மர்மமான ப்ளாடிபஸ்
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
முதன்முதலில் விஞ்ஞானிகள் ப்ளாடிபஸை பார்த்தபோது, அதை எந்தப் பிரிவில் சேர்ப்பதென்றே அறியாதிருந்தார்கள். ஒரு கிலோகிராம் எடைகொண்டதும், அவர்களது அறிவியல் நம்பிக்கைகள் சிலவற்றைக் கலக்கியதும், முரண்பாடே உருவானதுமான உயிரினம் அது. தனித்தன்மைவாய்ந்த இந்தச் சிறு ஆஸ்திரேலியனை—மயக்கும் அழகுள்ள, கூச்ச சுபாவமுள்ள, நேசிக்கத்தக்க ஜீவராசியை—சந்திக்க நாங்கள் உங்களை அழைக்கிறோம். எனினும், முதலாவதாக, 1799-வது வருடத்திற்கு நாம் செல்லலாம்; அந்த வருடத்தில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் ப்ளாடிபஸின் தோல் முதன்முதலில் ஆராயப்பட்டபோது அது ஏற்படுத்திய சர்ச்சையைப் பற்றி சிந்திக்கலாம்.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள நாச்சுரல் ஹிஸ்டிரி பிரிவின் உதவி காப்பாளரான டாக்டர் ஷா என்பவரைப் பற்றி சொல்லுகையில், “அவரால் சொல்லர்த்தமாகவே [அவரது கண்களை] நம்ப முடியவில்லை,” என்பதாக ஒரு என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. “[நான்கு-கால் மிருகம்] ஒன்றின் உடலில் வாத்தின் அலகை எவரோ ஒருவர் ஒட்டிவைத்திருப்பதாக” அவர் சந்தேகித்தார். அந்த அலகை [எடுத்துவிட] முயன்றார், அவரது கத்தரிக்கோல் பட்ட அடையாளங்களை ஒரிஜினல் தோலில் இன்றும் பார்க்கலாம்.”
தோல் அசலாக காணப்பட்டபோதிலும் விஞ்ஞானிகள் திணறிவிட்டனர். “தட்டையான பாதமுள்ளது” என்று அர்த்தப்படுத்தும் பெயரைக் கொண்ட ப்ளாடிபஸ், ஒரு பறவைக்கு இருப்பதைப்போன்ற இனவிருத்தி உறுப்புகளைப் பெற்றிருக்கிறது, ஆனால் அதேசமயத்தில் பால் சுரப்பிகளையும் கொண்டிருக்கிறது. முரண்பாடாய் தோன்றிய இது, இந்தக் கேள்வியை எழுப்பியது: நம்புதற்கரிய இந்த உயிரினம் முட்டைகள் இட்டதா, இல்லையா?
பல வருடங்களாக நடந்த விவாதத்திற்குப் பிறகு, ப்ளாடிபஸ் உண்மையில் முட்டைகளிட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பும், வெறுமனே மற்றொரு புதிரை ஏற்படுத்தியதாகவே தோன்றியது. இப்படிப்பட்ட ஒரு உயிரினத்தை எந்தப் பிரிவில் நீங்கள் சேர்ப்பீர்கள்: (1) முட்டையிடுகிறது ஆனால் பால் சுரப்பிகளைக் கொண்டிருக்கிறது; (2) உரோமமுள்ளது ஆனால் வாத்தைப்போன்ற அலகைப் பெற்றிருக்கிறது; (3) குளிர்-இரத்த ஊரும் பிராணிகளைப் போன்ற எலும்புக்கூட்டைக் கொண்டிருக்கிறது ஆனால் அது வெப்ப-இரத்த பிராணி.
பின்பு, ப்ளாடிபஸ், மோனோட்ரிமேடா என்ற வகுப்பைச் சேர்ந்த பாலூட்டி என்பதாக விஞ்ஞானிகள் ஒத்துக்கொண்டனர். ஊரும் பிராணியைப்போலவே, மோனோட்ரிமேடா வகுப்பைச் சேர்ந்த மிருகமும், முட்டைகள், விந்துக்கள், மலம், சிறுநீர் ஆகியவற்றை வெளியேற்றுவதற்கு ஒரே துவாரத்தை அல்லது திறப்பைக் கொண்டிருக்கிறது. இப்போது உயிர்வாழ்பவற்றில், அதே வகுப்பைச் சேர்ந்த ஒரே பிராணி எகிட்னா ஆகும். ப்ளாடிபஸிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறிவியல் பெயர் ஆர்னிதோர்ஹின்கஸ் அனாடினஸ்; இதன் அர்த்தம் “பறவையின் அலகைப்பெற்ற வாத்துபோன்ற மிருகம்.”
ஒரு ப்ளாடிபஸை சென்று சந்திப்போம்
நாம் ஒரு மிருகக்காட்சி சாலைக்குச் செல்லலாம், ஆனால் மறைந்துவாழும் ப்ளாடிபஸை காட்டில் பார்ப்பதைப்போன்று அது இருக்காது—ஆஸ்திரேலியர்களில் சிலர்கூட இதுபோல் பார்த்ததில்லை. கிழக்கத்திய ஆஸ்திரேலியாவிலுள்ள அநேக நன்னீர் ஆறுகள், ஓடைகள், குளங்கள் போன்றவற்றிலேயே ப்ளாடிபஸ்களை நம்மால் பார்க்க முடியுமென்றாலும், சிட்னிக்கு மேற்கே உள்ள ப்ளூ மௌன்டன்ஸில் நாம் தேட ஆரம்பிக்கிறோம்.
சூரிய உதயத்திற்கு முன்பு, யூக்கலிப்டஸ் மரங்களை இருபுறமும் கொண்ட கண்ணாடிபோன்ற ஆற்றிற்கு மேலேயுள்ள பழைய மர மேம்பாலத்திற்கு நாம் வருகிறோம். நுனி மாத்திரம் வெளியே தெரியும்படி வரும் கருப்பு நிழலுருவம் எப்போது தோன்றுமென பொறுமையாகவும் மௌனமாகவும் தண்ணீரையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். சீக்கிரத்தில் நமக்கு பலன் கிடைக்கிறது. சுமார் 50 மீட்டர் தொலைவில், எதிர் நீரோட்டத்தில், நமது திசையை நோக்கி ஒரு உருவம் வருகிறது. நாம் கொஞ்சமும் அசையாமல் அப்படியே நிற்க வேண்டும்.
அதன் அலகிலிருந்து சரமாரியாக வரும் சிறுசிறு அதிர்வு அலைகள், அது ஒரு ப்ளாடிபஸ் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அடையாளப்படுத்தும் அந்த அலைகள், ஆற்றின் அடிப்பரப்பில் அலைந்துதேடி, பின் தனது பைபோன்ற கன்னத்தில் சேகரித்து வைத்த உணவை ப்ளாடிபஸ் மெல்லும்போது உண்டாகின்றன. ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு விதமான உணவை ப்ளாடிபஸ் உட்கொண்டாலும், முக்கியமாக அது புழுக்கள், புழுவடிவப் பூச்சிகள், நன்னீர் இறால்கள் ஆகியவற்றை உண்கிறது.
ப்ளாடிபஸின் சிறிய உருவத்தைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? பெரும்பாலான மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்கள், பீவர் அல்லது ஆட்டரைப் போன்ற உருவ அளவில் ப்ளாடிபஸ் இருக்கும் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் இப்போது பார்க்கும் பிரகாரம், அது சாதாரண வீட்டுப் பூனையைக் காட்டிலும் சிறியதாக இருக்கிறது. ஆண் ப்ளாடிபஸ்கள், 45-லிருந்து 60 சென்டிமீட்டர் நீளமும் ஒன்றிலிருந்து இரண்டரை கிலோகிராம் எடையுமானவை. பெண் ப்ளாடிபஸ்கள் கொஞ்சம் சிறியவை.
ப்ளாடிபஸ், விரல்களுக்கிடையே தோல்கள்கொண்ட அதன் முன்பாதங்களை மாறிமாறி தண்ணீரில் அடிப்பதன் மூலம் முன்னால் உந்திச்செல்கிறது; அது மெதுவாக தண்ணீருக்குள் மூழ்கி, மேம்பாலத்தை நோக்கி நீந்தி செல்வதாய் ஓரிரண்டு நிமிடங்களுக்கு தண்ணீருக்குள்ளேயே இருக்கிறது. விரல்களுக்கிடையே ஓரளவுக்கு தோல்களைக் கொண்ட அதன் பின்பாதங்கள் உந்திச்செல்வதற்கு பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் திசை திரும்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன; ப்ளாடிபஸ் நீந்தும்போது அவை வாலுடன் சேர்ந்து செயல்படுகின்றன. மேலும், வளை தோண்டும்போது ப்ளாடிபஸின் உடலை உறுதியாக நிற்கவும்செய்கின்றன.
கொஞ்சம் தொந்தரவு செய்யப்பட்டால், ப்ளாடிபஸ் சப்தமான ஓசையுடன் கால்களை அடித்துக்கொண்டு நீருக்குள் மூழ்கிவிடுகிறது, அப்படியென்றால் அது குட்பை சொல்லிவிட்டதென்று அர்த்தம்! ஆகவே, அது நீருக்குள் இருக்கும்போதுதான் நாம் பேசுகிறோம். “இந்தளவுக்கு சின்ன பிராணி எப்படி தன்னை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்கிறது, அதுவும் குளிர்கால ஐஸ் தண்ணியில்?” என நீங்கள் மெதுவாக கேட்கிறீர்கள். இரண்டு காரணங்களால் ப்ளாடிபஸ் நன்றாக சமாளித்துக்கொள்கிறது: அதன் உயிர்ப்பொருள் மாறுபாடு (metabolism), மிக வேகமாக சக்தியை உண்டாக்கி அதன்மூலம் உள்ளே வெதுவெதுப்பை ஏற்படுத்துகிறது; மற்றொன்று, வெப்பத்தை உள்ளேயே வைத்துக்கொள்ளும் அடர்த்தியான மயிர்.
மலைக்கவைக்கும் அந்த அலகு
ப்ளாடிபஸின் மிருதுவான, ரப்பர்போன்ற அலகு அதிக நுட்பமானது. தொடு உணர் உறுப்புகளாலும் மின்சார உணர் உறுப்புகளாலும் அது நிறைந்திருக்கிறது. ஆற்றின் அடிப்பரப்பில் ப்ளாடிபஸ் மெதுவாக அதன் அலகை ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு அசைத்தபடி பார்வையிட்டுச் செல்கிறது; அதன் இரையின் தசை அசைவுகளால் ஏற்படும் லேசான மின்புலங்களைக்கூட கண்டுணர்கிறது. ப்ளாடிபஸ் தண்ணீருக்குள் இருக்கும்போது, வெளியுலக தொடர்புகொள்வதற்கான முக்கிய உறுப்பு அதன் அலகாகும், ஏனெனில் அதன் கண்களையும் காதுகளையும் அலகையும் இறுக மூடிக்கொள்கிறது.
அந்த முட்களைக் குறித்து ஜாக்கிரதை!
நமது சிறிய நண்பர் ஆணாக இருந்தால், பின்னங்கால்களில் இரண்டு கணுக்கால் முட்கள் இருக்கின்றன; அவை தொடைப் பகுதியிலுள்ள இரண்டு நச்சு சுரப்பிகளுடன் நாளங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன. குதிரை ஓட்டுபவர் முட்களால் குதிரையைக் குத்துவதைப் போலவே அது இரண்டு முட்களையும் தாக்குவோரின் சதையில் பலமாக குத்துகிறது. முதலில் அதிர்ச்சி ஏற்பட்ட கொஞ்ச நேரத்திலேயே பாதிக்கப்பட்டவருக்கு கடும் வலி ஏற்படுகிறது, அவ்விடமும் வீங்கிவிடுகிறது.
எனினும், அகப்பட்டிருக்கும் நிலையில், ப்ளாடிபஸ் நாய்க்குட்டியைப்போன்று சாதுவாக இருக்கலாம். இந்த மிருகங்களை விக்டோரியாவிலுள்ள ஹில்ஸ்வில் சரணாலயம் பல பத்தாண்டுகளாக வைத்திருக்கிறது; முன்பு இங்கிருந்த ஒரு ப்ளாடிபஸ், “பல மணிநேரங்களுக்கு, வயிற்றை கீச்சிக்கொள்வதற்கு மறுபடியும் மறுபடியும் உருளுவதன் மூலம் வருகையாளர்களை மகிழ்வித்தது . . . அசாதாரணமான இந்தச் சிறிய மிருகத்தைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு வந்தனர்” என்பதாக அச்சரணாலயம் அறிக்கை செய்கிறது.
காலை சூரியன் கிழக்கில் மலை உச்சியில் தோன்றும் அந்தச் சமயத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ப்ளாடிபஸ் அந்நாளிலே கடைசி தடவையாக நீருக்குள் மூழ்கிச்செல்கிறது. இராத்திரி முழுவதும் தனது எடையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான உணவை அது சாப்பிட்டிருக்கிறது. தண்ணீரிலிருந்து வெளியே வரும்போது, முன்பாதங்களிலுள்ள தோல்கள் உள்ளே சுருங்கிவிடுகின்றன, பலமான நகங்கள் இப்போது முழுமையாக தெரிகின்றன. இப்போது தான் தோண்டிவைத்திருக்கும் அநேக வளைகளில் ஒன்றிற்கு அது செல்கிறது; அவை அரித்துவிடாமலிருக்கவும் அழிந்துவிடாமலிருக்கவும் ஞானமாய் மர வேர்களுக்கிடையே தோண்டப்படுகின்றன. முட்டையிடுவதற்காக தோண்டப்படும் வளைகள் பொதுவாக சுமார் எட்டு மீட்டர் நீளமுள்ளவையாய் இருக்கின்றன, ஆனால் மற்ற வளைகள் ஒரு மீட்டரிலிருந்து கிட்டத்தட்ட முப்பது மீட்டர் நீளமுள்ளவையாகவும் அநேக கிளைகளுள்ளவையாயும் இருக்கலாம். வளைகள், கடுமையான சீதோஷ்ண நிலைகளிலிருந்தும் பாதுகாப்பளித்து, இவ்வாறு பெண் ப்ளாடிபஸ்கள் குட்டிகளை வளர்ப்பதற்கு ஏற்ற சௌகரியமான வீடுகளாக சேவிக்கின்றன.
முட்டையிடும் காலம்
இளவேனிற்காலத்தில் பெண் ப்ளாடிபஸ் ஆழமான வளைகள் ஒன்றினுள், தாவரங்களை நிரப்பியுள்ள பகுதிக்குச் சென்று ஒன்றிலிருந்து மூன்று (பொதுவாக இரண்டு) கட்டைவிரல் நக அளவுள்ள முட்டைகளை இடுகிறது. முட்டைகளை தன் உடலாலும் கொழுகொழுவென்ற வாலாலும் மூடிக்கொண்டு அடை காக்கிறது. சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, குட்டிகள், தோல்போன்ற ஓடுகளை உடைத்து வெளிவந்து அம்மாவின் இரண்டு பால்சுரப்பிகளிலும் பால் குடிக்கின்றன. பெண் ப்ளாடிபஸ் குட்டியை தானாகவே வளர்க்கிறது; இந்தப் பாலூட்டிகள் நீண்ட-காலம் ஜோடியோடு பந்தம் வைத்துக்கொள்வதில்லை.
பிப்ரவரிக்குள்ளாக, மூன்றரை மாதங்கள் வேகமாக வளர்ந்த பின்னர், குட்டிகள் தண்ணீருக்குள் செல்ல தயாராகின்றன. ஒரே நீர்ப்பகுதியிலேயே அனைத்து ப்ளாடிபஸ்களும் இருக்க முடியாததால், இறுதியில், குட்டிகள் அதிக ப்ளாடிபஸ்கள் இல்லாத தண்ணீரைத் தேடி, ஆபத்தான நிலப்பகுதிகளையும்கூட தாண்டிச் செல்லலாம்.
அகப்பட்ட நிலையில் ப்ளாடிபஸ்கள் 20 வருடங்களுக்கும் மேலாக உயிர்வாழ்கின்றன, ஆனால் காட்டில் அவ்வளவு காலம் வாழ்வதில்லை. வறட்சிக்கும் வெள்ளத்திற்கும் அவை இரையாகின்றன; அதேபோல் கோயென்னாக்கள் (பெரிய மானிடர் பல்லிகள்), நரிகள், பெரிய மாம்ச பட்சிகள் ஆகியவற்றிற்கும் வட க்வீன்ஸ்லாந்தின் தொலைதூரப்பகுதிகளிலுள்ள முதலைகளுக்கும்கூட அவை இரையாகின்றன. எனினும், மனிதனே ப்ளாடிபஸிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறான், வேண்டுமென்றே கொலை செய்வதன் மூலமாக அல்ல (ப்ளாடிபஸை கொல்வது கடுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது), ஆனால் அவற்றின் வாழ்விடங்களில் இரக்கமற்று நுழைவதன் மூலமாக அவ்வாறிருக்கிறான்.
நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால், இயற்கையான வாழ்விடத்தில் தனித்தன்மைவாய்ந்த நம் சிறிய, வாத்துபோன்ற அலகுடைய இந்தக் கதம்பத்தை நீங்களே பார்க்கலாம்; உலகத்தில் வேறெந்தப் பகுதியிலும் இதைக் காடுகளில் நீங்கள் பார்க்கவே முடியாது. ப்ளாடிபஸின் உதவியால், படைப்பாளரின் முடிவற்ற கற்பனைத் திறனின் மற்றும் நகைச்சுவை உணர்ச்சியின் மற்றொரு அம்சத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
[பக்கம் 17-ன் படம்]
தோல்கள்கொண்ட பாதங்களால் ப்ளாடிபஸ் முன்னால் உந்திச்செல்கிறது
[படத்திற்கான நன்றி]
Courtesy of Taronga Zoo
[பக்கம் 17-ன் படம்]
சாதாரண வீட்டுப் பூனையைப் பார்க்கிலும் சிறியதான ப்ளாடிபஸ், ஒன்றிலிருந்து இரண்டரை கிலோகிராம் எடையுள்ளது
[படத்திற்கான நன்றி]
Courtesy of Dr. Tom Grant
[பக்கம் 17-ன் படம்]
அதிக உணர்வுள்ள அதன் அலகு தண்ணீருக்குள் இரையைக் கண்டுபிடிக்கிறது. (இந்தப் ப்ளாடிபஸ் ஹில்ஸ்வில் சரணாலயத்தில் உள்ளது)
[படத்திற்கான நன்றி]
Courtesy of Healesville Sanctuary
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
Photo: Courtesy of Dr. Tom Grant