வீடு இல்லாத பிள்ளைகள் யாரைக் குற்றப்படுத்துவது?
பிரேஸில் விழித்தெழு! நிருபர்
ஒரு நாள் இரவு ஃப்ரான்சிஸ்கோவும் அவருடைய மனைவியும் தங்களுடைய பிள்ளைகளைப் பக்கத்திலிருந்த ஓர் உணவகத்திற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். வாகனங்களை நிறுத்தும் இடத்தில் அழுக்கு உடையிலிருந்த ஒரு பையன் ஃப்ரான்சிஸ்கோவின் குடும்பம் உணவருந்துகையில் அவர்களுடைய காரைப் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான். ஃப்ரான்சிஸ்கோவும் அவருடைய குடும்பமும் உணவகத்தை விட்டு புறப்படும்போது, அந்தப் பையன் தன்னுடைய சேவைக்காக ஒரு சில காசுகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தன் கையை ஆர்வத்துடன் நீட்டுகிறான். இவனைப் போன்ற பிள்ளைகள் பிந்திய இரவுநேரங்களில் மாநகர்களின் தெருக்களில் உயிர்வாழ சம்பாதிக்கப் போராடிவருகின்றனர். அவர்கள் அங்கிருந்து செல்ல அவசரப்படுவதில்லை, ஏனெனில் தெருவே அவர்களின் வீடு.
வீடு இல்லாத பிள்ளைகள் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாக நோக்கப்பட்டு, “அனாதைப் பிள்ளைகள்” அல்லது “ஒதுக்கப்பட்ட பிள்ளைகள்” என பெயர்சூட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை தடுமாறச்செய்வதாயும் அச்சுறுத்துவதாயும் இருக்கிறது—ஒருவேளை 4 கோடி. சரியான எண்ணிக்கையோ கிடைப்பதற்கில்லை. என்றபோதிலும், இந்தப் பிரச்னை உலகமுழுவதும், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் அதிகரித்துவருகிறது என்பதை அனைத்து நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். வீடு இல்லாத பிள்ளைகள் வாசற்படிகளில் சுருண்டு படுத்துக்கொண்டிருக்கும் அல்லது பிச்சைக்கேட்டுக்கொண்டிருக்கும் காட்சி அவ்வளவு பரிதாபத்துக்குரியதாக இருப்பதால், அவர்களைச் சமுதாயம் அவசர உதவி தேவைப்படும் ஒரு பட்டியலின் கடைசியில் ஒதுக்கிவிட்டுக் கடந்துசெல்கிறது. ஆனால் சமுதாயம் இனிமேலும் அவ்விதம் செய்யும் நிலையில் இல்லை. யூனிசெஃப் (UNICEF) என்ற ஐ.நா. குழந்தைகள் நிதி இயக்கத்தின்படி, 8 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட வீடு இல்லாத பிள்ளைகளில் 60 சதவீதத்தினர் மருட்சி உண்டாக்கும் வஸ்துக்களையும், 40 சதவீதத்தினர் மதுபானங்களையும், 16 சதவீதத்தினர் போத மருந்துகளையும், 92 சதவீதத்தினர் புகையிலை வஸ்துக்களையும் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு விற்பனைத்திறன் இல்லாததனால், அவர்கள் பெரும்பாலும் பிச்சை எடுத்தும், திருடியும், விபசாரத்திற்குத் தங்களை விற்றும் உயிர்பிழைக்கின்றனர். “அனாதைப் பிள்ளைகளாக” வளருவதால் அவர்கள் நாடுகடத்தப்படும் ஆபத்தில் இருக்கிறார்கள்; நாடுகடத்தப்படுகிறவர்கள் எந்த ஒரு சமுதாயத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றனர்.
பிரேஸில் செய்தித்தாள் ஓ எஸ்டாடோ டெ சாவொ பாலோ வீடு இல்லாத பிள்ளைகளின் ஒரு கும்பலைக் குறித்து இப்படியாக அறிக்கை செய்தது: “அவர்களுக்குக் குடும்பம் இல்லை, உறவினர்கள் இல்லை, எதிர்கால நம்பிக்கையும் இல்லை. தாங்கள் வாழும் ஒவ்வொரு நாளும் தங்களுக்குக் கடைசி நாள் என அவர்கள் வாழ்கிறார்கள். . . . அந்தப் பிள்ளைகள் . . . நேரத்தை இழக்க முற்படாதவர்கள்: ஓர் இளைஞனின் கைக்கடிகாரத்தையும், ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியையும், வயதானவர் பாக்கெட்டிலிருக்கும் பணத்தையும் ஒரு சில நொடிகளில் எடுத்துவிடுகிறார்கள். கூட்டத்தில் மறைந்துவிடுவதற்கும் தாமதிப்பதில்லை. . . . வயதுவராத பிள்ளைகள். . . சிறிய வயதிலேயே பாலுறவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். பதினோரு வயது சிறுமிகளும் பன்னிரண்டு வயது பையன்களும் ஒன்று சேருகின்றனர், மற்றும் தங்களுடைய காதல் விவகாரங்களை எவ்வளவு சுலபமாக துவக்கினரோ அதை ஓரிரண்டு மாதங்களுக்குள் அதே வேகத்தில் முறித்துக்கொள்கின்றனர்.”
அவர்கள் ஏன் தெருக்களில் வாழ்கிறார்கள்
வீடு இல்லாத பிள்ளைகளுக்கு உதவி என்பது அவ்வளவு எளிதில் செய்யப்படும் காரியமாயில்லை. தெருவில் வாழும் பிள்ளைகளில் 30 சதவீதத்தினர் தங்களுடைய பின்னணியைப் பற்றிய தகவல்களை அல்லது தங்களுடைய பெயரையுங்கூட அதிகாரிகளுக்கு வழங்குவதற்குப் பயந்து மறுத்தனர். ஆனால் அவர்கள் ஏன் தெருக்களில் வாழ்கின்றனர்? சுயாதீனமாக வாழவேண்டும் என்ற விருப்பமாக இருக்கக்கூடுமா? பிரேஸில் நாட்டு இளைஞன் ஒருவனின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது, தான் வீட்டுக்குத் திரும்பிப் போவதில்லை என்றும் அதற்குக் காரணம் தான் விரும்பியதைச் செய்வதற்குத் தன் தந்தை அனுமதிக்கமாட்டார் என்றும் அவன் சொன்னான். என்றபோதிலும், மெக்ஸிக்கோ தினசரி எல் யுனிவர்சல் குறிப்பிடுகிறபடி, தெருவில் வாழும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்களுடைய தந்தைமார்களால் கைவிடப்படுவதாகும். எனவே, விவாகங்களில் முறிவு தெருக்களில் வாழும் சிறுவர்களின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமென குற்றப்படுத்தலாம்.
கூடுதலாக, சில பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைக் கவனிக்கும் விஷயத்தில் பொறுப்பற்றவர்களாக, அவர்களைக் கடுமையாய் அடிக்கிறவர்களாக, பாலுறவு சம்பந்தமாக அவர்களைக் கெடுக்கிறவர்களாக, அவர்களை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறவர்களாக அல்லது அவர்களை அசட்டை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவாக, கொடுமையாய் நடத்தப்படுகிற அல்லது அசட்டை செய்யப்படுகிற பிள்ளை தான் தனியே, தெருக்களில் இருந்துவிடுவதும்கூட மேலானது என்பதாய் உணருகிறது.
என்றாலும், பிள்ளைகளுக்கு அன்பான கவனிப்பும் வழிநடத்துதலும் தேவை. இதை யூனிசெஃப்பின் செயல் இயக்குநர் ஜேம்ஸ் கிரான்ட் சரியாகவே விவரித்தார். லத்தீன் அமெரிக்கா டெய்லி போஸ்ட் என்ற பத்திரிகையில் “பிள்ளைகளும் நாளையும்” என்ற தலையங்கக் கட்டுரை அவர் கூறியதைப் பின்வருமாறு கொண்டிருந்தது: “மூன்று அல்லது நான்கு வயதை எட்டுவதற்குள்ளாக, ஒரு நபரின் 90 சதவீத மூளை அணுக்கள் இணைக்கப்பட்டுவிடுவதோடு அவருடைய வாழ்க்கையின் எஞ்சிய பாகத்திற்குரிய மாதிரி படிவம் அமைக்கப்பட்டுவிடுமளவுக்கு சரீர அபிவிருத்தி ஏற்பட்டுவிடுகிறது. எனவே அந்த ஆரம்ப ஆண்டுகள்தாமே, பாதுகாப்புக்காகக் குரல் எழுப்புகிறது, அதாவது அதன் முழு வாய்ப்புவளத்தினிடமாக அபிவிருத்தியடைவதற்குரிய பிள்ளையின் உரிமையைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் தேசங்களின் நலன் பேரில் அதிக முழுமையாகத் தங்களுடைய பாகத்தைச் செய்வதற்கு மக்களின் அபிவிருத்தியினிடமாய் அதை முதலீடு செய்வதற்காகவும் குரல் எழுப்புகிறது.”
இப்படியாக, காரியங்களைக் கவனமாய் நோக்கிவருகிறவர்கள் கலக்கமுற்று, வீடு இல்லாத பிள்ளைகளுக்காகப் பொருளாதாரத்தையும், அரசாங்கங்களையும், அல்லது பொதுமக்களையும் குற்றப்படுத்துகின்றனர். அதே கட்டுரை தொடர்ந்து கூறியது: “‘பிள்ளைகளில் முதலீடு செய்யும்’ விஷயத்தில் மனிதாபிமானமோ அல்லது பொருளாதார விவகாரமோ அதிக முன்னேற்றத்தைச் செய்தில்லை. . . . ‘பொருளாதார சீரமைப்பு’ உணவு மற்றும் அன்றாட தேவைகளின் பேரிலான உதவிகள் குறைக்கப்படுவதையே குறித்திருக்கிறது. . . . வேலையில்லாப் பிரச்னையும் ஊதியக் குறைவும் உச்சக்கட்டத்தை நோக்கிச் செல்ல, அப்படிப்பட்ட குறைப்புகளின் கடுமையான சுமை அதைச் சமாளிக்க முடியாதவர்களிடமாகவே—ஏழைக் குடும்பங்களிடமும் அவர்களுடைய பிள்ளைகளிடமுமே—கடத்தப்படுகிறது.”
அநேக தேசங்களில் இருந்துவரும் பொருளாதார வீழ்ச்சி, தெருவில் வாழும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்கு மற்றொரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. எவ்வளவாகிலும் எப்படியாகிலும் சம்பாதிக்கும்படியாகப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைத் தெருவிற்குத் தள்ளிவிடுகின்றனர். ஆனால் வீடு இல்லாத பிள்ளைகளின் பிரச்னையைத் தீர்ப்பது ஏன் இத்தனை கடினமாயிருக்கிறது? (g90 1/8)