அடிமைத்தனத்திற்கு—விற்கப்படுதல்
ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஓலாவ்டா எக்வியானோ, 1745-ம் ஆண்டு, இன்று கிழக்கத்திய நைஜீரியா என்றறியப்படுகிற இடத்தில் பிறந்தார். அவருடைய கிராமத்தில் வாழ்க்கை, அவரது காலத்திற்கே உரித்தான பாணியில் இருந்தது. குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து உழைத்து மக்காச்சோளம், பருத்தி, சேனைக் கிழங்கு, பீன்ஸ் ஆகியவற்றை சாகுபடி செய்தனர். ஆண்கள் மாடுகளையும் வெள்ளாடுகளையும் மேய்த்தனர். பெண்கள் பருத்தியை நூற்றும் நெய்தும்வந்தனர்.
எக்வியானோவின் தந்தை சமுதாயத்தில் புகழ்பெற்ற குலமரபுத் தலைவராகவும் நியாயாதிபதியாகவும் இருந்தார். இந்த ஸ்தானத்தையே எக்வியானோ ஒருநாள் சுதந்தரிக்கும் நிலையில் இருந்தார். அது ஒருபோதும் நடந்தேறவில்லை. எக்வியானோ பையனாக இருந்தபோது, கடத்திச் செல்லப்பட்டு அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்டார்.
ஒரு வியாபாரியிடமிருந்து இன்னொரு வியாபாரிக்கு விற்கப்பட்டு, கடற்கரையைச் சென்றடையும்வரை அவர் ஐரோப்பியர்களைச் சந்திக்கவேயில்லை. அவர் மனதில் பதிந்திருந்ததை பல்லாண்டுகளுக்குப் பிறகு விவரித்தார்: “நான் கடற்கரையைச் சென்றடைந்ததும் என் கண்களுக்கு முதலாவது தென்பட்டவை கடலும், நங்கூரம் பாய்ச்சப்பட்டு அதன் சரக்குகளுக்காக காத்திருந்த ஒரு அடிமைக் கப்பலுமேயாகும். இவை என்னை திகைப்படையச் செய்தன. ஆனால் நான் கப்பலுக்குள் ஏற்றப்பட்டபோது, விரைவில் அது திகிலாக மாறியது. உடனே நான் உரம்வாய்ந்தவனாக இருக்கிறேனா என்பதை அறிய, கப்பல் பணியாளர்களில் சிலர் என்னைத் தொட்டும் தூக்கியெறிந்தும் பார்த்தார்கள். நான் பேய்களின் உலகத்திற்குள் நுழைந்துவிட்டேன் என்றும் அவர்கள் என்னைக் கொல்லப்போகிறார்கள் என்றும் இந்நிலைமைகள் என்னை இப்போது நம்பச் செய்தன.”
அவரைச் சுற்றிப் பார்க்கும்போது, “ஒவ்வொரு விவரிப்புக்கும் பொருந்தும் திரளான கறுப்பர்களை” எக்வியானோ பார்த்தார். “அவர்கள் ஒன்றாக சேர்த்து சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர்; ஒவ்வொருவருடைய முகமும் வாட்டத்தையும் சோகத்தையும் வெளிக்காட்டிற்று.” அக்காட்சியால் பாதிக்கப்பட்டவராக, அவர் மயங்கி வீழ்ந்தார். சக கறுப்பர்கள் அவருடைய மயக்கத்தைத் தெளியச் செய்து தேற்ற முயற்சித்தனர். “அந்த வெள்ளைக்காரர்கள் நம்மைத் தின்னமாட்டார்கள் அல்லவா என்று அவர்களைக் கேட்டேன்,” என்பதாக சொல்கிறார் எக்வியானோ.
எக்வியானோ பார்படாஸுக்கும், அங்கிருந்து வர்ஜீனியாவுக்கும், பின்னர் இங்கிலாந்துக்கும் கப்பலில் கொண்டுபோகப்பட்டார். ஒரு கப்பல் கேப்டனால் வாங்கப்பட்டு, அவர் நெடுந்தொலைவுகளுக்குப் பிரயாணம் செய்தார். எழுத, படிக்கக் கற்றுக்கொண்டு, இறுதியில் பணம் கொடுத்து தன் விடுதலையைச் சம்பாதித்துக்கொண்டார். பின்னர் பிரிட்டனில் அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டும் இயக்கத்தில் முன்னின்று தொண்டாற்றினார். 1789-ல் தனது வாழ்க்கை சரிதையைப் பிரசுரித்தார். அடிமை வாணிகத்தைப்பற்றி அதற்கு பலியான ஆப்பிரிக்கர் ஒருவரால் எழுதப்பட்ட சில விவரப்பதிவுகளில் ஒன்றாக (ஒருவேளை மிகச் சிறந்ததாகவும்) அது இருக்கிறது.
லட்சக்கணக்கான மற்ற ஆப்பிரிக்கர்கள் இந்தளவுக்கு நல்வாய்ப்புள்ளவர்களாக இல்லை. தங்களுடைய வீடுகளிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் பிரிக்கப்பட்டு, மகா கொடூரமான நிலைமைகளின்கீழ் அட்லான்டிக்கைக் கடந்து கொண்டுபோகப்பட்டனர். அவர்களும் அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகளும் ஆடுமாடுகளைப்போல் விலைகொடுத்து வாங்கப்பட்டும் விற்கப்பட்டும், அந்நியர்களின் செல்வத்தைப் பெருக்குவதற்காக கூலிகூட இல்லாமல் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். பெரும்பாலானோருக்கு எந்த உரிமைகளும் இல்லாதிருந்தது. ஆகவே அவர்களுடைய எஜமான் விருப்பப்பட்டால் அவர்களைத் தண்டிக்க, துர்ப்பிரயோகப்படுத்த, ஏன் கொல்லவும்கூட முடியும். ஒடுக்கப்பட்ட அப்பெரும்பாலானோருக்கு, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற இருந்த ஒரே வழி சாவு மட்டும்தான்.