என் அன்புத் தோழி
யார் உங்கள் நண்பர்கள்? அவர்கள் வெறுமனே உங்கள் வயதையொத்தவர்களா? தன் வயதைவிட சுமார் ஏழு பத்தாண்டுகள் மூத்தவராயிருக்கும் தன் நண்பர்களில் ஒருவரைப்பற்றிய ஓர் இளம்பெண்ணின் வர்ணனையை வாசியுங்கள்.
சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு, எனக்கு ஆறு வயதே ஆகியிருக்கையில், எங்கள் குடும்பம் ஸ்காட்லாந்திலுள்ள அபர்டீனுக்கு மாறிச்சென்றது. இது எனக்குப் பயமூட்டும் ஒரு சமயமாயிருந்தது, ஏனெனில் நான் ஒரு புதிய பள்ளிக்குச் செல்லவேண்டியதாயும் புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதாயும் இருந்தது. ஆனால் என் புதிய சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள ஏதோவொன்று என்னை மெதுவாக நெகிழ்த்தியது. எங்கள் பெற்றோர் முன்பு ஒருமுறை சந்தித்திருந்த வயதான ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு அருகில் வசித்துவந்தார்கள். நான் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டேன், அதற்குப்பிறகு விரைவில், அவர்கள் எப்பேர்ப்பட்ட கவனத்தைக் கவருபவராய் இருந்தார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவர்கள் இருதயத்தில் இளமையாயிருந்தார்கள், மேலும் அழகாகவும், நேர்த்தியாகவும் உடை உடுத்தியிருந்தார்கள்.
நாங்கள் வசித்துவந்தது வாடகை வீடாயிருந்தது, ஆகவே ஆன்ட்டி லூயியின் வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவிலிருந்த ஒரு சொந்த வீட்டிற்கு மாறிச் சென்றோம். மரியாதையாலும் பிரியத்தை வெளிப்படுத்தும் ஒரு பதமாகவும் “ஆன்ட்டி” என்ற வார்த்தையை நான் உபயோகிக்கிறேன். என் அண்ணனும் நானும் அவர்களை ஒழுங்காகச் சென்று சந்தித்துவரத் தொடங்கியிருந்ததால் நாங்கள் மாறிச்செல்ல வேண்டியதாயிருந்தபோது நான் வருத்தமடைந்தேன்.
என்றபோதிலும், நான் போய்க்கொண்டிருந்த பள்ளி, ஆன்ட்டி லூயியின் வீட்டிற்கு அருகில் இருந்தது. ஆகவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், வகுப்பு முடிந்தவுடன், பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருந்த மாலை ஸ்காட்டிஷ் கன்ட்ரி டான்ஸிங் வகுப்புக்குச் செல்வதற்கு முன்பு, தேநீர் அருந்த ஆன்ட்டி வீட்டிற்குச் சென்றேன். இது என் வழக்கமாயிற்று. நான் என்னுடன் என் கதைப்புத்தகங்களில் ஒன்றையும் எடுத்துச் செல்வேன்; மேலும், நான் வெள்ளரிக்காய் சான்ட்விச்சுகளைத் தின்றுகொண்டும், ஒரு கிளாஸ் குளிர்ந்த பாலைக் குடித்துக்கொண்டும் இருக்கையில் அவர்கள் அதிலிருந்து எனக்கு வாசிப்பார்கள்.
நான் ஆன்ட்டி லூயியின் வீட்டுக்குப் பறப்பதற்கான அடையாளமாயிருந்த, மாலை 3:30-க்கு அடிக்கும் மணிக்காகப் பேராவலுடன் காத்துக்கொண்டிருக்கையில், வெள்ளிக்கிழமைகள் மெதுவாக நகருவதாகத் தோன்றினது எனக்கு ஞாபகமிருக்கிறது. வயதான ஆட்கள் எப்பேர்ப்பட்ட விதத்தில் கவனத்தைக் கவருபவர்களாயும் அனுபவிக்கத்தகுந்தவர்களாயும் இருக்கக்கூடும் என்பதை இச்சமயத்தில்தான் நான் முதலாவதாகக் கற்றுக்கொண்டேன். உண்மையில், அவர்களை வயதானவர்களாக நான் நோக்கவில்லை. என் மனதில் அவர்கள் வெகு இளமையானவர்களாகவே இருந்தார்கள். அவர்களுக்குக் கார் ஓட்ட முடிந்தது, ஒரு நறுமண-வீட்டையும் ஒரு தோட்டத்தையும் பராமரித்தார்கள்—இன்னும் வேறெதை ஒரு பிள்ளை விரும்பும்?
மூன்று வருடங்கள் கடந்தன, நானும் தொடக்கப்பள்ளியின் கடைசி வருடத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இச்சமயத்தில்தான் ஆன்ட்டி லூயி தன் தோட்டத்தைப் பராமரிக்க முடியாததால் ஒரு ஃப்ளாட்டில் வசிப்பது மிகவும் நடைமுறையான ஒரு தெரிவாக இருப்பதாகத் தீர்மானித்தார்கள். வயோதிபம் என்றால் என்ன என்பதை அப்பொழுது நான் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் ஃப்ளாட் டவுனின் மற்றொரு பகுதியில் இருந்ததால் நான் நிலைகுலைந்து போனேன். வெள்ளிக்கிழமைகள் முன்பிருந்ததைப் போன்ற அதே கவர்ச்சியை எனக்கு ஒருபோதும் தரவில்லை.
1990-ல் உயர்நிலைப்பள்ளிக்கு மாறிச்செல்லவேண்டியது அடுத்து சம்பவிக்கப் போவதாய் இருந்தது. அத்தகையதோர் பெரிய பள்ளியில் நான் என்ன செய்வேன்? எப்படி சமாளிப்பேன்? எங்கள் குடும்பம் வேறொரு இடத்தில் வசித்துவந்ததால் என் நண்பர்களை விட்டுப்பிரிந்து, வேறொரு பள்ளிக்குச் செல்லவேண்டியதாயிருந்தது. ஆனால் மீண்டும் ஆன்ட்டி லூயி அங்கிருந்தார்கள், ஏனெனில் அவர்கள் மாறிச்சென்றிருந்த ஃப்ளாட் என் உயர்நிலைப்பள்ளிக்கு அருகாமையிலேயே இருந்தது! மதிய உணவு இடைவேளையின்போது என் சான்ட்விச்சுகளை உண்ண அவர்களின் ஃப்ளாட்டுக்கு நான் வருவதாகக் கேட்டுக்கொண்டேன். இவ்விதமாக, மற்றொரு மதிப்புமிக்க வழக்கம் நிறுவப்பட்டது.
இச்சமயத்தில்தான் எங்களது உறவு, பிள்ளை-வயதுவந்தோர் என்ற ஓர் உறவிலிருந்து, ஒருவர் மற்றொருவரின் தோழமையை பரஸ்பரமாய் அனுபவிக்கும் ஒன்றாய் மாறியது என்று நான் நம்புகிறேன். இது பல வழிகளில் தெளிவாயிருந்தது, ஆனால் குறிப்பாக ஒரு வழியான, என் கதைப்புத்தகங்களுக்குப் பதிலாக, மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களை—ஜேன் ஆயர், வில்லெட், ப்ரைட் அன்ட் ப்ரெஜுடிஸ், மற்றும் தி உமன் இன் ஒயிட் போன்றவற்றை—சேர்ந்து படிக்க ஆரம்பிக்கையில் தெளிவாயிருந்தது. என் ரசனை முதிர்ச்சியடைந்திருந்தது.
மக்களுக்கான ஓர் அன்பானது ஒரு திறமை என்றும், ஒரு கலை என்றும் ஆன்ட்டி லூயி எனக்குக் கற்பித்தார்கள். அக்கலையை அவர்கள் எனக்குக் கற்பித்திராவிட்டால், நான் இன்னும் அதிக வயதாகும்வரையில் அதை உணர்ந்திருக்க மாட்டேன். கவனிக்கும்படி அவர்கள் எனக்குக் கற்பித்தார்கள். மிக அதிக சுறுசுறுப்பான இவ்வுலகில் பலர், வயதானவர்களோ அல்லது இளவயதினரோ, அதை ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை. நான் அவரது சோஃபாவில் சுருண்டு படுத்திருக்கையில், அவர்கள் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய கதைகளையும் தான் பெற்றிருக்கும் அனுபவங்களையும் எனக்குச் சொல்கிறார்கள். இவர்கள் கொண்டிருக்கும் மிகவும் கவனத்தைக் கவரும் அறிவால் நான் இதமாக உணருகிறேன்.
ஆன்ட்டி லூயி, தன் பெற்றோரையும் தன் பெரியம்மாவையும் மன அதிர்ச்சி சம்பந்தமான உடல்நலக் குறைவுகளினூடே கவனித்துக்கொள்வதற்காக அதிகத்தை—திருமணம், குழந்தை, ஒரு வாழ்க்கைத் தொழில் போன்றவற்றை—விட்டுக்கொடுத்து விட்டார்கள். இது, அவர்களது இளைய சகோதரன் முழுநேர ஊழியத்தில் தொடர்ந்திருப்பதை சாத்தியமாக்கிற்று.
கடந்த இரண்டு வருடங்களாக, ஆன்ட்டி லூயி உடல்நலமில்லாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள், என்னால் வயோதிபம் கொண்டுவரும் விரக்தி, கஷ்டம் மற்றும் வேதனை ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. சமீபத்தில், 84 வயதில், அவர்கள் கார் ஓட்டுவதை நிறுத்த வேண்டியதாயிருந்தது, மேலும் இதுதானே அவர்களின் பொறுமையை அதிகளவு சோதிப்பதாய் இருந்திருக்கிறது. மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை அவர்கள் பழக்கமாக்கியிருந்ததால், இப்போது தன் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது அவ்வளவு விரக்தியடையச் செய்வதாய் உள்ளது. தான் மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வோடு அவர்கள் போராட வேண்டியிருந்திருக்கிறது. நாங்கள் அவர்களை நேசிக்கிறோம் என்றும், அவர்களுக்காக எதையும் செய்வோம் என்றும் அவர்களிடம் எத்தனைமுறை சொன்னாலும், அவர்கள் இன்னும் குற்றமுள்ளவர்களாகவே உணருகிறார்கள்.
இப்போது அதை எது மோசமாக்குகிறதென்றால், அவர்களாகவே குளிப்பதும் உடைமாற்றுவதும் சிரமமாயிருப்பது தான். இதை அவர்கள் பிறருக்குச் செய்திருந்தபோதிலும், அத்தகைய உதவி தனக்குத்தானே தேவைப்படுவதைக் காண்பது ஒரு சோதனையாக உள்ளது. ஆட்கள் தாங்களாகவே எல்லாவற்றையும் செய்துகொள்ள முடியாதபோதுங்கூட, அவர்கள் இன்னும் நம் மரியாதைக்குத் தகுதியானவர்களாய் இருக்கிறார்கள் என்பதை இது எனக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறது.
என்றபோதிலும், எல்லாவற்றுக்கும் மேலாக, வயோதிபமடைவது என்பது எப்படி இருக்கும் என்பதை நான் புரிந்துகொள்ள இந்த அனுபவம் எனக்கு உதவியிருக்கிறது. தான் முன்பு செய்துகொண்டுவந்த ஒவ்வொரு தனித்தனிக் காரியமும் இனிமேலும் அவர்களால் செய்யமுடியாமற்போனது என்னை அழவைக்கிறது. எல்லாவற்றையும்விட, அவர்கள் விரக்தியடைகையிலோ அல்லது மோசமான வேதனையிலிருக்கையிலோ, நான் அழுதுகொண்டே இருக்க விரும்புகிறேன். நான் முக்கியமாக வருத்தப்படும் விஷயமானது, என்னைவிட வயதில் சிறியவரான மற்றொரு பிள்ளையால் அவர்களது அனைத்து ஞானமும் அனுபவிக்கப்படவும் போற்றப்படவும் முடியாமற்போகலாம் என்பதுதான்.
நான் அவர்களுக்குப் போதியளவு செய்கிறேனா என்று சிலசமயங்களில் என்னையே கேட்டுக்கொள்கிறேன். நான் அவர்களுக்குச் செய்யுமளவுக்கு, அவர்கள் என்னிடம் அனுபவிக்கவும் என்னை நேசிக்கவும் செய்கிறார்களா? ஆனால் நான் மதிய உணவிற்குச் செல்லும்போது அவர்களைக் கட்டித்தழுவுகையில் அத்தனை சந்தேகங்களும் மறைகின்றன.
அத்தகைய ஒரு தோழியைக் கொண்டிருப்பதற்காக நான் நன்மதிப்புள்ளவளாய் உணருகிறேன். அவர்கள் எனக்கு மிக அநேக நல்ல பண்புகளைக்—எல்லாவற்றையும்விட எனக்கு அன்பைக்—கற்பித்திருக்கிறார்கள். என் வயதையொத்தவர்களில் நூறு பேரின் நட்புக்குப் பதிலாகக்கூட அவர்களின் நட்பை நான் விட்டுவிட மாட்டேன். நான் விரைவில் பள்ளிப்படிப்பை முடிக்கவிருப்பதால் இனிமேலும் மதிய உணவுக்காக அவர்களின் ஃப்ளாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கமாட்டேன் என்றாலும் என் அன்புத் தோழியை நேசிப்பதையும், சந்திப்பதையும், அவர்களுக்கு உதவுவதையும் நான் ஒருபோதும் நிறுத்தமாட்டேன். நீ உன்னைப்பற்றி நினைப்பதற்கு முன்பாக மற்றவர்களைப் பற்றி நினைத்தால் வாழ்க்கையானது மகிழ்ச்சியாகவும் பூர்த்திசெய்வதாகவும் இருக்கக்கூடும் என்பதை அவர்கள் எனக்குக் கற்பித்திருக்கிறார்கள்.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 26-ன் படம்]
ஆன்ட்டி லூயியுடன்