யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தப்பபிப்பிராயங்களை அகற்றுதல்
இரண்டு யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு பிரசங்கம் செய்துகொண்டிருக்கையில் ஒருவரைச் சந்தித்தபோது, அவர் தனக்கு விருப்பமில்லை என்பதாகக் கூறினார். அந்தச் சாட்சிகள் அமைதியாக போய்விட்டனர். ஆனால் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருக்கையில், அந்த ஆள் தங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். “தயவுசெய்து நில்லுங்கள்!” என்று அந்த ஆள் கூப்பிட்டார். “நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு சாட்சிகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. பலருக்கு உங்களைப் பற்றி தப்பபிப்பிராயங்கள் தான் இருந்திருக்கின்றன.”
பிறகு அந்த ஆள் தன்னுடைய பெயர் ரெனான் டோமிங்கஸ் என்பதாகவும், தான் கலிபோர்னியாவிலுள்ள தென் சான் பிரான்சிஸ்கோவின் ரோட்டரி கிளப்பில் நிகழ்ச்சிநிரல் அக்கிராசனர் என்பதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அந்தக் கிளப்புக்கு ஒரு சாட்சி வருவாரா என்றும், யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் பற்றி ஒரு பேச்சு கொடுப்பாரா என்றும் அவர் கேட்டார். பொருள்நிரல் (agenda) ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சாட்சி 30 நிமிடங்களுக்குப் பேசுவார், அதன்பிறகு சபையாரிடமிருந்து வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார். சான் பிரான்சிஸ்கோ பகுதியில் பல்லாண்டுகளாக ஒரு சாட்சியாய் இருந்த அர்னஸ்ட் கரெட், ஆகஸ்ட் 17, 1995-ல் அந்த ரோட்டரி கிளப்பில் ஒரு பேச்சு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் பின்வருமாறு கூறினார்:
“வங்கி நடத்துநர்கள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள் போன்ற தொழில்துறை சார்ந்த மற்றும் சமுதாய தலைவர்களாய் இருக்கும், ரோட்டரி கிளப்பின் அங்கத்தினர்களிடம் நான் என்னத்தைப் பேச முடியும் என்பது குறித்து யோசித்து, ஜெபித்தேன். நான் சற்று ஆராய்ச்சி செய்து, ரோட்டரி கிளப் செயல்படுவதன் நன்கறியப்பட்ட நோக்கம் சமுதாயத்தை வலுப்படுத்துவது என்பதைக் கண்டறிந்தேன். ஆகவே இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற சிற்றேட்டின் 23-ம் பக்கத்தில் ‘உங்கள் சமுதாயத்துக்கு நற்செய்தியின் நடைமுறை மதிப்பு ’ a என்று தலைப்பிடப்பட்டிருந்த தகவலை அளித்தேன்.”
“இந்த விதத்தில் யெகோவாவின் சாட்சிகள் செல்வாக்கு செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள் என்று நான் விளக்கினேன். வாரத்தில் ஒவ்வொரு நாளும் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சமுதாயத்தினரின் கதவுகளைத் தட்டிவருகின்றனர். தங்கள் அயலவர் ஒரு பலமான குடும்பத்தையுடையவர்களாய் இருப்பதற்கு அவர்கள்மீது செல்வாக்கு செலுத்துவதே அவர்களின் ஆவலாகும். ஏனெனில், ஒரு பலமான தனிக் குடும்பம் ஒரு பலமான சமுதாயத்தில் விளைவடைகிறது. கிறிஸ்தவ நியமங்களுக்கு ஏற்ப வாழும்படி இன்னும் எத்தனை அநேக தனிநபருக்கும் குடும்பங்களுக்கும் யெகோவாவின் சாட்சிகள் அதிகமாக உதவுகிறார்களோ, அதற்கேற்ப அச் சமுதாயத்தில் கடமை தவறுதல், ஒழுக்கக்கேடு, குற்றச்செயல் ஆகியவை குறைந்துகொண்டே இருக்கும். அந்த ரோட்டரி கிளப்பின் இலட்சியங்களுக்கு இசைவாய் இருந்ததால், இத் தகவல் அந்த உறுப்பினர்களால் நன்றாக வரவேற்கப்பட்டது.”
“நீங்கள் ஏன் அரசியலில் தலையிடுவதில்லை?”
“அந்தக் கூட்டத்தில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டபோது, கேட்கப்பட்ட கேள்விகளில் முதலாவதாய் இருந்தது: ‘நீங்கள் ஏன் அரசியலிலும் அரசாங்கத்திலும் தலையிடுவதில்லை?’ என்பது. இக் கேள்வியைக் கேட்ட அந்தப் பெருந்தன்மையான மனிதர் மேலும் கூறினார்: ‘பைபிளில், “இராயனுடையதை இராயனுக்கு . . . செலுத்துங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.’ நாங்கள் அந்தக் கூற்றுக்கு முற்றிலும் ஒத்திருக்கிறோம் என்றும் முற்றிலும் அதற்குச் சாதகமாகவே இருக்கிறோம் என்றும் அவரிடம் கூறினேன். அந்த வசனத்தை மேற்கோள் காட்டுவதை நான் கேட்டிருக்கும் பெரும்பாலானோர், ‘தேவனுடையதை தேவனுக்குச் செலுத்துங்கள்’ என்று அதன் மறு பாதி சொல்லுவதை ஒருபோதும் மேற்கோள் காட்டுவதில்லை என்று நான் குறிப்பிட்டுக் காட்டினேன். (மத்தேயு 22:21) ஆகவே, எல்லாமே இராயனுடையது அல்ல என்று நாம் முடிவு செய்ய வேண்டும். தேவனுக்குரிய சில காரியங்களும் இருக்கின்றன. இராயனுடையது எது என்றும் தேவனுடையது எது என்றும் கண்டுபிடிக்க வேண்டிய விஷயத்தை நாம் எதிர்ப்படுகிறோம்.
“‘ இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ?’ என்ற கேள்வி இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, உண்டு, இல்லை என்று அவர் பதில் கூறவில்லை. ரோம தாலந்தான, ‘வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள்’ என்று அவர் கூறினார். அவர் இவ்வாறு கேட்டார்: ‘இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?’ ‘இராயனுடையது’ என்று அவர்கள் கூறினார்கள். பிறகு அவர் இவ்வாறு கூறினார்: ‘அப்படியானால் இராயனுடையதை இராயனுக்கு . . . செலுத்துங்கள்.’ (மத்தேயு 22:17-20) வேறு வார்த்தையில் சொல்லப்போனால், இராயனுக்கு வரிசெலுத்துங்கள், ஏனெனில் இராயனிடமிருந்து குறிப்பிட்ட சேவைகளை நாம் பெறுகிறோம், ஆகவே இவற்றிற்காக நாம் வரிசெலுத்துவது சரியானது. யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வரியைச் செலுத்துகிறார்கள், அரசாங்கத்துக்குரியது எதுவோ அதைச் செலுத்துவதில் ஏமாற்றுவதில்லை என்று நான் விளக்கினேன்.
“யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உயிர் இராயனுக்குச் சொந்தமானதாய் இருப்பதாக நம்புவதில்லை என்று நான் குறிப்பிட்டேன். தங்கள் வணக்கம் கடவுளுக்குச் சொந்தமானது என்று அவர்கள் நம்புகின்றனர். இதை அவர்கள் சரியாகவே அவருக்குச் செலுத்துகின்றனர். ஆகவே நாங்கள் இந்த நிலைநிற்கையை எடுக்கையில், இராயனை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கில்லை. இராயனுடைய எல்லா சட்டங்களுக்கும் நாங்கள் கீழ்ப்படிகிறோம். ஆனால், முரண்பாடு ஏற்படுகையில், மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதை நாங்கள் மரியாதையுடன் தெரிவு செய்கிறோம். இக் கேள்வியைக் கேட்டிருந்த அந்த மனிதர், முழு தொகுதியிடமும் இவ்வாறு கூறினார்: ‘அதை என்னால் மறுக்க முடியவில்லை!’
“நம் பிரசங்க நடவடிக்கையைப் பற்றியும் எண்ணற்ற கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்க முடிந்தது. கூட்டத்திற்குப் பிறகு அந்த உறுப்பினர்களில் பலர் எங்களிடம் வந்து கைகுலுக்கினர். நாங்கள் சொல்வதை—குடும்பமே வலுவான ஒரு சமுதாயத்துக்கு முதுகெலும்பாய் இருப்பதை—தாங்கள் முற்றிலும் ஒத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர். பிறகு ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற சிற்றேட்டைக் கொடுத்தோம்.
“இக் கூட்டத்திற்குப் பிறகு, நிகழ்ச்சிநிரல் அக்கிராசனர், திரு. டோமிங்கஸ் எனக்குப் போன் செய்து, அவருடைய அலுவலகத்துக்கு வர விருப்பமா என்று கேட்டுக்கொண்டார். ஏனெனில் நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி கேட்பதற்கு இன்னும் பல கேள்விகள் அவருக்கு இருந்தன. பல்வேறு வேதவசனங்களின்பேரில் ஒரு நல்ல சம்பாஷணையை நாங்கள் செய்தோம். விசேஷமாக, இரத்தத்தைக் குறித்த நம் நிலைநிற்கையைப் பற்றி நான் விளக்கம் தரும்படி அவர் விரும்பினார். அவர்தாமே இரத்தம் ஏற்றிக்கொள்ளப்போவதில்லை என்று தாமே முன்வந்து கூறினார். மேலும், உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேட்டிலிருந்து நான் கொடுத்த தகவலால் அவர் மிகவும் கவரப்பட்டார். அவர் அந்தளவாய் கவரப்பட்டதால், திரும்பவும் வந்து அந்தக் கிளப்பின் உறுப்பினரிடம் இரத்தத்தைக் குறித்த நம் நிலைநிற்கையைப் பற்றிப் பேசும்படி வரவேற்பளித்தார். இந் நிகழ்ச்சிநிரலில் என்னோடு சேர்ந்துகொள்வதற்கு மற்றொரு சாட்சியான டாண் டாலை நான் அழைத்தேன். அவர், சாட்சிகள் அறுவை சிகிச்சைகளுக்காகச் செல்லவிருக்கும்போது, மருத்துவர்களிடம் இப் பிரச்சினையைக் குறித்து கலந்தாலோசிக்க மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். அத்துடன், வேதப்பூர்வமான நம் நிலைநிற்கையைத் தெளிவுபடுத்துவதற்கும், இரத்தம் ஏற்றிக்கொள்வதற்கு பதிலாக வெற்றிகரமான மாற்று மருந்துகளைப் பெற முன்வருவதற்கும் மருத்துவர்களுடனும் மருத்துவமனை நிர்வாகத்துடனும் நாம் எவ்வாறு சேர்ந்து செயல்படுகிறோம் என்பதை முழுவதுமாய் விளக்கினோம்.”—லேவியராகமம் 17:10-12; அப்போஸ்தலர் 15:19-21, 28, 29.
‘உங்கள் மகன் இறக்கும்படி விட்டுவிடுவதை நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா?’
“அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, ஒரு பெருந்தன்மையான மனிதர் தனியாக என்னிடம் வந்து இவ்வாறு கேட்டார்: ‘உங்கள் மகனுக்கு ஒரு விபத்து நேரிட்டு, அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டால், அவன் இறக்கும்படி விட்டுவிடுவதை அர்த்தப்படுத்துகிறீர்களா?’ அவருக்கு இருக்கும் கவலையே எனக்கும் இருப்பதாக நான் அவரிடம் நிச்சயமளித்தேன். ஏனெனில் எனக்கு ஒரு மகன் இருந்தான், 1988-ல் ஸ்காட்லாந்திலுள்ள லாக்கர்பீக்கு மேல் ஏற்பட்ட விமான விபத்தில் அவனை நான் இழந்துவிட்டேன். அவருடைய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், என் மகன் இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று முதலில் அவரிடம் கூறினேன்.
“நாங்கள் மருத்துவருக்கு, மருத்துவத்திற்கு, அல்லது மருத்துவமனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அல்ல. விசுவாசத்தின் மூலம் சுகப்படுத்துபவர்களுமல்ல. தொழில்முறை மருத்துவ சேவைகள் எங்களுக்குத் தேவை. எங்கள் நம்பிக்கையைக் கடவுளில் வைத்திருக்கிறோம். இரத்தத்தைக் குறித்த இவ் விஷயத்தில் அவர் காட்டும் வழிநடத்துதல்கள் எங்களுடைய நிரந்தர நன்மைக்காகவே என்ற நம்பிக்கையுடனும் இருக்கிறோம். பைபிள், கடவுளை, ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறவர்’ என்று விவரிக்கிறது. (ஏசாயா 48:17) அவர் இறந்தவர்களை உயிர்த்தெழுப்பும் திறத்தை தம் குமாரனுக்கு அளித்திருக்கிறார். இயேசு இவ்வாறு கூறினார்: ‘நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா?’—யோவான் 11:25, 26.
“மருத்துவர்கள் புரிந்துகொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம், எங்கள் நிலைநிற்கை, மனச்சாட்சி சம்பந்தப்பட்ட மற்றும் இணங்கிச்செல்ல முடியாத ஒரு விஷயம் என்பதே. வேசித்தனத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டத்துக்கு எதிராக நம்மால் இணங்கிச்செல்ல முடியாததைப் போலவே இவ் விஷயத்திலும் நம்மால் இணங்கிச்செல்ல முடியாது. நாம் கடவுளோடு கலந்துபேசி, ‘கடவுளே, நான் வேசித்தனம் செய்யக்கூடிய ஏதாவது ஒரு சந்தர்ப்பம் இருக்கிறதா?’ என்று கூறமுடியாது. பிறகு இந்த மனிதரிடம் நான் இவ்வாறு கூறினேன்: ‘இரத்தம் ஏற்றுவதை மறுப்பதன் மூலம் என் மகன் இறக்கும்படி நான் விட்டுவிடுவேனா என்று நீங்கள் கேட்டீர்கள். சரி, தயவுசெய்து நான் இப்படி கேட்கட்டுமா; எந்தவொரு தேசத்திலாவது இராணுவ சேவையில் இருக்கையில் உங்கள் மகன் இறக்கும்படி நீங்கள் விட்டுவிடுவீர்களா?’ உடனடியாகவும், அழுத்தம்திருத்தமாகவும் அவர் பதில் கூறினார், ‘ஆமாம்! ஏனென்றால் அது அவன் கடமை!’ நான் கூறினேன்: ‘உங்கள் மகன் இறக்கும்படி நீங்கள் விட்டுவிடுவீர்கள், ஏனெனில் அது உங்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட ஒரு காரணம். என் மகனைப் பற்றியதிலும் நான் அவ்வாறே நம்பும்படியான சிலாக்கியத்தை எனக்கு அனுமதியுங்கள்.’
“இதெல்லாவற்றுக்கும் பிறகு அக்கறையூட்டும் ஒரு விஷயமானது, அந்த நிகழ்ச்சிநிரல் அக்கிராசனர் திரு. டோமிங்கஸ், என்னையும் என் மனைவியையும் அவருடனும் அவருடைய மனைவியுடனும் சேர்ந்து சாப்பிடுவதற்காக இரவு சாப்பாட்டுக்கு வரவேற்றார். அவருடைய மனைவி, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தவறான தகவலுக்கும் தப்பெண்ணங்களுக்கும் பலியான ஒருவராய் இருந்ததாக அவர் நினைத்தார். அவர் நினைத்தது சரியே. அவர்கள் தவறான தகவலைப் பெற்றிருந்தார்கள். அந்த மாலைப்பொழுது இனிதாய் இருந்தது. எங்களைப் பற்றியும் எங்கள் வேலையைப் பற்றியும் அவருடைய மனைவி பல கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கெல்லாம் நாங்கள் விரிவான பதிலளிக்கும்படி அனுமதித்தார்கள். மறுநாள் அவர் போன் செய்து, என்னையும் என் மனைவியையும் சந்தித்ததை அவருடைய மனைவி முழுமையாக அனுபவித்தார்கள் என்றும், நாங்கள் மிகவும் நல்ல ஜனங்கள் என்று உணர்ந்துகொண்டார்கள் என்றும் தெரிவித்தார்.
“நான் தொடர்ந்து திரு. டோமிங்கஸை ஒழுங்காக சென்று சந்தித்து வருகிறேன். அவர் பைபிள் காரியங்களைத் தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார். அவர் இதையே என்னிடம் கூறினார்: ‘பெரிய சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த ரோட்டரி கிளப்புகள் எல்லாவற்றுக்கும் நிகழ்ச்சிநிரல் அக்கிராசனராய் இருப்பவரை நீங்கள் அணுகும்படியாகவும், எங்கள் கிளப்பில் நீங்கள் கொடுத்ததைப் போன்ற ஒரு பேச்சையே அவர்களுடைய கிளப்பிலும் கொடுக்க முன்வரும்படியாகவும் உங்களை உற்சாகப்படுத்த நான் தயங்கமாட்டேன். நீங்கள் என் பெயரைக் குறிப்பிடலாம், என்னிடம் தொடர்புகொள்ளும்போது, ஒரு சிறப்புப் பேச்சாளராக உங்களை வரவேற்கும்படியாக அதிகமாய் சிபாரிசு செய்வதில் நானும் மகிழ்ச்சியடைவேன்.’
“ரோட்டரி கிளப்புகள் சர்வதேசிய அளவானவை. ஐக்கிய மாகாணங்களிலும் உலக முழுவதிலும் இருக்கும் பிற கிளப்புகளிலும் யெகோவாவின் சாட்சிகளால் பேச்சுக்கள் கொடுக்கப்படுவதற்கான வரவேற்பு அளிக்கப்படும் சாத்தியம் இருக்கக்கூடுமா?”
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் 1989-ல் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 18-ன் படம்]
இடது புறத்திலிருக்கும் திரு. ரெனான் டோமிங்கஸும், சகோதரர் அர்னஸ்ட் கரெட்டும்