மதத்தை அண்மையில் பார்த்தல்
உங்களிடம் கேட்கப்பட்டால், மதத்தைச் “சமய வெறியையும் பொதுமக்களிடையே வேற்றுமையையும் ஈன்றிருக்கும் பெற்றோர், . . . மனிதவர்க்கத்தின் எதிரி,” என்று அழைத்த வால்டேரின் கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறவர்களாயிருக்கக்கூடும். அல்லது மெத்தனமான ஓர் ஆவியில் நீங்கள் 17-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்லிக்கன் மதகுரு ராபர்ட் பர்ட்டன் சொன்னதைச் சொல்லக்கூடும்: “ஒரு மதம் மற்ற மதத்தைப்போலவே உண்மையாக இருக்கிறது.”
ஒருவேளை 18-வது நூற்றாண்டு ஃப்ரெஞ்சு கட்டுரையாசிரியர் ஜோசப் ஜோபர்ட் விவரித்த அந்த நபரைப் போல, “அதில் தன்னுடைய மகிழ்ச்சியையும் கடமையையும் காண்கிற” ஒருவராக இருப்பதாய் நீங்கள் ஒப்புக்கொள்ளக்கூடும்.
மேற்போக்கான மதம்
இந்நாட்களிலே, உண்மையிலேயே “[மதத்தில்] தன்னுடைய மகிழ்ச்சியையும் கடமையையும் காண்கிற” ஒருவர் பதட்டமடைவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. மத பக்தி கொண்ட நாடுகளிலும், அநேகர் தாங்கள் உண்மையிலேயே நம்ப வேண்டியது குறித்து தெளிவற்றவர்களாக இருக்கின்றனர்; அவர்களுடைய மதம் அவர்களுடைய அனுதின வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவதில்லை. சில இடங்களில் சர்ச் அங்கத்தினர்களின் எண்ணிக்கையில் சரிவு இருப்பதைப் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன. உதாரணமாக, ஜெர்மனியில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 2.63 கோடி கத்தோலிக்கரில் ஆலய பூசைக்குச் செல்லுகிறவர்கள் 68 இலட்சம் கத்தோலிக்கர் மட்டுமே என்று புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன. கத்தோலிக்க சர்ச் அங்கத்தினர்கள் ஜெர்மன் குடியரசை “ஒரு கிறிஸ்தவ நாடாகக்” கருதுவதில்லை, “அந்தப் பதத்தின் மேலீடான கருத்தில் மட்டுமே” அவ்விதமாகக் கருதுவதாகக் கூறுவதில் ஆச்சரியமேதுமில்லை.
1982-ல் பிரசுரிக்கப்பட்ட உலக கிறிஸ்தவ என்ஸைக்ளோபீடியா (World Christian Encyclopedia) குறிப்பிடுகிறபடி, “எண்ணிக்கையில் சரிவு கிறிஸ்தவ மதத்தில் மட்டுமல்ல; இது மதத்தின் மொத்த இயல்நிலையாக இருக்கிறது.”
மதத்தின் சரித்திரத்தை ஏன் விமர்சிக்க வேண்டும்?
இப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, மதத்தின் எதிர்காலந்தான் என்ன? 1990, 1991 ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட இருக்கும் எமது 24 விழித்தெழு! தொடர் கட்டுரைகள் அந்தக் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மதத்தின் ஆரம்ப ஆண்டுகள் முதல் நவீன காலங்கள் வரை அதன் கடந்தகால சரித்திரத்தை விமர்சிப்பதன் மூலம், இந்தக் கட்டுரைகள் உலக மதத்தின் பேரில் ஒரு சுருக்கமான, ஆனால் தெளிவான சரித்திரத்தை அளித்திடும். பின் உள்ளவற்றைக் காட்டிடும் சரித்திரமாகிய கண்ணாடியில் சற்று பார்ப்பது, நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள் என்ற நன்கு அறியப்பட்டிருக்கும் நியமத்திற்கு இசைவாக மதத்தின் எதிர்காலத்திற்குள் பார்வையிடுவதைக் கூடிய காரியமாக்கிடும்.
‘மத சரித்திரம் எனக்குரியது அல்ல!’ என்று அவசரப்பட்டு சொல்லிவிடாதீர்கள். நிகழ்காலம் கடந்த காலத்தில்தானே ஆதாரமிடப்பட்டிருக்கிறது. ஒருவர் மத விசுவாசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மதத்தின் சரித்திரம் நம் எல்லாரையுமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதித்திருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்பதை மறுதலிக்கும் மக்களுங்கூட மத பக்தி உடையவர்களாக இருக்கிறார்கள். எப்படி? தங்களுடைய பக்திக்குரிய ஒன்றாயிருந்த கடவுளுடைய ஸ்தனத்தில் வேறொன்றைக் கொண்டிருப்பதன் மூலம். இதனை ஸ்கட்லாந்து தேசத்தைச் சேர்ந்த 20-வது நூற்றாண்டு நாவல் ஆசிரியர் J. M. பாரி இப்படியாகச் சொன்னார்: “ஒருவர் எதில் அதிக அக்கறையாக இருக்கிறாரோ, அதுவே அவருடைய மதமாக இருக்கிறது.”
இந்தப் பத்திரிகையில் பயன்படுத்தப்படுகிறவிதமாக, தனிப்பட்டவிதத்தில் கொள்ளப்படும் அல்லது ஓர் அமைப்பால் சிபாரிசு செய்யப்படும் மத நோக்குநிலைகள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் ஒரு முறை உட்பட, ஒரு வணக்க முறையாக மதம் விளக்கப்படுகிறது. இது பொதுவாக கடவுள் பேரில் அல்லது பல கடவுட்களில் நம்பிக்கையை உட்படுத்துகிறது; அல்லது இது மனிதரை, பொருட்களை, அல்லது சக்திகளை வணக்க பொருட்களாகப் பாவிக்கிறது.
“மதத்தின் கடந்த கால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்” என்ற பகுதியை நீங்கள் வாசிப்பதில் மகிழ்ச்சி காண்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மதம் நீண்ட காலமாக போராட்டத்தின் ஊற்றாக இருந்துவந்திருப்பதால், “மத வேற்றுமை—அது எப்படி ஆரம்பித்தது,” என்ற பொருளை சிந்திப்பதுடன் ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. (g89 1⁄8)