முதல் பார்வையில் பிறக்கும் பாசம் பின்னர் என்றென்றுமாக!
“குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பார்ப்பீர்களானால், அவர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதையும், தங்கள் சூழலுக்கு இசைவாகத் தங்களை அமைத்துக்கொண்டவர்களாயும் இருக்கிறார்கள். தங்களுடைய தாய்மார்களுக்கு நன்கு பிரதிபலிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சப்தங்கள் வரும் பக்கமாய்த் திரும்புகிறார்கள். தங்கள் தாயின் முகத்தை அசையாது பார்த்துக் கொள்கிறார்கள்,” என நியூ யார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மருத்துவக் கல்லூரி மருத்துவர் சிசிலியா மெக்கார்டன் குறிப்பிடுகிறார். தாய் தன் குழந்தையின் கண்களோடு தன் கண்களைக் கலக்கிறாள். இதுதான் முதல் பார்வையில் பிறக்கும் பாசம்—இருவருக்குமே!
தாய் சேயின் உணர்ச்சிகளை மந்தப்படுத்தும் மருந்துகளின்றி, பிறப்பு இயல்பான ஒன்றாய் இருக்குமானால், தாய்க்கும் சேய்க்கும் இடையே ஏற்படும் இந்தப் பிணைப்பும் இயல்பாக அமைகிறது. அவனுடைய அழுகை பால் சுரப்பதைப் பெருக்குகிறது. அவனுடைய தோல் தாயின் தோலைத் தொடுவதுதானே குழந்தை பிறப்புக்குப் பின்னர் தொடரும் இரத்தப்போக்கைக் குறைத்திடும் இயக்குநீரைச் சுரக்கிறது. தாயோடு இருக்கும் நெருக்கத்தை உறுதிப்படுத்துவதற்குரிய செயல்திட்டங்களையுடைய மூளையுடன் பிள்ளை பிறக்கிறது—அழுவதும், தாய்ப்பால்குடிப்பதும், மழலைகளும் சிரிப்புகளும், புன்முறுவல்களும், மிகுந்த மகிழ்ச்சியுடன் உதைப்பதும் தாயின் கவனங்களை கவர்ந்திழுப்பதற்கே. குழந்தை தாயுடன் நெருங்கி பாசமாயிருப்பது அன்பு, கவனிப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வை வளர்த்திட உதவுகிறது. தகப்பன் மிக வேகமாக நெருங்கியிருக்கும் ஒரு முக்கிய நபராக ஆகிறார். அவருடைய உறவு தாயின் நெருக்கத்திற்கு ஈடாக இல்லாதிருப்பினும், அது ஒரு முக்கிய கோணத்தை எட்டுகிறது: விரலால் குத்தி சிரிக்க வைப்பது, மெய்க்கூச்ச உணர்வூட்டுவது, மென்மையாகவும் சற்று முரடாகவும் விளையாடுவது போன்றவற்றிற்குக் குழந்தை கிளர்ச்சியுற்று சத்தம்போட்டு சிரிப்பதும், சுழல்வதுமாக பிரதிபலிக்கிறது.
பிறந்த குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது ஒரு போஷாக்கு போன்றது என்று டாக்டர் ரிச்சர்ட் ரெஸ்டாக் அறிக்கை செய்கிறார். “பொதுவாக பிறந்த குழந்தைக்கு உணவும் பிராணவாயுவும் எவ்வளவு அவசியமோ, அவ்வளவாகத் தொடுவதும் அவசியம். தாய் குழந்தையை ஏந்திட கைகளை விரிக்கிறாள், அணைத்துப் பிடிக்கிறாள், இப்படியாக உள-உயிரியல் சார்ந்த ஏராளமான செயல்முறைகள் ஓர் ஒத்திசைவுக்குக் கொண்டுவரப்படுகிறது.” இந்தச் சிகிச்சை முறையில் உடலின் மூளையுங்கூட “வித்தியாசமான ஓர் உளஅதிர்வு பண்பியல்பைப் பெறுகிறது.”
இணைப்பு துண்டிக்கப்படுவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
தாய்க்கும் சேய்க்கும் இடையிலான இந்தப் பாச பந்தம் பிறப்பின்போது உண்டாகாவிட்டால், எதிரில் ஆபத்து இருக்கிறது என்று சிலர் குறிப்பிட்டிருக்கின்றனர். அவ்விதம் இல்லை. அன்பான தாய்மையில் அந்தப் பாச பந்தத்தைப் பாதுகாப்பாக வைத்திட நூற்றுக்கணக்கான நெருங்கிய சமயங்கள் உண்டு. என்றபோதிலும் அவ்விதமான நெருங்கிய தொடர்புகள் மறுக்கப்படுவது அதிக காலத்துக்குத் தொடருவது மோசமான விளைவுகளுக்கு வழிநடத்தக்கூடும். “நம்முடைய வாழ்நாட்காலமுழுவதும் நம்மெல்லாருக்கும் ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக இருக்கின்றபோதிலும், அந்தத் தேவை முதல் ஆண்டில் அத்தியாவசியமாயிருக்கிறது. ஒரு குழந்தைக்கு வெளிச்சத்தை, மனித முகத்தை உற்றுப் பார்ப்பதற்கான வாய்ப்பை, தொட்டு, தூக்கியணைத்து, கொஞ்சி, விளையாடி, செல்லம் காண்பிப்பதை அந்தக் குழந்தைக்கு மறுத்துப்பாருங்கள்—அந்தக் குழந்தை அவ்விதமாக ஒதுக்கப்படுவதைத் தாங்கிட முடியாது,” என டாக்டர் ரெஸ்டாக் நமக்குச் சொல்கிறார்.
குழந்தைகள் பல காரணங்களுக்கு அழுகின்றன. பொதுவாக அவர்கள் பிறர் கவனத்திற்கு ஏங்குகின்றனர். அவர்களுடைய அழுகை சற்று நேரத்திற்குக் கவனிக்கப்படாதிருக்குமாயின், அவர்கள் அழுகையை நிறுத்திவிடக்கூடும். தங்களைக் கவனிப்பவர்கள் பிரதிபலிப்பதில்லை என்று உணருகின்றனர். மறுபடியும் அழுகின்றனர். அப்படியும் கவனிப்பு கிடைக்காமலிருந்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாக, பாதுகாப்பற்றவர்களாக உணருகின்றனர். இன்னும் பலமாக அழுகின்றனர். இது நீடிக்குமானால், மீண்டும் மீண்டும் இவ்விதமே நிகழுமானால், குழந்தை கைவிடப்பட்டதாக உணருகிறது. அது முதலில் கோபப்படுகிறது, மூர்க்கமடைகிறது, கடைசியில் கைவிடுகிறது. துண்டிப்பு ஏற்படுகிறது. அன்பு கிடைக்கப்பெறாமல், அது அன்பு செலுத்தக் கற்றுக்கொள்வதில்லை. மனச்சாட்சியில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. அது யாரையும் நம்புவதில்லை, யாருக்கும் கவலைப்படுவதில்லை. அது ஒரு பிரச்னையான பிள்ளையாக ஆகிறது, மிக மோசமான நிலைகளில், குற்றச்செயல்களைக் கண்டு வேதனையுணர்வு கொள்ளமுடியாத மனநிலைதிரிந்த ஒரு நபராக ஆகிறது.
முதல் பார்வையில் பிறக்கும் பாசம் அதோடு முடிந்துவிடுவதில்லை. அது பின்னர் என்றென்றுமாகத் தொடர வேண்டும். சொல்லில் மட்டும் அல்ல, செயல்களிலுங்கூட. “வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.” (1 யோவான் 3:18) ஏராளமான கொஞ்சல்களும் முத்தங்களும். காலம் வெகுவாகக் கடந்துவிடுவதற்கு முன்பு சிறுபிராயத்திலிருந்தே கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் உண்மையான மதிப்பீடுகளில் கற்பித்துப் போதித்தருளவேண்டும். அவ்விதம் செய்யும்போது, “ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவன்,” என்பது தீமோத்தேயுவின் காரியத்தில் உண்மையாயிருந்ததுபோல உங்கள் பிள்ளைகளுடைய காரியத்திலும் இருக்கும். (2 தீமோத்தேயு 3:15) பிள்ளைப் பருவத்திலும், பருவவயது காலத்திலும் அவர்களோடு நாள்தோறும் நேரம் செலவழியுங்கள். “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேச” வேண்டும்.—உபாகமம் 6:6, 7.
‘நாங்கள் அழக்கூடும், ஆனால் நல்லதுக்கே’
சிட்சிப்பு என்பது பலருக்குப் பிடிக்காத காரியமாக இருக்கிறது. என்றபோதிலும், அது சரியான விதத்தில் அளிக்கப்படும்போது, பெற்றோர் காண்பிக்கும் அன்பின் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறது. இதை ஒரு சிறுமி ஒப்புக்கொண்டாள். அவள் தன் தாய்க்கு ஓர் அட்டையை ஆயத்தப்படுத்தினாள். அதில் “அம்மாவுக்கு, ஓர் அருமையான பெண்மணிக்கு,” என்று எழுதியிருந்தாள். அதில் பொன்வண்ண சூரியனும், பறந்துகொண்டிருக்கும் பறவைகளும், சிவப்புப் பூக்களும் வண்ணம்கொண்டு வரையப்பட்டிருந்தன. அந்த அட்டை மடல் இப்படியாக வாசித்தது: “இது உங்களுக்கு, ஏனென்றால் நாங்கள் எல்லாருமே உங்களை நேசிக்கிறோம். ஓர் அட்டை மடலைத் தயாரித்து எங்கள் போற்றுதலைத் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் மதிப்பெண்கள் குறைவாக இருக்கும்போது, எங்கள் மதிப்பெண் அட்டையில் நீங்கள் கையொப்பம் போடுகிறீர்கள். நாங்கள் கெட்டவர்களாக இருக்கும்போது, எங்களை அடிக்கிறீர்கள். நாங்கள் அழக்கூடும், ஆனால் அது நல்லதுக்கே என்பது எங்களுக்குத் தெரியும் . . . நான் சொல்ல விரும்புவதெல்லாம், நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். எனக்காகச் செய்யும் எல்லாவற்றிற்கும் நன்றி. அன்பும் முத்தங்களும். [கையொப்பம்] மீஷெல்.”
மீஷெல் நீதிமொழிகள் 13:24-ஐ ஒப்புக்கொள்ளுகிறாள்: “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.” அதிகாரத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரம்பைப் பயன்படுத்துவது பிட்டத்தில் ஓர் அடி கொடுப்பதை உட்படுத்தக்கூடும், ஆனால் அநேக சமயங்களில் அதை உட்படுத்துவதில்லை. வித்தியாசமான பிள்ளைகள், தவறான நடத்தையில் வித்தியாசங்கள், வித்தியாசமான சிட்சிப்பை உட்படுத்துகிறது. தயவான கடிந்துரை அல்லது கண்டிப்பு போதுமானதாக இருக்கக்கூடும்; பிடிவாதம் பலமான மருந்தைத் தேவைப்படுத்தலாம். “மூடனை நூறடி அடிப்பதைப் பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.” (நீதிமொழிகள் 17:10) மேலும் பொருத்தமாயிருப்பது: “அடிமையானவன் [அல்லது, ஒரு பிள்ளை] வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான்.”—நீதிமொழிகள் 29:19.
பைபிளில் “சிட்சை” என்ற சொல் போதித்தல், பயிற்றுவித்தல், நல்வழிப்படுத்துதல்—நடத்தையைத் திருத்திட ஒருவேளை பிட்டத்தில் அடிப்பதையும் உட்படுத்துகிறது. எபிரெயர் 12:11 அதன் நோக்கத்தைக் காண்பிக்கிறது: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” தங்களுடைய சிட்சிப்பில் பெற்றோர், அளவுக்கு மிஞ்சி கடுமையாக இருக்கக்கூடாது: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.” (கொலோசெயர் 3:21) அதேசமயத்தில் அவர்கள் மனம்போன போக்கில் சென்றிட அளவுக்கு மிஞ்சியும் இடங்கொடுத்துவிடக்கூடாது: “பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுவான்.” (நீதிமொழிகள் 29:15) மனம்போகும் போக்கு, ‘உன் இஷ்டப்படி செய்; என்னைத் தொந்தரவு செய்யாதே,’ என்று சொல்கிறது. சிட்சை சொல்லுகிறது, ‘சரியானதைச் செய்; நான் உன்னில் அக்கறையாய் இருக்கிறேன்.’
யு.எஸ்.நியூஸ் அன்ட் உவோர்ல்ட் ரிப்போர்ட், ஆகஸ்ட் 7, 1989, சரியாகவே சொன்னது: “கடுமையாக தண்டிக்காத பெற்றோர், ஆனால் உறுதியான எல்லைக்கோடுகளை அமைத்து அவற்றை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கும் பெற்றோர் பெரும் சாதனைகளைப் படைப்பவர்களும் மற்றவர்களோடு நன்றாக இணங்கிச் செல்பவர்களாகவும் இருக்கும் பிள்ளைகளை உருவாக்கும் சாத்தியம் அதிகமாயிருக்கிறது.” அதன் முடிவில் அந்தக் கட்டுரை பின்வருமாறு குறிப்பிட்டது: “அனைத்து அறிவியல் புள்ளிவிவரத்திலிருந்தும் உண்டாகும் மிகவும் குறிப்பிடத்தக்க பொருள், ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு, நம்பிக்கை மற்றும் ஏற்கப்படுகிற வரம்புகளின் ஒரு திட்டமைப்பை நிலைப்படுத்துவதே முக்கியம், நிறைய நுட்பமான விவரங்கள் அல்ல. சீஷன் என்ற சொல்லுக்குரிய அதே இலத்தீன் வேர்ச்சொல்லைக் கொண்டிருக்கும் சிட்சையின் உண்மையான நோக்கம், அடங்காத பிள்ளைகளைத் தண்டிப்பது அல்ல, ஆனால் உள் அடக்கத்தை அவர்களில் பண்படுத்த அவர்களுக்குக் கற்பிப்பதும், வழிநடத்துவதும், உதவி செய்வதுமாகும்.”
நீங்கள் சொல்லுவதைக் கேட்கிறார்கள், நீங்கள் செய்வதைப் பின்பற்றுகிறார்கள்
மாதாந்தர அட்லான்டிக் (The Atlantic Monthly) என்ற இதழில் சிட்சையின்பேரில் ஒரு கட்டுரை இந்தக் கூற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டது: “பெற்றோர் கற்பிக்கும் மதிப்பீடுகளின்படி பெற்றோர்தாமே வாழ்ந்தால்தானே ஒரு பிள்ளை நன்றாக நடந்துகொள்ள எதிர்பார்க்கலாம்.” அந்தக் கட்டுரை உள்ளக் கட்டுப்பாடுகளின் மதிப்பைக் காண்பிக்க ஆரம்பித்தது: “நன்றாக நடந்துகொண்ட பருவ வயது பிள்ளைகளின் பெற்றோர்தாமே பொறுப்புள்ளவர்களாக, நேர்மையானவர்களாக, சுயக்கட்டுப்பாடுள்ளவர்களாக—தாங்கள் கொண்டிருந்த மதிப்பீடுகளுக்கு இசைவாக வாழ்ந்தவர்களும் தங்களுடைய பிள்ளைகள் அதைப் பின்பற்றும்படி உற்சாகப்படுத்தியவர்களுமாக இருப்பது தெரிகிறது. ஆய்வின் பாகமாக, பருவவயதிலிருக்கும் நல்ல இளைஞர் வெளிப்படுத்தப்படுகையில், அவர்களுடைய நடத்தை நிரந்தரமாகப் பாதிக்கப்படவில்லை. தங்கள் பெற்றோருடைய மதிப்பீடுகளை அவர்கள் அதிக பத்திரமாகத் தங்களுடைய பாகமாக்கியிருந்தனர்.” அது நீதிமொழிகள் சொல்வதற்கு இசைவாக இருந்தது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.”—நீதிமொழிகள் 22:6.
தங்களுடைய பிள்ளைகளில் உண்மையான மதிப்பீடுகளைப் பண்படுத்திட முயன்ற பெற்றோர், தாங்கள்தாமே பின்பற்றாதிருக்கும்போது, அதில் வெற்றி காணவில்லை. அவர்களுடைய பிள்ளைகள் “அந்த மதிப்பீடுகளைத் தங்களுடைய பாகமாக்கிக்கொள்ளவில்லை.” “தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்க முயன்ற அந்த மதிப்பீடுகளுக்கு எவ்வளவு இசைவாக பெற்றோர் வாழ்ந்தார்கள் என்பதே வித்தியாசத்தை உண்டுபண்ணியது.”
எழுத்தாசிரியர் ஜேம்ஸ் பால்டுவின் சொன்னதை இது நிரூபிக்கிறது: “பெரியவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்பதில் பிள்ளைகள் சிறந்து விளங்கியதில்லை, ஆனால் அவர்களைப் பின்பற்றுவதில் ஒருபோதும் தவறியதில்லை.” உங்களுடைய பிள்ளைகளை நேசிக்கிறீர்கள் என்றால், அவர்களுக்கு உண்மையான மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்க விரும்புவீர்களானால், எல்லாவற்றிலும் மிகச் சிறந்த முறையைப் பயன்படுத்துங்கள்: நீங்கள் கற்பிப்பதற்கு நீங்களே முன்மாதிரிகளாக இருங்கள். மாயக்காரர் என்று இயேசு கண்டனம் செய்த வேதபாரகர், பரிசேயர் போன்று இராதேயுங்கள்: “ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்.” (மத்தேயு 23:3) அல்லது பவுல் அப்போஸ்தலனைக் குற்றப்படுத்துகிறவர்களாய்க் கேள்வி கேட்ட அந்த ஆட்களைப் போன்று இராதேயுங்கள்: “இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா?”—ரோமர் 2:21.
பைபிள் காலங்கடந்தவிட்டது, அதன் வழிகாட்டும் குறிப்புகள் நடைமுறையற்றது என்று பலர் இன்று கூறுகின்றனர். அந்த நிலையை இயேசு இந்த வார்த்தைகளில் சவாலிடுகிறார்: “ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்.” (லூக்கா 7:35) பல தேசங்களிலிருக்கும் குடும்பங்கள் அளித்திருக்கும் பின்வரும் விவரப்பதிவுகள் இந்த வார்த்தைகளை உண்மையென நிரூபிக்கின்றன. (g91 9/22)
[பக்கம் 7-ன் படம்]
தாயோடு நெருங்கிய பந்தம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாய் வளருவதற்கு உதவுகிறது
[பக்கம் 8-ன் படம்]
தகப்பன் குழந்தையோடு நேரம் செலவழிப்பதும் முக்கியம்