உடற்பயிற்சியின்மை உங்களைக் கொல்லலாம்
அதுதான் அமெரிக்க இருதய சங்கம், கனடாவின் இருதய மற்றும் இரத்த உட்கசிவு ஸ்தாபனம் ஆகிய இரண்டிலுமிருந்து வருகிற செய்தியாகும். பல பத்தாண்டுகளாக, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து ஆகியவைதான் இருதய நோய்க்கான கட்டுப்படுத்தக்கூடிய பெரிய ஆபத்தான காரணிகள் என்பதாக பட்டியலிடப்பட்டன. ஆனால் 1992-ல் மற்றொரு காரணி சேர்க்கப்பட்டது—உடற்பயிற்சியின்மை. அது ஒருவேளை கட்டுப்படுத்துவதற்கு மிக எளிதான ஒன்றாக இருக்கலாம்.
“சும்மா அதைச் செய்யுங்கள், தவறாமல் செய்யுங்கள்,” என்று டெக்ஸஸ், டல்லஸைச் சேர்ந்த டாக்டர் ஜான் டன்கன் சொன்னார். வருந்தத்தக்க விதமாக, பெரும்பாலானோர் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதில்லை. “கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களில் ஆரோக்கியமாய் இருப்பதற்கான வெறியில், அமெரிக்கர்களில் அதிகமானோர் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற தவறான எண்ணம் அமெரிக்காவில் இருக்கிறது” என்று உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுகளின் தலைமை ஆலோசனைக்குழு துணைத் தலைவராக இருக்கும் டாம் மக்மில்லன் என்பவர் சொன்னார். “அது உண்மை அல்ல. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிற சுமார் 2,50,000 மரணங்களுக்கு உடற்பயிற்சியின்மை காரணமாக கூறப்படுகின்றன.”
ஐ.நா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்களின் இயக்குநராக பொறுப்புவகிக்கிற டாக்டர் உவால்டர் R. டாவ்டல் சொல்கிறபடி, “நல்ல ஆரோக்கியமான நன்மைகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட அளவுகளுக்கு, இன்று அமெரிக்கர்களில் 22 சதவீதத்தினரே உடற்பயிற்சி செய்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் உயர்மட்ட அளவாக இருக்கிற உடற்பயிற்சியின்மையை முறியடிப்பதற்கு தேசியளவிலான முயற்சி தேவைப்படுகிறது.”
கடினமான உடற்பயிற்சி தேவைப்படுகிறதில்லை, கனடாவின் மெடிக்கல் போஸ்ட் அறிக்கைசெய்தபடி: “சாவதானமாக உலாவுதல்கூட ஆரோக்கியமான நன்மைகளை விளைவிக்கலாம் என்பதை புதிய ஆராய்ச்சி உறுதிப்படுத்தியிருக்கிறது.” கனடா, டோரன்டோவிலுள்ள வெல்ஸ்லீ மருத்துவமனையில் இருதயயியல் துறையின் தலைவராக இருக்கிற டாக்டர் அன்தோனி கிரஹாம் இவ்வாறு விளக்கினார்: “நாங்கள் இங்கு மிதமான உடற்பயிற்சியை, வாரத்தில் அநேக தடவைகள் ஒழுங்கான அடிப்படையில் உங்களுடைய தோட்டத்தில் வேலைசெய்வதுபோன்ற மிதமான ஏதோ வகையான ஒழுங்காகச் செய்கிற உடற்பயிற்சியை, அல்லது ஓரளவுக்கு குறைந்த தூரம் நடந்துசெல்வதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். . . . ஓர் ஒழுங்கான அடிப்படையில் செய்யப்படுகிற இந்த அளவிலான உடற்பயிற்சியும்கூட ஒருவருடைய தனிப்பட்ட ஆபத்தைக் குறைக்கும் என்பதை நாங்கள் இப்பொழுது கற்றுக்கொண்டுவருகிறோம். இது, உடற்பயிற்சி செய்ய அக்கறைகொள்கிற ‘அனைவருக்குமான ஓர் அணுகுமுறை.’”
தென் கரோலினா பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரஸல் ஒத்துக்கொண்டு சொன்னதாவது: “உடற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கும் ஒருவாரத்தில் அங்கு ஐந்து மணிநேரங்கள் செலவழிப்பதற்கும் முடியவில்லையென்றால், அதை மறந்துவிடுங்கள் என்ற கருத்தை இலட்சோப லட்ச மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்பும்படி செய்யப்படுகிறேன். சாப்பாட்டிற்குப் பிறகு வளாகத்தைச் சுற்றிய ஓர் இதமான, செளகரியமான நடையானது செய்வதற்கான மிகவும் விரும்பத்தக்க காரியம் என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்புதலளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”
மிதமான உடற்பயிற்சியும்கூட உங்களுடைய ஆரோக்கியத்திற்கு நன்மையளிப்பதாய் இருப்பதால், உங்களால் ஒழுங்காக நடக்கவோ ஓர் எலிவேட்டரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் மேலும் கீழும் ஏறியிறங்கவோ முடியுமா? நீங்கள் செல்லவேண்டிய இடத்திலிருந்து, ஒருவேளை மளிகை கடையிலிருந்து தொலைவாக காரை நிறுத்திவிட்டு, மீதி தூரம் ஏன் நடந்துசெல்லக்கூடாது? “ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட, ஏதோவொன்றை செய்வது மேல்” என்பதாகச் சொல்கிறார் பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் எலும்பியல் தலைவர் ராபர்ட் E. லீச்.