குடும்பங்கள் காலம் கடந்துவிடுவதற்கு முன்பு நெருங்கிவாருங்கள்
“குடும்பம் எல்லாவற்றையும்விட மிகப் பழமையான மனித அமைப்பாகும். பல முறைகளில் இது மிக அதிக முக்கியமானது. இது சமுதாயத்தின் மிக அடிப்படையான கூறு. குடும்ப வாழ்க்கை உறுதியுள்ளதாகவோ உறுதியற்றதாகவோ இருந்ததன் பேரில் சார்ந்து, முழு சமுதாய நாகரிகங்கள் அழியாது தொடர்ந்திருக்கின்றன அல்லது அடியோடு அழிந்துபோய்விட்டிருக்கின்றன.”—தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா (1973 பதிப்பு).
குடும்பம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் ஒரு குடை. இன்று அநேக இடங்களில் அந்தக் குடை துவாரங்கள் மிகுந்ததாயிருக்கிறது; மற்ற அநேக இடங்களில் அது மூடப்பட்டு காணப்படாததோர் இடத்தில் ஒதுக்கப்பட்டுவிடுகிறது. பாரம்பரிய குடும்ப வாழ்க்கைமுறை அநேக சமயங்களில் காலங்கடந்த ஒன்றாக ஒதுக்கப்பட்டுவிடுகிறது. தொலைக்காட்சியின் நகைச்சுவை நாடகங்கள் பெரும்பாலும் தகப்பன்மார்களைப் பேதைகளாகவும், தாய்மார்களை அதிக புத்திசாலிகளாகவும், ஆனால் பிள்ளைகளே அறிவில் சிறந்தவர்களென சித்தரிக்கின்றன.
விவாகத்திற்கு உண்மையற்றவர்களாயிருப்பது ஒரு சாதாரண காரியமாகிவிட்டது. தொழில்மயமாக்கப்பட்ட சில நாடுகளில் முதல் இரண்டு விவாகங்களில் ஒன்று விவாகரத்தில் முடிவடைகிறது. விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திட, ஒற்றைப் பெற்றோர் கொண்ட குடும்பங்களும் பெருகிவருகின்றன. விவாக ஏற்பாட்டின் நன்மைகளின்றி இருவர் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும் எண்ணிக்கையில் அதிகரிக்கிறது. ஓரினப்புணர்ச்சிக்காரர்கள் விவாக வாக்குறுதிகளினால் தங்கள் உறவுகளை மதிப்புள்ளதாக்கிட நாடுகின்றனர். இயல்பான மற்றும் இயல்புக்கு அப்பாற்பட்ட பாலுறவு திரைகளிலும் வீடியோக்களிலும் மையக் கவர்ச்சியாகிவிட்டிருக்கின்றன. கற்பைக் காத்துக்கொள்வது நடைமுறையற்றது என்று பள்ளிகள் கருதுவதால் வேசித்தனத்தைப் பாதுகாப்பானதாக்க கருத்தடை உறைகளைக் கொடுக்கின்றன, ஆனால் அவை பாதுகாப்பாய் இருப்பதில்லை. பாலுறவு நோய்களும் பருவவயதில் கருத்தரித்தலும் உயருகிறது. குழந்தைகள்தானே அவற்றின் பலியாட்கள்—அவர்கள் பிறக்க அனுமதிக்கப்பட்டால். பாரம்பரிய குடும்ப வாழ்க்கைமுறை மறைந்திடுவதால் அடிப்படையில் இழப்பு பிள்ளைகளுக்கே.
பல ஆண்டுகளுக்கு முன்னர், நோபல் பரிசு பெற்ற அலெக்சிஸ் காரல், மனிதன், அறியப்படாதவன் (Man, the Unknown) என்ற தன்னுடைய புத்தகத்தில் இப்படியாக எச்சரித்தார்: “நவீன சமுதாயம் குடும்ப பயிற்றுவிப்புக்குப் பதிலாக முழுமையாய்ப் பள்ளியைச் சார்ந்திருக்கும் வினைமையான தவற்றைச் செய்திருக்கிறது. தாய்மார்கள் தங்கள் வாழ்க்கைப் பணியையும், சமுதாயத்தில் மேம்படுவதற்கான ஆசைகளையும், பாலுறவு இன்பங்களையும், தங்கள் இலக்கிய அல்லது கலை ஆர்வங்களையும் நிறைவுசெய்துகொள்வதற்கும், அல்லது வெறுமென சீட்டாடுவதற்கு, சினிமா போவதற்கு, நேரத்தை வீணடிப்பதில் சுறுசுறுப்பாக இருப்பதற்குத் தங்கள் பிள்ளைகளைப் பாலர்க் கூடங்களில் பகல் நேர கவனிப்புக்கு விட்டுவிடுகின்றனர். இப்படியாக பிள்ளைகள் பெரியவர்களுடன் தொடர்புடையவர்களாய் இருந்து அவர்களிடமிருந்து ஏராளமான காரியங்களைக் கற்றுக்கொள்ளமுடிந்த குடும்பத் தொகுதிகள் மறைந்துவிடுவதற்கு அவர்கள்தான் பொறுப்பு. . . . முழு பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த நபருக்கு ஓரளவு தனிமையும் குடும்பத்தை உட்படுத்தும் அந்தச் சமுதாயத் தொகுதியின் கட்டுப்படுத்தப்பட்ட கவனிப்பும் தேவைப்படுகிறது.”—பக்கம் 176.
துர்ப்பேச்சுகளையும் பாலுறவு ஒழுக்கக்கேடுகளையும் வெகுவாகக் காண்பிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குடும்பத்தைத் தாக்கிடுதல் சம்பந்தமாக சிரிப்பு நடிகர் ஸ்டீவ் ஆலன் அண்மையில் குறிப்பிட்டதாவது: “இந்நீரோட்டம் நம்மைச் சாக்கடைக்குத் தாங்கிச்செல்கிறது. தங்களுடைய பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்று பெற்றோர் தடை செய்துள்ள அவ்வகையான பேச்சுதான் இன்று எதையும் காண்பிக்கும் கேபிள் டிவி நிறுவனத்தார் மட்டுமின்றி, ஒருசமயத்தில் உயர்ந்த நியதிகளைக் கொண்டிருந்த தொலைக்காட்சி இணைப்புகளும் காண்பிக்கின்றன. பிள்ளைகளும் மற்றவர்களும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது அமெரிக்க குடும்பத்தின் சீரழிவை வலியுறுத்துவதாயிருக்கிறது.”
சமுதாயம் இன்று பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லும் சுதந்தரம் என்ன? தினசரிகள் வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ நிகழ்ச்சிகளைக் கவனிப்பது, மாலை செய்தியைக் கேட்பது, பாட்டுகள் இசையின்றி பாடப்படுவது, தங்களைச் சுற்றிலும் முதிர்ந்தவர்களின் முன்மாதிரிகளைப் பார்ப்பது. பிள்ளைகள் மனம் மற்றும் உணர்ச்சி சம்பந்தமாக நொறுவல் சக்கையின் பெருந்தீனிக்காரராய் இருக்கின்றனர். “ஒரு நாட்டை அழிக்க விரும்புவீர்களானால், அதன் பணத்தைக் கெடுக்கிறீர்கள்,” என்றார் முன்னாள் பிரிட்டிஷ் கல்வி செயலர் சர் கீத் ஜோசஃப். மேலும் அவர் கூறினார்: “ஒரு சமுதாயத்தை அழிப்பதற்கு வழி பிள்ளைகளைக் கெடுப்பதாகும்.” “கெடுப்பது” என்பது “கற்பிலிருந்து அல்லது உயர்ந்த பண்பிலிருந்து விலகச்செய்வதைக்” குறிப்பிடுகிறது. அது இன்று பழிதீர்க்கும் ஆவியுடன் நிறைவேற்றப்படுகிறது. இளைஞர் இழைக்கும் குற்றங்களைப் பற்றி அதிகம் சொல்லப்படுகிறது; பெரியவர்கள் இழைக்கும் குற்றங்களைப் பற்றி இன்னும் அதிகம் சொல்லவேண்டும்.
நம்மை வாதித்திட அவை மீண்டும் வந்திடும்
அமெரிக்க குடும்ப சேவையின் தலைவரும் பிரதான செயலதிகாரியுமாகிய ஜெனீவா B. ஜான்சன் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் சொன்னார்: “குடும்பம் ஆழ்ந்தவிதத்தில், ஒருவேளை கடுமையான விதத்தில் நோய்ப்பட்டிருக்கிறது.” “நம்முடைய பிள்ளைகள் பலருடைய நிலை கவலைக்கிடமானது” என்று குறிப்பிட்டு பின்னர் சொன்னார்: “நம்முடைய செல்வச் செழிப்புள்ள தேசம் வீட்டு வசதி இல்லாத, உணவு ஊட்டம் இல்லாத, மருத்துவ சிகிச்சை இல்லாத மற்றும் கல்வி புகட்டப்படாத இவ்வளவு அநேகரை நாடுகடத்தப்பட்டவர்களின் நிலைக்கு ஒதுக்கிவிட மனம் கொண்டிருப்பது நம்மை வாதித்திட மீண்டும் வரப்போகிறது.” நம்மை வாதித்திட அவை ஏற்கெனவே வந்துகொண்டிருக்கிறது. அதைக் குறித்து நீங்கள் தினசரிகளில் வாசிக்கலாம், வானொலிச் செய்திகளில் கேட்கலாம், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம். உதாரணத்திற்கு:
ஜடான் ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெர்மேனின் மார்பில் மூன்று முறை சுட்டான். ஜெர்மேன் மரித்துவிட்டான்; அவனுக்கு வயது 15. ஜடானுக்கு வயது 14. அவர்கள் மிகச் சிறந்த நண்பர்கள். அவர்களுடைய வாதம் ஒரு பெண்பிள்ளையின் பேரில் இருந்தது.
மைக்கல் ஹில்லர்டு சவ அடக்க நிகழ்ச்சிக்கு நூறு பேர் வந்திருந்தனர். ஒரு கூடைப்பந்தாட்டத்தின்போது ஏற்பட்ட ஒரு விவாதத்தைத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில் அவன் தலைக்குப் பின்னே சுடப்பட்டான்.
நியூ யார்க்கிலுள்ள புரூக்லினில் வீடு இல்லாத ஒரு தம்பதியரை மூன்று இளைஞர் உயிரோடு எரித்தனர். சாராயச் சத்துள்ள ஓர் எண்ணை எரியாதது கண்டு அவர்கள் பெட்ரோல் பயன்படுத்தினர். அது எரிந்தது.
ஃப்ளாரிடாவில் ஓர் ஐந்து வயது பிள்ளை ஒரு குழந்தையை ஐந்து மாடி கட்டிட படியிலிருந்து தள்ளிட, அந்தக் குழந்தை மரித்தது.
டெக்ஸஸில் ஒரு பத்து வயது சிறுவன் ஒரு துப்பாக்கியை எடுத்து தன் நண்பனைச் சுட்டு, அவனுடைய உடலைத் தன் வீட்டின் கீழேயே புதைத்தான்.
ஜார்ஜியாவில் 15 வயது பையன் தன் ஆசிரியர் தன்னைச் சிட்சிக்கையில் குத்திக் கொன்றான்.
நியூ யார்க் நகரில், முன் இருபது வயதுகளிலும் பருவ வயதிலுமிருந்த ஒரு கும்பல், மட்டைகளும், குழாய்களும், கோடரிகளும், கத்திகளும், வெட்டுக்கத்திகளும் தாங்கியவர்களாய் அண்மையிலிருந்த ஒரு குடியிருப்புப் பகுதியில் வீடுகளில்லாதவர்களை தாக்கி, பலரைக் காயப்படுத்தி ஒருவரை கழுத்தில் வெட்டினர். உள்நோக்கம்? ஒரு புலனாய்வாளர் விளக்கினார்: “வீடுகளில்லாதவர்களைத் தாக்குவதில் அவர்களுக்கு ஒரு குஷி.”
மிச்சிகன் டெட்ராய்ட்டில் ஒரு 11 வயது பையன் 15 வயது பையனுடன் சேர்ந்து 2 வயது சிறுமியைக் கற்பழித்தான். அந்தச் சிறுபிள்ளையை ஒரு குப்பைத் தொட்டியில் விட்டுச்சென்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஒஹாயோவிலுள்ள கிளீவ்லாண்டில் ஆறு முதல் ஒன்பது வயதுகளிலிருந்த நான்கு பையன்கள் ஒரு பள்ளியின் ஒன்பது வயது சிறுமியைக் கற்பழித்தனர். இதன்பேரில் குறிப்புரைப்பவராக பிரென்ட் லார்க்கின் கிளீவ்லாண்ட் ப்ளேன் டீலர் என்ற பத்திரிகைக்கு எழுதும்போது இப்படியாகக் கூறினார்: “இந்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, நம்முடைய மதிப்பீட்டு முறைகள் எவ்விதம் நேராகச் சாக்கடை நோக்கிச் செல்கிறது என்பதை இச்செயல் ஏராளமாய்ப் பேசுகிறது.”
கிளீவ்லாண்டு மாநில பல்கலைக்கழகத்தில் உளநூல் பேராசிரியர் டாக்டர் லெஸ்லி ஃபிஷர் தொலைக்காட்சியைக் குற்றப்படுத்துகிறார். அதை அவர் “ஒரு பெரிய செக்ஸ் இயந்திரம்” என்று அழைக்கிறார். “8 மற்றும் 9 வயது சிறுவர்கள் இக்காரியங்களைப் பார்க்கிறார்கள்.” அமெரிக்கக் குடும்பம் சீரழிந்துகொண்டிருப்பதற்குப் பெற்றோரைக் குற்றப்படுத்துகிறார்: “அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய சொந்த பிரச்னைகளிலேயே அதிகமாக உட்பட்டிருக்கிறார்கள், தங்கள் பிள்ளைகளைக் கவனிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ள முடியவில்லை.”
போடுவதும் குப்பை, எடுப்பதும் குப்பை
சமுதாயத்தில், விசேஷமாக இந்தத் தகவல் தொடர்பு வழிகள், பொழுதுபோக்கு அளிப்பவர்களும் அந்தத் தொழிலும்—மனிதகுலத்தில் இருக்கும் மிக மோசமானவற்றின்மீது கவனம் செலுத்துவதில் லாபமடைந்திடும் கூறுகள்—பாலுறவு, வன்முறை, ஊழல் ஆகியவற்றை வாந்திபண்ணி, இளைஞரும் குடும்பங்களும் கெட்டழிய வெகுவாகக் காரணமாகியிருக்கின்றன. எனவே கெட்டுப்போனதை விதைத்து கெட்டுப்போனதையே அறுப்பது என்ற விதி பொருந்துகிறது. போடுவதும் குப்பை, எடுப்பதும் குப்பை. தினையை விதைப்பவன் தினையை அறுப்பான், வினையை விதைப்பவன் வினையை அறுப்பான்—அறுப்பதோ பயங்கரம்.
சமுதாயம் மனச்சாட்சியில்லாப் பிள்ளைகளைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கிவருகிறதா? நியூ யார்க் மத்திய பூங்காவில் பருவவயது கும்பல் ஒன்று 28 வயது பெண்ணை அடித்து, கற்பழித்துக் கொன்ற அந்தக் கொடிய இழிச்செயலுக்குப்பின் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அவர்கள் “கவலையற்றிருந்தனர்” என்றும், கைது செய்யப்பட்டபோது “சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தனர்” என்றும் காவல் துறையினர் கூறினர். அதைச் செய்வதற்குக் காரணம் அளித்தனர்: “அது வேடிக்கையாக இருந்தது,” “எங்களுக்கு போர் அடித்தது,” “செய்வதற்கு ஒரு காரியமாயிருந்தது.” “ஆவிக்குரிய பகுதி வெட்டப்பட்டவர்கள்,” என்று டைம் பத்திரிகை அவர்களை அழைக்கிறது. “மனச்சாட்சி என்று நாம் அழைத்திடும் அந்த ஆவிக்குரிய அம்சத்தை இழந்தவர்கள், ஒருவேளை அதை ஒருபோதும் வளர்த்துக்கொள்ளாதவர்கள்.”
யு.எஸ்.நியூஸ் அன்ட் உவோர்ல்ட் ரிப்போர்ட் துரிதப்படுத்தியது: “மனச்சாட்சியில்லாத பிள்ளைகளைக் கொண்ட இன்னொரு தலைமுறையைத் தவிர்ப்பதற்கு இந்தத் தேசம் செயல்படவேண்டும்.” ஒரு பிரபல உளநூலர் டாக்டர் கென் மஜீத் மற்றும் காரல் மக்கெல்வி என்பவர்கள் அந்த ஆபத்தைக் குறித்துதான் உச்ச அபாயம்: மனச்சாட்சி இல்லாத பிள்ளைகள் (High Risk: Children Without a Conscience) என்ற வெளிப்படையான தங்கள் நூலில் சிறப்பாகக் காண்பித்திருக்கின்றனர். மஜீதின் கருத்துக்கு பல உளநோய் மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் அளித்துள்ள சரிதைகளும் சாட்சியங்களும் திரண்ட ஆதரவை அளிக்கிறது. குழந்தை பிறப்பின்போதும் அது வளரும் ஆண்டுகளிலும் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே பலமான பிணைப்பு இல்லாததே அடிப்படைக் காரணம்.
நிச்சயமாகவே, அதிகம் பிந்தியாகிவிடுவதற்கு முன்பு அந்த ஆரம்ப ஆண்டுகளிலேயே குடும்பங்கள் மிகவும் நெருங்கி வரவேண்டும்! (g91 9/22)