மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 22: 1900 முதல்பொய் மதம்—அதன் கடந்த காலத்தால் மேற்கொள்ளப்படுகிறது!
“ஒரு தேசத்தின் எதிர்காலத்துக்குத் திறவுகோல் அவளுடைய கடந்தகாலத்தில் இருக்கிறது.” ஆர்தர் பைரன்ட், 20-வது நூற்றாண்டு ஆங்கில சரித்திராசிரியன்
பொய் மத உலகப் பேரரசை பைபிள் மகா பாபிலோன் என்று அழைக்கிறது, அதைப் பண்டைய பாபிலோன் தேசத்துக்கு ஒப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 18:2) அந்தப் பண்டைய பேரரசுக்கு நடந்த காரியத்தைப் பார்க்குமிடத்து, அந்தப் பெயர் தற்காலத்தில் பொருந்துகிறவற்றிற்கு எந்த நன்மையையும் குறிப்பதாய் இல்லை. பொ.ச.மு. 539-ல் ஒரே இரவில் மகா கோரசின் கீழ் இருந்த மேதியர், பெர்சியர் கைகளில் பாபிலோன் வீழ்ந்தது. நகரத்தினூடே பாய்ந்த ஐபிராத்து நதியின் தண்ணீரைத் திருப்பிவிட்டதற்குப் பின்னர் தாக்குதலை நடத்திய சேனை கண்டுபிடிக்கப்படாத வகையில் அந்த ஆற்றின் படுகையின் மீதே முன் செல்ல முடிந்தது.
யெகோவா தேவனும் கோரசைவிட பெரிய ஓர் அரசருமாகிய அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவும் விசுவாசமற்றுப்போன மகா பாபிலோன் மீது அதுபோன்ற வெற்றியைப் பெற்றிடுவர். அவளை சமுத்திரங்கள் மேல் அமர்ந்திருக்கும் மகா வேசி என்று பைபிள் விளக்குகிறது. இது “ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரும்” அவளுக்குக் கொடுக்கும் ஆதரவைக் காண்பிக்கிறது. ஆனால் அழிவுக்கு முன்பு, “ஐபிராத் என்னும் பெரிய நதி” போன்ற இந்த ஆதரவு ‘சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி . . . வற்றிப்போக’ வேண்டும்.—வெளிப்படுத்துதல் 16:12; 17:1, 15.
அப்படிப்பட்ட வற்றிப்போதல் இன்று நடைபெறுகிறது என்பதற்கான அத்தாட்சி பொய் மதத்தை அடையாளங்காண்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.” அவ்விதம் அத்தாட்சி ஏதும் உண்டா?
ஒளிமயமான எதிர்பார்ப்பு மங்குகிறது
20-வது நூற்றாண்டு உதயமானபோது, பூமியில் ஒவ்வொரு மூன்றாவது நபரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவனென உரிமை பாராட்டினான். கிறிஸ்தவமண்டலத்துக்கு எதிர்காலம் மிகவும் ஒளிமயமாயிருந்தது. 1900-ல் சுவிசேஷகரும் நோபல் பரிசு பெற்றவருமான ஜான் R. மோட் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறவராய், இந்தத் தலைமுறையில் உலகத்தை சுவிசேஷமயமாக்குதல் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
ஆனால் “20-வது நூற்றாண்டு இந்த நம்பிக்கைகளிலிருந்து நம்பமுடியாதளவுக்கு வித்தியாசமாய் நிரூபித்தது,” என்று உலக கிறிஸ்தவ என்சைக்ளோபீடியா ஒப்புக்கொள்கிறது. “1900-களிலும் அதைத் தொடர்ந்தும் மதச்சார்பற்ற கொள்கையின் காரணத்தால் மேற்கு ஐரோப்பாவிலும், கம்யூனிசத்தால் ரஷ்யாவிலும் பின்னர் கிழக்கு ஐரோப்பாவிலும், பொருளாசையின் காரணத்தால் அமெரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவ மதத்திலிருந்து மக்கள் பேரளவாய் விலகிச்சென்ற காரியத்தை எவருமே எதிர்பார்க்கவில்லை” என்று விவரிக்கையில் அது சொல்வதாவது, இவையும் மற்ற “போலி மதங்களும்” 1900-களில் ஒரு சிறிய அளவிலிருந்து, உலகின் மக்கள்தொகையில் வெறுமென 0.2%-லிருந்து . . . 1980-களில் 20.8%-ற்கு வளர்ந்தது.”
இந்தப் “பேரளவாய் விலகிச் சென்ற” காரியம் மேற்கத்திய ஐரோப்பாவின் சர்ச்சுகளை ஏறக்குறைய வெறுமையாக்கிவிட்டிருக்கிறது. 1970-களிலிருந்து ஜெர்மானிய குடியரசின் லூதரன் சர்ச் அதன் அங்கத்தினரில் 12 சதவீதத்தை இழந்துவிட்டது. நெதர்லாந்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான சர்ச்சுகள் மூடப்பட்டுவிட்டன, அவற்றில் சில சரக்குக் கிடங்குகளாகவும், உணவகங்களாகவும், குடியிருப்புகளாகவும், டிஸ்கோ சூதாட்ட மையங்களாகவுங்கூட மாற்றப்பட்டுவிட்டன. பிரிட்டனில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒவ்வொரு எட்டாவது ஆங்கிலிக்கன் சர்ச்சும் இப்பொழுது உபயோகத்தில் இல்லை. கடந்த ஆண்டு ஓர் ஐரோப்பிய புராட்டஸ்டன்ட் இறைமையியலர் மற்றும் குருமார்கள் மாநாட்டில் பேசிய ஒரு குருவானவர் “முன்னாள் ‘கிறிஸ்தவ மேற்கு’ இனிமேலும் தன்னைக் கிறிஸ்தவமாக அழைப்பதற்கில்லை. . . . ஐரோப்பா ஒரு மிஷனரிப் பிராந்தியமாகி விட்டது,” என்று குறைபட்டுக்கொண்டதில் ஆச்சரியமில்லை.
என்றபோதிலும், அந்தப் பிரச்னை கிறிஸ்தவமண்டலத்திற்கும் ஐரோப்பாவிற்கும் அப்பால் செல்கிறது. உதாரணமாக, உலகமுழுவதும் புத்தமதம் அறியொணாமைக் கொள்கைக்கு ஆண்டுதோறும் 9,00,000 பேரை இழக்கிறது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஊழியர் குறைபாடு
“ஒரு கிராமத்துக்கு எழுப்புதலளிக்க முதலாவது அதன் குருக்களை எழுப்புங்கள்,” என்று ஒரு ஜப்பானிய முதுமொழி ஆலோசனை அளிக்கிறது. 1983-க்கு முன்பு, உலக முழுவதும் கத்தோலிக்க பாதிரிகளின் எண்ணிக்கை 7 சதவீதமாக சரிந்தது. 15 ஆண்டுகளில், கன்னியாஸ்திரீகளின் எண்ணிக்கை 33 சதவீதமாகக் குறைந்தது. இதற்கிடையில், ஈடுசெய்வதற்கான வாய்ப்பும் இருண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குள், ஐக்கிய மாகாணங்களிலுள்ள கத்தோலிக்க மதப் பயிற்சிக் கூடத்தில் சேருகிறவர்களின் எண்ணிக்கை 48,992-லிருந்து 11,262-ஆக சரிந்தது.
கத்தோலிக்க சமயப் பணிநிலைகளும் இக்கட்டான நிலையில் இருக்கின்றன. ஒரு சமயத்தில் லயோலாவின் இங்னேஷியஸ் என்பவரால் பாரீசில் 1534-ல் துவக்கம் கண்ட இயேசு சங்கம் அநேக நாடுகளில் கல்வியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. ஜெசுவிட்ஸ் என்று பொதுவாக அழைக்கப்பட்ட அதன் அங்கத்தினர்கள் மிஷனரி நடவடிக்கைகளில் முன்னிலையில் இருந்தனர். ஆனால் 1965 முதல் அதன் அங்கத்தினர் எண்ணிக்கை கால் பகுதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது.
மோசமான காரியம் என்னவெனில், ஊழியர்கள் எண்ணிக்கை குறைகிறது, அதிலும் மோசம் அவர்களில் பலர் நம்பிக்கைக்குப் பாத்திரராயில்லை. விவாகமின்றி இருப்பது, பிறப்புக் கட்டுப்பாடு, மற்றும் மதத்தில் பெண்கள் வகிக்கும் இடம் போன்றவற்றின் பேரில் சர்ச்சின் அதிகார கொள்கையை எதிர்த்திடும் மதகுருக்கள் மற்றும் கன்னியாஸ்திரீகளின் எண்ணிக்கை கூடுகிறது. இது 1989-ல் 163 ஐரோப்பிய கத்தோலிக்க இறைமையியலர் ஒரு பொது அறிக்கையை வெளியிட்டதில் தெளிவாக இருக்கிறது—மே 1 போல் அது 500-க்கும் அதிகமானவர்களால் கையொப்பம் இடப்பட்டது—அது வத்திக்கனின் சுய அதிகாரத்தையும் அதிகார துர்ப்பிரயோகத்தையும் குற்றப்படுத்தியது.
இலட்சக்கணக்கான கிறிஸ்தவமண்டல அங்கத்தினர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்த நிலைக்குள்ளாகி இருக்கிறார்கள், ஆவிக்குரிய ஊட்டமின்றி இருக்கிறார்கள். ஓர் ஐ.மா. சர்ச் உறுப்பினர் இப்படியாக முறையிட்ட போது இதை ஒப்புக்கொண்டார்: “சர்ச் போக வர இருப்பவர்களுக்கு ஒன்றுக்கும் உதவாத உணவை அளிக்கும் ஒரு சிறப்பு அங்காடியாக இருக்கிறது. பாதிரியின் பிரசங்கம் கடமை என்ற சிறப்புத் தள்ளுபடியில் அளிக்கப்படும் ‘அந்த வாரத்துக்குரிய விசேஷம்’ விட சற்றே அதிகம்.”
1965 முதல், ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஐந்து முக்கிய புராட்டஸ்டன்ட் மத பிரிவினரின் உறுப்பினர் நிலை ஏறக்குறைய 20 சதவீதத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை வேதப் பள்ளி உறுப்பினர் நிலை 50 சதவீதமாகவும் குறைந்துவிட்டது. “பரம்பரையாக இருந்துவந்திருக்கும் அவர்களுடைய பிரிவுகள் தங்கள் செய்தியைத் தெளிவாக எடுத்துரைப்பதில் தோல்வி கண்டிருப்பது மட்டுமின்றி, செய்தி என்ன என்பது குறித்தும் அவர்கள் நிச்சயமற்றவர்களாய் இருக்கிறார்கள்,” என்று டைம் பத்திரிகை எழுதுகிறது. இப்படிப்பட்ட ஆவிக்குரிய பஞ்சத்தை நோக்கும்போது, சில சர்ச்சுகள் பிரசுரங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டிருப்பதில் சிறிதேனும் ஆச்சரியமில்லை. 1970-களிலேயே அவற்றில் ஒன்று இப்படியாகப் புலம்பியது: “பொது சர்ச் பத்திரிகையின் சகாப்தம் . . . கடந்துவிட்டது.”
அசட்டையும் செவிகொடுக்க மனமில்லாததுமான ஒரு மந்தை
“அசட்டை மனப்பான்மையைவிட மதத்துக்கு அதிக ஆபத்தான ஒன்று இருக்க முடியாது” என்று 18-வது நூற்றாண்டில் ஆங்கில அரசியல் நிபுணர் எட்மண்டு பர்க் உணர்ந்தார். இன்று அவர் உயிரோடு இருந்தால், அசட்டை மனப்பான்மையுடைய மதவிசுவாசிகளை ஏராளமாகக் காண்பார்.
உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி காணப்பட்ட போது, தங்களுடைய பாதிரிகள் தங்கள் விசுவாசத்தைப் பற்றி சர்ச்சை சாராதவர்களிடத்தில் பேசும்படி சொன்னால் தாங்கள் பேசமாட்டார்கள் என்று ஐக்கிய மாகாணங்களிலுள்ள லூதரன்களில் 44 சதவீதத்தினர் சொன்னார்கள். ஐ.மா.-வின் கத்தோலிக்கரில் முக்கால் பகுதியினருக்கும் அதிகமானவர்கள் போப்புக்கு இணங்காதவர்களாக, ஒழுக்கப் பிரச்னைகளிலுங்கூட இணக்கம் தெரிவிக்காதவர்களாக இருப்பது அவர்களை ஒரு நல்ல கத்தோலிக்கராயிருப்பதில் தகுதியற்றவர்களாக்குவதில்லை என்று அதிக அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு காண்பித்தது.
ஜப்பானில், மதபக்தியுள்ளவர்களாக இருப்பது முக்கியம் என்று அதன் மக்கள் தொகயில் 79 சதவீதத்தினர் கூறுகின்றனர். ஆனால், நவீன நாளைய மனிதனின் மதங்கள் என்ற நூலின்படி, மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே மதத்தை அப்பியாசிக்கிறார்கள், அநேகர் அதைத் தொடரும் விஷயத்தில் அதிக அசட்டையாக இருக்கின்றனர் என்பது தெளிவாக இருக்கிறது.
மதத்தை வேண்டாவெறுப்புடன் கொண்டிருப்பவர்கள் பொதுவாக வைராக்கியமுள்ள மற்றும் நல்லவிதத்தில் பிரதிபலிக்கும் பிள்ளைகளைக் கொண்டிருப்பதில்லை. ஜெர்மனியில், பான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளநூல் நிறுவனத்தின் இயக்குநர் 11 முதல் 16 வயதுடையவர்கள் பேரில் செய்த ஓர் ஆய்வின்படி, தங்களுடைய நடத்தையை அமைத்துக்கொள்வதற்கு மாதிரியாக அமையும் ஆட்களுக்காகவே இளைஞர் தேடுகின்றனர் என்பது முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிக தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுடைய முன்மாதிரிகளாக இருப்பது யார் என்று கேட்கப்படுகையில், அவர்கள் சர்ச் பாதிரிகளைத் தங்களுடைய முன்மாதிரிகள் என்று ஒருமுறைகூட சொல்லத் தவறினர்.
அரசியல் செல்வாக்கு தேய்கிறது
ஒழுங்கமைக்கப்பட்ட மதம் ஒருகாலத்திலிருந்தது போல அரசியல் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இனிமேலும் இல்லை. உதாரணமாக, வத்திக்கன், பெரிய கத்தோலிக்க நாடுகளிலுங்கூட, கருச்சிதைவு, விவாகரத்து, மற்றும் வணக்கச் சுயாதீனம் ஆகியவற்றில் தன்னுடைய விருப்பத்துக்கு எதிராகவே, சட்டங்கள் நிறைவேற்றுவதைத் தடை செய்ய முடியாதிருந்திருக்கிறது. அதுபோல, கத்தோலிக்க மதத்தை இத்தாலியின் ஸ்தபிக்கப்பட்ட மதம் என்ற அதன் அந்தஸ்தைப் பறித்துப்போட 1984 உடன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவிக்க சூழ்நிலைகள் அதை வற்புறுத்தியது!
பொய்மதம் தந்திரமான அரசியல் அழுத்தத்தினால் நிறைவேற்ற நினைத்த காரியத்தை இப்பொழுது தென் ஆப்பிரிக்காவின் ஆங்கிலிக்கன் தலைமை பிஷப் டெல்மண்டு டுடூ போன்ற அதன் பிரபல குருமார்களின் தலைமையின் கீழ் பொது புரட்சி இயக்கங்கள் மூலம் சாதிக்க முயலுகிறது.
ஒன்றுபட்டால் நிற்கிறோம், இரண்டுபட்டால் விழுகிறோம்
ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்கில் புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் சங்கத்தின் 1910-ம் ஆண்டு மாநாடு நவீன நாளைய எக்குமெனிக்கல் இயக்கத்தைப் பிறப்பித்தது. மத ஒற்றுமையும் பரஸ்பர உணர்வும் வளர்ந்திடுவதற்கு, “கிறிஸ்தவ மதம்” ஒரே குரலில் பேசுவதை அனுமதிப்பதற்கு ஒரு முயற்சியாக இந்த இயக்கம் அண்மையில் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.
எக்குமெனிக்கல் இயக்கம் பல உருவில் செயல்படுகிறது. 1948-ல் ஆம்ஸ்டர்டாமில் ஒரு குறிப்பிடத்தக்க படி எடுக்கப்பட்டது, அப்பொழுதுதான் உலக சர்ச்சுகளின் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. முதலில் 150 புராட்டஸ்டன்ட், ஆங்கிலிக்கன் மற்றும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளால் ஆன இந்தக் கவுன்சில் இப்பொழுது இரட்டிப்பான அங்கத்தினர் எண்ணிக்கையைக் கொண்டிருப்பதாக பெருமைப்பாராட்டுகிறது.
உலக சர்ச்சுகளின் கவுன்சிலின் ஓர் உறுப்பாக இல்லாதிருப்பினும் ரோமன் கத்தோலிக்க சர்ச் அந்த நிலைக்கு மெதுவாக அடியெடுத்து வைக்கிறது. 1984-ல் கவுன்சிலின் சுவிஸ் தலைமையகத்தில், எக்குமெனிக்கல் பிரார்த்தனைக் கூட்டத்தைத் தலைமைத் தாங்குவதில் ஓய்வுபெறும் கவுன்சிலின் பொது செயலாளரைப் போப் ஜான் பால் சேர்ந்துகொண்டார். மே 1989-ல், “மத சீர்திருத்தம் முதல் நடைபெற்ற எக்குமெனிக்கல் நிகழ்ச்சியில் மிகப் பெரிய நிகழ்ச்சி” என்று ஒரு செய்தித்தாள் குறிப்பிட்ட சுவிட்ஸர்லாந்திலுள்ள பேசிலில் கூடிய 700 ஐரோப்பிய சர்ச் அங்கத்தினரில் கத்தோலிக்கரும் இருந்தனர்.
1930-களின் இடைப்பகுதி முதல் இணங்கிச்செல்வதற்கான இந்த மனவிருப்பம் அதிகமாக தெரிவிக்கப்பட்டுவருகிறதற்குக் காரணம், “கிறிஸ்தவர்கள்” அனைவருமே கடவுள் கொடுத்திருக்கும் ஐக்கியத்தை இயல்பாகவே பெற்றிருக்கின்றனர் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இயல்பான ஐக்கியத்துக்கு “அத்தாட்சியாக, அவர்கள் அனைவருமே “இயேசு கிறிஸ்துவைக் கடவுளாகவும் இரட்சகராகவும்” நோக்குகிற திரித்துவ கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பதாக உலக சர்ச்சுகளின் கவுன்சில் அறிவுறுத்துகிறது.
கிறிஸ்தவமண்டலம் கிறிஸ்தவமல்லாத மதங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மத என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறபடி, “ஒரே மதவிசுவாசம் தானே சத்தியமாக இருந்தால் மற்ற எந்த மதவிசுவாசங்களும் இருப்பதற்கு உரிமை இல்லை என்பதைக் குறிப்பிடும் இறைமையியல் பேரரசாட்சியின் நோக்குநிலைக்கும், ஒரு பிரச்னையாக ஆக்குமளவுக்கு மத விசுவாசங்களுக்கிடையே போதியளவு வித்தியாசங்கள் இல்லை என்பதையும் அவை அனைத்தையும் சேர்த்து எதிர்காலத்துக்கு ஒரு புதிய மத விசுவாசத்தை உண்டாக்கக்கூடும் என்பதையும் குறிக்கும் ஓர் ஒப்புரவாதத்துக்கும் இடையே” செயல்படக்கூடிய ஓர் உடன்பாட்டைக் காண்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது.
உண்மையில், பொய் மதம் அநேக இழைகளாலான ஒரு கயிறு போன்றது, அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான திசைகளில் இழுக்கின்றன. இது அழிவுக்கு ஓர் அறிகுறியாக இருக்கிறது, ஏனென்றால் இயேசுவின் வார்த்தைகள் இதுவரை தவறென நிரூபிக்கப்படவில்லை: “தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.”—மத்தேயு 12:25.
உண்மையை ஏற்று பொய்யை மறுத்துவிடுங்கள்!
சிலர் அத்தாட்சியை அசட்டை செய்ய விரும்பலாம். ஆனால் ஆதாரமற்ற நம்பிக்கை ஆபத்தானது. “காரியங்கள் தானாகவே மேன்மையடைந்துவிடும் என்ற நம்பிக்கையில் சர்ச்சுகள் ஒரு தலைமுறைக்கும் அதிமாக இருந்துவிட்டது,” என்று அக்டோபர் 1988-ல் லண்டன் தி டைம்ஸ் குறிப்பிட்டது. அது தொடர்ந்து கூறியது: “பிரிட்டனில் சர்ச்சின் அங்கத்தினர் எண்ணிக்கை நீண்ட காலமாக மெதுமெதுவாய்க் குறைந்துவந்த போதிலும், அதற்கு விளக்கமளிக்க அல்லது அந்தப் போக்கை மாற்றிட அல்லது அதற்கேற்ப செயல்திற நுட்பங்களை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்த முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை.” அது தர்கரீதியான ஒரு முடிவுக்கு வந்தது: “தன்னுடைய வியாபாரம் தொடர்ச்சியாகக் குறைந்துவருவதைக் காணும் எந்த ஒரு வர்த்தக அமைப்பும் தன்னை முழு அழிவுக்குத் தயாராக்கிக்கொள்ளும், அல்லது அதன் உற்பத்தித் தரத்தையும் விற்பனையையும் முன்னேற்றுவிக்கப் படிகளை மேற்கொள்ளும்.”
பொய் மதம் தன்னுடைய “உற்பத்தித் தரத்தையும் விற்பனையையும் முன்னேற்றுவிக்கப் படிகளை மேற்கொள்ளும்” என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. தேவ பயமுள்ள ஆட்கள் நம்பிக்கை கொள்வதற்கு ஒரே ஆதாரம், அவர்கள் ஒரே உண்மையான மதத்திடமாகத் திரும்புவதாகும்; அவர்களுடைய ஆவிக்குரிய தண்ணீர் கொண்ட நல்ல ஓட்டமுடைய ஆறுகள் வறண்டு போகும் ஆபத்தில் இல்லை. “கணக்குத் தீர்ப்பதற்கான காலம் சமீபமாய் இருக்கிறது.” அந்தக் கட்டுரை எமது அடுத்த இதழில் வரும்போது அதிகமாய்த் தெரிந்துகொள்ளுங்கள். (g89 11/22)
[பக்கம் 24-ன் பெட்டி]
யெகோவாவின் சாட்சிகள்: அவர்களுடைய தண்ணீர்கள் வற்றுகிறதில்லை
“பாரம்பரியமாக இருந்துவந்திருக்கும் மதங்கள் மெதுவாக சரிந்துகொண்டிருக்க, அவற்றின் சர்ச்சுகளும் ஆலயங்களும் எப்பொழுதுமே காலியாகிக்கொண்டிருக்க, யெகோவாவின் சாட்சிகள் கூடுதல் அங்கத்தினர் எண்ணிக்கையை அனுபவித்துவருவதோடு, தங்களுடைய புதிய அங்கத்தினர்களைக் கூட்டிச்சேர்ப்பதற்காக முன்னாள் சர்ச் கட்டிடங்களையும் புதிய இடங்களையும் வாங்கி வருகிறார்கள்.”—லே பெடிட் ஜர்னல், கானடா தேசத்து செய்தித்தாள்.
“இத்தாலியில் ஏறக்குறைய 45 ஆயிரம் பேர் இருக்கின்றனர் . . . இன்று இந்த மதப் பிரிவினர் அருமையான, அக்கறை தூண்டும் உண்மையான பத்திரிகைகளைக் கொண்டிருக்கின்றனர் (அவை உலக முழுவதுமிருந்து செய்திகளும் கட்டுரைகளும் நிரம்பியவை), சரியான காலத்திற்குரியதும் சிறந்த நிபுணர்களாயிருக்கும் கத்தோலிக்க பைபிள் அறிஞர்களுக்கும் விடைகளைக் கொண்டிருப்பதுமாகிய சிறிய புத்தகங்களை அச்சிடுகிறார்கள், எபிரெய மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கும் பைபிள்களை விநியோகிக்கிறார்கள் . . . இந்த முறைகளைப் பின்பற்றுவதில் அவர்கள் மாபெரும் வெற்றியைக் கண்டிருக்கின்றனர்.”—ஃபேமிக்லியா மெசே, இத்தாலிய கத்தோலிக்க பத்திரிகை (1975-ல் எழுதப்பட்டது; ஏப்ரல் 1989-க்குள் இத்தாலியில் யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை 1,69,646-ஆக வளர்ந்திருக்கிறது.)
“[யெகோவாவின் சாட்சிகள்] நூற்றுக்கணக்கானோரை முழுக்காட்டுகிறார்கள், நாமோ இரண்டு, மூன்று பேரை முழுக்காட்டுகிறோம்.”—தி இவான்ஜலிஸ்ட், சுவிசேஷ துண்டுப்பிரதி விநியோகிப்போரின் அதிகாரப்பூர்வமான கருவி. (இப்படியாகச் சொல்லப்பட்ட சமயத்தில், 1962-ல், யெகோவாவின் சாட்சிகள் 69,649 பேருக்கு முழுக்காட்டுதல் கொடுத்தார்கள், 1988-ல் புதிதாக முழுக்காட்டுதல் பெற்ற சாட்சிகளின் எண்ணிக்கை 2,39,268-ஆக இருந்தது.)
“1962-ல் நான் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டு, இந்த முடிவுக்கு வந்தேன்: ‘புதிய உலக சங்கம் திடீரென ஆவியிழந்து போய்விடும் என்பது சந்தேகத்துக்குரியது.’ . . . இன்று [1979-ல்] அப்பொழுது இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாக சாட்சிகள் இருக்கின்றனர். அடுத்த பத்தாண்டில் காவற்கோபுர சங்கம் அநேகமாக அளவில் இரட்டிப்பாகிவிடும் என்று எல்லா அறிகுறிகளும் குறிப்பாய்க் காண்பிக்கின்றன.”—யு.எஸ். கத்தோலிக்-ல் வில்லியம் J. வேலன். (1962-ல் இருந்த 9,89,192 சாட்சிகள் 1988-ல் 35,92,654-ஆக அதிகரித்திருக்கின்றனர்.)
1970 முதல் ஜெர்மன் குடியரசு (மற்றும் மேற்கு பெர்லின்)-ல் யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில், நெதர்லாந்திலுள்ள யெகோவாவின் சட்சிகளுடைய சபைகள் 161-லிருந்து 317-ஆக அதிகரித்திருக்கின்றன, பிரிட்டனில் 825-லிருந்து 1,257-ஆக கூடியிருக்கின்றன, இது இரண்டு நாடுகளிலுமே அநேக புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுவதைத் தேவைப்படுத்தியது.—“ஒளிமயமான எதிர்பார்ப்பு மங்குகிறது” என்ற உபதலைப்பின் கீழ் மூன்றாவது பத்தியை ஒப்பிடவும்.
[பக்கம் 25-ன் படம்]
இன்றைய உலகின் இடிபிடியில் மதம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை