வீடு இழந்தவர்கள் ஓர் உலகப் பிரச்னை
குடியிருப்பு வசதி பற்றாக்குறையும் வீடு இழந்தவர்களின் பிரச்னையும் தேசீய வரம்புகளுக்குட்பட்டவை அல்ல; அது ஏழைகளுக்கும், வளர்ந்துவரும் தேசங்களுக்கும் மட்டுமே உரிய ஒன்றுமல்ல. எந்த விதிவிலக்குமின்றி வளர்ந்து வரும் உலகின் முக்கிய தலைநகரங்களிலும் பட்டணங்களிலும்கூட நாடோடிகள் வாழும் இடங்களும் சேரிகளும் உண்டு. வானத்தைத் தொடும் பளபளப்பான கட்டிடங்களோடும் நவீன கட்டிடங்களோடும்கூட சிறுபான்மையானோர் வாழுமிடங்களும் சீரழிந்துவரும் நகரின் உட்பகுதிகளும் இருக்கின்றன. இப்படிப்பட்ட இடங்களில் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?
சிக்காகோவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிப்பற்றி குறிப்பிட்டு, சையன்ஸ் பத்திரிகை, அங்கு வீடு இழந்தவர்களின் “தனித்தன்மைகளாக, அளவுக்கு மீறிய வறுமையையும், தனிமையையும், சரியாக செயல்பட இயலாமையையும்” குறிப்பிடுகிறது. “ஐந்துப் பேரில் ஒருவர், சிறைச்சாலைகளில், மனநல மருத்துவமனையில் அல்லது போதை மருந்து துர்ப்பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.”
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் பெரும்பாலன நகரங்களில், வீடு இழந்தவர்களுக்கு ஓரளவு பொது வசதிகள் உண்டு. உதாரணமாக நியு யார்க் நகரம், வீடு இழந்த விவாகமில்லாத தனி நபர்களை அரசாங்க உறைவிடங்களிலும் குடும்பங்களை நலத்துறை விடுதிகளிலும் தங்க வைக்கிறது. மழைக்காலம் வருகையில் விவாகமில்லாத தனி நபர்களில் 12,200 பேரும் 20,500 குடும்ப அங்கத்தினர்களும் உதவி நாடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களைத் தங்க வைக்க எப்படியாவது போதுமான இடம் கிடைக்கும் என்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட இடங்களில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது முற்றிலும் வேறு ஒரு விஷயமாகும். நியு யார்க்கில் இரவில் தங்கிச்செல்ல கட்டப்பட்டிருக்கும் பொதுக்கூடங்கள், பொதுவாக உடற்பயிற்சி பள்ளியாக அல்லது படைப்பயிற்சிப் பள்ளியாக மாற்றப்படுகிறது. ஒரு பெரிய திறந்த வெளியில் வரிசையாக படுக்கைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் தூங்குகிறார்கள். தெருவாசிகளில் சிலர் அக்கூடங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். “அக்கூடங்கள் அபாயமானவை, அநேகமாக அங்கே மூட்டைப் பூச்சிகளும் பேன்களும் இருக்கின்றன,” என்று அவநிலைக்குள்ளான ஒருவன் சொன்னான். “அங்கே உங்கள் கண்களைத் திறந்துக் கொண்டு நீங்கள் தூங்க வேண்டும்.” வாழ்க்கை விசேஷமாக பிள்ளைகளுக்கு கடினமாக இருக்கிறது. “நகரம் அவர்களை கடைசியாக அனுப்பி வைக்கும் கட்டு குடியிருப்புப் போன்ற உறைவிடங்களிலும், நெருக்கமான விடுதிகளிலும் பிள்ளைகள் வரிசையாக நோய், சரியாக செயல்பட இயலாமை, போதை மருந்துகள், குற்றச் செயல்கள் மற்றும் நம்பிக்கையற்ற நிலை போன்ற கொடுமையான பல பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்படும் நிலைமைக்குள்ளாகிறார்கள்,” என்கிறது நியு யார்க்கின் டெய்லி நியூஸ். “இந்தப் பிள்ளைகள் வழிதவறிவிடும் சந்ததியாக மாறும் அபாயத்திலிருக்கிறார்கள்.”
வீடு இழந்தவர்களின் நிலையற்றத்தன்மையின் காரணமாக துல்லிபமான எண் இலக்கங்களைப் பெறுவது அநேகமாக கடினமாக இருக்கிறது. வீடு இழந்தவர்களுக்கான தேசீய செயல் கூட்டுறவு, அமெரிக்காவில் வீடு இழந்தவர்களின் எண்ணிக்கை இருபது லட்சத்துக்கும் முப்பது லட்சத்துக்குமிடையே இருப்பதாக தெரிவிக்கிறது. மறுபட்சத்தில் அமெரிக்காவின் வீட்டுவசதித் துறையும் நகர்ப்புற வளர்ச்சித் துறையும் “கிடைக்கக்கூடிய எல்லா செய்தி குறிப்புகளின்படியும் தீர்மானிக்கையில் வீடு இழந்தவர்களின் அதிக நம்பத்தக்க வீச்சு 2,50,000-லிருந்து 3,50,000,” என்று குறிப்பிடுகிறது. வீடு இழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை எதுவாக இருந்த போதிலும், அது வளர்ந்து வருவதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.
“நம்முடைய காலத்தின் ஒரு கொடுமை”
ஐரோப்பிய சமுதாயத்திலுள்ள தேசங்களும்கூட கவலைக்குரிய குடியிருப்பு வசதிப் பிரச்னையை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் கூட்டரசில், “மிகச்சிறிய இடத்தில் வாழும் ஆட்களின் எண்ணிக்கை 1979–84-க்கிடையே 49,000-லிருந்து 1,60,000 ஆக உயர்ந்திருக்கிறது என்றும் நகரக் குழுவின் காத்திருப்போர் பட்டியலில் 12 1/2 லட்சம் ஆட்கள் இருப்பதாகவும் 10 லட்சம் வீடுகள் குடியிருப்பதற்கு தகுதியற்றதாகவும் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக” லண்டனின் தி டைம்ஸ் அறிவிப்பு செய்கிறது.
இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடைப்பட்ட இங்கிலீஷ் கடற்கால்வாய்க்கும் அப்பால் “பாரீஸில் குறைந்த பட்சம் 10,000 ஆட்களாவது தெருவாசிகளாக இருக்கிறார்கள் என்று தனியார் குழுக்கள் சொல்வதாக” தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை “ஐரோப்பாவில் வீடு இழந்தவர்கள்: நம்முடைய காலத்தின் ஒரு கொடுமை” என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறது. இத்தாலிய அரசாங்க மதிப்பீட்டின்படி, புதிதாக விவாகம் செய்து கொள்பவர்களில் 20 சதவிகிதத்தினருக்கு “முதல் குழந்தை பிறந்த பின்பும்கூட உறவினர்களோடு வாழ்வதைத் தவிர வேறு வழியிருப்பதில்லை.” டென்மார்க் நாட்டவரில் வீடு இல்லாதவர்கள் மத்தியில் “30 வயதுக்கும் கீழுள்ளவர்களின் எண்ணிக்கை 1980 முதற்கொண்டு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது.”
ஐரோப்பிய சமுதாய குழுவிற்கான சமுதாய விவகாரங்களின் ஆணையர் பீட்டர் சதர்லாண்டின்படி, இந்தத் தேசங்கள் “வறுமையையும் வீடு இழந்தவர்களின் கொடுமையையும் ஒழித்துவிடும் நிலையை அடைய ஆரம்பித்துவிட்டதாக [அவர்கள்] எண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில்” இவை அனைத்தும் நிகழ்வது வேடிக்கையாக இருக்கிறது.
கவலைக்கிடமான போக்கு
ஆனால் சமீப ஆண்டுகளில், வீடு இழந்தவர்களோடு செயல் தொடர்புக் கொள்ளும் அதிகாரிகள் புதிய ஒரு போக்கைக் கவனித்து வருகிறார்கள். சிக்காகோவில் வீடு இழந்தவர்களுக்கான செயல் கூட்டுறவின் உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு சொல்வதாக தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது: “வெறுமென ‘ஏழைகளின்’ தேவையாக இருந்ததிலிருந்து ‘திடீரென ஏழைகளாகிவிடும் நடுத்தர வர்க்கத்தினரின்’ தேவையாக இது குறிப்பிடத்தக்க வகையில் மாறி வரும் போக்கை நாங்கள் கவனிக்கிறோம். அவர்கள் தங்கள் வேலைகளையும் தங்கள் கடன் அட்டைகளையும் அடைமானப் பத்திரங்களையும் இழந்துவிடுகிறார்கள். நீங்கள் நினைப்பதுப் போல குடிகாரனே இனிமேலும் தெருவில் வசிப்பதில்லை.”
அதேவிதமாகவே, கனக்டிக்கட்டிலுள்ள சமூக சேவை ஏஜென்ஸியின் நிர்வாகி சொன்னதாவது: “துர்அதிஷ்டவசமாக வீடு இழந்தவர்கள் யார் என்பதைக் குறித்து தவறான கருத்து நிலவி வருகிறது. இவர்கள் உடைமைகளை பையில் போட்டுக் கொண்டு ஒரு நகரத்திலிருந்து மற்றொன்றுக்கு சுற்றித் திரியும் ஆட்கள் அல்ல. இவர்கள் அதிகமான வாடகை, வேலையில்லா திண்டாட்டம், விவாகரத்து போன்றவற்றின் காரணமாக வாடகை கொடுத்து தங்க இயலாத குடும்பங்களே ஆகும்.” கடந்த மே மாதம் அமெரிக்காவில் மேயர்களின் மாநாடு வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றின்படி, பிள்ளைகளையுடைய குடும்பங்கள் வீடு இழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்காக இருப்பதாகவும், முந்தைய ஆண்டைவிட இது 31 சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும் 29 முக்கிய நகரங்களில் செய்யப்பட்ட சுற்றாய்வு காண்பிக்கிறது.
சிக்கலான கேள்விகள்
குடியிருப்பு வசதிக் குறைவு பிரச்னையின் உக்கிரமமும் வீடு இழந்தவர்களின் பிரச்னையும் தேசத்துக்கு தேசமும் இடத்துக்கு இடமும் மாறுபட்ட போதிலும் இதைக் குறித்து முற்றிலும் அறியாதிருப்பவர்களோ அல்லது இதனால் முற்றிலும் பாதிக்கப்படாதிருப்பவர்களோ வெகு சிலரே இருக்க முடியும். அதிகமாக குழப்பமூட்டுவது என்னவென்றால், அரசாங்கங்கள் இதற்காக முயற்சிகளை எடுத்து பணத்தை செலவழித்த போதிலும் பிரச்னை குறைவதாக எந்த அறிகுறியும் இல்லை. இது ஏன் இப்படி? வீடு இழந்த ஆட்கள் அனைவரும் எங்கிருந்து வருகிறார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, குடியிருப்பு பிரச்னையைத் தீர்ப்பதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (g88 3⁄8)