ஆவி உலகோடு தொடர்புகொள்ளுதல்
மேற்கு ஆப்பிரிக்க பட்டணத்தின் நடுவே, வெள்ளையிலும் பச்சையிலும் பெயின்ட் அடிக்கப்பட்ட அழகான ஒற்றைமாடிக் கட்டிடம் ஒன்று உள்ளது. வரவேற்பு அறையில், இரண்டு செயலர்கள் டைப் அடித்துக்கொண்டிருந்தனர். நாற்காலிகளில் சாவகாசமாக அமர்ந்திருந்த அநேக நபர்கள், குறிசொல்லும் பாபாலாவோ-வைப் பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருந்தனர்.
பக்கத்திலிருந்த அலுவலகத்தில், மேஜைக்குப் பின்னும் ஃபாக்ஸ் (fax) மெஷினுக்குப் பக்கத்திலும் பாபாலாவோ உட்கார்ந்திருந்தார். கட்டுடலோடும் நரைத்த முடியோடும் இருந்த அவர், விலையுயர்ந்த, எம்ப்ராய்டரி போடப்பட்ட நீண்ட வெள்ளை அங்கியை அணிந்திருந்தார். அவர் சொன்னார்: “என் அப்பா குறிசொல்பவராய் இருந்தார். நான் அந்தப் பாரம்பரியத்திலே பிறந்தேன். அதிலே வளர்ந்தேன். ஐந்து வயதானபோது என் அப்பா குறிசொல்ல போகும்போது அவருடன் சென்றேன். அதை அவர் எவ்வாறு செய்தாரென்பதை நான் கவனித்தேன், அது என் இரத்தத்தில் இரத்தமாக கலக்கும்வரை நான் அவரை பின்பற்றினேன்.”
பாபாலாவோ, அவரது ஜனத்தார் எண்ணற்ற சந்ததிகளுக்கு பயன்படுத்தியிருந்த நுணுக்கமான குறிசொல்லும் முறையை காட்டிய பெரிய மரப்பலகையைப் பார்த்து சைகை காட்டினார். 16 விதைகளை (palm nuts) போட்டுப்பார்த்து குறிசொல்லும் இந்த முறை, மேற்கு ஆப்பிரிக்கா முழுவதிலும் அதைத் தாண்டியும் பரவியிருக்கிறது. “மக்கள் எல்லா வித பிரச்சினைகளோடும் என்னிடம் வருகின்றனர்—சம்பந்தப்பட்ட பிரச்சினை, மலட்டுத்தன்மை, வேலையின்மை, மனக்கோளாறு, உடற்கோளாறு மற்றும் அதுபோன்ற பிரச்சினைகள். குறிசொல்லப்பட்டதை வைத்து, மூதாதையரிடமோ வானுலகோரிடமோ [தெய்வங்கள்] முறையீடு செய்யப்படுகிறது. எதுவாயிருந்தாலும், ஏதோவொரு விதமான பலி செலுத்தப்பட வேண்டும்,” என்பதாக அவர் சொன்னார்.
அந்தப் பகுதியில், குறிசொல்வதையும் உட்படுத்தும் பாரம்பரிய மதப் பழக்கங்கள் ஊறிப்போயிருக்கின்றன; அதுபோலத்தான் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளும். பாபாலாவோ-வின் அலுவலகத்திற்கு பக்கத்தில், கீழ்க்காணும் பெயர்ப் பலகைகளை முன்புறத்தில் கொண்டிருந்த வெள்ளையடிக்கப்பட்ட கட்டிடங்கள் இருந்தன: கிங் சாலொமோன் II சர்ச், கேரூபீன் அண்ட் சேராபீன், செலஸ்டியல் சர்ச் ஆஃப் க்ரைஸ்ட், க்ரைஸ்ட் அப்போஸ்டலிக் சர்ச், க்ரைஸ்ட் ட்ரம்பெட்டர்ஸ் சர்ச். இந்தச் சர்ச்சுகள் பாரம்பரிய மதப் பழக்கங்களோடு ஒத்துப்போவதாயும், சில சமயங்களில் அவற்றைக் கடைப்பிடிப்பவையாயும் இருக்கின்றன. பாபாலாவோ இவ்வாறு சொன்னார்: “சமீபத்தில் நான் பிஷப்புடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இங்கே வந்தார். சுமார் 30 நிமிடங்களுக்கு நாங்கள் காரியங்களை கலந்தாலோசித்த பிறகு, கிறிஸ்தவர்களும் பாரம்பரிய பற்றுள்ளவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் தப்பபிப்பிராயங்களை நீக்கிவிடுவதற்கும் ஒன்றுகூடி உரையாடுவதற்கு நாங்கள் திட்டமிட வேண்டுமென அவர் சொன்னார்.”
ஆவி உலகின் கதவுகள்
உண்மையில் ஆவி உலகில் வாழ்வோர் யார் என்ற கேள்வியை அப்படிப்பட்ட தப்பபிப்பிராயங்கள் பெரும்பாலும் உள்ளடக்குகின்றன. சஹாராவிற்கு தெற்கே ஆப்பிரிக்கா முழுவதிலும், ஆவி உலகில் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தோர் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. முதல் பிரிவு, எந்தச் சமயத்திலும் மனிதர்களாய் இருந்திராத தெய்வங்களால் அல்லது கடவுட்களால் ஆனது. இரண்டாவது பிரிவு, மூதாதையர்களால் அல்லது இறந்தவர்களின் ஆவிகளால் ஆனது; இவர்களுடைய பொறுப்பு, பூமியிலுள்ள அவர்களது குடும்பத்தார் நலம்பெறவும் செழுமையுடன் வாழவும் உதவுவதாகும். அந்தத் தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும், பூமியிலிருப்போருக்கு உதவி செய்வதற்கோ தீங்கு விளைவிப்பதற்கோ வல்லமை இருப்பதாக நம்பப்படுகிறது. ஆகவே, அந்த இரு பிரிவினருக்குமே சரியான மரியாதையும் வணக்கமும் செலுத்தப்பட வேண்டும்.
இதேபோன்ற நம்பிக்கைகள் உலகின் அநேக பகுதிகளில் காணப்படுகின்றன. எங்குமுள்ள மக்கள், மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளை அணுகுவதற்கு வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றனர்; எதிர்காலத்தைப் பற்றிய அறிவிற்காகவும், வாழ்க்கையின் அன்றாட பிரச்சினைகளை மேற்கொள்வதற்கான உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் இச்சக்திகளை நாடுகின்றனர். ஆவி உலகிலிருந்து உண்மையிலேயே நாம் உதவியைப் பெற முடியுமா? அங்கே வாழ்ந்திருந்த இயேசு கிறிஸ்து, அவ்வாறு உதவியைப் பெற முடியுமென்பதாக சொன்னார். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்பதாக அவர் சொன்னார். (மத்தேயு 7:7) ஆனால் அந்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு, நாம் சரியான நபரிடம் கேட்க வேண்டும், சரியான விதத்தில் நாட வேண்டும், சரியான கதவை தட்ட வேண்டும். தவறான கதவை நாம் தட்டினால், நமக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை செய்யப்போகும் ஒருவரால் அது ஒருவேளை திறக்கப்படும்.
ஆகவே, ஆவி உலகில் யார் வாழ்கின்றனர் யார் வாழ்வதில்லை என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது. நமக்கு நன்மை செய்யப்போகிறவர்களுக்கும் தீமை செய்யப்போகிறவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். கடைசியாக, உதவியளிக்கும் நிலைமையில் இருப்போரிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் அறிந்திருக்க வேண்டும். பின்வரும் கட்டுரைகள் இந்தக் காரியங்களை ஆராயும்.