பைபிளின் கருத்து
அறக்கொடைகள்—ஒரு கிறிஸ்தவ கடமையா?
பத்து வருடங்களுக்குக் குறைவான காலத்திற்கு முன், தென்கிழக்கு ஐக்கிய மாகாணங்களைத் தலைமையிடமாகக் கொண்ட, PTL (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்) க்ளப், ஒரு மத அறக்கொடையாக நன்கொடைகளை வேண்டிக்கொண்டது. ஒரு செயற்கைக்கோள்-டிவி இணையமைப்பையும் அஞ்சல் அமைப்பையும் பயன்படுத்தி கோடிக்கணக்கான டாலர்களை வசூலித்தார்கள். அவை யாவும்—நற்செய்தியைப் பரப்பும் வெளிவேஷத்தில்—தங்கள் கஜானாவிற்குள் வந்து குவிந்தன.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் க்ளபின் முன்னாள் தலைவர் ஜிம் பேக்கருக்கும் அவருடைய மனைவி டேமிக்கும் சேர்த்து “1986-ல் சம்பளமாகவும் மிகையூதியங்களாகவும் $16 லட்சம் கொடுக்கப்பட்டதாக அறிக்கை செய்யப்பட்டனர்,” என்று கூறிய அசோஷியேட்டட் ப்ரஸ் செய்தி அறிக்கைகளை வாசித்தபோது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் க்ளபிற்குப் பணம் அனுப்பிய ஆயிரக்கணக்கானோர் எவ்வாறு உணர்ந்திருப்பர் என கற்பனை செய்து பாருங்கள். அதைவிட இன்னும் மோசமாக, அந்த அறிக்கை மேலும் கூறியது: “அந்த ஊழிய அமைப்புக் குறைந்தபட்சம் $5 கோடி நஷ்டத்தில் இருந்தபோதிலும் அந்த ஊதியங்கள் கொடுக்கப்பட்டன. . . . கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பணத்தில் $2,65,000 [ஜெஸிகா] ஹானுக்காக தனியே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது. இது பேக்கரோடு அவள் கொண்டிருந்த [பாலுறவு] தொடர்பைப்பற்றி யாரிடமும் சொல்லாமலிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேயாகும்.”
தன்னைப் பின்பற்றியோரை மோசடி செய்ததற்காக பேக்கருக்குச் சிறை தண்டனை விதித்ததற்கு முன், விசாரணையின்போது நீதிபதி சொன்னார்: “நம்மில் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் பணம் பிடுங்கும் பிரசங்கிகளுக்கும் பாதிரிகளுக்கும் உறிஞ்சப்படுகிற சாறாக இருந்து வெறுப்படைந்திருக்கிறோம்.”
நன்கொடையாளர்களின் உணர்ச்சிகளைத் தூண்டியெழுப்பி, வரக்கூடிய பெரும்பாலான பணத்தைத் தங்கள் பாக்கெட்டில் திணித்துக்கொள்வது மதம் மட்டுமல்ல. நன்கொடை திரட்டுபவர்களில் சிலர் தாங்கள் வேண்டிக்கொண்ட நன்கொடைகளில் 90 சதவீதத்திற்கு மேல் தங்களுக்காக ஒதுக்கி வைப்பது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானதல்ல.
ஆகவே, மக்கள் அத்தகைய அறக்கொடை நிறுவனங்கள் வெறுத்துவருகின்றனர் என்பதில் ஏதேனும் ஆச்சரியமுண்டா? இருப்பினும் கிறிஸ்தவர்கள் என்ன செய்யவேண்டும்? ஒழுங்கமைக்கப்பட்ட அறக்கொடை நிறுவனங்களுக்குக் கொடுக்க அவர்கள் கடமைப்பட்டிருக்கின்றனரா? மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது பணத்தின் ஞானமான உபயோகத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள பைபிள் என்ன வழிநடத்துதல்களைக் கொடுக்கிறது? மற்றவர்களுக்கு உதவி செய்யும் மிகச் சிறந்த மற்றும் மிகவும் நடைமுறையான வழி எது?
கொடுத்தல்—சரி மற்றும் தவறு
நிச்சயப்படுத்திக்கொள்ள, தேவையிலிருப்பவர்களிடம் தயை மற்றும் தாராள குணத்தைக் காட்டுவதே பைபிளின் ஆலோசனையாகும். பூர்வீகக் காலங்களிலிருந்தே ‘தாராளமாய்க் கொடுக்கவும், உதாரகுணமுள்ளவர்களாயிருக்கவும்’ கடவுளுடைய ஜனங்கள் உற்சாகப்படுத்தப்பட்டிருக்கின்றனர். (1 தீமோத்தேயு 6:18; உபாகமம் 15:7, 10, 11) உண்மையில், 1 யோவான் 3:17-ல் கிறிஸ்தவர்கள் இவ்வாறு கூறப்படுகின்றனர்: “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?”
கொடுங்கள், ஆம், கொடுங்கள்; ஆனால் எச்சரிக்கையாயிருங்கள்! அறக்கொடை நிறுவனங்களாலும், மதங்களாலும், வருடாந்தர சமூக-சேவை திட்டங்களாலும் வாடிக்கையாக நன்கொடை வேண்டப்படுகிறோம்; அநேகர் கட்டாயப்படுத்தும் வேண்டுகோள்களை விடுக்கின்றனர். எனினும், இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது இந்த பைபிள் நீதிமொழியை நினைவில் வைப்பது நல்லது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) அதாவது, அறக்கொடை நிறுவனங்களின் உறுதிமொழிகளையும் உரிமைபாராட்டுதல்களையும் முகமதிப்புக்காக ஏற்றுக்கொள்வதைப்பற்றி எச்சரிக்கையாயிருங்கள். திரட்டப்பட்ட பணம் உண்மையிலேயே எவ்வாறு உபயோகிக்கப்படுகிறது? நன்கொடை அளிக்கப்படக்கூடிய அமைப்புகள் ஒரு கிறிஸ்தவன் ஆதரிக்கவேண்டியவையா? அவற்றின் செயல் நடவடிக்கைகள் அரசியல், தேசியம், அல்லது பொய் மதம் போன்றவற்றோடு தொடர்புள்ளவையா? நாம் நேர்ந்துகொண்டதன் நோக்கம் நடைமுறையானதா மற்றும் வேதவசனத்தின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இல்லாமலிருக்கிறதா?
சில அறக்கொடை நிறுவனங்களால் தேவையிலுள்ள ஜனங்களுக்கு அதிக நன்மை செய்யமுடிகிறது. இயற்கை அழிவுகளால் அல்லது அழிவுக்குரிய நோய்களால் பாதிக்கப்பட்டபோது கிறிஸ்தவர்களும்கூட அத்தகைய அறக்கொடை நிறுவனங்களிடமிருந்து பலமுறை நன்மை பெற்றிருக்கின்றனர். இருந்தபோதிலும், மற்ற அறக்கொடை நிறுவனங்கள், அதிக நிர்வாக செலவு அல்லது அதிக பண-வசூலிப்புச் செலவுகளைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, திரட்டப்பட்ட பணத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற உண்மையாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் மிகப் பெரிய ஆதாயமற்ற அமைப்புகளில், அறக்கொடை நிறுவனங்களையும் உட்படுத்திய 117 அமைப்புகளில் நடத்தப்பட்ட ஒரு சமீபகால சுற்றாய்வு, அவற்றில் கால்பகுதிக்கும் மேல் தங்களுடைய நிர்வாக உயர் அதிகாரிகளுக்கு வருடாந்தர சம்பளமாக $2,00,000 அல்லது அதற்கு அதிகத்தைக் கொடுக்கின்றன என கண்டுபிடித்தது. சுகபோக காரியங்களுக்கான செலவுகளையும் செல்வசெழிப்பு மிக்க ஒரு வாழ்க்கை பாணிக்குப் பணம் கொடுத்தலையும் தணிக்கைகள் அடிக்கடி வெளிப்படுத்துகின்றன. அறக்கொடை நிறுவனத்தின் பெயர் என்னவாக இருந்தாலும், அத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை கொடுப்பது தேவையிலிருப்பவர்களுக்கு உதவி செய்வதற்கான பைபிள் கட்டளையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
சமநிலையான ஒரு நோக்குநிலை
தன்னுடைய பணத்தை வீணாக்க—அல்லது அதிலும் மோசமாக, தன்னல ஊழியஞ்செய்யும் மனிதர்களால் அது உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்க—யாரும் விரும்பமாட்டார்கள். இருந்தாலும் கொடுக்கும் விஷயத்தில் சந்தேகிக்கிற மனநிலை வளராதபடி காத்துக்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. ஏதோ ஒரு சில “அறக்கொடை நிறுவனங்களின்” திறமையின்மையை அல்லது நேர்மையின்மையையுங்கூட, தேவையிலிருப்பவர்களை அசட்டை செய்வதற்கோ அல்லது இரக்க உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கோ ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொள்ளாதிருங்கள். நீதிமொழிகள் 3:27, 28 இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “நன்மைசெய்யும்படிக்கு உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.” (1 யோவான் 3:18-ஐ ஒப்பிடவும்.) ஒழுங்கமைக்கப்பட்ட அறக்கொடை நிறுவனங்கள் எல்லாம் வீணானவை அல்லது மோசடி செய்பவை என்று கற்பனை செய்யாதீர்கள். உண்மைகளை ஆராய்ந்து பார்த்துவிட்டு, பிறகு கொடுப்பதா, வேண்டாமா என்று ஒரு சொந்த தீர்மானம் எடுங்கள்.
தேவையிலுள்ள தனி ஆட்களுக்கும் குடும்பங்களுக்கும், நேரடியான சொந்த பரிசுகளைக் கொடுப்பதன் மூலம் உதவிசெய்ய அநேகர் விரும்புகின்றனர். இதனால், தங்களுடைய நன்கொடைகளின் நடைமுறையான மற்றும் உடனடி உபயோகத்தைப்பற்றி கொடுப்பவர்கள் நிச்சயமாய் இருக்கின்றனர். இது வார்த்தைகளாலும் செய்கைகளாலும் கட்டுவதற்கான மற்றும் தயையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும்கூட கொடுக்கிறது. பொருள்வகையில் கொடுப்பதற்கு உங்களிடம் அதிகம் இல்லையென்றாலும், இன்னும் நீங்கள் கொடுப்பதனால் வரும் மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும். அத்தகைய உதவிக்கான உண்மையான ஒரு தேவையைப்பற்றி அடுத்தமுறை நீங்கள் கேள்விப்படும்போது, உங்களால் கொடுக்கமுடிந்ததை 2 கொரிந்தியர் 8:12-ல் சொல்லப்பட்ட இந்த மனநிலையோடு கொடுங்கள்: “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.”
சில சமயங்களில் மிகச் சிறந்ததைச் செய்வது பணத்தைவிட வேறு ஏதாவதாக இருக்கலாம் என்பதையும்கூட மனதில் வையுங்கள். இயேசு தம்முடைய சீஷர்களிடம், “போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். . . . இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்,” என்று சொன்னார். (மத்தேயு 10:7, 8) இன்றும் அதேபோல—வாழ்க்கையை மேம்படுத்தி நம்பிக்கை தருகிற—ராஜ்ய பிரசங்க வேலையை ஆதரிப்பதில் செலவு செய்யும் நேரம், சக்தி, மற்றும் பணம் எல்லாம் மிகச் சிறந்த வகை அறக்கொடை என்பதைக் கிறிஸ்தவர்கள் உணருகின்றனர்.
அப்படியானால், தயையுடனும், தாராள குணத்துடனும், நடைமுறையாகவும் இருப்பதே பைபிளின் கருத்தாகும். பொருளாதார உதவி அடிக்கடி தேவைப்படுகிறது, ஆகவே அந்தத் தேவையை அசட்டை செய்யக்கூடாது என இது நமக்கு நினைவூட்டுகிறது. அதே சமயம் உங்கள் பணத்தை வேண்டுகிற எல்லாருக்குமே கொடுக்கவேண்டிய கடமை இருப்பதாக உணராதீர்கள். உங்களிடம் உள்ள பணத்தைக் கடவுளைச் சந்தோஷப்படுத்தும்வகையிலும் உங்கள் சொந்த குடும்பத்தினருக்கும், உங்கள் சகமனிதருக்கும் மிகப் பெரிய நடைமுறையான உதவி செய்யும்வகையிலும் எவ்வாறு உபயோகிப்பது என்று யோசித்துப்பாருங்கள். (1 தீமோத்தேயு 5:8; யாக்கோபு 2:15, 16) மற்றவரின்—ஆவிக்குரிய மற்றும் பொருளாதார—தேவைகளை உணரவும் அவற்றிற்குப் பிரதிபலிக்கவும் விழிப்புள்ளவர்களாய் இருப்பதில் இயேசுவைப் பின்பற்றுங்கள். எபிரெயர் 13:16 சொல்வதைப்போன்று, “நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (g93 6/8)