லட்சக்கணக்கானோர் அடிமைகளாகின்றனர்
ஓலாவ்டா எக்வியானோ பிறப்பதற்குமுன், இரண்டரை நூற்றாண்டுகளாக ஐரோப்பாவிலிருந்து வந்த கப்பல்கள் ஆப்பிரிக்க அடிமைகளை அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து கொண்டுசென்றன. ஆனால் அடிமைத்தனம் என்பது அதைவிடவும் அதிகப் பழைமையானதாக இருந்தது. வழக்கமாக போரின் விளைவாக, மனிதர்களை அடிமைப்படுத்துதல் பண்டைக் காலங்களில் இருந்தே உலகம் முழுவதும் பரவலாக நடைமுறையில் இருந்துவந்தது.
ஆப்பிரிக்காவில்கூட, ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் வருவதற்கு வெகுமுன்பே அடிமைத்தனம் செழித்தோங்கியது. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுவதாவது: “கறுப்பர்கள் பெரும்பான்மையராக இருக்கும் ஆப்பிரிக்காவில், பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள வரலாறு முழுவதிலும் அடிமைகளை சொந்தமாக கொண்டிருந்திருக்கின்றனர். . . . இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே அடிமைத்தனம் எல்லா இடங்களிலும் நடைமுறையில் இருந்தது. ஆப்பிரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கறுப்பின அடிமைகள் இஸ்லாமிய உலகம் முழுவதும் பரவலாக விற்கப்பட்டனர்.”
அட்லான்டிக்கைக் கடந்து செய்யப்பட்ட அடிமை வாணிபத்தை தனித்தன்மை உள்ளதாக்கியது அதன் அளவும் கால அளவுமேயாகும். மிகவும் துல்லியமான கணக்குகளின்படி, 16 முதல் 19-ம் நூற்றாண்டு வரை அட்லான்டிக் பெருங்கடல் கடந்து கொண்டுபோகப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கை ஒரு கோடி முதல் 1.2 கோடியாக இருந்தது.
முக்கோண தடம்
1492-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணத்திற்குப் பிறகு, ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்கள், அமெரிக்க கண்டங்களில் சுரங்கவேலைகளை நிறுவினார்கள், கரும்புத் தோட்டங்களை உருவாக்கினார்கள். உள்ளூர் மக்களை அடிமைகளாக்கிக் கொண்டது போதாதென்று, ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவில் இருந்தும் அடிமைகளை இறக்குமதி செய்யத் தொடங்கினர்.a அட்லான்டிக்கைக் கடந்து அடிமைகளைக் கொண்டுபோவது, 1500-களின் மத்திபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கி, எக்வியானோவின் நாளில், அதாவது 1700-களில்—வருடத்திற்கு சுமார் 60,000 அடிமைகள் என்ற எண்ணிக்கையில்—பெருக்கெடுத்தோடியது.
ஐரோப்பாவில் இருந்து புறப்படும் கப்பல்கள் பொதுவாகவே ஒரு முக்கோண வடிவ தடத்தைப் பின்பற்றின. முதலில் ஐரோப்பாவிலிருந்து தென்திசை நோக்கி ஆப்பிரிக்காவுக்குப் போயின. அடுத்ததாக பயணத்தின் நடுப்பகுதியாக (முக்கோணத்தின் மத்திய இணைப்பினூடே) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பிரயாணப்பட்டுப் போயின. இறுதியில் அவை திரும்பவுமாக ஐரோப்பாவுக்குச் சென்றன.
முக்கோணத்தின் ஒவ்வொரு முனையிலும், கேப்டன்கள் வாணிபம் நடத்தினர். ஐரோப்பிய துறைமுகங்களிலிருந்து புறப்படும் கப்பல்கள்—துணிமணிகள், இரும்பு, துப்பாக்கிகள், சாராயம் ஆகிய—சரக்குகளை சுமக்கமுடியாமல் சுமந்துசென்றன. ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையைச் சென்றடைந்ததும், கேப்டன்கள் இச்சரக்குகளை ஆப்பிரிக்க அடிமை வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு அவற்றிற்குப் பதிலாக அடிமைகளைப் பெற்றுக்கொண்டனர். அடிமைகள் கப்பல்களில் நெருக்கி அடைக்கப்பட்டனர்; அதன்பின் இக்கப்பல்கள் அமெரிக்க கண்டங்களுக்குப் பயணம் செய்தன. அமெரிக்க கண்டங்களில், கேப்டன்கள் இவ்வடிமைகளை விற்றுவிட்டு, அடிமை வேலைக்காரர்களால் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை, ரம், சர்க்கரைப் பாகு, புகையிலை, அரிசி ஆகிய பொருட்களையும், 1780-களில் இருந்து பருத்தியையும் ஏற்றிச் சென்றனர். பின்னர் அந்தக் கப்பல்கள் தங்களுடைய இறுதிகட்ட பயணமாக ஐரோப்பாவுக்குத் திரும்பிப் போயின.
ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க வியாபாரிகளுக்கும், அமெரிக்காவில் குடியேறியிருந்த மக்களுக்கும், அவர்கள் உயிருள்ள சரக்கு என்று அழைத்ததை வைத்து செய்யப்பட்ட அந்த அடிமை வாணிபமானது—பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக—இருந்தது. அடிமைப்படுத்தப்பட்ட கணவன் மனைவிமார்கள், தாய் தகப்பன்மார்கள், மகன்கள் மகள்கள் ஆகியோருக்கோ இந்த வாணிபம் கொடூரமும் பயங்கமுமாய் இருந்தது.
இந்த அடிமைகள் எங்கிருந்து வந்தனர்? ஓலாவ்டா எக்வியானோவை போலுள்ள ஒருசிலர் கடத்திக் கொண்டுவரப்பட்டனர். ஆனால் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க தேசங்களுக்கிடையில் நடைபெற்ற போர்களில் சிறைபிடிக்கப்பட்டனர். சப்ளையர்கள் ஆப்பிரிக்கர்களாகவே இருந்தனர். அடிமை வாணிபத்தின்பேரிலான நிபுணரும், வரலாற்று ஆசிரியருமான பிலிப் கர்ட்டின் எழுதுகிறார்: “அடிமைகளைப் பிடிப்பதில் நேரடியாக இறங்குவது தங்களுடைய நலனுக்கு மிகமிக ஆபத்தானது என்பதை ஐரோப்பியர்கள் சீக்கிரத்தில் உணர்ந்தனர். அடிமைப்படுத்துவது என்பது ஆப்பிரிக்கர்களுக்கே உரித்தான ஒரு வேலை என்று ஆகிவிட்டது . . . அடிமை வாணிபம் தொடங்கியபோது இதில் விற்கப்பட்ட மக்கள் அனைவரும் முக்கியமாக போர்க் கைதிகளாகவே இருந்தனர்.”
பயணத்தின் நடுப்பகுதி
அமெரிக்க கண்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரயாணம் ஒரு பயங்கரமான அனுபவமாக இருந்தது. சங்கிலியால் கூட்டம் கூட்டமாகக் கட்டி கடற்கரைக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்கள் தளர்ந்துபோன நிலையில், சிலசமயங்களில் மாதக்கணக்காக, கல்கோட்டைகளில் அல்லது மரத்தால் வேலியடைக்கப்பட்ட சிறிய கூடங்களில் வைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்கக் கண்டங்களுக்குப் போகவேண்டியிருக்கும் ஒரு அடிமைக் கப்பல் வந்தடைவதற்குள், இந்த அடிமைகளெல்லாம் அவர்கள் அனுபவித்த துர்ப்பிரயோகங்களால் ஏற்கெனவே பெரும்பாலும் மோசமான உடல்நிலையில் இருந்தனர். ஆனால் இன்னும் மோசமான நிலைமை வரவிருந்தது.
கப்பலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபின், நிர்வாணமாக்கப்பட்டு, கப்பலின் மருத்துவராலோ அல்லது கேப்டனாலோ பரிசோதிக்கப்பட்டு, ஆண்களெல்லாம் சங்கிலியிடப்பட்டு பின்னர் கப்பல் தளத்திற்குக்கீழ் கொண்டுசெல்லப்பட்டனர். தங்களுடைய லாபத்தை அதிகரிப்பதற்காக, கப்பலில் உள்ள மாஸ்டர்கள் சரக்கு வைக்கும் அறையில் எத்தனை அதிகம் அடிமைகளைத் திணிக்கமுடியுமோ அத்தனை அதிகம் பேரைத் திணித்து வைத்தனர். பெண்களும் பிள்ளைகளும் சுற்றித் திரிவதற்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டனர். இருப்பினும் கப்பல் பணியாளர்களால் அவர்கள் பாலுறவு சம்பந்தமாக துர்ப்பிரயோகம் செய்யப்படுவதற்கு இதுவும் காரணமாக இருந்தது.
அந்த அறையின் காற்று அழுகிப்போன நாற்றம் உடையதாய் இருந்தது. எக்வியானோ தனது மனதில் பதிந்திருந்த எண்ணங்களை விவரிக்கிறார்: “அந்த இடம் அடைத்து வைக்கப்பட்டிருந்ததும், காலநிலையின் உஷ்ணமும், அசையக்கூட இடமில்லாமல் நெருக்கமாக கப்பலில் அடைக்கப்பட்டிருந்த எண்ணிக்கையும் ஏறக்குறைய எங்களை மூச்சுமுட்ட வைத்தது. இந்நிலைமை வியர்த்துகொட்டும்படி செய்து, இதன் காரணமாக காற்றை விரைவில் அருவருக்கத்தக்க பலவித நாற்றங்களால் சுவாசிக்கத் தகுதியற்றதாக ஆக்கிவிட்டிருந்தது. இதன் காரணமாக அடிமைகளின் மத்தியில் நோய் வந்து அநேகர் இறந்துபோயினர். . . . பெண்கள் கதறும் சப்தமும், இறப்பவர்களின் முனகல் சப்தமும் படுபயங்கரமான அந்தக் காட்சியை அநேகமாக நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்றாக்கிவிட்டது.” கடலைக் கடந்து போகுமட்டும் அடிமைகள் அத்தகைய நிலைமைகளை சகித்துக் கொண்டிருக்கவேண்டும். அது கடந்து போவதற்கு சுமார் இரண்டு மாதங்களும், சிலசமயங்களில் அதைவிட அதிக காலமும் ஆயிற்று.
வெறுப்பூட்டும் சுகாதாரமற்ற நிலைமைகளில் நோய் செழித்தோங்கிற்று. சீதபேதி, பெரியம்மை ஆகிய கொள்ளை நோய்கள் அடிக்கடி ஏற்பட்டன. மரண எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 1750-கள் வரை கப்பலிலிருந்த ஆப்பிரிக்கர்களில் ஐந்திலொருவர் மரித்ததாக பதிவுகள் காண்பிக்கின்றன. இறந்தவர்கள் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டனர்.
அமெரிக்கக் கண்டங்களைச் சென்றடைதல்
அடிமை கப்பல்கள் அமெரிக்கக் கண்டங்களை நெருங்கி வரவர, பணியாளர்கள் ஆப்பிரிக்கர்களை விற்பதற்காக ஆயத்தப்படுத்தினர். போர்க்கைதிகளை சங்கிலிகளில் இருந்து அவிழ்த்துவிட்டு அவர்களைக் கொழுக்க வைத்தார்கள். நல்ல ஆரோக்கியம் உள்ளவர்களாய்த் தோன்றவைப்பதற்கும், புண்களோ காயங்களோ இருந்தால் அவற்றை மறைப்பதற்கும் பாம் ஆயில் போட்டுத் தடவிவிட்டார்கள்.
கேப்டன்கள் தங்களுடைய போர்க் கைதிகளை பொதுவாக ஏல விற்பனை செய்தனர். ஆனால் சிலசமயங்களில் “ஸ்க்ரேம்பிள்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வாங்குபவர்கள் தீர்மானிக்கப்பட்ட விலையை முன்னதாகவே அதற்கு கொடுக்கவேண்டியது அவசியமாக இருந்தது. எக்வியானோ எழுதுவதாவது: “(மேளம் அடிப்பதுபோன்ற) ஒரு சிக்னல் கொடுக்கப்பட்டதும், வாங்குபவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தில் முண்டியடித்துக்கொண்டு அடிமைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த களத்தை நோக்கி ஓடுவார்கள். அங்குத் தங்களுக்கு மிகவும் இஷ்டப்படுகிற கூட்டத்தினரைத் தெரிந்துகொள்வார்கள். இதனால் ஏற்படும் சத்தமும் பேரிரைச்சலும், வாங்குபவர்களின் முகங்களில் தெளிவாகக் காணப்படும் ஆர்வமும் பீதியடைந்துபோய் இருக்கும் ஆப்பிரிக்கர்களின் பயத்தை வெகுவாக அதிகரிக்கச் செய்தன.”
எக்வியானோ மேலும் எழுதுகிறார்: “இவ்வாறு சிறிதேனும் தயக்கமின்றி, உறவினர்களும் நண்பர்களும் பிரிக்கப்படுகின்றனர். அவர்களில் அநேகர் ஒருவரையொருவர் ஒருபோதும் மீண்டும் காணப்போவதில்லை.” கடந்துபோன மாதங்களின் கொடுங்கனவுகளினூடே எப்படியோ சமாளித்து ஒன்றுசேர்ந்திருந்த குடும்பங்களுக்கு இது ஒரு பலத்த அதிர்ச்சியாக இருந்தது.
வேலையும் சாட்டையடியும்
ஆப்பிரிக்க அடிமைகள் காப்பி, அரிசி, புகையிலை, பருத்தி, முக்கியமாக சர்க்கரை ஆகியவற்றை உற்பத்தி செய்ய பண்ணைகளில் வேலை செய்தனர். மற்றவர்களோ சுரங்கத்தில் வேலைசெய்தனர். சிலர் தச்சர்களாகவும், உலோகப் பணியாளர்களாகவும், கடிகாரம் தயாரிப்பவர்களாகவும், துப்பாக்கி செய்பவர்களாகவும், கப்பலோட்டிகளாகவும் வேலைசெய்தனர். இன்னும் மற்றவர்களோ வீட்டுவேலை செய்பவர்களாக—வேலைக்காரர்களாகவும், தாதிகளாகவும், தையல்காரர்களாகவும், சமையல்காரர்களாகவும் வேலைசெய்துவந்தனர். அடிமைகள் புதர்களை வெட்டி நிலத்தை சமப்படுத்துதல், சாலைகளமைத்தல், கட்டிட வேலை, கால்வாய்கள் வெட்டுதல் ஆகிய வேலைகளைச் செய்தனர்.
எனினும், அத்தனை வேலைகளைச் செய்தபோதிலும் அடிமைகள் சொத்துக்களைப்போலவே கருதப்பட்டனர். சட்டத்தின் பிரகாரம் எஜமானனுக்குத் தன்னுடைய சொத்தின்மீது முழு அதிகாரமும் இருந்தது. எனினும், உரிமைகளையும் சுதந்திரங்களையும் மறுத்ததனால் மட்டுமே அடிமைத்தனம் நிலைத்து நிற்கவில்லை. அது சாட்டையடியினாலேயே நிலைத்திருந்தது. எஜமானர்களின் அதிகாரமும் அவர்களுடைய மேற்பார்வையாளர்களின் அதிகாரமும் வேதனை உண்டாக்குவதற்கான அவர்களுடைய சக்தியைப் பொருத்தே இருந்தது. அவர்கள் உண்டாக்கிய வேதனையோ ஏராளம் ஏராளம்.
தங்களுடைய அடிமைகள் எதிர்த்தெழுவதைத் தவிர்த்து அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக, முதலாளிகள் சிறிய குற்றங்களுக்கும்கூட தரக்குறைவான சரீரப்பிரகார தண்டனையை அளித்துவந்தனர். எக்வியானோ இவ்வாறு எழுதுகிறார்: “அவர்களுடைய முதலாளியின் பெயருடைய முதல் எழுத்தைக்கொண்டு அடிமைகளை சூடிட்டு முத்திரை குத்துவதும், இரும்பு கொக்கிகளாலான கனமான ஒரு பாரத்தைக் கழுத்தில் தொங்கவிடுவதும் [மேற்கிந்தியத் தீவுகளில்] சர்வசாதாரணமானதாக இருந்தது. உண்மையில் மிக அற்பமான குற்றங்களுக்கு அவர்கள்மீது சங்கிலிகள் கட்டப்பட்டன, மேலும் அடிக்கடி சித்திரவதைக் கருவிகள் உபயோகப்படுத்தப்பட்டன. இரும்பு வாய்ப்பூட்டு, கட்டைவிரலை நசுக்கி சித்திரவதை செய்வதற்கான கருவி போன்றவை . . . சிலசமயங்களில் மிகச் சிறிய குற்றங்களுக்கும்கூட உபயோகிக்கப்பட்டன. ஒரு நீக்ரோ, வேகவைக்கும்போது பொங்கி வழிந்தோட விட்டுவிட்டான் என்பதற்காக அவனுடைய எலும்புகளில் சில முறியும்வரை அடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.”
சிலவேளைகளில் அடிமைகள் எதிர்த்தெழுந்தனர். ஆனாலும் பெரும்பாலான எதிர்ப்புகள் வெற்றியடைந்தது கிடையாது, ஆகவே ஈவிரக்கமின்றி மூர்க்கமாகத் தண்டிக்கப்பட்டனர்.
[அடிக்குறிப்புகள்]
a அட்லான்டிக்கின் வழியாக நடந்த வாணிபத்தில் நேரடியாக ஈடுபட்டிருந்த முக்கியமான ஐரோப்பிய நாடுகள் பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெய்ன் ஆகியவையாகும்.
[பக்கம் 5-ன் படம்]
இறந்தவர்கள் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டனர்
[படத்திற்கான நன்றி]
Culver Pictures
[பக்கம் 5-ன் படம்]
சரக்கு வைக்கும் அறையில் எத்தனை அதிகம் அடிமைகளைத் திணிக்கமுடியுமோ அத்தனை அதிகம் பேரைத் திணித்து வைத்தார்கள்
[படத்திற்கான நன்றி]
Schomburg Center for Research in Black Culture / The New York Public Library / Astor, Lenox and Tilden Foundations