புலி! புலி!
இந்தியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஒரு சமயம் ஒரு குறுகலான மலைத்தொடரின் வழியே நான் நடந்துகொண்டிருந்தேன்,’ என்று டாக்டர் சார்லஸ் மக்டூகல் நினைத்துப்பார்க்கிறார். அவர் நேபாளத்திலுள்ள ராயல் சிட்டவான் தேசிய பூங்காவில் புலியைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பல்லாண்டுகளைச் செலவிட்டவர். ‘நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்த்திசையிலிருந்து ஒரு புலி வந்துகொண்டிருந்தது. நாங்கள் ஓரளவுக்கு உச்சியில் வைத்து சந்தித்தோம். எங்களுக்கிடையில் கொஞ்சத் தூரமே—சுமார் 15 எட்டுகள்—இருந்தது.’ டாக்டர் மக்டூகல் அசையாமல் நின்றார். அந்தப் புலியின் கண்களை உற்றுப் பார்ப்பதற்குப் பதிலாக அந்தப் புலியின் தோளின்மீது தன் உன்னிப்பான பார்வையை செலுத்தினார்; ஏனெனில் ஒரு புலி, அதன் கண்களைப் பார்ப்பதை சண்டைக்கு அழைக்கும் ஒன்றாய்க் கருதுகிறது. அந்தப் புலி கீழ்நோக்கிப் பதுங்கியது, ஆனால் தாக்குவதற்கு முற்படவில்லை. நீடித்ததாய்த் தோன்றிய பல நிமிடங்களுக்குப் பிறகு, டாக்டர் மக்டூகல் ஒருசில எட்டுகள் பின்னோக்கி வைத்தார். ‘அப்புறம்,’ அவர் சொல்கிறார், ‘நான் எங்கிருந்து வந்தேனோ, அங்கேயே சென்றுவிடும்படியாக வெறுமனே திரும்பி நடந்தேன்.’
இந் நூற்றாண்டின் தொடக்கத்தில், பூர்வீகமாய் வசித்துவந்த இடமான ஆசியாவில் 1,00,000 புலிகள் இருந்தன. அவற்றில் இந்தியாவிலிருந்த 40,000 புலிகளும் அடங்கும். ஆனால் 1973 வாக்கில், கம்பீரமான படைப்புகளான இவற்றின் உலகளவிலான எண்ணிக்கை 4,000-க்கும் கீழாகக் குறைந்துவிட்டிருந்தது. அது பெரும்பாலும் வேட்டையாடியதன் விளைவாய் இருந்தது. பூமியிலேயே மிகப் பெரிய பூனை இனமான புலி, மனிதனால் அற்றுப்போகும் நிலைக்கு அச்சுறுத்தப்படலாயிற்று. ஆனால் புலி, மனிதருக்கு ஓர் அச்சுறுத்தலாய் இருக்கிறதா? இப் பெரிய பூனை உண்மையில் எதைப் போன்று இருக்கிறது? அற்றுப்போவதிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகள் வெற்றிகரமாய் இருந்திருக்கின்றனவா?
புலிக் குடும்ப வாழ்க்கை
ஆண்டுக்கணக்கில் பொறுமையுடன் ஆய்வு நடத்தப்பட்டதிலிருந்து, உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு புலியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான கருத்து கிடைத்திருக்கிறது. இந்தியாவின் வடபகுதியிலிருக்கும், அழகிய ரன்த்தம்பார் காடுகளில் ஒரு குறிப்பிட்ட புலிக் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்வோம். அந்த ஆண்புலி, அதன் மூக்கிலிருந்து வால்வரையில் கிட்டத்தட்ட 3 மீட்டர் நீளமும், ஏறக்குறைய 200 கிலோ எடையுமுள்ளது. அதன் துணை, ஏறக்குறைய 2.7 மீட்டர் நீளமும் 140 கிலோ எடையுமுள்ளது. a ஓர் ஆண்குட்டியும் இரண்டு பெண்குட்டிகளுமாக, அவற்றிற்கு மூன்று குட்டிகள் இருக்கின்றன.
இக் காடுகளில் வெப்பநிலை 45° செல்சியஸுக்கும் மேல் செல்லலாம், ஆனால் அந்தப் புலிக் குடும்பம், இலைகள் நிறைந்த மரங்களின் நிழலில் ஓய்வெடுக்கிறது. அருகிலிருக்கும் ஓர் ஏரியின் குளிர் நீர்நிலைகளில் மூழ்குவதை அவை எப்போதும் அனுபவிக்கலாம். நீந்தும் பூனைகளா? ஆம், புலிகளுக்கு நீரின்மீது கொள்ளை விருப்பம்! உண்மையில், அவை ஐந்து கிலோமீட்டருக்கும் மேல் நிறுத்தாமல் நீந்துவதாக அறியப்பட்டிருக்கின்றன.
சூரிய ஒளி மரங்களினூடே கடந்துசென்று, புலிகளின் மினுங்கும் ஆரஞ்சுநிற தோலின்மீது பட்டு, அவை ஒளிவீசுவதைப் போல் தெரியச் செய்கின்றன. அக் கறுப்புக் கோடுகள் பளபளக்கின்றன, அம்பர் போன்ற கண்களுக்கு மேலுள்ள அவ் வெள்ளைப் பட்டைகளும் பிரகாசமாய் ஒளிர்கின்றன. அந்த மூன்று குட்டிகளையும் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்ட பிறகு, அவற்றின் வித்தியாசமான கோடுகளாலும் முகத்தில் காணப்படும் அடையாளக் குறிகளாலும் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துவது நமக்கு எளிதாகிறது.
ஒரு புலியாக வளருதல்
தாய்ப்புலி, தான் குட்டிபோடப் போகும் நிலையில் இருக்கையில், அடர்ந்த தாவரங்களால் நன்றாக மறைவாயிருக்கும் ஒரு பொருத்தமான குகையைத் தேடிச்செல்கிறது. அங்கிருந்து, அக் குடும்பம் இப்போது, பிற விலங்குகளைக் கவரும் நீர்க்கிடங்கையுடைய ஒரு சமவெளியின் காட்சியை அனுபவிக்கிறது. தன் குட்டிகளைவிட்டு வெகுதொலைவு செல்லாமலே இரைதேடிக்கொள்ளவே இந்த இடத்தை அப் பெண்புலி தெரிந்தெடுத்தது.
பிறந்ததிலிருந்து, அக் குட்டிகள் அதிகளவு கவனிப்பைப் பெற்றன. அவற்றின் குழந்தைப்பருவம் முழுவதிலும் அவற்றின் தாய், மென்மையாக முணுமுணுத்துக்கொண்டே, அவற்றைத் தன் பாதங்களுக்கிடையில் வைத்துக்கொண்டு சீராட்டியது, மூக்கை வைத்துத் தேய்த்தது, நக்கியது. குட்டிகள் பெரிதானபோது, அவை ஒளிந்துப்பிடித்தும், பொய்ச் சண்டை போட்டும் விளையாட ஆரம்பித்தன. புலிக்குட்டிகளுக்கு உறும முடியாவிட்டாலும், சுமார் ஒரு வயதிலிருந்து, அவற்றின் தாய் வெளியில் போய் திரும்பிவரும்போது, அவை பலத்த சத்தத்துடன் மூச்சு விடுகின்றன.
அக் குட்டிகளுக்கு, தங்கள் தாயுடன் சேர்ந்து நீரில் நீந்தி விளையாடுவதற்குக் கொள்ளை விருப்பம். அப் பெண்புலி அதன் வால் நீரில் படும்படியாக, அந்த ஏரிக்கரையோரம் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்துபாருங்கள். அவ்வப்பொழுது, சூடான தன் உடம்பைக் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டிக்கொள்வதற்காக அது தன் வாலை சட்டென வெளியே இழுத்து உதறுகிறது. வால்களைப் பற்றிப் பேசுகையில், தாய்ப்புலி தன் வாலை ‘சுவைங், சுவைங்’-என்று ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு சுழற்றுகையில், தங்கள் தாயின் வாலைப் பிடிக்க முயலுவதற்கு அக் குட்டிகள் ஒருபோதும் களைப்படைவதில்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அப் பெண்புலி தன் குட்டிகளோடு வெறுமனே விளையாடுவது மட்டுமில்லை; பாய்ந்து பிடிப்பது எப்படி என்றும் அவற்றிற்கு கற்றுக் கொடுக்கிறது. அவை, வேட்டையாட ஆரம்பிக்கும்போது இக் கலையைப் பிறகு பயன்படுத்தும். அக் குட்டிகளுக்கு மரமேற மிகவும் விருப்பம். ஆனால் அவற்றுக்கு வயது சுமார் 15 மாதமாகையில், மரமேற முடியாதளவுக்கு அவை மிகவும் புஷ்டியாயும், அதிக எடையுள்ளதாயும் ஆகியிருக்கின்றன.
அப்பாவின் வேலை
சமீப காலம் வரை, தாய்ப்புலி தன் குட்டிகளைத் தானாகவே வளர்த்தது என்றும், அந்த ஆண்புலி சந்தர்ப்பம் கிடைத்தால் குட்டிகளைக் கொன்றுவிடும் என்றும் பலர் நம்பினர். என்றபோதிலும், பெரும்பாலான புலிகளின் விஷயத்தில் இது உண்மையல்ல. தந்தைப்புலி நீண்ட காலத்துக்கு காட்டிற்குள் மறைந்துவிடவே செய்கிறது. அதன் எல்லையாகிய 50-க்கும் மேலான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுற்றித் திரிகிறது. ஆனால் அது தன் குடும்பத்தோடும் தங்குகிறது. அவ்வாறு தங்கும்போது, அந்தப் பெண்புலியுடனும் குட்டிகளுடனும் வேட்டையாடுவதில் சேர்ந்துகொண்டு, அவ்வாறு கொன்ற விலங்கை அவர்களோடு சேர்ந்து உண்ணவும் கூடும். ஆக்கிரமிக்கும் தன்மையை அதிகமாகக் கொண்ட ஆண்குட்டி, தான் முதலில் தின்னலாம். என்றாலும், அது பேராசையுடன் தன் சகோதரிகளை அருகில் வராதபடி, அவற்றை நீண்ட நேரம் காத்திருக்கச் செய்தால், அவ் விருந்தில் பெண்குட்டிகளுக்குச் சேரவேண்டிய பங்கைப் பெறுவதற்கு அனுமதிக்கும்படி, அதன் தாய் ஆண்குட்டியை மெதுவாக ஓர் இடி இடிக்கிறது, அல்லது தன் பாதத்தை வைத்து ‘பளார்’ என்று ஓர் அடி அடிக்கிறது.
உருவத்தில் பெரியதாயிருக்கும் தங்கள் தந்தையோடு சேர்ந்து விளையாடுவதை குட்டிகள் அனுபவிக்கின்றன. அருகிலுள்ள நீர்க்கிடங்கில் இவ்வாறு விருப்பத்துடன் விளையாடுகின்றன. தந்தைப்புலி நீரில் மெதுமெதுவாய் பின்பக்கமாகச் சென்று, தன் தலையளவுக்கு மூழ்கும்வரையில் இளைப்பாறுகிறது. (புலிகள் அவற்றின் கண்களில் நீர் தெளித்துக்கொள்வதை விரும்புவதில்லை!) பிறகு அது, தன் குட்டிகளின் முகங்களை நக்கிக்கொடுக்கும்போது, அவற்றின் மூக்கை வைத்துத் தன்னைத் தேய்த்துவிடுவதற்கும் அனுமதிக்கிறது. ஒரு பலமான குடும்பப் பிணைப்பு இருப்பது தெளிவாயுள்ளது.
மனித உண்ணிகள்?
புலிகளை கொடியவையாயும், வலியத்தாக்கும் பிராணிகளாயும், பதுங்கியிருந்து மனிதரைத் தாக்கி, அதற்குப் பிறகு அவர்களைச் சின்னாபின்னமாக்கி உண்பவையாயும் புத்தகங்களும் படங்களும் அடிக்கடி சித்தரிக்கின்றன. இது உண்மையே கிடையாது. மொத்தத்தில் புலிகள் மனித உண்ணிகள் அல்ல. பொதுவாக ஒரு புலி, காட்டில் ஒரு மனிதனைப் பார்த்தால், நைசாக நழுவவே முயலுகிறது. மனித மோப்பம் புலியின்மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதாய்க் காணப்படாமல் இருப்பது அக்கறையூட்டுவதாய் உள்ளது.
என்றபோதிலும், குறிப்பிட்ட நிலவரங்களின்கீழ், பசியாயிருக்கும் ஒரு புலி உண்மையிலேயே ஆபத்தானதாய் ஆகலாம். வயதாகிவிட்டதன் விளைவாகவோ, அல்லது மனிதரால் காயப்படுத்தப்பட்டிருப்பதாலோ, அது பல்லை இழந்தால், வழக்கம்போல் வேட்டையாட முடியாமல் இருக்கலாம். அதைப்போலவே, மனிதர் குடியிருப்பதற்காக புலியின் வாழிடத்தை மெதுமெதுவாய் ஆக்கிரமித்தால், புலியின் இயற்கையான இரைவிலங்கு அரிதாகவே கிடைப்பதாகிவிடக்கூடும். இதுபோன்ற காரணங்களினால், இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 50 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனாலும் இது, பாம்புகளால் கொல்லப்படும் எண்ணிக்கையைவிட நூறு மடங்கு குறைவானதாகவே இருக்கிறது. குறிப்பாக கங்கைக் கழிமுகப் பகுதியைச் சேர்ந்த சதுப்புநிலங்களில் புலியின் தாக்குதல்கள் சம்பவிக்கின்றன.
டாக்டர் மக்டூகல் கூறுவதன்படி, பலர் நினைப்பது போல புலிகள் அவ்வளவு ஆபத்தானவை அல்ல. மிகக் குறுகிய தூரத்தில் திடீரென எதிர்பாராத விதத்தில் பார்க்க நேரிடுகையில் ஒரு புலி தாக்கும்படி தூண்டப்பட்டாலும், “புலி மிகவும் அமைதியும், நிதானமுமான விலங்கு” என்று அவர் கூறுகிறார். “பொதுவாக, நீங்கள் ஒரு புலியை எதிர்ப்பட்டால்—மிகக் குறுகிய தூரத்தில் எதிர்ப்பட்டாலும்—அது தாக்காது.”
புலிகளுக்கு மத்தியில் வலியத்தாக்குவது அரிது. உதாரணமாக, ஓர் இளம் புலி மற்றொரு புலியின் எல்லைக்குள் அலைந்து திரிந்து, அந்த எல்லையில் வசிக்கும் ஆண்புலியை திடீரென்று எதிர்ப்படலாம். பலமான உறுமுதல்களும், இரத்தம் உறைந்திடும் பேரொலிகளும், பயங்கரமாகப் பல்லைக் காட்டி உறுமிக்கொண்டே கிட்டகிட்ட வருவதும் தொடர்கின்றன. ஆனால் அந்தப் பெரிய ஆண்புலி தன் வலிமையைக் காட்டும்போது, அந்த இளம்புலி உருண்டுசென்று, பணிந்துவிட்டதன் ஓர் அடையாளமாக மல்லாக்கப் படுத்துக்கொண்டு, அதன் பாதங்களை மேலே தூக்கிவைத்துக் காட்டும். அவ்வளவுதான், சண்டையும் தீர்ந்துவிட்டது.
இந்தப் பெரிய பூனையின் எதிர்காலம்
புலியினால் மனிதனுக்கு ஆபத்து இருப்பதற்குப் பதிலாக, அவன் தான் புலிக்கு ஆபத்தாய் இருப்பதை நிரூபித்திருக்கிறான். தற்போது, அற்றுப்போதலிலிருந்து புலியைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆசியாவைச் சேர்ந்த பல நாடுகள் புலிவேட்டையைத் தடைசெய்யும் சரணாலயங்களை நிறுவியுள்ளன. 1973-ல், இந்தியாவின் வடபகுதியிலிருக்கும் கார்பட் தேசிய பூங்காவில் புராஜக்ட் டைகர் என்றழைக்கப்பட்ட ஒரு விசேஷ முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான நிதி உதவிகளும் சாதன உதவிகளும் உலகெங்கிலுமிருந்து வந்து குவிந்தன. காலப்போக்கில், 28,000 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட மொத்தப் பரப்பளவையுடைய 18 புலி சரணாலயங்கள் இந்தியாவில் ஒதுக்கப்பட்டன. 1978 வாக்கில், அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் புலிகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அதனால் ஆச்சரியமூட்டும் விளைவுகள் ஏற்பட்டன! புலிவேட்டை தடைசெய்யப்பட்டதற்கு முன்பு, புலிகள் நழுவித் தப்பித்துக்கொள்ளும் தன்மையுடையதாய் ஆகிவிட்டிருந்தன. மேலும் மனித பயம் காரணமாக, முக்கியமாய் இரவு நேரத்தில் நடமாடுபவையாகிவிட்டிருந்தன. ஆனால் பல ஆண்டுகள் பாதுகாப்பு கொடுத்தபிறகு, புலிகள் சரணாலயங்களில் இங்குமங்கும் சுற்றித்திரிந்து பகல் நேரத்திலேயே முழுமையாய் வேட்டையாட ஆரம்பித்தன!
ஆனாலும், புலியினுடைய உடலுறுப்புகளிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய ஆசிய நிவாரணிக்கு சர்வதேச அளவில் கிராக்கி இருப்பதால், புலிக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்துவருகிறது. உதாரணமாக, ஒரு மூட்டை புலி எலும்புகளுக்கு இந்தியாவில் 500 டாலர் பணம் கிடைக்கலாம், அந்த எலும்புகள் பதப்படுத்தப்பட்டு, தூரக்கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சந்தைகளைச் சென்றடைவதற்குள், அந்த மதிப்பு 25,000 டாலராக அதிகரித்துவிட்டிருக்கிறது. இவ்வளவு பணம் கிடைப்பதைத் தவற விட்டுவிடும் நிலையிலுள்ள ஏழையான கிராம மக்கள், காட்டுக் காவலர்களையும் மீறி, புலிவேட்டைக்காரர்களோடு ஒத்துழைக்க தூண்டப்படுகின்றனர். முதலில் புலியைப் பாதுகாக்கும் முயற்சிகள் வெற்றிகரமானவையாய்க் கருதப்பட்டன. ஆனால் 1988-லிருந்து, சூழ்நிலை மோசமாகிவிட ஆரம்பித்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 40 புலிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்று சுமார் 27 புலிகள் மட்டுமே ரன்த்தம்பாரில் சுற்றித் திரிகின்றன. மேலும் உலக முழுவதிலும் உள்ள புலிகளின் எண்ணிக்கை 5,000 என்றளவுக்குக் குறைவாய் இருக்கலாம்!
கடந்த நூற்றாண்டின் முடிவு வரையாக, இந்தியாவில் புலிகளும் மனிதரும் ஒருமித்து, ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து வாழ்ந்தனர். அவ்வாறு மீண்டும் எப்போதாவது வாழ முடியுமா? இப்போதைக்கு, “புலி! புலி!” என்ற பரபரப்பூட்டும் அறைகூவல், உலகின் மிகப் பெரிய பூனையினத்தை அரிதாய்ப் பார்க்கும் பொருளாக அர்த்தப்படுத்தலாம். பாதுகாப்பு திட்டங்கள் எதிர்காலத்தில் புலியின் பாதுகாப்பை நிச்சயப்படுத்திக்கொள்ளுமா என்பதை நிச்சயமாய்ச் சொல்லமுடியாது. ஆனால் முழு பூமியும் ஒருநாள் ஏதேன் தோட்டத்தைப் போல ஒரு பரதீஸாகும் என்று பைபிள் உறுதியளிக்கிறது. அப்போது மனிதனும், புலியைப் போன்ற காட்டு விலங்குகளும் சமாதானமாய் இப்பூமியில் வாழ்வர்.—ஏசாயா 11:6-9.
[அடிக்குறிப்பு]
a மிகப் பெரிய துணைவகையான (subspecies) சைபீரிய புலிகள், 320 கிலோவுக்கும் மேலான எடையும், 4 மீட்டர்வரையான நீளமும் இருக்கலாம்.
[பக்கம் 17-ன் பெட்டி/படம்]
வெண்புலி
இந்தியாவில் தேசிய பொக்கிஷமாயிருக்கும், அரிதான வெண்புலி, தலைமுறை கடந்து மரபுப் பிறழ்ந்த ஜீனின் விளைவாகும். 1951-ல், இந்தியாவின் ரெவா காட்டில் ஒரு வெள்ளை ஆண்குட்டி பிடிக்கப்பட்டது. ஒரு சாதாரணநிற பெண்புலியுடன் இணைசேர்ந்து, சாதாரண குட்டிகளை ஈன்றது. என்றபோதிலும், இவற்றுள் ஒரு பெண்குட்டி, தந்தையாயிருந்த அந்த வெண்புலியுடன் இணைசேரும்படி செய்யப்பட்டபோது, அது நான்கு வெள்ளைக் குட்டிகளை ஈன்றது. அவற்றைக் கவனத்துடன் வளர்த்ததால், அது, பல இடங்களில் உள்ள மிருகக் காட்சிசாலைகளில் மக்கள் இந்த அரிய அழகைக் காணும்படி செய்திருக்கிறது.
[பக்கம் 16-ன் படம்]
நீந்தும் பூனைகளா? ஆம்!
[பக்கம் 17-ன் படம்]
பலர் நினைப்பது போல புலிகள் அவ்வளவு ஆபத்தானவை அல்ல