‘இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான்!’—சிறுநீரக வியாதியோடு என் வாழ்க்கை
1980 ஜனவரி மாத ஆரம்பத்தின் அந்த நாள், நேற்றைக்கு நடந்ததுமாதிரியே இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு ப்ரெட் பாக்கெட்டை வாங்கிவர என் அம்மா என்னை கடைக்குப் போகச் சொன்னார்கள், ஆனால் நான் வீட்டிலிருந்து புறப்படுற நேரம்பார்த்து ஃபோன் அடித்தது. லாப் டெஸ்டுகளின் ரிஸல்ட்டுகளைக் கொடுப்பதற்காக என் டாக்டர் ஃபோன் செய்திருந்தார். திடீரென, அம்மாவின் கண்களில் நீர் பொங்கியது. தேம்பித்தேம்பி அழுதுகொண்டே, அந்த வருத்தமான செய்தியை என்னிடம் சொன்னார்கள். என் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை. அவை, ஒரு வருடத்திற்கு, மிஞ்சிமிஞ்சிப் போனால் இரண்டு வருடத்திற்குத்தான் செயல்படும். அந்த டாக்டர் சரியாகத்தான் சொல்லியிருந்தார்—ஒரு வருடம்கழித்து எனக்கு டையாலிஸிஸ் (dialysis) சிகிச்சை ஆரம்பமானது.
நான் மே 20, 1961-ல் பிறந்தேன். ஆறு பிள்ளைகளில் நான்தான் மூத்தவன். நான் சுமார் ஆறு மாதக் குழந்தையாயிருந்தபோது, என் ஜட்டியிலிருந்த சிறுநீரில் இரத்தமிருந்ததை என் அம்மா பார்த்தார்கள். ஏகப்பட்ட டெஸ்டுகளுக்குப் பிறகு, அல்போர்ட்ஸ் சின்ட்ரோம் எனப்படும் ஒரு அபூர்வ குறைபாடு எனக்கிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. அறியப்படாத காரணங்களினால், இந்த வியாதியைப் பெற்றிருக்கும் ஆண்கள் கொஞ்ச காலத்திற்குள் சிறுநீரக செயலிழப்பால் (renal failure) பெரும்பாலும் அவதிப்படுகின்றனர். என் அம்மா அப்பாவிற்கும் எனக்கும் இதை எவரும் சொல்லவில்லை, அதனால் நான் சிறுநீரக வியாதியைப் பற்றி கவலைப்படவில்லை.
அதற்குப்பின், 1979-ன் கோடைகாலத்தின்போது, காலையில் என் சுவாசத்தில் அமோனியாபோன்ற நாற்றம் அடித்ததை நான் உணர்ந்தேன். நான் அதற்கு உண்மையிலேயே அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை, ஆனால் அதன்பின் அதிக சோர்வாக உணர ஆரம்பித்தேன். எனக்கு வெறுமனே சுகமில்லை என்பதாக நான் நினைத்தேன், அதனால் நான் அதை அலட்சியமாக நினைத்துவிட்டேன். டிசம்பரில் எனக்கு வருடாந்தர செக்கப் செய்யப்பட்டது, ஜனவரியில், நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஃபோன் வந்தது.
நான் கடைக்கு வண்டியோட்டிக்கொண்டு சென்றபோது—என்னயிருந்தாலும் அம்மாவுக்கு இன்னும் ப்ரெட் வேண்டும்தானே—நான் அதிர்ச்சியிலிருந்தேன். எனக்கு இதெல்லாம் நேரிட்டுக்கொண்டிருந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. “எனக்கு 18 வயசுதான் ஆகிறது!” நான் அழுதேன். காரை ஒரு பக்கமாக கொண்டுசென்று நிறுத்தினேன். எனக்கு நேர்ந்த கதி மெல்ல மெல்ல விளங்க ஆரம்பித்தது.
“போயும்போயும் எனக்கா?”
ரோட்டோரமாக உட்கார்ந்துகொண்டு நான் அழ ஆரம்பித்தேன். என் முகத்தில் கண்ணீர் வழிந்தோட, நான் புலம்பினேன்: “போயும்போயும் எனக்கா, கடவுளே? ஏன் எனக்குப்போயி? என்னோட சிறுநீரகங்கள் வேலைசெய்யாமல் போகும்படி விட்டுவிடாதீங்க, ப்ளீஸ்!”
1980-ம் வருடத்தில், மாதங்கள் கடந்து செல்லச்செல்ல, என் உடல்நிலை மோசமாகிக்கொண்டே போவதை நான் உணர்ந்தேன்; நான் இன்னும் அதிக பரிதவிப்போடும் கண்ணீரோடும் ஜெபம் செய்தேன். அந்த வருட முடிவிற்குள், சரிவர வேலைசெய்யாத என் சிறுநீரகங்களால் வடிகட்டப்படாத விஷ கழிவுகள் என் இரத்தத்தில் அதிகரித்திருந்ததன் காரணமாக நான் உணர்வை இழந்துவந்தேன், அடிக்கடி வாந்தி எடுத்தேன். நவம்பரில் கடைசி தடவையாக என்னுடைய நண்பர்கள் சிலரோடு பிரயாணம் செய்து வெளியில் தங்கினேன். ஆனால் என் உடல்நிலை அந்தளவுக்கு மோசமாயிருந்ததால் வாரயிறுதி நாட்கள் முழுக்கமுழுக்க நான் வெறுமனே காரிலேயே உட்கார்ந்திருந்தேன். என்னதான் செய்தாலும் என்னால் குளிரை அடக்கமுடியவில்லை. கடைசியில், ஜனவரி 1981-ல், தவிர்க்க முடியாதது நிகழ்ந்தது—என் சிறுநீரகங்கள் முழுமையாகவே செயலிழந்துவிட்டன. ஒன்று டையாலிஸிஸ் ஆரம்பிக்க வேண்டும் அல்லது சாக வேண்டும்.
டையாலிஸிஸ் சிகிச்சையின்போது என் வாழ்க்கை
சில மாதங்களுக்கு முன்பு, ஊசிகள் தேவைப்படாததும் இரத்தத்தை உடம்பிற்கு உள்ளே சுத்தம்செய்வதுமான ஒரு புதிய வகையான டையாலிஸிஸ் பற்றி எங்கள் குடும்ப டாக்டர் என்னிடம் சொல்லியிருந்தார். இந்தச் சிகிச்சைக்குப் பெயர், பெரிடோனியல் டயாலிஸிஸ் (PD). கேட்டவுடனேயே இது பரவாயில்லை என்று எனக்குத் தோன்றியது, ஏனென்றால் ஊசிகளென்றாலே எனக்கு பயங்கர வெறுப்பு. சில டையாலிஸிஸ் நோயாளிகளால் இந்த மாற்று சிகிச்சையை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வாழமுடியும்.
மலைக்கவைக்கும் விதமாக, நமது உடலில் செயற்கை சிறுநீரகம் போன்று வேலைசெய்யும் திறனுள்ள ஒரு திசுஉறை (membrane) இருக்கிறது. பெரிடோனியம் என்பது ஜீரண உருப்புகளை மூடியிருக்கும் ஒரு பையின் வழுவழுப்பான ஒளிபுகும் உறையாகும்; இரத்தத்தை சுத்தம் செய்ய இதை ஒரு ஃபில்டராக பயன்படுத்தலாம். இந்த திசுஉறையின் உள்பக்கத்தில் பெரிடோனியல் குழி என்ற பகுதி இருக்கிறது. பெரிடோனியம், வயிற்றுருப்புகளுக்கிடையே காற்றில்லாத பையைப்போல் இருக்கிறது.
இப்படித்தான் PD வேலைசெய்கிறது: அடிவயிற்றிலே அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டிருக்கும் காத்தட்டர் (ட்யூப்) மூலமாய் ஒரு விசேஷ டையாலிஸிஸ் நீர்மம் பெரிடோனியல் குழியில் ஊற்றப்படுகிறது. இந்த நீர்மத்தில் டெக்ஸ்ட்ரோஸ் இருக்கிறது; சவ்வூடுபரவல் (osmosis) மூலம் இரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்களும் தேவையற்ற நீர்மமும் பெரிடோனியம் வழியாக பெரிடோனியல் குழியிலுள்ள டையாலிஸிஸ் நீர்மத்திற்குள் உறிஞ்சப்படுகிறது. பொதுவாய் சிறுநீராக அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் இப்போது டையாலிஸிஸ் நீர்மத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நான்கு தடவை நீங்கள் இதை மாற்றவேண்டும்—ஏற்கெனவே உபயோகிக்கப்பட்டுள்ள நீர்மத்தை அகற்றிவிட்டு, பின் புதிய நீர்மத்தால் குழியை நிரப்ப வேண்டும். இவ்வாறு மாற்றுவதற்கு சுமார் 45 நிமிடங்கள் எடுக்கிறது. பழையதை அகற்றி புதியதை நிரப்புவதானது, காரில் எண்ணெய் மாற்றுவதைப்போல் இருக்கிறது; உங்கள் மைல் அளவை, அதாவது வாழ்நாளை நீடிப்பதற்கும் உங்கள் உடல் நல்ல விதத்தில் இயங்குவதற்கும் இது உதவுகிறது!
1981 ஜனவரியின் ஆரம்பத்தில், தேவைப்பட்ட காத்தட்டர் என் அடிவயற்றின் வலதுபக்கத்தில் பொருத்தப்பட்டது. அதன்பின், இரண்டு வார செய்முறை பயிற்சி எனக்குக் கொடுக்கப்பட்டது. செப்டிக் ஆகிவிடாதபடி மிகக் கவனமான முறையில் இது சரியாக செய்யப்படவில்லையென்றால், ஒரு நபர் பெரிடோனிடிஸ் வியாதியால் பாதிக்கப்படலாம்—பெரிடோனியம் மிகக் கடுமையாகவும் ஒருவேளை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு நோய்க்கிருமியால் தொற்றப்படலாம்.
1981-ம் வருட கோடைக்காலத்தின்போது, நான் PD ஆரம்பித்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, என் வாழ்க்கையை அதிகமாய் பாதிக்கவிருந்த மற்றொரு ஃபோன் என் பெற்றோருக்கு வந்தது.
ஒரு புதிய சிறுநீரகத்திற்காக தேடி அலைதல்
ஜனவரி 1981 முதற்கொண்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய பட்டியலில் நான் இருந்தேன். a மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு என் வாழ்க்கை எப்போதுமிருந்ததுபோல் சகஜ நிலைக்குத் திரும்பும் என நான் எதிர்ப்பார்த்திருந்தேன். ஆனால் எனக்கு என்ன காத்துக்கொண்டிருந்ததென தெரியவில்லை!
ஆகஸ்டு மாதத்தின் மத்தியில், ஒருவரிடமிருந்து சிறுநீரகம் கிடைக்கும் என எங்களுக்கு ஃபோன் வந்தது. இரவு சுமார் 10.00 மணியளவில் நான் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது, என் உடல் அந்தச் சிறுநீரகத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த நாள் காலையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டிருந்த ஒரு வாலிபரின் குடும்பத்தினர் அவரது சிறுநீரகத்தை அளிக்க முன்வந்தனர்.
அடுத்த நாள் காலையில் அறுவை சிகிச்சை நடக்கவிருந்தது. ஆபரேஷன் செய்யப்படுவதற்கு முன், ஒரு பெரிய பிரச்சினையை தீர்க்க வேண்டியதாயிருந்தது; ஏனென்றால், நான் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என் மனசாட்சி இரத்தம் ஏற்றிக்கொள்வதை அனுமதிக்காது. (அப்போஸ்தலர் 15:28, 29) அன்று இரவில், மயக்கமருந்து அளிப்பவர் என்னைப் பார்க்க வந்தார். எதற்கும் முன்ஜாக்கிரதையாக, ஆபரேஷன் ரூமிலே இரத்தத்தை அவர்கள் வைத்துக்கொள்வதற்கு நான் சம்மதிக்குமாறு என்னை தூண்டினார். நான் முடியாதென்று சொல்லிவிட்டேன்.
“ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் நான் என்ன செய்வது? நீ இறந்துவிடும்படி விட்டுவிடுவதா?” என அவர் கேட்டார்.
“உங்களால் வேறு என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்யுங்கள், ஆனால் என்ன நடந்தாலும் எனக்கு இரத்தம் கொடுக்கக்கூடாது.”
அவர் சென்றபின், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உள்ளே வந்தார்கள். அதே பிரச்சினையைக் குறித்து நான் அவர்களிடம் பேசினேன், அவர்கள் இரத்தமில்லாமல் ஆபரேஷன் செய்ய ஒத்துக்கொண்டார்கள்; எனக்கு எவ்வளவோ நிம்மதியாக இருந்தது.
மூன்றரை மணிநேரம் நடந்த அந்த ஆபரேஷன் நல்ல விதத்தில் முடிந்தது. மிகக் குறைவான இரத்தத்தையே நான் இழந்திருப்பதாக அறுவை சிகிச்சை மருத்துவர் சொன்னார். ரெகவரி ரூமில் நான் கண்விழித்தபோது, மூன்று காரியங்களை என்னால் உணர முடிந்தது—முதலில் பசி, பின்பு தாகம், அதன்பின் வலி! ஆனால் தரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பையில் இளஞ்சிவப்பு-மஞ்சள் நிற நீர் நிரம்பிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது இதெல்லாம் ஒன்றுமில்லாததுபோல் ஆகிவிட்டது. அது, எனது புதிய சிறுநீரகத்திலிருந்த வந்த சிறுநீர். ஒருவழியாக நான் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தேன்! எனது சிறுநீர்ப்பையிலிருந்து அந்தக் காத்தட்டர் அகற்றுப்பட்டு, மற்ற எல்லாரையும்போல் நான் சிறுநீர் கழித்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.
ஆனாலும், என் சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு சோகம்தரும் ஒரு செய்தி சொல்லப்பட்டது—என் புதிய சிறுநீரகம் வேலை செய்யவில்லை. அது வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு தேவையான காலத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் எனக்கு மீண்டும் டையாலிஸிஸ் ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எனக்கு பல வாரங்களாக தொடர்ந்து டையாலிஸிஸ் செய்யப்பட்டது.
இப்போது செப்டம்பரில் பாதி மாதம் கடந்துபோயாச்சு, நான் ஆஸ்பத்திரிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆஸ்பத்திரி, வீட்டிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது, ஆகவே என்னை வந்துபார்ப்பது என் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு கடினமாய் இருந்தது. சபைக்குப் போகமுடியாமல் நான் மிகவும் தவித்தேன். சபைக் கூட்டங்களின் பதிவு செய்யப்பட்ட டேப்புகள் எனக்கு கிடைத்தன; ஆனால் அவற்றை நான் கேட்டபோது துக்கத்தால் என் தொண்டை அடைத்தது. நான் அநேக மணிநேரங்கள் தனிமையில் யெகோவாவிடம் ஜெபத்தில் பேசினேன், தொடர்ந்து எல்லாவற்றையும் தாங்கிக்கொள்வதற்கான பலத்தை அளிக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டேன். ஆனால் அதைக் காட்டிலும் கஷ்டமான சோதனைகள் எனக்குக் காத்துக்கொண்டிருந்தன என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.
சாவதற்கு பயப்படவில்லை
சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டு ஆறு நீண்ட வாரங்கள் ஆகியிருந்தன, இப்போது என் உடல் சிறுநீரகத்தை ஏற்க மறுத்துவிட்டதென்பது கசப்பான உண்மையாயிருந்தது. என் வயிறு விகாரமாக வீங்கியிருந்தது; ஏற்றுக்கொள்ளப்படாத சிறுநீரகத்தை வெளியே எடுக்க வேண்டும் என்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். மறுபடியும், இரத்தத்தைப் பற்றி கேள்வி எழும்பியது. என் இரத்த அளவு மிகவும் குறைவாக இருந்ததால், இந்த முறை அறுவை சிகிச்சை இன்னும் அதிக சீரியஸாக இருக்கும் என்பதாக டாக்டர்கள் விளக்கினார்கள். பைபிள் அடிப்படையிலான என் நிலைநிற்கையை நான் பொறுமையோடும் உறுதியோடும் விளக்கினேன், அவர்கள் இறுதியில் இரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக்கொண்டார்கள். b
அறுவை சிகிச்சைக்குப் பின், காரியங்கள் மிக வேகமாக மோசமடைந்தன. நான் ரெகவரி ரூமிலிருந்தபோது, என் நுரையீரல்கள் நீரால் நிரம்ப ஆரம்பித்தன. முழு இரவும் தீவிர டையாலிஸிஸ் சிகிச்சை பெற்ற பிறகு கொஞ்சம் சுமாராக இருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் என் நுரையீரல்களில் மறுபடியும் நீர் நிரம்பியது. இன்னொரு இரவு முழுவதும் டையாலிஸிஸ் செய்யப்பட்டது. அந்த இரவைப் பற்றி எனக்கு சரியாக ஞாபகமில்லை, ஆனால் என் அப்பா என் பக்கத்திலிருந்துகொண்டு இப்படி சொன்னது ஞாபகமிருக்கிறது: “லி, இன்னும் ஒரேஒரு தடவ மூச்சுவிடுப்பா! என் ராஜாயில்ல. உன்னால கண்டிப்பா முடியும்! ஒரே ஒரு தடவ. ஆ. . . அப்படித்தான், மூச்சுவிட்டிட்டேயிரு!” நான் அவ்வளவு களைப்பாக இருந்தேன், எப்போதுமே இல்லாதளவுக்கு களைப்பாக இருந்தேன். எல்லாம் ஒருவழியாக முடிந்து, கடவுளுடைய புதிய உலகத்தில் எழுந்திருக்கவே நான் விரும்பினேன். சாவதற்கு நான் பயப்படவில்லை.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
அடுத்த நாள் காலையில் என் நிலை மோசமானது. என் ஹெமடோக்ரிட், அதாவது இரத்தவோட்டத்தில் சிவப்பணுக்களின் அளவு, 7.3 ஆக இருந்தது—இயல்பான அளவு 40-ஐவிட அதிகம்! டாக்டர்கள் என் நிலையில் நம்பிக்கையிழந்தனர். நான் சுகமடைவதற்கு இரத்தம் ஏற்றிக்கொள்வது அவசியம் என சொல்லி, அதற்கு என்னை சம்மதிக்கவைக்க தொடர்ந்து முயன்றனர்.
நான் தீவிர சிகிச்சை அறையில் வைக்கப்பட்டேன், அப்போது என் ஹெமடோக்ரிட் 6.9 என்ற அளவுக்கு குறைந்தது. என் அம்மாவின் உதவியால், ஹெமடோக்ரிட் அளவு மெதுமெதுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. அதிக இரும்புச் சத்துள்ள உணவுகளை மிக்ஸியில் போட்டு திரவ ஆகாரங்களை வீட்டில் தயாரித்து எனக்கு கொண்டுவந்தார்கள். என்னை உற்சாகப்படுத்துவதற்கு என்னோடுகூட சேர்ந்து அவர்களும் குடித்தார்கள். பிள்ளையின்மேல் அம்மாவிற்கு இருக்கும் பாசம் விவரிக்க முடியாத ஒன்று.
நவம்பர் மாத மத்தியில், நான் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆனபோது, என் ஹெமடோக்ரிட் 11-ஆக இருந்தது. 1987-ன் ஆரம்பத்தில், நான் EPO (எரித்ரோபோயிடின்) எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்; இது, இரத்தவோட்டத்தில் புதிய சிவப்பணுக்களை அனுப்பும்படி எலும்பு மச்சையை (marrow) தூண்டும் ஒரு செயற்கை ஹார்மோன் ஆகும். இப்போது என் ஹெமடோக்ரிட் கிட்டத்தட்ட 33-ஆக இருக்கிறது. c
‘இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான், லி!’
எனக்கு, 1984, 1988, 1990, 1993, 1995, 1996 ஆகிய வருடங்களில் மற்ற பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்தன—அனைத்துமே என் சிறுநீரகங்கள் செயல்படாததன் காரணமாக நடந்தன. சிறுநீரக வியாதியோடு நான் வாழ்ந்த இந்த அநேக வருடங்களின்போது, ‘இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான்’ என்ற நினைவுதான் அதைத் தாங்கிக்கொள்ள எனக்கு உதவியது. நம் பிரச்சினை என்னவாயிருந்தாலும், சரீரப்பிரகாரமாக இருந்தாலும்சரி மற்றபடி இருந்தாலும்சரி, வரவிருக்கும் புதிய உலகில் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் அவை சரிசெய்யப்படும். (மத்தேயு 6:9, 10) ஒரு புதிய சவாலை எதிர்ப்பட்டு, நான் சோர்வடைய ஆரம்பிக்கும்போதெல்லாம் வெறுமனே எனக்குநானே இதைச் சொல்லிக்கொள்ளுவேன், ‘இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான், லி!’ காரியங்களை சரியான கண்ணோட்டத்தில் வைக்க இது எனக்கு உதவுகிறது.—2 கொரிந்தியர் 4:17, 18-ஐ ஒப்பிடுக.
1986-வது வருடத்தில் நான் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது—எனக்கு திருமணமானது. எனக்கு எப்போதுமே திருமணமாகாது என்று நான் நினைத்திருந்தேன். ‘என்னைப்போய் யார் கல்யாணம் செய்துகொள்வார்கள்?’ என நான் நினைத்திருக்கிறேன். ஆனால் கிம்பர்லி என் வாழ்க்கையில் தோன்றினாள். எனக்குள் இருந்த மனுஷனை அவள் பார்த்தாள், அழிந்துவரும் வெளி மனுஷனை அவள் பார்க்கவில்லை. என் நிலை இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான் என்பதை அவளும்கூட உணர்ந்தாள்.
ஜூன் 21, 1986-ல், ப்ளெஸன்டனிலுள்ள கலிபோர்னியாவின் உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் கிம்பர்லியும் நானும் திருமணம் செய்துகொண்டோம். என் வியாதி பரம்பரைபரம்பரையாக வருவதன் காரணமாக, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில்லை என நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். ஆனால் இதுவும் ஒருவேளை இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான். கடவுளுடைய புதிய உலகில், யெகோவாவின் சித்தமாயிருந்தால் நாங்கள் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறோம்.
கலிபோர்னியாவிலுள்ள ஹைலாண்ட் ஓக் சபையில் மூப்பராக சேவிக்கும் சிலாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன். கிம்பர்லி, முழு நேர ஊழியம் செய்துவருகிறாள். 1981-ல் ஏற்பட்ட கடுஞ்சோதனை என் உடலை நாசமாக்கி எனக்கு சக்தியில்லாமல் செய்தது. அதற்குப் பின், என் சகோதரிக்கு அல்போர்ஸ் சின்ட்ரோம் இலேசாக ஆரம்பித்திருக்கிறது; இந்த வியாதியையுடைய என் சகோதரர்களில் இருவருக்கு சிறுநீரகம் செயல்படாமல்போய் டையாலிஸிஸ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். என் மற்ற இரு சகோதரர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
எனக்கு தொடர்ந்து பெரிடோனியல் டையாலிஸிஸ் செய்யப்படுகிறது, அது என்னை நடமாட வைப்பதால் அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் எதிர்காலத்திற்காக காத்திருக்கிறேன்; ஏனெனில், இன்றுள்ள பிரச்சினைகள் அனைத்தும்—சிறுநீரக வியாதியும் உட்பட—இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தானே.—லி கார்டவே என்பவரால் சொல்லப்பட்டது; இந்தக் கட்டுரை அச்சிடப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.
எந்தக் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. ஹீமோடையாலிஸிஸ் போன்ற மற்ற வகையான சிகிச்சைகளை செய்யக்கூடாது என இந்தக் கட்டுரை சொல்வதில்லை. ஒவ்வொரு சிகிச்சையிலும் நன்மையும் தீமையும் இருக்கின்றன. எந்த முறை சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம் என்பதை ஒரு நபர் தன் சொந்த மனசாட்சிக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும்.
[அடிக்குறிப்புகள்]
a மாற்று அறுவை சிகிச்சையை ஒரு கிறிஸ்தவர் ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா என்பது தனிப்பட்ட ஒரு தீர்மானம்.—மார்ச் 15, 1980, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 31-ஐக் காண்க.
b இரத்தமின்றி பெரிய அறுவை சிகிச்சை செய்வதைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற புத்தகத்தில் பக்கங்கள் 16, 17-ஐக் காண்க.
c ஒரு கிறிஸ்தவர் EPO எடுத்துக்கொள்வாரா மாட்டாரா என்பது அவரது தனிப்பட்ட தீர்மானம்.—அக்டோபர் 1, 1994, காவற்கோபுரம், பக்கம் 31-ஐக் காண்க.
[பக்கம் 12-ன் படம்]
என் மனைவி கிம்பர்லியுடன்
[பக்கம் 13-ன் அட்டவணை]
பெரிடோனியல் டையாலிஸிஸ் வேலைசெய்யும் விதம்
ஈரல்
சிறுகுடல் வளைகுழாய்கள்
காத்தட்டர் (சுத்தமான நீரைப் பெறுகிறது; பழைய நீரை வெளியகற்றுகிறது)
பெரிடோனியம்
பெரிடோனியல் குழி
சிறுநீர்ப்பை