கண்ணைக்கவரும் வான்வெளிக்காட்சிகள்
தினமும் 80,00,000 காட்சிகள்
முழுவதும் பாதுகாப்பான வகையில், சிறுவர்கள் பட்டங்களைப் பறக்கவிடுகிறார்கள். பெஞ்சமின் ஃப்ராங்ளின் ஒன்றைப் பறக்கவிட்டு அதனால் தன்னைத் தானே கொன்றிருக்கக்கூடும். பிள்ளைகள் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். ஃப்ராங்ளின் ஆபத்தான வாழ்க்கையை நடத்திவந்தார். 1752-ல் அவர் இடியும் மின்னலும் கூடிய ஒரு புயலின்போது பட்டுத்துணியாலான ஒரு பட்டத்தை பறக்கவிட்டு ஒரு சாவியின் வாயிலாக மின்பொறிகளை வரப்பண்ணினார். தீங்கற்ற அந்த மின்பொறிகள் மரணம் விளைவிக்கக்கூடிய ஒரு பெரும் மின்னலுடன் கூடிய இடியாக இருந்திருக்கலாம். மாறாக ஃப்ராங்ளினின் பட்டம் விடுதல் ஒரு சந்தோஷமான முடிவிற்கு வழிநடத்தியது—ஓர் இடிதாங்கியை அவர் உருவமைப்பதற்கு. ஆனால் வெகு காலத்திற்குப் பின்னாரும் மின்னல் தானே ஒரு மர்மமாகத் தொடர்ந்து இருந்தது.
புரிந்துகொள்ளுதலுக்கானப் படிகள் ஒரு நூற்றாண்டுக்கு முன் துவங்கியது, ஆனால் முழுமையான அறிவு இன்னும் கைக்கு எட்டாததாக உள்ளது. மின்னல் ஒரு மேகத்திற்குள்ளோ, ஒரு மேகத்திலிருந்து மற்றொரு மேகத்திற்கோ, அல்லது பூமியிலிருந்து மேகத்திற்கோ ஏற்படலாம். ஆனால் இந்த மின்வெளிப் போக்கைத் (discharge) துவக்க நேர்மின் (positive) மற்றும் எதிர்மின் (negetive) திறன்கள் (charges) எவ்வாறு உருவாகின்றன? கோட்பாடு கூறுவது என்னவென்றால் மழைத்துளிகளும் பனிக்கட்டிகளும், அந்தக் கண்ணைக்கவரும் இடிதலைகளில், நீர் துளிகளின் பனிப்படலத்துடனும், பனிப்படிகங்களுடனும் மோதும்போது அது உருவாகிறது என்பது. இடிதலைகள், பல மைல்கள் உயரத்தில், மேலும் கீழும் வீசும் காற்றால் கொந்தளிக்கும், மேல் நோக்கி எழும்பும் மிகப்பெரிய காலிஃபிளவர்கள் போன்ற மேகங்கள்.
இப்படியான கொந்தளிப்பான நடவடிக்கைகளைப் பற்றி, சையன்டிபிக் அமெரிக்கனில் “இடிமின் புயல்களின் மின் ஊட்டம்” என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை குறிப்பிடுவதாவது: “இந்தக் காரியங்களுக்கு அடிப்படையான நுண்ணியிற்பியல் (microphysics) இந்நாள்வரை கவனிக்கப்படாத மேலும் தீர்க்கப்படாதப் பிரச்னையாக இருக்கிறது. இடிமேகங்களின் மின் சக்தியை புரிந்துகொள்ளுதலில் மிகவும் முக்கிய குறையாக நிலை மின்னூட்டத்தின் (static electrification) துண்ணியற்பியலின் விளக்கம் (microphysical description) இல்லாததாகும்.” ஆனாலும், அந்தக் கட்டுரை நம் கவனத்தைக் கவரும் ஓர் இணையொப்பை அளிக்கிறது: “கம்பள விரிப்பில் நடக்கும்போது எது ஒருவர் காலணிகளை மின்திறனடையச் செய்கிறதோ அல்லது ஒரு கம்பளித்துணியால் தேய்க்கும்போது எது ஒரு கண்ணாடிக்கோலை மின்னாற்றலடையச் செய்கிறதோ அதனுடன் இந்த அடிப்படை இயற்பியலான இயக்கும் செயலமைவுக்கு நிச்சயமாகவே தொடர்பிருக்கலாம்.”
இடிதலைகளிலிருந்து மின்னல் உண்டாவது குறித்து இன்னமும் தர்க்கிக்கப்படுகையில், அது அடிக்கடி நேரிடுகிறது. ரீடர்ஸ் டைஜெஸ்ட் அதனுடைய கட்டுரையில் குறிப்பிட்டதாவது: “இப்பொழுதே, நீங்கள் இதை படித்துக்கொண்டிருக்கும்போது, சுமார் 1800 மின்னாற்றல் மிக்கப் புயல்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டுள்ளன. அவை வினாடிக்கு சுமார் 600 மின்னலின் மின்வெட்டொளிகளை உண்டுபண்ணுகின்றன; இவற்றில் 100 பூமியைத் தாக்குகின்றன. தோரயமாக, ஒவ்வொரு 24 மணிநேரமும், 85 இலட்சம் மின்னல் தாக்குதல்கள் கீழே வந்து சேருகின்றன.” சையன்டிபிக் அமெரிக்கனின் எண்ணிக்கையும் மிகவும் ஒத்திருக்கிறது—80 இலட்சம்.
உண்மையிலேயே மின்னலின் மின்வெட்டொளியானது பின்வரும் சம்பவங்களின் உச்சக்கட்டமாக வருகிறது. ஓர் இடிமேகம் அதன் கீழ் பகுதியில் எதிர்மின் ஆற்றலை (negetive charges) உண்டுபண்ணுகிறது; இது அதன் கீழிருக்கும் பூமியின் மேல்பரப்பில் நேர்மின் ஆற்றலை (positive) தூண்டுகிறது. இந்த நேர்மின் ஆற்றல் மேகத்தின் கீழ் அதைப் பின்தொடர்ந்து, மரங்கள், மலைகள், உயர்வான கட்டிடங்கள், மக்கள் மீதும்கூட ஓடி, மேகத்தின் எதிர்மின் கீழ் பகுதியை எட்டிப்பிடிக்கப் பார்க்கிறது. மேகம் ஒரு 10 கோடி வோல்ட் மின் அழுத்தத்தை எட்டியவுடன்—அது 30 கோடி வோல்டுகள்வரை இருக்கலாம்—அதன் சக்தி படிகள் கொண்ட முன்னோடி (stepped leader) என்றழைக்கப்படும் ஒன்றின் வாயிலாக சிந்தி வெளிவருகிறது. அதன் பாதை ஒழுங்கற்றதாக இருக்கிறது; அதன் கீழ் நோக்கிய ஓட்டத்தின்போது பல கிளைகளை ஏற்படுத்துகிறது.
காட்சி ஆரம்பமாகிறது
மனிதர்கள் பார்ப்பதற்கு மிகவும் மங்கலான ஒளிக்கதிர் கோடுகளாலான வலைவேலைப்பாட்டில் சில நூறு ஆம்பியர்களைத் தாங்கி நிலத்தின் மேற்பரப்புக்கு அருகில்—நூறு கெஜத்திற்குள் அல்லது இன்னும் குறைவாக—முன்னோடி வருகிறது. பூமியின் மீதுள்ள நேர்மின்னூட்டம் இறுதியில் இடைவெளியைத் தாண்டமுடிகிறது. படிகள் கொண்ட முன்னோடியைச் சந்திக்கிறது; பின்னர் ஒரு மாபெரும் ஒளிவீச்சுடன், முன்னோடி வந்த வழியாக பளிச்சென்று விரைந்தோடி மேகத்தை அடைகிறது. அது செல்கையில், அது வெளியே உள்ள வழிகளையும் தவறான திருப்பங்களையும் நிரப்பி, நாம் நன்கு அறிந்துள்ள பளிச்சிட்டெரியும் பல்வழி படிவங்களை—மேகத்திலிருந்து பூமிக்கு வருவதுபோல் தோன்றும், ஆனால் உண்மையிலேயே பூமியிலிருந்து மேகத்திற்கு செல்லும் ஒரு மின்னல் தாக்குதலை—உண்டுபண்ணுகிறது. ஆனால், இந்த ஆரம்ப திடீர் ஒளிவீச்சிற்குப் பிறகு உடனேயே, மின்னலும் முன்னோடியும் மாறிமாறி மேகத்திற்கும் பூமிக்கும் போவதும் திரும்புவதுமாக பயணமாகின்றன. ஒரு சாதாரண மின்னல் ஒளிவீச்சானது அப்படிப்பட்ட மூன்று அல்லது நான்கு தாக்கதிர்வுகளை கொண்டுள்ளது. ஆனால் சையன்டிபிக் அமெரிக்கன் 26 தாக்கதிர்வுகளைக் கொண்ட ஒன்றைப் பற்றி அறிவித்தது.
இயற்கையிலேயே அதிக சத்தமான இடியை மின்னல் பிறப்பிக்கிறது. ஆனால் ஓர் இடி சத்தத்தை உண்டுபண்ணும் மின்னலானது எப்படி பிறகு பல வினாடிகளுக்கு நிலைக்கும், வீழ்வதும், உருளுவதும், கிழிப்பதும், குமுறுவதும் போன்ற ஒலித்தொடரை உண்டாக்குகிறது? மின்னல் இடிமுழக்கத்தை ஏற்படுத்துகிறதென்பதில் ஒரு மர்மமுமில்லை. காற்றுக்கு மின்சாரத்தைத் தடை செய்யும் தன்மை உள்ளபடியால், மின்சாரப் பாய்ச்சலால் கம்பியைப்போல சூடாகிறது. மின்னல் சூழ இருக்கும் காற்றை 50,000 பாகைகள் (degree) பாரென்ஹீட் வரை சூடாக்கி, 10-லிருந்து 100 ஆவியமுக்கங்கள் (atmospheres) வரை அமுக்க அளவுள்ள ஒரு மாபெரும் அதிர்ச்சி அலையாக விரைவாகப் பரவச்செய்கிறது; இது முடிவாக கேட்கக்கூடிய பேரொலியாக—இடியாக—மாறுகிறது. ஒலி ஒளியைவிட மிகவும் மெல்லச் செல்வதால், மின்னலைப் பார்த்த சில வினாடிகளுக்குப் பிறகே இடி வழக்கமாகக் கேட்கப்படுவது மர்மமான ஒன்றுமில்லை.
“சிறிய இடிகள்” பெரிய இடிகளை உண்டுபண்ணுகின்றன
ஆனால் இடியின் ஒலியோசைகள் ஏன் இயல்பாகவே அவ்வளவு வித்தியாசப்படுகின்றன? மின்னல் தாறுமாறானப் போக்கில் செல்லுகிறது; ஆனாலும் வேறுபட்ட நீளத்தையுடைய பாகங்கள் கிட்டத்தட்ட நேராக உள்ளன. இந்தப் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையை நோக்கியுள்ளன, வெவ்வேறு நீளத்தில் உள்ளன, தன் சொந்தத் தனிப்பட்ட ஓசையை எழுப்புகின்றன, கிட்டத்தட்ட அது நோக்கியுள்ள திசைக்கு இசைவாக தன் ஒலி அலைகளை பரவச் செய்கின்றன. ஆகவே, பல தனிப்பட்ட வேறுபடும் சப்தநிலைகளையும் திசைகளையும் கொண்ட “சிறிய இடிகள்” உடையும், குமுறும். மேலும் எதிரொளிக்கும் ஓசைகளைக் கூட்டி நீங்கள் கேட்கும் மாபெரும் நீண்ட ஓர் இடியோசையாக ஒன்று சேருகிறது. எல்லாச் சிறிய இடிகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஒலிக்கப்படுகின்றன, ஆனால் கேட்பவரின் அருகிலுள்ளவை முதலில் கேட்கப்படுகின்றன; மேலும் சப்தமாகவும் ஒலிக்கின்றன; இடியின் மேலே தூரத்திலுள்ள மற்றவை அவற்றின் பங்குகளை பிறகு கூட்டிச் சேர்க்கின்றன—எவ்வளவு நேரத்திற்கு பிறகு என்பது அவை எவ்வளவு தூரத்திலிருக்கின்றன என்பதைப் பொருத்திருக்கிறது. எனவே, “ஓர் இடி முழுக்கத்தில் என்ன கேட்கப்படுகிறதோ, அதை உண்டாக்கிய அந்தக் குறிப்பிட்ட மின்னல் ஒளிவீச்சின் தன்மைகளை பெரிய அளவில் சார்ந்துள்ளது” என்பதாக “இடி” என்றத் தலைப்பு கொண்ட சையன்டிபிக் அமெரிக்கனின் ஒரு கட்டுரை விளக்குகிறது.
மனிதரால் கேட்கப்படும் மற்றும் கேட்கப்படாத வித்தியாசமான இடிகளை உண்டுபண்ணும் பலவிதமான மின்னல் ஒளிவீச்சுகள் உள்ளன. உதாரணமாக, மின்வரி போன்ற வண்ணப்பட்டைகளையுடைய, கவர விட்டுச் செல்லும் உஷ்ணமுண்டாக்கும், படரொளி, மேகத்திற்குள் வரும், இடியேறு, பேரிடியேறு, மின்னல்கள் என்றழைக்கப்படும் மின்னல்களுண்டு. சாதாரண இடியேறுகள் சுமார் 100 கோடி வாட்டுகளை வெளியேற்றுகின்றன, ஆனால் பேரிடியேறுகள், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய மின்னல் ஒளிவீச்சுகள், 10,000 கோடியிலிருந்து 10 இலட்சக் கோடிவரை கொடுக்கக்கூடும்!
மின்னல் சேதம் விளைவிக்கிறது. “ஐ.மா.-களில் மட்டுமே வருடத்திற்கு சுமார் 150 இறப்புகளையும், 2 கோடி டாலர்கள் மதிப்புள்ள சொத்திற்கு தேசத்தையும் விளைவிக்கிறது; மேலும் 3 கோடி டாலர்கள் மதிப்புள்ள விற்பனை செய்யப்படக்கூடிய விறகை அழிக்கும் 10,000 காட்டுத்தீக்களை ஏற்படுத்துகிறது,” என்று சையன்டிபிக் அமெரிக்கன் கூறுகிறது.
மேம்பட்ட உரங்கள், உலகளாவிய மின்கலங்கள்
ஆனால் அது நன்மையும் அளிக்கிறது. உலகம் முழுவதும், எண்பது இலட்சம் மின்னல் தாக்குதல்கள் தினமும் காற்று மண்டலத்தைப் பிளந்து பிரித்து, காற்றை மின்மயத்துகள்களாக்கி (ionizing), வெடியக உயிரகைகளை (nitrogen oxides) உண்டுபண்ணுகிறது; இவை மழைத்தண்ணீரில் கலந்து திட்பம் குறைந்த வெடியக காடியாக (nitric acid) பூமிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு செடிகளுக்கு வேண்டியத் தாதுப்பொருட்களை அது கரைசலில் கரைக்கிறது. மேலும் அது வெடியகத்தை செடிகளுக்கு கிடைக்கச் செய்கிறது. விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் நூறு இலட்சம் டன் கணக்கில் வெடியக உரங்களைச் சேர்க்கிறார்கள்—மண்ணிலுள்ள உயிர் பொருட்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய அளவில் மேலும் வடிந்தோடியப் பிறகு விலங்குகளையும், மற்றும் குளங்கள், ஓடைகள் மற்றும் ஆறுகளிலுள்ள மீன்களையும் கொல்லுகிறது. ஆனால் மின்னலின் மென்மையான “இடிமின் புயலின் மழைத் தண்ணீர்” (காற்று மண்டல) வெடியகத்தை சரியான அளவில் மாற்றிச் சேர்க்கிறது; மேலும் ஒப்பிடுவதற்கென நடந்த சோதனைகளில் அது வியாபாரத்திற்கு வரும் உரங்களை உபயோகித்து கிடைக்கும் பலனைக் காட்டிலும் 50 சதவீதம் அதிக விளைச்சலைக் காட்டியுள்ளது. நியு சையன்டிஸ்ட் சொல்லுகிறது: “மின்னலானது இரண்டு அமெரிக்க வேதியியல் நிபுணர்களின்படி இவ்வுலகில் கிடைக்கக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட வெடியகத்தில் (fixed nitrogen) பாதியளவு வரைக்கும் காரணமாக இருக்கிறது. முன்பு கருதப்பட்ட அளவிற்கு இது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது.”
மேலும், இடி மின் புயல்கள் இந்தப் பூகோள மின் சுற்றுவழியைப் பராமரிக்கும் “மின் கலங்களாக” உள்ளன. அதைக் குறித்து சையன்டிபிக் அமெரிக்கன் சொல்லுகிறது: “எதிர் மின்னூட்டத்தால் நிறைந்த பூமியின் மேற் பரப்பிற்கும் நேர்மின்னூட்டத்தால் நிறைந்த காற்று மண்டலத்திற்கும் இடையே நிலையான மின்னழுத்த வித்தியாசமாக சுமார் 3,00,000 வோல்டுகள் உள்ளன. . . . பூகோள மின்சுற்று வழியின் “மின் கலங்களாகும்.” இடி மின் புயல்களின் மின்னூட்டத்தின் விளைவு 300 கிலோ வோல்ட் ‘மீவளி மண்டல மின்னழுத்தம்’ (ionospheric potential) என்று இப்போது பொதுவாக நம்பப்படுகிறது. ஒரு புயலில் சுமார் ஓர் ஆம்பியர் மின்சாரம் இடி மேகங்களின் நேர்மின் உச்சிகளிலிருந்து மேல் நோக்கி பாய்ந்து, வளிமண்டலத்தின் நேர்த்தியான கால நிலையுள்ளப் பகுதிகளில் பூமிக்குத் திரும்புகிறது . . . (அப்போது) பூமியின் மேற்பரப்பிலிருந்து மேகத்தின் அடித்தளத்திற்கு ஓர் ஆம்பியர் மின்சாரம் பாய வேண்டும். மழையின் மின்சாரப் பாய்ச்சல்கள், கரோணா (corona) மின் உமிழ்வு, மற்றும் மின்னல் ஆகிய அனைத்தும் மின்திறன் மாற்றத்திற்கு (charge transfer) வழிவகுக்கிறது.”
இந்த இடி மின் புயலின் மேதகைமைக்கு இறுதியான மூலக்காரணம் என்ன? ஆச்சரியப்பட வைக்கும் ஒளிவீச்சுகளும் முழங்கும் இடிகளும் கொண்ட ஒளிவீச்சும் இடியுமடங்கியக் கண்களைக் கவரும் வான்வெளிக்காட்சிகளைப் படைத்தவர் யெகோவா தேவன். வேதாகமம் இவற்றை, மனிதவர்க்கத்துடன் அவர் நடத்தும் காரியங்களுக்குப் பக்க இசையாகவும், அவருடையப் பரலோகச் சிங்காசனத்திற்கு அலங்காரமாகவும் வந்துகொண்டிருக்கும் அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்கு முன்னோடியாகவும் அழைக்கிறது. “பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். அதற்குப் பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்.”—யோபு 37:3, 4, 11-13; 40:9; யாத்திராகமம் 19:16; 20:18; சங்கீதம் 18:13, 14; 29:3-9; வெளிப்படுத்துதல் 11:19. (g89 5/22)
[பக்கம் 28, 29-ன் படங்கள்]
அரிசோனாவில் “மழைக்காலத்தில்” மின்னல் காட்சிகள்
[பக்கம் 28, 29-ன் படங்கள்]
கீழே: இரண்டு வெண்ணிற மலர்ச்செடிவகைகள் மின்னலால் நன்கு தெரிகின்றன
எதிர் பக்கத்தில்: மின்னலால் துவக்கப்பட்ட ஒரு நெருப்பு