மாறிக்கொண்டேயிருக்கும் நம் உலகம்—எதிர்காலம் உண்மையில் எதைக் கொண்டிருக்கிறது?
நம்முடைய உலகம் மேம்பட்ட நிலைக்கு மாறவேண்டுமாகில், என்ன தெரிவுகளை நாம் கொண்டிருக்கிறோம்? ஒரு தெரிவானது, உலக ஆட்சியாளர்களும் தலைவர்களும் கடைசியாக பிறர்க்கென உழைக்கும் தன்மையுடையவர்களாக ஆவார்களென்றும், பரஸ்பர சகிப்புத்தன்மை, புரிந்துகொள்ளுதல் மற்றும் சமாதான வழிகளில் மனிதவர்க்கத்தை வழிநடத்தத் தொடங்குவார்களென்றும் நம்புவதாகும்.
குலமரபுப்பற்றும் தேசப்பற்றும் துடைத்தழிக்கப்பட்டு, உலகிற்கு ஒத்திசைவைக் கொண்டுவரக்கூடிய தேசீய எல்லைகளையும் அதிகாரத்தையும் கடந்து நிற்கும் மனநிலையினால் மாற்றப்படுமென்று நம்புவதை அது அர்த்தப்படுத்துகிறது.
பெரும் அளவான வேலைவாய்ப்பின்மை, வீடின்மை மற்றும் மிக அதிகமான மருத்துவச் செலவுகளுள்ள உலகத்தில், லாப நோக்கம் மட்டுமே தேவைக்குறைவான நெறிமுறையாக இருக்கிறது என்று முதலாளித்துவப் பொருளாதாரங்களின் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்று நம்புவதையுங்கூட இது உட்படுத்துகிறது.
அதோடுகூட, உலகத்தின் எல்லா போர்த்தளவாடங்களின் உற்பத்தியாளர்களும் உலகச் சமாதானத்திற்காக ஆர்வநாட்டத்தைக் கொண்டிருக்கத் தொடங்கி, தங்களுடைய பட்டயங்களைக் கலப்பைக்கொழுக்களாக அடிப்பார்கள் என்று நம்புவதையும் இது அர்த்தப்படுத்துகிறது.
மேலுமாக, உலகக் குற்றவாளிகளின் கூறுகள், இத்தாலியில் உள்ள பயங்கரவாதிகளுடைய கும்பலின் தலைவர்கள், கிழக்கத்திய குற்றச்செயல் கும்பல்களின் தலைவர்கள், தென் அமெரிக்காவின் போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆகியோர் உட்பட, மனந்திரும்பி ஒரு மேம்பட்ட முறையில் நடக்க ஆரம்பிப்பார்கள் என்று இது அர்த்தப்படுத்துகிறது!
வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், மனிதனால் உண்டுபண்ணப்பட்ட ஒரு கற்பனை உலகில்—நடக்கமுடியாத கனவில்—நம்பிக்கை வைப்பதை அர்த்தப்படுத்துகிறது. கடவுளுடைய உதவியில்லாமல் இவையெல்லாம் நடக்கும் என்று கருதுவோமாகில், நவீன உலகத்தின் ஒரு சரித்திரம் (A History of the Modern World) என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியராகிய பால் ஜான்சன் என்பவரால் விவரிக்கப்பட்டது போன்ற ஒரு சூழ்நிலையில் நாம் இருப்போம். நம்முடைய நூற்றாண்டின் “பேரழிவுக்குரிய தோல்விகளுக்கும் துயரங்களுக்கும்” உதவியாக இருக்கும் முக்கியமான தீங்குகளில் ஒன்று, “தங்களுடைய சொந்த உதவியற்ற அறிவாற்றல்கள் மூலமாக சர்வலோகத்தின் எல்லா மறைபொருள்களையும் ஆண்களும் பெண்களும் தீர்க்கக்கூடும் என்ற செருக்கு நிறைந்த நம்பிக்கை”யாக இருக்கிறது.—ஏசாயா 2:2-4 ஒப்பிடுங்கள்.
என்றபோதிலும், உடன்பாடான மாற்றத்திற்கு போதிய ஆதாரமுள்ள தெரிவு இருக்கிறது. அது, பூமியின் சிருஷ்டிகரும், நம்முடைய கிரகத்தின் சொந்தக்காரரும் மாற்றத்தின் மிகப்பெரிய கட்டடக்கலைஞருமாகிய யெகோவா தேவன் தம்முடைய கைவேலைப்பாடுகளைப் பாதுகாப்பதற்காக மனித விவகாரங்களில் குறுக்கிடுவார் என்று நம்புவதாகும். தம்முடைய நோக்கங்களை முன்னேற்றுவிப்பதற்கு கடந்த காலத்தில் கடவுள் செயல் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று பைபிள் சரித்திரம் காட்டுகிறது, மனிதவர்க்கத்துக்கும் இந்தப் பூமிக்குமான தம்முடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மீண்டும் அவர் விரைவில் செயல் நடவடிக்கை எடுப்பார் என்று பைபிள் தீர்க்கதரிசனம் சுட்டிக்காண்பிக்கிறது.—ஏசாயா 45:18.
நம்பத்தக்கத் தகவலின் ஓர் ஒப்பற்ற ஊற்றுமூலம்
மனிதவர்க்கத்திற்கு எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையான அறிவின் ஒப்பற்ற ஊற்றுமூலம், பைபிள் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் வார்த்தைகளில் விவரிக்கப்பட்டிருக்கிறது: “முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்.”—ஏசாயா 46:9-11.
மனிதவர்க்கத்தைப் பாதிக்கவிருக்கிற சம்பவங்களின் முன்னறிவை யெகோவா தேவன் ஏன் கொண்டிருக்கவேண்டும்? மீண்டும் ஏசாயா பதிலளிக்கிறார்: “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” மனிதவர்க்கத்தின் எதிர்காலத்திற்கான கடவுளின் எண்ணங்கள் பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.—ஏசாயா 55:9.
“கையாளுவதற்குக் கடினமானக் காலங்கள்”
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், நம்முடைய சந்ததிக்கு எதை முன்னறிவித்திருக்கிறது? கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்விதமாக எச்சரித்தார்: “கடைசி நாட்களில் கையாளுவதற்கு கடினமான காலங்கள் வருமென்று அறிவாயாக.” (2 தீமோத்தேயு 3:1, NW) ஆண்டு 1914 மற்றும் முதல் உலகப் போர் முதற்கொண்டு, அதிகமதிகமாக கடினமாக ஆகியிருக்கிற காலங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதனின் சுயநலம், பேராசை, அதிகாரத்திற்கான ஆசை ஆகியவைத் தன்னுடைய உடன் மானிடருக்கு விரோதமாக மட்டுமல்லாமல், இயற்கைக்கு விரோதமாகவுங்கூட மிக மோசமான அட்டூழியங்கள் செய்வதற்கு அவனை வழிநடத்தியிருக்கிறது. தன்னுடைய சுற்றுப்புறச்சூழலுக்கான மனிதனின் அசட்டை மனப்பான்மை, தன்னுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் எதிர்கால ஜீவியத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நெருக்கடியான அபாயம் செக்கோஸ்லோவாகியாவின் முன்னாள் ஜனாதிபதி வாட்ஸ்லாஃப் ஹாஃபல் என்பவரால் சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது, அவர் அந்த நாட்டின் நிலைமையைப் பற்றி எழுதினார். உண்மையில், அவருடைய வார்த்தைகள் உலகளாவிய பொருத்தத்தைக் கொண்டிருக்கிறது: “உலகத்தினிடமாக, இயற்கையினிடமாக, மற்ற மானிடர்களிடமாக, உயிரிடமாகத்தானேயும் மனிதனுடைய மனநிலையின் . . . விளைவுகளாக இவை இருக்கின்றன. எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறேன் மற்றும் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறேன் என்று நம்புகிற, இயற்கை மற்றும் உலகத்தின் தலைவனாகத் தன்னை பெயரிட்டுக்கொள்கிற நவீன மனிதனுடைய இறுமாப்பின் . . . விளைவுகளாக இவை இருக்கின்றன. தன்னைவிட மேலான . . . எவற்றையும் ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கின்ற மனிதனின் யோசனை இப்படியாக இருந்தது.”
முன்பு மேற்கோள்காட்டப்பட்ட அல் கோர் இவ்விதமாக எழுதினார்: “அநேகர் தங்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் நடைமுறையில், நாகரீகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், நம்முடைய எதிர்காலம் இப்பொழுது அதிக சந்தேகத்தில் இருப்பதுபோல் நம்முடைய தற்போதைய தேவைகளின்மீதும் குறுகிய-கால பிரச்னைகளின்மீதும் பிரத்தியேகமாக ஒருமுகப்படுத்துவது அதிக அறிவுள்ள காரியமாக நாம் செயல்பட ஆரம்பித்திருக்கிறோம்.” (பூமி தராசில், Earth in the Balance) எதிர்காலம் சம்பந்தமாக, நிச்சயமாகவே நல்லது நடக்காது என்ற மனநிலை எங்கும் காணப்படுகிற மனநிலையாக இருக்கிறது.
இந்தச் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதற்கு பகுதியளவான காரணம் பவுலினுடைய மேலுமான வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன: “மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”—2 தீமோத்தேயு 3:2-5.
ஒரு மேம்பட்ட மாற்றீடு
ஆனால் இந்தப் பூமியின்மீது காரியங்கள் மேம்பட்ட நிலைமைக்கு மாறும் என்று கடவுள் நோக்கங்கொண்டிருக்கிறார். “நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும்” உண்டாக்குவேன் என்று அவர் வாக்களித்திருக்கிறார். (2 பேதுரு 3:13) இந்த மாசுபடுத்தப்பட்ட பூமியைப் பரதீஸிய நிலைமைக்கு நிலைநாட்டுவதற்கு, யெகோவா தேவன் முதலாவதாக ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கவேண்டும்’. (வெளிப்படுத்துதல் 11:18) இது எவ்விதமாக சம்பவிக்கப்போகிறது?
மனிதவர்க்கத்தின் சரித்திரத்தில் ஒருவேளை மிக அதிக எதிரிடையான சக்தி—தேசீயஞ்சார்ந்த மற்றும் பூமிமுழுவதுமாக மதத்தின் பிளவுபட்ட செல்வாக்கின் வல்லமையையும் கெளரவத்தையும் அழிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் உட்பட, அரசியல் கூறுகளின் இருதயங்களைக் கடவுள் விரைவில் ஏவிடுவார் என்று அடையாள அர்த்தமுள்ள மொழியை உபயோகித்து பைபிள் சுட்டிக்காண்பிக்கிறது.a “மதத்தின் மனநிலைகள், நம்பிக்கைகள், மதவெறிகள் ஆகியவைக் கடைசி 300 ஆண்டுகளாக, குறைந்தபட்சம் மேற்கில், அது கொண்டிருக்கிறதைவிட ஆயுதம்தாங்கிய சண்டைகளின் செயல்நோக்கங்களில் ஒரு பெரிய பங்கை அது வகிக்கும் என்று எதிர்பார்க்க காரணமிருக்கிறது” என்று யுத்தத்தின் உருமாற்றம் (The Transformation of War) என்ற தன்னுடைய புத்தகத்தில் மார்ட்டின் ஃபேன் கிரீஃபெல்டு கூறுகிறார். மதம் அரசியலில் தலையிடுவதன் காரணமாக, அரசியல் அதிகாரங்களின் கைகளில் துன்புறுவது சாத்தியமாயிருக்கிறது. என்றபோதிலும், அந்த வல்லரசுகள் அறியாமலேயே கடவுளின் சித்தத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கும்.—வெளிப்படுத்துதல் 17:16, 17; 18:21, 24.
சுரண்டிவாழ்கிற, சாத்தானிய ஊழல் நிரம்பிய உலக ஒழுங்குமுறையின் மிருகம்போன்ற அரசியல் சக்திகள்மீது அடுத்ததாகக் கடவுள் தம்முடைய கவனத்தைத் திருப்புவார் என்றும் தம்முடைய கடைசிப் போரில், அல்லது அர்மகெதோன் யுத்தத்தில் அவர்களை ஈடுபடுத்துவார் என்றும் பைபிள் தொடர்ந்து காட்டுகிறது. இந்த இரக்கமற்ற அரசியல் ஒழுங்குமுறைகளையும், அவர்களுடைய கைதேர்ந்த சூழ்ச்சித்திறம் வாய்ந்தவனாகிய சாத்தானையும் நீக்கிவிட்ட பிறகு, கடவுள் வாக்களித்திருக்கிற சமாதானமான புதிய உலகத்துக்குரிய வழி ஆயத்தமாயிருக்கும்.b—வெளிப்படுத்துதல் 13:1, 2; 16:14-16.
யெகோவாவின் சாட்சிகள் ஏறக்குறைய 80 ஆண்டுகளாக வரவிருக்கிற இந்த மாற்றங்களை வீடு வீடாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தக் காலப்பகுதியில், மனிதவர்க்கம் செய்திருக்கிற அநேக மாற்றங்களை அவர்களுங்கூட கண்டிருக்கின்றனர் மற்றும் அனுபவித்திருக்கின்றனர். தங்களுடைய பைபிள்-அடிப்படையிலான நியமங்களின் காரணமாக நாசி சிறைச்சாலைகளிலும் கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும் இருந்திருக்கின்றனர். ஆப்பிரிக்காவின் பல பாகங்களில், உள்நாட்டுப் போர்கள் மற்றும் குலமரபுச் சண்டைகள் உட்பட, கடுந்துயரங்களையும், வாழ்க்கையின் துன்பத்தையும் அவர்கள் அனுபவித்திருக்கின்றனர். தங்களுடைய நடுநிலைவகிப்பின் காரணமாகவும் தங்களுடைய வைராக்கியமான பிரசங்க வேலையின் காரணமாகவும் அதிகமான அரசியல் மற்றும் மதசம்பந்தமான அமைப்புகளின் கைகளில் துன்புறுத்தலைச் சகித்திருக்கின்றனர். என்றபோதிலும், இவையெல்லாம் இருந்தும், 1914-ல் சில ஆயிரங்களிலிருந்து 1993-ல் ஏறக்குறைய 45 இலட்சத்திற்கு அவர்கள் வளர்ந்திருக்கிறபடியால், அவர்களுடைய உலகளாவிய கல்விபுகட்டும் வேலையின்மீது யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கண்டிருக்கின்றனர்.
நல்லதே நடக்குமென்ற நம்பிக்கைக்கான காரணங்கள்
கெட்டதே நடக்கும் என்ற மனநிலையினால் மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக, இந்தப் பூமியின்மீது விரைவிலேயே மிகச்சிறந்ததும் மிகப்பெரியதுமான மாற்றங்கள் சம்பவிக்குமென்று அவர்கள் அறிந்திருக்கிற காரணத்தினால், சாட்சிகள் நல்லதே நடக்குமென்ற ஒரு நோக்குநிலையைக் கொண்டிருக்கின்றனர். ராஜ்ய வல்லமையில் அவருடைய காணக்கூடாத வந்திருத்தலின் காலத்தைக் குறித்துக்காட்டிய இயேசு கொடுத்த தீர்க்கதரிசனங்களின் சம்பவங்கள் 1914-லிருந்து நிறைவேறியிருக்கின்றன. சமீபத்திய எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளை ஒரு பிரெஞ்சு எழுத்தாளர் லீ மாண்டு விவரித்ததுபோல, மனிதனால்-ஏவப்பட்ட “புதிய உலக ஒழுங்கற்றமுறை”க்கான முடிவின் காலத்தில் நாம் இருக்கிறோம். இயேசு இவ்விதமாகச் சொன்னார்: “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.”—லூக்கா 21:7-32.
புகழார்வம், அதிகாரத்திற்கான ஆசை, பேராசை, இலஞ்ச ஊழல், அநீதி ஆகிய மனித சுபாவத்தின் குறைகளால் மனிதனின் “புதிய உலக ஒழுங்குமுறை” பாதிக்கப்படக்கூடியதாய் இருக்கிறது. கடவுளுடைய புதிய உலகம் நீதிக்கு உத்தரவாதமளிக்கும். அவரைக்குறித்து இவ்விதமாக எழுதப்பட்டிருக்கிறது: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.
“மக்களின் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும் குறுகிய தேசீயஞ்சார்ந்த உணர்ச்சிகளை” மனிதனின் “புதிய உலக ஒழுங்குமுறை” ஏற்க மனமுள்ளதாக இருக்கும், என்று ஐ.மா.-வின் அயல்நாட்டுக் கொள்கையின்பேரில் வல்லுநரான மெக்ஜார்ஜ் பண்டி குறிப்பிடுகிறார். தொடர்ந்து அவர் இவ்விதமாகச் சொன்னார்: “பொருளாதார மற்றும் சமுதாயத் தோல்விகள் இத்தகைய தீவிரவாதிகளுக்கு எவ்வாறு பலத்தை அளிக்கக்கூடும் என்று நாம் சரித்திரத்திலிருந்து அறிந்திருக்கிறோம். அது எங்கு நடந்தாலும் சரி, அந்த வகையான தேசப்பற்று ஆபத்தானதாயிருக்கிறது என்றுங்கூட நாம் அறிந்திருக்கிறோம்.”
கடவுளின் புதிய உலகம், எல்லா குலத்தவரிடையேயும் தேசங்களிடையேயும் ஒத்திசைவையும் சமாதானத்தையும் உறுதியளிக்கிறது, ஏனென்றால் யெகோவாவினுடைய பாரபட்சமற்ற மற்றும் அன்பின் வழிகளில் அவர்கள் போதிக்கப்பட்டிருப்பார்கள். ஏசாயா தீர்க்கதரிசனமுரைத்தார்: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாயிருக்கும்.” (ஏசாயா 54:13) மேலும் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
சந்தேகமில்லாமல், நாம் அறிந்திருக்கிற இந்த உலகத்தில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் சமீபத்திய எதிர்காலத்தில் இருக்கும். என்றபோதிலும், மிகப்பெரிய மாற்றங்கள், நிரந்தரமும் பிரயோஜனமுமான மாற்றங்கள், கடவுள் கொண்டுவருவதாக வாக்களித்திருக்கிறவையாக இருக்கின்றன, அவர் “பொய்யுரையாத”வர்.—தீத்து 1:3. (g93 1/8)
[அடிக்குறிப்புகள்]
a ‘மகா பாபிலோன், வேசிகளின் தாயாக,’ அவளுடைய ‘பாவங்கள் வானபரியந்தம் எட்டியிருக்கிற’ இரத்தக்கறைபடிந்த ஒரு ராஜஸ்திரீயாக பைபிளில் பொய் மத உலகப் பேரரசு அடையாளங்காட்டப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:3-6, 16-18; 18:5-7) மகா பாபிலோனின் அடையாளத்தைப் பற்றிய ஒரு விரிவான விளக்கத்திற்காக உவாட்ச்டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டி வெளியிட்டிருக்கும் மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல், (Mankind’s Search for God) புத்தகத்தில் பக்கங்கள் 368-71 பாருங்கள்.
b பைபிளில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட இந்தச் சம்பவங்களைப் பற்றிய அதிகவிரிவான விளக்கத்திற்காக, உவாட்ச்டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டி 1988-ல் வெளியிட்டிருக்கிற வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! (Revelation—Its Grand Climax At Hand!) புத்தகத்தில் அதிகாரங்கள் 30-42 பாருங்கள்.