உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 11/22 பக். 4-7
  • ஆவி உலகில் யார் வாழ்கின்றனர்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆவி உலகில் யார் வாழ்கின்றனர்?
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா, சர்வவல்லமையுள்ள கடவுள்
  • தூதர்கள், கடவுளுடையவல்லமையுள்ள ஊழியர்கள்
  • சாத்தானும் பேய்களும், கடவுளுக்கும் மனிதனுக்கும் எதிரிகள்
  • மூதாதையர் எங்கே இருக்கின்றனர்?
  • மண்ணுக்குத் திரும்புதல்
  • ஆவி சிருஷ்டிகள்—நம்மீது அவற்றின் செல்வாக்கு
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • ஆவி உலகில் நமது மிகச்சிறந்த நண்பர் இருக்கிறார்
    விழித்தெழு!—1996
  • தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 11/22 பக். 4-7

ஆவி உலகில் யார் வாழ்கின்றனர்?

இந்த உலகம் மத நம்பிக்கைகளாலும் கொள்கைகளாலும் நிரம்பிய ஒரு “சூப்பர்மார்க்கெட்டாக” ஆகியிருக்கிறது. ஆப்பிரிக்காவில் மட்டுமே ஆயிரக்கணக்கான மதத்தொகுதிகள் உள்ளன; ஆவி உலகில் என்ன நடக்கிறதென்பதைக் குறித்து அவை ஒவ்வொன்றும் அதனதன் சொந்த அபிப்பிராயத்தை வைத்திருக்கின்றன. ஆனால் ஒரு தெளிவான, உண்மையான தகவலுக்கு, நாம் பைபிளினிடமாக நம் கவனத்தைத் திருப்ப வேண்டும். அது ஆவி உலகில் வாழும் ஆவிகளை—நல்ல ஆவிகளையும் கெட்ட ஆவிகளையும்—அடையாளம் காட்டுகிறது. நாம் யாரிடம் மன்றாடி உதவியையும் பாதுகாப்பையும் பெறலாம் என்பதையும் அது நமக்குக் காண்பிக்கிறது.

யெகோவா, சர்வவல்லமையுள்ள கடவுள்

மூதாதையர்கள்மீதும் தெய்வங்கள்மீதும் தலைமைதாங்குபவர் சர்வவல்லமையுள்ள கடவுளே என்பதாக ஆப்பிரிக்காவின் பாரம்பரிய மதம் கற்பிக்கிறது. ஆப்பிரிக்க புராணக் கதைகள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அனைத்தையும் படைத்த மகா உன்னத கடவுள் ஒருவர் இருக்கிறாரென கிட்டத்தட்ட எல்லா ஆப்பிரிக்க ஜனங்களுமே நம்புகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.” ஆப்பிரிக்கன் ரிலிஜன் இன் ஆப்பிரிக்கன் ஸ்காலர்ஷிப் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “கடவுள் சர்வலோகத்தையும் முழுமையாக கட்டுப்படுத்துபவராய் இருப்பதன் காரணமாக, மற்ற எல்லா உயிர்களும் அதிகாரங்களும் அவருக்குப் பிறகே வருகின்றன. அவர் முழு அதிகாரத்தையும் வல்லமையையும் உடையவராய் இருக்கிறார்.”

ஆவி உலகில் உன்னத அரசதிகாரி இருக்கிறார் என்பதாக பைபிள் ஒப்புக்கொள்கிறது. அது அவரை “தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல” என்பதாக விவரிக்கிறது.—உபாகமம் 10:17.

ஆப்பிரிக்கா முழுவதிலும், உன்னதமானவராக கருதப்படுகிறவருக்கு நூற்றுக்கணக்கான பெயர்களும் பட்டங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், கடவுளுடைய பெயரைப் பற்றி அவரது வார்த்தை என்ன சொல்கிறது? சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.” (சங்கீதம் 83:17) சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்தப் பரிசுத்த பெயரை “தேவன்” அல்லது “கர்த்தர்” என்ற பட்டப் பெயர்களால் மாற்றீடு செய்திருந்தாலும், இது பைபிள் பதிவில் 7,000 தடவைக்கும் மேலாக காணப்படுகிறது.

யெகோவா சர்வவல்லமையுள்ளவராக இருப்பதன் காரணமாக, அவரால் நமக்கு நன்மை செய்ய முடியும். அவர், ‘இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாதவர்’ என்பதாக தம்மையே விவரிக்கிறார்.—யாத்திராகமம் 34:6, 7; 1 சாமுவேல் 2:6, 7.

தூதர்கள், கடவுளுடையவல்லமையுள்ள ஊழியர்கள்

யெகோவா மனிதர்களையும் பூமியையும்கூட உண்டாக்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே பரலோகத்தில் ஆவி ஆட்களைப் படைத்தார். கடவுள் ‘பூமியை அஸ்திபாரப்படுத்தியபோது . . . தேவபுத்திரர் [தேவதூதர்கள்] எல்லாரும் கெம்பீரித்தார்கள்,’ என்பதாக பைபிள் சொல்கிறது. (யோபு 38:4-7) கோடிக்கணக்கான தூதர்கள் இருக்கிறார்கள். பரலோக காரியங்களைப் பற்றிய ஒரு தரிசனத்தில் யெகோவாவின் ஊழியரான தானியேல் இவ்வாறு கண்டதாக எழுதினார்: “ஆயிரமாயிரம்பேர் அவரைச் [கடவுளைச்] சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்.”—தானியேல் 7:10.

யெகோவா படைத்த முதல் ஆவி ஆள், இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படலானார். (யோவான் 17:5; கொலோசெயர் 1:15) பூமியில் மனிதனாக வாழ்வதற்கு முன், இயேசு பரலோகத்தில் வல்லமையுள்ள ஓர் ஆவி ஆளாக இருந்தார். மனிதனாக இயேசு இறந்த பிறகு, அவர் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டார்; அங்கே அவர் மீண்டும் வல்லமையுள்ள ஆவி ஆளாக வாழத் தொடங்கினார்.—அப்போஸ்தலர் 2:32, 33.

இயேசு பரலோகத்தில் மகா வல்லமையைப் பெற்றிருக்கிறார். யூதா 9-ல், மிகாவேல் என்பதாகவும் அறியப்படும் இயேசு, ‘பிரதான தூதன்’ என்பதாக அழைக்கப்படுகிறார்; இதன் அர்த்தம் அவரே தலைமை தூதர் அல்லது முதன்மையான தூதர் என்பதாகும். (1 தெசலோனிக்கேயர் 4:16) அவர் பூமியின்மீதும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். ‘சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவத்தையும் மகிமையையும் ராஜரிகத்தையும்’ யெகோவா கொடுத்திருக்கிறார். (தானியேல் 7:13, 14) இயேசுவிற்கு மகா அதிகாரமிருந்தும், அவர் தமது தகப்பனாகிய யெகோவாவிற்கு தொடர்ந்து கீழ்ப்படிகிறார்.—1 கொரிந்தியர் 11:3.

உண்மையுள்ள தூதர்கள், யெகோவாவிற்கு ஊழியம் செய்யும் அதேசமயத்தில், பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியக்காரர்களுக்கும் ஊழியம் செய்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் [தேவதூதர்கள்] அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” (எபிரெயர் 1:14) மக்கள் யெகோவாவைப் பற்றிய உண்மையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் விசேஷமாக அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய யோவான், தரிசனத்தில் ‘தூதன் வானத்தின் மத்தியில் பறக்கக்கண்டார்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள் என்றான்.’—வெளிப்படுத்துதல் 14:6, 7.

சாத்தானும் பேய்களும், கடவுளுக்கும் மனிதனுக்கும் எதிரிகள்

வருந்தத்தக்கதாக, எல்லா தூதர்களும் கடவுளுக்கு உண்மையோடு இருக்கவில்லை. சிலர் அவருக்கு விரோதமாக கலகம் செய்து, கடவுளுக்கும் மனிதவர்க்கத்திற்கும் எதிரிகளாக ஆனார்கள். முக்கியமான கலகக்காரன் பிசாசாகிய சாத்தான்.

சாத்தான் இருப்பதை அநேகர் மறுதலிக்கும் அதேசமயத்தில், தீமை இருப்பதை எவரும் மறுதலிப்பதில்லை. தீமை இருப்பதாக நம்பும் சமயத்தில், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை நம்பாமல் இருப்பது, “தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினைக்கு” வழிநடத்துகிறது என்பதாக சாத்தானின் மரணம் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. “தீமை இருப்பதை மக்கள் உணர்கின்றனர், ஆனால் அதற்கான காரணத்தை குறித்ததில் ‘பிசாசு’ என்ற வார்த்தையை உபயோகிப்பது இனியும் வழக்கத்திலில்லை,” என்பதாக அப்புத்தகம் சொல்கிறது.

அதற்கு எதிர்மாறாக, பைபிளில் அந்த வார்த்தை நிச்சயமாகவே இருக்கிறது; தீமைக்கான ஊற்றுமூலத்தைப் பற்றிய உண்மையை அது வெட்டவெளிச்சமாக்குகிறது. யெகோவா உண்டாக்கிய தூதர்கள் அனைவரும் நீதியுள்ளவர்களாகவும் நல்லவர்களாகவும் இருந்ததாக அது விளக்குகிறது; அவர் எந்தப் பொல்லாத தூதர்களையும் உண்டாக்கவில்லை. (உபாகமம் 32:4; சங்கீதம் 5:4) ஆயினும், மனிதர்களைப்போல் தூதர்களுக்கும், எது சரி எது தவறு என்று தேர்ந்தெடுப்பதற்கான திறமை கொடுக்கப்பட்டது. பரிபூரண ஆவி குமாரர்களில் ஒருவன், யெகோவாவிற்கே உரிய வணக்கத்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சுயநல ஆசையை வளர்த்துக்கொண்டான். இவ்வாறு அவன் “எதிர்ப்பவன்” என்று அர்த்தம்தரும் சாத்தான் என்ற பெயரை பெற்றான். (யாக்கோபு 1:14, 15-ஐ ஒப்பிடுக.) சில ஆப்பிரிக்க மதங்கள் கற்பிக்கும் விதமாக சாத்தான் வெறும் ஏமாற்று பேர்வழி அல்ல; அவனுக்கு தவறாமல் பலி செலுத்துவோருக்கு பாதுகாப்பளிக்கும் ஒரு “பாதுகாவலனும்” அல்ல. பைபிள் அவனை முழுக்கமுழுக்க கெட்டவனாகவும் துன்மார்க்கனாகவும் காட்டுகிறது.

மற்ற தூதர்கள், கடவுளுக்கு விரோதமான கலகத்தில் சாத்தானோடு சேர்ந்துகொண்டனர். இந்தப் பேய்த் தூதர்கள் பூமியிலுள்ள மக்களுக்கும்கூட எதிரிகளாயிருக்கின்றனர். அவர்களும்கூட குரோதமானவர்கள், தீயெண்ணமுள்ளவர்கள். கடந்த காலங்களில், அவர்கள் சில மனிதர்களை ஊமைகளாகவும் குருடர்களாகவும் ஆக்கினர். (மத்தேயு 9:32, 33; 12:22) மற்றவர்களுக்கு, பிள்ளைகளும் உட்பட, அவர்கள் நோயையும் மனக்கோளாறையும் உண்டாக்கினர். (மத்தேயு 17:15, 18; மாற்கு 5:2-5) தெளிவாகவே, புத்தியுள்ள எந்த நபரும் சாத்தானோடோ அந்தப் பேய்களோடோ எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

மூதாதையர் எங்கே இருக்கின்றனர்?

ஆப்பிரிக்காவிலும் மற்ற இடங்களிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள், இறப்பானது வாழ்க்கைக்கு முடிவைக் குறிப்பதில்லை ஆனால் வெறுமனே மற்றொரு வாழ்க்கைக்கு மாறுவதை, அதாவது தெய்வங்கள் மற்றும் மூதாதையரின் இடமாகிய ஆவி உலகில் வாழ்க்கையை அடைவதைக் குறிப்பதாக நம்புகின்றனர். ஆப்பிரிக்க மதங்களின் நிபுணரான ஜான் ம்பிடி என்ற கல்விமான், “வாழ்ந்துகொண்டிருக்கும்-மரித்தோர்” என்பதாக அவர் அழைக்கும் மூதாதையரின்பேரிலுள்ள நம்பிக்கையைக் குறித்து எழுதுகிறார்: “இவர்கள், ஆப்பிரிக்க ஜனங்களுக்கு மிகவும் அக்கறைக்குரியவர்களான ‘ஆவிகள்’ ஆவர். . . . அவர்களது குடும்பத்தில் [பூமியில்] என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், அதில் அக்கறையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். . . . குடும்ப விவகாரங்கள், பாரம்பரியங்கள், நன்னெறிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பவர்களாய் இருக்கிறார்கள். இந்தக் காரியங்களில் செய்யப்படும் குற்றம் மூதாதையரைப் புண்படுத்தும் செயலாக இருக்கிறது; அவர்கள் அந்த நிலையில், அவர்களது குடும்பங்களின் மற்றும் சமுதாயங்களின் கண்ணுக்குப் புலப்படாத போலீஸாக செயல்படுகின்றனர். வாழ்ந்துகொண்டிருக்கும்-மரித்தோர் இன்னும் ‘மக்களாக’ கருதப்படுவதன் காரணமாக, அவர்களே மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையேயுள்ள சிறந்த மத்தியஸ்தர் தொகுதி: அவர்களுக்கு மனிதர்களின் தேவைகள் என்னவென்பது தெரியும், அவர்கள் ‘சமீபத்தில்தான்’ மனிதர்களோடு மனிதர்களாய் இருந்தார்கள், அதேசமயத்தில் கடவுளோடும் அவர்களால் முழுமையாக தொடர்புகொள்ள முடியும்.”

எனினும், இறந்தவர்களின் நிலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? “வாழ்ந்துகொண்டிருக்கும்-மரித்தோர்” என்றெல்லாம் யாருமில்லை என அது காண்பிக்கிறது. ஜனங்கள், ஒன்று உயிருடன் இருக்கின்றனர் அல்லது இறந்துவிட்டிருக்கின்றனர்—இரண்டு நிலையிலும் ஒருபோதும் இருப்பதில்லை. இறந்தவர்களால் கேட்கவோ, பார்க்கவோ, பேசவோ, யோசிக்கவோ முடியாது என்பதாக கடவுளுடைய வார்த்தை கற்பிக்கிறது. இறந்தவர்கள், உயிரோடுள்ளவர்களை கண்காணிக்கும் நிலையில் இல்லை. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; . . . நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 6, 10) “[மனிதன்] தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”—சங்கீதம் 146:4.

மண்ணுக்குத் திரும்புதல்

இதை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், முதல் மனிதனாகிய ஆதாமுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். யெகோவா ஆதாமை ‘பூமியின் மண்ணினாலே உருவாக்கினார்.’ (ஆதியாகமம் 2:7) ஆதாம் யெகோவாவின் கட்டளையை மீறியபோது, மரணம் தண்டனையாக கிடைத்தது. கடவுள் அவனிடம் இவ்வாறு சொன்னார்: ‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புவாய். . . . நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.’—ஆதியாகமம் 3:19.

யெகோவா ஆதாமை மண்ணிலிருந்து உண்டாக்குவதற்கு முன்பு, ஆதாம் எங்குமே இல்லை. ஆகவே அவன் ‘பூமிக்குத் திரும்பியபோது’ அவன் மறுபடியும் உயிரற்று மண்ணைப்போல் ஆனான். அவன் மூதாதையரின் ஆவி உலகிற்கு மாறிச்செல்லவில்லை. அவன் பரலோகத்திற்கோ நரகத்திற்கோ செல்லவில்லை. அவன் இறந்தபோது, அதுவே அவனது முடிவாக இருந்தது.

அதே காரியம்தான் மற்ற மனிதர்கள் இறக்கும்போதும் நடக்கிறதா? ஆம், அதேதான் நடக்கிறது. பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “எல்லாம் [மனிதர்கள், மிருகங்கள் ஆகிய இரண்டுமே] ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.” (பிரசங்கி 3:20) இறந்த மனிதர்களை கடவுள் பரதீஸான பூமியில் மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவார் என்பதாக பைபிள் வாக்குறுதியளிக்கிறது, ஆனால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) அதற்கிடையில், நாம் இறந்தவர்களைக் குறித்து பயப்படவோ அவர்களுக்கு பலிகளை செலுத்தவோ வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களால் நமக்கு நன்மையும் செய்ய முடியாது தீமையும் செய்ய முடியாது.

சாத்தானும் அவனது பேய்களும், இறந்த மூதாதையரின் நிலைமையைப் பற்றி மக்களை தவறாக வழிநடத்த விரும்புகின்றனர்; ஆகவே ஜனங்கள் இறந்த பின்னும் தொடர்ந்து உயிர்வாழ்கின்றனர் என்ற பொய்யை முன்னேற்றுவிக்கிறார்கள். அவர்கள் இதைச் செய்துவரும் ஒரு வழி, பொய்க்கதைகளைப் பரப்புவதன் மூலமாகும். (1 தீமோத்தேயு 4:1) தரிசனங்கள், கனவுகள் மற்றும் ஆவியுலக மத்தியஸ்தர்களையும்கூட பயன்படுத்தி, இறந்தவர்களோடு தொடர்புகொண்டதாக மக்களை நினைக்கச்செய்து ஏமாற்றுகின்றனர். ஆனால் அவர்கள் தொடர்புகொண்டது இறந்தவர்கள் அல்ல. அதற்கு மாறாக, அவை, இறந்தவர்களைப் போன்று நடிக்கும் பேய்கள். ஆகவேதான், இறந்தவர்களிடம் நேரடியாகவோ குறிசொல்லுதல் போன்ற மற்ற வழிகள் மூலமாகவோ பேசுவோரை யெகோவா கடுமையாக கண்டிக்கிறார்.—உபாகமம் 18:10-12.

[பக்கம் 6-ன் படம்]

தரிசனங்கள், கனவுகள் மற்றும் ஆவியுலக மத்தியஸ்தர்கள் மூலம் பேய்கள் ஜனங்களை ஏமாற்றவும் பயமுறுத்தவும் செய்கின்றன

[பக்கம் 7-ன் படம்]

மக்களை தவறாக வழிநடத்த, பேய்கள் இறந்தவர்களைப் போன்று நடிக்கின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்