இப்படி அவர் ஞாபகப்படுத்தியது யோபுவுக்கு எப்படி உதவியது? கடவுள் தன்னைவிட உயர்ந்தவர் என்பதையும், அவருடைய வழிகள்தான் சரியானவை என்பதையும் யோபு புரிந்துகொண்டார். இதே மாதிரி ஒரு விஷயத்தை ஏசாயா தீர்க்கதரிசியும் பிறகு எழுதினார்: “களிமண் குயவனைப் பார்த்து, ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்க முடியுமா?”—ஏசாயா 45:9-12-ஐ வாசியுங்கள்.
6. யெகோவா ஞானமும் சக்தியும் உள்ள படைப்பாளர் என்பதை எந்தச் சமயத்தில் முக்கியமாக யோசித்துப் பார்க்க வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)
6 யெகோவாவை ரொம்ப காலமாக வணங்கி வருகிற ஒருவர், தான் யோசிப்பது எப்போதும் சரியாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்துவிடலாம். ஆலோசனைக்காக அவர் யெகோவாவையும் பைபிளையும் தேடிப் போவது குறைந்துவிடலாம். (யோபு 37:23, 24) அப்படிப்பட்ட ஒருவர், யெகோவா அளவில்லாத ஞானம் உள்ளவர் என்பதையும், படைப்பாளராக சக்திவாய்ந்தவர் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். (ஏசாயா 40:22; 55:8, 9) அப்படி யோசிப்பது, மனத்தாழ்மையாக இருக்கவும் தன்னுடைய யோசனைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவும் அவருக்கு உதவும்.
சொந்தக் கருத்துகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க எது உதவும்? (பாரா 6)d
7. அமைப்பு கொண்டுவந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ரஹேலாவுக்கு எது உதவியது?
7 ஸ்லோவீனியாவில் இருக்கிற ரஹேலா என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று பாருங்கள். யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தவர் என்பதை யோசித்துப் பார்த்தது, அமைப்பு கொண்டுவருகிற மாற்றங்களை ஏற்றுக்கொள்ள அவருக்கு உதவியது. அவர் சொல்கிறார்: “சில சமயத்தில், புதிதாக ஏதாவது வழிநடத்துதல் வரும்போது அதை ஏற்றுக்கொள்வது எனக்குக் கஷ்டமாக இருக்கும். உதாரணத்துக்கு, 2023 ஆளும் குழு அறிக்கை 8-ஐ பார்த்தப் பிறகும்கூட, தாடி வைத்த ஒரு சகோதரர் பேச்சு கொடுத்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால், அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள உதவி செய்யுங்கள் என்று யெகோவாவிடம் ஜெபம் செய்தேன்.” வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவால் தன்னுடைய அமைப்பைச் சரியாக வழிநடத்த முடியும் என்பதை ரஹேலா புரிந்துகொண்டார். நீங்களும் ஏதாவது ஒரு மாற்றத்தை அல்லது அமைப்பு தருகிற ஒரு வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுகிறீர்களா? அப்படியென்றால், படைப்பாளராக யெகோவாவுக்கு இருக்கிற ஞானத்தையும் சக்தியையும் பற்றி மனத்தாழ்மையாக யோசித்துப் பாருங்கள்.—ரோ. 11:33-36.
கஷ்டங்களை கடவுள் ஏன் அனுமதிக்கிறார்
8. கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?
8 கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாததால், நிறைய பேர் கடவுள்மேல் கோபப்படுகிறார்கள். சிலர், கடவுளே இல்லை என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார்கள். (நீதி. 19:3) நாம் அப்படி இல்லை! கஷ்டங்களுக்குக் காரணம் யெகோவா அல்ல, வழிவழியாக கடத்தப்பட்ட பாவமும் மனிதர்களுக்கு இருக்கும் குறைபாடுகளும்தான் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறோம். யெகோவா பொறுமையாக இருப்பதாலும் கஷ்டங்களுக்கு இதுவரைக்கும் முடிவு கொண்டு வராததாலும், லட்சக்கணக்கான ஆட்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கஷ்டங்களுக்கு அவர் எப்படி முடிவுகட்டப்போகிறார் என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. (2 பே. 3:9, 15) இந்தச் சத்தியத்தைத் தெரிந்துகொண்டது நமக்கு ஆறுதலாக இருக்கிறது, யெகோவாவிடம் நெருங்கிப் போக உதவி செய்கிறது.
9. யெகோவா கஷ்டங்களை ஏன் விட்டுவைத்திருக்கிறார் என்ற காரணத்தை முக்கியமாக எந்தச் சூழ்நிலைகளில் யோசித்துப் பார்க்க வேண்டும்?
9 கஷ்டங்களுக்கு யெகோவா முடிவுகட்டும்வரை, நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும், நமக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ ஏதாவது கஷ்டம் வரும்போது, அநியாயம் நடக்கும்போது, அல்லது ஏதாவது இழப்புகள் ஏற்படும்போது, யெகோவா ஏன் இதையெல்லாம் இன்னும் தடுத்து நிறுத்தாமல் இருக்கிறார் என்று நாம் யோசிக்கலாம். (ஆப. 1:2, 3) அந்த மாதிரி சமயத்தில், நல்லவர்கள்கூட கஷ்டப்படுவதற்கு யெகோவா ஏன் விட்டுவைத்திருக்கிறார் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.a (சங். 34:19) அதோடு, கஷ்டங்களுக்கு ஒரேயடியாக முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் யெகோவாவுடைய விருப்பம் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
10. அம்மா இறந்த துக்கத்தை ஆனி என்ற சகோதரி எப்படிச் சமாளித்தார்?
10 கஷ்டங்களைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது, சகித்திருப்பதற்கு உதவும். இந்திய பெருங்கடலில் இருக்கிற மயோட் தீவில் வாழ்கிற ஆனி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “கொஞ்ச வருஷத்துக்கு முன்பு என் அம்மா இறந்துவிட்டார். அதை நினைத்து நான் ரொம்ப வேதனைப்பட்டேன். ஆனால், இந்தக் கஷ்டத்துக்கு யெகோவா காரணம் இல்லை என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டேன். எல்லா கஷ்டத்தையும் அவர் ஒழித்துக்கட்டுவார் என்பதையும், இறந்தவர்களை உயிரோடு கொண்டுவர அவர் ஆசையாக இருக்கிறார் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொண்டேன். இந்தச் சத்தியங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்தது மனதுக்கு அமைதியைக் கொடுத்தது.”
11. கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதித்திருக்கிறார் என்ற சத்தியத்தைத் தெரிந்துகொண்டது ஊழியம் செய்ய நம்மை எப்படித் தூண்டுகிறது?
11 கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதித்திருக்கிறார் என்ற சத்தியத்தைத் தெரிந்துகொள்வது ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய நம்மைத் தூண்டுகிறது. மக்கள் மனம் திருந்த வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் யெகோவா பொறுமையாக இருக்கிறார் என்று சொன்ன பிறகு பேதுரு இப்படி எழுதினார்: “நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் கடவுள்பக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்!” (2 பே. 3:11) அவர் சொன்ன ‘கடவுள்பக்திக்குரிய செயல்களில்,’ நாம் செய்கிற ஊழியமும் ஒன்று. நம் அப்பா யெகோவா மாதிரியே நாமும் மக்களை நேசிக்கிறோம்; புதிய உலகத்தில் அவர்களும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நம் சுற்றுவட்டாரத்தில் இருக்கிற மக்களும் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக யெகோவா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். அவர்களுக்காக அவர் பொறுமையாகக் காத்திருக்கிறார். யெகோவாவின் சக வேலையாட்களாக இருப்பதற்கும், உலக முடிவுக்கு முன் நிறைய பேருக்கு அவரைப் பற்றிச் சொல்வதற்கும் நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது உண்மையிலேயே பெரிய பாக்கியம்!—1 கொ. 3:9.
“கடைசி நாட்களில்” வாழ்கிறோம்
12. “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?
12 “கடைசி நாட்களில்” மக்கள் எப்படி இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:1-5) நம்மைச் சுற்றி இருக்கிற மக்களைப் பார்த்தாலே இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டு இருப்பது தெரிகிறது. மக்களுடைய குணங்கள் மோசமாக மோசமாக, கடவுளுடைய வார்த்தை சொல்வது எவ்வளவு உண்மை என்பது தெளிவாகத் தெரிகிறது.—2 தீ. 3:13-15.
13. லூக்கா 12:15-21-ல் இயேசு சொன்ன கதை நம்மை எப்படி யோசிக்க வைக்கிறது?
13 கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்ற சத்தியத்தைத் தெரிந்துகொண்டது முக்கியமான விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க நம்மைத் தூண்டுகிறது. இயேசு சொன்ன உதாரணத்தில் இருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். அது லூக்கா 12:15-21-ல் இருக்கிறது. (வாசியுங்கள்.) இந்தக் கதையில் வரும் பணக்காரன் ஏன் ‘புத்தியில்லாதவன்’ என்று அழைக்கப்பட்டான்? அவன் பணக்காரனாக இருந்ததால் அல்ல, சரியான விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்காததால் அப்படி அழைக்கப்பட்டான். அவன் “கடவுளுடைய பார்வையில் பணக்காரனாக இல்லாமல் தனக்காகவே பொக்கிஷங்களை” சேர்த்து வைத்திருந்தான். அவன் தன் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தாதது பெரிய தவறு. ஏனென்றால், சீக்கிரத்தில் அவன் சாகவிருந்தான். “இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள்” என்று கடவுள் அவனிடம் சொன்னார். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? இந்த உலகத்தின் முடிவு ரொம்ப பக்கத்தில் இருக்கிற ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய லட்சியம், குறிக்கோள் எல்லாம், நான் உண்மையிலேயே முக்கியமான விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறேன் என்பதைக் காட்டுகிறதா? என்னுடைய பிள்ளைகளுக்கு நான் என்ன குறிக்கோள் வைக்க சொல்லிக்கொடுக்கிறேன்? என்னுடைய சக்தியையும் நேரத்தையும் பொருள் வசதிகளையும், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க பயன்படுத்துகிறேனா அல்லது இந்தப் பூமியில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க பயன்படுத்துகிறேனா?’
14. மிக்கியின் உதாரணம் காட்டுவது போல, கடைசி நாட்களில் நாம் வாழ்வதற்கான ஆதாரத்தை யோசித்துப் பார்ப்பது ஏன் நல்லது?
14 கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கான ஆதாரங்களை யோசித்துப் பார்க்கும்போது, வாழ்க்கையை நாம் பார்க்கிற விதமே மாறிவிடும். மிக்கி என்ற சகோதரி என்ன சொன்னார் என்று பாருங்கள்: “பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மிருகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற ஒரு மேற்படிப்பைப் படிக்க ஆசைப்பட்டேன். அதேசமயத்தில், ஒழுங்கான பயனியராக சேவை செய்யவும், தேவை அதிகம் இருக்கிற இடத்தில் ஊழியம் செய்யவும் ஆசைப்பட்டேன். மேற்படிப்பையும் படித்துக்கொண்டு யெகோவாவுக்கும் அதிகமாக சேவை செய்ய முடியுமா என்று எதார்த்தமாக யோசிக்க, முதிர்ச்சியுள்ள சில நண்பர்கள் எனக்கு உதவினார்கள். இந்த உலகத்துக்கு முடிவு சீக்கிரம் வந்துவிடும் என்பதையும் ஞாபகப்படுத்தினார்கள். புதிய உலகத்தில் மிருகங்களைப் பற்றிக் காலமெல்லாம் படித்துக்கொண்டே இருக்கலாம் என்பதையும் சொன்னார்கள். அதனால், திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகிற குறுகிய கால படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். அப்படிச் செய்ததால், பயனியர் செய்ய உதவுகிற வேலையை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. பிறகு, ஈக்வடாரில் தேவை அதிகமாக இருந்ததால் அங்கே போய் சேவை செய்தேன்.” சகோதரி மிக்கியும் அவருடைய கணவரும் இப்போது அந்த நாட்டில் வட்டாரச் சேவையில் இருக்கிறார்கள்.
15. இன்று நல்ல செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒருநாள் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதை எப்படிச் சொல்லலாம்? உதாரணம் சொல்லுங்கள். (படங்களையும் பாருங்கள்.)
15 நாம் சொல்லும் நல்ல செய்தியை மக்கள் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நாம் சோர்ந்துவிடக் கூடாது. ஏனென்றால், மக்கள் மாறுவார்கள். இயேசுவுடைய சகோதரன் யாக்கோப்பைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர் இயேசுவோடுதான் வளர்ந்தார். இயேசுதான் மேசியா என்பதை அவரால் பார்க்க முடிந்தது. இயேசு மாதிரி யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை என்பதையும் கவனித்தார். இருந்தாலும், ரொம்ப நாள் அவர் இயேசுவின் சீஷராக ஆகவில்லை. இயேசு உயிர்த்தெழுந்த பிறகுதான் சீஷராக ஆனார். அதுவும், ஆர்வத்துடிப்புள்ள சீஷராக ஆனார்!b (யோவா. 7:5; கலா. 2:9) அதனால், உங்கள் சொந்தக்காரர்களோ மற்றவர்களோ நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சோர்ந்துவிடாதீர்கள். அவர்களிடமும் நல்ல செய்தியைச் சொல்ல தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நாம் செய்யும் ஊழியம் ரொம்ப ரொம்ப அவசரமாகச் செய்ய வேண்டிய வேலை. ஒருவேளை, இன்று நாம் சொல்கிற செய்தியை மக்கள் கேட்காவிட்டாலும், ஒருநாள் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகும்கூட அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது!c
சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்கள்மேல் நம்பிக்கை இழக்காமல் இருக்க எது உதவும்? (பாரா 15)e
யெகோவாவின் நினைப்பூட்டுதலுக்கு நன்றியோடு இருங்கள்
16. யெகோவா கொடுக்கிற நினைப்பூட்டுதல்களில் இருந்து நீங்கள் எப்படிப் பயன் அடைந்திருக்கிறீர்கள்? (“மற்றவர்களுக்கு உதவ அவற்றைப் பயன்படுத்துங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
16 நம்முடைய அமைப்பு தயாரிக்கும் சில விஷயங்கள், அடிப்படை சத்தியங்களே தெரியாத பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, வாரா வாரம் சபையில் கொடுக்கிற பொதுப் பேச்சு, jw.org வெப்சைட்டில் வரும் சில கட்டுரைகளும் வீடியோக்களும், காவற்கோபுர பொது இதழும் விழித்தெழு! பத்திரிகையும் யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்களுக்காக முக்கியமாகத் தயாரிக்கப்படுகிறது. இருந்தாலும், அதில் கொடுக்கப்படுகிற நினைப்பூட்டுதல்கள் நமக்கும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. யெகோவாமேல் இருக்கிற அன்பை அதிகமாக்குகிறது. பைபிள்மேல் விசுவாசத்தை வளர்க்க உதவுகிறது. பைபிளில் இருக்கிற அடிப்படை சத்தியங்களைத் திறமையாகச் சொல்லிக்கொடுக்கவும் உதவுகிறது.—சங். 19:7.
17. எந்த மாதிரி சூழ்நிலைகளில் அடிப்படை சத்தியங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்?
17 பைபிள் சத்தியங்களில் புதிய புரிந்துகொள்ளுதல்கள் வரும்போது அதை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம். இருந்தாலும், அடிப்படை சத்தியங்களைத் தெரிந்துகொண்டதற்காக நாம் எப்போதுமே நன்றியோடு இருக்கிறோம். ஏனென்றால், அதுதான் நம்மைச் சத்தியத்துக்குள் கொண்டு வந்தது. அவை இப்போதும் நமக்குப் பிரயோஜனமாக இருக்கிறது என்பதை இதுவரை பார்த்தோம். அமைப்பிலிருந்து புதிய வழிநடத்துதல் வரும்போது, சொந்தக் கருத்திலேயே பிடிவாதமாக இருக்கத் தோன்றுகிறதா? அப்படியென்றால், இந்த அமைப்பை வழிநடத்துவது யார் என்று மனத்தாழ்மையாக யோசித்துப் பாருங்கள். அது, சர்வவல்லமையும் ஞானமும் உள்ள நம் படைப்பாளரான யெகோவாதான்! நீங்களோ உங்களுக்கு நெருக்கமானவர்களோ ஏதாவது கஷ்டத்தைச் சகித்துக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவா ஏன் கஷ்டங்களை அனுமதித்திருக்கிறார் என்ற சத்தியத்தை யோசித்துப் பார்ப்பது, பொறுமையாக இருக்க உதவும். உங்கள் நேரத்தையும் பொருள் வசதிகளையும் எப்படிப் பயன்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வது, அவசர உணர்வோடு கடவுளுக்குச் சேவை செய்ய உதவும். யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற இந்த நினைப்பூட்டுதல்கள் நம்மை எப்போதுமே பலப்படுத்தும், உற்சாகப்படுத்தும், ஞானமாக நடந்துகொள்ள உதவும்.
பாட்டு 95 வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது
a மே 15, 2007 காவற்கோபுரத்தில், பக். 21-25-ல் இருக்கும் “துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c மே 2024 காவற்கோபுரத்தில், பக். 8-13-ல் இருக்கும் “சீக்கிரத்தில் யெகோவா எப்படி மக்களை நியாயந்தீர்ப்பார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
d படவிளக்கம்: : ஒரு மூப்பர் சொல்லும் கருத்தை மற்ற மூப்பர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு அந்த மூப்பர், தன்னுடைய எண்ணங்களைவிட யெகோவாவின் எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்தது என்பதை நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்த்தபடி யோசிக்கிறார்.
e படவிளக்கம்: நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கான ஆதாரங்களை, தனிப்பட்ட படிப்பில் ஒரு சகோதரி படிக்கிறார். இது, கூடப்பிறந்த தன் சகோதரிக்கு நல்ல செய்தியைச் சொல்ல அவரைத் தூண்டுகிறது.