“நம்முடைய ஒழுக்க நெறிமுறை மிகுதியாகச் சீர்க்குலைந்திருப்பதில் மதம் உட்படுத்தப்படுகிறது”
கொலம்பியாவில் பாரன்குவில்லாவின் எல் ஹெரால்டோ என்ற செய்திப் பத்திரிகையின் இந்தத் தலையங்கம் தன்னில்தானே அதிர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. ஆனால் அதைச் சொன்னது யார் என்பதுதானே அதை அதிக குறிப்பிடத்தக்கக் கூற்றாக்குகிறது—கத்தோலிக்க ஜெஸ்யூட் குரு ஆல்பர்ட்டோ முன்னெரா, ரோமின் கிரெகரியன் பல்கலைக்கழகத்தில் இறைமையியல் அறிஞர். அவர் கொலம்பியாவில் ஏற்பட்டிருக்கும் ஒழுக்க நெறி சீர்க்குலைவு பற்றி குறிப்பிட்டார்.
அவர் சொன்னார்: “கொலம்பியா முழுவதும் இருப்பது கத்தோலிக்க மதத்தினர். நம்முடைய ஒழுக்க நெறிமுறை மிகுதியாகச் சீர்க்குலைந்திருப்பதில் மதம் உட்படுத்தப்படுகிறது என்ற உண்மையை நாம் அசட்டை செய்ய முடியாது. ஓர் இறைமையியல் வல்லுநராக ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்வதாவது: ஒரு [மக்கள்] தொகுதியின் ஒழுக்கநெறியைக் காத்துக்கொள்வதற்கு அல்லது மாறும் ஒரு சகாப்தத்தை மதிப்பான முறையில் எதிர்ப்பட அனுமதிப்பதற்கு, சமுதாயத்தின் முழு அமைப்பும் சீர்க்குலையாமல் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் கடந்துசெல்வதற்குப் போதியளவு அடிப்படைக் கூறுகளைக் கொண்டில்லாததாகத் தென்படும் நம்முடைய கத்தோலிக்க மதத்துக்கு என்ன ஆயிற்று?”
போதை மருந்து கடத்தல்கள், அரசியல் கொலைகள், ஆயுதந்தரித்த வன்முறைச் செயல்கள் உட்பட அரசியல் மற்றும் ஒழுக்கநெறி சீர்க்குலைவுக்கான சான்றுகளை விவரித்தப் பின்பு, அவர் பின்வருமாறு கேட்டார்: “இந்தக் காரியங்களைச் செய்வது யார்? இஸ்லாம் அல்லது புத்த மதத்தைச் சேர்ந்தவர்களா . . . அல்லது மதம் இல்லாத மக்களா? அல்லது மத ஆராதனைகளின்போது இயேசு நாதரின் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளுகிறவர்களும் தங்களுடைய வேலைகளில் தங்களைச் செழிக்கச் செய்ய வேண்டும் என்று நம்முடைய கர்த்தரிடம் ஜெபிக்கும் அந்த மக்களா?”
நிச்சயமாகவே, இயேசுவும் அவருடைய சீஷர்களும் உண்மையான கிறிஸ்தவ மதத்தின் அடையாளமாக மத சடங்குகளில் பங்குகொள்வதையல்ல, ஆனால் கிறிஸ்தவ நடத்தையைத்தான் அழுத்தமாய்க் கூறினார்கள். இயேசு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35, தி ஜெருசலேம் பைபிள்) ஒரு கத்தோலிக்கன் தன்னுடைய உடன் மனிதரைப் பகைப்பது அல்லது கொல்வது அல்லது கொள்ளையடிப்பது, கற்பழிப்பது, பொய்ச்சொல்லுவது அல்லது திருடுவது அல்லது போதை மருந்துகளை வியாபாரம் செய்வது அன்பின் செயலாக இருக்குமா? அல்லது அப்படிப்பட்ட படுமோசமான ஒழுக்கங்கெட்ட நடத்தைக் கூறுகளிலிருந்து தன்னுடைய அணியைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்குச் சர்ச் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பது கிறிஸ்தவ அன்பாக இருக்குமா? உண்மையில், பணக்கார குற்றவாளிகள் கவர்ச்சியான சவ அடக்க சடங்குமுறைகளாலும் மற்ற மத ஆராதனைமுறைகளாலும் கனப்படுத்தப்படுகின்றனர்.
அதற்கு மாறாக, வினைமையான குற்றங்களை இழைத்த மனந்திரும்புதல் காண்பிக்காத பாவிகள் பூர்வ கிறிஸ்தவ சபையில் சிட்சிக்கப்பட்டார்கள். பவுல் அப்போஸ்தலன் இப்படியாக எழுதினான்: “நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடே புசிக்கவுங்கூடாது.” என்றபோதிலும், சர்ச்சிலிருந்து விலக்கப்படுவது என்பது சர்ச்சின் கொள்கைக்கு எதிரான கருத்துகளுக்காக அல்லது நாத்திக அரசியல் காரணங்களுக்காகத் தவிர வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக ஒருவர் கேள்விப்படுவது அரிது.—1 கொரிந்தியர் 5:9–11; 6:9–11.
பைபிள் கல்விக்கும் கிறிஸ்தவ மதத்துக்குரிய புதிய சாயலுக்கும் அல்லது ஆள்தன்மைக்கும் உரிய கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கடந்த நூற்றாண்டுகளில் கத்தோலிக்க சர்ச் ஜெபமாலை உருட்டுவதிலும், பூசைக்குச் செல்லுவதிலும், மதகுருவிடம் பாவ அறிக்கை செய்வதிலுமே திருப்தியைக் கண்டுவந்திருக்கிறது. (எபேசியர் 4:17–24) அதன் பலன் ஒழுக்கநெறி சீர்க்குலைவும், சர்ச்சுக்குரிய ஆதரவு குறைவுபடுவதுமாகும். ஜெஸ்யூட் முன்னெரா கொலம்பியாவில் கத்தோலிக்க சர்ச்சின் நிலைகுறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்: “அப்படிப்பட்ட ஒரு மதத்தைக் கொண்டிருக்கும் நாம் இப்பொழுது வாழும் இந்தச் சூழ்நிலைக்குப் பிரதிபலிப்பது கூடாத காரியம். நம்முடைய கிறிஸ்தவ மதம் இந்தளவுக்குச் சீர்க்குலைந்து காணப்படுவதற்கு . . . [கத்தோலிக்கர்] இன்று எந்தவிதத்திலும் கிறிஸ்தவர்களாக இருப்பதாய்த் தெரியவில்லை என்பது ஓர் அடிப்படைக் காரணமாகும்.”
உண்மைதான், தற்போதைய ஒழுக்கநெறி சீர்க்குலைவு எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பொருந்துகிறது. சர்ச் ஞானஸ்நானத்தையும், திருமணத்தையும், சவ அடக்க ஆராதனையையும் எதிர்பார்க்கும் அநேகர் பொய் சொல்லுவதிலும், திருடுவதிலும், வேசித்தனத்திலும், ஏமாற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் பல குற்றவாளிகள் மத ஈடுபாடுடையவர்களாக—கத்தோலிக்கராக, புராட்டஸ்டன்டினராக, யூதராக உரிமைப்பாராட்டுகின்றனர். என்றபோதிலும் அவர்களுடைய மதம் அவர்களில் ஒரு புதிய ஆள்தன்மையை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டது என்பதை அவர்களுடைய செயல்கள் காண்பிக்கின்றன. அதற்குரிய பழி குற்றவாளியைச் சார்ந்ததாக இருக்கக்கூடும் மற்றும்/அல்லது அவனுடைய சிந்தனை மீதும் நடத்தை மீதும் செல்வாக்குச் செலுத்த தவறிவிட்டிருக்கும் அவனுடைய மதத்தைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். தரத்தைவிட எண்ணிக்கைக்கு இடமளிக்கப்படும் இடத்தில் மதம் அதற்குரிய பலனை அடைந்தே தீரவேண்டும்.
“கடைசி நாட்கள்” குறித்து பவுல் தீர்க்கதரிசனம் உரைத்தது போலவே இருக்கிறது: “பக்தியின் வெளித்தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள்; ஆனால் அதன் உள்ளாற்றலைப் பொருட்படுத்த மாட்டார்கள். இவர்களுடன் சேராதீர்.”—2 தீமோத்தேயு 3:1–5, கத்தோலிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு.
ஜலப்பிரளயத்துக்குப் பின் மதம்
பத்தொன்பதாவது நூற்றாண்டு ஃப்ரெஞ்சு எழுத்தாளர்களான எட்மன்டும் ஜுல்ஸ் டி கான்கார்ட்டும் ஒன்றுசேர்ந்து இப்படியாக எழுதினார்கள்: “கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், நாத்திகம் அவரை மதம் ஏற்படுத்தியிருக்கும் நிந்தையிலும் சற்று குறைவாக நிந்திக்கவேண்டும்.” உண்மை என்னவெனில், பொய் மதம் மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகருக்கு ஒரு நிந்தையாக இருக்கிறது. என்றபோதிலும், அதைப் பொ.ச.மு. 2370-ம் ஆண்டில் அழிப்பதன் மூலம், சிருஷ்டிகர் தாம் என்றுமாக நிந்திக்கப்படுவதற்குத் தம்மை அனுமதிக்கப்போவதில்லை என்பதை நிரூபித்தார்.
பொய் மதம் மீண்டும் தோன்றியபோதிலும் இந்த அடிப்படை உண்மை மாறவில்லை. உண்மை என்னவெனில், ஜலப்பிரளயத்துக்குப் பின்பு, பூமி முழுவதையும் தழுவிக்கொள்வதற்கு நூற்றாண்டுகளினூடே கடந்துவருவதற்காக இது பல உருவை மேற்கொள்ளும் நிலையிலிருந்தது. உங்களையும் பாதிக்க அது சேர்ந்தடையும்! எப்படி என்பதை எமது அடுத்த இதழில் வெளிவரும் “ஒரு வேட்டைக்காரனும், ஒரு கோபுரமும், நீங்களும்!” என்ற எமது கட்டுரை விளக்கிடும். (g89 1⁄8)
[பக்கம் 9-ன் படம்]
மதம் பெரும்பாலும் மேற்போக்கானது. அது இன வேற்றுமையையும், குற்றச்செயலையும், ஒழுக்கக்கேட்டையும் தடை செய்வதில்லை