இளைஞர் கேட்கின்றனர்
எனக்கு ஏன் இவ்வித உணர்ச்சிகள் வருகின்றன?
“எனக்குள்ளே ஒரு போராட்டம் நடந்துகொண்டிருப்பதுபோல ஓர் உணர்ச்சி. உதவிக்காக யாரிடம் போவதென்றே தெரியவில்லை.”—பாப்.
அநேக வாலிபர்கள் இதைப்போன்றே மனதில் உபத்திரவப்படுகின்றனர். எதிர்பாலார்மீதான ஆசையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் தங்களுடைய சகாக்களைப் போலில்லாமல், தங்களுடைய சொந்த பாலினத்தவர்மீதே தங்களுக்கு அளவிலா மோகம் ஏற்படுவதாக காண்கின்றனர். அநேகருக்கு இது தகர்த்தெறியும் ஒரு உணர்ச்சியாக இருக்கிறது.
“அவளுடைய உடல்நலம் மோசமாகத் தொடங்கியது, அவளால் சாப்பிடவோ தூங்கவோ முடியாமற்போயிற்று. மனச்சோர்வுற்றவளாகவும், உணர்ச்சியற்றவளாகவும் ஆனாள். தற்கொலை செய்துகொள்ளவும்கூட முயற்சித்தாள்,” என்று ஒரு பெண் தன் மகளைப்பற்றி கூறினாள். இந்தப் பெருந்துயரத்திற்கான முக்கிய காரணம்? “அவளுக்கு ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியின் உணர்வுகள் வந்தன.” அத்தகைய மனச்சாய்வுகளை மேற்கொள்வதென்பது சிலருக்குச் சுலபமாக இல்லாமலிருக்கலாம். “இன்னும் பருவவயதை அடையாத ஒரு பையனாக நான் இருந்தபோது,” ஒரு வாலிபன் மனம்திறந்து சொல்லுகிறான், அவனுடைய பெயர் மாற்கு என்று வைத்துக்கொள்ளலாமே. “என்னுடைய நண்பர்கள் சிலரோடு ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியை அனுபவிக்க ஆரம்பித்தேன். என் வளரிளமைப் பருவத்திலும் இதைத் தொடர்ந்து, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கத் தொடங்கியது வரை இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்திருந்தேன். ஆனால் இன்னும் சில வேளைகளில் எனக்குள் தவறான உணர்ச்சிகள் எழும்பின.”
தன்னுடைய சொந்த பாலினத்தைச் சேர்ந்தவர்மீது கவர்ச்சிகொள்ளும்படி ஒரு வாலிபரைத் தூண்டுவது எது? மேலும் அவனோ அவளோ அத்தகைய உணர்ச்சிகளால் அல்லல்படும்போது, ஒரு வாலிபர் என்ன செய்யவேண்டும்?
இயல்பாக ஏற்படுவதா வளர்த்துக் கொள்வதா?
ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்காரர்கள் பிறக்கும்போதே அவ்வாறுதான் பிறக்கின்றனர்; ஆகவே அத்தகைய பாலின சேர்க்கை மாற்ற முடியாதது என்று சொல்வது இன்றைய நாட்களில் பொதுவானதாக இருக்கிறது. உதாரணமாக, டைம் பத்திரிகை, “ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்கார ஆண்களின் மூளை வடிவிற்கும், இருபாலினப் புணர்ச்சிக்கார ஆண்களின் மூளை வடிவிற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது என்பதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது,” என்பதாக திடீரென அறிவித்தது. இருந்தபோதிலும், எய்ட்ஸால் மரித்த ஆட்களின் மூளைகளை வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டதாகும். நிச்சயமாகவே, இது ஒரு நிரூபணமாக இருக்கவில்லை!
மற்றொரு கோட்பாடு ஹார்மோன்களை உட்படுத்துகிறது. ஆண்பால் ஹார்மோன்கள் குறைவாயுள்ள பரிசோதனைக்கூட எலிகள், “பெண்பால்” புணர்ச்சிப் பழக்கங்களைக் கொண்டிருந்தன என்பதாக விஞ்ஞானிகள் கவனித்திருக்கின்றனர். அதைப்போலவே, ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்காரர்கள் உயிரியல் விபத்துக்கு—பிறப்புக்குமுன் அநேக அல்லது மிகவும் சில ஆண்பாலின ஹார்மோன்களின் ஆதிக்கத்திற்கு—பலியானவர்களாக இருக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள். ஆனாலும் எலிகளுக்கு மத்தியில் காணப்படும் இந்த விநோதமான பழக்கம் அனிச்சை செயல்தானே தவிர, உண்மையில் ‘ஒத்தப் பாலினப் புணர்ச்சி’ அல்ல என்பதாக அநேக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல், மனிதர்கள் எலிகளல்லவே. தி ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் மென்டல் ஹெல்த் லெட்டர் இவ்வாறு வாதாடுகிறது: “பிறக்குமுன் உண்டாகும் ஹார்மோன்கள், எலிகளின் புணர்ச்சிப் பழக்கத்தில் உட்பட்டிருக்கும் அனிச்சை செயல்களை ஒருங்கிணைப்பதைப் போன்று நேரடியாக . . . மனித பாலினத்தின்மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான வாய்ப்பு மிகமிக அரிதே.”
மரபியல் ஆராய்ச்சிகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. ஒரேமாதிரி இருக்கும் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்த ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்கார ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில், அவர்களின் உடன்பிறப்புகளில் சுமார் பாதிபேர் இதேபோல ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்காரர்களாக இருக்கின்றனர். மோனோஸைகோட்டிக் [ஒத்திருக்கும்] இரட்டையர் மரபியல் மறுபடிவங்களாக இருப்பதனால், ஏதோவொரு மர்ம ஜீன் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற முடிவுக்கு வருவது நியாயமானதாக தோன்றுகிறது. இருப்பினும், இரட்டையர்களின் உடன்பிறப்புகளில் பாதிப்பேர் ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்காரர்களாக இருக்கவில்லை என்பதை கவனியுங்கள். இந்தக் குணாதிசயம் உண்மையில் மரபியலிலேயே திட்டமிடப்பட்டிருந்தால், எல்லா இரட்டையருக்குமே இந்தக் குணம் இருக்கவேண்டும் அல்லவா? ஜீன்களும் ஹார்மோன்களும் ஓரளவு பங்கு வகிக்கின்றன என்பது உண்மைதான். அப்படியே ஸயன்ட்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையும்கூட “பாலின சேர்க்கைக்குச் சுற்றுச்சூழல் கணிசமாக பங்களிக்கிறது என்று” அத்தாட்சி “உறுதியாக கருத்துத் தெரிவிக்கிற” சிலருடைய கண்டுபிடிப்புகளை அறிக்கை செய்தது.
சுற்றுச்சூழல் காரணிகள்
பண்டைய கிரீஸில் நிலவியிருந்த சுற்றுச்சூழலைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். புராணக் கதைகளில் உள்ள தங்களுடைய கடவுள்களில் சிலரைப் பற்றிய காமக்கதைகள், பிளேட்டோவைப் போன்ற தத்துவஞானிகளின் நூல்கள், வாலிபர்கள் ஆடையின்றி உடற்பயிற்சிசெய்யும் உடற்பயிற்சி பண்பாடு போன்றவற்றால் தூண்டிவிடப்பட்டு, ஒத்தப் பாலினப் புணர்ச்சியானது கிரேக்க மொழி பேசும் உலகில் உயர்குலத்தோர் மத்தியில் ஆர்வம் பற்றியெறியும் பாணியாக ஆனது. லவ் இன் ஏன்சியன்ட் கிரீஸ் என்ற புத்தகம் சொல்லுகிறபடி, “கிரீட்டில் உயர்குலத்தில் பிறந்த ஒரு பையன் தனக்கு ஒரு [ஆண்] காதலனைக் கொண்டிராவிட்டால் அது அவனுக்கு வெட்கக்கேடாக கருதப்பட்டது.” அத்தகைய சீர்கேட்டுக்குக் காரணம் எந்தவொரு மர்ம ஜீனோ ஹார்மோனோ அல்ல. அது தழைத்தோங்கிற்று, ஏனென்றால் கிரேக்கப் பண்பாடு அதை அனுமதித்தது, ஆம், அதை உற்சாகப்படுத்திற்று! சுற்றுச்சூழல் எந்தளவுக்கு வல்லமையுள்ள ஒரு பாகத்தை வகிக்கமுடியும் என்பதை இது விளக்கிக் காட்டுகிறது.
ஒத்தப் பாலினப் புணர்ச்சியை ஆதரிக்கும் பிரச்சாரங்கள் அந்த நோக்குநிலையை இன்று பரப்ப அதிக உதவியளித்திருக்கின்றன என்பதில் சந்தேகமேயில்லை. ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்கான மறைமுகக் குறிப்புகள் டிவி, திரைப்படங்கள், இசை, பத்திரிகைகள் போன்றவற்றில் நிரம்பி வழிகின்றன. சில இளைஞர்கள் அப்பட்டமான ஆபாசத்தை எளிதில் பார்ப்பதற்கு கேபிள் டெலிவிஷன் வழிவகை செய்து தந்திருக்கிறது. ஒருபாலின (பாலின வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியாத) பாணி உடைகளும் அலங்காரங்களும் புதுப்பாணியாக மாறிவிட்டிருக்கின்றன. பெண்ணுரிமைக்காக வாதாடுபவர்கள் சிலரால் செய்யப்படும் ஆண்களுக்கு எதிரான பிரச்சாரம் பெண்கள் மத்தியில் ஒத்தப் பாலினப் புணர்ச்சி அதிகரிப்பதற்கு ஆதரவளித்திருக்கிறது என்பதாகவும் நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர். ஒத்தப் பாலினப் புணர்ச்சி வாழ்க்கைப் பாணியை பகிரங்கமாக ஆதரிக்கும் பள்ளி சகாக்களோடு கூட்டுறவு கொள்வதனாலும் வாலிபர்கள் தங்களை தீய செல்வாக்கின்கீழ் கொண்டுவரலாம்.—1 கொரிந்தியர் 15:33.
அப்பாவும் மகனும்
சிலவேளையில், குறைவுபடும் குடும்பச் சுற்றுச்சூழலும்கூட, முக்கியமாக ஆண்கள் மத்தியில் ஒரு பெரும்பாகத்தை வகிப்பதாகத் தெரிகிறது. a ஒரு பிள்ளையின் உணர்ச்சிப்பூர்வமான வளர்ச்சியில் ஒரு தந்தைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. (எபேசியர் 6:4) உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகம் சொல்லுகிறது: “தகப்பனுடைய ஆண்மை தன்மையின் செல்வாக்கு அதன் தனி சுபாவத்தன்மை முழுமையாய் உருப்பட்டு சமநிலையாய் வளர்ச்சியடைந்து வருவதற்கு இன்றியமையாத வண்ணமாய் உதவி செய்யக்கூடும்.” b ஒரு பையனுக்குத் தன் தகப்பனிடமிருந்து ஏற்றுக்கொள்ளுதலும் அன்பும் அங்கீகரிப்பும் தேவைப்படுகிறது. (லூக்கா 3:22-ஐ ஒப்பிடுக.) தேவைப்படும் இத்தகைய கவனத்தைத் தகப்பன் தன் பிள்ளைக்குக் கொடுக்கத் தவறினால் விளைவு என்னவாக இருக்கலாம்? உணர்ச்சிப்பூர்வமான துயரம். ஆண்களில் ஒத்தப் பாலினப் புணர்ச்சி “அநேகமாக எப்பொழுதும் குடும்ப உறவுமுறைகளில், குறிப்பாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில், ஏற்படும் பிரச்சினைகளின் விளைவாகவே இருக்கிறது” என்பதாக மனநல எழுத்தாளர் ஜோசப் நிகலோஸி வலியுறுத்திக் கூறுகிறார்.
பெண்கள் மத்தியில் ஒத்தப் பாலினப் புணர்ச்சிப் பழக்கம் ஏற்படுவதைப்பற்றி, ஒப்பிடுகையில் ஓரளவு ஆராய்ச்சியே நடத்தப்பட்டிருக்கிறது. சந்தேகமின்றி அதிலும் குடும்ப செல்வாக்குகளே பங்கு வகிக்கின்றன.
அம்மா ஒருவேளை யோசிக்காமல் ஒப்பிடுவதன்மூலம் தன் கணவனின் மதிப்பைக் குறைத்தோ, தன் மகனை ஒரேயடியாகத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதாலோ நிலைமையை மோசமாக்கலாம். ஆண்மையற்ற பையன்களை வைத்து நடத்திய ஒரு ஆராய்ச்சி இவ்வாறு குறிப்பிட்டது: “பெற்றோர்களில் சிலர் ஆண்குழந்தைக்குப் பதிலாக பெண்குழந்தையைப் பெற விரும்பியிருக்கலாம். ஆகவே தங்களுடைய இளம் மகனை ஒரு பெண்பிள்ளையைப் போல உடையணியும்படி கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகப்படுத்தியிருக்கலாம் அல்லது அவ்வாறு உடுத்திவிட்டிருக்கலாம்.”
ஒருவருக்கு நெறிகெட்ட பாலுணர்ச்சிகள் எழுந்தால் கண்ணை மூடிக்கொண்டு அவருடைய பெற்றோர்கள்மேல் பழியைப் போட்டுவிட வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடிய அம்மாக்களிடமும், சட்டைப்பண்ணாத, கரிசனையேயில்லாத, மோசமாக நடத்தும் அப்பாக்களிடமும் வளர்ந்திருந்தாலும் ஆண்மையுடன் வளர்ந்திருக்கும் எத்தனையோ ஆண்கள் இருக்கின்றனர். மேலும், ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்கான மனச்சாய்வைக் கொண்டிருக்கும் அனைவருமே சரிவர நடத்தப்படாத குடும்பத்தில் இருந்து வரவேண்டும் என்பதல்ல. இருந்தபோதிலும், சில பையன்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் புண்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. “தன் தந்தை புறக்கணித்துவிட்டார் என்ற உணர்ச்சி சிறுவயதிலேயே ஏற்பட்டதன் விளைவாக . . . , ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்காரன் ஆண்மையோடு சம்பந்தப்பட்டிருக்கும் குணங்களில், அதாவது, வல்லமை, வலியுறுத்தல், பலம் ஆகிய குணங்களில், தாங்கள் பலவீனமானவர்கள், தகுதியற்றவர்கள் என்ற உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய சொந்த ஆண்மையை அடையும் தனக்கே அறியாமல் நடக்கும் போராட்டத்தினால் அவன் ஆண்மையின் பலத்தினால் கவரப்பட்டு இழுக்கப்படுகிறான்,” என்று வலியுறுத்துகிறார் டாக்டர் நிகலோஸி.
பீட்டர் என்ற ஒரு இளம் கிறிஸ்தவன் எழுதுகிறான்: “என் அப்பா ஒரு பெரிய குடிகாரராக இருந்தார். என் அம்மாவை அடிக்கடி அடித்துக்கொண்டிருந்தார், பிள்ளைகளாகிய எங்களை அவ்வப்போது அடிப்பார். நான் 12 வயது பையனாக இருக்கும்போது, அவர் எங்கள் வீட்டைவிட்டு வெளியேறினார். அப்பா இல்லாத ஏக்கத்தை நான் பெரிதும் உணர்ந்தேன். யாராவது எனக்கு அப்பா மாதிரி இருந்து, நான் தினமும் உணருகிற அப்பா இல்லாத குறையை போக்கமாட்டார்களா என்று எப்பொழுதும் ஏங்கினேன். இறுதியில் என் குறையைப் போக்கமுடியும் என்று நான் நினைத்த ஒரு நல்ல கிறிஸ்தவ சகோதரரோடு நெருங்கிப் பழகினேன். அப்பொழுது அவர்மீது எனக்குப் பாலுணர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.”
ஆர்வமூட்டும்வகையில், பெருவாரியான எண்ணிக்கையை உடைய ஒத்தப் பாலினப் புணர்ச்சிக்காரர்கள் பிள்ளைப் பருவத்திலேயே பால்சம்பந்தமாக தொந்தரவு செய்யப்பட்டவர்களாக இருக்கின்றனர். அத்தகைய தொந்தரவு நெடுநாள் நிலைத்திருக்கும் சரீரப்பிரகாரமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு சிலருக்கு இது “நெறிகெட்ட பாலின அடையாளம்” என்று ஒரு எழுத்தாளரால் அழைக்கப்பட்டதை ஏற்படுத்தலாம். பூர்வ சோதோமில் தெளிவாக இதுவே நடைபெற்றது. வாலிபப் பையன்கள் முறைகெட்ட பாலுறவுக்காக தணியா வேட்கையை வெளிக்காட்டினர். (ஆதியாகமம் 19:4, 5) தெளிவாகவே, வளர்ந்தவர்களால் சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்தப்பட்டதன் விளைவாகவே அவர்கள் இப்படி இருந்தனர்.
ஒழுக்கப் பிரச்சினை
ஒரே பாலினத்தவர் ஒருவருக்கொருவர் கவரப்படுவதில் இயல்பாக ஏற்படுவதும் வளர்த்துக் கொள்வதும் எந்தளவுக்குப் பாகம் வகிக்கிறது என்பது விஞ்ஞானிகளால் ஒருபோதும் தீர்மானிக்க முடியாமல்போகலாம். ஆனால் ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது: மனிதர்கள் அனைவருமே தவறான எண்ணங்களுக்கும் மனச்சாய்வுகளுக்கும் ஆளாகும் மனப்பான்மையோடே பிறந்திருக்கின்றனர்.—ரோமர் 3:23.
கடவுளை சந்தோஷப்படுத்த விரும்பும் ஒரு இளைஞன், அவருடைய ஒழுக்க தராதரங்களுக்கு இசைய நடந்துகொண்டு, ஒழுக்கங்கெட்ட நடத்தையைத் தவிர்க்கவேண்டும். இது கடும் வேதனை தருமளவுக்குக் கடினமானதாகவும் இருக்கலாம். சிலர், பைபிள் சொல்லுகிறபடி, “முற்கோபப்படும் மனச்சாய்வை” கொண்டிருப்பதுபோலவே, சில தனிப்பட்ட நபர்கள் ஒத்தப் பாலினப் புணர்ச்சியில் எளிதாக விழுந்துவிடும் மனச்சாய்வைக் கொண்டிருக்கலாம் என்பது உண்மைதான். (தீத்து 1:7, NW) இருப்பினும் அநீதியாக கோபத்தை வெளிக்காட்டுவதை பைபிள் கண்டனம் செய்கிறது. (எபேசியர் 4:31) ஒரு கிறிஸ்தவன் தன் ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு, தான் ‘பிறந்ததே அப்படித்தான்’ என்று சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பிள்ளைகளைப் பாலின சம்பந்தமாக துன்புறுத்துபவர்கள், பிள்ளைகளுக்கான வேட்கை “உடன்பிறந்தது” என்று சொல்லும்போது இதே பரிதாபகரமான சாக்குப்போக்கைத்தான் திரும்பத் திரும்ப சொல்கின்றனர். ஆனால் தங்களுடைய பாலின பசி முறைகெட்டது என்பதை யாராவது மறுக்கமுடியுமா? ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்மேல் ஆசைப்படுவதும் அப்படிப்பட்டதே.
ஆதலால் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களால் கவரப்படுபவர்களாக தங்களையே காணும் இளைஞர்கள் தங்களுடைய உணர்ச்சிகளுக்கு அடிபணிவதைத் தவிர்க்கவேண்டும். ஒத்தப் பாலினப் புணர்ச்சியை பைபிள் அவ்வளவு குறிப்பிட்டு கண்டனம் செய்வது ஏன்? அந்த வாழ்க்கைப் பாணி உண்மையில் அவ்வளவு கேவலமானதும் முறைகெட்டதுமானதா என்ன? ஆம் என்றால் ஒரு இளைஞன் அதிலிருந்து தூர விலகியிருக்க என்ன செய்யலாம்? இனிவரும் ஒரு விழித்தெழு! இதழில் இந்தக் கேள்விகள் ஆராயப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
b பூர்வ கிரீஸில் ஒத்தப் பாலினப் புணர்ச்சியின் அதிகரிப்புக்குச் சுயநலத்திற்காக பிள்ளைகளைத் தவறாக பயன்படுத்துதல் ஒரு காரணமாக இருந்ததாகத் தோன்றுகிறது. சிறு பையன்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்ட பெரியவர்கள் “நரிகள்” என்று—“பேராசை மற்றும் மூர்க்கத்தின் அடையாளமாக” குறிப்பிடப்பட்டனர். அவர்களுக்குப் பலியான அந்தச் சிறுவர்கள் “செம்மறியாடுகள்” என்று அழைக்கப்பட்டனர்.