உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 ஏப்ரல் பக். 8-13
  • “கடவுளிடம் நெருங்கிப் போவது” நமக்கு நல்லது!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கடவுளிடம் நெருங்கிப் போவது” நமக்கு நல்லது!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அது சந்தோஷத்தைத் தரும்
  • அது நமக்குச் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் தரும்
  • கடவுளிடம் தொடர்ந்து நெருங்கிப் போவது எப்படி
  • தடுமாறினாலும் “கடவுளிடம் நெருங்கிப் போக” முடியும்
  • ‘கடவுளிடம் நெருங்கிப் போங்கள்’—என்றென்றும்!
  • ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் போவது நமக்கு நல்லது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • சந்தேகங்களை விரட்டியடியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 ஏப்ரல் பக். 8-13

படிப்புக் கட்டுரை 15

பாட்டு 30 என் தந்தை, என் தேவன், என் தோழன்!

“கடவுளிடம் நெருங்கிப் போவது” நமக்கு நல்லது!

“கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் எனக்கு நல்லது.” —சங். 73:28.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவிடம் எப்படி நெருங்கிப் போகலாம் என்றும், அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்றும் கற்றுக்கொள்வோம்.

1-2. (அ) ஒருவரோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

உங்களுக்கு உயிர் நண்பர் யாராவது இருக்கிறாரா? நீங்கள் எப்படி அவரோடு நண்பர் ஆனீர்கள்? அவரோடு ரொம்ப நாள் பழகியிருப்பீர்கள். வாழ்க்கையில் அவர் என்னென்ன கஷ்டங்களைச் சந்தித்தார் என்பதையும், அவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதையும் நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள். அவரிடம் நல்ல குணங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நீங்களும் அதையெல்லாம் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பீர்கள். பழகப் பழக, உங்களுக்கு அவர்மேல் அன்பு அதிகமாகியிருக்கும்.

2 ஒருவரிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள நேரமும் முயற்சியும் தேவை. யெகோவாவிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வதற்கும் இவை இரண்டும் தேவை. இந்தக் கட்டுரையில், நாம் எப்படி யெகோவாவிடம் நெருங்கிப் போகலாம் என்பதைப் பற்றியும், அதனால் வரும் நன்மைகளைப் பற்றியும் பார்க்கலாம். அதற்குமுன், நம்முடைய உயிர் நண்பராக இருக்கிற யெகோவாவிடம் நெருங்கிப் போவது ஏன் நல்லது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

3. யெகோவாவிடம் நெருங்கிப் போவதால் வரும் நன்மைகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பது ஏன் முக்கியம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

3 யெகோவாவிடம் நெருங்கிப் போவது நல்லது என்பதை நீங்களும் கண்டிப்பாக ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் அப்படி நெருங்கிப் போவது எவ்வளவு நல்லது என்பதை நன்றாக யோசித்துப் பார்த்தால், அதைத் தொடர்ந்து செய்வதற்கான ஆசை நமக்கு வரும். (சங். 63:6-8) இதைப் புரிந்துகொள்வதற்கு இந்த உதாரணத்தை யோசியுங்கள். ஆரோக்கியமான சாப்பாடு, உடற்பயிற்சி, போதுமான அளவு ஓய்வெடுப்பது, தண்ணீர் குடிப்பது என இவை எல்லாமே நல்லது என்று நமக்குத் தெரியும். இருந்தாலும், நிறைய பேர் இதையெல்லாம் முக்கியமாக நினைப்பதில்லை; உடலை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்வதில்லை. ஆனால், ஆரோக்கியமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பார்த்தால், இதையெல்லாம் செய்வதற்கான ஆசை வரும். யெகோவாவிடம் நெருங்கிப் போவதும் அதே மாதிரிதான். அது நல்லது என்று நமக்குத் தெரிந்திருந்தாலும், அதனால் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பார்த்தால், அதைத் தொடர்ந்து செய்வதற்கான ஆசை நமக்கு வரும்.—சங். 119:27-30.

4. சங்கீதம் 73:28-ல், சங்கீதக்காரர் என்ன சொல்கிறார்?

4 சங்கீதம் 73:28-ஐ வாசியுங்கள். சங்கீதம் 73-ஐ எழுதியவர் ஒரு லேவியர். அவர் யெகோவாவின் ஆலயத்தில் இசைக் கலைஞராக சேவை செய்தார். ஒருவேளை, பல வருஷங்களாக அவர் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துவந்திருக்கலாம். இருந்தாலும், “கடவுளிடம் நெருங்கிப் போவது” எவ்வளவு நல்லது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வது முக்கியம் என்று நினைத்தார்; மற்றவர்களும் அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். சரி, கடவுளிடம் நெருங்கிப் போவதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

அது சந்தோஷத்தைத் தரும்

5. (அ) யெகோவாவிடம் நெருங்கிப் போவது நமக்கு ஏன் சந்தோஷத்தைத் தருகிறது? (ஆ) யெகோவாவின் ஞானம் தனிப்பட்ட விதத்தில் உங்களை எப்படிப் பாதுகாக்கிறது என்பதற்கு நீதிமொழிகள் 2:6-16-லிருந்து உதாரணங்களைச் சொல்லுங்கள்.

5 நாம் எந்தளவுக்கு யெகோவாவிடம் நெருங்கிப் போகிறோமோ அந்தளவுக்கு நமக்குச் சந்தோஷம் கிடைக்கும். (சங். 65:4) எப்படிச் சொல்கிறோம்? கடவுளிடம் நெருங்கிப் போகும்போது நாம் பைபிளைத் தவறாமல் படிப்போம். அதில் இருக்கிற ஞானமான ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிவோம். அந்த ஞானம், தவறான பாதையில் போய்விடாதபடியும் பெரிய பெரிய தவறுகளைச் செய்துவிடாதபடியும் நம்மைப் பாதுகாக்கிறது. (நீதிமொழிகள் 2:6-16-ஐ வாசியுங்கள்.) அதனால்தான் பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஞானத்தைக் கண்டுபிடிப்பவனும், பகுத்தறிவைப் பெறுகிறவனும் சந்தோஷமானவன்.”—நீதி. 3:13.

6. சங்கீதக்காரர் ஏன் அவருடைய சந்தோஷத்தை இழந்தார்?

6 உண்மைதான், யெகோவாவின் நண்பர்கள் சிலர்கூட விரக்தி அடைந்திருக்கிறார்கள். சங்கீதம் 73-ஐ எழுதியவரும் அந்த மாதிரி உணர்ந்தார். அவரைச் சுற்றி நடந்த சில விஷயங்கள் அவருடைய கண்ணில் அநியாயமாகப் பட்டது. அதனால், அவர் சந்தோஷத்தை இழந்துவிட்டார். கடவுளைப் பற்றியோ கடவுளுடைய சட்டங்களைப் பற்றியோ யோசிக்காத கெட்ட ஆட்கள் ஓகோவென்று வாழ்கிற மாதிரி அவருக்குத் தோன்றியது. அதைப் பார்க்கும்போது அவருக்குப் பொறாமையாகவும், ரொம்ப வெறுப்பாகவும் இருந்தது. வன்முறையை விரும்புகிற, தலைக்கனம் பிடித்த ஆட்கள் எல்லாம் செல்வச்செழிப்பாக... ஆரோக்கியமாக... எந்தப் பிரச்சினையும் இல்லாமல்... சந்தோஷமாக வாழ்கிற மாதிரி அவருக்குத் தோன்றியது. (சங். 73:3-7, 12) அதனால், யெகோவாவுக்குச் சேவை செய்வதில் என்ன பிரயோஜனம் என்று ஒரு கட்டத்தில் அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். “நான் சுத்தமான இதயத்தோடும், கறைபடியாத கைகளோடும் வாழ்ந்தது வீணிலும் வீண்தான்” என்று சோகத்தில் சொன்னார்.—சங். 73:13.

7. சோகத்திலிருந்து நாம் எப்படி வெளியே வரலாம்? (படத்தையும் பாருங்கள்.)

7 அந்தச் சங்கீதக்காரர் சோகத்தில் ஒரேயடியாக நொடிந்துபோய்விடவில்லை. அவருடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள முயற்சி எடுத்தார். அவர் “கடவுளுடைய பரிசுத்த ஆலயத்துக்கு” போனார். (சங். 73:17-19) அங்கே, அவர் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொள்ள யெகோவா உதவினார். நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நாம் சோகத்தில் இருக்கும்போது நம்முடைய நெருங்கிய நண்பரான யெகோவா அதைப் பார்க்கிறார். வழிநடத்துதலுக்காக அவரிடம் ஜெபம் செய்யும்போது பைபிள் மூலமாகவும் சபை மூலமாகவும் நமக்குத் தேவையான உதவியைத் தருவார். அதனால், சோகத்தைச் சமாளிக்க நமக்குப் பலம் கிடைக்கும். வேதனைகள் நம்மை மூழ்கடிக்கிற மாதிரி சூழ்நிலைமைகள் வந்தால்கூட யெகோவா நமக்கு ஆறுதல் தருவார், நம் இதயத்துக்கு இதமளிப்பார்.—சங். 94:19.a

ஆலயத்தில் நுழைவு மண்டபத்துக்கும் செம்புப் பலிபீடத்துக்கும் நடுவில் ஒரு லேவியர் நிற்கிறார்.

சங்கீதம் 73-ஐ எழுதிய லேவியர், ‘கடவுளுடைய பரிசுத்த ஆலயத்தில்’ நின்றுகொண்டிருக்கிறார் (பாரா 7)


அது நமக்குச் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் தரும்

8. கடவுளிடம் நெருங்கிப் போவது நல்லது என்பதற்கு இன்னும் இரண்டு முக்கியமான காரணங்கள் என்ன?

8 கடவுளிடம் நெருங்கிப் போவது ஏன் நல்லது என்பதற்கு இன்னும் இரண்டு முக்கியமான காரணங்களைப் பார்க்கலாம். (1) நம் வாழ்க்கைக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. (2) எதிர்காலம் நல்லபடியாக மாறும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொடுக்கிறது. (எரே. 29:11) இந்த இரண்டைப் பற்றியும் இப்போது ஆழமாக யோசித்துப் பார்க்கலாம்.

9. யெகோவாவிடம் நெருங்கிப் போவது நம் வாழ்க்கைக்கு எப்படி அர்த்தத்தைத் தருகிறது?

9 யெகோவாவிடம் நெருங்கிப் போவது நம் வாழ்க்கைக்கு எப்படிச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்று பார்க்கலாம். இன்று உலகத்தில் நிறைய பேர் கடவுள் என்று ஒருவர் இருப்பதையே நம்புவதில்லை. அதனால், ‘ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம்’ என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரிவதில்லை. மனித இனமே ஒருநாள் அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், “[கடவுள்] இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார் என்றும்” நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். (எபி. 11:6) இன்றே நம் வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம், கடவுளுக்குச் சேவை செய்வதால்தான். அவருக்குச் சேவை செய்தால் நமக்குச் சந்தோஷம் கிடைக்கும் விதத்தில்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார்.—உபா. 10:12, 13.

10. யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது என்று சங்கீதம் 37:29 சொல்கிறது?

10 யெகோவாவிடம் நெருங்கிப் போவது நமக்கு எதிர்கால நம்பிக்கையைக் கொடுக்கிறது. ஆனால், இன்று மக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, வேலைக்குப் போக வேண்டும்... கல்யாணம் பண்ண வேண்டும்... பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்... வயதான காலத்துக்காக சேமித்து வைக்க வேண்டும்—இதுதான் வாழ்க்கை என்று ஓடுகிறார்கள். ஆனால் நாம், யெகோவாவை நம்புகிறோம். அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார் என்று நமக்குத் தெரியும். (சங். 25:3-5; 1 தீ. 6:17) அதோடு, எதிர்காலத்தில் நல்ல நல்ல விஷயங்களைச் செய்யப்போவதாக அவர் கொடுத்திருக்கிற வாக்குறுதிகள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். பூஞ்சோலை பூமியில் என்றென்றும் அவரை வணங்க முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது.—சங்கீதம் 37:29-ஐ வாசியுங்கள்.

11. கடவுளிடம் நெருங்கிப் போகும்போது நமக்கு எப்படி இருக்கும், அவருக்கு எப்படி இருக்கும்?

11 கடவுளிடம் நெருங்கிப் போவது நமக்கு நல்லது என்று சொல்வதற்கு இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, தன்னிடம் நெருங்கியிருப்பவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டாலும், அவர்கள் மனம் திருந்தினால் யெகோவா அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 1:18) அதனால், முன்பு செய்த பாவங்களை நினைத்து அவர்கள் குற்ற உணர்வில் தவிக்க வேண்டியதில்லை. (சங். 32:1-5) அதோடு, யெகோவாவிடம் நாம் நெருங்கிப் போகும்போது அவர் சந்தோஷப்படுகிறார். (நீதி. 23:15) யெகோவாவிடம் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்வதால் இன்னும் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று நீங்களும் யோசித்துப் பாருங்கள். சரி, கடவுளிடம் தொடர்ந்து நெருங்கிப் போவதற்கு நாம் என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

கடவுளிடம் தொடர்ந்து நெருங்கிப் போவது எப்படி

12. கடவுளிடம் இன்னும் நெருங்கிப் போக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?

12 நீங்கள் ஞானஸ்நானம் எடுத்திருந்தால், ஏற்கனவே யெகோவாவிடம் நெருங்கிப் போயிருப்பீர்கள். எப்படி? அவரைப் பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் நிறைய உண்மைகளைக் கற்றிருப்பீர்கள். செய்த பாவங்களிலிருந்து மனம் திருந்தியிருப்பீர்கள். கடவுள்மேல் பலமான விசுவாசத்தை வளர்த்திருப்பீர்கள். அவருடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துகொண்டிருப்பீர்கள். ஆனால், கடவுளிடம் இன்னும் நெருங்கிப் போக வேண்டுமென்றால், இதை எல்லாம் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.—கொலோ. 2:6.

13. யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கிப் போக எந்த மூன்று விஷயங்கள் உதவும்?

13 யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கிப் போவதற்கு உதவுகிற மூன்று விஷயங்களைப் பார்க்கலாம்: (1) பைபிளைத் தவறாமல் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும்போது, கடவுளைப் பற்றிய அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்வது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பைபிள் நியமங்களையும் கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். (எபே. 5:15-17) (2) விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு, கடவுள் நம்மேல் அன்பு வைத்திருப்பதற்கான ஆதாரங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். (3) யெகோவா வெறுக்கிற விஷயங்களை நாமும் தொடர்ந்து வெறுக்க வேண்டும். அவற்றைச் செய்கிற ஆட்களிடம் இருக்கிற நட்பையும் முறித்துக்கொள்ள வேண்டும்.—சங். 1:1; 101:3.

14. ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்கு நாம் என்ன செய்யலாம்? (1 கொரிந்தியர் 10:31) (படங்களையும் பாருங்கள்.)

14 1 கொரிந்தியர் 10:31-ஐ வாசியுங்கள். நாம் எப்போதுமே யெகோவாவுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம். வெறுமனே கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போனால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளுமே யெகோவாவுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, நாம் எல்லா விஷயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும். நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்யும்போது யெகோவா ரொம்ப சந்தோஷப்படுவார். (2 கொ. 8:21; 9:7) அதுமட்டுமல்ல, அவர் கொடுத்திருக்கிற உயிர் என்ற பரிசை நாம் உயர்வாக மதிக்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். சாப்பிடுகிற/குடிக்கிற விஷயத்தில் கவனமாக இருப்பதன் மூலமாகவும், ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்வதன் மூலமாகவும், உயிரைக் கொடுத்த கடவுளிடம் நெருங்கிப் போக முடியும். சின்னச் சின்ன விஷயங்களில்கூட யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி இருக்க முயற்சி செய்தால் அவருக்கு நம்மை ரொம்ப பிடிக்கும்.—லூக். 16:10.

படத்தொகுப்பு: யெகோவாவைப் பிரியப்படுத்த வழிகள். 1. பாதுகாப்பாக வண்டி ஓட்டுவது: சிக்னலில் சிவப்பு நிறத்தைப் பார்த்து ஒரு சகோதரர் காரை நிறுத்துகிறார். 2. நம்மைக் கவனித்துக்கொள்வது: சகோதரர் ஒருவர் பூங்காவில் நடைப்பயிற்சி செய்கிறார். 3. ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது: ஒரு தட்டில் ஆரோக்கியமான உணவு வகை வகையாக வைக்கப்பட்டிருக்கிறது. 4. மற்றவர்களை உபசரிப்பது: வயதான ஒரு சகோதரிக்கு பூக்களையும் உணவையும் ஒரு சகோதரி கொண்டுவந்து கொடுக்கிறார். அந்த வயதான சகோதரியின் கையில் கட்டு போடப்பட்டிருக்கிறது.

யெகோவாவைப் பிரியப்படுத்த சில வழிகள்: பாதுகாப்பாக வண்டி ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது, மற்றவர்களை உபசரிப்பது (பாரா 14)


15. நாம் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

15 தன்னை வணங்குகிறவர்களுக்கும் வணங்காதவர்களுக்கும் யெகோவா கருணை காட்டுகிறார். (மத். 5:45) நாமும் மற்றவர்களிடம் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். உதாரணத்துக்கு, “யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் தகராறு செய்யக் கூடாது, . . . எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்த குணத்தைக் காட்ட வேண்டும்” என்று அவர் எதிர்பார்க்கிறார். (தீத். 3:2) இந்த ஆலோசனையை மனதில் வைத்திருப்பதால் யெகோவாவை வணங்காத ஆட்களையும் நாம் மதிக்கிறோம். அவர்களைத் தாழ்வாகப் பார்ப்பதில்லை. (2 தீ. 2:23-25) இப்படி, எல்லாரிடமும் கரிசனையாக நடந்துகொள்வதன் மூலமாக, நம் அப்பா யெகோவாவிடம் நெருங்கிப் போகிறோம்.

தடுமாறினாலும் “கடவுளிடம் நெருங்கிப் போக” முடியும்

16. சங்கீதம் 73-ஐ எழுதியவர் எப்படி உணர்ந்தார்?

16 தவறு செய்துவிட்டதால், யெகோவா உங்களோடு நெருக்கமாக இல்லை என்று சிலசமயம் நீங்கள் நினைக்கலாம். சங்கீதம் 73-ஐ எழுதியவரும் அந்த மாதிரி யோசித்திருக்கிறார். “நான்தான் கிட்டத்தட்ட வழிதவறிப் போய்விட்டேன். கால் சறுக்கி விழும் நிலைக்குப் போய்விட்டேன்” என்று புலம்பினார். (சங். 73:2) பிறகு, செய்த தவறை நினைத்து அவர் இப்படிச் சொன்னார்: “என் நெஞ்சம் கசந்தது,” “நான் அறிவில்லாமல் இருந்துவிட்டேன்,” யெகோவாவுக்கு முன்னால் “புத்தியில்லாத மிருகம்போல் நடந்துகொண்டேன்.” (சங். 73:21, 22) யெகோவாவின் அன்பை ஒரேயடியாக இழந்துவிட்டதாக அவர் நினைத்தாரா?

17. (அ) ரொம்பவே சோர்ந்துபோயிருந்த சமயத்தில் சங்கீதக்காரர் என்ன செய்தார்? (ஆ) அவரிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (படங்களையும் பாருங்கள்.)

17 தன்னை யெகோவா கைவிட்டதுபோல் அந்தச் சங்கீதக்காரர் நினைத்திருந்தாலும், அந்த எண்ணம் அவருக்கு கொஞ்ச நாள்தான் இருந்தது. ரொம்பவே சோர்ந்திருந்த சமயத்தில், யெகோவாவிடம் நெருங்கிப் போக வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவருடைய வார்த்தைகள் அதைத்தான் காட்டுகிறது. அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆனால், இப்போது நான் உங்கள் கூடவே இருக்கிறேன். நீங்கள் என் வலது கையைப் பிடித்திருக்கிறீர்கள். உங்கள் அறிவுரைகளால் எனக்கு வழிகாட்டுகிறீர்கள். இனி நான் மேன்மை அடைவதற்கு வழிநடத்துவீர்கள்.” (சங். 73:23, 24) நாமும் ரொம்ப சோர்ந்துபோயிருக்கிற சமயத்தில், பலத்துக்காக யெகோவாவிடம் போகலாம். அவர்தான் நம்முடைய கற்பாறை, நம்மைத் தாங்கிப் பிடிப்பவர்! (சங். 73:26; 94:18) ஒருவேளை, நாம் ஏதாவது பெரிய தவறு செய்துவிட்டாலும், யெகோவா “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்பதை மனதில் வைத்து அவரிடம் மறுபடியும் நாம் போகலாம். (சங். 86:5) அதுவும், ரொம்பவே சோர்ந்துபோயிருக்கிற சமயத்தில் நாம் கண்டிப்பாக யெகோவாவிடம் நெருங்கிப் போக வேண்டும்.—சங். 103:13, 14.

படத்தொகுப்பு: 1. ஒரு சகோதரர் சோர்ந்துபோய் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். 2. பிறகு சபைக்குப் போகும்போது, ஒரு தம்பதி அவரை அன்பாக வரவேற்பதைப் பார்த்து புன்னகை செய்கிறார்.

யெகோவாவோடு இருக்கும் பந்தம் பலவீனமாக இருப்பதை உணரும்போது, அவரிடம் நெருங்கிப் போக வேண்டும். அதற்கு, வணக்க விஷயங்களில் அதிகமாக ஈடுபட வேண்டும் (பாரா 17)


‘கடவுளிடம் நெருங்கிப் போங்கள்’—என்றென்றும்!

18. நம்மால் ஏன் என்றென்றும் யெகோவாவிடம் நெருங்கிப் போக முடியும்?

18 யெகோவாவின் வழிகளையும் ஞானத்தையும் அறிவையும் முழுமையாக ‘கண்டறிய முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 11:33) அதனால், நாம் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு முடிவே கிடையாது. அவரிடம் நம்மால் என்றென்றும் நெருங்கிப் போய்க்கொண்டே இருக்க முடியும்.

19. சங்கீதத்தில் இருக்கிற வார்த்தைகள் நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது?

19 யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கிப் போனால் ஆசீர்வாதங்கள் இன்று மட்டுமல்ல, என்றென்றும் கிடைக்கும் என்று நீங்கள் நிச்சயம் நம்பலாம். “உங்கள் ஜனமும், உங்களால் மேய்க்கப்படுகிற ஆடுகளுமான நாங்கள், உங்களுக்கு என்றென்றும் நன்றி சொல்வோம். உங்களுடைய புகழைத் தலைமுறை தலைமுறைக்கும் அறிவிப்போம்” என்று சொன்ன சங்கீதக்காரரைப் போல நம்மாலும் சொல்ல முடியும். (சங். 79:13) கடவுளிடம் நெருங்கிப் போகப்போக அவர் ‘என்றென்றும் நம் இதயத்தின் கற்பாறையாகவும் நம் பங்காகவும் இருப்பார்’!—சங். 73:26.

உங்கள் பதில் என்ன?

  • ‘கடவுளிடம் நெருங்கிப் போவதால்’ வரும் நன்மைகளைப் பற்றி ஏன் அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும்?

  • “கடவுளிடம் நெருங்கிப் போவது” எந்தெந்த விதங்களில் நமக்கு நல்லது?

  • நாம் எப்படித் தொடர்ந்து ‘கடவுளிடம் நெருங்கிப் போகலாம்’?

பாட்டு 32 என்றும் நாம் யெகோவாவின் பக்கம்

a சிலர் ரொம்ப காலத்துக்கு மனச்சோர்வோடும் மனப் பதட்டத்தோடும் சோகத்தோடும் போராடலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவருடைய உதவி தேவைப்படலாம். இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள காவற்கோபுரம் எண் 1, 2023-ஐ பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்