வீடு இல்லாத பிள்ளைகள் உதவுவது ஏன் இவ்வளவு கடினம்?
அக்டோபர் 14, 1987 அன்று ஐக்கிய மாகாணங்களில் ஜெசிக்கா மெக்லூர் என்ற ஒரு குழந்தை பாழடைந்த ஒரு கிணற்றில் 22 அடிக்குக் கீழே சிக்கிக்கொண்டாள். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆட்கள் பாறைகளினூடே சென்று அந்த 18 மாத குழந்தையை மீட்பதற்காக வேதனை மிகுந்த 58 மணிநேரங்களைச் செலவழித்தனர். இந்தச் சம்பவம் செய்திகளின் தலையங்கங்களையும் முழு தேசத்தின் இருதயங்களையும் ஈர்த்தது, மற்றும் அந்த இருண்ட துவாரத்திலிருந்து ஜெசிக்கா உயிரோடு மீட்கப்பட்டு வெளியே கொண்டுவரப்படும்வரை தொலைக்காட்சி நேயர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால் ஜெசிக்காவுக்கு ஒரு வீடு இருந்தது. என்றபோதிலும், வினோதமான காரியம் என்னவெனில், வீடு இல்லாத பிள்ளைகளின் பரிதாபமான நிலை அதேவிதமான அக்கறையை எழுப்புவதில்லை. அவர்களுடைய நிலை வறுமையோடு இணைந்திருப்பது காரணமாக இருக்குமா? தேவையிலிருப்பவர்களின் நிலைமையைப் பகுத்தாராயும்விதத்தில், உலக சுகாதார அமைப்பின் பத்திரிகையாகிய உலக ஆரோக்கியம் என்ற பத்திரிகைக்குக் கட்டுரை அளிக்கும் ஓர் எழுத்தாளர் இப்படியாக அறிக்கை செய்தார்: “நகரங்களில் வாழும் ஏழைகள் உண்மையில் அவர்களுடைய சொந்த தேசங்களின் உண்மையான பிரஜைகள் அல்ல, ஏனெனில் அவர்களுக்கு எந்த ஓர் அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார உரிமையும் கிடையாது. ஏழைகள் சீக்கிரமாக வயதடைந்து இளம் வயதிலேயே மரித்துவிடுகின்றனர்.” ஒரு தேசத்தின் பொருளாதாரம் அவர்களுக்குப் போதிய உணவு, உடை மற்றும் வீடு அளிப்பதற்கு முன்பு அரசாங்கங்களும் மக்களும் ஏழைகளை நோக்கும் காரியத்தில் பேரளவான மாற்றங்கள் தேவைப்படுகிறது.
சிலருக்கு எவ்விதம் உதவலாம்
பிள்ளையின் உரிமைகள் பேரில் ஐ.நா. அறிக்கை உண்மையில் பெருமிதத்துக்குரியது என்றாலும், அவை ஏன் அடையப்பெறுவதற்குக் கடினமாக இருக்கிறது? (பெட்டியைப் பார்க்கவும்.) பொதுவாகப் பிள்ளைகள் என்றால் மக்களுக்குப் பிரியம், மற்றும் அவர்களுக்குச் சிறந்ததையே அளிக்க விரும்புகின்றனர். அது மட்டுமின்றி, ஒரு தேசத்தின் எதிர்கால நலத்திற்குப் பிள்ளைகள் முக்கியமானவர்கள். லத்தீன் அமெரிக்க டெய்லி போஸ்ட் பத்திரிகையில் யூனிசெஃப் நிறுவனத்தின் ஜேம்ஸ் கிரான்ட் கூறுகிறார்: “சொல்லப்போனால், பிள்ளைகள்தாமே தங்களுடைய தேசத்தைப் பொருளாதார தேக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.” ஓர் அறிக்கை காண்பிப்பது என்னவென்றால், கிரான்ட் தொடர்ந்து கூறுகிறார், “அடிப்படை உடல் நலக் கவனிப்பிற்கும் அடிப்படை கல்விக்கும் செலவு செய்வது உற்பத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண வழிநடத்தும்.” பிரேஸில் போன்ற நாடுகள் தெருவில் வாழும் பிள்ளைகளும் அவர்களோடு சம்பந்தப்பட்ட வன்முறையும் சித்தரித்திடும் எதிர்மறையான சாயலை நன்கு அறிந்தவையாய் இருக்கின்றன. நல்லவேளையாக, இந்தப் பிரச்னையைப் பிரேஸிலில் தர்மம், வளர்ப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் இளைஞர் சீர்திருத்தச்சாலைகள் மூலம் தீர்க்க முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது.
சில அரசாங்கங்கள் ஏழைக் குடும்பங்களுக்கும் சமுதாயங்களுக்கும் வெறுமென வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக வீடு கட்டுவதற்கான அவர்களுடைய முன்முயற்சியை ஆதரிப்பதில் பயன் இருப்பதைக் காண்கிறார்கள். இவ்வழியில் ஏழைகள்தாமே மாற்றங்களை செய்துகொள்வதற்கான வளமாய் அமைகின்றனர்.
இப்படியாக, வித்தியாசமான ஏதுக்கள் மூலம் உதவி பெறுவதோடுகூட, ஏழைக் குடும்பங்கள் தங்களுடைய பாகத்தைச் செய்ய மனமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பம் ஒன்றாக இணைந்திருக்கும்போதும், தனது சொந்தப் பிரச்னையைக் கையாளும்போதும் பொருளாதார மற்றும் சமுதாய ரீதியில் மேன்மையாக விளங்க முடிகிறது. தேவைப்பட்டால், குடும்ப வரவு செலவு திட்டத்தில் திறமைச்சாலிகளாக இருக்கும் எல்லா அங்கத்தினரும் தங்கள் பாகத்தைச் செய்யலாம்.
சிலர் எவ்விதம் வெற்றிபெற்றிருக்கின்றனர்
வீடு இல்லாத பிள்ளைகளில் சிலர் அந்த நிலைமையைத் தப்பியிருக்க முடிந்திருக்கிறது. கில்லெர்மோ என்பவருடைய உதாரணத்தை கவனியுங்கள். அவன் பிறப்பதற்கு முன்னால், அவனுடைய குடும்பம் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்துவந்தது. ஆனால் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்ததால் குடும்பம் தலைநகருக்கு மாற்றிவந்தது. கில்லெர்மோ மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, அவனுடைய தந்தை கொலைசெய்யப்பட்டார்; ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவனுடைய தாயும் பிள்ளைகளைப் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு மரித்துவிட்டாள். இப்படியாக, ஆரம்பப்பருவத்திலேயே கில்லெர்மோ தெருவில் வாழும் ஒரு பிள்ளையாக ஆனான். தன்னுடைய குடும்பத்தின் தேவைகளைக் கவனிப்பதற்காக அவன் உணவும் பணமும் கேட்டு நாள்தோறும் கடைகடையாகச் சென்றான், பிந்திய இரவு நேரங்களில் தெருவில் நடந்துசெல்வான். அவனைத் தெருக்களில் அறிந்திருந்த தயவான ஆட்கள் அவனுக்குத் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் நடத்தையின் அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொடுத்தனர். பின்னர், அவன் அரசாங்க ஏஜென்ஸி ஒன்றால் அழைத்துச்செல்லப்பட்டு பிள்ளைகள் காப்பு முகாமில் சேர்க்கப்பட்டான். அங்கே அவன் உணவும் கல்வியும் பெற்றான். சிருஷ்டிகர் அவனில் தனிநபராக அக்கறைக் காண்பிக்கிறார் என்பதைக் காணும்படி யெகோவாவின் சாட்சிகள் அவனுக்கு உதவினார்கள். அவனுடைய ஆவிக்குரிய தேவைகளையும் கவனித்தனர். சாட்சிகளின் உண்மையான அக்கறையையும் நட்பையும் கண்டு கவரப்பட்டவனாய், கில்லெர்மோ பின்னர் சொன்னதாவது: “வழிநடத்துதலும் சிட்சையுமின்றி வளர்ந்த ஓர் இளைஞனுக்கு யார் உதவுவார்கள்? பொருளாதார உதவி தவிர, அன்பான சகோதரர்கள்தாமே அப்படிப்பட்ட உதவியை எனக்கு அளித்தார்கள்.” கில்லெர்மோ 18-வது வயதில் முழுக்காட்டுதல் பெற்றான். இப்பொழுது அவன் இருக்கும் தேசத்திலுள்ள காவற்கோபுர சங்கத்தின் கிளைக்காரியாலயத்தின் ஓர் அங்கத்தினனாகப் பணியாற்றுகிறான்.
பின்னர் ஜோயேவொ என்ற இளைஞனைப் பார்க்கிறோம். அவன் குடிகார தகப்பனால் இளமையிலேயே சகோதரர்களுடன்கூட வீட்டைவிட்டு துரத்தப்பட்டான். ஆனால் ஒரு பலசரக்குக் கடைக்காரர் ஜோயேவாவை வேலைக்கு அமர்த்தினார். உண்மையுடனும் ஊக்கத்துடனும் வேலை செய்பவனாயிருந்ததால், சீக்கிரத்திலேயே ஜோயேவா முன்னேறுகிறவனாய்த் தன்னுடைய உடன் வேலையாட்கள் மற்றும் மற்றவர்களுடைய நம்பிக்கையைப் பெறலானான். இப்பொழுது அவன் தன்னுடைய சொந்த குடும்பத்துடன் ஒரு மகிழ்ச்சியுள்ள மனிதனாக இருக்கிறான். மேலும் 12 வயது ரொபர்ட்டோவைக் கவனியுங்கள். இவனுங்கூட தன் குடும்பத்தால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான். அவன் காலணிகளுக்குப் பாலீஷ் போடுவதும், மிட்டாய்கள் விற்பதுமாயிருந்தான். பின்னர் அவன் ஒரு பெய்ன்ட்டராக வேலை செய்தான். கற்றுக்கொள்வதற்கும் வேலை செய்வதற்கும் மனமுள்ளவர்களாக இருந்ததுதானே பல தடைகளை மேற்கொள்ள ஜோயேவொவுக்கும் ரொபர்ட்டோவுக்கும் உதவியது. வீடு இல்லாத இளைஞராக கவலையும் பாதுகாப்பின்மையும் கொண்ட அந்த நேரங்களை அவர்கள் நினைத்துப்பார்க்கிறார்கள், ஆனால் யெகோவாவின் சாட்சிகளோடு கொண்டிருந்த அவர்களுடைய பைபிள் படிப்பு அவர்களுக்குப் பாதுகாப்பாய் நிரூபித்தது. இந்தச் சில உதாரணங்கள் காண்பிப்பது என்னவென்றால், பிள்ளைகள் பொதுவாகவே நிலைமைக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் பண்புடையவர்கள் என்பதையும், சரியான உதவியால் மோசமான சூழ்நிலைகளையும் மேற்கொள்ள முடியும், கைவிடப்பட்ட நிலையையும்கூட மேற்கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது.
மேலும், கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாகப் பெற்றோரின் வழிநடத்துதலைப் பிள்ளைகள் பெறும்போது, இது நிலையான குடும்பங்களில் விளைவடையும், மற்றும் முழுவதும் கைவிடப்படுதல் மற்றும் பிள்ளைகளைத் தவறாக நடத்துவது போன்ற பிரச்னைகள் உண்டாவதில்லை.
மனிதனுடைய முயற்சிகள் ஏன் தோல்வியடைகின்றன
என்றபோதிலும், வீடு இல்லாத பிள்ளைகள் லட்சக்கணக்கில் இருப்பதுதானே இந்தக் கடுமையான பிரச்னையைத் தீர்ப்பதில் மனிதன் தோல்வியடைந்துவிட்டான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. டைம் பத்திரிகையில் ஒரு சேய் நல முகமையின் இயக்குநர் இப்படியாகச் சொன்னது மேற்கோளாகக் காட்டப்பட்டது: “மனக்கோளாறுடைய ஒருவர், ஒரு நோயாளி—ஒரு நோய்ப்பட்ட, நலிந்த மக்கள்தொகுதி—முன்னேற்றத்துக்கான ஒரு முகவையாகச் செயல்பட முடியாது.” இதன் விளைவாக ஒரு லத்தீன் அமெரிக்க நாடு “எந்த வகையான நாகரிக வளர்ச்சியையும் மூளையில் ஏற்காதளவுக்கு ஊட்டச்சத்துக்குறைவுற்றவர்களாகவும், வேலைத்திறனற்றவர்களாகவும், கல்வியறிவற்றவர்களாகவும் இருக்கும் லட்சக்கணக்கான ஆட்களால் பாரமடையக்கூடும்” என்று அதேப் பத்திரிகை முன்னுரைக்கிறது.
இதை நோக்குமிடத்து, ஊட்டச்சத்துக்குறைவு, தவறான பாலுறவுக்கேடுகள், வன்முறை ஆகியவற்றின் பாதிப்புகள் மனிதனுடைய முயற்சியால் மட்டுமே தீர்க்கப்பட்டுவிடும் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? மூர்க்கமான, கொடூரமான ஆட்களின் மத்தியில் உயிர் பிழைக்கப் போரடியிருப்பதற்குப் பின்னர் தெருக்களில் வாழும் பிள்ளைகள் மனிதன் தீட்டும் எந்த ஒரு திட்டத்தினாலும் மாற்றப்படமுடியும் என்பதாக நினைக்கிறீர்களா? தங்களுடைய பிள்ளைகளிடமாக பொறுப்புடன் நடந்துகொள்வதற்கு பெற்றோருக்கு கல்வியளிக்கும் ஒரு திட்டத்தை நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியுமா? வருத்தத்துடன் தெரிவித்துகொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், மனிதனின் முயற்சிகள் எவ்வளவுதான் உண்மையோடு மேற்கொள்ளப்பட்டாலும், வீடு இல்லாத பிள்ளைகளின் பிரச்னைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது.
ஏன்? இந்தப் பிரச்னை தீர்க்கப்படுவதை ஒருவன் அல்லது ஒன்று தடை செய்கிறது. இயேசு ஒருவனை “இந்த உலகத்தின் அதிபதி” என்பதாக அடையாளங்காட்டியது அக்கறைக்குரியதாக இருக்கிறது. (யோவான் 14:30) அவன்தான் பிசாசாகிய சாத்தான். மனிதவர்க்கத்தின் மீது அவன் செலுத்தும் நயவஞ்சகமான செல்வாக்குதானே இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் உண்மையான மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வதற்கும் அடிப்படைத் தடையாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 4:4) எனவே, அனைத்து வீடு இல்லாத பிள்ளைகளுக்கும் வாய்ப்பிழந்த நிலையிலிருக்கும் தனிப்பட்ட ஆட்களுக்கும் நீதியான நிலைமைகள் ஏற்படவேண்டுமாயின், அந்தக் காணக்கூடாத சிருஷ்டிகள் நீக்கப்படுவது மிகவும் அவசியம். எனவே, தெருவில் வாழும் பிள்ளைகளும் துயரமும் இல்லாத ஓர் உலகமும் ஏற்படும் என்று நாம் நம்பியிருக்கலாமா? வீடு இல்லாத பிள்ளைகளுக்கு உண்மையிலேயே நிலையான நம்பிக்கை ஒன்று உண்டா? (g90 1/8)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
‘வழிநடத்துதலும் சிட்சையுமின்றி வளர்ந்த ஓர் இளைஞனுக்கு யார் உதவ விரும்புவார்கள்?’
[பக்கம் 7-ன் பெட்டி]
பிள்ளையின் உரிமைகள் பேரில் ஐ.நா. அறிக்கை:
◼ ஒரு பெயரையும் தேசத்தையும் கொண்டிருப்பதற்கான உரிமை.
◼ பாசத்துக்கும் அன்புக்கும் புரிந்துகொள்ளப்படுவதற்கும் பொருள் சம்பந்தமான பாதுகாப்புக்குமான உரிமை.
◼ போதியளவு ஊட்டச்சத்து, வீடு, மற்றும் மருத்துவ சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை.
◼ எல்லாச் சூழ்நிலைகளிலும் பாதுகாப்பும் நிவாரணமும் முதல் பெற்றுக்கொள்வதற்கான உரிமை.
◼ எல்லா வகையான அசட்டை, கொடுமை மற்றும் பிறர் சுயநலத்துக்குப் பயன்படுத்தப்படுதலுக்கு எதிராகப் பாதுகாக்கப்படும் உரிமை.
◼ பிள்ளை தன் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் சமுதாயத்தின் ஒரு பயனுள்ள உறுப்பினனாயிருப்பதற்குத் துணைபுரியும் விளையாட்டுக்கும் பொழுதுபோக்குக்கும் மற்றும் இலவச கல்விக்கும் கட்டாய கல்விக்கும் சம வாய்ப்பைக் கொண்டிருக்கும் உரிமை.
◼ சுதந்திரம் மற்றும் சுயமரியாதையின் சூழலில் தன்னுடைய முழு திறனையும் விருத்திசெய்துகொள்ளும் உரிமை.
◼ புரிந்துசெயல்படுதல், பொறுத்துப்போதல், மக்களிடையே நட்பு, சமாதானம் மற்றும் சர்வலோக சகோதரத்துவம் என்ற ஆவியில் வளர்க்கப்படும் உரிமை.
◼ இனம், நிறம், பால், மதம், அரசியல் அல்லது மற்ற கருத்துகள், தேசிய மற்றும் சமுதாய தோற்றம் மற்றும் சொத்து, பிறப்பு, அல்லது மற்ற அந்தஸ்து என்னவாயிருந்தாலும் இந்த உரிமைகளை அனுபவிக்கும் உரிமை.
ஒவ்வொரு மனிதனுடைய ஐக்கிய நாடுகள் என்பதைச் சார்ந்த சுருக்கம்